புதன், 21 செப்டம்பர், 2011

பேசாப்பொருள் குறித்து..........

இந்தக் கட்டுரை ஒரு இணையக்குழுமத்திற்காக எழுதப்பட்டது, அங்கே சாதி, மதம், மொழி இனம் சம்பந்தமாக எழுதினால் பிரச்சனை ஏர்படுகிறது. அதனால் இது சம்பந்தமாக எழுதவேண்டாம் என ஒரு அன்பர் எழுதினார், அதற்கு எதிர்வினையாக எழுதியது.

சாதி, மதம், மொழி, இனம் சம்பந்தமாக எழுதினால் அடுத்தவர் மனம் புண்படுமோ என்று எழுதாமல் இருக்கமுடியவில்ல. மொழியும் பேச்சும் இல்லாத காலங்களில் வாழ்ந்த மாந்தர்கள் ஒருவொருக்கொருவர் உறவாடத்தடையாக தடையாக இருந்தது. கற்றறிந்த சமூகத்திற்கு அதே “மொழியே” தடையாக இருப்பது முரணன்றி வேறென்ன? நாளிதழ்களில் அன்புள்ள ஆசிரியருக்கு என்று போஸ்ட் கார்டில் முன்பு எழுதியதெல்லாம் அவர்களால் இடம் கருதி பிரசுரிக்காமல் போன காலமும் உண்டு, ஆனால் இப்போது இணையத்தில் வருகின்ற நாளிதழ் செய்திகளுக்கு பெரும்பான்மையான வாசகர்கள் ஆரோக்கியமான கருத்துக்களை வழங்குகிறார்கள் இதன் மூலம் வாசகர்களின் நாடித்துடிப்பறிகிறார்கள் என்பதை அந்த பத்திரிக்கைகளின் `தலையங்கச்செய்திகள் சொல்கின்றன. ஆனாலும் சிலர் கழிவறையில் எழுதும் வக்கிரங்களையும், வாசகர் கடிதங்களாக அனாமதேய முகவர்களிலும் மாற்றுப்பெயர்களிலும் எழுதி வருகிறார்கள். பத்திரிக்கைகளில் எழுதுபவர்கள் திறந்தவெளியென்று நினைத்து அப்படிஎழுதுகிறார்கள், இந்த குழுமத்தில் எழுதுபவர்கள் அப்படியில்லை, கருத்துக்களை எழுதுபவர்களை அதன் 10 சதவீத உறுப்பினர்களாவது அவர்களை அறிவார்கள். நமக்கு விரும்புகிற செய்திகளை மட்டுமே படிக்கிற சுதந்திரம் நமக்குண்டு. நாம் எழுதுகிற எழுத்தால் எவருடைய சித்தாந்தத்தையும் குறை கூடாது, என்று எழுத ஆரம்பித்தால் எழுதவே முடியாது. தொழிலே எழுத்தாகக்கொண்டவர்கள் சிலர் சிறுகுழந்தை மஹாராஜா அம்மணமாக இருந்தாலும் கைகொட்டி சிரிப்பதைப்போல அதிகாரத்திற்குமுன் அச்சம் தவிற்த்து எழுதுகிறார்கள்.

மற்றவர்கள் மனம் புண்படுமோ அதனால் என்னவோ இரு வாரங்களுக்கு முன்பு தமிழகத்தில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7பேர் பலியான செய்தியும் கருத்தும் யாரும் பகிரவேயில்லை. நாம் எழுதுகிற கருத்தால் சாதிப்பிரச்சனை வந்துவிடக்கூடாதே என்ற எச்சரிக்கை உணர்வு காரணமா? அல்லது நமக்கு நேர்ந்தால் அது துன்பம்,அதுவே பிறருக்கு நேர்ந்தால் வெறும் செய்தியாக பார்க்கிற மனோபாவமா எனதெரியவில்லை. உலகின் மற்ற பகுதிகளில் சிவிலியன்கள் பாதுகாப்புப்படையினரால் கொல்லப்படும்போது நாம் எதிர்ப்புணர்வும் வருத்தத்தையும் பகிர்கிறோம், இதோ நம் மாநிலத்தின் சகோதரரமக்கள் குண்டடியால் செத்து மடிந்ததை கண்டுகொள்ளாமல் செல்கிறோம். அந்த மரணத்தை கொண்டாடியவர்களையும் நான் வலைப்பூவில் பார்த்தேன். எப்பேர்ப்பட்ட மனிதர்கள்.

