வியாழன், 21 பிப்ரவரி, 2013

மா பூமி -வீரத் தெலுங்கானாவைப்பற்றிய திரைப்படம்.

சமீபத்தில் தோழர்.காஸ்யபன் மா பூமி திரைப்படத்தைப்பற்றி அவருடைய வலைப்பூவில் எழுதியிருந்தார் அந்த திரைப்படம் தெலுங்கானா போராட்டம் பற்றியது. அந்த படம் காண ஆவல் ஏற்பட்டு ஆன் லைனில் (you tube ல் கிடைக்கிறது) பார்த்தேன். 1979ல் கவுதம் கோஷ் என்கிற வங்காளி இயக்கிய படம்.  அந்த படத்தை பார்க்கும் கீழ்த்தஞ்சை மாவட்டம் நினைவில் வந்துபொனது.

ஆந்திராவின் நலகொண்டா மாவட்டத்தில் ஸ்ரீபுரம் ராமையா ஒரு விவசாயத் தொழிலாளி, அவனுக்கு நிலமே இல்லை அவனுடைய அப்பா சொல்கிறார் என் தந்தை காலத்தில் கொஞ்சம் நிலமிருந்தது, எனது தாத்தா காலத்தில் அதைவிட அதிகமாக இருந்தது. நான் நிலத்தை தொலைத்துவிட்டென் உனக்காக சிறு காணி நிலம் கூட வைக்கமுடியவில்லை என்று மகனிடம் சொல்கிறார். அந்த நிலமெல்லாம் எங்கே போனது? இந்திய விடுதலைக்கு முன்னால் ஆந்திராவின் தெலுங்கானா பகுதியை ஹைதராபாத் நிஜாம் ஆண்டுவந்தார், நிலப்பிரபுத்துவ ஆட்சிமுறை நடைபெற்றது. நிலப்பிரபுக்கள் சிறுவிவசாயிகளிடம் வரிவசூல் செய்து நிஜாமுக்கு கப்பம் கட்டி அதில் அவர்களும் கொழுத்துவந்தார்கள். விளைச்சல் கிடைத்ததோ இல்லையோ வரி கட்டியாகவெண்டும், இல்லையென்றால் கசையடி கிடைக்கும், நிலத்தை அடமானம் வைக்கவெண்டும். இப்படி சிறுவிவசாயிகள் கூலித்தொழிலாளியாக மாறினார்கள்,வெற்றுப் பேப்பரில் கையெழுத்து வாங்கிவிடுவான். அந்த நிலப்புரபுக்கள் கிராமம தோறும் இருப்பார்கள் அவர்களுக்கு சேவை செய்ய அடியாட்கள் இருப்பார்கள். அடிக்கடி நிஜாமுக்கு நெருக்கமானவர்களை வரவழைத்து நிலப்பிரபு விருந்து கொடுப்பான் அதில் பலியாவது விவசாயிகள், பெண்களையும் மகளையும் மனைவியையும் ஆள் அனுப்பி தூக்கிவந்துவிடுவார்கள். மறுத்து எதுவும் செய்யமுடியாது.

