திங்கள், 30 மே, 2011

வசூல் ராஜா - விமான நிலையங்கள்

இரு தினங்களுக்கு முன்பு வந்த செய்தி, சென்னை விமானநிலைம் இனிமேல் பயணிகளிடம் Airport Development Fee (ADF) வசூல் செய்ய உள்ளதாக தகவல். விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ததால் ஏற்பட்ட செல்வை ஈடுகட்ட பயணிகள் தண்டம் கட்டவேண்டியிருக்கும். ஏற்கனவே ஒவ்வொரு ஏர்போர்ட்டும் Route Navigation Facility Charges, Landing Charges, Parking and housing Charges மற்றும் Terminal Navigation and Landing Charges இத்தனை கட்டணங்களை விமானம் இயக்குபவர் மூலமாக வசூல்செய்கிறது. சென்னை விமான நிலைய விரிவாக்கப் பணியை Airports Authority of India செய்கிறது. முன்பு டெல்லி மற்றும் மும்பை விமான நிலையங்களில் பயணிகளிடம் வசூல் செய்த Airport Development Fee (ADF) தவறென்று உச்சநீதிமன்றம் சென்றமாதத்தில் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த நிலையில் சென்னை விமான நிலையம் புதிய கொள்ளையை துவக்கவுள்ளது.

உலகமயக்கொள்கையால் விமானநிலையத்தை தனியார் மயமாக்குவார்கள் என்று முன்பே இடதுசாரிகள் எச்சரித்தார்கள், ஆனால் வளர்ச்சி வேண்டுமானால் தனியாரால் தான் முடியும் என்று அரசும் தாராளவாதிகளும் ஆதரித்தனர். இன்று பயணிகள் வேதனையை அனுபவிக்கின்றனர். தனியார் நிறுவனங்களுக்கு அரசு இப்படி வருவாய் ஈட்டும் வழிகளை அரசு ஏற்படுத்துகிறது, மக்கள் பணத்தை தனியார் நிறுவனங்களின் பாக்கெட்டை நிரப்பும் செயல் ஊழல் இல்லாமல் வேறென்ன? டெல்லி மற்றும் மும்பை விமான நிலையங்கள் தனியார் நிறுவனங்களால் விரிவாக்கம் செய்யப்பட்டன, காலதாமதம்,திட்டமிட்டதை விட அதிகமான பிராஜெக்ட் செலவு என்பதை காரணம் காட்டி பயணிகளிடம் Airport Development Fee (ADF) வசூல் செய்வதற்கு மத்தியரசு அனுமதித்தது. டெல்லி விமானநிலையம் GMR என்ற நிறுவனத்தால் விரிவாக்கம் செய்யப்பட்டது, மும்பை விமானநிலையம் GVK நிறுவனத்தால் விரிவாக்கம் செய்யப்பட்டது. டெல்லி, மும்பௌக்கு அடுத்தபடியாக ஹைதாராபாத், பெங்களூர் விமாநிலையங்களும் தனியார்மயமாக்கம் செய்யப்பட்டுள்ளன. இந்த விமானநிலையங்கள் ஒரு நிறுவனம் போல் செயல்படுகின்றன. டெல்லி DIAL எனவும், மும்பை MIAL ஆகவும், ஹைதராபாத் HIAL எனவும் & பெங்களூர் BIAL ஆகவும் பெயர் மாற்றப்பட்டு Airports Authority of India விடம் வருமானத்தை பகிர்ந்துகொள்கிறது.

டெல்லி விமானநிலையமான DIAL பயணிகளிடம் 2010 ஆண்டு வரை ரூ1200 கோடி யையும் மும்பௌ விமானநிலையமான MIAL ரூ 1300 கோடியும் வசூல் செய்துள்ளன.இந்த இரு விமானநிலையங்கள் மட்டுமல்ல ஹைதாராபாத் விமான நிலையமும் பெங்களூர் விமானநிலையமும் வசூலில் இறங்கியுள்ளன. மேலே கூறப்பட்ட இரு நிறுவனக்கள் தான் இங்கும் தலா ஒரு ஏர்போர்ட்டை நிர்வகிக்கின்றன. இந்த கட்டணங்கள் ADF என்றும் UDF (user development fee)என்றும் வசூலிக்கப்படுகின்றன. தனியார் விமானநிலையங்கள் மட்டுமல்லாமல் AAI நிர்வகிக்கின்ற விமானநிலையங்களும் கொள்ளையடிக்க ஆரம்பித்துவிட்டன. மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசுகளின் கொள்கையை நீதிமன்றங்கள் மூலமா தடுத்து நிறுத்துவது. நீதிமன்றமும் ஏர்போர்ட் ரெகுலேட்டரி அத்தாரிட்டி ஒப்புதல் அளித்தால் மீண்டும் வசூலிக்கலாம் எனவும் கூறியுள்ளது, அதில் என்ன தடங்கல் வரப்போகிறது.

பயணிகளிடம் உள்ளூர் /வெளிநாடு என வசூலிக்கும் தொகை விமானநிலையம் வாரியாக..

ஞாயிறு, 29 மே, 2011

ஆப்பரேசன் அஜாக்ஸ்

ஒரு மக்கள்நல அரசு பன்னாட்டு நிறுவனங்களை தேசியமயமாக்கினால் என்ன விளைவுகளை சந்திக்கவேண்டியிருக்கும் என்பதற்கு முதல் உதாரணம் தான் ஈரான். 1951ம் ஆண்டு ஈரான் நாட்டில் இயற்கை வள்ங்களையும் மக்களையும் சூறையாடிவந்த ஒரு பிரிட்டிஷ் நிறுவனம் தான் Anglo-Iranian Oil Company (AIOC), இது பிரிட்டிஷ் பெட்ரோலிய (BP) நிறுவனத்தின் முன்னோடி நிறுவனம். அச்சமயத்தில் ஈரானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் முகமது மொசாடெக் மக்களிடையே மிகவும் புகழ் பெற்றிருந்தார். பெட்ரோலியம் தொடர்பான அனைத்து நிறுவனக்களையும் அவற்றின் சொத்துக்களையும் தேசிய உடைமையாக்கிவிட்டார். அதே ஆண்டில் டைம் பத்திரிக்கை அவரை அந்த ஆண்டின் சிறந்த மனிதராகத் தேர்வுசெய்தது. பிரிட்டிஷ் எண்ணெய் நிறுவனத்தை ஈரான் தேசியமயமாக்கியதால் இங்கிலாந்து மிகவும் கோபமடைந்து இரண்டாம் உலகப்போரின் கூட்டாளியான அமெரிக்காவின் உதவியை நாடியது.