தென்மாவட்டங்களில் மட்டும் ஏன் இப்படி பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கும் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கும் ஒரு பகை நிலவுகிறது, எப்போதாவது அது வன்முறையாகவும் மாறுகிறது, கடைசியில் யார் மீது குற்றமிருந்தால் காவல்துறையின் குண்டுக்கு சாவது சாதியிலும், பொருளாதாரத்திலும் கடைசியிலுள்ள சேரிமக்கள். இந்த சாதிப்பூசல்கள் தொழில்ரீதியாகவும் நிலவுடமை காரணமாகவும் நீடித்துவருகிறது. தமிழகத்தின் வடமாவட்டங்களில் முதலாளித்துவத்தால் தொழிற்சாலைகள் பெருகின, அங்கே தொழிலுக்கு அமைதியும் இலாபமும் மட்டுமே தேவை.தென்மாவட்டங்களில் விவசாயம் மட்டுமெ அந்த மக்களின் வாழ்வாதாரம். அந்த நிலம் எல்லோருக்கும் இல்லை, நிலமில்லா கூலிகள் இருக்கிறார்கள். அவர்களில் அதிகமாக தலித்துகள் இருக்கிறார்கள். மற்றவர் நிலத்தில் சென்று உழைப்பை செலுத்தி அதில் வாழ்ந்தும், அவர்களை நம்பியும் வாழ்கிறார்கள். தொழிற்சாலை உடமையாளர்கள் `மனு`வின் எழுத்தை பரணில் போட்டுவிட்டமாதிரி நிலவுடமையாளர் களால் செய்யமுடியவில்லை. இன்னமும் மனுவை உயிர்பித்துக்கொண்டேயிருக்கிறார்கள்.

தென்மாவட்டங்களை விட நிலவுடமை இன்னும் அதிகமாக இருக்கும் கீழ்த்தஞ்சையிலும் நாகைமாவட்டங்களிலும் தீண்டாமையோ அல்லது சாதிமோதலை இல்லையென்றால், அங்கே சவுக்கடிக்கும் சாணிப்பாலுக்கும் எதிராக ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட்கட்சிகள் அந்த மக்களுக்கு ஆதரவாக நடத்திய போராட்டம்தான். இன்னமும் நமது நகராட்சிகளிலும் அரசின் துப்பரவு பணிகளிலும் `மாதிகா’க்களும் அருந்ததியினரும் தான் குப்பையள்ளும் வேலையை செய்கிறார்கள், அதை தனியார்மயமாக்கியபோது ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தது. ஏனென்றால் மற்றசாதியினரும் அந்த வேலையை செய்ய முன்வந்ததுதான். மற்றவேலைக்குத் தரும் ஊதியத்தைவிட அங்கே அதிகமாக ஊதியம் கொடுத்தால் அந்த “ சாதிக்கான வேலை ” என்பது எப்போதே ஒழிந்திருக்கும். நிலவுடமைச்சமூகத்தை விட முதலாளியம் முற்போக்கானது தான், மேல்சாதித் தெருக்களில் செருப்பணிந்து நடக்கமுடியாத மக்கள் பிரிட்டிஷ் விட்ட ரயிலில் டிக்கெட் எடுத்தால் சமதையாக அமரும் சுதந்திரம் கிடைத்தது. வள்ளுவன் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று எழுதியதை நாம் செம்மொழியின் அடையாளமாகக் கொண்டாடினாலும் இழிசினர் என்ற பதம் சங்ககாலம் தொட்டு தொடர்ந்து ஒட்டிக்கொண்டு வருகிறது.

இன்னமும் பல கிராமங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் இந்த தெருவில் நாம் செருப்பணிந்து செல்லலாமா, சைக்கிள் ஓட்டத் தகுதியான தெருவா, இந்தக்குளத்தில் குளிப்பற்கு அனுமதியிருக்கிறதா, இந்த ஆலயத்தில் வழிபாட்டு செய்வதற்கு தாங்களுக்கு உரிமை இருக்கிறதா இந்தப் பொதுக்கிணறு தாங்கள் பயன்படுத்த முடியுமா ஏன் செத்த பிறகு புதைக்கும் சுடுகாடும் நாம் பயன்படுத்துவதற்கு ஏற்றதா? என்று வாழ்ந்து வருகிறார்கள். இப்பயெல்லாம் யாருங்க சாதிவித்தியாசம் பார்க்கிறாங்க? என்ற கேள்வி அப்பாவித்தனமாக இருக்கிறது. கடந்த மாதத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் பேரளிகிராமத்தில் தலித்துகள் மேல்சாதித்தெருக்களில் சைக்கிள் ஓட்டமுடியவில்லை என்ற செய்தி செப்.3ம்தேதி ஹிந்து நாளிதழில் வந்தது.

