புதன், 13 மே, 2020

ஆடு ஜீவிதம்- ஒரு உண்மை மனிதனின் கதை









மலையாளத்தில் பென்யாமின் என்பவரால் எழுதப்பட்ட இந்த நாவல் தமிழில் உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. நஜீப் என்ற மனிதன் வேலைதேடி சவுதிஅரேபியா சென்றபோது அவருக்கு ஏற்பட்ட துன்பவாழ்க்கை பற்றியது, உண்மை சம்பவம் நாவலாக எழுதப்பட்டுள்ளது.  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்த நாவலை வாசித்துவிட்டேன், ஆனாலும் மீண்டும் ஒரு முறை இப்போது வாசிக்க வேண்டும் என்று தேடியபோது கிடைக்கவில்லை, யாரிடமோ கொடுத்துவிட்டேனோ அல்லது தொலைந்துவிட்டது, சரி இணையத்தில் மின்புத்தகமாக கிடைக்குமா என்று தேடியபோது தமிழில் இல்லை, 'goat days' என்று ஆங்கில மொழிபெயர்ப்பு கிடைத்தது 15 டாலர் செலவழிக்கவா என்று யூடிபில் ஆடியோ புத்தகமாக மலையாளத்தில் கிடைத்தது ஆறரை மணிநேரம், ஏற்கனவே இந்த கதை எனக்குத் தெரியும் என்பதால் மலையாளத்தில் கேட்பதற்கு சிரமம் இல்லை.


ஏன் திடிரென்று இதை வாசிக்கத்தூண்டியதென்றால், என்னுடைய 18 ஆண்டுகால வளைகுடா வாழ்க்கையின் மறந்த நினைவுகளை மீட்கலாம் என்பதற்காகத்தான். பால்யத்தில் நடந்த சம்பவங்கள் நம்முடைய நினைவில் நிச்சயம் இருக்காது, ஆனால் ஏதோ ஒரு சினிமா காட்சியோ நாவலின் சில வரிகளோ பழைய நினைவுகளை மீட்கும் சக்தி கொண்டது.

கேரளத்தில் ஆற்றில் மணல்அள்ளும் வேலையை செய்து வந்த நஜீபிற்கு மற்ற மலையாளிகளைப் போல ஒரு ஆசை வந்தது, குடியிருந்த வீட்டை செம்மைசெய்து இன்னும் ஒரு அறை அதிகம் வைத்து எடுக்கவேண்டும். வளைகுடா சென்றுவந்தவர்கள் கோல்டன் கலரில் வாட்ச்சுகள் அணிகிறார்கள், புதிய வீடு எடுக்கிறார்கள் நமக்கு ஒருமுறை சென்றுவந்தால் என்ன என்ற ஆசையில் கடன்வாங்கி விசா, டிக்கெட்டிற்கு பணம் கட்டி சவுதிஅரேபியா செல்கிறார் அவர் கூட அதே ஊர் பையன் ஹக்கீம் அவரோடு செல்கிறான். மும்பையிலிருந்து ரியாத்திற்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்கிறார்கள். மாலை ரியாத் சென்றடைந்த விமானத்தில் இறங்கிய இருவரும் ஸ்பான்சர் அல்லது முதலாளிக்காக பல மணிநேரம் விமான நிலையத்தில் காத்திருக்கிறார்கள், இதற்கிடையில் எத்தனையோ விமானங்கள் தரையிறங்கி அதிலிருந்து இறங்கியவர்கள் , அழைக்க வந்தவர்களுடன் சென்றுவிட்டார்கள். நஜீபிற்கும் ஹக்கீமிற்கும் நல்ல பசி, தாகம் விமானத்தில் கொடுக்கப்பட்ட உணவை எப்படி சாப்பிடுவது என்று தெரியாமல் கூச்சப்பட்டு பட்டினி, போய் தண்ணீராவது குடித்துவிட்டு வரலாமென்றால் நாம் சென்றநேரம் முதலாளி வந்து தேடினால் ? என்று காத்திருக்கிறார்கள் !

