ஞாயிறு, 8 ஜூலை, 2012

வாடகைக்கு வீடு__________ மட்டும்.

 தருமியின் வலைப்பதிவில் ‘அவாளுக்கு மட்டும்’ என்ற பதிவை வாசித்தேன். ‘ஹிந்து’ நாளிதழில் property plus இணைப்பில் வந்த விளம்பரம் “only Brahmins” என்றிருந்திருக்கிறது. இது சட்டப்படி தவறானது; முறையற்ற விளம்பரம் என்று இனியன் இளங்கோ என்று ஒருவர் பத்திரிக்கை ஆசிரியருக்கு எழுதியுள்ளார். அதற்கு ஹிந்து நாளிதழ் எங்களுக்கு தெரியாமல் இந்த விளம்பரத்தை அனுமதித்துவிட்டோம், அதற்கு தவறுதான் என்று விளக்கமளித்துள்ளது. இன்றைய 08-07-2012 ஹிந்து நாளிதழில் வந்த செய்தி “இஸ்லாமியர்களுக்கு தில்லியில் வீடு கிடைப்பதில்லை” என்ற செய்தி வந்துள்ளது. அதற்கு நிறைய வாசகர் கடிதங்கள் வந்துள்ளன. சிலர் இது நாகரீகமற்ற செயல், ஒரு சமூகத்தை ஒதுக்கிவைப்பது சரியல்ல என்று எழுதியுள்ளார்கள், இன்னும் பலர் இஸ்லாமியர்களுக்கு வீடு கொடுத்தால் தேவையற்ற தொல்லைவரும் அதை தவிற்கவே வீடு கொடுப்பதில்லை என்றும், அவர்கள் இறைச்சி சாப்பிடுகிறார்கள், சைவம் சாப்பிடுவர்கள் எப்படி அவர்களுக்கு வீடு தரமுடியும் வீடே நாசமாகிவிடாதா என்றும் இஸ்லாமியர்கள் யாரோடும் பொதுவெளியில் ஐக்கியமாவதில்லை அதனால் வீடு கொடுப்பதில்லை என்றும் இன்னும்சிலர் பாகிஸ்தான், எகிப்து, பங்களாதேஷ், காஷ்மீர் யெல்லாம் இழுத்துள்ளனர். அங்கொன்றும் இங்கொன்றும் நடைபெறுவதை ஹிந்து நாளிதழ் பெரிதுபடுத்துவது நல்லதல்ல என்றும் வாசகர் கடிதங்கள் வந்துள்ளது.

இந்த செய்தி தில்லிக்கும் மட்டுமில்லை, மும்பை நகரத்தில் ஏற்கன்வே இப்படிப்பட்ட discrimination ஐ சிறுபான்மை சமூகம் சந்தித்திருக்கிறதாக செய்திகள் வந்தன. வீடு வாடகைக்குக் கிடைப்பதில் நிறைய சிக்கல்கள் உள்ளன, பேச்சிலர்களுக்கு எளிதாக வாடகைவீடு கிடைக்காது, 1996ம் ஆண்டு சென்னைக்கு குடியேறியபோது சந்தித்திருக்கிறேன். எல்லா ஓனர்களும் அப்படி கிடையாது. பேச்சிலர்கள் ஒப்பீடளவில்  அதிகவாடகை தரவேண்டும். அதேபோல் சில மாதங்களுக்கு முன் சென்னையில் வங்கிக்கொள்ளையில் வடமாநிலத்தவர் சிலரின் பங்கு இருந்ததால் இப்போது வடமாநிலங்களிலிருந்து வேலைக்குவரும் தொழிலாளர்களுக்கு வீடு கொடுக்க யோசிக்கிறார்கள். நாம் பெரும்பான்மையாக உள்ள இடத்தில் வசிக்கும்போது இது போன்ற சிக்கல்கள் நமக்குத்தெரியாது, நாம் மொழியாலோ, தேசத்தாலோ ஒரு இடத்தில் சிறுபான்மையாக இருக்கும்போது அனுபவம் கிடைக்கும்.  நகரங்களில் மத அடிப்படையில் பிரிவினை நிலவுவது போல் கிராமங்களில் ‘இந்து’ சமூகத்தில் சாதி அடைப்படையில் இந்தத்தெரு இந்த சாதிக்கு என்ற பிரிவினை நிலவுகிறது. நான் வாழ்ந்த கிராமத்தில் ஆதிக்கசாதியினர் அதுவும் அண்டைவீட்டாருடன் சண்டை வந்துவிட்டால் என் வீட்டை ‘பள்ளனுக்கு’ விற்றுவிடுவேன் என்பார்கள்.  கீழத்தெரு என்றாலே கீச்சாதிகள் தான், சேரிகள் பெரும்பாலும் கழிவுநீர் செல்லும் வாய்க்கால், பள்ளமான பகுதியில்தான் குடியிருப்பு இருக்கும். இப்போது இந்த போக்கு மாறியிருக்கிறது அதுவும் மனமுவந்து அல்ல!!

