வியாழன், 30 செப்டம்பர், 2010

கறைபடிந்த நீதித்துறைஇந்தியாவில் காலத்திற்கு ஏற்றவாறு சில சட்டதிருத்தங்கள் கொண்டுவரப்படுகின்றன. ஆனாலும் நீதிமன்ற தீர்ப்பை அல்லது நீதிபதியை விமர்சனம் செய்தால் அது நீதிமன்ற அவமதிப்பு ஆகிறது. தீர்ப்பு வழங்குகிற நீதிபதியும் மக்களில் ஒருவர்தான். அவரும் மற்ற அரசு ஊழியர்களைப் போல லஞ்சம் பெற்று தவறான நீதியை வழங்கும் போது எப்படி விமர்சனம் பண்ணாமல் இருப்பது. சில சமயங்களில் சட்டமன்றம், பாராளுமன்றங்களினால் செயல்படுத்த முடியாதவற்றை நீதித்துறை தீர்ப்பின் மூலம் கட்டாயமாக அமலாக்கப்படுகிறது. நீதித்துறையில் “இறையாண்மை” என்ற பெயரால் ஜனநாயகம் மறுக்கப்படுகிறது. நீதித்துறையின் மீது எந்த வித குற்றச்சாட்டு வைக்கப்படும்போது அதற்கு பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளது. ஊழலின் வடிவங்கள் கோடிகளில் பரிமாணம் பெற்றுள்ள சூழலில் நீதித்துறையின் களங்கத்தை தாமாகவே துடைக்க வேண்டும். லஞ்சஒழிப்பை எங்கிருந்து தொடங்குவது, மேலிருந்து கீழா அல்லது கீழிருந்து மேலா எனும் கேள்வி வரும் போது முதலில் அதிகாரம் படைத்த மேல் நிலையில் இருந்து தொடங்கும் போது கீழ் நிலையில் தானாக மாறிவிடும்.


உச்ச நீதிமன்றத்தின் முன்னால் தலைமை நீதிபதிகளில் 16 பேரில் 8 பேர் ஊழல் பேர்வழிகள் என்று பிரசாந்த்பூஷன் “Tehelka” விற்கு பேட்டியளித்த பின்பு அவர் மீது உச்ச நீதிமன்றம் அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தது. அத்துடன் தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு பிரசாந்பூஷனின் தந்தையும் முன்னால் சட்ட அமைச்சருமான சாந்திபூஷன் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அத்துடன் ஊழல் புகார் சுமத்தியுள்ள 8 நீதிபதிகளின் ஊழல்களையும் தகுந்த ஆதாரத்துடன் உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பியுள்ளார். சாந்திபூஷன் உச்சநீதிமன்றத்தில் பிரபல வழக்கறிஞர், இவர் மொராஜிதேசாயின் மந்திரி சபையில் சட்ட அமைச்சராகப் பதவி வகித்தவர். இந்திராகாந்தியின் “தேர்ந்தெடுப்பு” செல்லாது என்று வாதாடியவர். அவர் வழியில் பிரசாந்பூஷன் CAMPAIGN FOR JUDICIAL ACCOUNTABLITY என்ற அமைப்பை நிறுவி நீதித்துறை செய்யவேண்டிய சீர்திருத்தம், தீர்ப்புகளின் விமர்சனம், நீதிபதிகளின் முறைகேடான தீர்ப்புகளைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டிவருகிறார்.

கர்நாடக முன்னால் தலைமை நீதிபதி P.D.தினகரன் சுப்ரிம் கோர்ட் நீதிபதியாக பதவிவுயர்வு வழங்க உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள்குழு முடிவு செய்ததை எதிர்த்து ஊழல் கறைபடிந்த நீதிபதியை உச்சநீதி மன்றத்தின் படியேறாமல் தடுத்து நிறுத்துயவர். நீதிபதி தினகரனை பதவிநீக்கம் செய்ய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தீர்மானம் கொண்டு வந்தனர். அது என்னவாயிற்று என்று இதுவரை எதுவும் தெரியவில்லை. முடிவாக சிக்கிம் மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இன்னமும் பதவியில் நீடித்து வருகிறார்.