தமிழகத்தில் உள்ளாட்சித்தேர்தல்கள் அறிவித்துள்ள சூழ்நிலையில் நாமெல்லாம் எந்தக்கட்சிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்று யோசித்துக்கொண்டிருக்கிற வேளயில் பாப்பாபட்டி,கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் என்ற பெயர் சொன்னாலே பொருள் விளங்கக்கூடிய கிராமங்களில் எதுக்கு இந்த தேர்தல் வந்து தொலைக்குது என்ற எண்ணம் பயத்தின் காரணமாக அந்த மக்களிடம் வருகிறது. 2006க்கு முன்பு பத்தாண்டுகளாக அந்த ஊராட்சிகளில் முறையாக தேர்தலே நடத்தமுடியாத சூழ்நிலை நிலவியது. அப்போதைய ஆட்சித்தலைவர் உதயச்சந்திரன் வெற்றிகரமாக நடத்திமுடித்தார். எந்த பிரிவினர் இந்த தேர்தலை நடத்த தடையாக இருக்கிறார்களோ அவர்களின் மனசாட்சியை தட்டியெழுப்பி தேர்தலை நடத்தினார். பாரதி தன்னுடைய சாதியின் மாண்பை தூக்கியெறிந்து மனுவின் நீதியை விமர்சித்து “சூத்திரனுக்கு ஒரு நீதி, தெண்டச்சோறுண்ணும் பார்ப்புக்கு ஒருநீதி” என்று சுயசாதி என்ற அபிமானத்தில் சிக்காமால் கலகம் செய்தான். அவன் வைத்த அக்னி நல்லது என்பதால் தானே, இந்த சமூகம் அவனை கொண்டாடுகிறது. தலித் களின் காவல்ர்கள் என்று சொல்லித்திரிவோர்களால் இந்த அவலம் நீங்கா, அந்தத் தலைவர்கள் அடுத்த தேசத்திலுள்ள தமிழர்களுக்கு குரல் கொடுத்தால் அவரை கொண்டாடும் சமூகம், உள்ளூர் தலித் களுக்காக போராடினால் தீய சக்தி என்று சொல்கிறது. சென்னையில் ‘நாம் தமிழர்’ என்று பேசிய தமிழன் சொந்த கிராமத்திற்குச் சென்று சாதிப்பெருமை பேசினான் .

தமிழனுக்கு கடாரம் கொண்டான் என்ற வீண்பெருமை வேண்டாம், ஏகாதிபத்தியத்தை அமெரிக்க்கா செய்தாலும் சோழனாகிய தமிழன் செய்தாலும் அது தவறு தான். நமக்கு அருகாமையில் நடந்த இனப்படுகொலையை கண்டித்து ஒரு சிங்களன் எழுதினான் நான் சிங்களனாக இருப்பதில் வெட்கமடைகிறேன் என்று. ஆதிக்கம் சாதிசெய்தால் என்ன மதம் செய்தால் என்ன மொழிசெய்தால் என்ன? சுயத்தை எதிர்த்து கலகம் செய்தால் எல்லாம் உடையும்.

வெள்ளி, 9 செப்டம்பர், 2011

கடவுளுக்கு காணிக்கையா? லஞ்சமா?

திருப்பதி தேவஸ்தான போர்டுக்கு காணிக்கையாக ‘சுரங்கப் புகழ்’ ரெட்டி சகோதரர்கள் அளித்த கீரிடத்தை திருப்பிக்கொடுக்க ஒரு வாரத்தில் தேவஸ்தானம் முடிவு செய்யும் என்ற செய்தி வந்துள்ளது. அந்த கீரிடத்தின் மதிப்பு ரூ45 கோடி, 2.5 அடி உயரமுள்ள அந்த கீரிடம் 30 கிலோ தங்கத்தாலும் 70,000 வைரக்கற்களாலும் செய்யப்பட்டு இரண்டு வருடத்திற்கு முன்பு பணக்காரக் கடவுளுக்கு காணிக்கை செய்துள்ளனர். இந்த ரெட்டி சகோதரர்கள் இந்த வருடத்தில் காளஹஸ்தி கோவிலுக்கும் ரூ 15கோடி மதிப்பிலான ஆபரணங்களை காணிக்கை செய்துள்ளனர். கோடிகோடியாக யாரால் காணிக்கை அளிக்க இயலும் என்பதை முன்பே தேவஸ்தானம் யோசிக்கவேண்டாமா? இப்படி முறைகேடாக சம்பாதித்தவர்கள் அளித்த காணிக்கையை திருப்பியளித்தால் கோவிலில் அசையாத சொத்துக்கள் தான் மீதமிருக்கும்.இந்தியாவின் இயற்கை வளத்தை அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி தனிச்சொத்தாக்கி சுற்றுச்சூழலை மாசுபடுத்தி கொள்ளையடித்து சேர்த்த பணம் தான். இந்தப் பணம் தான் கர்நாடக்த்தில் பாஜகவை ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டுவந்தது. இவர்கள் எத்தனை ஆண்டுகளாக சட்டத்திற்க்கு விரோதமாகவும் சுரங்கத்தொழிலில் ஈடுபட்டுவந்துள்ளனர். அரசியல் சதுரங்க விளையாட்டில் இன்று மாட்டிக்கொண்டவர்கள், இன்னும் எத்தனையோ எத்தன்கள் இயற்கை வளத்தை சூறையாடியவர்கள் கம்பிகளுக்குள் செல்லவேண்டியவர்கள் புனிதர்களாக இருக்கிறார்கள், சென்செக்ஸில் அவர்கள் நிறுவனத்தின் பங்குகள் உச்சத்தில் இருக்கும்வரை நம்முன் புனிதர்கள்தான். 2G விவகாரத்தில் தயாநிதியை குற்றமற்றவர் என்று வாசித்துவிடுவார்கள். அவர் சங்கத்தில் இருக்கிறாரோ என்னவோ? கடவுள் முன்பு இவர்களும் பக்தர்கள், இவர்கள் செய்யும் சட்டவிரோத தொழிலால் வாழ்க்கை இழந்த சாமான்யர்களும் பக்தர்கள், கடவுள் யார் பக்கம்? பாவம் கடவுள்.