இந்தியாவில் பாபர் மசூதி இடிப்பிற்குப் பின்னர் நாடெங்கும் மதக்கலவரம் பற்றி எரிந்தது, தென் மாநிலங்களில் அத்தகைய பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் மதத்தை மையமாக வைத்து அரசியல் நடப்பதால் பிரிவினையை ஏற்படுத்தி ஒரு சமூகத்தை ஓரணியில் திரட்டி ஆதாயம் காண ‘சங்க்பரிவார்’ அமைப்புகள் முயற்சி செய்கின்றன. எங்கெல்லாம் மதக்கலவரம் மூல்கிறதோ அங்கே ‘சங்பரிவார்’ அமைப்புகள் வலுவாக காலூன்றி வருகின்றன. குஜராத்தை அடுத்து, கர்நாடகம், பழங்கிடியினர அதிகமுள்ள ஒரிஸ்ஸாவில் இந்துத்துவா வளர்ந்துவருகிறது. 2002ல் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் கரசேவகர்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்வினையாக குஜராத் மாநிலமெங்கும் கல்வரம் மூண்டது.  அந்தக் கலவரத்தில் சுமார் 2000 முஸ்லீம்கள் கொல்லப்பட்டதாக செய்திகள் வந்தன. இதைவிட அந்த மக்கள் தங்கள் சொந்த வீடுகளிலிருந்து விரட்டப்பட்டு அகதிகளாகப்பட்டவர்கள் அதிகம்.  அதுவரை ஒன்றாக இருந்த இரண்டு சமூகமும் குடியிருப்பு அள்வில் பிரிந்துகிடக்கிறது. இன்னும் மேலாக சில நகரங்களில் இரு சமூகத்தை ‘பார்டர்’ என்று முள்வேலி பிரிக்கிறது. ஒரு தேர்தல் கூட்டத்தில் விஸ்வஹிந்து பரிஷ்த்தின் தலைவர் பிரவீன் தொகாடியா தொண்டர்களுக்கு திரிசூலம் விநியோகித்துவிட்டு பேசுகிறார், “நான் இந்துத்துவா கொள்கைகளுக்கு உட்பட்டு நடப்பென், இந்துக்களின் கடையில் மட்டுமே பொருள் வாங்குவேன், விற்பேன், ஆட்டோக்களில் பயணம் செய்தால் அங்கே “திரிசூலம் காவிக்கொடி” உள்ள ஆட்டொ ரிக்‌ஷாவில் மட்டுமே பயணம் செய்வேன் என்று தொண்டர்களுக்கு அறிவுரை வழங்குகிறார்.

