வியாழன், 28 ஜனவரி, 2016

ஆண்டர்சன் கதைகள்

ஆண்டர்சன் கதைகள்




நேற்று இந்த நூலிலிருந்து ஒரே ஒரு கதை வாசித்தேன், மகாராஜாவின் புத்தாடை. வெகுநாட்களுக்கு முன்னால் ஒரு ஊரில் ராஜா இருந்தார், அவருக்கு புதுபுது ஆடைகள் அணிவதில் மிகவும் பிரியம். தினமும் மூன்று நான்கு ஆடைகளை மாற்றிக்கொள்வார். அமைச்சரவை நடந்துகொண்டிருக்கும் போதும் கண்ணாடி முன்பு நின்று தன்னை அழகு பார்த்துக்கொண்டிருப்பார். (கதை வாசிப்பவர்களுக்கு மோடியின் நினைவு வந்தால் நான் பொறுப்பல்ல.. அதை ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்பே மறைந்த ஆண்டர்சன் தான் பொறுப்பு ) அதற்காக எண்ணற்ற ஆடை வடிவமைப்பாளர்களை கைவசம் வைத்திருந்தார். அந்த காலத்தில் செல்பி வேறு இல்லை, அதனால் வலைத்தளத்தில் பகிரமுடியாமல் போனது சோகம்தான்.




அமைச்சர்களும் மகாராஜாவின் ஆடைகளைப் பார்த்து மனதுக்குள் வைதாலும் நேரில் புகழ்ந்தார்கள், அந்த ஊருக்கு புதிதாக இரண்டு ஏமாற்று பேர்வழிகள் ஆடை வடிவமைப்பாளர்கள் என்று சொல்லிக்கொண்டு வந்தார்கள். தாங்கள் மிகச்சிறந்த ஆடை வடிவமைப்பாளர்கள் என்று ராஜாவின் அவையிலே தெரிவித்தார்கள் இதற்கு முன்பே பல தேசங்களில் வடிவமைத்த  பயோடேட்டாவை காட்டினார்கள். ராஜாவும் உங்களிடம் அப்படியென்ன விசேசம் என்று கேட்டார்? அதற்கு அவர்கள் நாங்கள் தயாரிக்கும் ஆடைகள் தாங்கள் வகிக்கும் பதவிகளுக்கு தகுதியான மனிதர்களாக இருப்பார்களானால் மட்டுமே அவர்கள் கண்ணுக்கு தெரியும் மற்றவர்களுக்கு தெரியாது என்றார். அதாவது புத்திசாலிகளுக்கு அந்த ஆடை தெரியும், கடைந்தெடுத்த முட்டாள்களுக்கு ஆடை தெரியாது. அந்த ராஜாவும் ஒரு வேண்டுகோள் விடுத்தார், சரி செய்யும் ஆடையில் என்பெயரை குறுக்கும் நெடுக்குமாக அச்சிடமுடியுமா, ஏனென்றால் இன்னொரு தேசத்தின் சக்கரவர்த்தி என்னைப் பார்க்க வருகிறார் அவர் வரும்போது என்னுடைய ஆடை அவர் ஆடையைவிட சிறப்பாக இருக்கவேண்டும் என்றார்.


ஆடை இந்த தேதிக்குள் தயாராகவேண்டும் என்றார், அதற்குத் தேவையான பொருட்களை அவர்கள் எந்தக் கேள்வியுமின்றி அரசனின் கஜானாவிலிருந்து பெற்றுக்கொள்ளலாம் என ஆணை பிறப்பித்தார். அந்த இரு ஆடை வடிவமைப்பாளர்களும் தங்கமும், வெள்ளியும், பவளமும், முத்துக்களும் ஆடைகளில் இழைக்கவேண்டும் என்று வாங்கிக்குவித்தார்கள். அவர்களுக்கென அரண்மனையில் ஒதுக்கப்பட்ட அறைகளில் தூங்கிக் கொண்டடிருந்தார்கள். ராஜாவுக்கு அந்த ஆடை எப்படி இருக்குமென்று பார்க்க ஆவல் துளிர்த்தது. ஆனால் நான் வகிக்கும் பதவிக்கு தகுதியில்லாதவனாக அந்த ஆடையை காணமுடியாவிட்டால் என்ன ஆவது என்று ஒரு மூத்த மந்திரியை அனுப்பி ஆடை தயாரிக்கும் நிலவரத்தை பார்த்து வர அனுப்பினான். போன மந்திரிக்கு ஒன்றும் தெரியவில்லை, அந்த நெசவாளர்களின் ஒருவன் நெசவு இயந்திரத்தை காட்டி ஆடைகள் பாருங்கள் எவ்வள்வு மெல்லியதுணியில் நெய்யப்பட்டிருக்கின்றன என்று வர்ண்னை செய்து கொண்டிருந்தான்.