புதன், 7 செப்டம்பர், 2011

நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே....

பல நேரங்களில் மனிதர்கள் மனிதன் என்ற நாகரீக அடையாளத்தை விட்டுவிட்டு சாதி, இனம் ,மொழி, மதத்திற்குள் அடைக்கலம் தேடுகிறார்கள். ஒரு விலங்கிடமிருந்து அதே விலங்கு பிறக்கிற மாதிரி தான் மனிதனிடமிருந்து ஒரு குழந்தை பிறக்கிறது. ஆனால் பிறந்தவுடன் தகப்பனின் சாதி, மதக் குறீயிடுகள் வந்துசேர்ந்துவிடுகின்றன. மற்ற உயிரினங்களிடமிருந்து மனித இனம் மேம்பாடு அடைந்தது என்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை, எந்த விலங்கு தன் இனத்தை சாதியின் பெயரால் அடிமைப்படுத்துகிறது, தன்னுடைய மலத்தை அதே விலங்கின் வாயில் திணிக்கிறது. விலங்குகள் பேசாத மொழி நமக்கு பேசத்தெரிந்திருந்தாலும் பேசுகிற மொழியால் பேதமும் சேர்ந்து வளர்ந்திருக்கிறது. 21ம் நூற்றாண்டில் மனிதர்கள் கண்டம் விட்டு கண்டம் சென்று வாழ்ந்து வந்தாலும், பசிஎன்பது வரும்போது நாயைவிட கேவலமாக மொழியின் பெயரால், சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் சகமனிதரை வெறுக்கிறோம்.

சென்ற நூற்றாண்டில் கொடுங்கோலன் ஹிட்லர் தனது நாட்டில் யூதஇனமக்கள் ஜெர்மானியர்களை விடமுன்னேறியது பொறுக்காமல் ‘நானூறு ஆண்டுகால பொய் புரட்டு மோசடிகளை எதிர்த்த என்னுடைய போராட்டம்’ என்ற புத்தகம் எழுதி யூதர்களுக்கு எதிராக ஜெர்மானியர்களிடம் துவேஷத்தை விதைத்து மிகப்பெரிய இனப்படுகொலை நிகழ்த்தினான். ஹிட்லர் மடிந்தாலும் அவனுடைய வாரிசுகள் உலகமெங்கும் பரவி இருக்கிறார்கள். அவர்களின் கையிலுள்ள ஆயுதம் மொழிவெறியாகவும், மதவெறியாகவும், இனவெறியாகவும் இருக்கலாம். ஆனால் கொண்ட கொள்கை ஒன்றுதான். ஒரு நாடு மற்றொரு நாட்டின்மீது வெறுப்புணர்வு தூண்டுகிறது, நாட்டிற்குள்ளேயே மாநிலங்களில் அடுத்த மாநில மக்கள் மீதான வெறுப்பு விதைக்கப்படுகிறது, ஒரே மாநிலத்திலேயே அடுத்த மாவட்ட மக்கள்மீதும், அடுத்தசாதியின் மீதும் வெறுப்புணர்வு தூண்டப்படுகிறது. மும்பையில் பால்தாக்கரே மொழிவெறி, மதவெறி பிரதேசவெறியையும் சேர்த்து விதைக்கிறான். விளைவு அன்று வரை ஒற்றுமையாய் இருந்த மக்கள் சண்டையிட்டு மாய்த்துக்கொள்கின்றனர். தமிழர்களால் மாராட்டியர்கள் பாதிக்கப்படுகிறோம், பிகாரிகளால் நமக்கு வேலைவாய்ப்பு குறைகிறது என்று தூவுகிறான்.அதைப் பார்த்துவிட்டு நாம் எல்லா மாரத்தியனும் பிறமொழி மக்களை வெறுப்பவனாகக் கொள்வது மடமை. தமிழர்கள் இந்தியாவில் எல்லாப் பிராந்தியத்திலும் வசிக்கிறார்கள், ஆனாலும் இங்கே மார்வாடிகளாலும், மலையாளிகளாலும், ஆரியர்களாலும் தமிழன் ஏமாற்றப்படுகிறான் என்ற விஷத்தை பரப்புகிற நாகரீக? மாக்களை நாம் பார்க்கிறோம்.