ஈரான் நாட்டை இராணுவத்தலையீடு மூலம் தன்வழிக்கு கொண்டுவருவதில் சிக்கலாக சோவியத்யூனியன் இருந்தது. அதற்கு மாற்றுவழியைக் கண்டது சிஐஏ. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்டின் பேரன் கெர்மிட் ரூஸ்வெல்ட் சிஐஏ வின் உளவாளியாக ஈரான் சென்றார். ஈரான் நாட்டில் பணத்தை வாரியிறைத்து வன்முறைகளை தூண்டினார், நிறைய ஆர்ப்பாட்டங்கள் தெருச்சண்டைகளை நிகழ்த்தினார். இதன் மூலம் மொஸாடெக் அரசு மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்படுமாறு பார்த்துக்கொண்டார. முடிவில் மொஸாடெக் பதவியிலிருந்து தூக்கப்பட்டு சாகும்வரை வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டார். அமெரிக்க உளவுத்துறையான சிஐஏவும் பிரிட்டிஷ் உளவுத்துறையான M16னும் இணைந்து நடத்திய ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பெயர் ஆப்பரேசன் அஜாக்ஸ்.

வியட்நாம் போரில் அமெரிக்காவிற்கு ஏற்பட்ட அவமானத்தால் உலகில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த இராணுவத் தலையீட்டிற்குப் பதிலாக சூழ்ச்சிகளை பயன்ப்டுத்த நினைத்தது. ஈரானில் அதற்குக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து அதே உத்தியை கையாள எண்ணியது.

தகவல் : ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்- ஜான் பெர்க்கின்ஸ்

வெள்ளி, 27 மே, 2011

உலகப் பேரரசு முயற்சியில் அமெரிக்கா

அமெரிக்காவைப் பத்தி செய்தி இல்லாத நாளும், நாடும், டிவியும் கிடையாது..அந்த அளவிற்கு உலகத்தில் ஒரு முக்கிய நாடா அமெரிக்கா இருக்கிறது. அமெரிக்காவைப் பற்றி மாறுபட்ட கண்ணோட்டங்கள் ஒவ்வொருத்தரிடமும் இருக்கிறது. அமெரிக்காவை ஒரு ஏகாதிபத்திய நாடாக பார்ப்பவார்கள் ஒருபக்கம் மற்றொரு பிரிவினர் ரட்சகராக பார்ப்பவர்கள். முதல் பிரிவினர் ஒரு இடதுசாரிகள் மற்றும் அமெரிக்காவால் நேரடியாகவோ மறைமுகவாகவோ பாதிக்கப்பட்டவர்கள். அமெரிக்காவை உலகத்தின் பேரரசாகவும் தீவிரவாதத்திலிருந்து காக்கும் ரட்சகராக பார்ப்பவர்கள் எல்லா நாட்டிலுமுள்ள மேல்தட்டு மற்றும் பணக்காரவர்க்கத்தினர்.

உலகநாடுகளில் அதிகமாக தூதரகங்களை திறந்துவைத்துள்ள நாடு அமெரிக்கா தான் என்பதில் ஐயமில்லை, எல்லா நாடுகளும் தூதரகங்களை வர்த்தக நோக்கங்களுக்காகவும், கலாச்சாரம்,சுற்றுலாவை மேம்படுத்தி குறிப்பிட்ட நாடுகளுடன் உறவை வலுப்படுத்தவதற்க்காகவும் வைத்திருக்கிறது. அமெரிக்காவின் தூதரகங்கள் ஒருபடி மேலே மற்ற நாடுகளின் உள்நாட்டு அரசியலிலும் தலையிடுவதை நாம் காண்கிறோம். தங்களின் ஏகபோக வர்த்தக நலன்களுக்கு எதிராக உள்ளவர்களை ஒழித்துக்கட்டுவதற்கு உள்ளூர்வாசிகளின் உதவியுட்னே களத்தில் இறங்குகிறார்கள். இதுவரை அமெரிக்காவின் தலையீட்டால் பல நாடுகளில் ஆட்சிக்கவிழ்ப்பு, ராணுவத்தின் உதவியுடன் ஒரு பொம்மை அரசை அமைத்துக்கொண்டு அந்த நாட்டின் இயற்கை வளங்களை கொள்ளையடிப்பது என உண்மைகள் வெளிவந்தாலும் சிறிதும் கலக்கமின்றி தொடர்ந்து அதன் அத்துமீறல்களை அரங்கேற்றிக்கொண்டே இருக்கிறது. நம் நாட்டிலேயே கம்யூனிஸ்ட்களை அதிகாரத்திலிருந்து இறக்குவதற்கு காங்கிரஸ் கட்சி, திரிணாமூல் போன்றவற்றிற்கு உதவியிருக்கிறார்களென்றால் சிறிய நாடுகளின் கதியைப் பற்றி சொல்லவே வேண்டாம்.

தினமும் அமெரிக்கக்கொடி ஏதாவது ஒரு நாட்டில் எரிக்கப்படுகிறது அல்லது அமெரிக்கத் தூதரகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இன்று போர்கள் மூலம் நாடுகளை பிடிக்கமுடியாது என்ற சூல்நிலையில் அதற்கு மாற்று ஏற்பாடு தான் உலகமயம். ஜான்பெர்க்கின்ஸ் எழுதிய `ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்` புத்தகத்தில் தன்னுடைய அனுபவ்த்தை பகிர்ந்துகொண்டு உலகிற்கு அமெரிக்காவின் நரித்தனங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறார். இந்த பொருளாதார அடியாட்களின் பணி, “அமெரிக்க வணிகநலன்களை முனனிறுத்தும் விரிந்த வலைப்பின்னலின் பகுதியாக உலகநாடுகளின் ஆட்சியாளர்களைத் தூண்டுவது. முதலில் இந்தத் தலைவர்கள் மீள்முடியாத கடன்வலையில் சிக்கிக்கொள்வார்கள். அது அவர்கள் விசுவாசத்தை உறுதிப்படுத்தும். பின்பு அரசியல், பொருளாதார, இராணுவத்தேவைகளுக்காக அவர்களை பயன்படுத்திக் கொள்ளலாம், இதற்கு மாற்றாக அந்த நாட்டில் மின்திட்டங்கள், சாலைகள் அமெரிக்க நிறுவனங்கள் ஏற்படுத்துவார்கள்.

