திங்கள், 23 டிசம்பர், 2013

மாதங்களில் மார்கழி!

மார்கழி என்றாலே அதிகாலை பஜனை தான், அதை வைணவர்கள் தான் தெருத்தெருவாக ஆண்டாளின் திருப்பாவையை பாடுவார்கள். ஒரு நாளைக்கு ஒரு பாடல் வீதம் முப்பது நாட்கள் பாடுவார்கள். 1980களில் தான் ஊருக்கு பஜனை என்பது அறிமுகம் ஆகிறது. சம்சாரிகள் ஊர்த்திருவிழா தவிற மற்ற நாட்களில் இன்றைக்குவரை யாரும் கிராமத்துக்கு கோவிலுக்கு பொவதில்லை, அது பூசாரியின் வேலை. இப்போது செவ்வாய், வெள்ளி கிழ்மைகளில் பெண்கள் சிலர் அம்மன் கோவிலுக்கு செல்கிறார்கள்.

வைணவர்கள் குடும்பம் கிராமத்தில் இரண்டு அல்லது மூன்று தான் இருக்கும், அவர்களின் சாமி ஒன்றே ஒன்று  தான் அவனுடைய அவதார புருஷ்ர்களையும் அவதாரங்களின் தாரங்களையும் மட்டுமே வணங்குவார்கள். இந்த பிள்ளையார், முருகன், மாரியம்மா, ஈஸ்வரன் என்ற எந்த கடவுளர்களையும் அவர்கள் மதிப்பதில்லை. வைணவம் என்பது தனி மதம், அங்கே சேர்ந்துவிட்டால் அவர்களுடைய தோள்களில் திருமாலின் சங்கு, சக்கரச் சின்னங்களை பதித்துவிடுவார்கள். அதற்குப் பின் அவர்கள் புலால் சாப்பிடக்கூடாது, சிலர் சின்னவெங்காயம், பூண்டு கூட சமையலில் சேர்க்கமாட்டார்கள். அவர்களின் ஷேத்திரயாத்திரை யாவும் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகத் தான் இருக்கும். பன்னிரெண்டு ஆழ்வார்களின் பாடல்களை அவர்கள் பாடுவார்கள், நாலாயிர திவ்யபிரபந்தம் என்ற நூல் மிக முக்கியமானது. வைணவம் என்பது அது தமிழகத்தில் வள்ர்ந்த மதம், அது மைசூர், திருவிதாங்கூரையும் உள்ளடக்கியது வைணவத்தை சோழர்கள், பாண்டியர்கள் ஆதரித்திருக்கிறார்கள். பனிரெண்டு ஆழ்வார்கள் அனைவரும் தமிழில்தான் பாடல்கள் இயற்றியிருக்கிறார்கள்.

1980களில் கிராமத்திற்கு இடைசெவலிலிருந்து ஒரு பாகவதர் வந்து திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கொவிலுக்கு ஆடித்திருவிழா வசூலுக்கு வருவார். அவருடன் நான் பல வீடுகளுக்குச் செல்வேன், 50பைசா, 1 ரூ, 2ரூ என சில்லரைகளில் வசூலாகும். கிராமத்திலிருந்து ஆண்டாள் கொவிலுக்கு வைணவர்களைத் தவிற வேற யாரும் பொனதில்லை, ஆண்டாள் கோவிலில் சில பஜனை கோஷ்டிகளில் கானத்தை பார்த்த வைணவர்கள் நம்மூரிலும் அதேமாதிரி பஜனை கோஷ்டியை உருவாக்க நினைத்தார்கள். அப்படியே ஒரு மார்கழி மாதத்தில் அந்த ஊர் பஜனை கோஷ்டியை அழைத்துவந்து ஊரில் பாடவைத்தார்கள். மக்களுக்கும் ஆர்வம் பெருகியது. அந்த பஜனை கோஷ்டியின் ஆசிரியரை வரவழைத்து பாடல்களும், அதற்கு நடனமும் கற்றுத்தர ஏற்பாடாயிற்று.

பல வாரங்கள் பயிற்சி நடைபெற்றது, எல்லோரும் எளிதாக ஆடும்படியான நடனம் தான் அதிகம், சில பாடல்களுக்கு மட்டும் நடனம் மாறுபடும். அதை அதிக சிரமேற்கொண்டு ஆடவெண்டும். பாடுவதற்கு எல்லோருக்கும் வராது, சிலர் வசனம் போல் வாசிப்பார்கள். அதற்கு ஒரு ஆசிரியர் தேர்தெடுக்கப்பட்டார், இது தவிற ஆர்மொனியம், ஜால்ரா என எளிய இசைக்கருவிகளும் இருக்கும். ஆடுவதற்கு நிறைய இளைஞர்கள் இருந்தார்கள், காலில் சலங்கையும் அணிவார்கள். சிறுவர்களுக்கு காலில் சலங்கை கட்டி ஆடவேண்டும் என்ற ஆசையிருக்கும் ஆனால் வாய்ப்பு கிடைக்காது. நானும் அப்போது சிறுவன் தான். மார்கழி தொடங்கியதும் பஜனை தொடங்கியது.


ஊரை கிழக்கும் மேற்குமாக பிரிக்கும் நீளமான தெருவில் பஜனையின் பயணம். பஜனைக்கென்று ஒரு சிறிய மடம் அந்த வீதியில் யாராவது ஒரு அறையை அந்த மாதத்திற்கு மட்டும் கொடுப்பார்கள். அதிகாலை 4 மணிக்கு எழுந்து குளத்து நீரில் குளித்துவிட்டு ஆடைமாற்றிக்கொண்டு நாமம் எல்லாம் போட்டுக்கொண்டு பஜனை துவங்கும். மார்கழி ஒன்றாம் தேதியில் புதிதில் சுமார் 30 பேர் பஜனையில் பங்கெடுப்பார்கள், ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவராக கழண்டிவிடுவார்கள், ஏகாதசி அன்று விமரிசையான பஜனை இரவு 9 மணிக்கு ஆரம்பமாகிற பஜனை அதிகாலை வரை நீடிக்கும், அன்று விளம்பரத்திற்காகவும் விட்டுப்போனவர்கள் அநேகம்பேர் வருவார்கள். ஏகாதசி மார்கழியின் துவக்கத்தில் வந்துவிட்டால் பங்கெற்போர் மிகவும் குறைந்துவிடுவார்கள். பள்ளிச்சிறுவர்கள் அதிகமாக வருவார்கள். பஜனைக்காக போட்ட நாமத்தை அழித்துவிட்டுத்தான் பள்ளிக்கு செல்வார்கள். பஜனை கோஷ்டி தெருவெங்கும் சுற்றிவந்தவுடன் ஏதாவது ஒரு வீட்டிலிருந்து வந்த பிரசாதத்தை கொடுப்பார்கள். அதற்காக சில குழந்தைகள் மார்கழியின் அதிகாலை குளிரை பொருட்படுத்தாது வருவார்கள்.

சில வருடங்களுக்குப்பின் கார்த்திகை மாதம் மாலைபோடும் சீசன் வந்தது, ஒன்று ஐயப்பனுக்கும் மற்றொன்று திருச்செந்தூர் முருகனுக்கும். வசதியானவர்கள் ஐயப்பனுக்கு மாலை போடுவார்கள், மற்றவர்கள் முருகனுக்காக மாலை போடுவார்கள். மாலை பொடும் சீசன் வந்ததும் பஜனை டல்லடிக்க ஆரம்பித்தது. பஜனை கோஷ்டியில் இருப்பவர்கள் ஒவ்வொருவராக குறைந்துவிட்டார்கள். ஒரு மாணவன் தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்கினால் அவன் பஜனையில் பாடினான், அதனால் நல்ல மார்க் வாங்கினான் என்பார்கள். கிராமத்தில் இப்போது பஜனை நடப்பதாகத் தெரியவில்லை. அந்த பாடல்களும் நடனமும், வாத்தியங்களும் தொடரவில்லை.

என்னுடைய பெற்றோர் 1980களில் இறுதியில் வைணவத்தில் சேர்ந்தார்கள், எனது தந்தை வைணவத்தில் சேர்வதற்கு என்னுடைய பெரியப்பாவும் அவர் சாப்பிட்ட சீக்குவந்த நாட்டுக்கோழிக்கறிக் குழம்பும்யும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன். ஏதாவது பண்டிகை நாட்களில் ஆழ்வர்களின் பாடல்களை பாடுவார்கள், வாசிப்பதே பாடுவது போன்று. அவர்களுடன் சேர்ந்து வாசித்ததில் திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி என சில பாசுரங்கள் மனனம் செய்திருந்தேன். ஒரு சமயம் பெற்றோர் வைணவத்தில் சேர்ந்ததற்கு பின்னர் நானும் வைணவத்தில் சேர்ந்து அந்த முத்திரை குத்திக்கொள்வதாக இருந்தேன், அச்சமயங்களில் அசைவ உணவுவகைகளை தவிற்த்திருந்தேன். தச்சு வேலை செய்ய வந்த ஆசாரி ஒருவர் கருவாட்டுக் குழம்பைவைத்து என் எண்ணத்தை சீரழித்துவிட்டார்.

ஆனாலும் வைணவத்தின் மீதான பற்றுதல் நீங்கவில்லை, சென்னை வந்த பின்பும் சில ஆண்டுகள் மார்கழி பஜனையும், கடைசிச்சனி பார்த்தசாரதி கோவிலுக்கு செல்வது வழக்கமாக இருந்தது. நூலகம் சென்றேன், எந்த புத்தகத்தை வாசித்தேனென்று தெரியவில்லை சாமிகளை விட்டு விட்டு பெரியார் கட்சிக்காரர்கள் பேசும் கூட்டத்திற்கு சென்று அங்கிருந்து இடதுபக்கம் திரும்பிவிட்டேன்.
 

வெள்ளி, 20 டிசம்பர், 2013

Run for Unity?

ஒற்றுமைகான ஓட்டம் என்ற பிரச்சாரத்தை மோடியும் பாஜக பரிவாரமும் செய்வது வேடிக்கையாக உள்ளது. சமீபத்திய தேர்தல்கள் மூலம் அவர்களின் வாக்குவங்கி வட இந்தியாவில் முன்னைவிட அதிகரித்திருக்கிறது. தென் மாநிலங்களிலும் படித்த நடுத்தர வர்க்கத்து மக்கள், சாதியில் மேல்சாதியினரும், இடஒதுக்கீட்டின் மூலம் முன்னேறியவர்களும் இன்று இட  ஒதுகீட்டை தேவையில்லை என்று சந்தர்ப்பவாத அணுகுமுறையுடனும் பாஜகவின் பிரச்சார பீரங்கிகளாக மாறியுள்ளனர்.

90களில் தமிழகத்தில் சாதியை அடிப்படையாக வைத்து நடந்து அரசியலை புறந்தள்ளிய மத்தியதர வர்க்கம் இன்று அரசியலில் மதத்தை புகுத்தி மத அடிப்படையில் மக்களை பிளவு படுத்துகிற வகுப்புவாத சக்திகளை ஆதரிக்கிறார்கள். இவர்கள் ஒரு சாரார் மத்தியில் ஆட்சிசெய்த காங்கிரஸ் மிகுந்த ஊழல் கட்சி என்றும் சோனியாவின் குடும்ப ஆட்சி என்றும் , மோடியின் தலைமையில் குஜராத் அபரிதமான வள்ர்ச்சி கண்டுள்ளது அதற்காக மத்தியிலும் மோடியின் தலைமையை ஆதரிக்கிறார்கள்.

மற்றொரு பிரிவினர், அப்பட்டமாக சிறுபான்மை மீது துவேஷ அரசியலை நடத்துவது பாஜக என்பதாலேயெ அவர்களை ஆதரிக்கிறார்கள். பன்முக கலாச்சாரம் மிக்க சமூகத்தில் சிறுபான்மையினருக்கெதிராக  மதத்தை வைத்து மக்களை ஒருமுகப்படுத்தும் அரசியலை வெக்கமின்றி ஆதரிக்கிறார்கள். விடுதலைப்போராட்ட காலத்தில் காங்கிரஸ் கட்சி என்பது பல்வெறு சித்தாங்கள் கொண்டவர்களையும் பிணைத்த இயக்கமாக இருந்தது. சோசலிச லட்சியத்தையுடைய நேருவும், நிலப்பிரபுத்துத்தை ஆதரித்த படேலும் காங்கிரசில் இருந்தார்கள். பாஜகவினர் இன்று படேலை முன்னுறுத்தி நேருமீது அவதூறு கிளப்புகிறார்கள். இதிலிருந்து படேல் எப்படிப்பட்டவர் என்பதை புரிந்துகொள்ளலாம். இந்தியாவின் பெரும்பான்மை மதவெறி மகாத்மாவைக் கொன்றது, நேரு 1952 தேர்தலில் வகுப்புவாதத்திற்கெதிரான பிரச்சாரத்தை செய்தார் அது மிகப்பெரிய வெற்றியடைந்தது. அதற்குப்பின் சமரசமில்லாத பெரியதொரு பிரச்சாரம்  காங்கிரஸ் கட்சி அகில இந்திய அளவில் செய்யவில்லை. அப்படிப்பட்ட தலைவர்களும் இல்லாமல் போய்விட்டார்கள்.

தேர்தலில் பாஜக 1952லிருந்து 1977 வரை குறிப்பிட்ட வாக்குகளை பெறாவிட்டாலும் அதன் வளர்ச்சி மெளனமாக பெருகி வந்துள்ளது. பெரும்பான்மை இந்துக்கள் மத அடிப்படையில் அணிதிரளாமல் இருந்தார்கள், இப்போது அதன் சதவீதம் அதிகரித்துவந்துகொண்டே இருக்கிறது. சமூகத்தில் சிறு பிரச்சனை கூட மதமோதலை உருவாக்கி அதை வாக்குகளாக மாறும் உத்தியை பாஜக கையாளுகிறது.

படேலை ஏன் முன்னிறுத்துகிறார்கள்! அவர் நேரு அமைச்சரவையில் துணைப்பிரதமராக இருந்தபோது எடுத்த சில நடவடிக்கைகளை ராமச்சந்திர குஹா எழுதிய  `காந்திக்குப்பிறகு இந்தியா` நூலிலிருந்து...

படேலின் உள்துறை அமைச்சகச் செயலர் மற்றதுறை செயலர்கள் கவனத்துக்கு என கடிதங்கள் எழுதினார்..... பாகிஸ்தான் உடனான உறவில் தற்போதுள்ள சூழலில் அவசரமும் முக்கியத்துவமும் பெறும் ஒரு அம்சம் இது. குறிப்பாக இந்திய யுனியனுடைய காஷ்மீர் மற்றும் ஹைதராபத் விஷ்யங்களிலான கொள்கையால், இந்தியாவில் உள்ள முஸ்லீம்களில் ஒரு பகுதியினரின் பரிவு குறைந்து, திவிரமாக பாகிஸ்தான் பக்கம் மிகுந்து வருவதற்கான சான்று அதிகரித்து வருகிறது. அத்தகைய அரசு ஊழியர்கள், (ரகசியச்) செய்திகளை எதிர்த்தரப்பிற்கு அனுப்ப பயனுள்ள வழிகளாக இருப்பார்கள். குறிப்பாக அவர்கள், தம் உறவினர்களின் செல்வாக்குக்கு எளிதில் உட்படக்கூடும்.

அரசின் முஸ்லீம் ஊழியர்கள் சிலர், இந்த வகையினராக இருக்கக்கூடும்.நிர்வக அமைப்பில் அவர்கள் அபாயகரமான ஓர் அம்சமாக அமைவார்கள் என்பது தெளிவு. எனவெ அவர்கள் வசம் முக்கியமான, தனிபட்ட ரகசியப் பணிகள் எதுவும் ஒப்படைக்கக்கூடாது. அவர்கள் முக்கியமான பதவிகளில் இருக்கக்கூடாது. இதற்காகத் தங்கள் அமைச்சகத்தில் உள்ள, மற்றும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகங்களிலும், இந்திய டொமியனுக்கு விசுவாசக் குறைவாக இருந்து, நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சம் விளைவிக்கக்கூடும் என்று கருதப்படுவோரது பெயர்கள் அடங்கிய பட்டியலைத் தயாரிக்க வெண்டுகிறேன். இந்த பட்டியல்கள் கருத்துடன் தயாரிக்கப்படவெண்டும். துறைத்தலைவர்கள் அல்லது உயர் அதிகாரிகள் இவற்றைச் சரிபார்க்கவேண்டும். அத்த்கையோர் முக்கியமான, பொறுப்பான பதவிகள் வகிக்காமலும் முக்கிய, தனிப்பட்ட ரகசியப் பணிகளைக் கையாளாமலும் இருப்பதர்கு மட்டுமே இந்த்ப் பட்டியலைப் பயன்படுத்தவெண்டும்.

இதனால தவறாக யாரும் பழிவாங்கப்படக்கூடாது என்பதையும் நிஜமாகவே சந்தேகம் ஏற்படுத்துவோர் பெயர்கள் மட்டுமே சேர்க்கப்படவெண்டும் என்பதையும் நான் சொல்லத்தேவையில்லை. உண்மையாக விசுவாசம் உள்ளவர்களுக்கும் திருப்திகரமாகப் பணியாற்றுபவர்களுக்கும், பிற பெருன்பான்மை இனத்தை சேர்ந்தவர்களுக்குத் தரும் வாய்ப்புகள் அனைத்தும் தரப்படவேண்டும்.