காவிரி நதிநீர்ப்பிரச்சனையா? சமூக அக்கறையுணர்வோடு மக்களுக்காக திரைப்படங்களை தயாரிக்காத இயக்குனர்கள், நடிகர்கள் போராடுகிறேன் என்று கன்னட மக்களுக்கெதிராக பேசுகிறார்கள். பெங்களூரிலுள்ள தமிழர்கள் வன்முறைக்குப் பயந்து எப்போதும் காவிரிப்படுகையில் நல்ல மழை பெய்யட்டும் என்று வேண்டிக்கொள்கிறார்கள். தமிழ்நாட்டில் பேசுகிற மொழிவெறிக்கு கிடைக்கிற முதல் அடி பெங்களூர் தமிழனுக்கு. எல்லா இடத்திலும் சிறுபான்மையினர் மொழிரீதியாகவும், இனரீதியாகவும், மதரீதியாகவும் சாதிரீதியாகவும் ஒரு அச்ச உணர்வுடனேயே வாழ்ந்துவருகிறார்கள். இலங்கையில் சிறுபான்மையினரான தமிழினத்திற்கு எதிராக நிகழ்த்தப்படுகிற இனப்படுகொலையும் இனவெறுப்பையும் பார்க்கிற நாம், இங்கேயும் அதே துவேஷத்தை வெறுப்பை மற்ற மொழியினர்மீதும், இனம் ஒன்றாலும் சாதி வேறுபாட்டால் தீண்டாமைக் கொடுமைக்கு உள்ளாக்குகிறோம்.

மலையாளிகள் மீதும் பரப்பப்பட்ட துவேஷம் என்பது அங்கே வாழ்கிற தமிழர்களை இவர்கள் பார்ப்பதில்லை. இவர்களையெல்லாம் துரத்திவிட்டால் ‘தமிழன்’ ஒற்றுமையாக வாழ்ந்துவிடுவானா? ஒரு மலையாளி இந்த குழும உறுப்பினராக இருந்தால் அவருடைய மனநிலை என்ன என்பதை வசை பாடுகிறவர்கள் யோசிக்கவேண்டும். எல்லா இனமும் எல்லா இடத்தில் பெரும்பான்மை இன சமூகத்தில் வாழ்ந்துவிடமுடியாது. பாலாற்றில் மணலை கனரக இயந்திரம் மூலமாக வாரியெடுத்து ஒரு நதியை ‘பாழாக்கியவன்’ தமிழன் தானே? காசுக்காக இங்கிருந்த மணல் கடல் தாண்டி விறப்னையாவது தெரியவில்லையா? இங்கே அந்த சமூகவிரோத செயலில் ஈடுபடுபவனின் பூர்வத்தை பார்க்கவில்லை,ஸ்டெர்லைட் என்ற நிறுவனம் காற்றிலும் கடலிலும் இலாப வேட்கையில் அமிலக்களை பரப்பும் போது அதை ‘மார்வாடி’ களின் சதி என்று பார்ப்பதில்லை. அது தனியார் நிறுவனக்களின் இலாப வேட்கையால் தோன்றும் விளைவுகள். மலையாளியை விமர்சிதாலே அது கம்யூனிஸ்ட்களை விமர்சிக்கிறோம் என்று நினைத்துக் கொள்கிறார்கள். இன்னமும் ஒருவர் ‘தமிழ் வெறி’யை எதிர்த்தால் அங்கே பூர்வம் தோண்டப்படுகிறது, நீ தெலுங்கன், அல்லது ஆரியன் நீ அப்படித்தான் பேசுவாய் என்கிறது. எல்லோருடைய பூர்வத்தையும் தோண்டிகொண்டே சென்றால் யாருமெ பூர்வகுடிகள் இல்லை. எல்லாமும் பிழைக்க வந்த கூட்டம்தான். வந்தவர்களிடம் கால அளவுகள் வேறுபடலாம். உலகத்தில் இல்லாத பேதங்கள் மொழியால், மதத்தால், சாதியால், நிறத்தால், உணவால் பேதங்கள் இருக்கின்றன, இந்த பேதங்கள் எப்போதும் நம்மை பிரித்தல் ஆகாது. பஞ்சபூதங்கள் எப்படி ஒன்றுக்கொன்று முரணாக இருந்தாலும் இந்த பிரபஞ்சம் அந்த முரண்பாட்டில்தான் இயங்குகிறது. சிறு கேடு ஏற்பட்டால் அது தான் சுனாமியாகவும், புயலாகவும், பூகம்பமாகவும் காட்டுகிறது. மனித சமூகத்திலும் இணக்கம் கெடும்போதெல்லாம் வன்முறை சிறிய அளவிலும் பெரிய அளவிலும் நடைபெறுவதை காண்கிறோம். நாம் இணக்கம் காணும் வேலையைச் செய்வோம். பேதங்களை ஒரு போதும் ஒழிக்கமுடியாது, இந்த வேற்றுமையில் ஒற்றுமை தான் நமது பலம் என்பதை தெரிவோம்.

ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

கூட்டுப்பொருளாதாரம்...

தினமணி ஆசிரியர் திரு.வைத்தியநாதன் ஒரு விழாவில் பேசியதைக்கேட்டேன், இந்தியாவிற்கு ஏற்றது “கூட்டுப்பொருளாதாரம்” தான் என்று பேசினார். எல்லாமே தனியார்மயமாக இருந்தால் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி நடக்கும் அப்புறம் மக்களின் பணத்தை ‘பெயில் அவுட்’ என்ற பெயரில் அரசு அவர்களுக்கு அளிக்கவேண்டிய நிலைமை வரும். மறுபுறத்தில் எல்லாமே அரசின் கட்டுப்பாட்டில் இருந்தால் சோவியத்துக்கு ஏற்பட்ட நிலை ஏற்பட்டுவிடும் என்று பேசினார். இந்தக் “கூட்டுப்பொருளாதாரம்” இந்தியாவிற்கு நல்லது தான் ஆனால் அரசியலில் ஆதிக்கம் செலுத்துகிற பெருமுதலாளிகள் அதற்கு அனுமதிப்பார்களா? என்பதற்கு இந்தியப்பொருளாதாரம் ஒரு சாட்சியாகவே இருக்கிறது. எல்லா அதிகாரத்தையும் தன்னிடம் குவித்துவைத்துள்ள ஒரு மத்திய அரசு ‘கார்ப்பரேட்டுகளின்’ நலனிற்காக பொதுத்துறை நிறுவனக்களை காவுகொடுப்பதை நாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். தினமணி ஆசிரியர் எழுதுகிற தலையங்கம் எல்லாம் சிறப்பாகத்தான் இருக்கிறது. பொதுதுறையை தனியார் மயமாக்கினால் அரசை விமர்சிக்கிறது. உலகமயமாக்கல் கொள்கையை இப்போது விமர்சிக்கிற அளவிற்கு அது அமல்படுத்தப்பட்ட போது விமர்சித்தார்களா? எந்த அரசியல் இயக்கங்களை அவர்கள் மறைமுகமாக ஆதரித்தார்கள்? மக்களை யாருக்காக அணிதிரட்டினார்கள் என்ற கேள்விகள் எழுகின்றன.

பணம் வைத்திருப்பவன் எப்போதுமே அதிகாரம் செலுத்துவதற்கு முயற்சிப்பான், என்பதற்கு கு.அழகிரிசாமி எழுதிய ‘இரு சகோதரர்கள்’ சிறுகதையை எஸ்.ரா சொல்லக்கேட்டேன். அக்கதையில் தம்பி சம்பாதித்து தனது அண்ணனின் குடும்பத்தையும் வாழவைக்கிறான். தன் அண்ணனே ஆனாலும் தன்னுடைய வருமானத்தை நம்பி வாழ்கிறவர்களை ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கிறான். சொத்துடைமை எப்போதுமே ஆதிக்கம் செலுத்துகிறது, மற்றவர்கள் மீது அதிகாரம் செலுத்துகிறது அது எளிய மனிதர்கள்மீதும், அரசு இயந்திரத்தின் மீதும் பெரும்பாலான அரசியல்வாதிகள் மீதும் அதிகாரம் செலுத்துகிறது. வளைகுடா நாடுகளில் எந்த குடும்பம் அதிகமாக சொத்துடையதாக இருக்கிறதோ அதுதான் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறது. நமது கிராமங்களில் ஆலயங்களில் சொத்துடையவர்களுக்குத்தான் பூரணகும்ப மரியாதை கிடைக்கிறது. அவர்கள் ஆதிக்கம் செய்வதை மற்றவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். ஒற்றை இலக்க எண்ணிக்கையில் இருக்கிற இந்தியாவின் பெரும் முதலாளிகள் இந்திய அரசின் நிர்வாகத்தின் மீதும், அரசியல்கட்சிகள் மீதும் அதிகாரம் செலுத்துவதை நாம் பார்த்துவருகிறோம்.