தனக்குத்தெரியவில்லையே நான் ஒரு முட்டாளா! அய்யோ.. வேறு யாருக்கும் தெரிந்துவிடக்கூடாதே என்று ஆகா பிரமாதம்.. நம் மகாராஜாவுக்கு இந்த ஆடைகள் கச்சிதமாக இருக்கும் என்றான்.


மூத்த அமைச்சர் ஆடை தயாரிக்கும் விதத்தை மகாராஜாவிடம் புகழ்ந்து தள்ளினான், மன்னருக்கும் பார்க்க ஆவல்தான். ஆகையால் கூட முதல் மந்திரி இன்னும் சில அதிகாரிகளை அழைத்துக்கொண்டு நெசவுசெய்யுமிடத்தை பார்வையிட்டான். யாருக்கும் நெசவு இயந்திரத்தைத் தவிர எந்தத்துணியும் தெரியவில்லை, அந்த ஏமாற்று பேர்வழிகள் நுட்பமாக நெய்வதுபோல பாவனை செய்துகொண்டார்கள். மன்னர் வந்ததும் அரசரே, இன்னும் சில தினங்களில் தங்களுடைய சிறப்பான ஆடை தயாராகிவிடும் பாருங்கள் என்றான். எல்லாரும் திருதிருவென முழித்தாலும் தங்களை முட்டாள்கள் என காட்டிக்கொள்ள விரும்பாமல் ஆகா பிரமாதம் என்றார்கள்.


ஆடை தயாராகிவிட்டது, வடிவமைப்பாளார்களே மன்னருக்கு அணிவிப்பது போல பாவனை காட்டினார்கள். அந்தப்புர சேவகர்கள் அங்கியை தாங்கிப்பிடிக்கும் வேலையை எடுத்துக்கொண்டார்கள், ஊர்வலம் தொடங்கியது, பொதுமக்கள் எல்லோருக்கும் அந்த ஆடை தயாரிப்பு பற்றியும் அதன் சிறப்பும் தெரிந்திருந்தது, முட்டாள்களின் கண்களுக்கு தெரியாது என்பதால் அவர்களும் மன்னரை புகழ்ந்தார்கள்.


அங்கே ஓரத்தில் நின்றிருந்த சிறுவன் கைகொட்டி மகாராஜா அம்மணமாக இருக்கிறார்.. என்று சிரித்தான். சிறுவனின் தந்தையும் அருகிலிருந்தவரிடம் சொன்னார் ஆமா.. மன்னர் ஆடையெதுவும் அணியவில்லை,, எல்லோருக்கும் தெரிந்தது ஆனாலும் ஊர்வல்ம் நிறைவடையவேண்டுமே.. அந்தப்புர பணியாளர்கள் அங்கியை ஏந்தியபடி அரண்மனை நோக்கி விரைந்தார்கள்.


இந்தக்கதையை வாசித்துவிட்டு பாலாவிடம் சொல்ல ஆரம்பிக்கும்போதே, அப்பா இந்தக்கதை Emperor's New Cloth எனக்குத் தெரியும் பள்ளி நூலகத்தில் வாசிததிருக்கிறேன் என்றான். மால்குடி டேய்ஸில் ஸ்வாமி என்ற சிறுவன் அவனது நண்பனான ராஜம்க்கு  “Anderson stories" பரிசாக அளிப்பான். சிறுவர்களுக்கு இந்த கதைகள் நிச்சயம் பிடிக்கும்.


தமிழில் : யூமா வாசுகி
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
விலை : 195ரூ.

திங்கள், 25 ஜனவரி, 2016

உப்பிட்டவரை - தமிழ்பண்பாட்டில் உப்பு




உப்பிட்டவரை - தமிழ்பண்பாட்டில் உப்பு


பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் எழுதிய நூல் என்றாலே கள ஆய்வு செய்து வரலாற்றுத் தரவுகளோடு இருக்கும், இதற்கு முன்பு அவர் எழுதிய ‘கிறித்தவமும் சாதியும்’ என்ற நூலை வாசித்திருக்கிறேன். சமீபத்தில் அவர் எழுதிய இரு நூல்களை வாங்கினேன், உப்பிட்டவரை மற்றும் தமிழகத்தில் அடிமைமுறை.


