சனி, 6 ஏப்ரல், 2013

மெளனித்தவர்களுக்காக பேசுகிறேன்..


தமிழகத்தில் கடந்த ஒருமாதகாலமாக நடத்திய மாணவர்களின் போராட்டம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது, தமிழகத்தின் தனியார் தொலைக்காட்சி ஊடகங்கள் குறிப்பாக புதிய தலைமுறை தமிழக மக்களை ‘உணர்ச்சிவசப்படுத்தி’ வென்றெடுத்துள்ளது. அதே மாணவர்கள் தனியார் கல்லூரிகளின் கல்விக்கட்டணக் கொள்ளையை எதிர்த்தால் இவ்வளவு வெளிச்சம் போடுவார்களா?  தனியார் கல்லூரிகளில் மாணவர்கள் அமைப்பை அனுமதிக்கிறார்களா? மக்களின் பெரும்பான்மை உணர்வை அறிந்துகொண்டு அதைமேலும் வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறார்கள் . தனி ஈழமே தீர்வு என்று நீங்கள் ஏற்காவிட்டால் நீங்கள் ராஜபக்‌ஷெவின் கூட்டாளியாகிவிடுவீர்கள். ஜார்ஜ்புஷ் தீவிரவாதத்திற்கெதிரான போரில் எங்கள் பக்கம் இல்லையென்றால் தீவிரவாதிகள் பக்கம் இருக்கிறீர்கள் என்றார் அதேமாதிரியான குரல்கள் ஒலித்தன. போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்ற முதலமைச்சர் இப்போது  2014 தேர்தல் பேய் மக்கள் நலன் சார்ந்து துரத்துகிறது, தனி ஈழமே தீர்வு, பொதுவாக்கெடுப்பு நடத்து, பொருளாதாரத்தடை, கிரிக்கெட் விளையாடத்தடை என்றெல்லாம் தீர்மானம் போடுகிறார். இதை சட்டமன்றத்தில் யாராவது எதிர்க்கமுடியுமா? தமிழினத் துரோகிகள் ஆகிவிடுவார்களே! இரண்டு திராவிடக் கட்சிகளும் ஈழத்தை யார் அதிகமாக ஆதரிக்கிறார்கள் என்று போட்டிபோடுகிறார்கள், ஆனால் டெல்லியில் மக்கள் நலனிற்காக சேர்ந்திசை பாடமுடியவில்லை போலும்.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம், போர்க்குற்றத்தில் ஈடுபட்டவர்களின் மீது ஐநா நடவிடிக்கை எடுக்கவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் ஈழத்தமிழர்களை ஆதரிப்பது என்பதும் தனி ஈழத்தை ஆதரிப்பதும் விடுதலைப்புலிகளை ஆதரிப்பதும் ஒன்றாக்கிவிடுகிறார்கள். மனிதநேயத்திற்காக பேசுகிற, எழுதிகிற புத்திரன்கள் தமிழ்நாட்டில் சிங்களர்களை தாக்குவதை ஆதரித்து பேசுகிறார்கள் அதனால் அவரை தினமும் பேசுவதற்கு எல்லா தமிழின தொலைக்காட்சிகளும் போட்டி போட்டு அழைக்கின்றன. அப்பாவி முஸ்லீமை தீவிரவாதி முத்திரை குத்தினால் எதிர்க்கின்ற நாம் எல்லா சிங்களவனும் இனவாதியல்ல என்பதை உணரமறுக்கிறோம்.  இங்கே ஒரு சிங்களத்தவனை அடித்தால் அங்கே இன்னும் இனவெறி அதிகமாகும் அதன் பாதிப்பை பெரும்பான்மையாகிய நாம் உணரப்போவதில்லை அதன் வலியை அங்கெ சிறுபான்மை தமிழன் சுமப்பான். குறுகிய இனவெறியை எளிதாக வளர்க்கலாம், காவிரியில் கர்நாடகம் நீர் தரவில்லையா தமிழ்நாட்டில் கன்னடியனை அடி, முல்லைப்பெரியாற்றில் அணைகட்டுகிற மலையாளியை தமிழ்நாட்டில் அடி! உணர்ச்சிக்கு அடிமையான தமிழனே தமிழ்நாட்டை விட்டு எந்தத் தமிழனும் வெளியேயில்லையா? அங்கே அவன் சிறுபான்மையாக இருக்கிறான் என்பதை உணர்ந்துகொள்.

சமூகவலைத்தளங்களில் நாளையே தமிழீழம் மலரப்போவதாக ஏங்குகிறார்கள், இன்னும் தங்கள் தலைவன் பிரபாகரன் சாகவில்லை என்று நம்புகிறார்கள். ஏகாதிபத்தியத்தை எதிர்த்த சேகுவேராவின் படத்தை போட்டுக்கொண்டு ஏகாதிபத்தியத்திடமே கெஞ்சுகிறார்கள். யதார்த்தத்தை உணராமல் போராடுகிறவர்கள் வெல்லமுடியுமா? மத்திய அரசு தமிழனுக்கு எதிராக இருக்கிறது, ஒரு மலையாளி சுடப்பட்டதற்கு இத்தாலியை இணங்கவைத்த இந்தியா நூற்றுக்கணக்கான மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டதை அதே இந்திய அரசு தடுத்துநிறுத்த முடிய்வில்லை என்ற ஆதங்கம் சரி, தனித்தமிழ்நாடு தீர்வாகிவிடுமா? இங்கே எதிரிக்கட்சிகளாக உள்ளவர்களால் தில்லியில் எப்படி பேசமுடியும். கடந்த இரண்டு பத்தாண்டில் மத்திய அரசில் தமிழக மந்திரிகள் இல்லாமல் இருந்ததா? சுயநல அரசியல்வாதிகளை அடையாளம் கண்டுகொள்ளாமல் கோவிந்தா போட்டால் இன்னும் தமிழகத்தின் இயற்கை வளங்கள் சூறையாடப்படும்.

இனத்திற்காக அல்ல மனிதநேயத்திற்க்காக போராடுகிறேன் என்பவர்கள் ஏன் காஷ்மீரில் இந்திய ராணுவம் நடத்தும் அட்டூழியங்களை பேசமறுக்கிறார்கள், ராணுவம் சென்றால் அப்படித்தான் இருக்கும் தீவிரவாதிகளுக்கு வீட்டில் அடைக்கலம் கொடுத்தால் ராணுவம் அத்துமீறல்கள் இருக்கத்தான் செய்யும் என்பவர்களால் அதை ஈழமண்ணில் ஏற்றுக்கொள்ள முடியவில்லையே? தமிழ்நாட்டில் சாதிப்பிடியிலிருந்து மீளாதவர்கள் இனத்திற்க்காக போராடுவது முரணாகயில்லையா? முதலில் இந்தியாவில் (தமிழகத்தில்) அகதிகளாக வந்தவர்களுக்கு சிறப்பு முகாம்களை மீடிவிட்டு குடியுரிமை வழங்க தீர்மானம் போடட்டடும், யார் குடியும் மூழ்கிப்போய்விடாது!

பேஷ்புக்கில் பார்த்த கவிதை..

ஓ இயேசுவே
நீ மீண்டும் பிறந்து வருவதானால்
ஈழத்தமிழனாக மட்டும் பிறந்துவிடாதே!
அப்படி பிறந்தாலும்
அகதியாக தமிழ்நாட்டிற்கு வந்துவிடாதே
ஏனெனில்
இம்முறை சிலுவையைவிடக் கொடிய
சிறப்பு முகாமில் அடைக்கப்படுவாய்.