சனி, 19 ஏப்ரல், 2014

உலகத்திரைப்படங்கள் -மிருனாள்சென்


வங்கத்தின் சிறந்த திரைப்பட இயக்குனர்களில் மிருனாள்சென் முக்கியமானவர், சிறந்த சமூக படங்களை இயக்கியிருக்கிறார். அவருடைய திரைப்படங்கள் வசூலில் சாதனை படைக்காவிட்டாலும் சமூகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளன. 1980 களில் அவர் சர்வதேச திரைப்படத்திற்கான விருதுக்கு தேர்வு செய்யும் குழுவில் இடம் பெற்றிருந்தார். அவர் தன்னுடைய சுயசரிதையில் தனக்குப் பிடித்த திரைப்படங்களையும், சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட திரைப்படங்களைப் பற்றி எழுதியிருக்கிறார். அவர் குறிப்பிட்ட உலக திரைப்படங்கள் இதோ...

Au Revoir Les Enfants (1987) Louis Malle - french
The Tin Drum (1979) -  Volker Schlöndorff - German ( Based on Gunter gross novel)
The Forgotten Hero (2004) - Shyam Benegal- Hindi
The Passion of Joan of Arc- Carl Theodor Dreyer - French
Aparajito –(1956) - Satyajit Ray- Bengali
Pather Panchali (1955)- Satyajit Ray- Bengali
Ajantrik – Ritwik Ghatak – Bengali
The Great Dictator (1940) – Charlie Chaplin –English
Minamata (1971) -Noriaki Tsuchimoto – Japan
Jour de Fête ("The Big Day 1949) - Jacques Tati. –French
The Kid (1921)  - Charlie Chaplin
London can take it  (1940) - Humphrey Jennings – English
This Land Is Mine ( 1943)  -Jean Renoir  -English

The Battle of Algiers (1966)- Gillo Pontecorvo –French

His knife in the water (1962) - Roman Polański, - Poland

The Hour of the Furnaces (1968) -  Octavio Getino and Fernando Solanas – Spanish 

Harvest: 3,000 Years is a 1976 Ethiopian film directed by Haile Gerima. 

Soleil O (Oh, Sun) is a 1967 French-Mauritanian drama film directed by Med Hondo. 

Arsenic and Old Lace is a 1944 American dark comedy film directed by Frank Capra 

The Loneliness of the Long Distance Runner is a 1962 film,- Tony Richardson- English 

if.... is a 1968 British drama film produced and directed by Lindsay Anderson 

O Lucky Man! is a 1973 British comedy-drama fantasy film –Lindsay Anderson 

Britannia Hospital is a 1982 black comedy film by British director Lindsay Anderson 

Saturday Night and Sunday Morning is a 1960 produced by Tony Richardson.     

Ekdin Pratidin – Mrinal Sen – Bengali 

Arohan (The Ascent) is 1982 Hindi film by Shyam Benegal, 

Stagecoach is a 1939 American Western film directed by John Ford 

The Grapes of Wrath is a 1940 drama film directed by John Ford. 

Chariots of Fire is a 1981 British historical drama film 

First Name: Carmen (French: Prénom Carmen) is a 1983 film by Jean-Luc Godard. 

The negro street – Eugene Palay 

Knife in the Head German is a 1978  German  film directed by Reinhard Hauff 

The Big Parade is a 1925 American silent film directed by King Vidor 

The Fountainhead is a 1949 American film directed by King Vidor 

Beyond the Forest is a 1949 American film noir directed by King Vidor 

War and Peace is the first English-language film – King vidor 

Matadayo 1993 - Akira Kurosawa. – Japan 

Diary for My Children  is a 1984 Hungarian drama film directed by Márta Mészáros. 

Under the Volcano is a 1984 film directed in Mexico by John Huston 

Kaos  is a 1984 Italian drama film directed by Paolo and Vittorio Taviani 

And the Ship Sails On (Italian: E la nave va) is a 1983 Italian film by Federico Fellini. 

Paris, Texas is a 1984 drama film directed by Wim Wenders – English 

The Spanish Earth (1937) - Joris Ivens – Spain 

Kharij  is a 1982 Bengali film by Mrinal Sen. 

The Battle of Chile is a documentary film directed by the Chilean Patricio Guzman 

The Traitor is a 1957 British drama film directed by Michael McCarthy  

The Seven Headed Lion is a 1970 directed by Glauber Rocha 

Antônio das Mortes) is a 1969 Brazilian film directed by Glauber Rocha. 