இந்த நூலை வாசிக்கும்வரையிலும் காந்தியின் உப்புக்காய்ச்சும் போராட்டம் ஏன், என்றே விளங்கவில்லை. உப்பை வைத்து ஆட்சியாளர்கள் வரிவிதிப்பில் கொடுரமாக நடந்துகொண்டார்கள் ஏனென்றால் உப்பு இல்லாமல் சாப்பிடமுடியுமா? உப்பு மனித உடலிலுள்ள சீரம் என்ற திரவத்தை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது, இல்லையென்றால் நீரிழப்பு ஏற்படும். மனிதன் கண்டுபிடித்த முதல் வேதியல் பொருள் ‘உப்பு’ தான். உணவுப் பொருட்களை சிதைவிலிருந்து பாதுகாக்கிறது.
உப்பு எப்படி கிடைக்கிறது? ஒன்று கடல்நீரை அல்லது உப்புத்தன்மை அதிகமுள்ள நிலத்தடிநீரை நிலத்தில் பாய்ச்சி நீர் சூரியவெப்பத்தில் ஆவியானவுடன் படிந்திருக்கும் உப்பை சேகரிக்கும் முறை ஒன்று. மற்றஒன்று உப்பை சுரங்கத்திலிருந்து வெடியெடுத்து அப்படியே பயன்படுத்துவது.பஞ்சாப் சுரங்கத்திலிருந்து வெள்ளை, வெளிர்சிவப்பு, கருப்பு நிறங்களில் கூட உப்பு கிடைக்கிறதாம்.
உப்பு ஒரு வேதியல் பொருள், உணவிற்கு, கைமருத்துவத்திற்கு , பண்டமாற்றமுறைக்கு, மதங்களில் பிரசாதப் பொருளாகவும், தூய்மைப்படுத்தும் பொருளாகவும், நட்புறவின் சின்னமாகவும் மங்கலப்பொருளாகவும் விளங்குகிறது.


புதுவீட்டுக்கு செல்லும்போது உறவினர்கள் உப்பை கொண்டுசெல்லும் வழக்கம் தமிழகத்தில் மட்டுமில்லை, ஆங்கிலேயர்களிடமும் இந்த வழக்கம் உள்ளதாம். எகிப்தியர்கள் மம்மிக்களை உருவாக்க உப்பை பயன்படுத்தியுள்ளார்கள்.


பண்டைய தமிழ்நிலத்தில் நெய்தல் நிலத்தில் மீன்பிடிதொழில் செய்த பரதவர்களே உப்பை உற்பத்தி செய்துள்ளார்கள். அந்த உப்பை மற்ற பகுதிகளுக்கு கொண்டுசெல்பவர்கள் உமணர்கள் என்றழைக்கப்பட்டார்கள். உப்புக்கு பண்டமாற்றாக நெல்லை செய்துள்ளார்கள்.


வரலாற்றில் உப்பு மெளிரியர் ஆட்சிகாலத்திலேயே அரசின் கட்டுப்பாட்டுக்கு வந்துவிட்டது, பண்டைய தமிழ் நிலத்தில் பல்லவப் பேரரசு (கி.பி. 4 - கி.பி.9ம் நூற்றாண்டு) உருவான காலத்தில் திணைச்சமூகம் சிதைவுற்றது, பேரரசுக்கு வருவாய் தரும் இனங்களில் ஒன்றாக உப்பு உற்பத்தி பார்க்கப்பட்டது. அச்சமயத்தில்தான் பரதவர்களிடமிருந்து உப்புத்தொழில் உமணர்களுக்கு கை மாறுகிறது இது ஒரு அரசியல் மாறுதலினால் ஏற்பட்ட விளைவே.


உப்பெடுக்கும் தொழில் மன்னருடைய கட்டுப்பாட்டிலும் உரிமையாக இருந்திருக்கிறது, உப்பு விளையும் அள்ங்கள் கோ-அளம் எனப்பட்டன.திணைசமூகமாக இருந்த காலத்தில் பண்டமாற்றுப் பொருளாக இருந்த உப்பு மன்னராட்சி காலத்தில் வருவாய்தரும் பொருளாக மாறிப்போனது. ‘வெட்டி’ வேலை என்பட்ட ஊதியமில்லா வேலையையும் மக்கள் செய்திருக்கிறார்கள் அதில் உப்பை சேகரிப்பதும் அதை கோவிலின் மடப்பள்ளிக்கு சுமப்பதுமான வேலை. வெட்டிவேலை என்பதன் பொருளே இப்போது சும்மா இருப்பது என்ற பொருளைத் தருகிறது.