இந்தியாவிற்குத்தேவை பொதுத்துறையா, தனியார்துறையா என்பது ஒருபக்கம் இருக்கட்டும். விலைவாசியை அரசு எப்படி கட்டுப்படுத்துகிறது, தனியார் உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்கின்ற பொருளுக்கு வைக்கிற விலை அரசின் அதிகாரத்திற்கு உடபடுத்தப்பட்டிருக்கிறதா? அதிகமாக ஈட்டப்பட்ட ‘உபரி’ மதிப்பு தானே லாபம், அப்படி ஈட்டுகிற உபரிகளுக்கு அரசின் கொள்கை எவ்வளவு பாரபட்சமாக நடந்துகொள்கிறது என்பதை ஆராயவேண்டும். கடந்த மாதம் அன்னா ஹசாரே நடத்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் மிகவும் பிரபலமடைந்தது, அது அரசியல்வாதிகள், அதிகாரிகள் செய்கிற ஊழலை மட்டும் விமர்சித்தது ஊழலின் முக்கியமான பிறப்பிடம் பற்றியோ கார்ப்பரேட்டுகள் அதில் பலனடைந்தது பற்றியோ குறிப்பிடவில்லை. அப்படி அவர் போராடினால் இந்த கார்ப்பரேட் மீடியாக்கள் அவரின் போராட்டத்தை இருட்டடிப்பு செய்திருப்பார்கள். பத்திர்க்கையாளர் சாய்நாத் அன்னா ஹசாரே போராட்டத்தைப் பற்றி சொல்லும்போது, ராம்லீலா மைதானத்தில் கூடுபவர்கள் டாடா, அம்பானி, மிட்டல் போன்றோர்களின் பங்குகளை புறக்கணித்தால், கார்ப்பரேட்டுகள் ஈட்டிய கொள்ளையை திரும்பவும் அரசின் கஜானாவிற்கு கொண்டுவர கோரிக்கை வைத்தால் தானும் போராட்டத்தில் கல்ந்துகொள்வேன் என்றார். இங்கு Structural adjustments என்று சொல்லக்கூடிய திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டு ஒரு சிலர்கையில் செல்வம் குவிக்கச்செய்வதை அரசு ஊக்குவிக்கிறது. சமூகத்தில் யார் எவ்வளவு வரி கட்டவேண்டும் என்பதை பட்ஜெட் கலந்தாய்வில் பெரு முதலாளிகளின் ஆலோசனையைத்தான் அரசு கேட்கிறது. அவர்களுக்கு சிறப்பு ஊக்கமும் வரியில் தள்ளுபடியும் செய்கிறது. இப்படித்தானே சிறுவியாபாரிகளாக இருந்த அம்பானிகள் இன்று நாட்டில் முதல் பணக்காரன் அந்தஸ்து பெற்றது.

ஒருவருக்கு தெரியாமல் அவர் பொருளை பணத்தை பறிப்பது ‘திருட்டு’ என்கிறது சட்டம். ஆனால் பிறர் உழைப்பை திருடுகிறவர்கள் பற்றி சட்டம் ஒன்றும் சொல்லவில்லை. ஒரு வியாபாரி 100 ரூபாய்க்கு பொருளைவாங்கி 200 ரூபாய்க்கு விற்பனை செய்வதை இந்த சமூகம் ‘திறமை’ என்று அங்கீகரிக்கிறது. இது திருட்டு தானே. இப்படியே பிறர் உழைப்பில் வாழ்வதை சமுதாயம் அதை நியாயப்படுத்துகிறது.யார் அதிகமாக ‘உபரி’ யை ஈட்டுகிறார்களோ அவர்கள் அடுத்தவர்களின் உழைப்பை திருடுகிறார்கள். நடைபாதிக்கடையில் வாங்குகிற பொருளுக்கு பேரம் பேசும்கிற நாம் அலங்காரமாக கடைவைத்து நடத்துபவர்களிடம் வாங்குகிற பொருளுக்கு அவர் சொன்னவிலையை கொடுத்துவிட்டு வருகிறோம். சமூகம் எளியமனிதர்கள் மீது அதிகாரம் செய்வதற்கு கற்றுக்கொடுக்கிறது. நாம் எந்த ஒரு பொருளை வாங்கினாலும் அத்னுடைய உறபத்திவிலை தெரியவில்லை. ஒரு அரசுக்கு பொருள் உற்பத்தியாளர் அதன் மீது வைக்கிற லாபம், அதற்கு செய்கிற விளம்பரம் எல்லாம் தெரியவேண்டும். அதோடு கட்டுப்படுத்தும் அதிகாரம் இருக்கவேண்டும். அரசிடம் இன்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் அரசின் நிர்வாகத்தை தெரிந்து கொள்ளலாம், இது தனியார் நிறுவனக்களுக்கும் பொருந்தவேண்டும். இப்படி மக்கள் வாங்குகிற விற்கிற பொருட்களின் உற்பத்திவிலை விற்பனைவிலைக்கும் உள்ள இடைவெளி அல்லது சதவீதத்தை ஒரு அரசு கட்டுப்படுத்தினால் அப்போது ‘கூட்டுப்பொருளாதாரம்’ இந்தியாவில் சாத்தியமாகும்.

இந்த விவாதத்தை நம்முடையா மீடியாக்கள் மக்களிடம் கொண்டுசெல்வார்களா என்ன?

வெள்ளி, 2 செப்டம்பர், 2011

தாய்மொழியில் எழுதுங்கள்..