செயலர் ஒருவரது கடிதம் அமைச்சரின் அனுமதியில்லாமல் சுற்றுக்கு விடப்பட்டிருக்காது. இன்றளவும் அரசாங்கபணியிடங்களில் சிறுபான்மையினரின் பங்கு ஏன் குறைந்திருக்கிறது என்பதற்கு இந்த கடிதத்தின் சாராம்சமே ஒரு காரணமாக இருக்கக்கூடும்.
 

ஞாயிறு, 15 டிசம்பர், 2013

Madiba ! Son of Africa....


நெல்சன் மண்டேலாவின் மறைவிற்கு உலகம் முழுவதும் அஞ்சலி செலுத்துகிறார்கள், அவர் நீண்ட நாட்கள் சிறையிலிருந்தார் என்பதற்காகவா, தென் ஆப்பிரிக்காவின் விடுதலையின் ஆதர்சநாயகனாக இருந்தார் என்பதலா, நிறவெறிக்கு எதிராக மக்களை திரட்டி போராடியதற்காகவா எல்லாவற்றிற்க்காகவும் தான். அதற்கு மேலே!

நெல்சன் மண்டேலா விடுதலையடிந்த 1991க்குப்பின் அரசியல் இயக்கங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது, நாட்டின் 80 சதவீத கறுப்பின மக்களின் ஒற்றைக்குரலாக ANC  என்ற ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் விளங்கியது, நூற்றாண்டுகளாக 20 சதவீதற்கும் குறைவான வெள்ளையர்கள் மற்றும் ஆப்பிரிகான்ஸ் இனமக்கள் பூர்வகுடிகளை ஒடுக்கிவந்தார்கள், அதற்கு எதிர்வினையாக வெள்ளையர்கள் மீது மிகப்பெரிய வன்முறை கட்டவிழ்த்துவிடப்படுமோ என்று அஞ்சிய சூழ்நிலையில் மண்டேலா, இனி தென் ஆப்பிரிக்காவில் பல இனங்கள் இணங்கி வாழும் சமாதானம், ஜனநாயகம் தான் எங்கள் அரசியல் என்றார்.

காந்தியின் அகிம்சை வழியில் ஏ.என்.சி. போராட்டப்பாதை அமைந்தது. உலகின் எந்த நாட்டிலும் சொந்தமக்கள் தென் ஆப்பிரிக்கர்களைப் போல் நிறவெறியையும் ஒடுக்குமுறையையும் அனுபவித்திருக்கமாட்டார்கள். அவர் 1994 தேர்தலில் வெற்றியடைந்ததற்கு பின்னால் நாட்டின் 80 சதவீத நிலங்களையும் செல்வங்களையும் வைத்திருந்த வெள்ளையர்களும் ஆப்பிரிகான்ஸ்களும் எங்கே ஆட்சி மாறினால் தங்களிடமிருந்த நிலங்களை பறித்துவிடுவார்களோ , நாம் புறக்கணிக்கப்படுவோமோ என அஞ்சினார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்காது என்று உறுதியளித்தார். 1995ம் ஆண்டு உலகக்கொப்பை ரக்பி விளையாட்டை தென் ஆப்பிரிக்காவின் வெற்றி என்பது அந்த நாட்டின் மக்களை ஒற்றுமை கொள்ளச்செய்தது. தேசத்திற்கு விளையாடிய வீரர்கள் அனைவரும் வெள்ளையர்கள் அவர்களுக்கு அவநம்பிக்கையே இருந்தது. நெல்சன் மண்டேலா அந்த வீரர்களை உற்சாகப்படுத்தினார், அதைப்போல் கறுப்பின மக்களும் அந்த விளையாட்டு வீரர்களுக்கு உற்சாகம் அளித்தார்கள்.

நெல்சன் மண்டேலா மிகவும் எதிர்பார்த்த வெற்றி கிடைத்தது, ரக்பி உலகக்கோப்பையை தென் ஆப்பிரிக்கா வென்றது. மக்கள் தங்கள் நிறங்களை மறந்து ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்துக் கொண்டார்கள்.

விளையாட்டை மக்கள் ஒற்றுமைக்கு பயன்படுத்திய மாமனிதர் Madiba!

சனி, 14 டிசம்பர், 2013

நிறவெறி vs தீண்டாமை

தீண்டாமை என்பது மனிதர்களை பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு சிந்தனையை கற்பிப்பது அதை ஒரு மதத்தின் சித்தாந்தம் வலியுறுத்துகிறது.

நிறவெறி என்பது வெள்ளைநிறம் உயர்ந்தது, ஆளப்பிறந்தது கறுப்பு என்பது அடிமைகளின் நிறம், சிந்திக்க தெரியாத மனிதர்களின் நிறம் என்ற கருத்தியலை தென் ஆப்பிரிக்காவில் முதலில் வெள்ளையர்கள் விதைத்தார்கள்.

இந்தியாவில் தீண்டாமையுடன் நிறமும் சேர்ந்துகொண்டது, உலகின் முதல் மனிதன் தோன்றியது ஆப்பிரிக்கா என்கிறது மனித இனங்களை ஆய்வுசெய்கிற விஞ்ஞானம்! இந்தியாவில் பூர்வகுடிகள் கறுப்பர்களே! தோலின் நிறம் எவ்வளவு வெண்மையாக இருக்கிறதொ அங்கே கலப்பு நடந்திருக்கிறது என்று பொருள். மனிதர்கள் கறுப்பு நிறத்தை யாரும் விரும்புவதில்லை அதைவைத்து அழகு கிரீம்களின் சந்தை விரிந்துகிடக்கிறது.

தென் ஆப்பிரிக்காவில் நிறவெறியின் உச்சம் என்னவென்றால், ஒரு தாய் தந்தைக்கு பிறந்த குழந்தை மாற்று நிறமாக இருந்தால் பிரித்து வைக்கப்படும்.
தீண்டாமை என்பது அந்த சாதி தம்பதியருக்கு பிறந்த குழந்த அதே சாதிதான் . இனக்கலப்பு நடைபெறாமல் தடுத்து அகமண முறை நீடித்திருப்பதில் சாதயடிப்படையின் நோக்கங்களில் ஒன்று.

SKIN என்ற ஒரு திரைப்படத்தில் ஒரு வெள்ளைக்கார தாய் தந்தைக்கு மூன்று குழந்தைகள் பிறக்கின்றன, முதல் குழந்தை அசல் வெள்ளையினம், இரண்டாம் குழந்தையின் நிறம் கறுப்புமல்ல, வெள்ளையுமல்ல, மாநிறம். ஆனால் முகஜாடை வெள்ளையினமல்ல என்று காட்டிக்கொடுத்துவிடுகிறது. தென் ஆப்பிரிக்காவில் 1950 களில் நிறவெறி உச்சத்தில் இருந்த காலகட்டம் அந்த தம்பதியினர் தங்கள் வெள்ளையல்லாத இரண்டாவது  குழந்தையை தங்கும்விடுதியுடன் கூடிய  பள்ளியில் சேர்க்க கொண்டுசெல்கிறார்கள் , பள்ளியில் பிறப்புச்சான்றிதழ் அடிப்படையில் அனுமதி கிடைத்துவிடுகிறது. ஆனால் மற்ற குழந்தைகள் அவளை வித்தியாசமாக பார்க்கிறார்கள், ஆசிரியர்கள் அவளை வெறுக்கிறார்கள். ஒருமுறை வாய்ப்பாடு உரக்கச்சொல்லவில்லை என்று அடிஅடியென்று அந்த பிஞ்சுக்குழந்தையை அடிக்கிறார் வெள்ளை ஆசிரியர். பள்ளியில் அக்குழந்தைக்கு மருத்துவ பரிசோதனை செய்கிறார்கள், அவள் வெள்ளையினமா? கலப்பினமா? கறுபினமா? என்று. முடிவு அவள் நிறத்தவர் அதாவது கலப்பினம் என்று டாக்டர் சொல்லிவிடுகிறார். மேலும் அக்குழந்தையை பள்ளியிலிருந்து நீக்கி விட்டுக்கெ கொண்டு போய் விட்ட்டுவிடுகிறது பள்ளி நிர்வாகம். அக்குழந்தை கெட்கிறது ஏன் என்னை பள்ளியிலிருந்து நீக்கினீர்கள் என்று, நிர்வாகம் உனது பெற்றோரிடம் கேட்டுக்கொள் என்று சொல்லிவிடுகிறார்கள்.

அந்த பெற்றோர் நீதிமன்றத்திற்கு செல்கிறார்கள், விசாரணையில் அந்தத் தாய் நான் இக்குழந்தைக்கு கருவுறும்போது எனது கணவருக்கு எந்த துரோகமும் இழைக்கவில்லை, அந்த கணவனும் நான் தான் இக்குழந்தையின் தந்தை என வாக்குமூலம் அளிக்கிறார்கள். ஒரு மனிசாட்சியுள்ள வழக்குறைஞர் அக்குழந்தைக்காக வாதிடுகிறார். நம் ஆப்பிரிக்கான்ஸ் மக்களிடம் கறுப்பினத்தின் ஜீன்கள் இருக்கின்றன, அதன் மூலம் பரிசுத்த வெள்ளைத் தம்பதிகளுக்கும் கூட நிறத்தவர்கள் (கலப்பினம்) பிறப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன என்கிறார். வழக்கு வெற்றியடைந்தாலும் சமூகத்தில் அந்த பெற்றொர்கள் படும் அவதி கொஞ்சமல்ல. ஒரு ஹொட்டலோ, துணிக்கடையோ அது வெள்ளையருக்கென்றால் அக்குழந்தைக்கு இடமில்லை. இந்த சமூக விலக்கலால் அவள் வெள்ளையர்களை வெறுத்து அவள் வீட்டு கறுப்பின வேலைக்காரனை காதலிக்கிறாள். அவளுடைய தந்தை ஒரு இந்து மேல்சாதியின் மன்நிலையில் அக்காதலை வெறுக்கிறார். ஆனால் மகளின் காதலை தடுக்க முடியாமல் அவள் கறுப்பனை திருமணம் செய்துகொள்கிறார்.

கறுப்பர்கள் வாழ்கிற சமூகத்தில் அவள் வாழ்ந்துவருகிறாள், The urbans Area Act    சட்டப்படி கறுப்பர்களின் குடியிருப்புகள் இடிக்கப்படுகின்றன. அங்கிருந்து இடம்பெயர்ந்து வாழ்கிறார்கள், குடிகார கணவனிடமிருந்து தன் இரண்டு குழந்தைகளோடும் ஒரிரவில் பிரிந்து செல்கிறார். குழநதைகளுடன் தலைந்கருக்கு சென்று அங்கே ஒரு நிறுவனத்தில் வேலைசெய்து வாழ்ந்துவருகிறார், அவளுடைய தாய் தந்தையை 20 ஆண்டுகளாக அவள் சந்திக்கவெ முடியவில்லை.

தென் ஆப்பிரிக்காவின் நிறவெறி படிப்படியாக ஒழிக்கப்பட்டுவிட்டது, ஆனால் தீண்டாமை இன்னும் நீடித்து அறிவியலோடும் பயணிக்கிறது.
 

திங்கள், 4 நவம்பர், 2013

மொழிவாரி மாகாணங்கள்...

இந்தியாவில் மொழிவாரி மாகாணங்கள் எல்லாம் அமைந்துவிட்ட நிலையில் வளர்ச்சி என்ற பெயரில் மொழிவாரி பிரிக்கப்பட்ட மாகாணங்களை துண்டாடும் வேலையை மத்தியில் ஆளக்கூடியவர்கள் ஆரம்பித்து அதை நடத்தியும் விட்டார்கள். தனித்தெலுங்கானா கடந்த மூன்று வருடங்களாக அவ்வப்பொது பற்றி எரியவும் தணியவும் மூண்டும் கொந்தளிக்கவும் ஆக இருந்தது. கடைசியில் ஒன்றுபட்ட ஆந்திரம் வெண்டி நீடித்த போராட்டம் மிகபெரியதாக இருந்தது. ஆளும் காங்கிரஸுக்கு பிரித்தாலும், பிரிக்காவிட்டாலும் தலைவலியாக இருக்கிறது. இதெல்லாம் கவனிக்கிற சிறுபிள்ளைக்கூட தெரியும் தேர்தல் ஆதாயத்திற்காக நடக்கிற பிரிக்கிற நாடகங்களென்று. தெலுங்கானா பகுதியில் செல்வாக்கு உள்ள கட்சிகள் தனித்தெலுங்கானா கொடுத்தே தீரவேண்டும் எனவும், மற்றவர்கள் தனித்தெலுங்கானா அறிவித்தபின்னர் ஒன்றுபட்ட ஆந்திரம் என்பதற்காக போராடுகிறார்கள்!

தேசியக்கட்சிகளான காங்கிரஸ்க்கு தேர்தலுக்கு முன்னால் தனித்தெலுங்கான அறிவித்தால் அங்கே வாக்குகள்பெறமுடியும் என நினைக்கிறது. பாஜகவிற்கு மொழிவாரி மாநிலங்கள் அமைந்ததே அதற்கு ஏற்புடையதாக இல்லை, அப்படி அமைந்த மாநிலங்களை துண்டாடினால் மொழிவாரியில் மாநிலங்கள் பிளவுபடுவது ம்த்தியில் தன்னுடைய ஒரு மொழி, ஒரே கலாச்சாரத்திற்கு வசதியாக இருக்கும் என்பது அதன் எண்ணம். இடதுசாரிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட தனித்தெலுங்கானவை ஆதரிக்கிறது. இன்னும் கொள்கை அளவில் ஒன்றுபட்ட ஆந்திரம் நீடிக்கவேண்டும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே கொண்டுள்ளது. மொழிவாரி மாகாணங்கள் நெடிய போராட்டத்திற்குப் பிறகே அமைக்கப்பட்டன. அதில் அந்தந்த பகுதிகளில் வாழும் எல்லாத்தரப்பு அரசியல்கட்சிகளும் பங்குவகித்தன. இன்று தனித்தெலுங்கானா பிரித்ததைத் தொடர்ந்து இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் புதிய மாநிலங்கள் பிரிக்கவெண்டும் என்ற கோஷங்கள் முழங்கப்படுகின்றன.

வளர்ச்சி என்ற பெயரில் புதிய மாநிலங்கள் அமைக்கப்படலாமா? அப்படி அமைக்கப்பட்ட சமீபத்திய மாநிலங்கள் எந்த அளவில் முன்னேற்றம் கண்டுள்ளன? ஏற்கனவே மாநிலங்களுக்கிடையேயான நதிநீர், எல்லைகள், மின்சாரம் பகிர்ந்துகொளவதில் ஏற்கனவெ பிரச்சனைகள் இருக்கின்றன. ஒரே மொழி, கலாச்சாரம் கொண்ட ப்குதியை இரண்டாகப் பிரித்தால் புதிய  பிரச்சனைகள்  ஏற்படுத்திக் கொள்ளப்பொகிறோம். குறுகிய நோக்கத்தில் பிரதேச உணரவை பயன்படுத்தி அந்த பகுதியிலாவது ஆட்சி அமைக்கமுடியுமா என்பதற்க்காக தனிமாநிலம் வெண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் யோசிக்க ஆரம்பித்துவிட்டார்.

 மொழிவாரி மாகாணங்கள்  கோரிக்கைகள்:

1917லிலேயே காங்கிரஸ் இயக்கம் சுதந்திரத்திற்குப் பின் மொழிவாரி மாகாணங்களை அமைக்க ஒப்புகொண்டுவிட்டது. மகாத்மா காந்தி மொழிவாரி காங்கிரஸ் சீரமைப்பை ஊக்குவித்தார். சுதந்திரம் வந்தபிறகு தேசத்தின் புதிய மாநிலங்கள் மொழி அடிப்படையில்  உருவாக்கப்பட வேண்டும்  என நினைத்தார். சுதந்திரத்திற்கு முன்புவரை நேருவின் கருத்தும் அதே போலத்தான் இருந்தது.  ``ஒவ்வொரு மொழியும் , படித்த, பாமர மக்களின் வாழ்க்கையோடும், கலாச்சாரத்தோடும் , சிந்தனையோடும் பின்னிப்பிணைந்துள்ளது. பாமர மக்கள் தங்கள் சொந்த மொழியின் மூலமாகவே கல்வியிலும், கலாச்சாரத்திலும் முன்னேறமுடியும் என்பது தெளிவு``  என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் 1947ல்  அப்போதுதான் நாடு மத அடிப்படையில் பிளவுகண்டதைத் தொடர்ந்து மொழிவாரியாகப் பிரிப்பது இந்திய யூனியன் சிதறுவதை ஊக்குவிக்காதா? என்ற வேறு யோசனையிலும் இருந்தார். சென்னை மாகாணத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடன், உருது மற்றும் கொங்கனி பேசுபவர்கள் இருந்தார்கள். அதைப்போலவெ பம்பாய் மாகாணமும் பல மொழிகள், பல கலாச்சாரம் கொண்டது, பலதரப்பட்டவர்கள் ஒன்றினைந்துவாழும்  அசாதாரமான பயிற்சியை அளித்திடாதா? புதிய தேசம் சமாதானம், நிலைத்தன்மை, பொருளாதாரவளர்ச்சி என்ற நவீனத்தில் இணையக்கூடாதா? இன்னும் ஏன் மொழி, ஜாதி அடிப்படையில் பிரிக்கப்படவெண்டும் என்ற கேள்வியை எழுப்பினார்.

