வியாழன், 29 நவம்பர், 2012

துளிர் - சிறுவர் அறிவியல் சஞ்சிகை


தமிழில் சிறுவர்களுக்காக அறிவியல் மாத இதழ் வருவதை ‘துளிர்’ இதழின் வெள்ளிவிழாவில் தான் அறிந்தேன். இன்னும் பெரும்பாலானவர்களுக்கு தெரியாமல் கூட இருக்கலாம். தமிழில் ஏராளமான சிற்றிதழ்கள் வெளிவருகின்றன, அவைகள் பெரும்பாலும் இலக்கிய இதழ்கள் தவிற தொழிற்சங்கம், மத நிறுவனக்கள் வெளியிடுகிற பத்திரிக்கைகள் வருகின்றன, சில சிற்றிதழ்களின் ஆயுள் ஒரு வருடம் கூட தாக்குப்பிடிக்காமல் நின்றுபோனது என்று அந்த துறையில் இருக்கிறவர்கள் சொல்கிறார்கள். பத்திரிக்கை நடத்துவது என்பது எளிதான் காரியமல்ல அதுவும் விளம்ப்ரம் பெறாமல் இலாப நோக்கு இல்லாமல் தன்னார்வமாக சேவை போல செய்கிறார்கள். அதில் ‘துளிர்’ மாத இதழ் 25 ஆண்டுகளாக நிதி நெருக்கடிகளை சந்தித்தபோதும் மாதம் தவறாமல் மாணவர்களிடம் அறிவியல் சிந்தனைகளை கொண்டுசெல்வற்காக நெடிய பயணம் செய்திருக்கிறார்கள். அதை ஏற்று நடத்துவது தமிழ்நாடு அறிவியல் இயக்கம். அவர்களுடைய சமூகமுன்னேற்றதிற்கான பணிக்கு  பாராட்டு என்று ஒரு வரியில் முடிக்கமுடியாது, தினமும் செய்திகளை வாசித்துவிட்டு எங்கும் ஊழல், லஞ்சம் அரசியல்வாதிகள் முதல் அதிகாரி, கடைநிலை அரசாங்க குமாஸ்தா வரை பழித்துவிட்டு தன்வேலை தானுண்டு என்பவர்கள் மத்தியில் அறிவியலை சமூகத்திர்கு கொண்டு செல்லவேண்டும், மக்கள் மூட நம்பிக்கைகளைலிருந்து விடுபடவெண்டும் என்று தங்களுடைய நேரத்தையும் வருமானத்தையும் சிந்தனையும் சமூகத்திற்கு செலவுசெய்கிறவர்களை ப் பார்க்கும்போது நாம் என்ன செய்தோம் என்ற குற்றவுணர்வு ஏற்படுகிறது.

ஒரு நண்பர் கொடுத்த மின்னஞ்சல் மூலம் ‘துளிர்’ ன் வெள்ளிவிழா ஆண்டு நிகழ்ச்சியை இணையம் மூலாமக பார்த்தேன். அந்த நாள் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக இந்திய அறிவியல் துறை (department of science govt of india) யின் இயக்குனர் முனைவர். இராமசாமி அவர்கள் நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார். அறிவியல் தேவையைக் குறித்தும் அவருடைய பால்யத்தை ஆசிரியர்களை நினைவு கூர்ந்தார். பள்ளிப்பருவத்திலேயே அறிவியல் ஆர்வம் ஏற்பட்டு அவருடைய ஆசிரியர்கள் கொடுத்த ஊக்கம், தன்னம்பிக்கை காரணமாக இன்றைக்கு விஞ்ஞானியாக இருக்கிறென் என்றார், இன்றைய சமூகத்தில் மத்தியதர வர்க்கம் தமத் பிள்ளைகள் விரைவில் வருமானம் ஈட்டக்கூடிய கல்வியை பெறவேண்டும் என்று தான் பார்க்கிறார்கள் அதனால் நகர்புறங்களிலிருந்து விஞ்ஞானிகள் கிடைக்கமாட்டர்கள் என்றார். 2025ம் ஆண்டில் இந்திய மக்களின் சராசரி வயது 29.5 இது இந்தியாவின் மனிதவளத்தை காட்டுகிறது, இதை வீணாக்குவதும் வளர்ச்சிக்கு பயன்படுத்துவதும் அரசின் கொள்கைகள் அல்லது ஆட்சியாளர்கள் கையில்தான். கி.பி.1750 உலகின் 45 சதமான பொருளாதார ப்லத்தை இந்தியாவும் சீனாவும் வைத்திருந்தது, ஐரோப்பாவில் ஏற்பட்ட தொழிற்புரட்சி நிலைமை த்லைகீழாக மாற்றிவிட்டது, யாரிடம் விஞ்ஞானம், தொழில்நுட்பம் இருக்கிறதோ அவர்கள் தான் உலகை ஆள்கிறார்கள், இந்திய அரசின் அறிவிய்லதுறை 'Inspire' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது, இதன் மூலம் அறிவியலில் சிறந்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குகிறார்கள், நாடு முழுதும் இருந்து சுமார் 3 லட்சம் மாணவர்கள் அந்த திட்டத்திற்க்காக ஒரு புராஜெக்ட் செய்திருக்கிறார்கள் சிறந்த பிராஜெக்ட் க்கு பரிசு உண்டு. அப்படி அனுப்பியதில் 1300 மாதிரிகள் தேர்ந்த்டுக்கப்பட்டு அதில் சுமார் 140 ப்ராஜெக்ட்கள் காப்புரிமை செய்வதற்கு அனுப்பட்டிருக்கிறதாம், எப்பேற்பட்ட திறன் நம் மாணவர்களிடம் இருக்கிறது. தேர்ந்துக்க்பபட்ட மாணவர்களில் கிராமப்புற மாணவர்களின் பங்கு அதிகம் அதிலும் பெண்களின் பங்கு மிக அதிகமாம்.  இதெல்லாம் நம்பிக்கை அளிக்கும் செய்திகளாக இருக்கிறது. ஆனால் அரசாங்கத்தில் உயர்கல்வி கற்ற ஒரு விஞ்ஞானியை இந்தியா தகுந்த மரியாதை கொடுத்து தக்கவைத்துக்கொள்கிறதா? என்பது கேள்விக்குறி!


விளம்பரம் இல்லாமல் ஒரு ஊடகம் கிடையாது, சிற்றிதழ்கள், சில அரசியல் தத்துவார்த்த இதழ்களைத் தவிர வெகுஜன் ஊடகங்கள் என்று சொல்லபடும் எல்லா ஊடகங்களும் வாசகர்களை நம்பி தொழில் நடத்தவில்லை, பல பத்தாண்டுகளுக்கு முன்பு தினமணி யின் ஆசிரியர் ஏ.என்.சிவராமன் சொன்னாராம், மூதாதையரின் செலவங்களை சிலர் சூதாடி அழித்தனர், சிலர் குடித்து அழித்தனர் நாங்கள் பத்திரிக்கை நடத்தி அழிக்கிறோம் என்றாராம். நிறைய சிற்றிதழ்களுக்கு ஆயுள் சந்தா கட்டியவர்கள் அது அதன் ஆயுள் அற்பமாக போவதைப் பார்த்திருக்கிறார்கள். துளிர் இதழில் கேள்வி பதிலாக வந்ததை தொகுத்து சிறு நூலாக எதனாலே? எதனாலே? என்ற நூலை அறிவியல் வெளியீடு வெளியிட்டிருந்தது. என்னிடம் இருந்த அந்த நூலை இந்த நிகழ்வுக்குப் பின்னர் தான் புரட்டிப்பார்த்தேன், அதிலிருந்த கேள்வி பதிலகள் சிறுவர்களுக்கு என்று ஒதுக்கமுடியாது, பெரும்பாலான கேள்விகளுக்கு விடை பெரியவர்களுக்கே தெரியவில்லை. அந்த இதழில் பணியாற்றி பின்பு வேறு பத்திரிக்கை, தொலைக்காட்சி ஊடகத்தில் பணியாற்றிய்வர்கள் பேசினார்கள். துளிர் 30000 பிரதிகள் அச்சிடப்படுகின்றன, பெரும்பாலும் ஆயுள்சந்தா உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நானும் இந்த ஆண்டு ஆயுள் சந்தா செலுத்தி வாங்கப்போகிறேன்,மாணவர்களுக்கு பரிசளிக்க புத்தகத்தைவிட சிறந்தது ஏதுமில்லை. மேன்மேலும் மக்களிடம் அறிவியல் சிந்தனைகளை எளிய தமிழில் கொண்டு செல்லும் துளிர் இதழுக்கும் அதன் ஆசிரியர் குழுவிற்கும் வாழ்த்துக்கள்.