12 Angry Men is a 1957 American drama film directed by Sidney Lumet 

Mephisto is the title of a 1981 film directed by István Szabó 

Last Year in Marienbad is a 1961 French film directed by Alain Resnais

The Bicycle Thief, is director Vittorio De Sica's – Italian 

The Ballad of Narayama  is a 1983 Japanese film by director Shōhei Imamura 

Nostalghia is a 1983 Soviet/Italian film, directed by Andrei Tarkovsky 

The childhood of ivan 1962 Soviet film directed by Andrei Tarkovsky 

L'Argent ("Money") is a 1983 French drama film directed by Robert Bresson


வெள்ளி, 11 ஏப்ரல், 2014

சாப்ளின் கதை -- 2


 'The Kid' என்ற திரைப்படத்தில் ஓர் தாய் பெற்ற குழந்தையை வளர்க்க முடியாமல் பெரிய கனவான் வீட்டுக்கு முன்னால் நின்ற காரின் இருக்கையில் குழந்தையை வைத்துவிட்டு ‘தயவு செய்து அன்புகாட்டுங்கள்’ என்ற சீட்டு எழுதிவைத்து விட்டுப் போய்விடுவார். சார்லியிடம் வந்துசேரும் குழந்தையை வளர்த்து வருவார், குழந்தைக்கு உடல்நலமில்லாத நேரத்தில் மருத்துவரை அணுகியபோது அனாதை குழந்தையை வளர்த்துவருகிறேன் என்று சொல்வார், உடனே அனாதை குழந்தைகள் மையத்திலிருந்து குழந்தையை வலுக்கட்டாயமாக கொண்டு செல்லும்போது குழந்தையின் உணர்ச்சி ஒரு தாயிடமிருந்து பிரிக்கப்பட்டதாக இருக்கும். தன்னுடைய வாழ்க்கையில் நடந்த துயர சம்பவத்தை சினிமாவில் காட்சியாக்கியிருப்பார். அனாதை களுக்கான பள்ளியிலும் தொழிலகத்திலும் இருந்த சார்லியையும் ஸிட்னியையும் தாய் ஹன்னா, என்னால் சொந்தவீடு அமைத்துக் கொள்ளமுடியும் என்று அரசாங்கத்திற்கு வாக்குறுதி அளித்தபிறகு குழந்தைகளை அழைத்துச்செல்ல அனுமதி தந்தார்கள். பட்டினியோடு வாழ்ந்தாலும் அம்மாவின் அண்மை சார்லிக்கு பூச்செண்டாக இருந்தது.

அம்மா வீட்டிலிருந்தபடியே தையல் வேலைகளை செய்து குழந்தைகளை வளர்த்தார். அப்போது சார்லிக்கும், ஸிட்னிக்கும் பொழுதுபோக்கிற்காக நாடகம் நடித்து காண்பித்தார். எங்கிருந்தாவது கிடைக்கும் செய்தித்தாள்களில் இருக்கும் நகைச்சுவையை வாசித்துச் சிரித்து துன்பத்தை போக்குவார். சிலவாரங்கள் கழித்து அம்மாவுக்கு ‘மனநோய்’ வந்ததால் மிகவும் ஏமாற்றமாக போனது. அப்போது சார்லியின் அப்பா இன்னொரு பெண்ணுடன் வாழ்க்கை நடத்திவந்தார். அம்மாவை ‘மனநோய் விடுதிக்கு’ அழைத்துச் சென்றவுடன் சார்லியையும் ஸிட்னியையும் அரசாங்க அதிகாரிகள் அப்பாவிடம் கொண்டுசென்றார்கள். அங்கே லூஸி என்ற பெண்மணியும் அவளுடைய மூன்றுவயது மகனும் இருந்தார்கள். வேண்டாத விருந்தாளிகளின் புதுவரவால் லூஸி எரிச்சலடைந்தாள். சிறுவர்களை வேலைவாங்கிக் கொண்டு உணவுகொடுத்தாள். தந்தையைப் போல லூஸியும் பெரிய குடிகாரியாக இருந்தாள். எப்போதும் அவளுடைய அண்மை சிறுவன் சார்லிக்கு பயத்தைக் கொடுத்தது. அங்கிருந்தபடியே பள்ளிக்கு சென்றான். பள்ளிநேரம் முடிந்தவுடன் நேராக வீட்டுக்குவந்து சில்லரை வேலைகளைச் செய்யவேண்டும். ஒருநாள் மாலைநேரம் பள்ளிவிட்டு வீட்டுக்கு வந்தபோது வீடு பூட்டியிருந்தது, வெகுநேரம் காத்திருந்தபோதும் யாரும் வரவில்லை. அப்படியே பசியோடு கால்போன போக்கில் நடந்தான், சாலைகளின் ஓரத்தில் விற்கும் உணவுப் பண்டங்களை பார்த்து பசி தீர்த்துக்கொண்டான். திரும்பி வீட்டுக்கு வந்தபோது இரவாகிவிட்டது அப்போதும் பூட்டிய கதவு திறக்கப்படவில்லை. பயத்தில் பசியும் மறந்தான், அருகே இருந்த பூங்காவின் அருகே சாலையோரத்தில் படுத்து உறங்கினான். பிறகு ரோந்துவந்த போலிஸ்காரர்கள் வீட்டிற்கு கொண்டு சேர்த்தார்கள்.