இந்தியா வலுப்பெற்று, நிச்சயமான நிலைக்கு வரும்வரை மொழிவாரி மாநில அமைப்பு ஒத்தி வைக்கவேண்டும் என்ற நேருவின் கோரிக்கையை அந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு காந்தியும் `நியாயமானதே` என்று சொன்னார். மொழியால் விளையும் பிரிவுகளை மேலும் சுமத்த நேரு தயங்கியதற்கு படேலும் !  ராஜாஜியும் ! ஆதரவளித்தனர். 1948, 49ம் ஆண்டுகளில் மொழிவாரி சுயாட்சியைக் கோரும் இயக்கங்கள் துவங்கப்பட்டன. மராத்தி பேசும் காங்கிரஸ் உறுப்பினர்கள் மராத்திய மாநிலத்தை அமைக்கவும், அதேபோல குஜராத்தியை தாய்மொழியாகக் கொண்டவர்கள், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பகுதிகளிடமிருந்து இதே கோரிக்கைகள் வலுத்தன. பஞ்சாபில் சீக்கிய மாகாணம் ஒன்று கோரி ஒரு தனிப்போராட்டம் நடந்தது அதில் மொழி, மதம் என்ற இரண்டு கொரிக்கைகளையும்  ஒன்றாக நெருங்கவைத்தது.


 முதல் மாநிலம் ஆந்திரப்பிரதேசம்.

மொழி சுயாட்சிக்கான தீவிரமான இயக்கத்தின் தொடக்கம் தெலுங்கு பேசும் ஆந்திர மக்களுடையதுதான். ஹிந்திக்கு அடுத்தபடியாக அதிகமக்கள் பேசும் மொழியாக தெலுங்கு அப்போதும் இருந்தது, இப்போதும் இருக்கிறது. ஆந்திர மஹாசபா என்ற அமைப்பு சென்னை மாகாணத்தில், தமிழர்கள் தெலுங்களுக்கு எதிராக பாரபட்சமாக நடந்துகொள்வதாக அந்த அமைப்பு கிளர்ச்சி செய்தது. சுதந்திரத்திற்குப்பிறகு தெலுங்கு பேசும் மக்கள் காங்கிரஸை மொழிவாரி மாநில அமைப்புக்கு ஆதரவான தீர்மானம் நிறைவேற்றக்கொரினர். தனி மாநிலப்பிரச்சனையில் மதராஸ் மாகாண முன்னாள் முதல்வர் பிரகாசம் 1950ல் கட்சியிலிருந்து விலகியதால் காங்கிரசுக்கு பலத்த அடி விழுந்தது. 1952 மதராஸ் சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு பேசும் பகுதியில் 145 இடங்களில் காங்கிரஸ் வெறும் 43 இடங்கள் மட்டுமே வென்றது, மற்ற இடங்களிலெல்லாம் ஆந்திர இயக்கத்தை ஆதரித்தவர்கள், குறிப்பாக கம்யூனிஸ்ட்கள் 41 இடங்களை வென்றனர். தேர்தல் முடிவுகள் மேலும் ஆந்திர மாநில இயக்கத்திற்கு உத்வேகம் அளித்தது. மதராஸ் சட்டமன்றத்தில் தெலுங்கு பேசும் உறுப்பினர்களை அவர்கள் கொரிக்கை நிறைவேறும்வரை சபையை புறக்கணிக்க  ஆந்திர இயக்கத்தின் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டது. கிளர்ச்சி செய்பவர்கள் நேருவையும் மதராஸ் முதல்வர் ராஜாஜியையும் வெறுத்தனர்.

1952ம் ஆண்டு அக்டோபர் 19ம்தெதியன்று பொட்டி ஸ்ரீராமுலு என்பவர் சென்னையில் ஆந்திர மாநிலம் அமைக்கவேண்டி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார். ஸ்ரீராமுலுவுக்கு இது முதல் உண்ணாவிரதமல்ல,   1946ம் ஆண்டு நவமப்ர் 25ம் தேதி மதராஸ் மாகாணத்திலுள்ள் எல்லாக் கோவில்களையும் தீண்டத்தகாதவர்களுக்குத் திறந்துவிடவெண்டும்  என்று சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டார். கடைசியில் கோரிக்கைகள் நிறைவேறுமுன்னே காந்தியின் வற்புறுத்தலால் உண்ணாவிரத்தை முடித்துக் கொண்டார். சுதந்திரப் போராட்டகாலத்தில் உப்பு சத்தியாகிரகத்திற்கு பிறகு சிலகாலம் காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் இருந்தார். சபர்மதியில் அவர் ஆற்றிய பணிகள் ஆசிரமத்தில் இருந்தவர்கள் அன்பையும் காந்திஜியின் பாராட்டுதல்களையும் பெற்றார். 1952ல்  அவருடைய உண்ணா நோன்பை கைவிடச்சொல்வதற்கு காந்திஜி உயிருடன் இல்லை. டிசம்பர் 12ம் தேதி நேரு, ராஜாஜிக்கு எழுதிய கடிதத்தில் `ஆந்திரக்கோரிக்கையை ஏற்கவேண்டிய தருணம் வந்துவிட்டது, இன்னும் தாமதித்தால் ஆந்திரர்களின் வெறுப்புண்ர்வை  நம்மால் சந்திக்கமுடியாது` என்று எழுதினார். ராஜாஜியின் தாமதமான கடிதத்திற்கு முன்னால் பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதத்தின் 58வது நாளில் உயிரிழந்தார். அவருடைய மரணம் ஆந்திரத்தை ஆத்திரம் கொள்ளச்செய்து மக்கள் வன்முறையில் ஈடுபட்டனர், அரசு அலுவலகங்கள், பொதுச்சொத்துகள், ரயில்கள் சேதப்படுத்தப்பட்டன. பல எதிர்ப்பாளர்கள் காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் இறந்தனர்.

ஸ்ரீராமுலுvin மறைவுக்கு இரண்டுநாட்களுக்குப்பின் `ஆந்திர மாநிலம் அமையும்` என்ற முறையான அறிவிப்பை நேரு வெளியிட்டார். ஆந்திரப்பிரதேசம் என்ற முதல் மொழிவாரி மாநிலம் நேருவின் விருப்பமின்றியே அமைந்தது.  ``நாம் குளவியின் கூட்டைக் கலைத்துவிட்டோம், நம்மில் பலர் கடுமையாக கொட்டப்படுவோம்`` என்று நேரு தன்னுடன் பணியாற்றும் ஒருவருக்கு கடுமையாக எழுதினார், அதைப்போலவே ஆந்திரம் மாநிலம் அமைந்ததைத் தொடர்ந்து பிறமொழிபிரிவினர் கோரிக்கைகளை வலுப்படுத்தினர்.

 

செவ்வாய், 15 அக்டோபர், 2013

Europa Europa (1990) உலகசினிமா

ஒரு வகுப்புக்கலவரம் நேரிட்டால் அவன் நல்லவனா? கெட்டவனா? என்றெல்லாம் பார்க்க கலவரக்காரர்களுக்கு நேரமிருக்காது. அவன் எதிரியா? அவனுடைய அடையாளம் என்ன? உயிர்பயத்தின் காரணமாக பொய்கூட சொல்லலாம், ஆனால் அவனுடைய அங்க உறுப்புகள் அவனை இந்த இனத்தவன், மதத்தினன் என்று காட்டிக்கொடுத்துவிடும். Mr.& Mrs. Iyer என்ற திரைப்படத்தில் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த பயணிகள் நடுவழியில்  மதக்கலவரத்தின் காரணமாக நிறுத்தப்படுகிறார்கள்.  இந்துமதவெறியர்கள் சிலர் பேருந்தை நிறுத்தி பயணிகளிடம் இஸ்லாமியர்களைத் தேடுகிறார்கள். அப்போது அந்த மதவெறியர்கள் சந்தேகப்படுபவர்களின் ஆடைகழைந்து பிறப்புறுப்பைப் பார்த்து அடையாளம் கொள்கிறார்கள். அப்போது பின்னிருக்கையில் அம்ர்ந்திருக்கின்ற ஒரு பயணி மற்றொரு சக பயணியை இஸ்லாமியன் என்று காட்டிகொடுத்து விடுகிறான். கலவரக்காரர்கள் அந்தப் பயணியை கொண்டுசென்று கொன்றுவிடுகிறார்கள். ஆனால் காட்டிக்கொடுத்தவன் அழுகிறான், ஏனென்றால் அவன் ஒரு யூதன் அந்த மதத்தினரும் circumcision செய்துகொள்வார்கள். கலவரக்காரர்களிடமிருந்து தன்னுயிரை காப்பாற்றிக்கொள்ள அவன் ஒருவனை காட்டிக்கொடுத்தான்.
 
 
 
Europa Europa. இந்த திரைப்படத்தில் நாஜிகளின் பிடியிலிருந்த ஜெர்மனியில் ஒரு யூதக்குடும்பத்தில் தங்கள் மகன்களை  வீட்டைவிட்டு தப்பித்து செல்லும்படி படி பெற்றோர்கள் சொல்கிறார்கள். கனத்த இதயத்தோடு பெற்றோர்களை விட்டு Solek மற்றும் அவனுடைய அண்ணன் Issac தப்பித்து செல்கிறார்கள். செல்லும்வழியில் அண்ணனும் தம்பியும் பிரிந்துவிடுகிறார்கள். Solek சென்ற இடம் சோவியத் ஆளுகையிலிருந்த போலந்து. அங்கே கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பள்ளியில் கல்விபெறுகிறான். அந்தபகுதியை நாஜிகள் ஆக்ரமித்ததால்  ஜெர்மன் படைகளிடம் சிக்குகிறான். அவன் கண்முன்னே அவனுடன் இருந்த தங்களுடைய கம்சமோல் உறுப்பினர் அடையாள அட்டையை காண்பித்ததால் சுட்டுக்கொல்லப்படுகின்றனர். Solek  தன்னிடமிருந்த கம்சமோல் உறுப்பினர் அடையாள அட்டையை மறைத்துவிட்டு தன்னை ஒரு ஜெர்மானியன் என்றும் தன்னுடைய பெற்றோர்களை சோவியத்படையினர் சுட்டுக்கொன்றனர் என்றும் சொல்கிறான். அவனுக்கு ரஷ்ய மொழியும், ஜெர்மன் மொழியும் தெரிந்திருந்ததால் ஜெர்மானிய ராணுவத்தில்  வேலைசெய்யச் சொல்கிறார்கள். யூதர்களை தேடிப்பித்து கொன்றுகொண்டிருந்த சமயம் ஒரு யூதன் ஜெர்மானியன் என்று சொல்லவும் நாஜி ராணுவம் பிடிபட்டவனின் ஆடைகழைந்து யூதன் என்று உறுதிப்படுத்தியவுடன் சுட்டுக்கொல்கிறார்கள். இந்த சம்பவம் Solek ஐ எப்போது மாட்டுவோம் என்று தெரியாமல் பயப்படுகிறான்.
 
ஒரு சண்டையின்போது இவன் சார்ந்திருந்த யூனிட்டில் பலர் இறந்துவிடுகிறார்கள், இவன் தன்னந்தனியாக சோவியத் வீரர்களை சரணடையச்செய்கிறான். இந்த செயலால் அவன் மிகவும் மதிக்கப்படுகிறான். 16 வயது நிரம்பியுள்ள இளைஞனான இவனுக்கு நாஜிகளின் இளைஞர் பள்ளியில் கல்வியளிக்கப்படுகிறது. அங்கே யூதர்கள் மீதான வெறியை ஏற்படுத்தும் கல்வியை கொடுக்கிறார்கள். யூதனை எப்படி அடையாளம் காணுவது என்று வகுப்பறையில் சொல்லித்தருகிறார்கள். அவனுடைய அங்கங்கள் ஒவ்வொன்றும் எப்படியிருக்கும் அள்வீடுகளையும் சொல்கிறார்கள். வகுப்பிலிருந்த solek (அவன் இப்போது joseph peters என்று மாற்றியிருக்கிறான்) ஐ அழைத்து மண்டையோட்டின் அளவுகளை விரிவுரையாளர் அளக்கிறார். அப்போது இவனுடைய மனம் திக்திக் என்றிருக்கிறது. அளந்துவிட்டு உன்னுடைய உடலமைப்பு பால்டிக் கலப்பினம், ஆனாலும் நீ `மேன்மையான் ஆரிய` இனம் தான் என்கிறார். யூதர்களை இழிவுபடுத்தி மாணவர்களும் அங்குவரும் போதனையாளர்களும் சொல்லும்போது இவனுக்கு சித்ரவதையாக இருக்கிறது. ஒரு சமயத்தில் இளம்வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெறுகிறது, அப்போது ஆடைகழையவேண்டும் என்று கேள்விப்படுகிறான், அவ்வள்வுதான் மாட்டிக்கொள்வோம் என்று எனக்கு பல்வலி என்று வேறுடாக்டரிடம் சிகிச்சைக்குச் சென்று அத்தருணத்தில் தப்பித்துவிடுகிறான்.
 
தன்னுடைய பெற்றோர்கள் ஏதோ ஒரு யூதமுகாம்களில் தான் இருப்பார்கள் அவர்களை காணவேண்டுமென்று டிராமில் செல்லும்பொது ஜன்னல்வழியாக ghetto வை பார்க்கிறான், ஆங்காங்கே தள்ளுவண்டியில் பிணங்களும், யூதர்கள் மீது சித்ரவதைகளும் நடைபெறுகிறது. இவன் அடிக்கடி அந்த டிராமில் செல்வதைப் பார்த்த போலிஸ் இவனிடம் அடையாள அட்டைகுறித்த விபரங்கள் கேட்கிறது. அவனுடைய மனச்சிக்கல் மிகுந்த சூழ்நிலையில் சோவியத்படை முன்னேறிவருகிறது. அப்போது ஏற்பட்ட சண்டையில் நாஜிகளின் அணியிலிருந்து தப்பித்து சோவியத் படையிடம் சரணடைகிறான், தான் யூதன் என்று சொல்லவும் அங்கே நம்பமறுக்கிறார்கள். நாஜிகளிடமிருந்து  விடுவிக்கப்பட்ட பிணையக்கைதிகளாக இருந்த செம்படைவீரன் ஒருவனிடம் இவனை சுட உத்தரவு வருகிறது. தீடீரென்று முகாமிலிருந்து அவனுடைய அண்ணன் Issac  இவனை கண்டுகொண்டு காப்பாற்றுகிறான். போர் நிறுத்தடத்திற்குப்பின்பு பாலஸ்தீனம் வந்துசேர்கிறான். தன்னுடைய குழந்தைகளுக்கு circumcision செய்யப்போவதில்லை என்று முடிவுசெய்கிறான்.
 
உயிர்பிழைப்பதற்காக ஜெர்மானியன் என்று சொன்ன Solek நாஜிகளின் படையில் யூதர்களை கருவறுக்க சத்தியம் செய்துகொள்ள வேண்டியிருந்தது, ஒவ்வொரு நாளும் அவன் படும் அவஸ்தையை படம் விளக்குகிறது.

திங்கள், 14 அக்டோபர், 2013

Train of Life...

இனவெறிக்கு உலகிலேயெ அதிகம் பாதிக்கப்பட்ட இனம் யூதர்கள். அதுவும் இரண்டாம் உலகப்போர் காலத்தில் ஹிட்லரின் இனவெறி அரசியல் அவர்களை சின்னாபின்னப் படுத்தியது. அதைப்பற்றி என்னற்ற இலக்கியங்கள் நாவல்களாகவும், திரைப்படங்களாகவும் வந்திருக்கின்றன. Gloomy Sunday  படத்தை பார்த்தபின்பு Train of Life  என்ற படத்தை பார்த்தேன். யூதர்கள் ஒட்டுமொத்த கிராமத்தை காலிசெய்துவிட்டு ஒரு ரயிலை உருவாக்கி தப்பிச்செல்வது தான் கதை.

அந்த கிராமத்தில் ஸ்லோமோ என்பவன் வெளியூர் சென்றுதிரும்புகையில் பக்கத்து கிராமத்தில் நாஜிப்படைகள் யூதகுடியிருப்புகளின் மீது நடத்திய அக்கிரமங்களை பார்த்தான். தனது கிராமத்துக்கு வந்தவுடன் மதத்தலைவரிடமும் ஊர்பெரியவர்களிடமும் விவரத்தை சொல்கிறான், ஆபத்து நெருங்கிக்கொண்டிருக்கிறது , நாம் தப்பித்தாகவேண்டும் என்று யோசனையில் மூழ்கியிருக்கிறார்கள். அப்போது ஸ்லோமோ ஒரு யோசனை சொல்கிறான், ஒரு ரயிலைப் பிடித்து கிராமம் முழுவதுமுள்ள மக்கள் காலிசெய்து பாலஸ்தீனம் அல்லது ரஷ்யா சென்றுவிடவேண்டும் என்கிறான்.