வெள்ளி, 23 நவம்பர், 2012

வாழ்க்கைப் பயணம் - 2

மதம் என்பது மனிதர்களின் அந்தரங்கமானது பொதுவெளியில் , பணியிடங்கள், கல்விக்கூடங்கள் அலுவலகங்கள் என எல்லா இடத்திலும் எந்த கடவுளையும் வணங்கும் வழக்கத்தை நிறுவனமோ அரசோ அனுமதிக்கக்கூடாது, மனிதர்களும் அப்படியே நடந்து கொள்ளவேண்டும் என்பதை நான் விரும்புகிறேன். தைவானில் மக்கள் அப்படி நடந்திகொள்கிறார்கள் என்று அண்மையில் வாசித்தேன். ஆனால் யதார்த்தம் அப்படியில்லை மதச்சார்பற்ற இந்தியாவில் பெரும்பாலான அரசு அலுவலங்களில பெரும்பான்மை மதத்தின் கடவுளர்கள் சுவர்களில் அமர்ந்துவிடுகிறார்கள். ஒவ்வொரு தனியார் அல்லது நிறுவனத்திலும் வெள்ளிதோறும் கடவுள் வழிபாடு நடைபெறுகிறது. சாதாரண மனிதனின் பக்தியை மதவெறியாக்குகிற வலதுசாரி அரசியல் அதை பயன்படுத்திக்கொள்கிறது.

சாமியார்கள், அரசியல்வாதிகள், பெருமுதலாளிகள் கூட்டு என்பது இயற்கையானது, அதில் எங்கள் நிறுவனத்தின் உடமையாளரும் விதிவிலக்கல்ல.  ஐரோப்பாவில்  முதலாளித்துவம்   வளர்வதற்கு முன்பு மதகுருக்கள் (போப்) நிலப்பிரபுக்கள் கூட்டணி வைத்துக் கொள்வார்கள்.  சங்கராச்சாரியார்  எனக்குத் தெரிந்து ஆலைக்கு மூன்று முறை விஜயம்! செய்திருக்கிறார். அப்படி ஒருமுறை வந்திருந்தபோது எல்லோரையும் ஓரிடத்திற்கு அழைத்து அவரிடம் ஆசிர்வாதம் பெறுவதர்கு ஏற்பாடு செய்யப்பட்டது, அவரை சென்று வணங்கினார்கள் உடனே அவர் பிரசாதம் வழங்கினார். தொட்டால் தீட்டு என்பதை கடைபிடிக்கூடியவர். இந்த நிறுவனம் வியாபார போட்டியின் சதியால் முடக்கப்பட்டது ஆனால் சாமியார் கெட்ட ஆவி இருக்கிறதென்று சுற்றுச்சுவர் வழியே சென்று அதை விரட்டினார். மீண்டும் ஒரு முறை ஆலையில் கட்டப்பட்ட விநாயகர் ஆலய கும்பாபிசேகத்திற்கு வந்தார். சாமியார்கள் எல்லா அரசியல்வாதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள், அதே போல் பெரிய முதலாளிகளும் அவர்களிடம் செல்வார்கள். சில சமயங்களில் சமரசம், பதவி உயர்வு வாங்கித் தருவது போன்ற வேலைகளையெல்லாம் சாமியார்களை நாடினால் கிடைக்கும். இந்திய நாட்டின் எல்லா குடியரசுத்தலைவர்களும் விதிவிலக்காக கே..ஆர்.நாராயணன் காஞ்சிபுரம் வந்திருக்கிறார்கள். இஸ்லாமியரான அப்துல் கலாம் அவர்களும் அதில் ஒருவர். அப்துல் கலாம் அவர்கள் இந்தியாவின் சிறந்த குடியரசுத்தலைவர் எனவே அவரை மீண்டும் கொண்டுவரவேண்டும் என்று சிலர் வலைத்தளங்களில் எழுதினார்கள். ஆனால் அவர் சிறந்த மனிதர் அப்பளுக்கற்றவர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் அவருடைய கொள்கைகள் மக்களை பிரதிபலிப்பதில்லை. உதாரணம் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய மூலதனத்தை வரவேற்றார், மாணவர்கள் கனவு காணவேண்டும் என்று இந்தியா முழுதும் பள்ளி மாணவர்களிடையே பேசினார் அரசுப்பள்ளியைவிட மேல்தட்டு பிள்ளைகளிடம் பேசினார், அரசாங்கப் பள்ளிகளை இவர் நினைத்திருந்தால் தரம் உயர்த்தியிருக்க முடியும் ஆனால் தமிழக் அரசாங்கப் பள்ளிகளை பார்த்தால் மற்ற இந்தியாவின் அரசுப் பள்ளிகள் இதைவிட மோசம்தான். எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவார்,என்றாலும் “கடவுள்” பதவிகள் காலியாய் கிடப்பது எதனால்? கவலைக்குரிய விசயம்.