வெள்ளுடையில் வரும் ஒவ்வொரு அரபியையும் அவர்தான் நம்முடைய 'அர்பாப்' என்று நினைத்து ஏமாறுகிறார்கள். 'பிக் அப்' என்று சொல்லக்கூடிய காரும் மினி டிரக்கும் கலந்த பழைய்ய வண்டி 'னான்பார்க்கிங்கில் நின்றது, அதிலிருந்து இறங்கிய அரபி சுற்றுமுற்றும் தேடி இந்த இருவரின் பாஸ்போர்ட் விசா ஆவணங்களை பார்த்து என்கூட வா என்று அரபியில் கத்தினார், இதுவரை வந்துபோன அத்தர் வாசம்மிக்க வெள்ளடை அரபிகள் போல இல்லை, இந்த அரபி பக்கத்தில் என்னவென்று விளங்காத கவிச்சு மணம், பிக்கப்பில் டிரைவர் இருக்கை அருகே ஒரு இடம் இருந்தது, ஆனால் இருவரையும் பின்னால் இருந்த தொட்டியில் ஏறச்சொன்னான். ரியாத் நகரத்தின் இரவின் விளக்கொளிகளை ஒப்பன் வண்டியில் ரசித்தார்கள், ஹக்கீம் தூங்கிவிட்டான். வண்டி செல்லச்செல்ல நகரம் கடந்தது,  விளக்கொளி குறைந்தது, சாலைவிட்டு அகலே இன்னும் துளி வெளிச்சம் கூட இல்லாத மண்பாதையில் சென்றது. நீண்டபயணம் அது எவ்வளவு தூரம் தெரியவில்லை, எத்தனை நேரமென்பதற்கு வாட்ஸ்சும் இல்லை. வண்டியை திடிரென்று நிறுத்தி ஹக்கீமை இறக்கி அர்பாப் இழுத்துச்சென்றான், உடன்சென்ற நஜீப்பை போ வண்டியில் ஏறு என்று அரபியில் சினந்தான், அவன் பேசும் அரபி புரியவேண்டியதேயில்லை..ஆனால் புரிந்தது. ஏன் அவனை என்னிடமிருந்து பிரிக்கிறாய், அவன் என்னை நம்பி வந்த சிறுவன் என்று மலையாளத்தில் சொன்னால் அர்பாப் காதில் வாங்காமல் அடிக்க வருகிறான். அவனை இறக்கிவிட்ட பின் வண்டி இன்னும் ஒரிண்டு கிலோமீட்டரில் நின்றது நஜீப் திக்குத்தெரியாத இருட்டில் இறங்கினான், கம்பெனியில் ஏன் மின்சாரம் இல்லை? என்ற யோசனை செய்யும்போது இன்னொரு அர்பாப் அங்கேயிருந்தான் அவனிடம் நஜீபை ஒப்படைத்துவிட்டு அந்த அரபி போய்விட்டான்.



இருட்டில் இறங்கிய நஜீப்பிற்கு எங்கே இருக்கிறோம் என்று தெரியவில்லை , அந்த இருளில் இறக்கிவிட்டு அரபி சென்றுவிட்டான், ஒருவேளை எனக்கு சாப்பாடு வாங்க சென்றிருப்பானோ? வரும் வழியில் ஒரு கடையைக்கூட பார்க்கவேயில்லை. தனக்கு ஒதுக்கப்பட்ட அறை எங்கே எனக்கேட்க நினைத்தான் ஆனால் கேட்கவில்லை. ஆடுகளின் கரைச்சல் சத்தம் கேட்டது, முசுடு வாசனை எல்லாம் சேர்ந்து அப்போது தான் புரிந்தது நான் வந்திறங்கியது ஒரு ஆட்டுக்கொட்டகை நான் ஆடு மேய்க்கவா வந்தேன்? அழுதான்.
இரவு தூங்கவேயில்லை, பசி, தாகம் தண்ணீர் எங்கே கிடைக்கும் இருட்டில் ஒரு தண்ணீர் தொட்டி தெரிந்தது. ஆட்டுக்கொட்டகையின் உள்ளே சுற்றிப்பார்த்தபோது ஆடுகள் குடிக்கும் ஒரு தண்ணீர்த்தொட்டியில் தண்ணீர் இருந்தது வேண்டிய மட்டும் தாகம் தீர்க்கும் மட்டும் குடித்தான். அங்கே ஒரே ஒரு கட்டில் தான் இருந்தது அதில் ஒருவன் படுத்திருந்தான், அவனுடைய கட்டிலுக்கு கீழே கொண்டுவந்த பையை வைத்தான். அப்படியே தூங்கிபோனான். அதிகாலை ஒரு 'அழுக்கன்' வந்து எழுப்பி சட்டியில் ஆட்டுப்பால் கொடுத்தான், அவன் தான் கட்டிலில் தூங்கியவன் அவனருகே முசுடு மணம் பல ஆண்டுகளாக கத்தரிக்கப்படாத தலை முடி, தாடி , குளிக்காத உடம்பு பார்க்கவே சகிக்கவில்லை. பல்லே விலக்காமல் பசியால் அவன் கொடுத்த ஆட்டுப்பாலை வாங்கிக்குடித்தான். 'விகாரரூபி ' காலையிலே அவன் அலுவலை துவங்கிவிட்டான், ஒவ்வொரு பட்டியில் அடைத்த ஆடுகளை தனித்தனியாக மேய்ச்சலுக்கு பத்திக்கொண்டு சென்றான். நஜீப்பிற்கு அரபி உடுத்திய பழய்ய ஆடை ஒன்றும் பூட் ஒன்றும் தரப்பட்டது. விகாரரூபி பேசும் ஹிந்தி இவனுக்கு புரியவில்லை, ஆனாலும் தொழில் கற்றான். ஆடுகளுக்கு கோதுமை, புல் ,தண்ணீர் , உப்பு என தனித்தனியாக தொட்டிகள் இருந்தன , ஆடுகளை பலவிதமாக அடைத்து வைத்திருந்தார்கள் , குட்டிஆடுகள் ,சினை ஆடுகள் , கிடாய்கள் , செம்மறியாடுகள் என. இது தவிர ஒட்டகங்கள்.

பாலைவனத்தில் ஆடுகள் கடிப்பதற்கு பச்சை எங்கே இருக்கிறது, கட்டு தட்டிப்போன கரடு மண் மட்டுமே ஒவ்வொரு கூட்டமாக ஆடுகளை பத்திக்கொண்டு போவது என்பது 'வாக்கிங்' போவது போல. ஒட்டகங்களின் பட்டியை திறந்துவிட்டால் போதும் அதுவே மேய்சசலுக்கு சென்று திரும்பிவிடும். ஆனால் ஆடுகள் அப்படியில்லை அதை கோல்கொண்டு கட்டுப்படுத்தவேண்டும். அர்பாப் கையில் வைத்திருந்த 'பைனாகுலர் ' கருவியை காண்பித்தான் துப்பாக்கி ஒன்றும் வைத்திருந்தான். ஒரு எச்சரிக்கை , இங்கேயிருந்து தப்பித்து ஓட நினைத்தால் சுட்டுவிடுவேன் என்று சொல்லாமல் உணர்த்தினான். நஜீப் வந்திறங்கிய இரண்டோரு நாளில் அந்த'விகாரரூபி'யை காணவில்லை, எங்கே போனான் , வேறொரு பண்ணைக்கு அரபி அனுப்பிவிட்டானா ? அவன் போனதால் வேலை இடிப்பொடிந்தது. காலையில் பால் பீச்சி அரபிக்கு தரவேண்டும், குட்டிகளுக்கு தனியாக தொட்டியில் ஊற்றவேண்டும் , பிறந்த ஒவ்வொரு குட்டியும் அதன் தாய்முலையிடமிருந்து பால் குடிக்க அனுமதிக்கப்டவில்லை. காலையிலும் மாலையிலும் ஆடுகளை பத்திக்கொண்டு நடை செல்லவேண்டும். எப்போதும் அழுதுகொண்டேயிருந்தான். அல்லாஹ்விடம் முறையிட்டான். ஒரு பயனும் இல்லை. ஆனால் நம்பிக்கையை மட்டும் அவன் தளரவேவிடவில்லை.

அவன் அங்கே மனிதர்களை பார்க்கவேயில்லை , அவன், அர்பாப் என்ற ரெண்டே பேர் தான் , தண்ணீர் லாரியில் கொண்டுவரும் பாகிஸ்தானியைத்தவிர வேறு மனிதரை பார்த்ததேயில்லை , ஆடுகளோடு பேசினான் அங்கேயிருந்த ஆடுகளுக்கு ஒவொன்றிற்கும் பெயர் வைத்தான், சினை ஆடு ஒன்று குட்டி ஈன்றது அப்போது தன்னுடைய மனைவியை நினைத்துப்பார்த்தான் அவளும் பிரசவித்திருப்பாள், தான் தன்னுடைய குழந்தைக்கு பெயர் தேர்வு செய்திருந்தான், நபீல் என்று ஒரு ஆட்டுக்குட்டிக்கு பெயர்வைத்தான் அதன் மீது அதிக பிரியம் வைத்திருந்தான். அங்கே தண்ணீர் என்பது ஆடுகளுக்கு குடிப்பதற்கு மட்டுமே,வேறு செலவிடக்கூடாது. அவன் வந்திறங்கிய மறுதினம் கக்கூஸ் எங்கே என்று தேடினான் வெட்டவெளியில் சென்றுவிட்டு டேங்கில் இருந்து தண்ணீர் பிடித்து கால்கழுவிக் கொண்டிருக்கும் போது முதுகில் சாட்டையால் ஒரு அடி விழுந்தது. அரபி, தண்ணீர் உனக்கு குன்டிகழுவ வாங்கவில்லை, ஆடுகளுக்கு குடிக்கமட்டுமே! மலையாள நாட்டில் எப்போதும் தண்ணீரில் நின்று வேலை செய்த நஜீப்பிற்கு கால் கழுவக்கூட தண்ணியில்லை என்றால் எங்கே குளிப்பது ?

ஒவ்வொருமுறை ஆடுகளை பத்திக்கொண்டு போகும்போது இங்கிருந்து ஓடிவிடலாமா என்ற எண்ணம் தோன்றும், அப்படி ஒருமுறை ஓடியபோது இவனை கிடா ஒன்று விரட்டியது , பைனாகுலரில் பார்த்த அரபி பிக்கப்பில் வந்திருக்கிறான், துப்பாக்கி சத்தம் கேட்டது திரும்பிப்பார்த்தால் ஆட்டுக்கிடா குண்டு பயந்து இறந்திருக்கிறது! தனக்காக தன்னுயிரை ஈந்த ஆட்டுக்கிடாவை நினைத்து அழுதான். அன்றிலிருந்து உயிர் இருந்தால் போதும், இனிமேல் தப்பிக்கும் எண்ணம் வேண்டாம் என்று உறைந்தான். அவன் தினமும் மூன்று வேளையும் சாப்பிட்ட உணவு 'குப்புஸ் ' மட்டுமே அதற்கு நனைப்பதற்கு தண்ணீர் காலை மாலை இரண்டு வேளையில் ஆட்டுப்பால் குடித்துக்கொள்ளலாம். பாலை வனத்தில் நிழலுக்கு ஒதுங்க ஒரு மரம் கிடையாது மட்டுமல்ல, அவன் தங்குவது கூட நிழல் இல்லாத கூடாரத்தில்தான், கோடையில் சூரியன் அதிகாலை 4மணிக்கு முன்னால் வந்துவிடும்,மறைவதற்கு இரவு 8மணி கூட ஆகும். குளிர்ன்றால் அப்படி ஒரு குளிர் அப்போது செம்மறி ஆடுகளை கட்டிப்பிடித்து தூங்குவான், சூரியன் வருவதற்கு காலை 9மணி கூட ஆகலாம் விரைவில் இருட்டிவிடும் ஆனால் செய்யக்கூடியவேலை ஒன்றும் குறைவில்லை குறைவான பகலுக்குள் செய்துமுடிக்கவேண்டும் . ஒருநாள் மழை பெய்தது ஒவ்வொரு துளியும் கற்களைப்போல் , பகல் முழுதும் மழை அன்று முழுக்க நனைந்து குளித்தான் அழுக்குத்தீர, அரபிக்கு மழை என்றால் பயம் .அப்போதுதான் முதல் முறையாக நஜீப் என்றழைத்தான் அதுவரை ஹிமார் ,ஹிந்தி என்பான் . அன்றிரவு அரபி என்னிடம் ஆட்டுக்கொட்டகையை பார்த்துக்கொள் என்று சொல்லிவிட்டு பிக்கப் எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான், அந்த இரவை விடுதலை நாளாக உணர்ந்தேன், அல்லா எனக்காக இந்த நாளை தப்பிப்பதற்கு கொடுத்திருக்கிறான் பயன்படுத்திக்கொள் என்று மனம் சொல்லியது, மாறாக நான் இன்றிரவே ஹக்கீமை காண பயன்படுத்தினேன். அவன் இருந்த கொட்டகைக்கு சென்றேன் பலமுறை 'ஹக்கீம் ' என்றழைத்த பின் 'ஒரு விகாரரூபி' வந்தான் அவனிடம் ஹக்கீம் என்றொரு என்னுடைய கூட்டுக்காரன் இங்கே உண்டு தெரியுமா? என்றேன் அவன் பதிலேதும் சொல்லாமல் அழுதான், நான் கிளம்புநினைத்தபோது 'க்கா' என்றழைத்தான். அவனோடு அழுதேன், சிறிதுநேரம் ஆறுதல் கூறிவிட்டு மேய்ச்சலின்போது சந்திக்கலாம் என்று விடைபெற்றேன்.

சில வாரங்கள் கழித்து பார்த்துக்கொண்டோம் , தப்பிசெல்ல வேண்டும் என்றான். காத்திரு என்றேன். ஒருநாள் மேய்சசலின்போது அவனோடு இப்ராஹிம் காதிர் என்றொரு சோமாலிய தேசத்துக்காரன் வந்திருந்தான் , எனக்கு இங்கேயிருந்து தப்பித்துப்போக பாதை தெரியும் , ஒரு நாள் நமக்காக காத்திருக்கிறது அன்று வந்து அழைப்பேன் நாம் தப்பித்துவிடலாம் என்றான். அந்த நஜிப் நாளுக்காக காத்திருந்தான். இவனை ஏர்போர்ட்டிலிருந்து அழைத்துவந்து அர்பாப் ஒரு மலை நேரத்தில் வந்திருந்தான் அப்போது என்னுடைய அரபியும் அவனோடு புறப்பட்டான், இரவு ஒரு கல்யாணமிருக்கிறது காலைவரை கவனமாக பார்த்துக்கொள் காலையில் பிரியாணியும், majpus கொண்டுவருகிறேன் என்றான். அவர்கள் சென்றபிறகு ஹக்கீமின் கொட்டகைக்கு சென்றேன், அங்கே இப்ராகிமும் ஹக்கீமும் உற்சாகமாக இருந்தார்கள், அவனுடைய அரபியும் அதே கல்யாணத்திற்கு சென்றிருக்கிறான். அவர்கள் நகரத்தை அடைந்துவிட்ட வேளையில் நாம் புறப்படுவோம். அதுவரை அங்கே காத்திரு என்கிறார்கள்.

ல மணித்துளிகள் யுகங்களாக கடந்தன ,நான் என்னுடைய பையிலிருந்து நல்ல அடையாத தேடினேன் மணலால் மூடியிருந்த பையில் நான் ஊரிலிருந்து கொண்டுவந்த அணியாத ஆடையை தேடினேன் அது முழுதும் மணலால் நிறைந்திருந்தது அதனால் அணிந்திருந்த ஆடையோடு ஓட்டமெடுத்தோம்.இரண்டு இரவு ஒரு பகல் நடந்தோம் , ஓடினோம் சாலை தெரியவேயில்லை. தாகம் , பசி வெயில் இவற்றோடு விடுதலைக்காக ஓடினோம். ஹக்கீம் தளர்ந்து விழுந்தான் இறந்தேபோனான் , ஹக்கீமை பலிகொடுத்துவிட்டு நான் மட்டும் எப்படி தப்பிசெல்வேன் என்று புலம்பினேன். அப்போது அருகே மணலால் ஒரு புயல் உருவானது இப்ராஹிம் என்னை கண்களை இறுக்க மூடிக்கொள் என்று இருவரும் இறுக்கிக்கொண்டோம். சில நேரம் கழித்து கண் திறந்தபோது எதிரே இருந்த மணல் குன்றுகள் காணவில்லை. இன்னும் இரவு பகல் என கடந்து வந்தோம். ஒரு அதிகாலை சாலையில் டிரக்குகள் செல்லும்போது டயர்களின் சத்தம் கேட்டது. உடனே எழுந்து இப்ரஹீமை தேடினேன் எங்கேயும் காணவில்லை. இந்த பாலை என்னுடன் வந்த இருவரை விழுங்கிவிட்டதே என்று அழுதேன்.

சாலையைத்தேடி ஒடி அடைந்தேன், வாகனங்கள் வந்தன , காய் காண்பித்தேன் எதுவும் நிற்கவில்லை , என்னுடைய 'விகாரரூபமும்' அழுக்கும் காரணமாக இருக்கலாம். தளராமல் ஒவ்வொரு வண்டிக்கு கை காண்பித்தேன். காலையிலிருந்து மாலை வரை சூரியன் மறையும் வேளையில் ஒரு கார் சற்று தொலைவில் பிரேக் அடித்துநின்றது, ஓடினேன் ஒரு வெள்ளுடையில் அரபி. ஏறலாமா என்று தயக்கத்துடன் ஏறினேன் அரபி தண்ணீர் கொடுத்தார்.இரண்டு பாட்டில் குடித்தும் என் தாகம் தீரவில்லை. ரியாத் நகரத்தில் ஒரு சந்தை அருகே வண்டியை நிறுத்தினார் , நான் இறங்கினேன் என்னால் நடக்கவே முடியவேயில்லை தளர்ந்து வீழும்போது மலையாளத்தில் ஒரு கடையின் பெயரை பார்த்தேன். நான் மயக்கம் கழிந்து எழுந்தபோது ஒரு கட்டிலில் படுத்திருந்தேன், கையில் ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருந்தது மூன்று தினங்கள் தூங்கியிருக்கிறேன், என்னை அந்த கடைக்காரர் காப்பாற்றினார் என் தலைமுடிவெட்டி சவரம் செய்து என்னை உடைமாற்றி இருந்தார்கள் மருத்துவ சிகிச்சை அளித்தார்கள். போலீசில் சரணடைந்து ஊருக்கு போக வழி கட்டினார்கள்.

சவுதிஅரேபியாவில் சாலையில் நடந்தாலே போலீஸ் 'ஐடி' கேட்பார்கள், பள்ளிவாசல் அருகே தொழுகைநேரம் வெளியே சுற்றிக்கொண்டிருந்தால் போலீஸ் பிடிப்பார்கள். நான் பிடிக்கப்படவேண்டும் என்று போலீஸ் கண்ணில் படுமாறு நடந்துசென்றேன் ஒருவரும் என்னை கண்டுகொள்ளவில்லை, தொழுகை நேரமும் பள்ளிவாசல் அருகே சுற்றித்திருந்தேன் என் துரதிஷ்டம் போலீஸ் என்னை பிடிக்கவேயில்லை. நானாக போலீஸ் ஸ்டேஷன் சென்று சரண்டைந்தபோது ஒரு அடி கிடைத்தது , அங்கே சில வாரங்கள் இருந்தேன். ஒவ்வொரு வாரமும் ஒரு நாள் ஜெயிலி பரேட் நடக்கும், அப்போது அரபிகள் தங்களிடமிருந்து தப்பிசென்ற 'அஜநபி யைத் தேடி வருவார்கள். அப்போது மாட்டும் கைதிகளை போலீஸ் கண்முன்னே அரபி அடிப்பான். இழுத்துக்கொண்டுபோவான் , மற்றோருநாள் எம்பசியிலிருந்து ஆட்கள் வந்து எக்சிட் பேப்பர்கள் கொடுப்பார்கள். ஒவ்வொருமுறையும் பரேட் சமயத்தில் எவனோ ஒருவன் அழுவான் , அவன் என் வீட்டில் திருடிவிட்டான் என்று ஏதோ போய் புகாரை போலீசிடம் கொடுத்துவிட்டு நரகித்துக்கொண்டு செல்வான் . நான் ஒரு பரேட் சமயத்தில் என்னுடைய அர்பாப் வந்துகொண்டிருப்பதை பார்த்தேன் , நான் கலங்கவில்லை அவன் எனக்கு தெரிந்தது போல காட்டிக்கொள்ளவில்லை. அரபியும் என் தோளை தட்டிவிட்டு சென்றுவிட்டான், பரேட் முடிந்தவுடன் அங்கேயிருந்த ஒரு போலீசுக்காரர் சொன்னார், உன்னுடைய அரபி உன்னை பிடிக்காததற்கு காரணம் உன்னுடைய ஸ்பான்ஸர் அவன் இல்லை என்றார் .

வேறு வேலைக்காக சவுதிஅரேபியா வந்தா நஜீப்பை அரபி திருடிக்கொண்டுபோய் சம்பளமே இல்லாமல் வேலைவாங்கி அடிமையாய் வைத்திருந்தான் என்பது அதற்குப்பின்னர் தான் தெரிந்தது. அடுத்த சில தினங்களில் தூதரகம் மூலமாக தாய் நாடு வந்துசேர்ந்தான்.ஒவ்வொருமுறையும் தோற்ற நஜீப் வைத்திருந்த கடவுள் நம்பிக்கை அவனை காப்பாற்றியது , பிரதிபலனே இல்லாமல் உதவியர்களுக்கு அவன் கண்ணீரைத் தவிர திருப்பித்தருவதற்கு வேறொன்றுமில்லை.