அம்மா சிகிச்சை முடிந்து வீட்டுக்கு திரும்பினார்கள், குறைந்த வாடகையில் ஒருஅறையுள்ள வீட்டை வாடகைக்கு பிடித்தவுடன் லூஸி யிடமிருந்து சிறுவர்களை அழைத்துச்சென்றார்கள். ஸிட்னி பனிரெண்டு வயதில் கப்பலில் வேலைக்குச் சென்றான். அம்மா மனநோய் காலத்தில் தேவாலயத்திற்கு அடிக்கடி சென்றார்கள். அங்கிருந்து சிறுசிறு வேலைகள் கிடைத்தன.  ஜாக்சன் என்பவர் குழந்தைகளை வைத்து சிறிய நாடகக் கம்பெனி நடத்திவந்தார். சார்லியின் தந்தை அங்கே சார்லியை சேர்த்துவிட்டார். எட்டுவயது சார்லி நாடகம் நடிப்பதற்கு இங்கிலாந்து முழுதும் சுற்றிவந்தான். அந்த வேலை கற்றுக்கொள்வதற்கும் பசி இல்லாமல் இருப்பதற்கும் உதவியாக இருந்தது. ஸிட்னி கப்பல்வேலை முடிந்து வீட்டுக்கு வந்தான். தபால் நிலையத்தில் தபால்களை வீட்டுக்குவீடு டெலிவரி செய்யும் பையனாக வேலை செய்தான். சார்லியின் நாடகவேலை உடல்நலக்குறைவால் நின்றுபோனது. சிறுவர்கள் கிழிந்த ஆடைகளை தைத்து அணிந்துவந்தார்கள், ஸிட்னி தபால் சீருடையை வாரத்தின் விடுமுறை நாட்களிலும் அணிந்துவந்தான்.

1899ம் ஆண்டு, இங்கிலாந்தில் அப்போது யுத்தகாலம். சாதாரண மக்களின் வாழ்க்கை மிகவும் மோசமானதாகியிருந்தது. வெளியில் எங்கும் யுத்தம் குறித்த பேச்சாகவேயிருந்தது. அம்மா யுத்தம் குறித்து ஒரு நாள் கூட பேசியதேயில்லை,  வாழ்க்கையே யுத்தமாகத்தானே இருந்தது. அம்மா வெகுநேரம் தையல் இயந்திரத்தில் மூழ்கினார்கள். குளிருக்கு முன்னால் ஸிட்னிக்கு ஓர் ஆடை தயாரிப்பதற்காக அதிகம் உழைத்தார்கள். பீஸ் ரேட்டுக்கு உழைப்பதை sweat shop என்பார்கள். அதிகவேலை வாங்கிக்கொண்டு குறைந்த ஊதியம் தருவார்கள். வேலையில்லா திண்டாட்டத்தை சாக்குபோக்கு சொல்வார்கள். ஸ்ட்னி வேலைக்குப்போன நாட்களில் அவன் உடையை அடகுவைப்பார்கள், அவன் வரும்போது மீட்பார்கள். ஒரு சமயம் அடகுக்கடைக்காரன் அதை வைத்துக்கொண்டு பணம்தரமுடியாது, கந்தலான துணிக்கு பணம் தரமுடியாது என்றான். அம்மா வாரக்கடைசியில் மீட்டுக்கொள்வேன் என்று கண்ணீர் விட்டார்கள்.

அப்பாவின் உடல்நிலை மிகமோசமாக இருப்பதாகவும் மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக செய்தி வந்தது. அவர் சிரமப்பட்டு மூச்சுவிட்டார்.சில தினங்களில் தன்னுடைய 37வது வயதில் இறந்துபோனார். சவ அடக்கத்தை செய்வதற்குக் கூட பணம் இல்லை, ஒரு தர்ம் ஸ்தாபனம் சவ அடக்கச்செலவை ஏற்றபோது அப்பாவின் தம்பிகள் கோபப்பட்டார்கள். சவ அடக்கத்தின்போது மலர்வளையங்களை வைத்தார்கள் சிலர் பூக்களை போட்டார்கள். எங்களிடம் இடுவதற்கு ஒன்றுமில்லை, என்னிடமிருந்த மிகவும் பிடித்த கைக்குட்டையைத்தான் போட்டேன். வீட்டில் அடுத்தவேளை உணவுக்கு ஒன்றுமேயில்லை, விற்பதற்காக ஒரு பொருளும் இல்லை. பழைய எண்ணெய் அடுப்பு இருந்தது, அதை விற்று பசி தீர்த்தார்கள். அப்பாவின் உடமைகளை ஆஸ்பத்திரியிலிருந்து கொடுத்தனுப்பினார்கள். அதில் ஒரு ஆரஞ்சுப்பழம், ஒரு கோட், காலுறைக்குள் திணித்த அரை பவுன் நாணயம் இருந்தது. அப்போது கடவுளின் அனுக்கிரகமாகயிருந்தது.

