வெள்ளி, 20 செப்டம்பர், 2013

ஒற்றை வைக்கோல் புரட்சி - மசானபு ஃபுகாகோ

இயற்கை வேளாண்மை பற்றி இப்போது அதிகமாக பேசப்பட்டுவருகிறது, இதை பயன்படுத்தி ரசாயண உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், நாட்டு விதைகள் என பாரம்பரிய விவசாய முறையில் விளைந்த காய்கறிகள், பழங்கள, தானியங்கள் என அதையும் ஒரு வணிக நோக்கத்தில் அதிகவிலைக்கு விற்றுவருகிறார்கள். உண்மையாக ரசாயண உரம், பூச்சிமருந்து செலவில்லாமல் விதைத்து அறுவடை செய்யும் பயிருக்கு ஏன் அதிகவிலை என்று கேட்கலாம், சிலர் அந்த முறையில் விளைச்சல் குறைவு, பூச்சிகளால் பயிர் தாக்குறும்போது இன்னும் குறைந்துவிடுகிறது அதனால் அத்கவிலைக்கு விற்றால் தான் கட்டுபடியாகும் என்பது சிலர் வாதம், தற்போது வேதியல் உரங்கள், பூச்சிமருந்துகள் ப்யன்படுத்திவரும் விவசாயி கூட இயற்கை முறைக்கு மாறினால் விளைச்சல் அதிகமிராது என்றே எண்ணுகிறார். இந்த எண்ணத்தை தவிடுபொடியாக்கியவர் ஜப்பானில் இயற்கை வேளாண்மையை ஆய்வுசெய்து தன்னுடைய வாழ்க்கையை அதே விவசாயத்தில் செலவிட்ட மாசானபு ஃபுகாகோ அவர்கள்.

அவர் சொல்கிறார், “இயற்கை வேளாண்மை என்பது வேட்டையாடி உணவு சேகரித்த காலம் ஒன்றுதான் இயற்கை வேளாண்மைக்காலம். ஒரே இடத்தில் மனித சமூகம் தங்கி வாழ்க்கை நடத்துவதற்கு பயிர்கள் வளர்க்கப்பட்டது என்பது கலாச்சாரக் கண்டுபிடிப்பு”.அதற்கு அறிவும் தொடர்ச்சியான முயற்சியும் தேவைப்படுகிறது. ஃபுகாகோவின் முறையிலுள்ள முக்கியவேறுபாடு என்னவென்றால், அது இயற்கையோடு ஒத்துழைப்பதில் இருக்கிறது. இயற்கையை ஆக்ரமித்து அதை ‘மேம்படுத்து’ வதில் அல்ல. ஜப்பானில் யகோஹாமா நகரில் நுண்ணியிரிகள் நிபுனராக வாழ்க்கையைத் துவக்கினார், தாவர நோய்கள் குறித்த நிபுணராக உருவான அவர் ஒரு சோதனைச்ச்லையில் சில ஆண்டுகள் பணிசெய்துவிட்டு மீண்டும் தன்னுடைய கிராமத்திற்கே திரும்பினார். அப்போது அவர் தரிசு நிலத்தின் வழியாக சென்றபோது அங்கே நெற்பயிர்கள் நல்ல திரட்சியான தானியங்களோடு விளந்திருப்பதை பார்த்து அதிசயித்தார். ஒரு உழாத,உரமிடாத, பூச்சிமருந்து தெளிக்காத, களைபறிக்காத நிலத்தில் எப்படி பயிர் செழிப்பாக வளர்ந்ததைப் பார்த்தபின் அவருக்கு ‘எதையுமே செய்யாமல் விவசாயம் செய்யவேண்டும்’ என்ற ஆர்வம் ஏற்பட்டது, தன் தந்தை பார்த்துவந்த விவசாயத்தில் இவர் ஏற்பட்த்திய மாற்றங்கள் சில ஆண்டுகள் தொடர்ச்சியாக நஷ்டம் ஏற்பட்டதுண்டு. செய்முறைகளை மாற்றி மாற்றி அனுபவத்தில் கற்ற பாடம் நிலத்தை பாழ்படுத்தாமல் வேதியல் உரங்கல், பூச்சிக்கொல்லி மருந்துகள் என பயன்படுத்தி உற்பத்தி செய்த தானியங்களைவிட அதிக மகசூல் எடுத்தார்.