ஆங்கில ஆட்சியிலும் உப்பு என்பது கிழக்கிந்தியக் கம்பெனியின் ஏகபோக உரிமையாக இருந்தது. 1806ம் ஆண்டிலிருந்து உப்பின் விலை 70 ரூபாயிலிருந்து 1844ம் ஆண்டு ரூ 180வரை உயர்ந்திருக்கிறது. இதனால் மக்கள் தங்கள் தேவைகளுக்கு தாங்களே தயாரிக்கும்போது அரசாங்கத்தால் பிரம்படியும் தண்டமும் வழங்கப்பட்டது. 1930 களில் ஒரு மூட்டை உப்பின் விலை மூன்று ரூபாய் நான்கு அணா, இதில் 3ரூக்கும் மேல் கலால்வரி. உற்பத்தியாளருக்கு கிட்டியது 1 அணா 90 பைசா. (இப்போது  விற்கும் பெட்ரோல், டீசல் மேல் விதிக்கப்படும் வரி நினைவுக்கு வருகிறதா?)  ஆங்கிலேயர்கள் இந்தியாவிலிருந்து பொருட்களை ஏற்றுமதி செய்யும் கப்பல்கள் அங்கிருந்து வரும்போது சும்மா வந்தால் கப்பலுக்கு பேலன்ஸ் கிடைக்காது என்பதற்க்காக லிவர்பூல், ஏடன் துறைமுகத்திலிருட்ந்து உப்பை கொண்டுவந்து விற்றிருக்கிறார்கள் அதனால இங்கு வரிவிதிப்பும் அதிகம் உள்ளூர் உற்பத்தியாளர்கள் நசிந்திருக்கிறார்கள்.


ஆங்கிலேயர்கள் விதித்த வரியின் விளைவாக உப்பின் விலை உயர்ந்ததால் பயன்பாடு குறைந்தது. இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் சில பத்திரிக்கைகள் ‘வருமான வரியை ரத்து செய்துவிட்டு, உப்பின் வரியை தொடரலாம் என்ற கருத்தை முன்வைத்திருக்கிறார்கள். இதைப்பற்றி வரலாற்றாசிரியர் பிபின் சந்திரா எழுதிய நூலில் “ இந்தியாவின் சிறு பிரிவினர் ஜமீந்தார்கள் வரிவிதிப்பிலிருந்து தம்மை காத்துக்க்கொள்ள கீழ்த்தட்டு மக்களின் நலன்களை பலிகொடுத்தனர்  என்கிறார்.


இந்தியாவின் முதல் கம்யூனிஸ்டான சிங்காரவேலர் 1923ல் தமது “லேபர் கிஸான் கெஜட்” இதழில் தங்களுடைய வேலைத்திட்டத்தில் உப்புவரி ஒழிப்புக்கான இயக்கத்திற்க்கு அறைகூவல் விடுத்துள்ளார்.
1920ல் ஒத்துழையாமை இயக்கம் நடத்திய காந்தி, இரண்டாவது சட்டமறுப்பு இயக்கமாக உப்பு வரிக்கு எதிராக “உப்பு சத்தியாகிரகம்” போராட்டத்தை நடத்தினார். அதே சம்யத்தில் தமிழகத்தின் வேதாரண்யத்தில் ராஜாஜி தலைமையில் உப்பு அறப்போர் நடைபெற்றது. திருமறைக்காடு என்ற ஊரின் பெயர் வடமொழிப்பெயர் மாற்றியமைத்த போக்கு காரணமாக வேதாரண்யம் என அழைக்கப்பட்ட தகவலும் உண்டு.