அப்பா இறந்த துக்கச்சின்னமாக கையில் துணி கட்டியிருந்தான், மொத்தமாக பூக்கள் வாங்கி சிறு சிறு கட்டுகளாக பிரித்து விற்பனை செய்தான். துக்கச்சின்னத்திற்காக எல்லாமே சீக்கிரம் விற்பனையானதுடன், சிலர் அன்பளிப்பும் கொடுத்தார்கள். ஒருநாள் மதுக்கடையில் விற்ற வெளியே வந்தபோது அம்மா திட்டினார்கள். அதன்பிறகு சில்லரை விறப்னைக் கடையில் விளம்பரக்காரன் வேலை, மருத்துவரிடம் உதவியாளர் வேலை, வீட்டுவேலை, கண்ணாடி தயாரிக்கும் பவுண்டரியில் வேலை, புத்தகம் விற்பனை வேலை, அச்சகத்தில் வேலை என பல இடங்களில்  உழைத்தான்.  சார்லியின் அம்மாவழி தாத்தா மூட்டுவலியால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அம்மா, அடிக்கடி போய் பார்த்துவந்தார்கள். அந்த சந்திப்பு லாபகரமாக இருந்தது. அங்கிருந்து பைநிறைய முட்டைகளுடன் வருவார்கள். பசி நாட்களில் அது ஆடம்பரமாக உணர்ந்தார்கள். தாத்தா மருத்தவமனையிலிருந்து குண்மாகி திரும்பிவந்த நாள் மகிழ்ச்சிகரமாக இல்லை, ஏனென்றால் இனி முட்டை கிடைக்காதல்லவா..

                                                                                                                                --தொடரும்

மிருகத்தனம் – சாதத் ஹசன் மண்ட்டோ

மிருகத்தனம் – சாதத் ஹசன் மண்ட்டோ
மிகுந்த சிரமத்தோடு கணவனும் மனைவியும் வீட்டில் உள்ள சில மதிப்புள்ள பொருட்களோடு தங்களை எப்படியோ காப்பாற்றிக்கொண்டார்கள்.

ஆனால் அவர்களின் வயதுவந்த மகளைக் காணவில்லை.
அந்தத் தாய் தன்னுடைய, பெண் கைக்குழந்தையை நெஞ்சோடு இறுக்க அணைத்துக்கொண்டாள்.

எருமை மாடு ஒன்று அவர்களிடம் இன்ருந்தது. கலக்காரர்கள் அதை இழுத்துச் சென்றார்கள். பசுமாடு கலகக்காரர்கள் பார்வையிலிருந்து எப்படியோ தப்பித்தது. ஆனால் அதன் கன்றுக்குட்டியைக் காணவில்லை.
கணவனும், மனைவியும், கைக்குழந்தையும் பசுமாடும் ஓர் மறைவிடத்தில் பத்திரமாக இருந்தார்கள். அப்பொது இருட்டு மிக மோசமாகக் கருத்துக் கிடந்தது. அந்தப் பெண்குழந்தை பயத்தால் அழுதபோது, அதை அசைவற்ற அந்த இரவில் மேளம் கொட்டுவது போன்ற சத்தத்தை எழுப்பியது. தாய் நடுங்கிப்போனாள். விரோதிகளுக்கு இந்தச்சத்தம் கேட்காமல் இருக்கக் குழந்தையின் வாயைத் தன் கையால் மூடினாள். சத்தம் சற்றுக் குறைந்தது. மேலும் பாதுகாப்பிற்க்காகத் தந்தை ஒரு தடித்த சொரசொரப்பான துணியைப் போட்டு அந்த குழந்தையை மூடினார்.
சில நிமிடங்கள் கழிந்தது. திடீரென்று சற்றுத் தொலைவில் இருந்து கன்றுக்குட்டி ஒன்று கத்தியது. இந்தச் சத்தத்தைக் கேட்ட பசுமாட்டின் காதுகள் சிலிர்த்துக்கொண்டு விறைப்பானது. அதுமிகவும் அமைதியற்ற நிலையில் மேலும் கூழும் நகர்ந்து சத்தமாகத் திரும்பக் குரல் கொடுத்தது. அவர்கள் அதை அமைதியாக இருக்க வைக்க முயற்சித்தார்கள். ஆனால் முடியவில்லை.