ரயிலை எப்படி வாங்குவது, அப்படி ரயிலில் போனால் நாஜிகளின் கட்டுப்பாட்டிலுள்ள ரயில்நிலையங்களுக்குத் தெரியாமல் எப்படி தப்பிப்பது என்றெல்லாம் யோசனை செய்கிறார்கள். முடிவில் அவர்களே சிலர் நாஜி ராணுவத்தினராக நடித்து யூதர்களை நாடுகடத்துவது போல ரயிலை வடிவமைக்கிறார்கள். யூதர்கள் ஐரோப்பாவெங்கும் இருந்தாலும் அவர்கள் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு கூட்டம் கூட்டமாக குடியிருப்பில் வாழ்ந்து வருகிறார்கள். எல்லோரிடமும் பணம் வசூலித்து பழைய ரயில்பெட்டிகளை காயலான் கடையிலிருந்து வாங்கி புதுபிக்கிறார்கள், ரயில் இஞ்சினும் அப்படித்தான். முதல் இரண்டு ரயில்பெட்டிகள் பச்சைநிறத்தில் நல்ல உள்கட்டமைப்புடன் நாஜி படைகளின் கமாடெண்ட்க்காக வும், படைவீரர்களுக்காகவும் அமைக்கிறார்கள். மற்ற பெட்டிகள் எல்லாம் யூதர்களுக்கு ஏதோ கூட்ஸ் வண்டியில் ஆளை ஏற்றுவது போல தயாரிக்கிறார்கள். நல்ல் ஜெர்மன் மொழி பேசத்தெரிந்த ஜெர்மானிய ஜாடை உள்ளவருக்கு கமாண்டெட் உடைகள், நாஜிப்படைவீரர்களைப் போல சில யூதர்களுக்கு மொழிப்பயிற்சி,ராணுவப் பயிற்சி அளிக்கிறார்கள்.

ரயில்பெட்டிகள், ரயில் இஞ்சின் கூட வாங்கியாகிவிட்டது, ரயிலை யார் ஓட்டுவது. யாரோ ஒரு யூதன் ரயிலை ஓட்டும் ஆசையில் புத்தகத்தை படித்துக்கொண்டிருக்கிறான். புத்தகம்(Manual) பார்த்து ரயிலை இயக்க தீர்மானித்துவிட்டான். ஒட்டுமொத்தகிராம யூதர்களே குறிப்பிட்ட நாளன்று இரவில் இரயிலில் தப்பிச்செல்ல பயணிக்கிறார்கள். எப்படி வழியில் ஏற்படும் சிக்கல்களை சமாளிக்கிறார்கள் என்பதுதான் கதை.

ஞாயிறு, 13 அக்டோபர், 2013

Gloomy Sunday

சினிமா வாரம்.....

இந்த வாரத்துல மட்டும் நிறைய படம் பார்த்தாகிவிட்டது.

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்

Gloomy sunday (hungarian)

Train of life (french)
...
Europa Europa (French)

Kikujiro (Japanese)

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படம் ரெம்ப பிரமாதம், ஒரு கதாநாயகி, காதல், பாடல்கள், காமெடி, விரசம் இல்லாமல் ஒரு கதையை சொல்லமுடியும்
என்பதற்கு இந்தப் படம் உதாரணம். பாராட்டுகளையும், லாஜிக் இல்லாத கதை என நிறைய விமர்சனங்கள் வைக்கிறார்கள். ஆனால் என்னவோ
படத்தை ரசிக்கமுடிந்தது. குறைவான உரையாடல்கள் அதை இசைமூலம் நிரப்பியது இசைஞானிக்கு செய்யும் மரியாதையாகப்பட்டது.

இடுகாட்டில் ஓநாய் சொன்ன கதைதான் படத்தின் சிறப்பு, பார்ப்பவர்களை உருகவைக்கும் விதமாக கதை சொன்னவிதம். மிஷ்கின் படம் என்றாலே
ஏதாவது காப்பி இருக்கும் என்கிறார்கள். காப்பி அடித்து நம் மொழியில் தருவது நல்ல் விசயம்தான். ஆனால் மூலக்கதையை சொல்லவேண்டும்.
எத்தனையோ வெற்றிப்படங்களின் பின்னால் தழுவல்கள் இருக்கின்றன.

அடுத்து Kikujiro என்ற ஜப்பானிய படம், இதைவைத்துதான் மிஷ்கின் ‘நந்தலாலா’ உருவாக்கினார் என்றார்கள். தழுவல் இருக்கிறது, 100 சதவீதக் காப்பி கிடையாது. பாட்டியிடம் வளரும் சிறுவன் கோடை விடுமுறையில் அதுவரை அம்மாவை பார்த்ததேயில்லை அதனால் அம்மாவைத்தேடி தனியாக பயணக்கிறான். அவனுக்கு துணையாக  ஒரு ஊதாரி இளைஞன் வழித்துணைக்கு வருகிறான். அம்மா கிடைத்தார்களா? ஒரு பயண அனுபவம், அதை காமெடியாகவும் செய்திருக்கிறார்கள். மிஷ்கின் படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அப்படியே தலைகுனிந்து ரெம்ப நேரம் நிற்பது, இந்தப்படத்தின் தழுவல்தானோ!

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தின் பிண்ணனி இசையை அவ்வளவு சீக்கிரம் மறக்கமுடியவில்லை. அதைவிட மேலான ஒரு இசையைக்  கேட்டால் மட்டுமெ அதை மறக்கமுடியும் என்ற தருணத்தில் நிர்மல் அவர்கள் Gloomy Sunday வின் இசையை பகிர்ந்தார். அந்தப் படத்தையும்  பார்த்தேன். இரண்டாம் உலகப்போரில் ஒடுக்கப்பட்டவர்களின் வலியை சுமந்து செல்லும் இசை பலரை ‘தற்கொலை செய்யத்தூண்டுகிறது’. ஒரு யூதன் Budapest நகரத்தில் ரெஸ்ட்டாரெண்ட் நடத்துகிறான், மேற்கத்திய நாடுகளில் ரெஸ்ட்டாரெண்ட் களில் இசை ஒரு அங்கம். நாம் ஹோட்டலுக்கு அரக்கப்பரக்க சாப்பிட்டுவிட்டு செல்கிறோம். ரெஸ்ட்டரெண்டில் விருந்தோம்பல் சிறப்பான அம்சமாகயிருக்கிறது. அங்கெ பணிபுரியும்   பெண் அந்த யூதனை காதலிக்கிறாள், பியானோ வாசிப்பதற்கு வேலைக்கு வரும் ஒருவன் வாசித்த இசையால் அந்த ரெஸ்ட்டாரெண்ட் புகழ்   பரவுகிறது. ரெஸ்ட்டாரெண்டை நடத்துபவன் பியானோ வாசிப்பவனின் வளர்ச்சியில் உறுதுணையாக இருக்கிறான். அந்த பெண் பியானோ வாசிப்பவனையும் காதலிக்கிறாள்.
இருவரை ஒருபெண் காதலிக்கிறாள், அந்த் இருவரும் ஏற்றுக்கொள்கிறார்கள்.
 
ஒருமுறை ஜெர்மானிய ராணுவ அதிகாரி ஒருவன் ரெஸ்ட்டாரெண்ட்க்கு வருகிறான்.அவன் பணிபுரியும் பெண்ணை காதலிப்பதாக அவளிடம் கூறுகிறான், அவள் மறுக்கவே ‘டனுபே’ ஆற்றில் விழுந்து தற்கொலை முயற்சி செய்கிறான். ரெஸ்ட்டாரெண்டை நடத்துபவன் அவனை காப்பாற்றி அவனை ;பெர்லின்’ க்கு வழியனுப்புகிறான். அவன் இசைக்கும் Gloomy sunday இசையைக்கேட்டு பலர் தற்கொலை செய்த நிகழ்வு அவனை கவலைப்படசெய்கிறது , பியானோ வாசிக்க வெறுக்கிறான்.

இரண்டாம் உலகப்போரில் நாஜிகள் யூதர்களை சித்ரவதைமுகாம்களுக்கு அனுப்புகிறார்கள். ஹங்கேரி ஜெர்மன் நாஜிகளின் ஆட்சிக்கு வர்கிறது.
அந்த ராணுவ அதிகாரி மீண்டும் ரெஸ்ட்டாரெண்ட்க்கு வருகிறான். இந்தமுறை அவனிடம் மாற்றம். ரெஸ்ட்டாரெண்டை நடத்துபவன் அவனை பெயர் சொல்லி  அழைக்கும்போது பொதுவெளியில் Colonel ஏன்று கூப்பிடு என்கிறான்., சென்றமுறை அவனுக்கு ரெஸ்ட்டாரெண்டில் மறுக்கப்பட்ட பியானோவைத் தொடுவது, கிச்சனுக்குள் செல்வது இந்தமுறை இல்லை. யூதர்களை இரண்டாம் தரக்குடிமகன்களாக நடத்தப்படுகிறார்கள். பணமுள்ள யூதர்கள் ஆயிரக்கணக்கான டாலர்கள்  கொடு த்து exitpermit வாங்கிகொண்டு தப்பிச்செல்கிறார்கள். ஒருமுறை இரண்டு நாஜி அதிகாரிகள் வந்து ரெஸ்ட்டாரெண்டில் அவர்களுக்குப் பிடித்த இசையை  வாசிக்கச் சொல்லும்போது பியானோ வாசிப்பவன் மறுக்கிறான், ஒரு அடிமை எஜமானன் சொல்வதை கேட்க மறுப்பதா, என்பதால் விளாவுகளை உணர்ந்து
ரெஸ்ட்டாரெண்ட் பணிப்பெண் Gloomy sunday வின் கவிதையை வாசிக்கிறாள். வாசித்துமுடிந்தவுடன் பியானோ வாசிப்பவன் ராணுவவீரனின்  துப்பாக்கி கொண்டு தற்கொலை செய்துகொள்கிறான்.
 
அடுத்த யுதர்களின் வேட்டையில் ரெஸ்ட்டாரெண்ட் நிர்வாகி சித்ரவதை முகாமுக்கு அனுப்பப்  படுகிறான். காதலியும் ரெஸ்ட்டாரெண்ட் பணிப்பெண் அவனைக் காப்பாற்ற தன் உடலை ஜெர்மானிய ராணுவ அதிகாரிக்கு தந்தபின்னும் யூதன் காப்பற்றப் படவில்லை  ஜெர்மானிய ராணுவ அதிகாரியின் தற்கொலையிலிருந்து காப்பாற்றிய அதே யூதனை சித்ரவதை முகாமுக்கு அனுப்புகிறான்.

Gloomy sunday பாடலின் இசை “மயிர்நீப்பின் உயிர்வாழா கவரிமான்” என்ற அர்த்தம் கொடுக்கிறது. இசையில் சூன்யஞானமுடைய எனது காதிலும் Gloomy sunday ஒலித்துக்கொண்டேயிருக்கிறது.

Train of Life மற்றும் Europa Europa இரண்டும் heil Hilter ஐ நினைவு படுத்தும் சினிமாக்கள். ஜெய் நரேந்திரமோடி என்ற சொல்ல்மறுத்தவர்களை பூனாவில்
ABVP மாணவர்கள் அடித்து உதைத்த சம்பவம் நினைவில் வந்துபோனது.