இது போன்ற பிரிவினை polarization சமூகத்தில் உருவாகிவருவது மிகவும் ஆபத்தானபோக்கு அதை படித்த நடுத்தர வர்க்கத்தினர் செய்வது, இது போன்ற கருத்துக்களை பரப்புவது மத அடிப்படையில் சமூகம் பிளவை எதிர்நோக்கியிருக்கிறது. இது போன்ற மத அடிப்படையிலான பிரிவினை இந்தியா சுதந்திரம் வாங்கும் போது இருந்தது காலப்போக்கில் சமூகம் நல்லிணக்கமாக வாழ பழகியிருந்தது. இப்போது மதத்தை அரசியலில் கலப்பதால் கடந்த 20 ஆண்டுகளாக தூபம் போடப்பட்டுவருகிறது. நாம் பெருவாரியான சமூகம் ஆனால் அவர்களுக்கு ஏன் சலுகை, இஸ்லாமியர்களால் நம் நாட்டின் ஜனத்தொகை பெருகிவிட்டது தீவிரவாதம் பெருகிவிட்டது என்ற பிரச்சாரத்தை ‘சங்பரிவார்’ அமைப்புகள் திட்டமிட்டு செய்துவருகின்றன. அதே போல் இஸ்லாமிய சமூகத்திலும் சில அமைப்புகள் நாம் வஞ்சிக்கப்படுகிறோம் என்ற பிரச்சாரம் கண்ணுக்குத் தெரியாமல் நடந்துகொண்டிக்கிறது, இந்த கருத்துக்களை மீடியாவின் மூலமாகவும் சோஷியல் நெட்வொர்க் என்று சொல்லக்கூடிய இணையதளத்தில் பகிரப்படுகிற செய்திகள் மூலமாகவும் காணலாம். இது ஒரு ஹைட்ரோகார்பன் வாயுவுக்கு நிகரான கசிவு என்று சொல்லலாம், சிறு தீப்பொறி எழுந்தால் பற்றிக்கொள்ளும் தன்மைகொண்டது. இன்னும் இந்தியாவில் பெரும்பான்மை இந்துக்கள் ‘இந்துத்த்வா’வின் கொள்கைகளுக்கு பலியாகவில்லை அப்படியாகியிருந்தால் நிலைமையே வேறு. சமய நல்லிணக்கம் இருக்கும்வரை தான் இந்தியா பெருமைப்படமுடியும். நாமும் பாகிஸ்தானைபோல் அல்லது மத அடிப்படியில் செயல்படுகிற நாடுகளைப் பின்பற்றினால் கற்காலத்தை நோக்கி செல்வோம் என்பதில் ஐயமில்லை.

சனி, 7 ஜூலை, 2012

மூன்றாம் பாலினம்.



நீங்கள் வேலைக்கு சேருகிறீர்களா, பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்கிறீர்கள், ரயிலில் முன்பதிவு செய்கிறீர்கள், பள்ளியில் குழந்தைகளை சேர்க்கிறொம் இப்படி எல்லா இடத்திலும் பால் /SEX என்ற பகுதி உள்ளது இதை நிரப்பவேண்டும். அங்கே சாய்ஸ் ஆண்/பெண் என்ற இரண்டு சாய்ஸ் தான்.  ஆனால் சமூகத்தில் ஆணாகவும் இல்லாமல் பெண்ணாகவும் இல்லாமல் மூன்றாம் பாலினமாக தமிழ்நாட்டில் மட்டும் 30,000 பேர் இருக்கிறார்கள். இப்போது மாற்றுத்திறனாளிகள் அமைப்புரீதியாக திரட்டப்பட்டு போராடி கல்வியில் வேலைவாய்ப்பில் நலத்திட்ட உதவிகளைப் பெற்றுவருகிறார்கள்.  வெளிப்பார்வைக்குத் தெரிகிற ஊனத்தை சமூகம் ஏற்றுக்கொண்டுவிட்டது, ஆனால் உள்ளத்தாலும் பால் திரிபால் ஏற்பட்டுள்ள ஊனத்தை சமூகம் ஏற்க மறுக்கிறது. நன்கு படித்த அரவாணிகளாக உண்ரப்பட்டவர்கள் தொடர்ந்து உயர்கல்வி படிக்கமுடியவில்லை, வேலைக்கு யாரும் சேர்ப்பதில்லை.  அப்படி சில நிறுவனக்கள் முன்வந்தாலும் அங்கு நிலவுகிற சூழ்நிலையால் அவர்களால் வேலையில் தொடரமுடியவில்லை என்பதை தமிழகத்தில் அரவாணிகள் அமைப்பின் தலைவராக உள்ள ஆஷாபாரதி சொல்கிறார்.