  மனிதர்கள் ‘அதிக உற்பத்தி’ அல்லது ‘அதிக தர’த்துக்காக உழைக்காமல், மனிதகுல நன்மைக்காக உழைகும்போது அவர்கள் உழைப்பு சிறந்து விளங்குகிறது. ஆனால் தொழில்மயப்படுத்தப்பட்ட வேளாணமையின் தாரக மந்திரமோ ‘அதிக உறப்த்தி’ யாக உள்ளது. ஃபுகாகோ மேலும் சொல்கிறார், “வேளாண்மையின் இறுதி லட்சியம் பயிர்களை வளர்ப்பதல்ல; மனிதர்களை வளர்த்து முழுமை பெறச்செய்வதுதான்” என்கிறார். 1975ம் ஆண்டில் அவர் எழுதிய one straw revoultion என்ற புத்தகம் எழுதியதைத் தொடர்ந்து ஜப்பானில் இயற்கை வேளாண்மை குறித்த ஆர்வம் வேகமாகப் பரவியுள்ளது.

இயற்கை வேளாண்மையின் நான்கு அடிப்படைகள்:

1. மண்பதப்படுத்துதல் : நாம் மண் பதப்படுத்துவதற்கு அதிகமாக உழுகிறோம், இது தேவையற்றது இயற்கை தானாக உழுதுகொள்ளும், அதாவது மண்ணிலுள்ள நுண்ணியிர்கள், தாவரவேர்கள் தரையில் நுழைதன் மூலம், சிறு விலங்குகள் மூலமும் நிலம் உழுதுகொள்ளும் நாம் ஆழமாக உழும்போது தேவையில்லாத களையின் விதைகள் பூமிக்குமேலெ வந்து களை அதிகமாக முளைத்து தொல்லைதரும். நிலத்தை தரைதெரியாமல் வைக்கோலை பரப்பிவைக்கவேண்டும் அது போதும் அது மண்ணில் மக்கிப்போவதுமல்லாது களைகளை கட்டுப்படுத்தும் என்கிறார்.

  2. உரங்கள் :வேதியல் உரங்களை இடுவதன் மூலம் மண்ணின்வாழும் நுண்ணியிர்கள் அழிக்கப்படுகின்றன, வைக்கோல், பசுந்தாழ், பறவியின் எச்சங்கள் ஆகியவற்றை உபயோகித்தே அதிக மகசூல் பெறமுடியும் என்கிறார்.

3. களைகள் : உழுவதை நிறுத்தும்போது களைகளும் குறைந்துவிடுகின்றன, தற்போது களைகளை ஒழிப்பதற்கு களைக்கொல்லிகள் (வேதியல்) பயன்படுத்திவருகிறார்கள், இதனால் மண்ணின் வளமும் நுண்ணியிர்களும் அழிக்கப்படுவதோடு மழைபெய்யும் நீரில் கலந்து அது நிலத்தடி நீரையும் மாசுபடுத்துகிறது. அறுவடை முடிந்ததும், வயல் முழுதும் வைக்கோல் போட்டுமூடினால் களைகள் முளைவது தடைபடும்பயிருடன் தீவனப்பயிர்களை விதைக்கும்போது நிலத்தை மூடிமறைப்பதால் அது களைகளை கட்டுப்படுத்துகிறது.

4. பூச்சிக்கட்டுப்பாடு: நிலத்தில் நீர்தேங்காமல் பார்த்துகொண்டாலே பூச்சிக்ளை ஒரு கட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம், நாம் ரசாயண பூச்சிக்கொல்லிகள் தெளிக்கும்போது பூச்சிகளின் ‘இரையினங்களையும்’ சேர்த்தே அழித்துவிடுகிறோம். இயற்கையாக பூச்சிகளை கட்டுபப்டுத்த இரையினக்கள் உண்டு. எலிகளை கட்டுப்படுத்த பாம்புகள் உள்ளதுபோன்று. இந்த ரசாயண பூச்சிக்கொல்லி மருந்துகள் செடிகளில் பத்து சதவீதமும் மீதம் நிலத்தில்தான் தெளிக்கப்படுகிறது அது நிலத்தடி நீரை மாசுபடுத்துவதோடு நுண்ணியிர்களையும் அழித்துவிடுகிறது.

  ஃபுகாகோ செல்லும் பாதை என்பது உலகம் செல்லும் பாதைக்கு நேரெதிரானது, அதனால் சொல்கிறார், “ நான் காலத்தால் பின்னடைந்துவிட்டதாக தோன்றக்கூடும். ஆனால் நான் சென்றுகொண்டிருக்கும் பாதைதான் அறிவுபூர்வமானது என்பதை நான் உறுதியாக நம்புகிறென்”. மேலும் ‘இயற்கையில் இருந்து மக்கள் எவ்வளவு தூரம் விலகி செல்கிறார்களோ, அவ்வளவுதூரம் அதன் மையத்திலிருந்து சுழற்றி எறியப்படுவார்கள். அதே சமயம் குவிமைய விசையால் இயற்கைக்குத்திரும்பும் ஆசை அவர்களுக்கு வருகிறது’ என்கிறார்.