பொது இடங்களில் பக்தியை சிலர் அதிகமாகக் காட்டுவார்கள், அவர்களை பெரிய பதவியில் இருப்பவர்களுக்குப் பிடிக்கும். இறைவழிபாட்டோடு துதிபாடுகிற வாய்ப்புகளும் கிடைக்கும். அரசாங்க மந்திரிகள் அவர்கள் வீட்டு விஷேசத்திற்கு அரசு அதிகாரிக்ளை பயன்படுத்திக் கொள்வார்கள் மறுப்பு ஏதும் தெரிவ்க்கமுடியாது. அப்படியே ஒரு பெரிய மேலாளர் வீட்டு திருமணம் நடைபெற்றது, எங்கள் துறை மேலாளர் எங்களை OD யில் அந்த வேலைக்கு அனுப்பினார், சிலர் அதை கவுரகமாக்அ விரும்பி ஏற்றார்கள் சிலர் வெறுப்போடு செய்தார்கள். நானும் காஞ்சி கார்த்திகேயனும் டாக்டர். ராதாகிருஷ்ணன் சாலையிலிருந்த பெரிய மண்டபத்தில் விழாவிற்கு வருகிறவர்களை வரவேற்று பன்னீர் தெளிப்பது, இனிப்பு வழங்குவதில் இருந்தோம். அப்போது வருகிற முகம் தெரியாத மனிதர்களிடம் பிலிப்பினோ சேல்ஸ் கேர்ள் மாதிரி செய்ற்கையாக புன்னகை செய்யவேண்டும். கார்த்தி நன்றாக காமெடி செய்வான். அதே பெரிய மேலாளர் பணி ஓய்வில் சென்றார். அவருக்கு துறைசார்ந்த பரிசுப் பொருள் வழங்கவேண்டும் என்று எங்கள் மேலாளார் வசூலித்தார். நான் ஒரு பைசா தரமுடியாது என்று கைவிரித்தேன், சுப்ரமணி என்ற பொறியாளர் தம்பி நீ மட்டும் தரமா இருந்தா அது நல்லாயிருக்காது உன்மேல மேலாளர் கோபம் கொள்வார் என்றார். நான் பார்த்துக் கொள்கிறேன் என்றபோது சிலரும் என்னோடு பணம் கொடுக்கவில்லை. தனியார் துறையில் ஊழல் இல்லையென்று பலர் நம்புகிறார்கள், நிலைமை அப்படியில்லை. வாய்ய்பு கிடைக்கும்போது முடிந்தவரை பார்க்கிறார்கள் வடிவங்கள் மாறுகின்றன. அதிகமான இயந்திரங்கள் ஜெர்மனி மற்றும் மேலை நாடுகளிலிருந்து இறக்குமதியானது. அதற்கு Import duty செலுத்தவேண்டும், அரசாங்கம் ஒரு சலுகை அறிவித்தது அதாவது EPCG scheme அதன்படி இறக்குமதி செய்த இயந்திரங்களின் மதிப்பிற்கு நிங்கள் தயாரித்த பொருட்களை ஏற்றுமதிசெய்து கிடைப்பதில் பேலன்ஸ் செய்து கொள்ளலாம். இது ஒரு சலுகை.இப்படி எண்ணற்ற சலுகைகள் தொழிலபதிகளுக்கு கிடைக்கும். சாய்நாத் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார் வரிகள் சம்பந்தமாக கடந்த 8 ஆண்டுகளில் கார்ப்பரேடுகளுக்கு தள்ளுபடி செய்த பணம் 25.7 இலட்சம் கோடி தலைசுற்றுகிறதா? 2ஜி எல்லாம் சாதாரணம்.
ttp://www.thehindu.com/opinion/columns/sainath/to-fix-bpl-nix-cpl/article3223573.ece . அதைப்பற்றியெல்லாம் பொதுமக்கள் பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்காது, ஆனால் விவசாயிகள் வாங்கிய கடன், ரேசனுக்கு தெண்டமாக மானியம், எரிபொருள் மானியம் எல்பிஜி மானியம் என ஏகப்பட்ட புளுகுகளை அவிழ்த்துவிடுவார்கள்,இந்த பத்திரிக்கைகள் அதற்கு தகுந்தமாதிரி எழுதுவார்கள்.

இப்படி நம் ஒருவர் நண்பர் கஸ்டம்ஸ் கிளியன்ரன்ஸ் க்காக செல்வார், வெகுநாட்கள் அவர் கம்பெனியைவிட clearing agent office அமைந்துள்ள secondlane beach தெருவில் அதிகம் இருப்பார். நானும் போர்ட் டிரஸ்ட், அந்த்  கஸ்டம்ஸ் கிளியரிங் ஏஜெண்ட் அலுவலத்திற்கு சென்றிருக்கிறேன். அந்த ஏரியாவில் உயர்தர சைவ, அசைவ ஹோட்டல்கள் அதிகம். எங்கெல்லாம் ல்ஞ்சப்பணம் அதிகமாக புரள்கிறதோ அங்கே இப்படி செலவுசெய்ய இடங்கள் இருக்கும், என் நண்பர் ஆங்கிலம் நுனிநாக்கில் பேசுவான் அதனால அவனுக்கு ஏற்ற வேலையாக மாறியது.  ஒரு நிறுவனம் கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்கு வழங்கும் காணிக்கையை எப்படி கணக்கில் எழுதுவார்கள்? என்று தெரியவில்லை. miscelineous??? நாட்டில் எங்கும் லஞ்சம், ஊழல் என்று பொதுமக்கள் நானும் தான் பேசுவோம்! ஆனால் ஏசுநாதர் எவனொருவன் தவறு செய்யவில்லையோ  அவன் இந்த வேசியின் மீது கல்லெறியலாம் என்று கொடுத்த கல்லை பத்திரமாக மேல் பாக்கெட்டில் வைத்திருக்கிறோம். சிறிய கல் பெரிய கல் என்ற வித்தியாசம் இருக்கிறது ஆனால் எறிய முடியவில்லை!!

தொழிலதிபர்கள் தங்களுக்கு வெண்டியவர்களை மத்தியில் அமைச்சர்கள் ஆக்குவார்கள், அப்படி ஒரு வாய்ப்பு ஜெவுக்கு கிடைத்து வாழ்ப்பாடியார் பெட்ரோலியத்துறை இலாகாவில் அமர்ந்தார். அவராலும் தூக்கி நிறுத்தமுடியவில்லை. இப்படி எத்தனை நாட்கள்தான் சம்பளம் என்ற வகையில் தெண்டச் செலவு செய்வது? இடையில் டெக்னீசியன்களை, பொறியாளர்களை வாடகைக்கு விடுவது அதன் மூலம் அவர்களுக்கு அனுபவம் கிடைக்கும் கம்பெனிக்கு கொஜ்சம் வருமானம் கிடைக்கும். அப்படி ஹால்டியா பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்திற்கு ஒரு படை கிளம்பியது நானும் ஒருவன். அவர்களுக்கு அனுபவம் கிடைக்கும் கம்பெனிக்கு கொஜ்சம் வருமானம் கிடைக்கும். அப்படி ஹால்டியா பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்திற்கு ஒரு படை கிளம்பியது நானும் ஒருவன். தலைமேல் கத்தி தொங்கிக் கொண்டிருந்தது அது அறுந்து விழபோவதை அறிவித்தார்கள், வேறு வேலை தேடிக்கொள்ளுங்கள் என்ற வாய்ப்பை சொன்னார்கள். பலர் அப்போதே நல்ல வேலைக்கு சென்றார்கள். முயற்சி செய்து கிடைக்காதவர்கள், எதிர்காலத்தை எண்ணி புலம்பியவர்கள் இரவில் தூக்கமின்றி வாடியவர்கள் என பலர் இருந்தார்கள். அந்த கத்தி விழுந்த நாள் 31-12-2001.


 

வியாழன், 22 நவம்பர், 2012

வாழ்க்கைப் பயணம் -1


அப்போது 1996ம் ஆண்டு சென்னையில் பெருமழை பெய்தால் தாங்காது, வியாசர்பாடி பாலத்தில் இருசக்கர வாகனங்கள் செல்லமுடியாது மீன்பாடி வண்டிக்காரர்கள் தான் டூ வீலரை அக்கரை சேர்ப்பார்கள். அது பணம் பண்னுவதற்கு ஒரு வாய்ப்பு, சேவையும் கூட. நாங்கள் வேலை செய்த ப்ராஜெக்ட் பகுதியும் அப்படித்தான், செங்குன்றத்தில் புழல் ஏரியில் அதிகப்படியான நீரை திறந்துவிட்டால் ஆண்டார்குப்பத்தில் மார்பளவு நீர் தேங்கும். அப்படி இருமுறை மழைபெய்தது. காலையில் வேலைக்கு வருவதற்காக புறப்பட்டவர்கள் பஸ் காண்ட்ராக்டர்கள் இயக்கமுடியாது என்று மீண்டும் வீட்டிற்கே திருப்பினார்கள். அப்படி ஒரு சமயம் இரண்டுபேர் sincere ஆசாமிகள் மின் துறையைச் சேர்ந்தவர்கள் மார்பளவு நீரில் ஆண்டார் குப்பத்திலிருந்து கம்பெனிக்கு நடந்துசென்று பணியாற்றினார்கள். warehouse எங்கும் தண்ணீர் தேங்கியிருக்கும், டெக்ஸ்டைல்ஸ் மெஷின்கள் இருக்கிற மரப்பெட்டிகள் நனைந்துவிடாமல் இருக்க தார்பாலின் போடுவோம். ஸ்டோர்ஸ் கட்டிடத்தை யார் முதலில் வருகிறார்களோ அவர்கள் கேட்டில் சாவியும் சட்டர் கீயும் வாங்கி திறப்பார்கள், அந்த நாள் நம்ம ரெணுகுமார் காலை உணவை கேண்டீனில் சாப்பிட்டுவிட்டு வண்டியில் வந்திறங்கினான், அங்கே மேலாளர் ஸ்டோர்ஸ் திறக்காமல் வெளியில் நின்றிருந்தார். ரேணு போய் கீ வாங்கிட்டு வாங்கோ என்றார் மேலாளர். அதே வண்டியை மடக்கிக்கொண்டு சென்றான். நான், கார்த்தி, கோவிந்த், ராமசந்திரன் ,சுரேஷ் ஆகியோர் ஸ்டோர்ஸ் நோக்கி நடந்து வந்துகொண்டிருந்தோம். எங்கள் எதிரே ரேணுகுமார் வண்டியில் சென்றார். நாங்கள் செல்லும்வரை மேலாளர் வெள்யேதான் நின்றிருந்தார், ரெணுகுமார் வரவில்லை. நாங்களும் காத்திருந்தோம். வந்தான் ரேணு கையில் டீ கேண் அவனுடன் கேண்டீன் பையன்!!

என்னடா 9 மணிக்கு வரவேண்டிய டீ 8:15 க்கு வந்துவிட்டதெ என்று பார்த்தால் கீ வாங்குவதர்கு பதிலாக டீ வாங்கி வந்தான் ரேணு. மேலாளருக்கு வந்த கோபம் அப்படி. எல்லோரையும் லெப்ட் அண்ட் ரைட் வாங்கினார்.  ரேணுகுமார் அப்படி நிறைய தமாஸ் பண்ணுவார். விதண்டாவாதம் செய்வார். ஒருமுறை சுப்பையாவுடன் பல் ஆஸ்பத்திரிக்குச் சென்றான் பல்லை சுத்தம் செய்துவிட்டு சுப்பையா பணம் கொடுத்துரு என்றான். அதை திரும்ப வாங்கவேமுடியவில்லை. அவரை பேசவிட்டு வேடிக்கை பார்ப்பார்கள்.

மாதாவரம் ஒரு கிராமம் அங்கே மாம்பழசீசன் வந்துவிட்டால் ரோடே நாறிவிடும். கடைக்காரர்கள் அழுகிய பழங்களை சாலையில்தான் எரிவார்கள். மாதாவரம் சாராயத்திற்கு பேர்போனது, பேருந்தில் அங்கே வந்து குடித்துவிட்டு பஸ்ஸில் நடத்துனரிடம் சண்டை போடுவார்கள். பெருத்த அநியாயம் செய்வார்கள். மாதாவரம் பால்பண்ணை அங்கே தான் மணலி பகுதியில் வேலைசெய்வோர் சொந்தமாக வீடுகட்டி வசித்தார்கள். காற்றோட்டமான நல்ல பகுதி அது. பாரதியார் தெருவிற்கு குடிவருவதற்கு முன்பே மாரியம்மன் கோவில்தெருவில் ஒரு வீட்டில் அதே நண்பர்கள் குழாம் இருந்தோம். வீட்டுக்காரருக்கு பணம் மட்டுமே, மனித உறவுகள்பற்றி கவலையே கிடையாது. நமது வீட்டிற்கு யாராவது விருந்தாளி வந்தால் அவர்களிடமே எப்போது செல்வீர்கள் என்று கேட்பான். அப்படியொரு கழிசடை. வாடகை வீட்டில் வாழ்ந்தால் இப்படி நிறைய அவமானங்கள் சகிக்கவேண்டும். அப்போது ஐந்து பேர் சேர்ந்து ஒரு பிலிப்ஸ் ரேடியோ வாங்கினோம், பண்பலை துவங்கிய நேரம். அப்போது ஒருத்தர் ரேடியோவில் பேசுவார் கனீரென்று இருக்கும் அவர் குரல். செளந்தருக்கு அவருடைய குரல் ரெம்ப பிடிக்கும். எல்லாரும் உறங்கிய பின்னரும் நான் ரேடியோ கேட்பேன், ஏ போதும்டா ஆப் பண்ணு என்பர்கள், ம் சரி என்று தூங்கிவிட்டால் காலையில் பேட்டரி தீர்ந்து கொர் என்று சவுண்ட் வரும்.

அப்பொது மாலையில் டீக்கடையில் தான் டீ சாப்பிடுவோம், யார் பணம் தருவது என்ற பிரச்ச்னை எங்களுக்கு இருக்காது. எல்லாம் பொதுதான். நாந்தான் நிதிமந்திரி. சினிமாவா, ஹோட்டலா, திநகர் செல்கிறோமா, பஸ்டிக்கெட் எல்லாமே பொதுக்கணக்கில்தான் யாரும் நட்டமடையவெண்டாம் என்ற ஏற்பாடு. நாங்கள் மாத பட்ஜெட் போடுவோம், சிலர் சாப்பாட்டுக் கணக்கை தினசரி போடுவதாக கேள்விப்பட்டோம். மாதவரத்தில் நல்ல ஹோட்டலே கிடையாது. ரோட்டொரத்தில் இஸ்லாமியர் ஒருவர் இட்லிக்கடை போட்டிருந்தார், பாய்கடை என்போம். அவர் சதா வேலைசெய்து கொண்டேயிருப்பார். ஐந்துவேலை தொழுகை செய்வதற்கு அவருக்கு நேரமில்லை. ரம்ஜான் மட்டும் ஒருநாள் கடைக்கு லீவுவிடுவார். கடைசிவரை மண்ணெணெய் அடுப்பு பயன்படுத்தினார். நாங்கள் கேட்போம் என்ன பாய் கொஞ்சம் கடையை சரிபண்ணுங்க..முடியல தம்பி என்பார். காலையில் அங்கே விடுமுறையில் மட்டும் சாப்பிடுவோம் அல்லது பூரி பார்சல், இரவு சாப்பிட்டால் கண்டிப்பாக ஆம்லெட், அந்த சூடான் ஆம்லெட்டை கையால் எடுத்துப்போடுவார், வேலை, வேலை தவிர வெறு எதுவும் செய்யமாட்டார். பீடி குடிப்பார் அதுவும் மத்தியான நேரத்தில் காய்கறி வெட்டும்போதும் சாம்பார் வைக்கும்போதும். நல்ல ஹோட்டலில் சாப்பிடவேண்டுமென்றால் பெரம்பூர் செல்லவெண்டும். மாதவரத்தில் நான்கு முறை வீடுகள் மாறியிருக்கிறோம். இரண்டாவது வீடுதான் பாரதியார் தெரு வீட்டின் எதிரெ சலூன் கடை , அந்த  கடைக்காரர் பாதிநாட்கள் நாதஸ்வரம் வாசிக்கப்போவார். என்னிடம் வாங்கிய ஒரு ஐம்பது ரூபாயை திரும்பி தரவேயில்லை. நான் கேட்டுப்பார்த்தேன், தரேன் என்பார் அவ்வாள்வுதான். முடிவேட்டி அப்படியே கழித்துவிடலாமா? என்று கூட யோசிப்பேன் அது முறையல்ல என்று ஏமாந்துபோனேன்.ஏற்கனவே நமக்கு ஏறுநெத்தி!

அங்கேயிருந்த சமயம் செளந்தர் செளதிஅரேபியா சென்றான், ராஜா கும்முடிப்பூண்டி சென்றதால் வேறு தெருவில் சிறியவீட்டில் நானும் ஞானசேகரும் தொடர்ந்தோம். அந்த வீட்டுக்காரர் நல்ல மனிதர், பெரியார் கொள்கைவாதி. நன்றாகப் பேசுவார். அப்போது மாதவரம் நூலகத்தில் உறுப்பினரானேன் பொழுதுபோக்குக்காக படித்த நூலகள் என்னை மாற்றின. குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால் அது பொன்னீலன் எழுதிய புதிய தரிசனங்கள் என்ற நாவல். இடதுசாரி அரசியல் பற்றி பேசியது. நூலகத்திற்கு வரும் சில பத்திரிக்கைகள் கடைகளில் விற்காது, அப்படிப்பட்ட இலக்கிய இதழ்கள் அங்கே வரும். நாள் தவறாமல் கொவிலுக்கு சென்றவனை கடவுள் பற்றிய கேள்வி எழுப்ப அறைகூவல் விட்டது அந்த நூல்கள். பெரம்பூரில் பெரியார் இயக்கத்தினர் வாகனங்களில் புத்தகக் கண்காட்சி நடத்துவார்கள். கடவுள்கள், தெய்வ சக்தி பற்றி எல்லாம் விஞ்ஞானப்பூர்வமாக விளக்குவார்கள் அவர்கள் விற்கும் புத்தகம் 1 ரூ, 2 ரூபாயில் கிடைக்கும். நாத்திகம் நோக்கி மெதுவாக சென்றுகொண்டிருந்தேன். வழிபட்ட கடவுள்கள்  கேள்விக்குள்ளானார்கள். அரசியல் பற்றி விவாதிக்கும் ஆர்வம் ஈர்த்தது, நேர்மையான அரசியல்வாதிகள் யார், படோபடம் இல்லாத அரசியல்வாதிகள் யார் என்ற தேடலில் அது என்னை 52, குக்ஸ்சாலை, பெரம்பூர் என்ற விலாசத்தில் கொண்டுபோய் சேர்த்தது.

வாழ்க்கைப் பயணத்தில் சென்னை...சென்னை எல்லோரையும் வாழவைக்கும், தினந்தோறும் தமிழகத்தின் பல திசைகளிலிருந்து ஏராளமான பேருந்துகளிலும் ரயில்களிலும் மக்கள் சென்னையை நோக்கி வேலை தேடி சென்று கொண்டெயிருக்கிறார்கள். அப்படியே அரசாங்கமும் தமிழகத்தின் பட்ஜெட் பணத்தை பாதியை சென்னைக்கு ஒதுக்குகிறது , பன்னாட்டு தொழில்களும் அங்கே நிறுவதற்குத்தான் துணிகிறார்கள். அப்படித்தான் SPC என்ற நிறுவனம் மணலிக்கு அடுத்தே அமைந்தது. எங்களை பேட்ச் வாயிலாக வேலைக்கு எடுத்தார்கள், அதுவும ஒரேஒரு பேட்ச் தான். அதற்குள்ளே சங்கு சத்தம் கேட்டுவிட்டது. மொத்தம் 96 பேர் அன்று நினைவு , அது புரொடக்சன் மற்றும் மெயிண்டனென்ஸ் என இரு பிரிவுகள். முதல் ஆறு மாதம் பயிற்சி தூத்துக்குடியில் தாய் நிறுவனமான ஸ்பிக் உரத்தொழிற்சாலையில் தொடங்கியது. அது பசுமையான நினைவுகள். அந்த நகர் எங்குமே பசுமைதான். வெளியே வந்தால் வெயிலில் கண் கூசும் அளவிற்கு உப்பளம். மூன்று மாதப்பயிற்சி வகுப்பறைகளில் நடக்கும், அங்கே பயிற்சியளிப்பவர்கள் அந்த நிறுவந்த்தில் அந்தந்த துறைகளில்பணியாற்றியவர்கள். அனுபவம் மிக்கவர்கள். பயிற்று மொழி ஆங்கிலம், அந்த குளிரூட்டப்பட்ட அறைகளில் உட்கார்ந்தவுடன் அப்படி ஒரு தூக்கம் வரும் சொல்கிற விசயம் புரிந்தால் தூக்கம் வராது. அங்கே தரப்படும் பயிற்சி குறிப்புகளை சுண்டல் என்போம். அதை இன்னும் பாதுகாத்துவருகிற நண்பர்கள் இருக்கிறார்கள்.

இந்தியாவின் தரமான நிறுவன பயிற்சிக்கூடமாக ஸ்பிக் ட்ரெய்னிங் செண்டர் இருந்தது ஒருகாலம். இப்போது என்ன நிலையோ. வட இந்தியாவின் உரத்தொழிற்சாலையிலிருந்து பயிற்சிக்காக இங்கே வருவார்கள் அப்படிப்பட்ட வசதிகள் கொண்டது. காலமாற்றத்தில் ஒவ்வொன்றும் மாற்றம் அடையவேண்டும் இல்லையென்றால் வெற்றியடையாது. இந்திய உரத்தொழிற்சாலைகள் எல்லாம் நாப்தா என்ற மூலப்பொருளிலிருந்து இயற்கை எரிவாயுக்கு மாறினார்கள். இங்கே இயறகை எரிவாயுக்கு மாற்றப்படவில்லை. தமிழகத்தில் கிடைக்காத எரிவாயு ஆலைக்கு கொண்டுவர அரசாங்கமும் ஆலையும் சிரமப்பரிகாரம் செய்யவில்லை அதனால் இன்று தமிழகத்தின் sick யூனிட்களின் ஒன்றாக ஸ்பிக் உரத் தொழிற்சாலை மாறியிருக்கிறது. நாங்கள் டிரெயின்ங் எடுத்த சமயத்தில் அங்கே ஸ்பிக் தொழிலாளர் சங்கம் உண்ணாவிரதம் இருந்தார்கள்,  தொழிற்சங்கத்தலைவர்கள் பலரை நிர்வாகம் வீட்டு அனுப்பியது.அது செல்லாது என்று சில மாதங்களுக்கு முன்பு இறுதித்தீர்ப்பு வந்தது. எப்பேர்ப்ட்ட நீதிமன்றங்கள் இந்தியாவில் இருக்கின்றன. அதில் கனகராஜ் என்ற தோழர் தொழிற்சங்கத்தில் ஈடுபட்டு தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுவில் உறுப்பின்ராக இருக்கிறார்.

நாங்கள் ஆறுமாதங்கள் கழித்து PTA, PFY உற்பத்தி செய்யவிருக்கும் ஆலைக்கு வருகிறோம், வருவதற்கு முன்பே நீங்களெல்லாம் தமிழகத்தின் பல பகுதியிலிருந்து வந்தவர்கள் யாருக்கும் திருமணம் ஆகவில்லை, எனவே கூட்டாக சேர்ந்து அறை எடுத்து தங்குங்கள் அதுவும் நிறுவந்திற்கு அருகாமையில் இருந்தால் போக்குவரத்திற்கு எளிதாக இருக்கும் என்றார்கள். அப்படியே சில சென்னைக்காரர்கள் முன்னமே வந்து வீடுபார்த்து வைத்தார்கள். அந்த வேலையை செய்தவர்களில் இந்த செட்டியார் என்றழைக்கபடுகிற சுந்தரும் ஒருவன். வந்து இறங்கிய நாள் safetyday அதற்காக ஒரு suitcase அளித்தார்கள். ஆங்காங்கே கட்டிட வேலைகள் மும்முரமாக நடந்துவந்தன. இந்த 96பேரை என்னசெய்வது என்று பிரித்து விட்டார்கள். அதில் நான் ஸ்டோர்ஸ் பிரிவுக்கு சென்றேன். அங்கே  என்ன வேலை, வருகிற சாமான்களை இறக்கிவைத்து அதை பாதுகாப்பாக வைக்கவேண்டும்.  என்னிடம் திடீரென்று அங்கே கண்டெய்னர்கள் இறக்கிக்கொண்டிருக்கிறார்கள் அங்கே சென்று கவனித்துக்கொள் என்றார்கள். டிரெய்லர்களிலிருந்து இறக்கிய கண்டெய்னர்களின் உள்ளேயிருந்து பெட்டிகளை வெளியே இழுத்தார்கள் அதை ஸ்டோரேஜ் பகுதியில் வரிசைக்கிராமாக அடுக்கினார்கள். கிரேன்கள் மற்றும் பிராஜெட்க்காக ஒரு மேலாளார் இருந்தார், அவர் கிரேனுக்கு ரிக்கிங் சிக்னல் கொடுத்தார். அதாவது சைகையில் கிரேன் ஆப்ரேடடருக்கு தெரிவிக்கும் மொழி. அதை ஒரு மேலாளார் செய்யவேண்டிய அவசியமில்லை அதற்கு தனிஆட்கள் இருப்பார்கள் ஆனாலும் எனக்கு அதுவும் தெரியும் என்பதை மற்றவர்களுக்கு சொல்வதர்கு இரு வாய்ப்பு. அப்படித்தான் ஒரு பெட்டியை கிரேன் இறக்கிக்கொண்டிருக்கும் போது நான் சிக்னல் கொடுத்தேன் அவருக்கு வந்ததே கோபம், அப்ப நீங்க கொடுங்க என்றார், சாரி தெரியாமல் செய்துட்டென் என்றேன். அவர் பெயர் சர்புதீன். காலையில் கேண்டீனில் சாப்பிட்டு வெளியே வரும்போது அங்கே சாலை ஓரத்தில் நின்று பேசுவார் கிரேன் ஆப்ரேட்டர்கள், அவருடன் வேலைசெய்யும் பொறியாளர்கள் பவ்யமாக நின்றுகொண்டிருப்பார்கள். நாம் good morning என்று கை தூக்கினால் அந்த மேலாளர்கள் தலைதான் ஆட்டுவார்கள். கீழே இருப்பவர்கள் மேலே உள்ளவர்களுக்கு வணக்கம் சொல்லவேண்டும். ஒருவேளை அவர்கள் முதலில் நம்மை பார்த்துவிட்டாலும் அவர்கள் வாயிலிருந்தோ கையோ உய்ராது அது படிநிலை வணக்கம் தெரிவிக்கும் முறை அந்த முறையை காலங்காலமாக பின்பற்றி வருகிறார்கள்.

சென்னை வந்தாலும் எங்களுடைய பயிற்சி காலம் முடியவில்லை, அதனால் டிரெய்னீஸ் டைரி எழுதவேண்டும். அது அறிவை வளர்ப்பதற்கு உதவவேண்டும். நான் எழுதவேண்டும் என்ன எழுதுவது என்று மேலாளரைக் கேட்டேன். நீ டைரி எழுதுவதால் அன்றாட வேலையை எழுது என்றார். என்னுடைய டைரி முழுவதும் வந்துபோகும் கண்டெய்னர் எண்கள், அது எந்த டிரெய்லரிலிருந்து இறக்கப்பட்டது, அந்த கண்டெய்னரில் எந்த பெட்டிகள் இருந்தன அவை (ஒவ்வொன்றுக்கும் ஜெர்மன்காரன் எண் எழுதியிருப்பான்) களை எழுதினேன். பல நாட்கள் கழித்து என் அறைத்தோழன் ராஜாராமன் என்னுடைய டைரியைப் பார்த்தான். அடே, இந்த கண்டெய்னர் எண்களும், லாரி நம்பர்களும் எப்படி உன்னுடைய அறிவை வளார்க்கும் என்று கேட்டான்! ஒரே காமெடி தான். சென்னையில் ஏதாவது லாரி காணாமல் போய்விட்டால் கண்டெய்னர்கள் தொலைந்துவிட்டால் இந்த டைரி பயன்படும் என்று கிண்டலடிப்பான். ராஜா அந்த டைரிகள் அப்படியே பரணில் வைத்திருக்கிறேன் என் அருமை நண்பா!

தொடரும்.....

 

புதன், 21 நவம்பர், 2012

வாழ்க்கைப் பயணம்அப்போது சென்னை மாதவரம் பாரதியார் தெருவில் இருந்தோம், நாங்கள் ஐந்து பேர். இப்போது எல்லோரும் சிதறு தேங்காய் போல ஆளுக்கொரு திசையில் இருக்கிறோம். ஆனால் எங்கள் நண்பன் அறைத்தோழன் அவன் இறந்து 6 ஆண்டுகள் ஆகிவிட்டன. அவன் இராஜாராமன் மின் துறை சென்னையிலிருந்து அவன் துபாய் அலுமினியம் கம்பெனிக்கு வேலைக்குச் சென்ற ஆண்டு நினைவில் இல்லை. மின்னஞ்சல் மூலம் தொடர்பு இருந்தது, நான் துபாயில் 6 மாதகாலம் வேலைசெய்தபோது கூட அவனை சந்திக்கவில்லை என்ற காரணம் என்னை வருத்தியது. அவன் நிறுவனத்தில் ஏற்பட்ட விபத்தால் உயிரிழந்தான். அவன் இன்னும் என் கண்முன்னே வருகிறான். வடைச்சட்டியில் அவன்  டீ குடித்ததை கடசிவரை மறக்கமுடியாது. என்னை அதிகமாய் சீண்டுவான், நான் அப்போது செய்தித்தாளை ஒரு பக்கம் விடமாட்டேன் ஆனால் விளையாட்டுச் செய்திகளை வாசிக்க விருப்பம் இருந்ததில்லை. எல்லோரும் கிரிக்கெட் பற்றி பேசினால் அந்த இடத்தில் நான் வேற்று பாஷைக்காரன் போல் ஆகிவிடுவேன் அந்த அளவிற்கு ஞானம். ராஜாராமன் விபத்தில் பலியான சம்பவத்தை செளந்தர் தான் எனக்குத் தெரிவித்தான். அப்போது அவன் செளதியில் இருந்தான். இன்னும் தொடர்பில் இருக்கிறான். நண்பர்கள் யாரும் தொடர்பே கொள்ளவில்லை என்று வருத்தப்படவில்லை எல்லோருக்கும் இந்த அவசரகதியில் அவர்கள் பாடே தாவு தீர்ந்துவிடுகிறது. அவர்களை நினைத்துப்பார்ப்பதே நட்பின் ஒரு அடையாளம் தான் என்ற கலீல் கிப்ரானின் கவிதை உண்டு.