உப்பு உற்பத்தி செய்யும் தொழிலை மையமாக வைத்து மூன்று நாவல்கள் வெளிவந்திருக்கின்றன,
கரிப்புமணிகள் - ராஜம்கிருஷ்ணன்
உப்புவயல்- ஸ்ரீதரகணேசன்
அளம்- ச.தமிழ்ச்செல்வி
முதல் இரண்டு நாவல்களும் தூத்துக்குடி உப்பளத்தொழிலாளர்களின் அவலங்கள் நிறைந்த வாழ்க்கை குறித்தது, தமிழ்ச்செல்வி அவர்கள் எழுதிய நூல் வேதாரண்யம் பகுதியை மையமாக வைத்து எழுதியிருக்கிறார்.
வாசிக்கப்படவேண்டிய ஆய்வுநூல், ஆங்கிலத்த்தில் salary என்ற சொல்  salarium என்ற லத்தீன் சொல்லிலிருந்து பிறந்தது. தமிழில் சம்பளம் என்ற சொல் சம்பா + அளம் என்ற சொல்லிலிருந்து உருவாகியிருக்கிறது. சம்பா என்பது ஒருவகை நெல், அளம் என்ற சொல்லுக்கு உப்பு என்றே பொருள்.
இன்னும் சமூகத்தில் உப்புக்கு ஒரு பண்பாட்டு குணாம்சம் உண்டு, இரவில் வீடுகளில் உப்பை தரமாட்டார்கள், கடைகளில் விற்காமலும் இருந்திருக்கிறார்கள். உப்பிட்டோரை உள்ளளவும் நினை என்பதன் விளக்கம் உணவில் உப்பிட்டவர் அல்ல, வேலை கொடுத்து ஊதியம் வாங்குவொரைக் குறிக்கிறது.


ஆசிரியர் : ஆ.சிவசுப்பிரமணியன்
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
விலை ரூ140

புதன், 20 ஜனவரி, 2016

கோவில் நிலம் சாதி - பொ.வேல்சாமி.

கோவில்  நிலம் சாதி - பொ.வேல்சாமி.





இந்த நூலை எழுதியவர் பொ.வேல்சாமி அவர்கள், பல்வேறு சிற்றிதழ்களில் அவரால் எழுதப்பட்ட கட்டு்ரைகளை காலச்சுவடு நூலாக கொண்டுவந்துள்ளது. கோவிலுக்கும் நிலத்திற்கும் உள்ள தொடர்பு என்ன? நிலத்திற்கும் சாதிக்கும் உள்ள தொடர்பை பற்றி கட்டுரைகள் வரலாற்று தரவுகளோடு சொல்கிறது. தொழில்ரீதியாக சாதிகள் தோன்றியாதாக சொல்லப்படுகிறது, 21ம் நூற்றாண்டிலும் இப்பெல்லாம் யாருங்க சாதி பாக்குறாங்க, என்று வாய் சொன்னாலும் சிந்தனையிலும் செயலிலும் மாற்றம் நிகழவில்லை. முற்பட்ட சாதிகள் என்போர் இடஒதுக்கீட்டை கேவலமாக பேசிவருகிறார்கள், அதிலும் பிற்படுத்தபட்ட பிரிவினர் அதே ஒதுக்கீட்டை அனுபவித்துகொண்டே தாழ்த்தப்பட்டவர்களை இழிவு செய்தும் வருவது கண்கூடு. இடஒதுக்கீடு இன்னும் தேவையா? என்பவர்கள் கொஞ்சம்.. சாக்கடை, குப்பை , கழிவுநீர்தொட்டி வேலையில் எந்த ஒதுக்கீட்டுத் தடையும் இல்லாமல் தலித் மக்களும் அருந்ததியினர் மட்டும் செய்கிற தொழிலை வேறு யாரும் செய்யவில்லை.


ஏன் அந்த சாதியினர் மட்டும் இழிவான தொழிலுக்கு தள்ளப்பட்டார்கள், அவர்களிடம் ஏன் நிலமில்லை. என்பதற்கெல்லாம் வரலாற்றை நோக்கவேண்டும். இந்த நூல் என்பது ஆராய்ச்சி கட்டுரைகளின் தொகுப்பு எனலாம். அதற்காக நூலின் ஆசிரியர் எத்தனை நூல்களை மேற்கோள் காட்டியுள்ளார். அந்த நூலில் சொல்லப்பட்ட சில தகவல்களை மட்டும் கீழே தருகிறேன்...


வெற்றி பெற்றவர்கள் வரலாறு எழுதிகிறார்கள், முரண்பாடான ஒரு வரலாற்றை பாருங்கள்...