சனி, 5 அக்டோபர், 2013

வகுப்புவாதம் : ஓர் அறிமுக நூல்இன்று இந்திய மக்களும், இந்தியாவும் சந்தித்துவரும் மிகத்திவிரமான பிரச்சனை வகுப்புவாதமே ஆகும். அது இந்திய சமுதாயத்தைப் பிளவுபடுத்துவதுடன், கடுமையாகப் போராடி அடைந்த இந்திய மக்களின் ஒற்றுமைக்கும் ஆபத்தாகவும் உள்ளது. வறுமை, வேலையின்மை, பட்டினி இவையெல்லாவற்றையும் எதிர்க்க மக்கள் ஒற்றுமை என்பது மிக அவசியம் ஆனால், வகுப்புவாதிகள் ஏகாதிபத்தியவாதிகள் செய்தது போல பிரித்தாளும் சூழ்ச்சியை செய்து ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்கிறார்கள் என்பதையும் விட மக்கள் மதத்தின்பால் ஒருவருக்கொருவர் வெட்டிக்கொல்லப்படுவதற்கு பிண்ணனியில் இருக்கிறார்கள். வன்முறை, கலவரம் இவற்றைவிட இது உருவாக காரணமாக இருக்கின்ற கருத்துக்களை விதைப்பதுதான் மிகவும் ஆபத்தானது.
முதலில் வகுப்புவாதம் என்றால் என்ன? இந்திய சமூகம் பல்வேறு மதச்சமூகங்களாகப் பிரிந்துள்ளது மட்டுமல்ல, ஒன்றையொன்று எதிர்ப்பதாகவும் இருக்கிறது என்கிற யூகத்தின் அடிப்படையில் அமைந்ததுதான் வகுப்புவாதம். இந்தியாவில் பொருளாதரம், அரசியல், சமூகம், பண்பாடு போன்ற மதம்சாராத காரணங்களுக்காக மத அடையாளங்களைப் பயன்படுத்தி மட்டுமே மக்களை அணிதிரட்டிடமுடியும் என்ற நம்பிக்கையிலிருந்து வகுப்புவாதம் தொடங்குகி’றது. மதம் சாராத காரணங்களுக்காகவும் தனித்த சமுதாயங்களையோ அல்லது ஒத்த இனக்குழுக்களையோ உருவாக்குகின்றனர்.  இந்தியாவை வகுப்புமயமாக்குதல் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக நிகழ்ந்து வந்துள்ளது. நாட்டு விடுதலைக்கு 50 ஆண்டுகள் முன்பாகவே அன்றைய காலனி ஆட்சியாளர்கள் இதனை ஊக்கப்படுத்தத் தொடங்கிவிட்டனர். குறிப்பாக 1858க்கு பிறகு காலனி அரசு தீவிரமாக இந்தியமக்களை சாதி, மதம், மொழி, பிரதேசரீதியாக பிளவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டது. 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றிய வகுப்புவாதசக்திகள் இந்திய மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்திற்கு அச்சுறுத்தலாக இருந்தனர் அதனால் காலனி அரசு வகுப்புவாதிகளுக்கு பெருத்த ஆதரவு அளித்தது.
வகுப்பவாதக் கருத்தியல்: வகுப்புவாதம் என்பதை ஒருமுறை புரிந்துகொண்டால், ஒரு வாகுப்புவாதக்கட்சி என்றால் என்ன என்பதை வரையறை செய்வது சுலபமாகிவிடும். வகுப்புவாதக் கருத்தியலைச் சுற்றி கட்டமைக்கப்படுவைதான் வகுப்புவாதக் கட்சிகள், குழுக்கள் ஆகும். இவற்றிலிருந்து வகுப்புவாதக் கருத்தியலை எடுத்துவிட்டால் அங்கு ஒன்றுமே இருக்காது. 1937ல் ஜின்னாவிற்கு, முஸ்லீம் லீக்கிற்கும் இது தான் நேர்ந்தது. அவர்களது வகுப்புவாத கோரிக்கைகள் அனைத்தையும் காலனி ஆட்சி வகுப்புவாத ஒப்பந்தம் என்ற பெயரில் ஏற்றுக்கொண்டது, இதனால் முஸ்லீம் லீக் கட்சியைக் கலைத்துவிடுவது அல்லது வகுப்புவாதக் கருத்தியலை அதிகப்படுத்தி ஒரு மதத்தீவிரவாதக் கட்சியாக மாறுவது என்ற இருவழிகளைத் தவிர முஸ்லீம் லீக்கிற்கு வேறுவழி இருக்கவில்லை. இந்துமகாசபையின் வகுப்பவாதத்தை எதிர்த்து தேசிய இயக்கம் மதச்சார்பின்மை கொள்கையை பிரச்சாரம் செய்ததால் இந்துமகா சபை அழிவைச்சந்திக்க நேரிட்டது. தமது அமைப்பை கலைப்பதற்குப் பதிலாக 1920ல் தீவிரவகுப்புவாதத்திற்கு மாறியது.
தங்கள் மதம், பண்பாடு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது அல்லது நாம் பெரும்பான்மையினர் நமது மதம் ஆட்சி செய்யவேண்டும், அண்டை நாடுகளான பாகிஸ்தானிலும், வங்கதேசத்திலும் இஸ்லாம் ஆட்சியில் சிறுபான்மையினர் இரண்டாம் தரக்குடிமகனாக இருக்கிறார்கள். நம்முடைய அரசியல்வாதிகள் `போலி` மதச்சார்பின்மைவாதிகளாக உள்ளார்கள். இந்துக்களின் நலனை உணர்ந்தவர்கள்தான் ஆட்சி அதிகாரத்தில் அமரவேண்டும். இதே போல் 1937ல் ஜின்னா , இந்தியாவில் இஸ்லாம் அழிந்துகொண்டிருக்கிறது, இந்துக்களிடமிருந்து வேறுபட்ட தேசியம் இஸ்லாம், எனவே தனி இஸ்லாம் பாகிஸ்தான் நாடு உருவாகப்படவேண்டும் என்றார் இத்தகைய கருத்தியல் விதைக்கப்படுகிறது மட்டுமல்லாமல் ஒன்றுக்கொன்று முரணானது என்பதையும் பரப்புகிறார்கள்.
இந்த வகுப்புவாத கருத்தியல்கள் இன்று சமூக ஊடகங்கள் வழியே விரைவாக மக்களை சென்றடைகிறது, ஆயுதபலத்தாலோ, நிர்வாகத் தடைகளாலோ கட்டுப்படுத்தமுடியாது என்பதை அனுபவ ரீதியாக பார்க்கிறோம். 1960களுக்குப் பிறகு வகுப்புவாதக் கருத்தியல்கள் அரசு இயந்திரத்திற்குள் ஊடுருவியாயிற்று. பல அரசு அதிகாரிகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வகுப்புவாத சக்திகளை ஊக்கப்படுத்திவருகிறார்கள், வகுப்புவாத உணர்வுகளுக்கும் அடிபணிந்துவிடுகிறார்கள். இதனால் காவல்துறையினர் கலவரங்களில் வேடிக்கை பார்க்கும் சம்பவங்கள் அதிகரித்திற்கின்றன.
`போலி மதச்சார்பின்மை மற்றும் சிறுபான்மைவாதம்: மதச்சார்பின்மைக்கு எதிராக இந்து வகுப்புவாதிகள் தொடுக்கும் தாக்குதல் மதச்சார்பின்மை என்பதே போலி-மதச்சார்பின்மை, சிறுபான்மைவாதம் என்று வர்ணிப்பது தான். வகுப்புவாதப் பிரச்சாரத்தின் முக்கியக்கருவி வாய்மொழிதான். மதச்சார்பற்ற கட்சிகளும் நபர்களும் சிறுபான்மைக்கு மதத்திற்கு ஆதரவாக உள்ளனர்; இந்து மக்களை இரண்டாம் தரகுடிமக்களாக்கப் பார்க்கிறார்கள் என்பதாக இப்பிரச்சாரம் இருக்கிறது. இதன் நோக்கம் இந்துக்கள் மத்தியில் அச்சத்தை விதைப்பது- நாட்டில் 80 சதவீததிற்கும் அதிகமாக உள்ள இந்துக்கள் மத்தியில் சிறுபான்மை வகுப்பாரால் ஆட்சி செய்யப்படுவோம் என்ற அச்சத்தை ஏற்படுத்துவது.
நேரு காலத்தின்போதே மதச்சார்பின்மைவாதிகள் `முஸ்லீம்களை தாஜா செய்பவர்கள்` என்று குற்றம் சாட்டினார்கள். காந்திஜியும் இவ்வாறுதான் விமர்சனம் செய்யப்பட்டார். முஸ்லீம் வகுப்புவாதிகள் ஒருபக்கம் `முஸ்லீம் எதிரி` என்றும்; இந்து வகுப்புவாதிகள் `நாட்டின் துரோகி` என்று குற்றம் சாட்டினார்கள்.
`சிறுபான்மை மக்களை தாஜா செய்வதாக` இந்து வகுப்புவாதிகள் குற்றம் சுமத்தியபோதிலும், இந்தியா முழுவதும் ஒரு சிறிய பகுதிகூட முஸ்லீம் மக்களுக்கு ஆதரவாக இல்லை; அரசு பணியிடங்கள், கல்வி நிலையங்கள், தனியார், பொதுத்துறை, காவல்துறை, ராணுவம், ஊடகம் போன்ற துறைகளிலும் முஸ்லீம் மக்கள் முஸ்லீம் என்பதால் எந்த பலனையும் அடைந்துவிடவில்லை. மற்ற பிற்படுத்தப்பட்ட பிரிவினரைவிட மிகவும் குறைவான வாய்ப்புகளையே அவர்கள் பெற்றுள்ளனர் என்பதை சச்சார் அறிக்கையும் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, மதச்சார்பற்ற இந்தியாவில் இந்துக்கள் பழிவாங்கப்படுகிறார்கள் அல்லது இரண்டாம் தரக்குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள் என்று சொல்வது வேடிக்கையானது, பொய் எவ்வளவு பெரியதொ அவ்வளவுக்கு அது பலந்தரும் என்ற கோயபல்ஸ் பாணி பிரச்சாரத்துக்கு உதாரணமாக இருக்கிறது.
காந்திஜியின் படுகொலைக்குப் பின்னர் வகுப்புவாதத்திற்கெதிரான தீவிர பிரச்சாரத்தை நேரு மேற்கொண்டார், அதற்குப் பின்னர் தேசிய அளவில் மிகப்பெரிய பிரச்சாரத்தை மதச்சார்பற்ற சக்திகள் செய்யவில்லை. மதச் சார்பற்றவர்கள் என்று கூறிகொண்டோர் `ஆட்சிஅதிகாரத்தின் மீதான மோகத்தின்` காரணமாக ஒருவித ஊசலாட்டத்தில் இருந்தனர். மேலும் சிறுபான்மை மதவெறியை கண்டிப்பதில் மென்மையான அணுகுமுறையை கடைபிடித்தது பெரும்பான்மை வகுப்புவாதிகளின் பிரச்சாரத்திற்கு சாதகமான அம்சமாக இருந்தது. 19ம் 20ம் நூற்றாண்டில் வாழ்ந்த மாபெரும் சமூக  சீர்திருத்தவாதிகளை தமது அரசியல் – கருத்தியல் மூதாதையர்களாகவும் காட்ட முயற்சிக்கிறார்கள். காந்தியை பழிப்பதற்கு நேதாஜியை முன்னிறுத்துகிறார்கள். ஆனால் நேதாஜி வகுப்புவாதிகளை சகித்துக்கொள்ளவில்லை. 1938ல் தேசிய இயக்கத்தின் தலைமைப் பொறுப்புவகித்த நேதாஜி வகுப்புவாத அமைப்புகளான இந்துமகாசபை, முஸ்லீம் லீக் உறுப்பினர்களை தேசிய இயக்கத்திலிருந்து நீக்கினார்.
நடுத்தர மக்களின் ஒரு பிரிவினரை பெரிய அளவிற்கு பாஜக வென்றெடுக்க முடிந்ததற்கு முக்கிய காரணங்களில் ஒன்று அதன் தேசியம் குறித்த அறைகூவல் என்பது குறிப்பிடத்தக்கது. வகுப்புவாதத்தை `தேசியவாதம்` என்று குறிப்பிடுவது அபத்தமானது. 1950களில் மேற்கத்திய எழுத்தாளர்களும் இதழாளர்களும் இந்து தேசியவாதம், முஸ்லீம் தேசியவாதம் என்ற சொற்பிரயோகங்களை பயன்படுத்தினர். 1947க்கு முன்னர் காந்திஜி மற்றும் தேசிய இயக்கத்தலைவர்கள் இந்து-முஸ்லீம் வகுப்புவாதிகளை வகுப்புவாதிகள் என்றே குறிப்பிட்டனர்.
வகுப்புவாதமும் மதமும்: வகுப்புவாதத்திற்கு ஆணிவேராக இருப்பது மதமோ அல்லது மதவெறுபாடுகளோ அல்ல. தாம் சார்ந்த மதத்தின் மேம்பாடு, சீர்திருத்தம் , வளர்ச்சி ஆகியவைகளைப் பற்றி வகுப்புவாதிகள் கவலைப்படுவதில்லை. அவர்கள் மதத்தால் ஆகர்ஷிக்கப்படவில்லை, வகுப்புவாத அரசியலின் இறுதி இலக்கு மதமும் அல்ல. மதம் என்பது அவர்கள் அரசியல் அதிகாரத்திற்கான பயணத்திற்கான வாகனம் மட்டுமே!
இந்த வகுப்புவாதத் தலைவர்களின் இந்துக்களோ-முஸ்லீம்களோ  மதப்பழக்கத்தை உற்று நோக்கினால் அவர்களில் பெரும்பாலானவர்கள் ஆசாரமற்றவர்கள். 1947க்கு முந்தைய முஸ்லீம் வகுப்புவாதத் தலைவர்கள் பலர் ஜின்னாவும் இப்படித்தான். இந்து வகுப்புவாத கருத்தியலின் தந்தை வி.டி.சாவார்க்கர் ஒரு பகுத்தறிவுவாதி.இன்னும் பல இந்து வகுப்புவாதத் தலைவர்கள் பலர் ஆரிய சமாஜக்கொள்கையுடையவர்கள். ஆரிய சமாஜக்கொள்கையின் அடிப்படை ஒரே கடவுள். ராம்ரோ, கிருஷ்ணரோ அல்லது பிற கடவுள்களோ தெவதைகளோ புனிதம் அல்ல என்பவர்கள்.
1947க்கு முன்னர் முஸ்லீம் வகுப்புவாதிகள் முல்லாக்கள், மெளல்விகளையும் மசூதிகளையும் பயன்படுத்தி மக்களிடம் வகுப்புவாதத்தை பிரச்சாரம் செய்ததுபோல இந்து வகுப்புவாதிகள் சாதுக்களையும், பூஜாரிகளையும் பயன்படுத்தினர்.
இந்திய ஒற்றுமையும், நாட்டு முன்னேற்றமும் மதச்சார்பின்மை கொள்கையை சரியாக கடைபிடித்தால் மட்டுமே சாத்தியமாகும். அதற்கு கோயில்கள், சாதுக்களின் ஆசிரமங்கள், மசூதிகள், குருத்வாராக்கள், தேவாலயங்கள் மற்றும் அனைத்து மத வழிபாட்டுத்தலங்கள், அரசியல் நோக்கங்களுக்கும், அரசியல் பிரச்சாரத்திற்கும் பயன்படுத்துவதற்கு முழுமையாக தடைவிதிக்கப்படவேண்டும். மதவிவகாரம் தொடர்பான அனைத்து இடங்களிலும் அரசியல் பேசுவது குற்றம் என்று அறிவிக்கப்படவேண்டும். தேர்தலில் மதத்தை பயன்படுத்துவதற்கு எதிரான சட்டபூர்வ தடையை கறாராகச் செயலபடுத்த வேண்டும். மதச்சார்பற்ற கட்சிகளும், குழுக்களும் சங்கராச்சிரியார்கள், இமாம்கள், மெள்ல்விகள், பாதிரியார்கள், மதகுருக்கள் போன்றோருடன் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ளகூடாது. மதமும் அரசியலும் கலக்காமல் இருக்கவேண்டியது மிகவும் அவசியம்.
நூல் ஆசிரியர்: பேரா.பிபன் சந்திரா
வெளியீடு: நேஷனல் புக் டிரஸ்ட்
 

வெள்ளி, 20 செப்டம்பர், 2013

ஒற்றை வைக்கோல் புரட்சி - மசானபு ஃபுகாகோ

இயற்கை வேளாண்மை பற்றி இப்போது அதிகமாக பேசப்பட்டுவருகிறது, இதை பயன்படுத்தி ரசாயண உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், நாட்டு விதைகள் என பாரம்பரிய விவசாய முறையில் விளைந்த காய்கறிகள், பழங்கள, தானியங்கள் என அதையும் ஒரு வணிக நோக்கத்தில் அதிகவிலைக்கு விற்றுவருகிறார்கள். உண்மையாக ரசாயண உரம், பூச்சிமருந்து செலவில்லாமல் விதைத்து அறுவடை செய்யும் பயிருக்கு ஏன் அதிகவிலை என்று கேட்கலாம், சிலர் அந்த முறையில் விளைச்சல் குறைவு, பூச்சிகளால் பயிர் தாக்குறும்போது இன்னும் குறைந்துவிடுகிறது அதனால் அத்கவிலைக்கு விற்றால் தான் கட்டுபடியாகும் என்பது சிலர் வாதம், தற்போது வேதியல் உரங்கள், பூச்சிமருந்துகள் ப்யன்படுத்திவரும் விவசாயி கூட இயற்கை முறைக்கு மாறினால் விளைச்சல் அதிகமிராது என்றே எண்ணுகிறார். இந்த எண்ணத்தை தவிடுபொடியாக்கியவர் ஜப்பானில் இயற்கை வேளாண்மையை ஆய்வுசெய்து தன்னுடைய வாழ்க்கையை அதே விவசாயத்தில் செலவிட்ட மாசானபு ஃபுகாகோ அவர்கள்.

அவர் சொல்கிறார், “இயற்கை வேளாண்மை என்பது வேட்டையாடி உணவு சேகரித்த காலம் ஒன்றுதான் இயற்கை வேளாண்மைக்காலம். ஒரே இடத்தில் மனித சமூகம் தங்கி வாழ்க்கை நடத்துவதற்கு பயிர்கள் வளர்க்கப்பட்டது என்பது கலாச்சாரக் கண்டுபிடிப்பு”.அதற்கு அறிவும் தொடர்ச்சியான முயற்சியும் தேவைப்படுகிறது. ஃபுகாகோவின் முறையிலுள்ள முக்கியவேறுபாடு என்னவென்றால், அது இயற்கையோடு ஒத்துழைப்பதில் இருக்கிறது. இயற்கையை ஆக்ரமித்து அதை ‘மேம்படுத்து’ வதில் அல்ல. ஜப்பானில் யகோஹாமா நகரில் நுண்ணியிரிகள் நிபுனராக வாழ்க்கையைத் துவக்கினார், தாவர நோய்கள் குறித்த நிபுணராக உருவான அவர் ஒரு சோதனைச்ச்லையில் சில ஆண்டுகள் பணிசெய்துவிட்டு மீண்டும் தன்னுடைய கிராமத்திற்கே திரும்பினார். அப்போது அவர் தரிசு நிலத்தின் வழியாக சென்றபோது அங்கே நெற்பயிர்கள் நல்ல திரட்சியான தானியங்களோடு விளந்திருப்பதை பார்த்து அதிசயித்தார். ஒரு உழாத,உரமிடாத, பூச்சிமருந்து தெளிக்காத, களைபறிக்காத நிலத்தில் எப்படி பயிர் செழிப்பாக வளர்ந்ததைப் பார்த்தபின் அவருக்கு ‘எதையுமே செய்யாமல் விவசாயம் செய்யவேண்டும்’ என்ற ஆர்வம் ஏற்பட்டது, தன் தந்தை பார்த்துவந்த விவசாயத்தில் இவர் ஏற்பட்த்திய மாற்றங்கள் சில ஆண்டுகள் தொடர்ச்சியாக நஷ்டம் ஏற்பட்டதுண்டு. செய்முறைகளை மாற்றி மாற்றி அனுபவத்தில் கற்ற பாடம் நிலத்தை பாழ்படுத்தாமல் வேதியல் உரங்கல், பூச்சிக்கொல்லி மருந்துகள் என பயன்படுத்தி உற்பத்தி செய்த தானியங்களைவிட அதிக மகசூல் எடுத்தார்.  மனிதர்கள் ‘அதிக உற்பத்தி’ அல்லது ‘அதிக தர’த்துக்காக உழைக்காமல், மனிதகுல நன்மைக்காக உழைகும்போது அவர்கள் உழைப்பு சிறந்து விளங்குகிறது. ஆனால் தொழில்மயப்படுத்தப்பட்ட வேளாணமையின் தாரக மந்திரமோ ‘அதிக உறப்த்தி’ யாக உள்ளது. ஃபுகாகோ மேலும் சொல்கிறார், “வேளாண்மையின் இறுதி லட்சியம் பயிர்களை வளர்ப்பதல்ல; மனிதர்களை வளர்த்து முழுமை பெறச்செய்வதுதான்” என்கிறார். 1975ம் ஆண்டில் அவர் எழுதிய one straw revoultion என்ற புத்தகம் எழுதியதைத் தொடர்ந்து ஜப்பானில் இயற்கை வேளாண்மை குறித்த ஆர்வம் வேகமாகப் பரவியுள்ளது.

இயற்கை வேளாண்மையின் நான்கு அடிப்படைகள்:

1. மண்பதப்படுத்துதல் : நாம் மண் பதப்படுத்துவதற்கு அதிகமாக உழுகிறோம், இது தேவையற்றது இயற்கை தானாக உழுதுகொள்ளும், அதாவது மண்ணிலுள்ள நுண்ணியிர்கள், தாவரவேர்கள் தரையில் நுழைதன் மூலம், சிறு விலங்குகள் மூலமும் நிலம் உழுதுகொள்ளும் நாம் ஆழமாக உழும்போது தேவையில்லாத களையின் விதைகள் பூமிக்குமேலெ வந்து களை அதிகமாக முளைத்து தொல்லைதரும். நிலத்தை தரைதெரியாமல் வைக்கோலை பரப்பிவைக்கவேண்டும் அது போதும் அது மண்ணில் மக்கிப்போவதுமல்லாது களைகளை கட்டுப்படுத்தும் என்கிறார்.

  2. உரங்கள் :வேதியல் உரங்களை இடுவதன் மூலம் மண்ணின்வாழும் நுண்ணியிர்கள் அழிக்கப்படுகின்றன, வைக்கோல், பசுந்தாழ், பறவியின் எச்சங்கள் ஆகியவற்றை உபயோகித்தே அதிக மகசூல் பெறமுடியும் என்கிறார்.