தாயில்லாத ராமையா சிறுவனாக இருக்கும்போது தனது தந்தையோடு எப்போதும் இருப்பான், ஒரு நாள் நிலப்பிரபுவின் கங்கா’ணி ராமையாவின் தந்தையிடம் உன் பையன் வளர்ந்துவிட்டான், துரை வீட்டுக்கு மாடுமேய்க்க அனுப்பு என்கிறான். ராமியா தந்தையிடம் நான் போகமாட்டேன் என்கிறான், ஆனால் அவனுடைய தந்தை நீ அடிமைக்குப் பிறந்தவன் மறுப்பு சொல்லக்கூடாது என்று அறிவுறுத்தி அனுப்பிவைக்கிறான். இப்படி அந்த ஊரில் பள்ளிக்கூடம் என்ற ஒன்று கிடையாது, படிப்பது, நல்ல ஆடை அணிவது எல்லாம் நிலப்பிரபுக்கள் செல்வந்தர்களுக்கு மட்டுமே உள்ள உரிமை. ஊரில் திருவிழா காணுவதற்கு புத்தாடை அணிந்த ராமையா அப்பாவோடு செல்லும்போது கங்காணி ஏண்டா ஓன் பையன் மாடுமேய்க்க வரலை, சீக்கிரம் அனுப்பு என்கிறான். சிறுவன் ராமையா நான் வரமாட்டேன் போ என்று சொன்னவுடன் கங்காணிக்கு ஆத்திரம் வந்து சிறுவனை அவனுடைய தந்தைக்கு முன்பே அடித்து அவனுடைய புத்தாடையை கிழித்து எழிகிறான். துரையிடம் முறையிடுவென் என்று கங்கானி சொன்னவுடன் ராமையாவின் தந்தை அவன் காலில் விழுந்து நான் வருகிறேன் துரையிடம் புகார் சொல்லவேண்டாம் என்கிறான்.

அந்த நிலப்பிரபுவுக்கு 50000 ஏக்கர் நிலமிருக்கிறது, கிராமமே அவனுடைய கட்டுப்பாட்டில் சிறு விவசாயிகளின் நிலங்களை வரிவசூல் என்ற பெயரில் அபகரித்து நிலத்தை குவித்து வந்தான், நிஜாம் அரசாங்கத்தின் பல தூண்களில் இந்த நிலிப்பிரபுவும் ஒருதூணாக விளங்கினான். நிலப்பிரபு வெளியே சென்றால் இந்த அடிமைகள் அவனை நேருக்கு நேராக பார்க்கக்கூடாது, முதுகை வளைத்து தலை கவிழ்ந்து நிற்கவேண்டும் அது தான் மரியாதை வணக்கம் சொலவதற்கு பதிலாக `தெண்டம் வைக்கிறேன்` என்று தான் சொல்லவெண்டும். ராமையா வளர்ந்து இளைஞனாகிறான் பண்ணையடிமைகளில் ஒருவனாக கூலிவேலை செய்கிறான், அதற்கு சம்பளம் தானியம் கிடைக்கும். அவன் வயதை ஒத்த ராமுலு என்பவன் திருமணம் செய்து மனைவியை ஊருக்கு அழைத்துவருகிறான். அன்று நிஜாம் சர்க்காரின் தாசில்தாருக்கு நிலப்பிரபுவின் வீட்டில் விருந்து நடக்கிறது, அரசாங்க விருந்தாளிக்கு கங்காணியிடம் புது `பறவை` இருந்தா பிடிச்சிட்டு வா என்கிறான். கங்காணி ராமுலு வீட்டிற்கு சென்று அவனுடைய புது மனைவியை பலாத்காரமாக தூக்குவருகிறான் ராமுலுவால் அழுது புழம்பமுடியும் கெஞ்சமுடியும் வேறெதும் செய்யமுடியாது அது தான் அங்கு வழக்கம். ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் சொன்னமாதிரி `பாரதத்தில் ரேப்` என்பது கிடையாது, நிலப்பிரபுகளுக்கு அது உரிமை. 