குலோத்துங்கச்சோழன் தன்னுடைய வீரமிக்க தளபதியான கருணாகர தொண்டைமானைக் கலிங்க நாடிற்கு அனுப்பி வீரப்போர் புரிந்து அந்நாட்டை கைப்பற்றியதாக கல்வெட்டுகளிலும் செயங்கொண்டாரின் கலிங்கத்துப்பரணியிலும் உள்ளது, ஆனால் முத்தப்பசெட்டியார் நூலில் சோழர்களின் கலிங்கத்துப் படையெடுப்பு முதல் முயற்சியில் வெற்றியடையாமல் போகவே இரண்டாவதுமுறை கருணாகரத்தொண்டைமான் தஞ்சாவூர் பகுதியிலிருந்து 1000 தாசிப்பெண்களை கலிங்கத்துக்கு கூட்டிச்சென்று வீரர்களை மயக்கி, காமமயக்கத்தில் இருக்கும்போது அவர்களை வென்று கலிங்கநாட்டை அடிமைப்படுத்தியிருக்கிறார்கள்.’புத்திசாலியான மனிதன்’ எந்த வகையிலும் வெற்றிபெறுவான் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு என்று புகழப்பட்டுள்ளது.


1500 ஆண்டுகால தமிழக வரலாற்றில் நூற்றுக்கணக்கான பஞ்சங்கள் வந்து இலட்சக்கணக்கான மக்கள் மாண்டு போனார்கள், ஒருவேளை உணவுக்காக தங்களையே அடிமைகளாக விற்றுகொண்டார்கள் என்ற செய்திகளோடு அதே காலத்தில் உண்ட உணவு செரிமானம் அடைவதற்கு உயர்சாதித் தமிழர்கள் சில வகை மருந்துவகைகளைத் திண்பண்டம் போலத் தயாரித்து உண்டார்கள். இன்றைய காலத்திலும் சுவையான சைவ உணவுகளைத் தயாரிப்பவர்கள் ‘தஞ்சாவூர் பார்ப்பனர்கள், அசைவ உணவு தயாரிப்பவர்கள் செட்டிநாட்டுக் காரர்கள், சுவையான இனிப்புவகைகளை தயாரிப்பதில் திருநெல்வேலிப் பிள்ளைமார்கள்.


தமிழகத்தின் நீர்வளம் மிக்க நிலங்களில் 75 சதமானம் கோவில்களின் உடமையாக இருந்தது, அதை நிர்வகிப்பவர்கள் பார்ப்பனர்களில் பெரும்பான்மையினர். பல்லவர் காலத்திலிருந்து கி.பி 5ம் நூற்றாண்டிலிருந்து 19ம் நூற்றாண்டுவரை அரசின் அதிகாரமான சட்டம்-ஒழுங்கு என்பது கோவில் நிர்வாகிகளிடம்தான் இருந்துள்ளது. அரசர்கள் என்பவர்கள் தற்போதைய ராணுவத் தலைவர்கள் போல செயல்பட்டுள்ளனர். சோழர் வரலாற்றில் இராஜராஜசோழனின் தமையனான ஆதித்த கரிகாலன் கொலையில் முக்கிய பங்காற்றிய ரவிதாசனையும் அவன் குடும்பத்தாரையும் எவ்வித தண்டனைக்கும் உட்படுத்த முடியவில்லை?


நிலம் யாருக்கு கொடுத்தார்கள்;
பல்லவர்கள் அளித்த பூதானங்களை தெரிவ்க்கும் கல்வெட்டுகள் ஹொஸக்கோட்டை பள்ளங்கொவில் ஆகிய இரண்டும் சமணப்பள்ளிகளுக்கு தானம் வழங்கப்பட்டிருக்கிறது, இது தவிற மற்ற அனைத்தும் வடநாட்டு பிரமாணர்களுக்கு அளிக்கப்பட்டவை. ஒருபங்கு நிலமென்றால் 2400குழி ஒவ்வொரு பங்கிற்கும் கொடுத்திருக்கிறார்கள், சிலருக்கு அரைப்பங்கு இவ்விதம் பிரிக்காமல் முழுக்கிராமத்தையே ஒருவருக்கு கொடுத்திருக்கிறார்கள். கிராமம் என்ற சொல்லே வடமொழியில் கிரமங்கள் பயின்றவர்களுக்கு வழங்கப்பட்ட நிலத்திலிருந்து வந்தது. தானம் பெறப்பட்ட நிலத்தில் அரசுக்கு எந்த உரிமையும் கிடையாது, வரிசெலுத்தத் தேவையில்லை. அந்த நிலங்கள் பிரம்தேயங்கள் என்ற பெயரில் வழங்கப்பட்டன.