எந்த பாஷையானாலும் சொந்த பாஷையில் படி என்கிறார்கள் மொழி அறிஞர்கள். ஆனால் இப்போது இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் ஆங்கிலவழிக் கல்வியே பிரதானமாக இருக்கிறது. தாய் மொழியை இரண்டாம் மொழி, மூன்றாம் மொழிப் பாடமாகககூட பயில்வதற்கு தயங்குகிறார்கள். இன்று தமிழர்கள் பிறமொழிக் கல்ப்பில்லாமல் பேசமுடிவதில்லை. அந்த அளவிற்கு நம்மிடம் சொற்களுக்கு பஞ்சம் ஏற்பட்டுவிட்டது. ஒரு மொழியை நாம் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் மட்டுமே அதில் புதிய சொற்களை பயன்படுத்தமுடியும். நாம் பேசும் போது ஆங்கிலச்சொற்களை அதிகம் பயன்படுத்தினால் `மேலானவர்கள்` என்ற எண்ணம் இருப்பதாக நினைக்கிறார்கள். ஆங்கிலமொழி நம்மை ஆண்டதால் இன்னும் அதை ஆதிக்க மொழியாக அங்கீகரித்துள்ளோம். அதற்காக தமிழ் தான் மூச்சு என்று பிற மொழிகளை வெறுத்து ஒதுக்கவேண்டாம்.

அவரவர் மொழியில் முதலில் புலமை பெறவேண்டும், ஆங்கிலத்தில் தான் நாம் மருத்துவம், தொழில்நுட்பம், கணனி எல்லாமெ கற்கிறோம். சொந்த மொழியில் படித்தவர்கள் மிகச்சிறப்பாக விளங்குகிறார்கள் அதற்கு ஜப்பான்,சீனா பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் அவரவர் தாய்மொழியில் தான் எல்லாவற்றையும் படிக்கிறார்கள்,ஆனால் அவர்களின் இணைப்பு மொழி என்பது ஆங்கிலமாக உள்ளது. அதை ஒரு மொழிப்பாடமாகப் படிக்கிறார்கள். நாம் நம்து தேர்வில் தாய்மொழிக்கும் 35 மதிப்பெண் ஆங்கிலத்திற்கும் 35 மதிப்பெண் தேர்ச்சி மதிப்பெண் என வைத்திருப்பது நமது மொழிக்கொள்கையில் உள்ள குறைபாடு என ஒரு கல்வியாளர் சொல்கிறார். இன்று மொழிதான் `இனம்` என்பதை அங்கீகரிக்கிறது. நாம் தாய் மொழியை புறக்கணிக்கும்போது இனத்திலிருந்தே வெளியே சென்றுவிடுகிறோம் என்பது மட்டுமல்ல நாம் அடையாளமற்று போய்விடுகிறோம். இது தமிழர்களுக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் பொருந்தும். இதற்கு எளிய உதாரணம் தமிழகத்தில் தெலுங்கு, கன்னடம், செளராஷ்டிரம் பேசும் மக்கள் முன்பு மன்னர்கள் ஆட்சி காலத்தில் பிற பகுதிகளிலிருந்து தமிழக்த்தில் குடிவந்திருக்கிறார்கள். தாய்மொழியை அவர்கள் இன்றும் பேசிவந்தாலும் அவர்கள் மொழியில் அவர்களுக்கு எழுதும் பயிற்சியும் திறமையும் இல்லை. அவர்கள் அப்போதே அவர்களின் இனத்திலிருந்து அன்னியப்ப்ட்டுவிட்டார்கள்.

நம்மில் பெரும்பாலன நண்பர்கள் ஆங்கிலத்தில் தான் இந்த `பேஸ் புக்` கில் எழுதுகிறார்கள். நமக்கு பிறமொழி நண்பர்களும் குழுமத்தில் இருக்கிறார்கள். ஆனாலும் அவர்களுக்காக பொதுமொழியிலும் மற்றவை தமிழில் எழுதலாம். பலர் தமிழை ஆங்கில எழுத்தில் எழுதிவருகிறார்கள். தட்டச்சு செய்வதற்கு நமக்கு ஆங்கிலம் எளிதாக இருக்கலாம். ஆனால் தமிழ்மொழியை செம்மைப்படுத்துவதற்கு `ஆட்சியாள்ர்கள்` அல்லது அரசியல்வாதிகள் பார்த்துக்கொள்வார்கள் என்ற எண்ணம் நம்க்கு வேண்டாம். இந்தோனேசிய மக்கள் தங்கள் மொழியின் எழுத்துக்களைப் பயன்படுத்தி நான் பார்த்ததில்லை அவர்கள் ஆங்கில எழுத்துக்களை வழியாக தங்கள் மொழியை எழுதுகிறார்கள், பெரும்பாலோனோர் அவர்களின் எழுத்துருக்களை மறத்திருப்பார்கள். இந்த நிலை தமிழுக்கோ தமிழர்களுக்கொ வரவேண்டாம் என்பது அன்பனின் வேண்டுகோள்.