சென்ற ஐக்கிய முன்னனியின் ஆட்சியில் நிரைவேற்றப்பட்ட மூன்று முக்கிய மசோதாக்களில் தகவல் அறியும் உரிமைச்சட்ட மசோதா இடது சாரிக் கட்சிகளின் நிர்பந்தம் காரணமாக இச்சட்டத்தை நிறைவேற்றினார்கள். ஆனால் இன்று இச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் வேலைகளில் தற்போதைய UPA அரசு முனைப்பாக உள்ளது. சமீபகாலமாக இச்சட்டத்தின் மூலம் ஆட்சியாளர்களின் முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்த சூழ்நிலையில் அந்த சட்டம் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் ஆர்வலர்கள் கொலைசெய்யப்படுகிறார்கள். தன்னார்வ நிறுவனங்கள் செய்து வரும் இவ்வியக்கத்தை இடதுசாரிக் கட்சிகள் பொறுப்பேற்று நடத்த வேண்டும். பொதுவாழ்வில் நேர்மையைக் கடைபிடிப்பவர்களால் மட்டுமே இந்த இயக்கத்தை நடத்த முடியும். இந்தியாவில் பொதுவாழ்க்கையில் உயர் பதவி வகிப்பவர்கள் தங்களின் வருடாந்திர சொத்து பற்றிய விவரங்களை மக்களுக்குத் தாமாகவே தெரியப்படுத்த வேண்டும். ஆட்சியில் இருப்பவர்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஐஏஎஸ் அதிகரிகள், நீதிபதிகள் தலைமை நீதிபதி உட்பட அனைவரும் மக்களுக்கு தகவல் அளிக்க கடமைப்பட்டுள்ளனர். அப்போதுதான் உண்மையான ஜனநாயகம் நடைபெரும்.

நம் நாடு பொருளாதார வளர்ச்சியில் முதல் பத்து இடத்திற்குள் இருந்தாலும் உலகில் வறுமையானவர்கள் இந்தியாவில் பாதிப்பேர் உள்ளனர். ஊழலின் தரவரிசையில் 180 நாடுகளில் நாம் 80-வது இடத்தில் உள்ளோம் . அணு ஆயுதங்களையும் ஏவுகணைகளையும் சோதனை செய்வதன் மூலம் இந்தியா வல்லரசு வேண்டுமானால் ஆகிக்கொள்ளலாம், அது நமக்கு வேண்டாம், நமக்குத் தேவை “நல்லரசு” அது மக்களால் மக்களுக்காக மட்டுமே. மத்திய அரசோ மாநில அரசோ நலத்திட்டங்கள் என்ற பெயரில் மக்கள் பணத்தை ஆட்சி செய்யும் அரசியல்வாதிகளும் ஆளும் வர்க்கமும் பங்குபோட்டுக் கொள்கின்றன. ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடங்கி சமீபத்திய காமன்வெல்த் போட்டிகளில் அரங்குகள் அமைப்பது வரை ஆட்சியாளர்கள் ஊழல் புரிந்துள்ளனர். இந்த நாட்டின் இயற்கை வளங்கள் தனியார் நிறுவனங்களாலும் பன்னாட்டு நிறுவனங்களாலும் சூறையாடப்படுகின்றன. நீதித்துறையும் அதன் பங்கிற்கு லஞ்சப்பணத்திற்காக சுற்றுச்சூழலை மதிக்காத பெரு முதலாளிகளின் நலன்களூக்காக தீர்ப்பு வழங்குகிறது.