பொதுமக்கள் மத்தியில் அரவாணிகளைப் பற்றி என்ன சிந்தனை இருக்கிறது? அவர்கள் பாலியல் தொழில் செய்கிறார்கள், மிரட்டி பணம் பறிக்கிறார்கள், அராஜகம் செய்கிறார்கள். ஒரு பேருந்தில் ஏறினால் எங்கே அமர்வது? பெண்களுக்கு அருகே அமர்வதை அவர்கள் பாதுகாப்பாக உணர்கிறார்கள். ஆனால் பெண்களும் அவர்கள் அருகில் அமரும்போது எழுந்துவிடுகிறார்கள். காவல்துறையினரால் அதிகம் துன்பறுத்தப்படுவது அரவாணிகள் தான். அவர்களுக்கு ஏதாவது கேஸ் வேணுமென்றால் அரவாணிகளை பிடித்துக் கொண்டுபோய் கஞ்சா வழக்கு போட்டுவிடுவார்கள். “பாலியல்” தொழில் செய்கிறார்கள் என்று வழக்குப்பதிவு செய்ய சட்டத்தில் இடமில்லை. வீட்டிலிருந்து துரத்தப்பட்ட ஒரு அரவாணியை சமூகம் எப்படி சேர்த்துக்கொள்ளும், படித்த சுயமாக கவுரமான தொழில் செய்யும் அரவாணிகளுக்கு வாடகைவீடு கிடைப்பதில்லை. அப்படி வீடு கிடைத்தால் அதிகவாடகை கொடுக்கவேண்டியுள்ளது.  பெரும்பாலும் நகர்ப்புறங்களில் சேரிகளில்தான் வசிக்கிறார்கள். தமிழ் சினிமாவில் அரவாணிகளை கேலிக்குறிய பாத்திரமாக பயன்படுத்துகிறார்கள். பால்திரிபும் ஒரு ஊனம் என்று தமிழ் மூதாட்டி உணர்ந்ததால் என்னவோ “ அறிது அறிது மானிடராய் பிறத்தல் அரிது, அதிலும் கூன், குருடு,செவிடு, பேடு நீங்கிப் பிறத்தல் அரிது” என்றார். பேடு, பேடி என்ற சொல திரிந்து சென்னையில் ‘பாடு’ என்று வசைச்சொல்லாகிவிட்டது.

பாரதப்போரில் சகல சாமுத்ரிகா லட்சணம் கொண்ட ஒருவனை பலியிடவேண்டும் என்று ஜோசியர்கள் சொல்கிறார்கள்,அப்படி அறியப்பட்ட அர்ச்சுனனுக்கும் ஒரு அசுர கன்னிக்கும் பிறந்த அரவாண் தன்னை தியாகம் செய்ய ஒத்துக்கொள்கிறான் ஆனால் அவன் திருமணம் செய்ய ஆசைப்படுகிறான். அந்த ஒருநாள் மனைவிக்காக எந்த பெண் முன்வருவாள்? கிருஷ்ணபகவானே பெண்ணாக மாறி அரவாணுக்கு மனைவியாகிறான். அரவாணுக்கு மனைவியாக வாய்த்த கிருஷ்ணப் பிறவிகளாக இன்றும் தாலியறுக்கும் திருவிழா கொண்டாடுகிறார்கள். கிருஷ்ணக்கென்ன ஒருநாள் கூத்து..ஆனால் இவர்கள் வாழ்நாள் முழுவதும் இழிபிறவிகளாக நடத்தப்படுகிறார்கள். பாரதப்போரில் வில்வித்தையில் வீரனான அர்ச்ச்சுனன் ஒரு வருட அஞ்ஞாதவாசத்தில் பேடியாக வாழ்ந்தான் என்று பாரதம் கூறுகிறது. மும்பை மாநகராட்சியில் அரவாணிகளுக்கு வரி வசூல் செய்யும் வேலை கொடுக்கிறார்கள். அவர்களிடம் இழிசொல் வாங்கக்கூடாது என்ற ‘செண்டிமெண்ட்’ ஆல் வசூல் நன்றாக நடக்கிறதாம் இப்படி அரசு இயந்திரமே அவர்களை இழிவு செய்கிறது.

விலங்குகளைக்கூட சித்ரவதை செய்யக்கூடாது மனிதமாபினம் காட்டவேண்டும் என்கிற அக்கறை இருக்கிற சமூகத்திற்கு அரவாணிகளும் மனிதர்கள் தான் என்கிற அபிமானம் வரவேண்டும். இப்போது தான் தமிழ் சினிமாவில் விளிம்புநிலை மனிதர்களைப் பற்றி அவர்களின் அவல வாழ்க்கையைப் பற்றி சினிமாவும் குறும்படங்களும் வந்து கொண்டிருப்பது ஆரோக்கியமான போக்கு தான். ஞாநி எழுதிய ‘அறிந்தும் அறியாமலும்” தொடரில் சில கேள்விகள் கேட்கிறார்! உங்கல் வீட்டில் ஒரு அரவாணி உருவாகியிருந்தால் எப்படி அவர்களை நடத்துவீர்கள்? கடினமான கேள்விதான். ஒரு சிறுவனோ, சிறுமியோ தான் அரவாணி என்று எப்போது உணருகிறான். என்பதை “நர்த்தகி” திரைப்படம் சொல்கிறது. இவர்கள் மேல் அக்கறைகொண்டு எழுத்தாளர் சு.சமுத்திரம் 1994ல் “வாடாமல்லி” என்ற புதினம் படைத்தார். இப்போது “மூன்றாம்பாலினத்தின் முகம்” என்ற நாவல் பிரியாபாபு என்கி|ற அரவாணியால் எழுதப்பட்டு வெளிவந்துள்ளது.