செளந்தருக்கும் ராஜாராமனுக்கும் உள்ள உறவு மானசீகமானது, அவர்களுக்குள் கிண்டல் இருக்காது, சீரியஸ் தான். இன்னும் ராஜாராமன் என் மனக்கண்ணில் சிரித்துக்கொண்டே யிருக்கிறான். இன்னும் இருவரை விட்டுவிட்டென், ஒருவன் ஞானசேகர் மற்றொருவன் பிரபாகரன். ஞானசேகர் எப்போது கோபம் கொள்வான் என்று சொல்லமுடியாது, அவனுடைய தலைவர் கலைஞர். எதனால் அப்படி ஒரு பற்று என்று அவனிடம் கேட்டதில்லை. நாங்கள் அந்த நிறுவனத்தில் வேலைசெய்ய ஆரம்பத்திலிருந்து ஒரே வீட்டில் பேச்சிலர் வாழ்க்கையை துவக்கினோம். தூத்துக்குடியில் என்னுடைய அறை நன்பர்கள் பால்முருகன், ஹரிகரசுதன் மற்றும் செளந்தர். பின்னர் அணிமாற்றத்தில் சென்னையில் வேற அறை நண்பர்களாக இருந்தவர்கள் என்னுடன் இருந்தார்கள். நான் ஷாக்ஸ் என்பதை ஒரு நாளுக்கொரு துவைக்கவேண்டும் என்று கற்றுக்கொடுத்தவன் செளந்தர் தான். ஒரு நண்பன் என்றால் அவனிடம் உள்ள குறைகளை சுட்டி அவ்னை மாற்றவேண்டும். தெரிந்தே செய்கிற தவறுகளை திருத்தமுடியுமா? ஹரிகரசுதன் இப்போது லண்டனில் இருக்கிறான் என்பதை பேஷ்புக் மூலம் தெரிந்துகொண்டேன். பால்முருகன் செளதியிலிருந்து இந்தியாவிற்கு சென்றுவிட்டான், இந்த விடுமுறையில் அவனோடு தொடர்பு கொண்டேன். எத்தனை விசயங்களை மறந்தாலும் மெட்டுகுண்டு என்ற அவனுடைய ஊர்ப்பெயரை மறக்கமுடியாது. இப்போது பழைய நண்பர்களை நேரில் பார்த்தால் என்ன பேசிக்கொள்வோம் என்று தெரியவில்லை. ஆகஸ்டு 1995 முதல் நிறுவனம் வெளியே தள்ளியதுவரை டிசம்பர்2001 எங்கேயும் வேலை தேடவில்லை. வெளிநாட்டு மோகமும் சுத்தமாக இல்லை, அப்படியொரு திருப்தி வேலைமீது. இன்னும் பழைய கம்பெனி கதைகல் பற்றிச்சொன்னால் எங்க கம்பெனி என்று சொல்வது அதை மட்டும் தான். செளந்தர் 1998ம் ஆண்டு சவுதி சென்றான், பின்னர் ராஜாராமன் சென்னையிலேயே வேறு நிறுவனத்திற்குச் சென்றான் அங்கிருந்து துபாய் சென்றான். நாங்கள் சமையல் செய்து தான் சாப்பிட்டோம். அதை சொல்ல நினைத்துதான் இதை எழுத ஆரம்பித்தேன்.

கூட்டு, பொறியல் என்றால் என்ன? என்று எங்களுக்குத் தெரியாது. நாங்கள் சாப்பிடுவது இரவு ஒருவேளை மட்டும் வீட்டில் அதற்கு எதுக்காய்ய கூட்டு? சாம்பார் வைத்தால் அதில் காய்கறி இருக்கிறதே! வாரத்தில் 5நாளில் 4 நாட்கள் சாம்பார் தான். எங்களுக்குள் நீ இன்னைக்கு சமைக்கனும் நான் இன்னைக்கு என்று பட்டியலே கிடையாது. எனக்கு விருப்பமான தேர்வு பாத்திரம் கழுவுவதுதான். ஆனால் என்னை ச்மையல் குருவாக செளந்தர் சொல்லிவிட்டான் என்பதற்காக சாம்பார் வைத்துத்தொலைத்தேன். நேற்று நாங்கள் செய்யும் ஒருவகையான உப்புமாவை ஞாபகம் கொண்டேன். அதுதான் எழுதுவதற்கு விதையே! அந்த உப்புமா எப்படி தயாரித்தோம் என்றால் வேடிக்கையானது. வெங்காயம், மிளகாய் கடுகு தாளித்து பின்னர் சம்பாரவைக்குத் தேவையான அளாவு தண்ணீர் ஊற்றுவோம், அது நன்றாக கொதிநிலை வரும்போது அதில் முட்டை இரண்டோ மூன்றோ அடித்து ஊற்றுவோம். பின்னர் ரவையை போட்டு கிண்டி இறக்கினால் உப்புமா ரெடி. எவன் சொன்னானோ இந்த பார்மூலாவை. இது ஒரு மெனு. கடைக்குப் போனால் முட்டைவாங்கும் ட்ரே இல்லாமல் போவதில்லை அந்த அளவிற்கு அவித்த முட்டை பிரியர்கள். சாப்பிடுவதற்கு சைடில் எதாவது வைத்துக்கொள்ளவேணுமே! பாரதியார் தெரு வீட்டிற்கு வந்தவுடந்தான் பாஸ்போர்ட் விண்ணப்பித்தேன் எனக்குட்துணை ராஜா. அவன் என்னை மாதிரி சோடாபுட்டி! எனக்கு -1 லிருந்து ஏறிக்கொண்டே வந்தது அவன் நிலைநிறுத்தினான் யோகாவாம் யோகா செய்வான், கேட்டால் எங்க தாத்தா சொல்லிக் கொடுத்தார் என்பான். பாஸ்போர்ட் வாங்கிய கதை இன்னமும் நினைவில் உள்ளது. நாங்கள் வேலைக்குப்போய்விட்டால் வீட்டில் யாருமே கிடையாது, போலீஸ் என்கொயரி வந்தது. போலீஸ் ஸ்டேசன் செல்லவேண்டும். அவனுக்கும் இருக்கிறது என்கொயரி ஆகையால் இருவரும் மாதவரம் காவல்நிலையம் சென்றோம். உள்ளே சென்றதும் எனக்குப்பீதியானது அங்கே ஜட்டியுடன் ஒருவனை நிற்கவைத்து நமது பொதுமக்களின் நன்பர்கள்! அடித்தார்கள். என்னுடைய பீதியை ராஜாராமன் கடைக்கண்ணில் பார்த்தான், அவன் கண்ணிலும் தான் அச்சம் நைசாக மறைத்துவிட்டான். பின்னர் ஆய்வாளரை இருவரும் அணுகினோம். பாஸ்போர்ட் எடுத்து எங்கே போகப்போறீங்க என்றார், சும்மா ஒரு அட்ரஸ் புரூப் க்குத்தான் என்றோம். சரி சரி என்றார் மாமூல் எதுவும் கேட்கவில்லை நாங்களும் தருவதற்கு துணியவில்லை. நன்றி சொல்லி வெளியே வந்தபோது கொஜ்சம் ஸ்டேசனரி பொருட்கள் வாங்கிக்கொடுத்துவிட்டு செல்லுங்கள் என்றார். எப்படியோ தலா 10ரூபாயை கறந்தார்கள். அறைக்கு வந்ததும் என்னுடைய பீதியை நண்பர்களிடம் சொல்லிவிட்டான், அதை அவன் அவ்வப்போது என்னை சீண்டுவதற்கு பயன்படுத்துவான்.


இன்னைக்குப்போதும்...

செவ்வாய், 20 நவம்பர், 2012

நோபல் பரிசு உருவான கதை.


அவரது பெயர் ஆல்பர்ட் பெர்ன்ஹார்டு நோபெல் , 1833ல் ஸ்டாக்ஹோமில் பிறந்தார்.அவரது தந்தை ரஷ்ய ராணுவத்திற்கு துப்பாக்கி ரவைகள் தயாரித்து வழங்கும் வேலை செய்துவந்தார்.

நோபெலும் அவரது அண்ணனும் தந்தைக்கு உதவியபடியே கல்வி கற்றுவந்தார்கள். பின்னாட்களில் ஸ்டாக்ஹோம் திரும்பியவர்கள் ஸ்வீடன் நாட்டு ராணுவத்திற்கு பலவகையான வெடி மருந்துகளை தயாரித்துக் கொடுத்தார்கள். நோபெல் தந்தையின் வெடிமருந்து தொழிற்சாலையின் வேதியியல் கூடத்தில் வெடிக்கும் பொருட்களை கலவைகளை பலவிதமாகத் தயாரித்து மினி வேதியியலாளர் ஆனார்.

1864ம் ஆண்டு ஒரு நாள் நைட்ரோ கிளிசரினுடன் பலவகை அமிலங்களை இணைத்து தயாரித்த திராவக வெடிக்கலவை செய்யும் ஆய்வில் இருந்தார், ஆய்வை பாதியில் விட்டுவிட்டு வீட்டுக்கு திரும்பிய நோபெல் பயங்கர வெடிச்சத்தம் கேட்டு ஒடினார் ஆய்வகமும் அவர்களது வெடிமருந்து ஆலையும் கூடவே அண்ணன் எமில் மற்றும் 26 பேரின் சடலங்களும் சிதைந்து கிடந்தன. அந்த சம்பவத்தால் நோபெலின் தாயும் தந்தையும் அதிர்ந்து போனார்கள் ஆனால் நோபெல் தனது ஆய்வுகளை நிறுத்தவில்லை.