சிறுவிவசாயிகள் நிலத்தில் வேலைசெய்துகொண்டிருக்கும்போது துரையின் ஆள் வந்து இடத்தை காலி பண்ணு, இது துரைக்கு சொந்தமாகிவிட்டது என்று பேப்பரை காமிக்கிறான், முடியாது என்று அந்த சிறுவிவசயி மறுக்கிறான். வலுக்கட்டயமாக அந்த் அடியாள் விவசாயியை தள்ளுகிறான் ராமையா அடியாளை  தீட்ரென்று ஆத்திரம் வந்து அடியாளை அடிக்கிறான், விவசாயிகளும் அவனோடு சேர்ந்து கொள்கிறார்கள். அன்றிரவு அவர்களுக்கு தூக்கம் வரவில்லை கூட்டம் போட்டு விவாதிக்கிறார்கள். நாம் இப்படியே இருக்கக்கூடாது எத்தனை நாளைக்கு பொறுத்துப்போவது என்று சங்கத்தைப் பற்றி விவாதிக்கிறார்கள். சங்கம் நம்மைக் காப்பாற்றும் சங்கத்தை நம் ஊரில் அமைக்கவேண்டும் என்று முடிவு செய்கிறார்கள். மறுநாள் ஆத்திரம் கொண்ட நிலப்பிரபு அடியாட்களை அனுப்பி அந்த விவசயியின் மகன்களை மொட்டையடித்து கழுதை மேல் ஊர்வலமாக ஊருக்குள் அழைத்துவந்து மற்ற விவசாயிகளை எச்சரிக்கிறான். ராமையாவிற்கு ஏற்கன்வே ஒரு பெண் மீது காதல் வந்துவிட்டது ஒரு நாள் அந்த பெண்வீட்டுக்கு அவளைத்தேடி போகிறான், அவளிடைய தந்தை டாக்டர்.ராமதாஸ் மாதிரி காதலுக்கு எதிரி கிடையாது, அடிமைகளுக்கு அதெல்லாம் தெரியாது கொஞ்சம் வெயிட் பண்ணு இப்ப வந்துருவா என்கிறார். அவள் வருகிறாள் ராமையாவைப் பார்த்து அவளுக்கு மகிழ்ச்சி ஏற்படவில்லை. ராமையா, எங்கே போனே? அவள், துரை வீட்டுக்கு... ஏன்?  துரை கூப்பிட்டு ஆள் அனுப்பிச்சார் போனேன், விசயம் அவனுக்கு புரிந்தது, அவள் மேல் ஆத்திரப்படுகிறான். அவள் அவனை சமாதானப்படுத்துகிறாள் நான் உன்னைதான் காதலிக்கிறென் என்னை நம்பு  இந்த ஊர் பெண்களுக்கெல்லாம் ஏற்பட்டகதி எனக்கும் ஏற்பட்டது என்று அவனிடம் சொல்கிறாள். அவன் அவள் காதலை உதறிவிட்டு ஊரே பிடிக்காமல் நகரம் சென்றுவிடுகிறான்.

நகரத்தில் அவன் வீட்டுவேலை, கைவண்டி இழுத்து பிழைக்கிறான், ஒருநாள் கைவண்டி இழுக்கும்போது அதிகமாக இருமுகிறான் வண்டியில் உட்கார்ந்திருந்த மனிதர் கீழே இறங்கி நான் நடந்துவருகிறென் என்று சீக்கிரம் டாக்டரிடம் செல் என்று அறிவுரை சொல்கிறார். அவனால் அடுத்த பல வாரங்களுக்கு கைவண்டி இழுக்கமுடியவில்லை. வெறு வேலைக்கு செல்கிறான் அது ஒரு பவுண்ட்ரி அங்கே தொழிற்சங்கம் இருக்கிறது சங்கத்தலைவர் ராமையாவிடம் நீ சங்கத்தில் சேர்ந்துவிட்டாயா என கேட்டார், இல்லை என்றான். சங்கத்தில் செர்ந்துகொள் சங்கம் உன்னை காப்பாற்றும் என்கிறார். எழுதப் படிக்கத் தெரியாத ராமையா தொழிற்சங்கத்தில் சேர்ந்து வாசிக்கக் கற்றுக்கொண்டான். மார்க்சியம் கற்கிறான். சக தொழிலாளியின் விபத்துமரணத்திற்கு நஷ்ட ஈடு கெட்டு போராட்டம் நடக்கிறது அதில் சிறை செல்கிறான். அங்கே அவனுடைய கிராமத்தவரை சிறையில் பார்க்கிறான். ராமையாவிடம் கிராமத்தில் சங்கம் வளர்ந்தவிதம் பின்னர் மக்களை  நிலப்பிரபு அடியாட்களையும் போலிஸையும் வைத்து அடித்து நொறுக்கியதையும் சொல்கிறான்.