3. களைகள் : உழுவதை நிறுத்தும்போது களைகளும் குறைந்துவிடுகின்றன, தற்போது களைகளை ஒழிப்பதற்கு களைக்கொல்லிகள் (வேதியல்) பயன்படுத்திவருகிறார்கள், இதனால் மண்ணின் வளமும் நுண்ணியிர்களும் அழிக்கப்படுவதோடு மழைபெய்யும் நீரில் கலந்து அது நிலத்தடி நீரையும் மாசுபடுத்துகிறது. அறுவடை முடிந்ததும், வயல் முழுதும் வைக்கோல் போட்டுமூடினால் களைகள் முளைவது தடைபடும்பயிருடன் தீவனப்பயிர்களை விதைக்கும்போது நிலத்தை மூடிமறைப்பதால் அது களைகளை கட்டுப்படுத்துகிறது.

4. பூச்சிக்கட்டுப்பாடு: நிலத்தில் நீர்தேங்காமல் பார்த்துகொண்டாலே பூச்சிக்ளை ஒரு கட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம், நாம் ரசாயண பூச்சிக்கொல்லிகள் தெளிக்கும்போது பூச்சிகளின் ‘இரையினங்களையும்’ சேர்த்தே அழித்துவிடுகிறோம். இயற்கையாக பூச்சிகளை கட்டுபப்டுத்த இரையினக்கள் உண்டு. எலிகளை கட்டுப்படுத்த பாம்புகள் உள்ளதுபோன்று. இந்த ரசாயண பூச்சிக்கொல்லி மருந்துகள் செடிகளில் பத்து சதவீதமும் மீதம் நிலத்தில்தான் தெளிக்கப்படுகிறது அது நிலத்தடி நீரை மாசுபடுத்துவதோடு நுண்ணியிர்களையும் அழித்துவிடுகிறது.

  ஃபுகாகோ செல்லும் பாதை என்பது உலகம் செல்லும் பாதைக்கு நேரெதிரானது, அதனால் சொல்கிறார், “ நான் காலத்தால் பின்னடைந்துவிட்டதாக தோன்றக்கூடும். ஆனால் நான் சென்றுகொண்டிருக்கும் பாதைதான் அறிவுபூர்வமானது என்பதை நான் உறுதியாக நம்புகிறென்”. மேலும் ‘இயற்கையில் இருந்து மக்கள் எவ்வளவு தூரம் விலகி செல்கிறார்களோ, அவ்வளவுதூரம் அதன் மையத்திலிருந்து சுழற்றி எறியப்படுவார்கள். அதே சமயம் குவிமைய விசையால் இயற்கைக்குத்திரும்பும் ஆசை அவர்களுக்கு வருகிறது’ என்கிறார்.

வாணிபப்பயிர்களை விளைவிக்காதீர்கள் ,பொதுவாக வாணிப வேளாண்மை முன்கூட்டி கனிக்கமுடியாத ஒரு விசயமாகும் என்கிறார் ஃபுகாகோ.சமீபத்தில் பி.சாய்நாத் அவர்கள் பெங்களூரில் ஆற்றிய உரையில் இந்திய விவசாயிகள் கடந்த 15 ஆண்டுகளில் 2 லட்சத்துக்கும் மேல் தற்கொலை செய்துகொண்டார் அவர்கள் அனைவரும் பணப்பயிரான பருத்தி பயிரிட்டவர்கள். கேரளாவில் வயநாடு மாவட்டத்தில் ‘வெண்ணிலா’ பயிரிட்டவர்கள் விலை வீழ்ச்சிகாரணமாக கடன் சுமையில் தற்கொலை செய்துகொண்டார்கள். ஏனென்றால் வணிகப்பயிர்களின் சந்தை என்பது பன்னாட்டு,அல்லது பெருமுதலாளிகளின் கைகளில் சிக்குயுள்ளது. எந்த ஒரு விவசாய இடுபொருளான விதையோ, உரமோ, பூச்சிமருந்தோ விவசாயிகள் நலனோ, மக்கள் நலனோ கருத்தில் கொள்ளாமல் பணம் சம்பாதிப்பதன் நோக்கமும் ஏகபோக நோக்கமும் கொண்டதாக இருக்கிறது. இந்தியாவில் மரபணு மாற்றுப் பயிர்களை அனுமதிக்கூடாதென்று விவசாயிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், திரு.பாசுதேவ் ஆச்சார்யா தலைமையில் உள்ள பாராளுமன்ற நிலைக்குழுவும் அனுமதிக்கக்கூடாது என்று தெரிவித்தார்கள். ஆனால் வேளாண் அமைச்சரோ மான்சாண்டோவின் நலன்களுக்காக ‘ஒரு கார்ப்பரேட் ஆலோசோகர்’ ஒருவரை நியமித்து ஆய்வு செய்யச்சொன்னார். உச்சநீதிமன்றம் நியமித்த வல்லுநர்கள் குழுவும் அனுமதிக்கக்கூடாது என்றே பரிந்துரைத்தார்கள். இயற்கையாக விளையும் காய்கறிகள். பழங்கள் மனிதனுக்கு நோய் தருவதில்லை, செயற்கையான முறைகளில் வளர்க்கப்படும் பொருடகள் மனிதரளின் தேவைகளை தணித்தாலும் பக்கவிளைவ்கள் ஏற்படுத்தி வைட்டமின் மாத்திரைகள், மருந்துகள் இன்றிய்மையாததாகிவிடுகிறது. இது விவசாயிக்கும், நுகர்வோருக்கும் கஷ்டத்தை உண்டாக்குகிறது.

ஃபுகாகோ விளைவித்த காய்கறிகள், பழங்கள், தானியங்களை செயற்கைமுறை விவசாய உற்பத்தி விலையைவிட சந்தையில் குறைவாக விற்குமாறு கடைக்காரர்களை கேட்டுக்கொண்டார். ஏனென்றால் செலவீனமே இல்லாத முறையில் விளையும் பொருட்களை சந்தைவிலையில் ஏன் விற்கவேண்டும் என்கிறார்.

தமிழகத்தில் இயற்கை வேளாண்மை முறைக்காக நம்மாழ்வர் போன்றவர்கள் மாசானபு ஃபுகாகோ போன்று பணியாற்றுகிறார்கள். வேளாண்மையை கார்ப்பரேடுகளின் நலன்களுக்காக செய்யாமல் விவசாயிகள், நுகர்வோர் நலன்களுக்காக செய்யும் முறையை இப்புத்தகம் ஏற்படுத்தும் என்று நம்பலாம்.

நூல் வெளியீட்டுப்பதிப்பகம்
தமிழில் பூவுலகின் நண்பர்கள்
எதிர்வெளியீடு
பொள்ளாச்சி
 

சனி, 7 செப்டம்பர், 2013

உயிர்நிலம் நாவல் - வாசிப்பு அனுபவம்

மேலாண்மை பொன்னுசாமி அவர்கள் எழுதிய “உயிர்நிலம்” நாவலை வாசித்தேன், வாசித்தபோது எனது சிறுவயது ஞாபகங்களை உழுதுபோட்டமாதிரி இருந்தது. விவசாயத்தை இயற்கை முறை பகுதியாகவும் நவீனமுறையை? பகுதியாகவும் செய்துவந்த காலகட்டத்தில் எங்கள் குடும்பம் விவசாயத்தைவிட்டு விலகியது, கிணற்றுப்பாசனம், ஆற்றுப்பாசனம் ஓரளவு நம்பலாம் மானாவாரி விவசாயம் என்பது வானம்பார்த்த பூமியாக மழையை மட்டும் நம்பி செய்யும் விவசாயம். பருவமழை பொய்த்துப் போனால் ஓராண்டுப்பயிரே நாசம். இப்போது உரத்திற்கும், பூச்சிமருந்திற்கும், விதைகளுக்கும் செய்கின்ற செலவுதான் மத்திய இந்தியாவில் பருத்திவிவசாயிகளை தற்கொலையில் தள்ளியது. விவசாயிகளின் விளைபொருட்களுக்கு கட்டுபடியாகாத விலைகள் ஒருபக்கம் விவசாயிகளை அட்டை பூச்சியாக உறிஞ்சிவாழும் உரம், பூச்சிமருந்து வியாபாரம், பாக்கெட் விதை ஒருபக்கம் கழுத்தை நெரிக்கிறது. நான் பருத்திவியாபாரிகளை பார்த்திருக்கிறேன், அவர்கள் பருத்தியை வாங்கி அதை பஞ்சு தனியாகவும் விதையை தனியாகவும் பிரிப்பார்கள். பொதுவாக பருத்திவிதைகளை தரம்பார்த்து நல்லவிதைகளை அப்படியே விவசாயிகளிடம் ஒரு ரேட் போட்டு கொடுப்பார்கள், மீதவிதைகளை பால்மாடு வைத்திருப்பவர்கள், உழவுமாடுகளுக்கும் அரைத்து ஊற்றுவதற்கு வாங்கிச்செல்வார்கள். இன்னும் லாபம் பெருக்கவேண்டுமானால் விதைதயாரிப்பு என்ற சான்றிதழை வாங்கிவிட்டு அதே விதைகளை பாக்கெட் போட்டு விவசாயிகளிடம் பலமடங்கு விலையில் விற்பார்கள் அரசாங்கம் அவர்களுக்கு சான்றிதழ் கொடுக்கும். பல விவசாயிகளுக்கு மானியவிலையில் வேளாண்விரிவாக்க மையத்தின் வாயிலாக கிடைக்கும். தரத்தில் பெரிதாக மாற்றம் இருக்காது. இப்போது பன்னாட்டு நிறுவனக்கள் கையில் விதைகள்,பூச்சிமருந்து விவசாயிகள் எப்படி மீளமுடியும்.இந்த நாவல் ஒரு சம்சாரியின் குடும்பத்தைப் பற்றியது, முக்கால் குறுக்கம் (ஏக்கர்) வைத்திருந்த பரமசிவம் கடின உழைப்பால் முன்னேறுகிறார், அவருடைய மனைவி காமாட்சியும் கணவருக்கு நிகராக என்பதைவிட வீட்டுவேலைகளையும் சேர்த்து அதிகமாக உழைக்கிறார்கள், அவர்கள் உழைப்பில் பல ஏக்கர் நஞ்சை, புஞ்சை நிலங்களை வாங்குகிறார்கள் அவர் மரபுவழியான இயற்கை விவசாயத்தை செய்துவருகிறார். அவருடைய இரண்டு மகன்களில் மூத்தவன் அழகேசன் தந்தையை யொட்டி அதே வழியில் விவசாயம் செய்கிறான். இளையமகன் முருகேசன் பத்தாம்வகுப்புவரை படித்தான், தாய் தந்தையைப் போல் கடின உழைப்பில்லாமல், வியர்வை சிந்தாமல் எல்லாவற்றிற்கும் வேலையாட்களை வைத்து விவசாயம் செய்யவும், மாட்டு உழவுக்குப் பதிலாக டிராக்டர் உழவு, இயற்கை தொழு உரத்திற்குப் பதிலாக ரசாயாண உரங்களான டி.ஏ.பி. பொட்டாஷ், யூரியா போட்டு புதியமுறை விவசாயம் செய்யவேண்டுமென ஆசைப்படுகிறான். தந்தையின் மரபுவழி விவசாயத்தை பழமை என்று புறந்தள்ளுகிறான், அதனால் அய்யாவிடம் சொத்துபிரித்து பாலையா நாய்க்கர் தோட்டம் ஆறு ஏக்கரில் விவசாயம் செய்கிறான். கடைசிவரை அவனுடைய வியர்வை நிலத்தில் சிந்தாமலேயே பண்ணையார் முறை விவசாயம் பார்க்கிறான், கடனுக்கு மேல் கடன் உரக்கடை, மருந்துக்கடை, டிராக்டர்கார்கள் என எல்லாயிடத்திலும் கடன் பெருகுகிறது. ஆறுவருட விவசாயத்தில் மூன்று லட்சம் கடனாகிவிட்டது, மனைவியின் நகைகள் அடமானம் என்ற பெயரில் மூழ்கிவிட்டது. தந்தையுடன் ஏற்பட்ட மனமுறிவால் அவரிடம் சரண்டைய மனம் தடுக்கிறது. உரக்கடைகாரர்கள் தாங்கள் வசூலிக்கவேண்டிய பாக்கியை கந்துவட்டிக்காரனிடம் 100க்கு 4ரூ வட்டிக்கு சிபாரிசு? செய்து அவர்கள் பாக்கியை வசூலித்துவிடுகிறார்கள். கொடுத்தகடனுக்கு அசலுக்கும் மேலாக மாதமாதம் கந்துவட்டியிடம் கடன்கட்டி வருகிறான். தீடிரென்று அசல்பணத்தையும் அடுத்தவாரத்திற்குள் தரவேண்டும் இல்லையென்றால் உன் மனைவியை தூக்கிட்டு போய்விடுவேன் என்று மிரட்டுகிறார்கள் கந்துவட்டிக்காரர்கள். அவமானம் தாங்கமுடியாமல் பயிர்களுக்கு வாங்கிவைத்திருந்த எக்காலக்ஸ் மருந்துகுடித்து தற்கொலை செய்துகொண்டான் என்று நாவல் முடிகிறது.

மரபுக்கும் பழமைக்கும் உள்ள வித்தியாசத்தை அழகாக சொல்லியிருக்கிறார். “பழைமை என்பது வளர்ச்சிக்குத்தடையாக இருக்கும் உடைத்துத் தகர்த்தால் தான், முன்னேற்றம் சாத்தியப்படும்”. மரபு என்பது வளர்ச்சிக்கு உரமாக இருக்கும். மாற்றத்திற்கும் ஒளியாகத்திகழ்ந்து வழிகாட்டும். “மரபு” என்று நினைத்துப் பழைமையை துதித்திவிடக்கூடாது. “பழைமையோ” என்று நினைத்து மரபை புறந்தள்ளிவிடக்கூடாது. பழைமையையும் மரபையும் இனம்பிரித்து ...தள்ளுவது தள்ளி, கொள்ளுவதைக் கொள்வதற்கு பகுத்தறிவு வேண்டும். எனகிறார். பரமசிவம் வீட்டிலும் காமாட்சிக்கு துணையாக பல வேலைகள் செய்கிறார், குடம் எடுத்து நீர் எடுத்துவருவது, வெளக்குமாறு பிடிச்சு வீடு கூட்டுவது பெண்கள் வேலையென்று சில ஆண்கள் ஓய்வெடுக்க பரமசிவம் அப்படியில்லை. காமாட்சியும் அப்படித்தான் ஆண்கள் செய்கிற வேலைஎன்பதையெல்லாம் பார்ப்பதில்லை, ஓய்வறியா உழைப்பாளிகள். அந்த தம்பதிகள் இயல்பாகவே ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வேலைகளை போட்டி போட்டுக்கொண்டு செய்கிறார்கள். வியர்வையை அழகு என்று வர்ணித்து எழுதுகிறார். இந்த உலகமே உழைப்பால் உருவானது, உணவும், ஓய்வும், இனபெருக்கத்தின் இன்பமும் உழைப்புக்கானவை என்று வர்ணிக்கிறார். மளிகைக்கடை அருஞ்சுணைக்கும் பரமசிவத்திற்கும் உள்ள நட்பு, மளிகைக்கடையில் மாலை நேரத்தில் உழைத்துக்களைத்து வரும் பெண்களிடம் வியாபாரம் செய்யும் நேர்த்தி. பாலையா நாய்க்கர் மாதிரி வளர்ந்த விவசாயிகள் நிலங்களை வாரிசுகளின் நகரவாழ்க்கைக்காக விற்கிறார்கள். சிறுவிவசாயிகளில் உழைப்பாளிகளாக இருப்பவர்களுக்கு சில நேரங்களில் வாய்ப்பாக குறைந்த விலைக்குநிலம் கிடைக்கும். அப்படி ஒரு ஏக்கர் ஆயிரம் ரூபாய் விலைக்கு விற்றுச்சென்றவர்கள் எங்கள் ஊரில் இருந்தார்கள், அப்படி ஒரு கசப்பு.

ஆதியில் மனிதர்கள் நிலையாக வாழ்வதற்கு விவசாயம் செய்தார்கள், இன்று வசதியாக வாழவேண்டுமானால் விவசாயத்தை விட்டு ஓடுகிறார்கள். மனித வாழ்க்கையே comfortable வாழ்க்கையைத் தேடி ஓடுவதுதான். மரபுவழியில் விவசாயம் செய்யவேண்டுமானால் அதிக உழைப்பு வேண்டும், ஆள்வைத்து விவசாயம் செய்து வெற்றியடையமுடியாது, சொந்த உழைப்பு வேண்டும், நேரம், காலம் பார்க்காத உழைப்பு வேண்டும். நகரத்தில் 8மணிநேர உழைப்பில் நன்றாக வாழமுடிகிறது, நல்ல ஆடைகள்,கல்விவச்தி, பொழுதுபோக்கு, நுகர்வு எல்லாவற்றிற்கும் கிராமமும் ஏங்குகிறது. சொந்த விவசாயத்தைவிட்டு கூலி உழைப்புக்காக வளைகுடா தேடி ஓடுகிறது. வங்கிகளில் அம்பானிகளை விவசாயிகள் கணக்கில் சேர்த்துவிட்டு அவர்களுக்கு விவசாயக்கடன் கொடுக்கிறார்கள், மஹாராஷ்டிரா மாநிலத்தில் கொடுக்கப்பட்ட விவசாயக்கடனில் 53 சதமானம் மும்பை நகரின் மெட்ரோ கிளைகளின் வாயிலாக வழங்கப்பட்டுள்ளது ஒட்டுமொத்த கிராமப்புற விவசாயத்திற்கு 38 சதமானம் மட்டுமே விவசாயக்கடன் கொடுத்துள்ளார்கள். இப்படித்தான் இந்தியவிவசாயிகளை அரசாங்கம் வஞ்சிக்கிறது.