அடுத்த ஆண்டு டைனமைட்டை கண்டுபிடித்து உலகமெங்கும் கிணறு வெடுவதிலிருந்து, சுரங்க வேலைவரை பலவற்றிற்கு பயன்பட்ட வெடிமருந்து உற்பத்தி அவரை குறுகிய காலத்தில் செல்வந்தராக்கியது.

மனிதர் திருமணமே செய்துகொள்ளாமல் தனித்தே வாழ்ந்து தனது வாழ்வைப் பெரிய சாதனை என்றே கருதினார். 1895ம் ஆண்டு மே மாதம் 17ம் தேதி காலையில் செய்தித்தாளை வாசித்து திடுக்கிட்டார்.

டைனமைட் வெடிமருந்து தயாரித்து பலர்சாக காரணமாக இருந்த ஆல்பிரட் நோபல் மரணம் என்று செய்தி பக்கத்தில் அவரது போட்டோவும் கூட. மனிதர் திரும்ப திரும்ப வாசித்தார் அவரைத்தான் இறந்துவிட்டதாக தினசரியில் செய்தி வந்திருந்தது.கோபமடைந்து பத்திரிக்கையாள்ர்களை தொடர்புகொண்டு திட்டித்தீர்க்க முடிவுசெய்தர், பிறகு முடிவை மாற்றினார். எல்லாரும் என்ன செய்கிறார்கள் பார்ப்போமே என்று அவருக்குத் தோன்றியது, ஆனால் அதிர்ச்சியும் காத்திருந்தது.

ஒருமணி நேரம், இரண்டு மணிநேரம் ...வீட்டுக்கு யாருமே வரவில்லை, உறவினர்கள் தொலைபேசியில் கூட விசாரிக்கவில்லை. வீட்டிலிருந்து இறங்கீ தெருவில் நடந்தார், யாருமே கண்டுகொள்ளவில்லை. இரண்டு தெரு தள்ளி ‘அழிந்தான் மனிதக் கொல்லி’ என பெரிய பேனர் வைத்து சிலர் இனிப்பு வழங்குவதைப் பார்த்து நொந்தார். வேகமாக வீடு திரும்பினார்.

அங்கே காத்திருந்தது ஒரே பெண்மணி பெர்தா வின்ஸ்கி, நோபெலின் பால்ய சினேகிதி.நட்புரீதியில் நலம் விசாரித்துக்கொண்டே பெர்தா வின்ஸ்கி அவரது நிலைமையை புரியவைத்தார். பணமும் புகழும் பெரிதல்ல், வேதியியாலாளராக இருந்தும் என்ன பயன்.. அழிவு ஆயுதங்களே செய்தவர் என்ற அவப்பெய்ரே நிலைக்கிறது, இருக்கும்போதே இறந்தவராக்கியது. நோபல் அந்தக் களங்கத்திலிருந்து வெளிவரக் கொண்டு வந்தவை தான் நொபல் பரிசுகள்.

பால்தாக்கரேவின் மரணம்


சிவசேனைத் தலைவர் பால்தாக்கரேவின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் , குடியரசுத்தலைவர் மாதிரி “நாடு மிகச்சிறந்த” தலைவரை இழந்துவிட்டது என்று சொல்லமாட்டேன் அது போலியான உதட்டளவில் தெரிவிக்கிற அஞ்சலி. இல்லையென்றால் அவர் மக்களை பிரதேச ரீதியிலும், மதரீதியிலும் பிரிவினை செய்தவரை ஒரு பொறுப்பான தலைவர் என்பதை ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் முன்னாள் உச்ச்நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு “நான் பால்தாக்கரேவுக்கு அஞ்சலி செலுத்தமாட்டென் என்று கட்டுரை எழுதினார் அது ஹிந்து நாளிதழ் பிரசுரித்தது. அந்த கட்டுரையில் பாரதியின் “முப்பதுகோடி முகமுடையாள்” என்ற வேற்றுமையில் ஒற்றுமையை சீரழித்த தலைவர் என்றார். இந்தியத்திரு நாட்டில் ஒரு குடிமகன் எங்கே வேண்டுமானால் சென்று வேலை செய்யலாம், தொழில் செய்யலாம் ஆனால் அந்திய மாநிலத்தவரால் சொந்தமக்களுக்கு வேலை கிடைக்கவில்லை எனவே அவர்களை விரட்டுவோம் என்ற பிரிவினை அரசியல் செய்தவர். அவருடைய அரசியல் எல்லாம் மக்கள் விரோத அரசியல் எமர்ஜென்சியை ஆதரித்தார், மும்பையில் தொழிற்சங்கவாதிகளுக்கெதிராக முதலாளித்துவவாதிகளுடன் கூட்டு சேர்ந்து ஒழித்துக்கட்டினார். பத்திரிக்கை ஆசிரியர் என்று தான் நடத்திய ‘சாம்னா’ வில் துவேசம் பரப்பினார். இப்படிப்பட்ட தலைவரின்மீது மரியாதை எப்படிவரும்.

அவருடைய இறுதி ஊர்வலம் நிகழ்ந்த நாளில் கடைகளெல்லாம் அடைத்து வீதிகளே வெறிச்சோடிக் காணப்பட்டது இது மரியாதைமிக்க தலைவர்ருக்கான அஞ்சலி செலுத்த அல்ல மாறாக தொண்டரடிப்பொடிகள் வன்முறை செய்து நாசம் விளைவிப்பார்கள் என்ற அச்சம் தான் காரணம் என்று இரண்டு பெண்கள் பேஸ்புக் ல் கமெண்ட் செய்திருந்தார்கள்.   அவர்களை போலீஸ் கைதுசெய்தது. அதற்கு பிரஸ் கவுன்சில் தலைவர் என்ற முறையில் மார்க்கண்டேய கட்ஜூ மஹாராஷ்டிர முதல்வருக்கு கடிதம் எழுதினார். அந்த பெண்களை விடுவிக்கவேண்டும், கைதுசெய்த காவல்துறை மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார். இந்தியாவில் மக்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்க உரிமைகூட இல்லை, இந்த கருத்தால் பொதுமக்களுக்கு எந்த குந்தகமும் ஏற்படபோவதில்லை, பொய் இல்லை, தேசவிரோதமில்லை, ஆனாலும் போலீஸ் வன்முறையாளர்களுக்கு விசுவாசம் காட்டுகிறது.

அந்நிய ஆட்சியாளர்கள் இந்தியாவை ஆள்வதற்கு மதரீதியாக பிளவுபடுத்திவிட்டு ஆட்சி செய்தார்கள், பால்தாக்கரே போன்ற வலதுசாரி சக்திகள் மக்களை மொழி , இன, மத ரீதியாக பிளவுபடுத்தி பெரும்பான்மையினரின் செல்வாக்கை பெற்று அதில் ஆட்சி செய்கிறார்கள். மொழியால், மதத்தால், வேறுமாநில மக்கள் என சிறுபான்மையினராக இருக்கின்ற மக்கள் எப்போதும் ஒரு அச்சத்திலேயே வாழவைத்தார். ஈழத்தை ஆதரித்தார் என்று அவரின் புகழ்பாட பெரியாரின் சீடர்களில் சிலர் புகழ்அஞ்சலி செலுத்தத்தவரவில்லை.

பால்தாக்கரேவின் மறைவால் நாடு ஆகப்பெரிய தலைவரை இழந்துவிட்டது என்று சொல்லமாட்டேன்.