இந்தச் சத்தம் இவர்களைத் தேடிக்கொண்டிருந்தவர்களை உஷார்படுத்தியது. எரிந்து கொண்டிருந்த தீவெட்டி வெளிச்சங்கள் தொலைவில் நிழலாடியது.

அந்தப்பெண் அவளின் கணவரிடம் கோபமாக, ‘’கேடுகெட்ட மிருகத்தை ஏன் நம்மோடு இழுத்து வந்தீர்கள்?’’ என்று கேட்டாள்.


## கோத்ராக்களும், முஸாபர்பூர்களும் நினைவில் நிழலாடியது.

வெள்ளி, 4 ஏப்ரல், 2014

சாப்ளின் கதை - 1

சார்லி சாப்ளினை தெரியாதவர்கள் யாராவது இருக்கிறீர்களா?  இருக்கமுடியாது, சிறுவர்கள் முதல் வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் அவரை பிடிக்கும். யூ டியூப்பில் அவருடைய படைப்புகள் எளிதாக இப்போது கிடைப்பதை காணமுடிகிறது. அதுவும் தரமான பிரிண்ட் வடிவத்தில். சில ஆண்டுகளுக்கு முன்னால் குறுந்தகட்டில் பார்த்த சாப்ளின் படங்களைவிட இணையத்தில் நன்றாக இருக்கிறது. மெளன மொழி படத்தில் சார்லி சாப்ளினை விட்டால் புகழ்பெற்றவர்கள் யாருமே கிடையாது எனலாம். அவர் தேர்ந்தெடுத்த நாடோடி வேடம் அவர் வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்களின் தொகுப்பாக இருக்கலாம், குழந்தைப் பருவத்திலிருந்து 17 வயதுவரை அத்தனை கஷ்டங்களையும் சந்தித்துவிட்டார்.  13வயதிலேயெ நாடகக் கம்பெனியில் சேர்ந்து நடிக்க ஆரம்பித்துவிட்டார், இன்னும் சொல்லப்போனால் அவர் மேடை யேறியது 4 அல்லது 5 வயதில். அது ஒன்றும் பள்ளிக்குழந்தைகளின் மேடை நிகழ்ச்சி அல்ல. பட்டாளக்காரர்கள் மது அருந்திவிட்டு கலாட்டா செய்யும் நாடக அரங்க மேடை. சினிமா என்பது தோன்றியிருக்காத காலம். சினிமா என்பது சார்லியோடு வளர்ந்தது என்று சொன்னால் மிகையில்லை.

சார்லியின் குழந்தைப்பருவம்.

1889ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ம் தேதி சார்லஸ் பிறந்தார், சாப்ளின் என்பது தந்தைவழி குடும்பத்தின் பெயர். அவருடைய தந்தை ஒரு நாடகக் கலைஞர், தமிழகம் இப்போது டாஸ்மாக்கில் தடுமாறுவது போல விக்டோரியன் மாகாராணி காலத்தில் இங்கிலாந்தில் உழைப்பாளி மக்களை மதுபோதையில் மூழ்கடித்தார்கள். நாடக அரங்கங்களில் நாடகத்தை பார்ப்பதைவிட மக்களும் பெரும்பாலும் பட்டாளக்காரர்களும் மது அருந்துவதற்கு வந்தார்கள். சார்லியின் அப்பா நாடகம் பார்க்கவந்த ரசிகர்களுடன் சேர்ந்து குடித்துவிட்டு மதுவிற்கு அடிமையாகிப் போனார். சார்லியின் அம்மாவை விட்டு தந்தை பிரியக் காரணமாக இருந்தது மதுபோதை,  தந்தை 37வது வயதில் நோயுற்று மரணமடைந்தார். சார்லிக்கு எல்லாமே அம்மாதான். அம்மா ஒரு மேடை நாடகக்கலைஞர் இளம்வயதில் ஒரு பிரபுவோடு ஆப்பிரிக்காவுக்கு சென்றார்கள் அங்கே சார்லியின் அண்ணன் ஸிட்னி பிறந்தான், அந்த மணம் நீடிக்காமல் இங்கிலாந்து திரும்பிவந்த சார்லியின் அம்மா நாடகசாலையில் நடித்து வாழ்ந்துவந்தார்கள் , அதே நாடக அரங்கில் நடித்த சாப்ளின் என்பவரோடு மீண்டும் திருமணம். அப்படித்தான் சார்லி தாயின் இரண்டாவது கணவனுக்கு பிறந்தவர். நம் நாட்டில் ஒருவனுக்கு ஒருத்தி என்கிற பண்பாடு எல்லா சமூகத்திலும் இல்லை, இங்கேயும் அறுத்துக்கட்டுகிற சாதிகள் உண்டு, ஆனால் மேல்சாதிகளின் கலாச்சாரம் தான் இந்தியக்கலாச்சாரம் என்றாகிப் போனபிறகு இங்கிலாந்தின் பண்பாடு வேறுபட்டது. ஆனால் தாய்மை என்பது எல்லா ஜீவராசிக்கும் பொதுவானது, நாடுகளோ, மொழியோ, மதமோ இனமோ தடையல்ல. கணவனால் கைவிடப்பட்ட குழந்தைகள் எல்லா தேசங்களிலும் தாய்மார்களிடம்தான் வளர்கிறார்கள் என்பதும் பொதுவிதி.

மதுப்பழக்கத்தில் அடிமையாகிப்போன தந்தையைவிட்டு தாய் பிரிந்துவிட்டார்கள். வாடகைவீட்டில் இந்திய மத்தியதர வர்க்கத்தின் வாழ்க்கையை வாழ்ந்துவந்த சார்லியின் குடும்பம் அம்மாவுக்கு வந்த தொண்டைவீக்க நோயால் குரல்வளம் பாதிக்கப்பட்டது. அதனால் மேடை நாடகத்தில் பார்வையாளர்களால் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானார். அப்போது சார்லிக்கு ஐந்து வயதிருக்கும், தாயுடன் சென்ற சார்லியை நாடக ஏற்ப்பாட்டளர்கள் மேடையேற்றினார்கள். ‘ஜாக் ஜோன்ஸ்’ என்ற புகழ்மிக்க பாடலை பாடி பார்வையாளர்களை கவர்ந்தார். பாட்டு பாதியளவு வந்தபோது மேடையில் பணமழை பொழிந்தது, பாடலை நிறுத்திவிட்டு சார்லி பணத்தை பொறுக்கியெடுத்தபின் பாடுகிறேன் என்றான். இது சபையினரிடம் சிரிப்பை வரவ்ழைத்தது.  சார்லி ஏறிய முதல்நாடகமேடை, அம்மாவின் கடைசி மேடைநிகழ்ச்சியாகிப் போனது. நாடகங்களில் வாய்ப்பு கிடைக்காமல் போனதால் மூன்று அறைகொண்ட வீட்டிலிருந்து, இரண்டு அறைகொண்ட வீட்டிற்கு மாறினார்கள், வீட்டில் அம்மா சமைப்பதேயில்லை, சமைப்பதைவிட விடுதியில் வாங்கி சாப்பிடுவது குறைவான செலவு என்று வாழ்க்கையை ஓட்டினார்கள். வீட்டிலிருந்த ஒவ்வொரு பொருளையும் விற்றுத் தின்னவேண்டிய நிலை ஏற்பட்டது. தனக்குத் தெரிந்த தையல் தொழிலைக் கொண்டு நாடக அரங்கிற்கு உடைகள் தைத்துக்கொடுத்து பிழைத்துவந்தார்கள். சார்லியின் அண்ணன் ஸிட்னி அப்போது இரவுப்பள்ளிக்கூடம் சென்றுவந்தான்.

தன்னுடைய உடைந்துபோன குரல் வளம் வேண்டி தாய் யேசுவிடம் முறையிட்டார்கள், பைபிளை சதாநேர்மும் வாசித்தார்கள். கஷ்டமான காலத்தில்  ஒற்றைத்தலைவலியும் வந்து சேர்ந்தது, அதனால் செய்து வந்த தையல் வேலையையும் செய்யமுடியவில்லை. ஸிட்னி பள்ளிநேரம் போக மீதிநேரத்தில் செய்தித்தாள் விற்பனை செய்து உதவினான். ஒருநாள்பேருந்தில் செய்தித்தாள் விற்கும்போது ஒரு பர்ஸை கண்டெடுத்தான் உடனே நேராக அம்மாவிடம் சென்று கொடுத்தான். அம்மா அப்படியே வைத்துவிட்டார்கள். அம்மாவின் உடல்நலம் கொஞ்சம் தேறியவுடன் பர்ஸைத் திறந்து பார்த்தார்கள், வெள்ளி, செம்பு மற்றும் சில தங்க நாணயங்கள் இருந்தன, மகிழ்ச்சிக்கின் உச்சத்திற்கு சென்று கடவுளே நன்றி ! என்றார்கள். வறுமைச்சூழலில் பர்ஸைத் தவறவிட்டவரின் துரதிஷ்டத்தைக் குறித்த துயரம் விரைவிலேயெ அகன்றது. அதைவைத்து குழந்தைகளுக்கு புத்தாடை நல்ல உணவு, சுற்றுலாவிற்கு அழைத்துச் சென்றுவந்தார்.


பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் சூரியன் அஸ்தமனம் ஆவதேயில்லை என்ற நிலையில் காலனி நாடுகளை கொள்ளையடித்துவந்த பிரிட்டிஷ் நாட்டில் சார்லியின் குடும்பத்தைப் போல் ஏழ்மைநிலையில் சேரிகளில் நிறைய மக்கள் வாழ்ந்தார்கள். பிரிட்டிஷ் காலனிநாடுகளில் கொள்ளையடித்த செல்வம் பிரபுக்களும் ஆளும் வர்க்கமும் பங்கிட்டுக் கொண்டார்களே தவிற அந்தநாட்டின்  ஆம் ஆத்மிகளுக்கு எந்த பலனும் இல்லை. வறியவர்கள் தெருக்களில் திரிந்தால் அவர்களை காவல்துறை தொழிலகத்தில் கொண்டு சேர்ப்பார்கள். அப்படி சார்லியும் ஸிட்னியும் தொழிலகத்தில் சேர்ந்தார்கள். அம்மாவை தனியாக ஒரு விடுதியில் அடைத்தார்கள். அங்கே வேலைசெய்தால் சாப்பிடமுடியும். சுதந்திரமான வாழ்க்கை கிடையாது. இப்படி வறியவர்களை தெருவில் சுதந்திரமாக விட்டால் கனவான்களிடம் பிச்சை யேந்தியும், சிறு திருட்டுகளில் ஈடுபட்டு தொல்லை ஏற்படுத்துவார்களோ என்றுதான் இந்த ஏற்பாடு. அப்போது சார்லியைப் போல மற்ற குழந்தைகளுக்கு ‘பூச்சிவெட்டு’ நோய் வந்திருந்தது. மற்றவர்களுக்கு பரவக்கூடாது என்று அவர்களை தனியாக ஒரு விடுதியில் அடைத்து பராமரித்தார்கள். சார்லிக்கும் ஒருநாள் ‘பூச்சிவெட்டு’ வந்துவிட்டது என்று தலையில் மொட்டையடித்து அயோடின் களிம்பு தடவியிருந்தார்கள். அச்சமயம் சார்லியின் தாய் மகனை காணவந்தார், அப்போது அங்கிருந்த செவிலி, “ அவனுடைய அசிங்கமான முகத்தைப் பார்த்து நீங்கள் எதுவும் நினைத்துக்கொள்ளாதீர்கள்’’ என்று சொன்னார். அம்மா சிரித்துவிட்டு  “அவனுடைய அத்தனை அசிங்கங்களுடன் சேர்த்து நான் இப்போதும் அதிகமாக நேசிக்கிறேன்” என்றாராம்.

                                                                                                                                    தொடரும்.....

புதன், 2 ஏப்ரல், 2014

நீண்ட விடுமுறைக்குப்பின்...

வலைப்பக்கத்தில் எழுதியும் மற்றவர்களையும் வாசித்தும் நீண்ட நாட்கள் என்று சொல்வதை மாதங்கள் ஆகிவிட்டன. இந்த எழுதாமல் வாசிக்காமல் விட்டதற்கு ஏதோ ஒரு குற்ற உணர்வும் சோம்பேறித்தனமும் தான் காரணம். குற்ற உணர்வு என்றால் சமூகமுன்னேற்றத்தைப் பற்றி நிறைய கவலைப்படுகிறேன் ஆனால் நம்மால் களப்பணி எதுவும் செய்யமுடியவில்லையே என்றொரு உணர்வு மனதில் அரித்துக்கொண்டிருக்கிறது. எழுதுவது என்பது மீண்டும் புதிதாக வாசிக்கத் தூண்டவும்செய்கிறது. மனிதம் பற்றிய இரு நாவலகளை பெப்ரவரியில் வாசித்தேன். இரண்டும் இந்தியத் துணைக்கண்டத்தில் சென்ற நூற்றாண்டில் இந்தியாவோடு இருந்த பங்களாதேஷ் நாட்டில் சிறுபான்மை இந்துக்களை, பெரும்பான்மை மதவெறி சிறுபான்மை இந்துக்களை சூறையாடும், ஒடுக்கும் சம்பவங்களைப்பற்றியது. அந்த நாவலை ஒரு ரயில் பயணத்திலேயே வாசித்துமுடித்தேன். லஜ்ஜா என்ற நாவ்லைப் பற்றி வாசிப்பு அனுபத்தையும் கடைசியாக எழுதினேன். வாசித்த சிலநாட்களுக்குப் பின்னர் ஒரு செய்தி பார்த்தேன், தமிழகத்தில் ஏதோ ஒரு இஸ்லாமிய அமைப்பு அந்த புத்தகத்தின் தமிழ் வெளியீட்டை தடைசெய்ய வேண்டும் என கோரியிருந்தது. அந்த நாவ்லை வாசித்து இங்கே சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள் மீது வன்முறை பரவிவிடுமோ என்கிறார்கள். அந்த நாவலை ஒரு இந்துத்துவாதி வாசித்திருந்தால் இங்கே மதவெறி பிரச்சாரத்திற்கு பயன்படுத்த முடியும்.. அத்தனை சமப்வங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. ஓரிடத்தில் சிறுபான்மையினராக இருப்பவர்கள் மற்றொரு இடத்தில் பெரும்பான்மையினராக  இருக்கிறார்கள், அங்கே ஒடுக்கப்படும் இனத்திற்கு இங்கே பலிவாங்கவும், இங்கே ஒடுக்கப்படுவர்களுக்கு அங்கே பதிலடியும் தொடர்ந்தால் மனிதர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் கொல்லப்பட்டு சாவார்கள். மதவெறி அது பெரும்பான்மை, சிறுபான்மை என எல்லா மதங்களினாலும் மக்கள் பலியாகக்கூடாது என்பது நமது புரிதல்.