ஜான் பெர்க்கின்ஸ் புத்தகத்தில் லத்தீன் அமெரிக்க நாடுகள், ஈரான், இந்தோனேசியா, சவுதிஅரேபியா, குவைத், ஈராக் என பல நாடுகளில் பொருளாதார அடியாள்களின் அனுபவத்தை சொல்லியிருக்கிறார். நானும் இந்தியாவைப் பற்றி ஏதாவது இருக்கிறதா என்று எதிர்பார்த்தேன் இல்லை இந்த புத்தகம் 2004ல் எழுதியிருக்கிறார். ஒருவேளை இப்போது தான் அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் மூலமாக இந்தியா அந்த வலையில் விழுந்திருக்கிறதோ என ஐயம் எழுகிறது. அமெரிக்காவின் தந்திரங்களை அடுத்த இடுகைகளில் பார்க்கலாம்.

வியாழன், 26 மே, 2011

தலித் என்பதால்..

இதுவரைக்கும் நடந்த ஊழல்லேயெ பெரிய தொகையில சிக்கினது ஸ்பெக்ட்ரம் தான், அதை விசாரிக்கிறதுக்கு இப்ப மூனு அமைப்புகள் இருக்கு. உச்சநீதிமன்றம் தலையீட்டுலே சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செஞ்சு பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில விசாரணை ஒரு பக்கம், அப்புறம் நாடாளுமன்றப் பொதுக்குழு முரளிமனோகர் ஜோஷி தலைமையில் ஒரு விசாரணை நடக்குது இன்னொரு பக்கம் எதிர்க்கட்சியெல்லாம் விடாப்பிடியா நின்னதால JPC பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை இப்ப பிள்ளையார் சுழி போட்டிருக்காங்க. முக்கியமா சம்பந்தப்பட்ட டெலிகாம் மந்திரி ராசாவை திகார்ல போட்டுட்டாங்க, அப்புறம் தொலைதொடர்பு அதிகாரிகள், கொஞ்சம் கார்ப்பரேட் ஆளுக, கடைசியா கனிமொழி, கலைஞர் டிவி இயக்குனர் சரத்குமார். இன்னும் பட்டியல் நீளும் போலிருக்கு.

ராசா மேல குற்றப்பத்திரிக்கை தாக்கல் செஞ்சவுடனே charge sheet போட்டதாலே ஒருத்தரை குற்றவாளின்னு சொல்லமுடியாதுன்னு சொன்னாங்க, கலைஞரும் அப்புறம் பெரியாரோட சொத்துக்கு வாரிசான வீரமணியும் ராசா ஒரு தலித் என்கிறதாலேயெ அவர் மேலெ அபாண்டமா பழி சுமத்துறாங்கன்னு அங்கங்க மீட்டிங், சுப.வீரபாண்டியன்,நக்கீரன் கோபால், ஜகத்கஸ்பர் இவங்கெல்லாம் சேர்ந்து கருத்தரங்கம் நடத்துனாங்க. எல்லாம் பார்ப்பன சதி தான். ராசாவுக்கு ஒன்னுமே தெரியாது. இப்படியெல்லாம் பேசுனவங்க ராசாவுக்காக ஜாமீன் கேட்டாங்களா, ராசா உண்மையில அந்த ஊழலை செஞ்சது கலைஞரோட பேமிலிக்காகத்தான். அவரை ஒரு கருவியா பயன்படுத்தினாங்க. மீடியா ரெம்ப ஆவலா இருந்த விஷயம் கனிமொழியை அரெஸ்ட் பண்ணுவாங்கலா மாட்டாங்களா? சட்டசபைதேர்தல்ல் திமுக தோத்தவுடெனே திமுகவுக்கு பல் விழுந்துபோச்சு. கனிமொழியை அரெஸ்ட் பண்ணிட்டாங்க. நிருபர்கள் கலைஞர்கிட்ட கனிமொழி கைது பத்தி கேட்டபோது அவளும் பெண் தானேன்னு டயலாக் விட்டாரு. கைது நடவடிக்கையை தடுக்கமுடியலன்னு ஆனதாலே டெல்லியில் பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானியை என்ன விலை கொடுத்தாவது அப்பாயிண்ட் செஞ்சு வாதாடுனாங்க. அப்ப கனிமொழிக்கு ஒண்ணுமே தெரியாது எல்லாத்துக்கும் ராசாதான் காரணம் அப்படின்னு பழியை அவரு மேல போட்டாங்க. கனிமொழிக்காக ராம்ஜெத்மலானிய வைச்சு வாதாடிவரு ஏன் ராசாவுக்காக ஒரு துரும்பு கூட கிள்ளிப்போடல, இன்னுமா திமுக காரங்க அவர நம்பு’றாங்க?

இதுவரைக்கும் ராசா ஏன் காப்பதிறதுக்கு முயற்சி எடுக்கல? அவரு தலித் என்பதால் தானோ எங்கிற கேள்விக்கு கலைஞர் தான் பதில் சொல்லனும்.கனிமொழிக்கு ஒரு நியாயம், ராசாவுக்கு ஒரு நியாயமா? அப்புறம் கலைஞ்ர் டிவி நிர்வாக இயக்குனரை கைது பண்றவங்க 60 சதவீத பங்கை வச்சிருக்கிற தயாளு அம்மா மேல நடவ்டிக்கை எடுக்கல. அவரோட பையன் மத்தியில மந்திரியா இருக்கிறதாலயா?

மத்திய மந்திரி பண்றதுக்கு பிரதமரும் பொறுப்புதானே, அவரு மேல ஒண்ணயும் காணோம். இப்ப ஸ்பெக்ரமுக்கு முழுப்பொறுப்பு திமுக தான் ங்கிறமாதிரி காங்கிரஸ்காரங்க பேசுறாங்க. 2000ம் ஆண்டிலிருந்து தொலைதொடர்பு கொள்கை மாறியிருக்கிறதா சொல்றாங்க, அப்ப பாஜக காங்கிரஸ் தயாநிதிமாறன் வரைக்கு சிக்குவாங்க. அடுத்து எஸ் பேண்ட் எப்ப வெளிய வருமோ? தெரியல. எல்லாரையும் அரெஸ்ட் பண்றது மட்டும் போதுமா, கொள்ளையடிச்ச பணம் அல்லது வருமான இழப்பு எப்படி வரப்போகுதோ? பிரதம மந்திரியை கூட அரெஸ்ட் பண்ணிடலாம், கார்ப்பரேட் மேல கைய வைக்கமுடியுமா என்ன?

புதன், 25 மே, 2011

அரசியல் நாகரீகம்

தமிழகத்தில் சட்டமன்றத்தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுக அமைச்சரவை பதவியேற்பு விழாவில் முக்கிய எதிர்கட்சியான திமுக சார்பில் யாரும் பங்கேற்கவில்லை, அழைப்பு விடுக்கப்பட்டதா எனவும் தெரியவில்லை. சென்ற திமுக ஆட்சி காலத்தில் தற்போதைய முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றக்கூட்டத்தில் ஒரு முறை கூட பங்கேற்கவில்லை. திமுகவும் அதிமுகவும் ஏன் இபடி எதிரிக்கட்சியாக இருக்கின்றன என்று தெரியவில்லை. இரண்டு கட்சிகளுக்கும் கொள்கை அளவில் பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லை. பெரியார் வழி அண்ணா வழி என்று சொல்லிக்கொண்டவர்கள் அரசியல் நாகரீகம் கூட தெரியாமல் இத்தனை ஆண்டுகள் ஆட்சி நடத்தி வருகின்றனர். மாநில வளர்ச்சியை மனதில் கொண்டு மத்தியில் பாராளுமன்றத்தில் இருகட்சிகளும் ஒருமித்தகுரல் எழுப்ப அதன் தலைமைகள் தடையாக உள்ளன.

கேரளாவில் ஐக்கிய ஜனநாயக முண்ணனி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் உம்மன்சாண்டி தலைமையில் அமைச்சரவை பதவியேற்புவிழா நடைபெற்றது, அதற்கு எதிர்கட்சியான கம்யூனிஸ்ட் சார்பில் முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் உட்பட மூத்த முன்னாள் அமைச்சர்கள் விழாவில் கலந்துகொண்டு வெற்றிபெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். அரசியல் அரங்கில் இடதுசாரிகளும் காங்கிரஸும் கொள்கையளவில் எதிரெதிர் நிலைப்பாடு கொண்டிருந்தாலும் அதை மனித உறவுகளில் நட்புரீதியாக இருக்கின்றனர்.

அதேபோன்று மேற்குவங்கத்தில் 34வருட இடதுமுண்ணனியை வீழ்த்தி முதலமைச்சராக பதவியேற்ற மம்தா பானர்ஜி தலைமையில் அமைச்சரவை பதவியேற்பு விழாவிலும் முன்னாள் முதல்வரான புத்ததேவ் பட்டாச்சார்யா, இடது முண்ணனியின் ஒருங்கிணைப்பாளர் பீமன்போஸ் மற்றும் இடதுசாரிகட்சிகளைச் சார்ந்த முன்னாள் அமைச்சர்களும் விழாவில் பங்கேற்றனர். மேற்குவங்கத்தில் மாவோயிஸ்ட் ஆதரவுடன் மார்க்சிஸ்ட் கட்சியினரையும் இடதுசாரி ஆதரவாளர்களையும் திரிணாமூல் கட்சியினர் கொன்றுவருகின்றனர். அரசியல் கட்சி என்பது வேறு மாநில நிர்வாகம் என்பது வேறு. நிர்வாகம் அனைத்துபிரிவு மக்களையும் உள்ளடக்கியது. இப்படிப்பட்ட அரசியல் முதிர்ச்சியும் நாகரீகமும் நாடு முழுவதும் வேண்டும்.

தமிழகத்தில் இப்படிப்பட்ட அரசியல் நாகரீகம் எப்போது மலருமோ?

திங்கள், 16 மே, 2011

தமிழக தேர்தல் முடிவுகள்

தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் இப்படி ஏகபோகத்திற்கு கொண்டுபோகுமென்று யாருமே கருதவில்லை, எல்லோரும் பார்க்கிற வாசிக்கிற மீடியாக்களை வைத்துதான் இந்த அணி ஜெயிக்கும் அந்த அணி ஜெயிக்கும் என்று சொல்றோம். Opinion poll, Exit poll எல்லாம் அந்த பத்திரிக்கைகள் யார் ஆட்சிக்கு வரவேண்டுமென்று நினைக்கிறார்களோ அந்த மாதிரி சர்வே எடுக்கிறார்கள். எல்லா சர்வேயும் பொய்யாய் போனது தமிழ்நாட்டில். ஊழல் ஆட்சியும் குடும்ப ஆட்சியும் ஒழியவேண்டும் நினைத்தவர்கள் இப்போது சர்வாதிகாரத்திற்கு சொந்த செலவில் வழிசெய்து விட்டோமே என மக்கள் அஞ்சுகிறார்கள். 500 கோடிகள் செலவு செய்து புதிய மாளிகையில் அவசர அவசரமாக முன்னாள் முதல்வர் கருணாநிதி குடிபோனார், இப்ப அவரு கட்டின மாளிகையில நான் எப்படி உட்காருவேன், வெள்ளைக்காரன் கட்டுனதிலேயெ இருந்துக்கிறேன்னு ஆரம்பிச்சாட்டாங்க.

திமுக கூட்டணி தேர்தலில் தோற்றதற்கு என்ன காரணம் என ஆராயத்தேவையில்லை, குடும்பத்தைச் சுற்றியே பதவிகள், சுயநலத்திற்க்காக மத்தியில் அமைச்சரவையில் பங்குகொண்டு ஊழலில் பெரும்பங்கு வகித்தது, நான்கு வருடங்களாக மின் தட்டுப்பாடு அதே நிலைமை இன்று வரை, விலைவாசி உயர்வு அதுக்கு வாங்கும் சக்தி ஜாஸ்தியாகிபோச்சு என சப்பைக்கட்டு, சாலைகள் போட்டார்கள்,பாலங்கள் கட்டினார்கள் இல்லையென்று சொல்லமுடியாது மக்கள் நலனைவிட மந்திரிகள் நாலுகாசு பார்ப்பதற்க்காகவே பணி செய்தார்கள். அப்படி இல்லையென்று அவர்கள் கொடுத்த சொத்துவிவரமே (சொன்னது பாதியா?) காமிக்குதே. கட்சிக்காரர்கள் பல இடங்களில் நிலங்களை வளைத்துப் போட்டார்கள். இப்ப கருணாநிதிக்கு தில்லியில கனிமொழியால பிரச்சனை, தமிழ்நாட்டில தேர்தல் முடிவால பிரச்சனை. மத்தியில கூட்டணியிலிருந்து கழட்டிவிட்டுறுவாங்களோ ங்கிற பயம்வேற.

முன்னாடியெல்லாம் தேர்தலுக்கு திமுக ஐம்பெரும் தலைவர்கள் இருந்தார்கள், இப்ப மானாட மயிலாட ஜட்ஜூகள், வடிவேலு, குஷ்பூ நிலைமை இப்படி ஆகிப்போச்சு, வடிவேலு இப்ப வெளியில தலகாட்டமுடியல. விஜயகாந்த் எப்பவும் போதையில் இருக்கார்னு சொல்லி கூலிக்காக கூவுனாறு, இப்ப வடிவேலு வரப்போற ஆபத்தை நினைச்சு பீதியில இருக்காரோ, சினிமாவுல அடிவாங்கியே பழக்கமான வடிவேலுவுக்கு நிஜவாழ்க்கையிலுமாவா? பாவம்..

இந்தத் தேர்தல்ல திமுக கூட்டணி தோற்கிறத்துக்கு முக்கிய காரணம் திமுகவும் காங்கிரஸும் உள்குத்து வேலைய காமிச்சிட்டாங்கலோ என்னவோ, 63 பேர் நாயன்மார்களாக மாறுவாங்கன்னு பாத்தா பஞ்சபாண்டவரா ஆயிட்டாங்க. ஒரு தகுதியான எதிர்க்கட்சியாகூட திமுக இல்லாது போயிருச்சே. கூட்டணி சேர்ந்து போட்டியிட்டா கூட்டணிக்குள்ளேயெ ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஆசயிருக்கும், பெரிய கட்சி எப்படியாவது தனியா ஆட்சி அமைக்கிறமாதிரி ஜெயிக்கனும், சின்னக்கட்சிகளுக்கு நம்ம இல்லாம ஆட்சி அமையக்கூடாதுங்கிற ஆசயிருக்கும்.இப்படி ரிசல்டு கடிவாளம் இல்லாத குதிரை மாதிரி ஆகிப்போச்செங்கிற கவலைதான் நமக்கு. அஞ்சு வருசத்துக்கும் அராஜகம் பண்ணமுடியாது இடையில லோக்சபா தேர்தல் வருது, முன்னாடியே பஞ்சாயத்துத் தேர்தல் வருது அதான் கொஞ்சம் ஆறுதல். பாஜகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்கலங்கிறது நல்ல செய்திதான். இந்த தடவை தமிழ்நாட்டில 20 இடதுசாரி உறுப்பினர்கள் சட்டசபைக்கு போறாங்க. இந்தக் கூட்டணி எத்தனை மாதத்திற்கென்று தெரியவில்லை, அது அம்மாவோட ஆட்சியைப் பொறுத்தது.

இந்த சமுதாய அமைப்பில் இந்த ஆட்சிக்கு அந்த ஆட்சி வந்தா நல்லாயிருக்குமோ என மக்கள் நினைக்கிறாங்க, ஆட்சி மாற்றங்கிறது ஒருத்தரை விரட்டுறதுக்கு பயன்படுது ஆனா நல்லாட்சிக்கு வழியிருக்கான்னு தெரியில. இந்த தேர்தல் முடிவு மூலமா மம்தா பானர்ஜி உலகம்பூராவும் பிரபலமாயிட்டாங்க , கத்தார்ல ஒரு பேப்பர்ல முதல்பக்கத்துல அந்த செய்தி வருது, ஏன் கம்யூனிஸ்ட்களை தோற்கடித்தற்காக.கேரளாவில் இடதுசாரிகள் ஆட்சியமைக்கிற அளவிற்கு சீட் கிடைக்கவில்லை யென்றாலும் சட்டமன்றத்தில் பெரிய கட்சியாக இருக்கிறார்கள். மேற்குவங்கத்தைப் பற்றி தனியாக ஒரு பதிவிடவேண்டும். பொறுமையாக வாசித்ததற்கு நன்றி.

ஞாயிறு, 8 மே, 2011

சோளகர் தொட்டி

நம் நாட்டில் நடக்கிற மனித உரிமை மீறல் பற்றிய செய்திகள் வருவதேயில்லை, அடுத்த நாடுகளில் நடக்கிற மனித உரிமைகளைப் பற்றி இங்கே நிறைய விவாதிக்கப்படுகிறது அது ஒரு வகை அரசியல். மனித உரிமை மீறல்களை யார் செய்கிறார்கள்? தீவிரவாதிகளா? சமூகவிரோதிகளா? ரெளடிகளா? இல்லை. போலீஸூம் ராணுவமும் தான். இங்கே அரசு செய்யும் அடக்குமுறைகள் நியாயப்படுத்தப் படுகின்றன. பாதுகாப்புப் படையினரின் அத்துமீறல்கள் ஊடகங்களுக்கு வருவதில்லை, அப்படி வந்தாலும் எடிட்டரின் அறையிலேயெ அந்த செய்திகள் கொல்லப்படுகின்றன. அவர்கள் ஆளுகிறவர்களை காப்பாற்றுகிறார்கள். இந்தியாவின் பிரச்சனையாக இருக்கச்கூடிய காஷ்மீரிலும், மணிப்பூரிலும் இந்திய ராணுவம் நடத்திய மனித உரிமைமீறல்களும் இப்போதுதான் வெளிச்சத்திற்கு வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடுபவர்களை இங்கெ தேசவிரோதிகளாக சித்தரிக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் ராணுவத்தின் முகமூடியைக் கிழிப்பதால்தான். சமூகத்தில் அடித்தட்டு மக்கள்தான் தாக்குதல்களுக்கு உள்ளாகிறார்கள். பொருளாதாரரீதியில் பினதங்கியவர்களும் சாதியில் கடைநிலையில் இருப்பவர்களான ‘தலித் மக்கள்’ ஆதிக்கசாதியினராலும் காவல்துறையினராலும் தாக்கப்படுகிறார்கள் என்பதை நாம் பார்க்கிறோம். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 3 தலித் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர்; ஒவ்வொரு வாரமும் 13 தலித்துகள் கொல்லப்படுகின்றனர்; ஒவ்வொரு நாளும் தலித்துகளுக்கெதிராக 27 வன்கொடுமைகள் நிகழ்த்தப்படுகின்றன, இது அரசே கொடுத்த தகவல்கள். இது போன்று பொதுமக்களிடமிருந்து அந்நியமாக வசித்துவருகிற பழங்குடிமக்களும் காவல்துறையால் தாக்குதலுக்குள்ளான செய்தியை வாச்சாத்தி சம்பவத்தால் அறிந்தோம். அந்த பிரச்சனையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கையிலெடுத்துப் போராடியதால் வெளிச்சத்திற்கு வந்தது.

‘சோளகர் தொட்டி’ நாவல் மூலமாகத்தான் இப்படி ஒரு இனம் இந்தியாவில் தமிழ்நாட்டில் இருப்பதாக அறிந்தேன். இன்றைக்கு பூர்வகுடிகள் என்றால் அவர்கள் பழங்குடியினர் மட்டுமே, மற்ற எல்லா இனமக்களும் ஏதோ ஒரு இடத்திலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் தான். அப்படிப்பட்ட மண்ணின் மைந்தர்கள் நாகரீக வாசிகளால் வஞ்சிக்கப்படுகின்றனர். இந்நாவலின் தொடக்கத்தில் அம்மக்களின் வாழ்க்கைமுறையை சொல்கிறது. பிற்பகுதியில் சந்தனக்கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டையால், பாதுகாப்புப் படையினரால் அந்த இனமக்கள் விசாரணை என்ற பெயரில் சித்தரவதைக்குள்ளாகிறார்கள். நாகரீக மனிதர்களைப் போல் அவர்கள் தனியாக சொத்துசேர்ப்பதில்லை. காடுகளில் வசிப்பவர்களால் காடுகள் அழியவேயில்லை, வனத்தை காப்பதற்கு வேலியாக இருப்பவர்கள் தான் ‘மேய்ந்தார்கள்’. சந்தனமரக் கடத்தலுக்கும் அந்த மக்களுக்கும் எந்த சம்பந்தமுமே இல்லை, அவர்கள் வனத்தின் எல்லையில் குடியிருந்தாலேயே, அவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் விசாரணை என்ற பெயரில் ஆண்களை தனிமுகாம்களில் அடைத்து சித்தரவதை செய்தனர், பெண்களை கைதுசெய்து முகாம்களில் அடைத்து காவலர்கள் பாலியல் வண்புணர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள். அந்தமக்களுக்கு தெரியாத தகவல்களை காவல்துறையினர் பெறுவதற்கு அவரகளை பல்வேறு சித்திரவதைக் குள்ளாக்கினார்கள், விரல் நகங்களை பிடிங்குதல், மின்சாரத்தால் ஷாக் கொடுப்பது, கைது செய்யப்பட்டவர்கள் சிறுவர்கள் என்றும் பாராமல் அவர்களை கண்மூடித்தனமாக தாக்குவது, பெண்களை தினமும் பாலியல் வல்லுறவு செய்வது, அவர்களின் ஆடைகளை கழைந்து எல்லாரையும் நிர்வாணத்தைக் காணுமாறு கட்டாயப்படுத்தி அடிப்பது. இது போன்ற எண்ணற்ற கொடுமைகள் நாவலை வாசிக்கும் போது மனம் கனக்கிறது, இப்படிப்பட்ட சமூகத்தில் தான் வாழுகிறோமா? இதற்கெல்லாம் ஆளுபவர்கள் தானே பொறுப்பு. வீரப்பனை பிடிக்கமுடியாத நேரத்தில் முகாம்களில் சித்தரவதைக்குள்ளான சோளகர்களுக்கு வீரப்பன் கூட்டம் அணிகின்ற ‘யூனிபார்ம்’ களை காவல்துறையே அணிவித்து சுட்டுக்கொன்றுவிட்டு மோதலில் கொல்லப்பட்டனர் என்று மீடியாக்களுக்கு சொல்லியிருக்கிறார்கள்.

நாவலை எழுதிய திரு.ச.பாலமுருகன் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மனித உரிமை அமைப்புகளில் இணைந்து போராடியவர். சோளகர் இனத்தைப் பற்றி அறிந்துகொள்ளவும் அரசு இயந்திரத்தால் எப்படி இந்த சமூகம் கொடூர அடக்குமுறைக்கு உள்ளானது பற்றியும் தெரிந்துகொள்ள இந்நாவலை வாசிக்கவேண்டும்.