மாற்றுத்திறனாளிகள் மீதான பரிவும் இவர்கள் மீதும் காட்டப்படவேண்டும், அரசு நலத்திட்டம் அறிவித்தால் மட்டும் போதாது, மக்களின் மனம்பண்படுத்தப்படவேண்டும்.

வெள்ளி, 6 ஜூலை, 2012

சுற்றுச்சூழல் சீர்கேடு



இன்னும் தென்மேற்கு பருவமழை தொடங்கவில்லை, வருடந்தோறும் வெப்பநிலை அதிகரித்துக் கொண்டே வருகிறது, உலகின் தாழ்வான பிரதேசங்கள் கடல்நீரில் மூழ்குகின்றன, நிலத்தடி நீர் குறைந்துகொண்டேவருகிறது இதற்கெல்லாம் என்ன காரணம்?

சுற்றுச்சூழல் சீர்கேட்டின் விளைவின் தாக்கம் தான் இவ்வளவு பிரச்சனைகளைன் காரணம்? யார் அப்படி சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறார்கள். அரசாங்கமா?  மக்களா? பொருளுற்பதியில் ஈடுபடும் நிறுவனங்களா?

யார் பொருட்களை அதிகமாக நுகர்கிறார்களோ அவர்களால் தான் சூழல் மாசுபடுகிறது! அப்படியானால் வசதி படைத்த நாடுகள் அதிக அளவு மின்சாரத்தை, எரிபொருளை செலவிடுகின்றன. ஏழை நாடுகள் இன்னும் வளர்ச்சிய்டையாத நாடுகளில் மின்சாரமே காணாத மக்கள், கார் பைக் பார்த்திருதா மக்கள் இருக்கிறார்கள். ஆனால் புவியில் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு சகல நாடுகளையும் , ஏழை, பணக்கார நாடு என்ற வித்தியாசம் பார்க்காமல் தான் பாதிப்பு இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட நாட்டிலும் மக்கள் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இருக்கிறதால் நுகர்வின் அளவும் மாறுபடுகிறது. அமெரிக்கா ஐரோப்பா வில் உமிலப்படுகின்ற கரியமிலவாயுவால் புவி வெப்பம் அதிகரித்து அது கடல் நீர்மட்டத்திலிருந்து குறைந்த உயரித்திலுள்ள ஏழை வங்காளதேசத்தை தண்ணீரில் மூழ்கடிக்கிறது? இதற்கு யார் பொறுப்பு?

சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக வருடந்தோறும் உலக நாடுகள் மாநாடுகள் நடத்துகிறார்கள், வளர்ந்த, வளர்ச்சிய்டையாத மற்றும் வளரும் நாடுகளுக்கிடையே ஒரு முடிவு எட்டப்படவில்லை. இந்தியாவிலும் சீனாவிலும் அதிகமாக கரியமிலவாயு வெளியேற்றப்படுகிறது என்ற வளர்ந்த நாடுகள் குற்றம் சாட்டுகிறார்கள், ஆனால் இங்கே ஜனத்தொகை இரண்டு நாடுகளுக்கும் சேர்த்து உல்கின் 50 விழுக்காடு அளாவிற்கு உள்ளனர் என்பதை கணக்கில் எடுக்கமறுக்கிறார்கள். உலகமயம் என்ற பெயரில் மூன்றாம் உலகநாடுகள் வளர்ச்சியடைந்த நாடுகளின் சேரிகள் ஆக்கப்பட்டுவிட்டன. அவர்களின் எலக்ட்ரானிக் குப்பை இங்கே வந்து கொட்டப்படுகிறது, அங்கே காலாவதியான தொழில்நுட்பம் மூன்றாம் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இரும்பு, தாமிரம், ரப்பர், தோல், இன்னும் சூழலை அதிகம் மாசுபடுத்துகிற ஆலைகளை அந்நியமூலதனம் என்ற பெயரில் இங்கே அமைக்கிறார்கள். சுற்றுச்சூழலை பாதிப்பு ஏற்படுத்துகிற நிறுவனக்கள் அரசாங்க இயந்திரத்தை கட்டுப்படுத்துகின்றன. ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்று நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தாலும் வேறொரு நீதிமன்றம், நிபுணர் அறிக்கை என்ற பேயர்களில் மோசடி செய்யப்பட்டு ஆலை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. மக்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை, நாம் தேர்ந்தெடுத்த அரசாங்கமே நாட்டை சீரழிக்கிறது. பன்னாட்டு நிறுவனக்களுக்காக இந்திய வனப்பகுதிகள் அழிக்கப்படுகின்றன, ஒரிஸ்ஸாவில் அமைக்கப்பட்ட பாக்சைட் நிறுவனத்தால் வனப்பகுதியில் வாழ்ந்த மக்கள் உடல்நலகுறைவால் பாதிக்கப்பட்டனர். காடுகளை அழித்து வேறொரு நாட்டின் நிறுவனத்தின் இலாபத்திற்காக இந்தியாவின் பழங்குடியினர் வாழ்க்கை அழிக்கப்படுகிறது. இதை ஊடகங்களும் பெரிதாக கருதுவதில்லை.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் மக்கள் நலனை கைகழுவிவிட்டு பன்னாட்டு நிறுவனக்களின் நலன்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்துகிறது. 

மாறிவரும் வாழ்க்கை முறையினாலும் சூழல் அதிகளவு பாதிக்கப்படுகிறது, பிளாஸ்டிக் இல்லாத வாழ்க்கையை நினைத்துப்பார்க்க முடியவில்லை. காலை எழுந்தவுடன் பயன்படுத்தும் பால் பாக்கெட் தொடங்கி கேரி பேக் இல்லாமல் யாரும் வீடு திரும்புவதில்லை, மளிகை, காய்கறி, பழங்கள், மாமிசம்,ஹோட்டல் உணவுகள் ஜவுளி என எல்லாமே பிளாஸ்டிக் பொருட்களால் பேக்கிங் செய்யப்படுகின்றன. ஒரு காலத்தில் பிளாஸ்டிக் இல்லாமல் வாழ்க்கையை நடத்திய மக்கள்தான் நாம்.

தமிழகத்தில் ஆறுகள் தொழிற்சாலைகளால் அழிந்துபோயின. பாலாறு தோல் தொழிற்சாலையின் சுத்திகரிக்கப்படாத நீராலும் ராட்சத மணல் அள்ளும் இய்ந்திரங்கள் உதவியால் லாபம் ஈட்டியவர்களாலும் அழிக்கப்பட்டது. ஆனால் மணல் இல்லாமல் வீடுகள் எப்படி கட்டுவது, உள்ளூரில் வீடுகட்ட பயன்படுத்தினால் பாதிப்பு இருந்திருக்காது,  தனி நபர் இலாப வெறியில் மணலை அண்டை மாநிலத்திற்கும் கடல் கடந்தும் ஏற்றுமதி செய்யப்பட்டதால் அதிக மணல் கொள்ளைபோனது. இன்று குடிப்பதற்கும், விவசாயத்திற்கும் ஆறு பயன்படவில்லை. திருப்பூர், ஈரோடு பகுதியில் சாயக்கழிவினால் நிலத்தடி நீர், ஆற்று நீர் மாசடைந்தது. ஏற்றுமதி , அந்நிய டாலர் ஈட்டுவதற்காக ஊக்கப்படுத்தப்பட்டதன் விளைவுகள் தான் இவை.

எதிர்கால சந்ததியினர் இந்தப்புவியில் வாழவேண்டும் என்ற அக்கறை நமக்கு எப்போது வரும். அடுத்த உலகப்போர் குடிநீருக்காக ஏற்படும் என்கிறார்கள். நாடுகளுக்கிடையேயான சண்டையை விட இந்திய மாநிலங்களுக்கிடையில் சண்டையும் ,அண்டை  இன ,மொழி மீதான வெறுப்பு தண்ணீர் பற்றாக்குறையால் வள்ர்க்கப்படுகிறது. எப்படி சமாளிக்கப்போகிறோமோ?