வாணிபப்பயிர்களை விளைவிக்காதீர்கள் ,பொதுவாக வாணிப வேளாண்மை முன்கூட்டி கனிக்கமுடியாத ஒரு விசயமாகும் என்கிறார் ஃபுகாகோ.சமீபத்தில் பி.சாய்நாத் அவர்கள் பெங்களூரில் ஆற்றிய உரையில் இந்திய விவசாயிகள் கடந்த 15 ஆண்டுகளில் 2 லட்சத்துக்கும் மேல் தற்கொலை செய்துகொண்டார் அவர்கள் அனைவரும் பணப்பயிரான பருத்தி பயிரிட்டவர்கள். கேரளாவில் வயநாடு மாவட்டத்தில் ‘வெண்ணிலா’ பயிரிட்டவர்கள் விலை வீழ்ச்சிகாரணமாக கடன் சுமையில் தற்கொலை செய்துகொண்டார்கள். ஏனென்றால் வணிகப்பயிர்களின் சந்தை என்பது பன்னாட்டு,அல்லது பெருமுதலாளிகளின் கைகளில் சிக்குயுள்ளது. எந்த ஒரு விவசாய இடுபொருளான விதையோ, உரமோ, பூச்சிமருந்தோ விவசாயிகள் நலனோ, மக்கள் நலனோ கருத்தில் கொள்ளாமல் பணம் சம்பாதிப்பதன் நோக்கமும் ஏகபோக நோக்கமும் கொண்டதாக இருக்கிறது. இந்தியாவில் மரபணு மாற்றுப் பயிர்களை அனுமதிக்கூடாதென்று விவசாயிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், திரு.பாசுதேவ் ஆச்சார்யா தலைமையில் உள்ள பாராளுமன்ற நிலைக்குழுவும் அனுமதிக்கக்கூடாது என்று தெரிவித்தார்கள். ஆனால் வேளாண் அமைச்சரோ மான்சாண்டோவின் நலன்களுக்காக ‘ஒரு கார்ப்பரேட் ஆலோசோகர்’ ஒருவரை நியமித்து ஆய்வு செய்யச்சொன்னார். உச்சநீதிமன்றம் நியமித்த வல்லுநர்கள் குழுவும் அனுமதிக்கக்கூடாது என்றே பரிந்துரைத்தார்கள். இயற்கையாக விளையும் காய்கறிகள். பழங்கள் மனிதனுக்கு நோய் தருவதில்லை, செயற்கையான முறைகளில் வளர்க்கப்படும் பொருடகள் மனிதரளின் தேவைகளை தணித்தாலும் பக்கவிளைவ்கள் ஏற்படுத்தி வைட்டமின் மாத்திரைகள், மருந்துகள் இன்றிய்மையாததாகிவிடுகிறது. இது விவசாயிக்கும், நுகர்வோருக்கும் கஷ்டத்தை உண்டாக்குகிறது.

ஃபுகாகோ விளைவித்த காய்கறிகள், பழங்கள், தானியங்களை செயற்கைமுறை விவசாய உற்பத்தி விலையைவிட சந்தையில் குறைவாக விற்குமாறு கடைக்காரர்களை கேட்டுக்கொண்டார். ஏனென்றால் செலவீனமே இல்லாத முறையில் விளையும் பொருட்களை சந்தைவிலையில் ஏன் விற்கவேண்டும் என்கிறார்.

தமிழகத்தில் இயற்கை வேளாண்மை முறைக்காக நம்மாழ்வர் போன்றவர்கள் மாசானபு ஃபுகாகோ போன்று பணியாற்றுகிறார்கள். வேளாண்மையை கார்ப்பரேடுகளின் நலன்களுக்காக செய்யாமல் விவசாயிகள், நுகர்வோர் நலன்களுக்காக செய்யும் முறையை இப்புத்தகம் ஏற்படுத்தும் என்று நம்பலாம்.

நூல் வெளியீட்டுப்பதிப்பகம்
தமிழில் பூவுலகின் நண்பர்கள்
எதிர்வெளியீடு
பொள்ளாச்சி
 

கருத்துகள் இல்லை: