திங்கள், 12 டிசம்பர், 2011

வரலாறு என்பது ஆயுதம்.

கடந்த கால மனிதவரலாறு என்பது நாம் நினைக்கிற மாதிரி அமைந்திருந்தால் எவ்வளவு வசதி, துரதிஷ்டவசமாக கடந்த காலம் ஒவ்வொருவரின் நம்பிக்கை அல்லது சித்தாந்தத்தின் படி இருக்கவில்லை.

ஆரியர்கள் மத்தியஆசியாவிலிருந்து இந்திய துணைக்கண்டத்தில் குடியேறினர் என்பதை பள்ளியில் வரலாற்று பாடத்தில் படித்திருக்கிறோம். இந்திய வரலாற்றாசியர்களுக்கு ரிக்வேதம் மிகச்சிறந்த சான்றாக இருக்கிறது. ஆங்கிலேயர்கள் இந்தியாவில் ஆரிய-திராவிட பிரிவினைத் தூண்டுவதற்கு அவசியமில்லை. திராவிட இயக்க அரசியல் என்பது தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தான் தோன்றியது. வெள்ளையர்களுக்கு இந்தியாவை இரு கூறுகளாக வன்மம் நீடித்திருக்க அவர்களுக்குத் தேவைப்பட்டது மதப்பிரிவினை. இங்கே நிலவிய இந்து-முஸ்லீம் மதவேறுபாட்டை அவர்கள் பயன்படுத்தி கூர்தீட்டினார்கள்.

மதம் என்பது நம்பிக்கையாளர்களுக்கு அது ஒரு வழிபாடு, ஆனால் அதை வைத்து அரசியல் அதிகாரம் பெறுவதற்கு பெரும்பான்மை மக்களை ஒருமுகப்படுத்த இல்லாத கடந்தகால பெருமைகளை உணர்த்த கடந்தகால வரலாறு தேவைப்படுகிறது. அதற்கு அகண்டபாரதத்தை அமைப்பதற்கும் மத அடிப்படையிலான இந்து தேசத்தை கட்டமைக்க ஆரியர்கள் குடியேறியர்கள் என்பது அவர்களுக்கு கசக்கிறது. அதனால் சிந்துவெளி நாகரீகத்தை ஆரிய நாகரீகமாக மாற்ற வலதுசாரி வரலாற்றாசிரியர்கள் முயற்சி செய்கிறார்கள். வரலாறு என்பது ஆய்வுக்குரியது, மதம் என்பது நம்பிக்கை சம்பந்தமானது. பெரும்பான்மையோர் நம்புகிறார்கள் என்பதற்காக வரலாற்றை திருத்தமுடியாது.

அரசியல் என்பது எல்லோருக்குள்ளும் இருக்கிறது, அது வரலாற்றிசியர்கள், சமூகவியலாளர்கள் , அறிவுஜீவிகள் கலைத்துறையினர் என்று யாரையும் விட்டுவைக்காது. ராகுல் சாங்கிருத்யாயன் ஒரு கம்யூனிச நாவலாசிரியர் என்பதற்காக அவர் சொல்வது எல்லாம் `இந்துத்துவா`விற்கு எதிரான கருத்துக்கள் அல்ல. மனிதகுல வரலாற்றை பொருள்முதல்வாத அடிப்படையில் ஆராய்ந்தவர். வேத்கால வரலாற்றை அறிவதற்காக ரிக்வேதத்தை ஆராய்ந்தவர். இந்தியாவில் ரொமிலாதாப்பர், ஆர்.எஸ்.சர்மா, டி.டி.கோசாம்பி, இர்பான் ஹபீப் போன்றவர்கள் வரலாற்றாசியர்கள் மார்க்சிய வரலாற்றியசியர்கள் என்று சொல்லப்படுகிறார்கள். அதை எப்போதும் மறுக்கவேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை. இடதுசாரிகள் சாதி, மதம், இனம், மொழி அடிப்படையில் அரசியல் நடத்தவில்லை. அதனால் ஒரு குறிப்பிட்ட இனம், மொழி, சாதி, மதம் உயர்ந்தது அல்லது அவர்கள் பூர்வகுடிகள் இல்லை என்ற அரசியல் அவர்களுக்குத் தேவையில்லை. திராவிடநாடு என்பதற்காக அரசியல் செய்வதற்கு ஆரிய-திராவிட ஆராய்ச்சியும் திராவிடர்கள் தான் பூர்வகுடிகள் என்ற கருத்து, வரலாறு தேவையாய் இருக்கிறது. அதேபோல் இந்துத்துவா அரசியலுக்கு ஆரியர்கள் பூர்வகுடிகள் என்பது தேவைப்படுகிறது. துரதிஷ்டவசமாக ஆரியர்கள் சப்தசிந்து பகுதியில் பிரவேசித்தபோதுதான் ரிக்வேதத்தை இயற்றினார்கள்.

இந்தியா என்பது ஒரு குடியேற்ற நாடு, யார் முன்னர் வந்தார்கள் பின்னர் வந்தார்கள் என்பது தான் வரலாற்றிற்குத்தேவை. மனித இனம் ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து தான் உலகெம்ங்கும் பரவியிருக்கிறது என்பதையும் சில ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். ஆப்பிரிக்கர்கள் எனது மூதாதையர் அல்லது ஆரியர்கள் ரத்தம் நம் உடம்பில் இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்வதற்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஆரியர்கள் கங்கைச் சமவெளியில் பிரவேசித்தபின்பு இந்தியாவில் நிலப்பிரபுத்துவம் ஆரம்பமாகிறது. இன்றிலிருந்து 3000 ஆண்டுகளுக்கு இந்தியாவில் குடியேறிய ஆரியர்கள் இன்றளவிற்கு தனியான இனமாக இல்லை, ரத்தக்கலப்பு ஏற்பட்டுவிட்டது. பூர்வகுடிகளிடம் ஆரியர்கள் முதலில் வர்ண வேற்றுமை பாராட்டினார்கள், ரத்தக்கலப்பு ஏற்பட்டுவிடகூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள் ஆனால் அது நீடிக்கவில்லை. சிந்துவெளி மக்களை வெற்றிகொண்ட பிறகு ஆரியர்கள் இமயமலை அடிவாரத்தில் இருந்த அசுர மன்னம் சம்பரன் திவோதஸை அலைக்கழித்துவந்தான். சம்பரன் கிராத இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் `கருப்பு நிறத்தோர்` பட்டியலில் சேர்த்தார்கள். சிந்துவெளி பண்பாட்டளர்கள் பின்பற்றிய பெண்தெய்வ வழிபாடு, பசுபதி வழிபாடு, ஆண்குறி (சிவலிங்க) வழிபாட்டை ஆரியர்கள் வெறுத்தனர்.
ஆரியர்கள் மேய்ச்சல் வாழ்க்கையை நடத்தியவர்கள், கங்கைச்சமவெளியில் வருவதற்கு முன்புவரை அவர்களிடம் அடிமைகள் வைத்துக்கொள்ளும் வழக்கம் இருக்கவில்லை. அவர்கள் மாமிச உணவை சாப்பிட்டார்கள் அதுவும் இன்று இந்துத்துவா அரசியலுக்கு புனிதமான `பசு`வின் இறைச்சியை உண்டார்கள். குதிரை, ஆடு,இளங்கன்று என்று எதையும் விட்டுவைக்கவில்லை ஏனென்றால் விவசாயம் அறிந்திராத ஒரு சமூகம் புலால் உணவை சாப்பிட்டதில் வியப்பில்லை. சோமபானம் என்ற மதுவை உண்டு ஆடல் பாடல் என மாலை வேளைகளை கொண்டாடினார்கள். மேய்ச்சல் என்பதே எளிதாக புலால் உணவிற்காக பால் தேவைக்ககவும் செய்தார்கள். இன்று அதையெல்லாம் `இந்துத்துவா அரசியலுக்காக ஆரியர்களின் வாழ்க்கை முறையை மாற்றவேண்டியிருக்கிறது. ஆரியர்களிடம் வருணப்பாகுபாடு இருக்கவில்லை, ஒரே குடும்பத்தில் ஒருவர் பிராமண்ராகவும், ஒருவர் ஷத்திரியாராகவும் மற்ரொருவர் வைசியராகவும் இருந்துள்ளார்கள். ஆரியர்களுக்கும் இந்தியப்பூர்வகுடிகளுக்கும் இடையே இனக்கலப்பு ஏற்பட்டுத் தோன்றிய நிபுணர்களான புதிய வர்க்கத்தின்ரே முடிவில் எல்லா ஆரியச்சடங்குகளுக்கும் ஏகபோக உரிமை கொண்டாடினர், அவர்களே பிராமணர்கள். வேதம் சப்த-சிந்து என்றழைக்கப்படுகிற ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் பகுதியில் ஆரியர்கள் பிரவேசித்தபோது இயற்றப்பட்டதால் தான் என்னவோ அந்தப்பகுதியை அகண்ட பாரத வரைபடத்தில் அஜெண்டாக சேர்த்துக் கொண்டார்கள்.