இயற்கை வேளாண்மையா? நவீன வேளாண்மையா? என்று விவசாயிகளிடம் எது சிறந்தது பட்டிமன்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இயற்கை வேளாண்மையில் இடுபொருட்கள் யாவும் விவாசாயிகளால் உருவாக்கப்படுபவை, எதையும் விலைக்கு வாங்க வேண்டிய அவசியமில்லை. மண்ணுக்கும் தீங்கு இல்லை. ரசாயண உரங்கள் பூச்சிமருந்துகளால் விவசாயிகளின் இடுபொருட்செலவு ஒருபக்கம், மண்வளம் மங்கிப்போவது ஒருபக்கம். குறுகிய காலத்தில் அதிக லாபம் என்ற சமீபத்து உலகம்யக்கொள்கைகள் விவசாயத்தையும் வெகுவாக பாதித்திருக்கிறது. ஒருவருடத்திற்கு முன்னால் ஸ்டார் டிவியில் இயறகை மரபுவழி வேளாண்மை பற்றிய விவாதம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற பூச்சிமருந்து உற்பத்தியாளர் அவர் தரப்பு வாதத்தை வைத்துக்கொண்டிருந்தார். கடைசியில் அவருடைய சகோதரர் இயற்கைவழி விவசாயத்தில் காய்கறிகள் பழங்கள் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்துஅதிக லாபம் சம்பாதிப்பதாகச் சொன்னார். இன்று சந்தையில் ஆர்கானிக் முறையில் தயாரிக்கப்பட்ட வேளாண்பொருட்களுக்கு அதிகவிலை. அதை உற்பத்தி செய்பவர்கள் மேல்தட்டு விவசாயிகள், கிடைப்பதோ அதிகவிலை. அதிக இடுபொருட்செலவில் உற்பத்தியாகும் நவீன வேளாண்மையில் விளயும் காய்கறிகளுக்கு குறைந்தவிலை கிடைக்கிறது அல்லது சந்தை தீர்மானிக்கிறது.

“புதினங்கள் பொதுமக்களுக்கு வெறும்கதை; அறிஞர்களுக்கு கருத்துவிளக்கம்; கற்று உணர்ந்தார்க்கு அனுபவப்பிழிவு” என்கிறார் அறிஞர் மார்ரே. நாவல் இலக்கியத்தில் ஒருதுறைதான், தனிமனிதனின் முழுவாழ்வை வெளியிடுவதில் வேறு எந்தக் கலைத்துறையாலும் நாவலை விஞ்சமுடியாது என்பதை இந்த நாவல் உறுதிப்படுத்துகிறது. மேலாண்மை பொன்னுசாமி அவர்கள் எழுதிய சிறுகதைகளை வாசித்திருக்கிறேன், பெரும்பாலான கதைகளின் பின்புலம் கிராமப்புறம், விவசாயம் சார்ந்தது. ஒரு நாவல் வெறும் கற்பனைகொண்டு மட்டும் எழுதிவிடமுடியாது எண்ணற்ற தகவல்கள் திரட்டவேண்டும். விவசாயிகளை அவர் தினந்தோறும் பார்ப்பதால் விவசாயமுறையை எளிதாக விளக்கமுடியும். சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னால் பருத்திவிலை ஒரு குவிண்டாலுக்கு 10 கிராம் தங்கம் வாங்கலாம் என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது , இப்போது 1 குவிண்டால் பருத்தி போட்டால்தான் ஒரு கிராம் தங்கம்தான் வாங்கமுடியும். நூல்விலை பலமடங்கு கூடியிருக்கிறது. பூச்சிமருந்து, டி.ஏ.பி உரம் 20 ஆண்டுகளுக்கு முன்னால் 180 ரூ இப்போது 1300 ரூ பல மடங்கு கூடியிருக்கிறது. பஞ்சுமிட்டாய்காரன் கூட மிட்டாய்விலையை அவன் நிர்ணயம் செய்கிறான், ஆனால் விவசாயிகளால் தாங்கள் விளைவித்த பொருட்களுக்கு விலை சொல்லமுடியவில்லை அந்த நிலைமை.

இந்தியா ஒரு விவசாயநாடு என்பதிலிருந்து கூலி உழைப்பாளிகளை உற்பத்திசெய்யும் நாடு என்ற ரீதியில் செல்கிறது, அரசாங்கத்தின் கொள்கை தனிமனிதனின் வாழ்க்கையை எப்படி பாதிக்கிறது என்பதை இப்போது நாடு சந்தித்துக்கொண்டிருக்கிறது. மென்பெல்லாம் விவசாயி கிராமத்திலிருந்து எதற்கும் வெளியே செல்லத்தேவையில்லை. அவனுக்குத் தேவையான விதைகளை, உரங்கள், மருந்துதெளிப்பதற்கு வேப்பெண்ணெய், அவனே தயாரித்தான். இன்று அவன் எல்லாவற்றிற்கும் கையேந்தும் நுகர்வோன் ஆகிவிட்டான். இந்த மாற்றம் உலகமயம் கொண்டுவந்த விளைவுகளில் ஒன்று. ஒவ்வொரு கிராமத்திலும் காளைமாடுகள் நூற்றுக்கணக்கில் இருக்கும். சின்னவிவசாயி யென்றால் ஒரு பசு, ஒன்று, இரண்டு ஆடுகள்,கோழிகள் எல்லாம் வளர்ப்பார்கள். ஒவ்வொரு வீட்டுக்கும் குப்பைக்கிடங்கு இருக்கும். வீட்டில் சேர்கிற குப்பைகளை அங்கேதான் கொட்டுவார்கள், மக்காத பொருட்கள், பிளாஸ்டிக் என்பது வல்லிசாக கிடையாது. குப்பையை சேர்ப்பதில் கில்லாடிகளாக இருப்பார்கள். பெரிய பண்ணை வீடுகளில் எருமைகள் நிறைய வைத்திருப்பார்கள் அதை மேய்ப்பதற்கு ஒரு அடிமை இருப்பான், அவன் எங்கிருந்து வந்தானென்பதே தெரியாது அவன் வயதுஎன்ன என்பதை அவனுக்கே தெரியாது அப்படியிருப்பான். காலை எட்டு அல்லது ஒன்பது மணிக்கு எருமைகளை அவுத்துவிட்டால் வீதிகளை அடைத்துக்கொண்டுபோகும், போகும்போது கூடைகூடையாக சாணிபோடும், அந்த ப்ச்சையான சாணியை சில வயசாளிகள் கூடைவைத்து அள்ளி குப்பையை வளப்படுத்துவார்கள். இப்போது பாலுக்கே பாக்கெட் பால் வாங்கவேண்டியிருக்கிறது. மோரை விற்கமாட்டார்கள்,சொம்பு சொம்பாக கேட்டவர்களுக்கு இனாமாகக் கொடுப்பார்கள். மாடுகளுக்கு தீவனாக சோளம் போடுவார்கள் அதை நெருக்கமாகப் போடுவார்கள் தடித்துவிட்டால் மாட்டால் கடிக்கமுடியாது. அதை அறுத்து கோடைகாலத்தில் தீவனத்திற்கு படப்பில் சேமிப்பார்கள். படப்பு அடுக்குவதை ‘மேய்வது’ என்பார்கள். எல்லாருக்கும் அந்த தொழில் தெரியாது, வீட்டுக்கூரை வேய்வதுமாதிரி. நல்ல நாட்டுக் கம்மந்தட்டைகளை அறுத்து நனைத்து காயப்போட்டு வேய்வார்கள், மழைத்தண்ணீர் உள்ளே நுழையமுடியாது. படப்பை அடுக்கும்போது கிரிக்கெட்பேட் மாதிரி செய்யப்பட்ட பலகையால் லெவலுக்கு தட்டுவார்கள். மாடுகளுக்கு வாய்க்கூடு பின்னுவது அவர்களே, மாட்டுவண்டியில் தட்டி என்று சொல்லப்படுகிற காடிகளை நாட்டுப்பருத்தி ஓய்ந்தவுடன் பிடுங்கி அதில் முடைவார்கள். அதெல்லாம் பழங்கதையாகிவிட்டது.

அப்போதெல்லாம் நெல்லுச்சோறு என்பது வசதியானவர்கள் வீட்டில்தான், ஏதேனும் விசேசம், விரத நாட்களில், தீபாவளி, பொங்கல் சமயங்களில் நெல்லுச்சோறு கிடைக்கும். அதிகமாக கம்பு அதிலும் நாட்டுக்கம்பு பயிரிடுவார்கள், அதற்கு மருந்தடிப்பு கிடையாது, களைவெட்டுகிடையாது, பயிருழவு மட்டும்தான், ஒவ்வொரு ஆறு கோட்டுப்பயிருக்கும் ஒருகோடு தட்டாம்பயிறு, பாசிப்பயிறு ‘சால்’ என்ற பெயரில் போடுவார்கள். பருத்தியிலும் நாட்டுப்பருத்திதான் போடுவார்கள், உளுந்து பயிரிடுவது குறைவாகத்தான் இருக்கும்.பருத்தியை ஒரு ஆண்டு முடிந்தால் வெட்டிவிட்டால் அடுத்த ஆண்டும் ‘கட்டப்பருத்தி’ எடுக்கலாம். இடுபொருட்செலவு கிடையாது, நோய் தாக்க்குவது பருத்திச்செடிகளுக்குத்தான் அதுவும் நாட்டுப்பருத்தியை அவ்வளவாக தாக்காது. அதற்கு வேப்பெண்ணெயை ஸ்பேயரில் சிலர் வேப்பங்கொப்பை வைத்து தெளிப்பார்கள். பசுமாட்டு கோமியத்தை சேர்த்துவைத்து அதையும் தெளிப்பார்கள். உழவென்பது மாட்டு உழவுதான், கூட்டணி சேர்ந்து உழுவார்கள் ஒரு ஜோடிமாடு ஒரு நாளைக்கு ஒரு ஏக்கர் உழமுடியும். மாடுவாங்க வசதியில்லாத சிறுவிவாசாயிகள் பெரிய விவசாயிகளிடம் வேலைக்கு இருப்பார்கள், உழவு, விதைப்பு, மாட்டுவண்டியை பயன்படுத்துவது எல்லாம் கருணையில்தான். மானாவாரி விவசாயத்தில் ஒரு பருவ விளைச்சலுக்குக்கூட வருடம் முழுவதும் உழைப்பை செலுத்துவார்கள். சித்திரையில் உழவடிப்பார்கள், செடி, அருகு நீக்குவார்கள், ஆடிமாதம் சேமித்த குப்பைகளை வண்டி மூலம் சுமப்பார்கள், சிதறுவார்கள், மீண்டும் ஒரு உழவு. ஆவணியில் பருத்தி விதைகளை வாங்கி நல்ல களிமண்ணைத் தேர்ந்தெடுத்து பிரட்டி உருட்டுவார்கள் உலரவைப்பார்கள். புரட்டாசி பட்டத்தில் விதைப்பு,ஐப்பசி அடைமழையில் செடிகளின் வனப்பு, மார்கழி, தையில் அறுவடை. புஞ்சையில் அதே பயிரை ஒவ்வொரு வருடமும் விதைத்தால் மண்வளம் குன்றிவிடும் என்று ‘அடி’ மாற்றி கம்பு விதைத்த புஞ்சையில் பருத்தி போடுவார்கள். பருத்தி விதைத்த புஞ்சையில் சோளமே, கம்போ பாயிர் செய்வார்கள். இப்போது அதெல்லாம் கட்டுபடியாகவில்லையென்று எல்லா வருடமும் அதே நிலத்தில் உளுந்து மட்டும் பயிர்செய்கிறார்கள். டி.ஏ.பி உரம் ஏக்கருக்கு 10 கிலோவிலிருந்து இப்போது ஒரு மூட்டையை போடுகிறார்கள், மண்வளத்தை ஒரெடியாக விவசாயி அதிக விளைச்சலுக்கு சுரண்டிவருகிறான். இன்னும் விவசாயம் ஒரு நாள் மரபு வழிக்கு மாறும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

வெள்ளி, 6 செப்டம்பர், 2013

நல்லாசிரியர்

ஒவ்வொரு வருசமும் ஆசிரியர் தினம் கொண்டாடுறோம், அரசாங்கம் அந்த தினத்தையொட்டு சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து “நல்லாசிரியர்” விருது கொடுக்கிறது. நம்ம படிச்ச ஸ்கூல்ல நல்லாசிரியர் யாராக இருக்குமென்று ஒரு கேள்வி ஓடியது. ஆரம்பப் பள்ளியில் மாணவர்களை கால்நகத்தை வெட்டச்சொன்ன ஆசிரியரை நினைத்துப் பார்த்தேன், மாணவர்களை வாய்ப்பாடு பாடச்சொல்லிவிட்டு வேட்டி விலகியதுகூட தெரியாமல் தூங்கியவாத்தியார்கள் உண்டு. சேரிப்பிள்ளைகளை அவர் தொட்டு அடிக்காமல் மற்ற மாணவர்களைச்சொல்லி குட்டச்சொன்ன வாத்தியார். வீட்டுவேலைக்கு மாணவர்களை கூப்பிடுகிற வாத்தியார்கள். டியூசனில் படிக்கிற மாணவர்களுக்கு மட்டும் பரீட்சைக்கு வரவுள்ள முக்கிய கேள்விகளை குறித்துக்கொடுத்து எல்லாரையும் டுயூசன் படிக்கத்தூண்டுகிற வாத்தியார்கள். இப்படிப்பட்ட வாத்தியார்கள்தான் நிறையவந்தார்கள். நல்லாசிரியர் என்ற வாத்தியார் தகுதி சிலுவைமுத்து சாருக்கு மட்டும்தான். அவர் வரலாறு பாடம் நடத்துவார், புத்தகத்தை புரட்டமாட்டார், மேப் கண்டிப்பாக மாட்டிவைக்கனும். கடைசி பென்ஞ் மாணவனுக்கு புரியவைப்பது தான் அவருடைய குறிக்கோள். டுயூசன் எடுக்கிற வாத்திமார்களை வைவார், மாணவர்களையும்தான். ஸ்பெசல் கிளாஸ் என்றால் ஒரு பயலும் வரமாட்டான், காசுகொடுத்துப் படிச்சாதான் தரமானது என்ற சிந்தனை மோசமானது என்பார். தினமும் செய்தித்தாளை வாசித்துவிட்டு முக்கிய செய்திகளை சொல்லுவார்.

  “கனவு ஆசிரியர்” என்ற கட்டுரைத்தொகுப்பு சென்ற ஆண்டில் வாசித்தேன், அதை தொகுத்தவர் கே.துளசிதாசன், சமயபுரம் எஸ்.ஆர்.வி. பள்ளியில் முதல்வராக இருக்கிறார். அந்த பள்ளியில் ஆண்டுதோறும் சமூக ஆர்வலர்களை வரவழைத்து கவுரவிப்பது, எழுத்தாளர்களை, கலைஞர்களை அழைத்து மாணவர்களிடம் பேசச்சொல்வது, அறிஞர்களை அழைத்து மாணவர்களுடன் உரையாட வாய்ப்பு அளிப்பது என்ற புதுமுறையை கையாளுகிறார்கள் என்று அறிந்தேன். அந்த துளசிதான் ஆசிரியருக்கு இந்தவருடம் அரசு நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்திருக்கிறது. அந்த நூலில் எழுத்தாள்ர்கள் கல்வியாள்ர்கள் தங்கள் ஆசிரியர்களைப் பற்றி சொல்லியிருக்கிறார்கள். ஆசிரியர்கள் என்பவர்கள் ஏதோ அவருக்குத் தெரிந்தவற்றை மாணவர்களுக்கு உபதேசம் செய்பவர்கள் அல்லர், அவர்களும் மாணவர்களுடன் சேர்ந்து கற்கவேண்டியவர்கள். சந்தேகம் கெட்கிற மாணவர்களை ஆசிரியர்களுக்குப் பிடிக்காது, எனக்குத்தெரிந்து யாரும் புரியவில்லை என்று கேட்டதுகிடையாது. தேர்வில் குறைவான மதிப்பெண் வாங்குகிறவர்களைத்தான் டீ வாங்க அனுப்புவார்கள்.