வியாழன், 5 மே, 2011

சமச்சீர் மின்வெட்டு

தமிழ்நாட்டில மூன்று வருஷமா தீராத பிரச்சனை மின்வெட்டுதான், சரியான திட்டம் போடாம அவசர கோலத்துக்கு எல்லாக் கம்பெனியையும் தமிழ்நாட்டுக்கு கூப்பிட்டு இங்க வந்து தொழில் செய்யின்னு ஒப்பந்தம் போட்டாங்க.அதே சமயத்தில மின்சார உற்பத்திக்கும் திட்டம் போட்டாங்க அது ரெம்ப வருஷமா காகிதத்தலேயே இருந்தது, ஆனா பன்னாட்டு கார் கம்பெனி, செல்போன் கம்பெனியெல்லாம் உடனே தொடங்கிவிட்டார்கள். அவர்களுக்கு தடையில்லா மின்சாரத்தை அளிக்க ஒப்புக்கொண்டார்கள். இருக்கிற மின்சாரத்தை எல்லோரும் பகிர்ந்துகொள்வதற்கு பேருதான் மின்வெட்டு, ஆனா இந்த மின்வெட்டிற்கும் வர்க்க வேறுபாடு இருக்குது. எல்லா ஊர்லயும் ஒரே மாதிரி மின்வெட்டு கிடையாது. நகரங்களில் 2மணிநேரம் மின்வெட்டுனா கிராமத்தில அது 4 மணிநேரம் ,6 மணிநேரம் கூட கட் பண்ணுவாங்க, நகரத்திலதான பணக்காரங்க இருக்காங்க. சென்னையில் மின்வெட்டே கிடையாது அங்கே தான் நிறைய பன்னாட்டு நிறுவனக்கள் இருக்குதே, அதே உள்ளூர் தொழில் செய்பவர்களுக்கு வேறமாதிரி. இந்தமாதிரி முக்கியத்துவம் கொடுக்கிறதுக்கு என்ன வியாக்யானம் கூட கொடுக்கலாம். ஆனா ரிசல்ட் மக்களை நஷ்டப்படுத்தி பன்னாட்டு நிறுவனங்களை வாழ்வைக்கிற கொள்கைதான் காரணம்.

நேற்று கோவையில் நடந்த மின்வெட்டிற்கெதிரான போராட்டத்தை ‘தினமலரும் தினமணியும் ஆதரித்தே செய்தி வெளியிட்டார்கள். தினமலர் இப்படி “தமிழக அரசின் மின்வெட்டை கண்டித்து, கோவையில் நேற்று பிரமாண்ட ஊர்வலம் நடந்ததால், அந்த நகரமே குலுங்கியது. இதேபோல், மாநிலத்தின் மற்ற பகுதிகளில் உள்ள பல ஊர்களிலும் ஆர்ப்பாட்டம் மற்றும் கடையடைப்பு நடந்தது” செய்தி வெளியிட்டுள்ளது. ஏனென்றால் இந்த மின்வெட்டிற்கெதிரான போராட்டம் நடத்தியவர்கள் சிறுதொழில் முதல் பெரிய நிறுவனங்களின் உரிமையாளர்கள். அரசுக்கெதிராக அரசு ஊழியர்களோ அல்லது தனியார் நிறுவனத்தில் வேலைசெய்யும் தொழிலாளர்களோ தங்கள் பிரச்சனைகளுக்காக போராட்டம் நடத்தினால் தினமலர் நக்கல் செய்து எழுதும். பொதுமக்கள் கஷ்டப்படுகிற மாதிரி எழுதுவாங்க.. சாலைமறியல், ஊர்வலத்திற்கு தடைவிதிக்கவேண்டும் என்று எழுதுவார்கள். இங்கே தான் அவர்களின் வர்க்கசிந்தனை வெளிப்படுகிறது. எப்படி தமிழகத்தின் சிறுதொழில் செய்பவர்கள் ,வணிகர்கள் தங்கள் பிரச்ச்னைகளை கோரிக்கைகள், பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்படாதபோது பொதுவெளியில் மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக போராடுகிறார்களோ அதே நியாயம் தான் ஒவ்வொரு துறை ஊழியர்களுக்கும் பொருந்தும். இந்த மின்வெட்டினால் தொழிற்துறையினர் பாதிக்கப்படும்போது அதில் தொழிலாளர்களும் வேலையிழக்கிறார்கள். இந்த போராட்டத்தில் தொழிலாளர்களும் பங்கேற்றது மிகவும் பாராட்டத்தக்கது.மத்திய அமைச்சரவையில் எந்த இலாகாக்கள் வேண்டும் என்பதை பிடிவாதமாக பெறும் கழக அரசு பற்றாக்குறை மின்சாரத்தை மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரத்தை பெறுவதற்கு என்ன தயக்கமோ?