சமீபத்தில் மறைந்த குஷ்வந்த்சிங் அவர்கள் எழுதிய ‘பாகிஸ்தான் போகும் ரயில்’’ நாவலையும் வாசித்து முடித்திருந்தேன். ஒரு சராசரி மனிதன் எந்தவொரு ல்ட்சியமும் இல்லாத சின்ன சின்ன திருட்டு வேலைகள் செய்து கொண்டு வாழ்க்கை நடத்தும் ஒருவன் மதவெறி கொண்டு பழிக்குப் பலி வாங்கும் செயலான ‘பாகிஸ்தான் போகும் இஸ்லாமியர்களை கொல்லப் போகும் சதியை’ இயல்பாக முறியடிக்கிறான். நாவலில் ஒரு இடதுசாரி பாத்திரத்தைப் பற்றி சொல்கிறார், அவன் பெயர் இக்பால். இக்பால் என்ற பெயர், சீக்கியர்கள், மார்வாடிகள் மற்றும் இஸ்லாமியர்கள் வைத்துக் கொள்ளும் பொதுப்பெயர். நாடு பிரிவினை சந்தித்தபோது மக்கள் ஒற்றுமைக்காக  கம்யூனிஸ்ட் கட்சி  அப்போது ஐரோப்பாவில் கல்விகற்ற கட்சி உறுப்பினர்களை எல்லோயோர கிராமங்களுக்கு அனுப்பி மத நல்லிணக்கத்திற்கு பாடுபட்டதை நாவலில் பதிவு செய்திருக்கிறார். ஆனால், லட்சியத்தோடு ‘மனோமஜ்ரா’ விற்கு வந்த  இக்பால் சோபிக்கவில்லை.  “நாற்காலியைவிட்டு எழுத்திருக்காத டைப் ” என்ற வரிகள் குற்ற உணர்வு கொள்ளச்செய்கிறது. எதற்கும் துணிந்த ஒரு ரெளடியான் ஜக்காசிங் இயல்பாகவோ, அல்லது தனது காதலி உயிரோடு பாகிஸ்தான் செல்லவேண்டும் என்ற நோக்கத்திலோ பாகிஸ்தான் போகும் இஸ்லாமியர்களை காப்பாற்றி அதில் பலியாகிறான்.

இந்த நாவலை வாசித்துமுடித்தவுடன்  Train To Pakistan என்ற சினிமா நாவலை வைத்து தயாரித்திருக்கிறார்கள் என்று தெரிந்து அதை பார்த்தேன். நாவலை வாசிக்காமல் சினிமா பார்த்திருக்கவேண்டும்.  ஒரு 260 பக்கமுள்ள நாவலின் ஒவ்வொரு பக்கத்தின் வர்ணனையும் சினிமாவில் எதிர்பார்க்க முடியாது என்று புரிந்துகொண்டேன். வங்கத்தின் சிறந்த திரைப்பட இயக்குனர் மிருணாள்சென் தன்னுடைய சுயசரிதையில் காப்ரியல் மார்கவேஸ் பற்றி எழுதியிருப்பார். தன்னுடைய நாவல்கள் சினிமாவாக மாறுவதை மார்கவெஸ் விரும்பவில்லை என்று சொன்னாராம்.

தற்போது வாசித்து வரும் நூல் ச.தமிழ்ச்செல்வன் எழுதிய  “வலையில் விழுந்த வார்த்தைகள்” அதை ஏற்கனவே வாசித்தது போல இருக்கிறது ஏனென்றால் அவருடைய வலைப்பூவில் எழுதிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

ஏப்ரல் 16ம் தேதியன்று சார்லி சாப்ளின் என்ற மகத்தான கலைஞனின் 125வது பிறந்தநாள் வருகிறது, சாப்ளினின் வாழ்க்கை வரலாற்றையும் வாசித்து முடித்தேன். அதை ஒரு பதிவாக எழுதவேண்டும். ஏப்ரல் 16க்குள்.. முயற்சிக்கலாம்.