இரா.நடராஜன் அவர்கள் எழுதிய “ஆயிஷா” நாவல் ஆசிரியர்- மாணவர்கள் உறவைப்பற்றியது. அறிவியல் ஆர்வமுள்ள ஒரு மாணவி பாடப்புத்தகம் அல்லாமல் மற்ற அறிவியல் நூல்களை வாசித்துவிட்டு அத்லிருந்து சந்தேகம் எழுகிறது. விடை ஆசிரியரிடம் இல்லை. புதிய முறைகளை தெரிந்துகொண்டு மாணவியின் சந்தேகத்தை போக்கவில்லை. தேர்வுகளுக்கு நோட்ஸ் லுள்ள விடைகளைத்தவிற சொந்தமான எழுதினால் மார்க் கிடையாது. கேள்வி கேட்டால் அடிக்கிறார்கள். எல்லா பாடநூல்களுக்கும் நோட்ஸ் வந்துவிட்டது அப்போதே! கணிதத்திற்கும் உண்டு. ஆயிஷா என்ற அந்த மாணவி ஒரு ஆசிரியரை புத்தகம் எழுதத்தூண்டினாள். எட்டாம்வகுப்பு படிக்கிற உனக்கு லைப்ரரியிலுள்ள பெரிய ஆங்கிலப்புத்தகம் புரியுதா? கொஞ்சம் கொஞ்சம் புரியுது மிஸ்! ஆனா தாய்மொழியில இருந்தா நல்லாயிருக்கும் நீங்க எழுதுங்க மிஸ் என்று ஆசிரியரை தூண்டுகிறாள். வேதியியல் பிரிவு ஆசிரியர் கொடுத்த அடிகளுக்கு வலிக்காமல் இருக்க நைட்ரஸ் ஆக்சைடு மருந்தை உடலில் செலுத்தி, டீச்சர் எனக்கு இப்ப எதைவச்சி அடிச்சாலும் வலிக்கல மிஸ்! என்று இறந்துபோனாள் என்று முடிகிறது அந்த நாவல். அந்த குறுநாவல் குறும்படமாகவும் வந்துள்ளது www.youtube.com/watch?v=8-BuyTExd_o.

ருஷ்ய நாவலஒன்று “முதல் ஆசிரியன்” சிங்கிஸ் ஐத்மத்தாவ் எழுதியது, நகரிலிருந்து தொலைதூர கிராமமொன்றில் குதிரை லாயத்தை பள்ளிக்கூடமாக மாற்றி பாடம் சொல்லித்தருகிறார். அவருக்கு பாடத்திட்டம் என்றால் என்ன, என்ன சொல்லிக்கொடுக்க வேண்டுமென்பதே தெரியாது. ஆனால் ஆடு, மாடு, குதிரை மேய்த்த குழந்தைகளை வகுப்பறைக்கு கொண்டுசென்றார். அவரிடம் பயின்ற ஒரு மாணவி நாட்டின் சிறந்த கல்வியாளாராக உருவாகி பள்ளியின் ஆண்டுவிழாவிற்காக் அந்த கிராமத்திற்கு வந்தார். அப்போது அவருடைய ஆசிரியர் ஒரு தபால்காராரக உழைத்துக்கொண்டிருந்தார். இதை தழுவியே தமிழில் “வாகைசூடவா” என்ற திரைப்படம் வந்தது. ஆசிரியர் எப்படி இருக்கவேண்டும் என்று சமீபத்தில் வந்த மற்றொரு திரைப்படம் “சாட்டை”.

அரசாங்கப்பள்ளிகளை ஆசிரியர் சமுகத்தைவைத்தே அரசாங்கம் ஒழித்துக்கட்டியது, கட்டணக்கல்வி தான் சிறந்தது என்ற பொதுப்புத்தியை விதைத்த ஊடகங்கள். மாணவர்கள் சேர்க்கை குறைவு என்ற காரணம் காட்டி அரசாங்கப்பள்ளியை மூடிவிட்டு தனியார் பள்ளிகளை ஊக்கும்விக்கும் அரசின் கொள்கை. கல்வி என்பது சாராயவியாபாரிகளின் கையில் இருந்தால் அவர்கள் ஆசிரியர்களை எப்படி நடத்துவார்கள், மாணவர்கள் என்பவர்கள் வெறும் சரக்குகள் தான். சிறந்த ஆசிரியர்கள் தான் சிறந்த சமூகத்தை உருவாக்கமுடியும்.

வியாழன், 29 ஆகஸ்ட், 2013

ஸ்டீபன் ஹாக்கிங் - சக்கரநாற்காலியில் சிக்கிய பிரபஞ்சம்.

மனிதர்கள் பிரமிப்பு நீங்காமல் இருப்பது இந்த பிரபஞ்சத்தை பற்றிதான், பிரபஞ்சம் எப்போது தோன்றியது, யாராவது படைத்தார்களா? இன்னும் எவ்வளவு நாள் உலகம் / பிரபஞ்சம் நீடிக்கும்? பூமியில் மட்டும் உயிரினமா? வேற்று கிரகங்களில் மனிதர்கள் உண்டா? குழந்தைகள் எல்லாவற்றையும் வியப்பதைப்போல் மனிதர்கள் பிரபஞ்சத்தை பார்த்து வியக்கிறார்கள். இயற்பியல் விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தின் மர்மான முடிச்சுகளை ஒவ்வொன்றாக கட்டுடைத்துவருகிறார்கள்.அப்படிப்பட்ட விஞ்ஞானிகளில் நீயூட்டன், ஐன்ஸ்டீன் வரிசையி ல் சமகால விஞ்ஞானியாக அறியப்படுபவர்தான் ஸ்டீபன் ஹாக்கிங். பிரபஞ்சத்தைப் பற்றி ஆராய்ச்சி நடந்தாலே கடவுள் உண்டா இல்லையா? என்ற கேள்வி வந்துவிடும். அப்படி பிரபஞ்சத்தின் தோற்றுவாய் குறித்து ஸ்டீபன் ஹாக்கிங்கிடம் கேட்கப்பட்டபோது “அப்படியெல்லாம் ஒருவருமில்லை; அவருக்கு இங்கு வேலையுமில்லை; அப்படியொருவர் இங்கு அவசியமுமில்லை” என்று சொல்லிவிட்டார். பைபிளில் சொன்னதற்கு மாற்றாக சூரியமையக்கருத்தை வலியுறுத்திய கலிலியோவுக்கு தனிமைச்சிறை தண்டனை, புரூனோவை உயிரோடு எரித்துக்கொன்றார்கள். 21ம் நூற்றாண்டில் விஞ்ஞானயுகத்தில் ஸ்டீபனுக்கு அப்படியொரு தண்டனைதந்துவிடமுடியுமா? சரி உட்கார்ந்து பேசுவோம் என்று வாடிகன் நகருக்கு விஞ்ஞானிகளை போப் ஆண்டவர் அழைத்தார், அதில் ஸ்டீபனும் கலந்துகொண்டார், மனம்விட்டுப் பேசினார்கள்.

போப்: கோளம் வெடித்துப்பிரபஞ்சம் தோன்றிய பரிணாமத்தைப் பேசுகிற உங்கள் கோட்பாட்டில், "what place you have assigned for God".

ஹாக்கிங்: In my theory there is no place for God! முற்காலத்தில் மழைக்கென்று ஒரு கடவுளையும், புயலை உற்[பத்தி செய்ய ஒரு கடவுளையும், நோய்வந்தால் அதையும் கூட ஒரு கடவுளின் தண்டனையாகவே கருதினோம். ஆனால் அவையெல்லாம், சில நியதிகளுக்கு உட்பட்டு நிகழ்கிற பிரபஞ்ச நிகழ்ச்சிகள் என்று நாம் இப்போது உணர்கிறோம். அப்போதெல்லாம் கடவுள்தான் எங்கோ உட்கார்ந்துகொண்டு எல்லாச்செயல்களயும் செய்துகொண்டு வருகிறார் என்று நம்பினோம். In those days God was full of jobs; but now we have made God incresingly jobless!

கனத்தமெளனம் நிலவிய சூழ்நிலையில் மறுபடியும்..

போப்: கோளம் வெடித்ததாகச் சொல்கிறீர்களே கோளத்தை வெடிக்கச்செய்தது யார்? who casused the Big Bang?
நிதானமாக...

ஹாக்கிங்: Perhaps there, to cause the Big Bang, We may require a God!

போப்: Thank God! God is there!

விடைதெரியாத கேள்விகளுக்கு எல்லாம் ஈசன்செயல் என்று சொல்வது மாதிரி போப்பிற்கு திருப்தியானவுடன், விஞ்ஞானிகளுக்கு அன்பான ஒரு எச்சரிக்கை விடுத்தார், “ பிரபஞ்சம் எங்கே எப்போது தோன்ரியது என்ற விசயத்தை விஞ்ஞானத்தின் கைகளில் விட்டுவிடமுடியாது, அது கடவுளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் அதில் மூக்கை நுழைக்கவேண்டாம்”.

அடுத்த அமர்வில், “நாம் வாழ்ந்துகொண்டிருக்கிற இப்பிரபஞ்சம், இன்று விரிந்து, விரிந்து சென்று கொண்டிருக்கிறது.ஒரு காலகட்டத்தில் அது சுருங்க ஆரம்பிக்கும்.சுருங்கிச் சுருங்கி மேலும் சுர்ங்கமுடியாத நிலையை அடையும்போது, மறுபடியும் அது விரிய ஆரம்பிக்கும்.விரிய ஆரம்பித்தவுடன் அப்படி, எப்போது தனிமங்கள் உருவாகின’ நடசத்திரங்கள் எவ்வாறு உருவாகின? அவைகளின் கதி என்ன?விதி என்ன? என்பதையெல்லாம் விரிவாக எடுத்துரைக்கும் கணிதங்கள் கைவசம் இருக்கின்றன; இதில் எங்கே கடவுள் வருகிறார்? அவர் வருவதற்கு என்ன அவசியம்; அவருக்கு இங்கே என்ன வேலை?” என்று கொஞ்சம் கடுமையாகவே வாடிகன் அமர்வில் ஸ்டீபன் பேசினார்.

அறிவியல்துறை சார்ந்தவர்களுக்கு மட்டுமே அதுவரை அறிமுகமாயிருந்த ஸ்டீபன் ஹாக்கிங் “A Brief History of Time" என்ற புத்தகத்தை எழுதியதற்கு அவருடைய புகழ் மற்ற மக்களுக்கும் பரவியது, அந்த நூலை எளிமையாக அறிவியல் துறைக்கு அப்பாற்பட்ட மக்களுக்கும் புரியும்வண்ணம் எழுதியிருந்தார். உலகில் அதிகம் விற்பனையான நூல்களில் ஒன்றான இந்த புத்தகம் விற்பனையில் கின்னஸ் சாதனை புரிந்தது, உலகின் 60 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.
                                -------------------

இவ்வளவு பிரபலமான அந்த இயற்பியல்வாதி எப்படி சக்கரநாற்காலியில் சிக்குண்டு கிடக்கிறார், அவருக்கு என்னவாயிற்று? சரியாக கலிலியோ பிறந்தபின் 300 வருடங்கள் கழித்து பிறந்தார் ஸ்டீபன். சாதாரணக்குடும்பத்தில் பிறந்த ஸ்டீபனின் தந்தை ஒரு மருத்துவர், அவருடைய தாயாரும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றவர்.பள்ளிக்கல்வியை முடித்தவுடன், தந்தை தன்னைப்போல் மகனை மருத்துவம் படிக்கவிரும்பினார். ஆனால் ஸ்டீபனுக்கு இயற்பியல் படிப்பதில் ஆர்வம். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இயற்பியலையும் வேதியியலையும் தெரிவுசெய்து படித்தார். அங்கு படித்த மூன்று ஆண்டுகளில் எப்போதும் தனிமையாக இருப்பார், விளையாட்டு எதிலும் ஆர்வமில்லை. ஒரே ஒரு விளையாட்டில் மட்டும் படகுச்சவாரி மட்டும் ஆர்வம். இயற்பியல் பாடம் மற்ற மாணவர்களுக்கு கடினமாக இருந்தது. ஆனால், ஸ்டீபனுக்கோ மிகமிக எளிதாக இருந்தது. ஸ்டீபனுக்கு பிரபஞ்சவியல் பற்றிய படிப்பில் ஆர்வமிருந்தது. அதனால் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பிரபஞ்சவியல் படித்தார். பல்கலைக்கழகத்தில் கடைசிப் பருவம் முடிவுக்கு வந்தநேரம் ஒரு நாள் மாடிப்படிகளிலிருந்து தலைகுப்புற விழுந்தார். பின்னர் தற்காலிகமாக நினைவுகளை இழந்தார். மருத்துவத்துறை அவருக்கு நரம்புமண்டலத்தை தாக்கும் நோய் வந்துள்ளதாக அறிவித்தது.

 
அவருக்கு வந்த நோயை ALS என்கிறார்கள், அமியோட்ரோஃபிக் லேட்டரல் ஸ்க்லீரோசிக் என்ற விளக்கம். இன்னும் புரியவில்லையா? இதற்கு இன்னொரு பெயர் லூ கெஹ்ரிக் நோய். அதாவது முதன்முதலில் லூகெஹ்ரிக் என்ற கூடைப்பந்துவீரரை இந்த நோய் தாக்கியதால் நோய்க்கும் அந்த பெயர் வைத்துவிட்டார்கள். நமது உடலிலிரண்டுவகையான தசைகள் உள்ளன, ஒன்று தானாக வேலைசெய்பவை (இதயம், நுரையீரல்,கிட்னி) இன்னொன்று நமது விருப்பப்படி செயல்படும் உறுப்புகள் (கை,கால்,வாய்,கண்). ALS நோய் வந்தவர்களுக்கு நமது விருப்பப்படி செயல்படும் உறுப்புக்களை இயக்கமுடியாது. நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முதலில் காரணமில்லாமல் கீழே அடிக்கடி விழுந்துவிடுவார்கள், பேச்சு கொஞ்சம்கொஞ்சமாக குளறி விடும்,கை, கால்கள் பலவீனமாகிவிடும் சாப்பிடவோ, எழுதவோ கஷ்டமாகிவிடும்.அப்படி படிப்படியாக தாக்குண்டு 30 ஆண்டுகளாக சக்கரநாற்காலியில் வாழ்ந்துவருகிறார். மனபலம் உடல்பலத்தைவிட வலிமையானது என்பதை தன் வாழ்க்கையில் நிரூபித்துக்காட்டியவர் ஸ்டீபன ஹாக்கிங்.


அவருடைய வாழ்க்கை வரலாற்றை தமிழில் நாகூர்ரூமி “சக்கர நாற்காலியில் சிக்கிய பிரபஞ்சம்” என்ற நூலை எழுதியிருக்கிறார். ஸ்டீபன் ஹாக்கிங்னுடைய இளமைப்பருவம், அவருக்குவந்த நோய், குடும்பம், அவருடைய சாதனை, விருதுகள் என்று எளிமையாக எழுதியிருக்கிறார். மற்றொரு நூல் டாக்டர். அழகர் ராமானுஜம் அவர்கள் “மூலத்தைத் தேடும் முதன்மை விஞ்ஞானி” என்ற நூல் எழுதியிருக்கிறார். 100 பக்க நூலில் 75 பக்கங்கள்வரை ஸ்டீபனுடைய ஆராய்ச்சி, குடும்பம்,கல்வி, கருங்குழி, ஆராய்ச்சிகள், ஸ்டீபன் எழுதிய நூல்பற்றி, இன்னும் ஒரு இயற்பியல்வாதியான இவர் நியூட்டனின் பிரபஞ்சம், ஐன்ஸ்டீனின் சார்பியல் என்று விளக்கிவிட்டு, கடைசியாக வேதாத்ரிமகரிஷி இதையெல்லாம் ஒரு மெய்ஞானியாக சிந்தித்திருக்கிறார், ஸ்டீபன் ஹாக்கிங் வேதாத்ரியின் தத்துவத்தை ஒட்டி சிந்தித்தால் மாமனிதராக வருவார். விஞ்ஞானத்தை ஒரு விஞ்ஞானி முடித்ததில் ஒன்னொருவர் தொடங்குகிறார், அவ்வாறே ஐன்ஸ்டீன் நீயூட்டனின் தோள்மீதிருந்து சிந்தித்தார், ஆனால் மெய்ஞானிகள் ஒவ்வொருவரும் தனித்தனியாக தத்துவங்கள் உருவாக்கினார்கள் என்ற விமர்சனத்தை வைக்கிறார்.

 
 
நியூட்டன் பிரபஞ்சத்தை காலம், வெளி, பொருள் மற்றும் ஆற்றல் என்று நான் அநாதிகள் கொள்கையை ஐன்ஸ்டைன் வெளியும் காலமும் ஒன்றில் அடங்கும்; பொருளும் ஆற்றலும் அவ்வாறே என புதுப்பார்வை கொடுத்தவர் என்கிறார். மூலம் என்பது ஒரு காலகட்டத்திற்கு முன்பு வெடித்த புள்ளி அல்ல, மாறாக அது என்றேன்றும், எங்கெங்கும் நிரந்தரமாக எல்லையற்றதாக உள்ள பெருவெளியே என விஞ்ஞானம் உணர ஸ்டீபன் அயராது முயலவேண்டும், ஸ்டீபன், வேதாத்ரிமகரிஷியாக மலரவேண்டும் என்று டாக்டர். அழகர்ராமானுஜம் அசைப்படுகிறார். அப்படி ஆராய்ந்தால்தான் நீயூட்டன், ஐன்ஸ்டீன் வரிசையில் ஸ்டீபனையும் இணைக்கமுடியும் என்கிறார். இந்த மாதிரி எல்லாம் பிரம்மம் என்று சொலலிவிட்டால் இத்தனை ஆராய்ச்சி தேவையில்லையே!