வேதக்கல்வி கற்பவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அரசாங்கத்த்லிருந்து ஊதியம் கொடுக்கப்பட்டுள்ளது. வடமொழிக் கல்வி நிலையங்கள் பல்லவர், சோழர், பாண்டியர் காலங்களில் சுமார் 50க்கும் மேற்பட்டவை தமிழ்நாடு முழுமைக்கும் இருந்துள்ளன. இராஜசதுர்வேதிமங்கலத்தில் ஒரு கல்லூரியில் எத்தனை மாணவர்கள் எந்த வேதத்தை கற்றார்கள், அவர்களுக்கு எவ்வளவு ஊதியம் வழங்கபட்டது என்ற குறிப்புகளும் கல்வெட்டுகள் இருக்கின்றன. தானியம்தவிர தங்கமும் கொடுத்திருக்கிறார்கள்.


இந்த மன்னர்களுக்கு குரு என்பவர்கள் பெரும்பாலும் பார்ப்பனர்களாக இருந்துள்ளார்கள், இராசேந்திரசோழனின் குரு பீகார் பார்ப்பனர் சர்வசிவபண்டிதர், முதலாம் இராசராசனின் குரு ஈசான் சிவபண்டிதர் இவரும் வடநாட்டு பார்ப்பனர்தான். அரசனுக்கு படைத்தலைவர்களும் பார்ப்பனர்கள் தான் வகித்துள்ளனர்.



கொலைக்குற்றம் செய்தாலும் மரணதண்டனை பிரமாணர்களுக்கு கிடையாது, அதே சலுகையை பிற்காலத்தில் நில்வுடமையாளர்களான வேளாளர்களுக்கும் வழங்கபட்டுள்ளது.  ஒரு கொலைக் குற்றவாளியான வேளாள சாதிக்காரருக்கு அந்த் ஊர் கோவிலுக்கு விளக்கு எரிக்கும் நிபந்தம் வைத்தால் போதும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.


சோழர்காலத்தில் பார்ப்பனர்கள் பலர், தங்கள் நிலத்தைக் கோவிலுக்கு விற்பனை செய்த்தை கல்வெட்டுகள் பதிவுசெய்துள்ளன. களப்பிரர்கள் காலத்தில் தங்கள் நிலங்களை இழந்த பார்ப்பனர்கள், இனி ஒரு முறை அவ்வாறு நிகழக்கூடாது என்பதற்காக நிலத்தை கோவிலுக்குவிற்று பொற்கசுகளை பெற்றுக்கொண்டனர். அதேவேளையில் கோவில் நிலங்களின் நிர்வாகிகள் என்ற பெயரில் அந்த நிலத்தின் மீதும் அதிகாரம் தங்களை விட்டு நீங்காமல் பார்த்துக்கொண்டனர்.


இந்த வரலாறுகள் மூலம் நிகழ்காலத்தையும் நாம் அறிந்துகொள்ளலாம். இன்னும் பெள்த்த, ஜைன மதங்கள் பழங்குடிகளிடம் பெற்ற செல்வாக்கு,வேதமதம் எப்படி மக்கள் செல்வாக்கு பெற்றது என்பதையெல்லாம் கட்டுரைகள் விவரிக்கின்றன. ஆழமாக படிக்கவேண்டிய நூல்.
 

திங்கள், 4 ஜனவரி, 2016

கொல்கத்தா - B.B.D Bagh



கொல்கத்தாவின் பல சாலைகளின், தெருக்களின் பெயர்கள் புரட்சியாளர்களின் பெயர்களை நினைவுகூறுகிறது. அப்படியொரு கொல்கத்தா மையத்திலுள்ள முக்கிய இடத்தின் பெயர் B.B.D. Bagh. Benoy-Badal-Dinesh ஆகிய மூவரில் பெயரால் நினைவு கூறப்படும் இடம் பிரிட்டிஷ் இந்தியாவில் டல்ஹெளசி ஸ்கொயர் எனப்பட்டது. பகத்சிங்-சுக்தேவ்-ராஜ்குரு மூன்று புரட்சியாளர்களும் பிரிட்டிஷ் இந்தியாவின் பாராளுமன்றத்தில் குண்டுவீசினார்கள்.வங்கச்சிறைகளில் வாடும் விடுதலைப் போராட்ட வீரர்களை சிறையில் பிரிட்டிஷ் அரசு மோசமாக நடத்திய செயலைக்கு பழிதீர்க்கும் வகையில் Benoy Basu, Badal Gupta மற்றும் Dinesh Gupta  மூவரும் பிரிட்டிஷ் இந்தியாவின் ரைட்டர்ஸ் பில்டிங்கில் சிறை அதிகாரி சிம்சனைக் கொன்றார்கள். அப்போது பிரிட்டிஷ் போலிசாருக்கும் இம்மூவருக்கும் ஏற்பட்ட சண்டையில் தோற்று பிரிட்டிஷ்காரர்களிடம் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக மூவரும் தற்கொலை செய்துகொண்டார்கள். அதில் பாதல் குப்தா சயனைடு அருந்தி உயிரை மாய்த்துக்கொண்டார், மற்ற இருவரும் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டனர், அதில் தினேஷ் குப்தா காயத்துடன் உயிர்தப்பியதால் பிரிட்டிஷ் அரசால் தூக்கிலிடப்பட்டார். இது நடந்தது 1930ம் ஆண்டு. அந்த மூவருக்கும் வயது 20 முதல் 22 தான்.


இந்திய விடுதலைக்குப் பின்னர் டல்ஹெளசி ஸ்கொயர் Benoy-Badal-Dinesh தியாகிகளின் நினைவாக BBD Bagh என பெயர்மாற்றம் செய்யப்பட்டது.

ஜே.சி.குமரப்பா



காந்தியப்பொருளாதார அறிஞர் குமரப்பாவின் பிறந்தநாள் இன்று. அவருடைய பொருளாதார சிந்தனைகள் சிலவற்றை பார்க்கலாம்...குமரப்பா அவர்களின் ஆங்கிலக்கட்டுரைகள் சிலவற்றை வெ.ஜீவானந்தம் அவர்கள் தமிழில் மொழியாக்கம் செய்து தாய்மைப்பொருளாதாரம் என்ற நூ்லை இயல்வாகைப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.




உற்பத்தி.
மூன்றாம் உலக நாடுகளில் அதிகமான உற்பத்தி சக்திகள் குவிந்து கிடக்கின்றன, எனவே இங்கு மனித உழைப்பைக் குறைக்கும் பெரிய இயந்திரங்களுக்கு இடம்ளிக்ககுடாது. அதிகமான மனித ஆற்றலைப் பயன்படுத்த்துவதன் மூலம் மக்களுக்கு வளமான வாழ்வை அளிக்க முடியும்.


கூலி
உழைப்புக்கும், தேவைக்கும் ஏற்ற கூலி தரப்ப்டவேண்டும். ஒருவர் ஆரோக்கியமான உண்வைப் பெறும் வகையில் சம்பளம் தருவது அரசின் கடமை. முதலாளித்துவ நாடுகளில் கூலி அளவே பொருட்களின் விலையை நிர்ணயிப்பதாக உள்ளது. கூலி லாபத்திற்கும், சந்தை விலைக்கும் ஏற்ப ஏற்ற இறக்கம் காணுகிறது. லாபம் கொண்டு கூலியை நிர்ணயிக்கக்கூடாது. கூலி என்பது தொழிலாளியின் ஆரோகியமான வாழ்வைப் பாதுகாக்க உதவும் வகையில் அமைய வேண்டும்.


நுகர்வோர்
நுகர்வோர் தாங்கள் வாங்கும் பொருளில் என்ன உள்ளது, என்ன மதிப்பு என்பது தெரியாமலேயே வாங்கிக்கொண்டுள்ளனர். பொருளுக்கு வைக்கப்பட்ட விலைக்கு அது மதிப்புள்ளது என நம்புகின்றனர். பொருளின் மதிப்பை பற்றி அறிவது அவசியம்.


போர்.
ஆக்கிரமிபும், சுரண்டலும் அடிப்படையான் காலனியமே போருக்குக் காரணமாகிறது. தொழில்நுட்பம் கொண்டு அதிகப்பொருள் செய்து குவிக்கப்படுகிறது. இவை மக்களின் வறுமை பொக்க, பசி திர்க்க உதவிவில்லை. மனித வாழ்வௌ மேலும் பாதுகாப்பற்றதாக, கவலைமிக்கதாகவே மாறியுள்ளது.
செல்வக்குவிப்புப் பேராசையை விட்டு, சாதாரண மக்களின் நலவாழ்வுத்தேவைகளைத் தர ஒவ்வொரு நாடும் முயற்சி செயவேண்டும். உலகச்சந்தை, அதிக உற்பத்தி, அதிக விற்பனை, அதிக லாபம் என்பதை விட்டு அனைத்துமக்களின் மகிழ்ச்சியான நிறைவான வாழ்வுக்கு உதவும் பொருளாதார மாற்றம் இல்லையென்றால் உலகசமாதானம் என்பது வெறும் கற்பனையே.


காந்தி படுகொலை செய்யப்பட்ட அதெ ஜனவரி 30ம்தெதி ஜே.சி.குமரப்பா மறைந்தார்.