ராமையா சிறையிலிருந்து வெளிவந்ததும் தொழிற்சங்கத்தலைவ்ரை அணுகி கிராமத்தின் நிலைமை சொல்லி நான் ஊருக்குப் போய் போராடும் விவசாயிகள் சங்கத்திற்கு உதவிசெய்யப்போகிறேன் என்று கிள்ம்புகிறான். ஊரில் அவன் கண்ட காட்சி அவனை அதிர்ச்சியாக்குகிறது. நிலப்பிரபு போலிஸையும் அடியாளையும் வைத்து பலரை கொன்றொழித்திருக்கிறான். மக்கள் தலைமறைவாக இருக்கிறார்கள் அவர்களை சந்தித்து போராட்டத்தை வலுப்படுத்துகிறான். செங்கொடி சங்கம் அடிமைகளை மனிதர்களாக மாற்றியது. விவசாயிகள் ஆயுதமேந்தி நிஜாம் அரசுக்கெதிராக போராடுகிறார்கள். நிலப்பிரபுகள் கிராமங்களிலிருந்து நகரத்தை நோக்கி ஓடுகிறார்கள். விவசாயிகளின் போராட்டக்குழு நிலப்பிரபுவின் மாளிகையிலிருந்து நிலப்பத்திரங்களையும் விவசாயிகளிடம் வாங்கிய வெற்றுப்பெப்பரில் கையிழெத்து வாங்கியதை தீயிட்டு கொளுத்துகிறார்கள், நிலம் விவசாயிகளுக்கு பங்கிடப்படுகிறது. இந்தியா சுதந்திரம் பெற்றது, நிஜாம் இந்திய யூனியனுடன் தன்னுடைய சமஸ்தானத்தை இணைக்க மறுக்கிறான். நேரு ராணுவத்தை அனுப்பி நிஜாமை வழிக்குக் கொண்டுவந்த கையோடு விவசாயிகளை அடித்து நொறுக்கி நிலங்களை மிண்டும் நிலப்பிரபுக்களின் வசம் கொண்டுபோகிறது, நிலப்பிரபுக்கள் காங்கிரசில் சேர்கிறார்கள். அன்றிலிருந்து இன்றுவரை காங்கிரஸ் கிராமப்புறங்களில் மிட்டா மிராசுகளின் கட்சியாகவும் நிலப்பிரபுக்களின் கட்சியாகவும் நகரங்களில் பெருமுதலாளிகளின் கட்சியாகவும் விளங்கிகிறது.