வாழ்வும் தாழ்வும்

கடந்தபோன வரலாற்றிலும் சரி நிகழ்கால வாழ்க்கையிலும் சரி சிந்தனையும் கருத்தும் இரண்டு விதமாக இருக்கிறது, ஒன்று ஆளும் வர்க்கத்தின் சிந்தனை மற்றொன்று அடித்தட்டு மக்களின் சிந்தனை. இந்த சிந்தனையையும் கருத்தையும் பத்திரிக்கைகள், ஊடகங்கள், இலக்கியம் வாயிலாக பார்க்கிறோம். ஏகப்பட்ட அரசியல் கட்சிகள் இருந்தாலும் எல்லாரையும் இடதுசாரியா, வலதுசாரியா வென்று பிரித்துவிடலாம், சிலபேர் நாங்க ரெண்டு பக்கமும் இல்ல நடுவில இருக்கிறோம் என்று சொன்னால் அது ஏமாற்றுவேலை. எப்போதுமே ஆட்சியை புகழ்ந்து எழுதுவதினாலும் பேசினாலும் ஆட்சியாளர்களுக்குப் பிடிக்கும். நீங்கள் ஆட்சியை விமர்சித்து எழுதினீர்களோ பேசினீர்களோ என்றால் தேசவிரோதிகளாக சித்தரிப்பார்கள். நீங்கள் இலங்கையில் நடந்த அல்லது நடக்கிற இனப்படுகொலையையும் மனித உரிமை மீறல்களையும் குறித்து பேசினால் ‘அரசு’ கவலைப்படுவதில்லை. அதே சமயம் நீங்கள் இந்திய ராணுவம் காஷ்மீரிலும் இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளிலும் அத்துமீறலைப் பற்றி எழுதினால் உங்கள் மீது தேசவிரோத வழக்கு கூட வந்துவிடும். மத்தியில் பாஜக ஆட்சி நடக்கும்போது ‘இந்தியா ஒளிர்கிறது’ பிரச்சாரத்தை தேசபக்தியாக எல்லா ஊடகங்களும் எழுதினார்கள் பேசினார்கள். யாருக்கான இந்தியா ஒளிர்கிறது என்பது தெரிந்துவிட்டது.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துள்ளதாக அரசோட புள்ளிவிவரங்களே சொல்கின்றன. இந்தியாவிக்குள்ளேயே இரண்டு இந்தியா இருக்கிறதாக காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தியே ஒத்துக்கொண்டார், ஆனால் அந்த இடைவெளியைக் குறைப்பதற்கான திட்டம் ஆட்சியாளர்களிடம் இல்லை. வருடத்திற்கு வருடம் நாட்டின் பில்லிணியர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது அதே சமயத்தில ஐநாவின் Human Development indicatorல் இந்தியாவின் Rank மோசமாகிக்கொண்டே வருகிறது. Forbes நிறுவனம் பில்லிணியர்களின் ரேஸ் பத்தி எழுதிக்கிட்டேயிருக்காங்க, அதுல இந்தியா 4வது இடத்தில இருக்குது, ஆனா HDIல் 134வது இடம் இருக்கு. பில்லினியர்கள் அமெரிக்கா,ரஷ்யா, ஜெர்மனிக்கு அடுத்தபடியா இந்தியாவுலதான் அதிகம் பேர் இருக்காங்க. பில்லிணியர்களோட சொத்துமதிப்பை வச்சுப்பார்த்தா இந்தியா ரெண்டாவது இடத்துல இருக்குது ரஷ்யாவிலும் ஜெர்மனியிலும் சும்மா நானும் பில்லினியர் அப்படி எண்ணிக்கையில் இருக்காங்களே தவிர அவங்ககிட்ட அதிகமா ‘பில்லியண் டாலர்’ இல்ல. இப்படி ஒரு சமூகத்தில் 1சதம் பேரின் வளர்ச்சியைத்தான் ஒளிர்கிறதென்று கொண்டாடுகிறோம். இன்னும் நடுத்தர வர்க்கத்தில் பத்து சதவீதம்பேர் நல்ல முன்னேற்றம் அடைந்திருக்கிறார்கள். ஒளிரும் இந்தியாவின் கிராமப்புறங்களில் சிறுவிவசாயிகள் இந்த பதினைந்து வருடத்தில் சுமார் 2,00,000 க்கும் மேற்ப்பட்டவர்கள் கடன்சுமையால் தற்கொலை செய்துகொண்டார்கள். அவர்களோட கடன்சுமை ரூ 50,000 இருந்து 2 லட்சம் வரைக்கும் இருக்கலாம் இது ஐடி யில் வேலைபார்க்கிறவரோட ஒருமாச சம்பளம். இப்படி ஒருபகுதியினர் வேகமாக வளர்வதும் மறுபுறம் அதிக எண்ணிக்கையில் மக்கள் வாழ்க்கை சிக்கலுக்கு உள்ளாவதற்கும் என்ன காரணம். அவங்களோட தலைவிதியா இல்ல அரசாங்கத்தோட கொள்கைமுடிவா? யோசிக்கணும்.

ஞாயிறு, 1 மே, 2011

மே தின வாழ்த்துக்கள்சிகாகோ நகரில் 1886ல் மே முதல் நாள் 8மணி நேர வேலைக்கான போராட்டத்தின் அடையாளமே இன்று உலகெங்கும் உழைக்கும் வர்க்கம் மேதின நாளாக கொண்டாடிவருகிறது. இந்தியாவில் இன்னும் 8மணிநேர வேலையென்பது எல்லாருக்கும் வந்துவிடவில்லை, நாட்டின் மக்கள் தொகை பெருகியது போலவும் வளர்ச்சி விகிதம் அதிகரித்தது போன்றும் வேலைவாய்ப்புகள் பெருகவில்லை. முறைசாரா தொழிலாளர்கள் பெருகியுள்ளனர், அவர்களுக்கு எந்தவித பணிப்பாதுகாப்போ, மருத்து்வசதியோ, சுத்தமான பணிச்சூழலோயில்லை. மாறாக நாட்டின் பில்லிணியர்களின் எண்ணிக்கை வேகமாக வளர்ந்துவருகிறது. உழைப்பாளி மக்களின் குறைந்தபட்ச தொழிலாளர் நலச்சட்டங்களை அரசு தொழில் வளர்ச்சியின் பெயரால் அமல்படுத்தமறுக்கின்றன.போராடுகின்ற தொழிலாளர்களை தமிழன் என்றும் மனிதன் என்றும் பாராமல் பன்னாட்டு நிறுவனக்களின் நலன்களுக்காக தடிகொண்டு அடக்குகிறார்கள்.

இந்த நாளில் தொழிலாளர்கள் சாதி, மதம், இனம், மொழி வேறுபாட்டின்றி ஒரே வர்க்கமென்று உறுதிகொள்ள சபதமெடுப்போம். எல்லா அரசியல் கட்சிகளும் பாரபட்சமின்றி மேதின விழாவை கொண்டாடுகிறார்கள், தொழிலாளர்களாகிய நாம், யார் நம் பக்கம் நிற்கிறார்கள், நமக்காக சட்டமன்றத்திலும், பாராளுமன்றத்திலும், வீதிகளிலும் போராடுகிறார்கள் என்பதை அனுபவப்பூர்வமாக உணரவேண்டும். தொழிலாளர்களின் அடிப்படை கோரிக்கைகள் நிறைவேறாதபோது வேறுவழியின்றி வேலைநிறுத்திற்கு தள்ளப்படுகிறார்கள். இதை நமது ஊடகங்கள் கொச்சைப்படுத்துகின்றன. ஒரு துறையினரின் ஊழியர்களின் போராட்டங்கள் அடுத்ததுறை ஊழியர்களால் இழிவுசெய்யப்படுகிறது. இதை தவிர்த்து வர்க்க ஒற்றுமையின் மூலம் ஒற்றுமை பேணப்படவேண்டும்.

உலகத்தொழிலாளர்கள் அனைவருக்கும் மேதின வாழ்த்துக்கள்!!!