புதன், 20 பிப்ரவரி, 2013

நாட்டு நடப்பு

கடந்த ஒரு மாதத்திற்கும்மேலாக தினமும் குறைந்தது 12 மணினேரம் நிறுவனத்திலேயே இருக்கவேண்டியதிருந்ததால் செய்திகள் வாசிக்காமல், பதிவுலகத்திற்குள் செல்லாமல் ஒரு தீவுக்குள் இருப்பதை போன்று இருந்தேன். ஆனால் கடந்த மாதத்தில் செய்திகளில் பொருளாதார விவகாரங்கள் எதுவும் தலைகாட்டவில்லை, மாறாக சமூகத்தில் ஒருவித பதற்றம் நிலவியதாக நான் உணர்ந்தேன். விஸ்வரூபம் ஏற்படுத்திய சர்ச்சை அதை தடை செய்யவேண்டும், அந்த திரைப்படத்தை தமிழகத்தில் திரையிட அனுமதிக்கமாட்டோம் என்ற இஸ்லாமிய அமைப்புகளின் போராட்டம், விவாதங்களால் செய்திஊடகங்கள் மூச்சுத் திணறியது. வழக்கம்போல் சினிமாக்களில் தீவிரவாதம் என்றால இஸ்லாமியர்கள் தான் என்பதை மற்றவர்கள் சொல்வதைவிட கமல் சொலவது ஆழமானது, ஆனால் அந்த திரைப்படத்தை தடைசெய்யவெண்டும் அனுமதிக்கமாட்டோம் என்பது அதைவிட மோசமானது. அதன் மூலம் தமிழகத்தில் சாதாரண இந்துக்களை இந்துத்துவாவின் பக்கம் கொண்டுபோய் விட்டுவிட்டதோ என்று ஐயமுறவேண்டியதுள்ளது. பெரும்பான்மை, சிறுபான்மை என்ற பேதமில்லாமல் அடிப்படைவாதம் கொம்புசீவப்படுகிறது. ஹைதராபாத் இஸ்லாமிய அரசியல்வதி ஓவைசி யார் வீரமிக்கவர்கள் என்பதை காவல்துறையை சிலநிமிடம் விடுப்பு எடுக்கச்சொல்லிவிட்டு பார்க்கலாம் என்று பேசினார், அதற்கு ஒரு கூட்டம் கைதட்டுகிறது. அப்படியே மறுபக்கம் இந்துத்துவாவின் தொகாடியா வரலாற்று ஆதாரத்தோடு கங்கையில் யாருடைய இரத்தம் ஓடியது, குஜராத்தில் யார் கொல்லப்பட்டார்கள்? என்று வீரவசனம் பேசுகிறார், இதை அப்படியே வாக்குமுலமாக வைத்து அவர்கள் மேல் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். இரண்டு பக்கமும் மதவெறி பேச்சுக்கள் முதலில் சாம்பிராணி புகைபோல் பரவியது இப்போது விசைமூலம் வெளியேற்றப்படுகிற நீரைப்போல் வெளிப்படுகின்றன. மிகவும் அச்சமாக உள்ளது, இந்தியப் பிரிவினை ஏற்படுத்திய ரணம் இன்னும் ஆறவில்லை அதை கிளரிவிடுவதில் தான் அரசியல்.

மத்தியில் காங்கிரஸ் மிகபுத்திசாலித்தனமாக செயல்படுகிறது, அஜ்மல் கசாப், அப்சல் குரு வை இன்னும் தூக்கிலிடவில்லை என்ற பாஜகவின் அரசியலை முறியடித்ததன் மூலம் கொஞ்சம் இந்துத்துவா அபிமானிகளை தன்பக்கம் ஈர்த்துவிட்டது. தமிழகத்தில் ராஜீவ் கொலையாளிகளுக்கு உதவியவர்கள் என்பவர்களை தூக்கிலிட முயற்சிசெய்கிறபோது அவர்கள் தமிழர்கள் என்பதால் தமிழகத்தில் சட்டமன்றத்தில் தூக்குதண்டனைக்கு எதிராக தீர்மானம் போடுகிறோம், சிலநேரம் தூக்குதண்டனைக்கு எதிராக முற்போக்குவாதம் பேசுகிறோம் அதே நேரம் இஸ்லாமிய தீவிரவதிகளை தூக்கில்போடும்போது இனிப்பு கொடுத்து கொண்டாடுகிறோம், இந்துத்துவா தீவிரவாதிகள் சிலர் குண்டு வைத்தார்கள் அவர்களை தூக்கில்போட்டால் பெரும்பான்மை சமூகம் இனிப்பு கொடுக்குமா? சவுதியில் மதச்சட்டத்தின் பெயரால் மரணதண்டனை விதிப்பதை சிலசமயம் கண்ணுக்குக் கண் என்ற தண்டனையை வரவெற்கிற இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அப்சல் குரு தூக்கிலிடப்படும் போது மனித உரிமைவாதிகள் பக்கம் சேர்ந்துகொள்கிறார்கள். ஆனால் மனித உரிமை போராளிகள் தொடர்ந்து மரணதண்டனைக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டவர்கள் எந்த மதம், மொழி, இனம் நாடு என்பதை பார்க்காமல் சமர்செய்கிறார்கள் அவர்களில் வி.ஆர்.கிருஷ்ண்ய்யர் தமிகத்தில் மனுஷ்யபுத்திரன் முக்கியமானவர்கள் அவர்களை வாழ்த்துகிறேன்.