மக்கள் நலன்சார்ந்த பிரச்சனைகளின் தீர்ப்புகள் விரைவாக அமையவேண்டும், சமீபத்திய ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழல் மாசுபடுத்தியதால் அந்நிறுவனத்தை மூட தீர்ப்பு அளித்துள்ளது, மத்திய அரசின் உணவு தானியக்கிடங்கில் உண்வு தானியங்கள் புளுத்துப்போவதற்குப் பதிலாக எழை மக்களுக்கு இலவசமாக வழங்கவேண்டும் என்று சுப்ரீம்கோர்ட் அரசை சாடியதை பாராட்டப்படவேண்டும். அதே நேரத்தில் குடிமக்களின் நீதியின் மீதான விமர்சனங்களை ஆராயவேண்டும். வெளிப்படையான நிர்வாகத்தில் தீர்ப்புகளை விமர்சனம் செய்வதில் என்ன தவறு? குற்றம் சாட்டப்பட்டுள்ள நீதிபதிகளின் மீது வழக்கு தொடர்ந்து நீதித்துறை அதன் களங்கத்தை துடைக்க முயற்சிக்கவேண்டும்.

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

நெஞ்சு பொறுக்குதில்லையே....காமன்வெல்த் போட்டி நடைபெற இன்னும் ஒரு வார கால இடைவெளிதான் உள்ளது, தினமும் ஏதாவது பாலம் உடைந்துவிழுவது,கூரை சரிந்து விழுவது இன்னமும் விளையாட்டு அரங்குகளை கட்டிக்கொண்டேயிருப்பது என இருக்கிறது. ஒவ்வொரு செங்கலிலும் ஊழல் செய்திருக்கிறார்கள் அதனால் தான் விழா தொடங்குவதற்கு முன்பே இடிந்து விழ ஆரம்பிக்கிறது. ரூ 70,000 கோடி செலவில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டிகள் தோல்வியடைய வேண்டும் என்று அரசின் செயல்பாடுகளை கண்டு மனம் நொந்து காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மணிசங்கர் ஐயர் கருத்து தெரிவித்தார். உடனே பாஜகவும் காமன்வெல்த் அமைப்பாளர்களும் கொதித்தார்கள். அவர் உண்மையைத்தான் கூறியிருக்கிறார். நாட்டின் மக்களில் 70 சதவீதத்திற்கும் மேல் வறுமையால் வாடிக்கொண்டிருக்கும் வேளையில் நமக்கு இந்த தம்பட்டம் தேவைதானா. இந்த காமன்வெல்த் போட்டியால் இந்தியாவிற்கே தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறார்கள் அதன் அமைப்பாளர்கள். அதன் தலைவர் சுரேஷ் கல்மாதியிடம் ஏன் பாலம் இடிந்து விழுகிறது என்று கேட்டால் இதெல்லாம் எல்லா நாட்டிலும் விளையாட்டு அரங்கு அமைக்கும்போது நடப்பது தான் என்று கூசாமல் சொல்கிறார். எனக்கு நினைவு தெரிந்தவரை இவர்தான் ஒலிம்பிக் கமிட்டியில் தலைவராக இருக்கிறார். இவர்கள் ஊழல் செய்து சொத்து சேர்ப்பதற்காகவே இந்த காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகள் என்பது தெளிவு. அதற்கு மக்களின் வரிப்பணம் வீண் செய்யப்படுகிறது. முதலில் இந்தியாவில் விளையாட்டு வீரர்களை உருவாக்கவேண்டும், வெள்ளைக்காரர்களின் விளையாட்டான கிரிக்கெட்டை பெப்சி,கோக்,வில்ஸ் நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்து அவர்களின் வியாபாரத்தை இந்தியாவில் பெருக்கினார்கள். ஆனாலும் இப்போது அந்த “தேசிய” கிரிக்கெட் வீரர்கள் தனியார் நிறுவனத்திற்கு விலைபோக ஆரம்பித்து விட்டார்கள். ஏற்கனவே பொய்கள் கூறும் விளம்பரங்களில் வந்து மக்களை ஏமாற்றினார்கள். உலக அரங்கில் விளையாட்டு என்றால் அது ஒலிம்பிக் தான், அதில் ஒரு நாடு எத்தனை தங்கம் பெற்றது என்பதை வைத்து தான் அந்த நாட்டின் Human Development Index வெளிப்படுகிறது. ஒரு மத்திய அமைச்சர் அதுவும் உணவு மற்றும் விவசாயத்துறைக்கு பொறுப்பு வகிப்பவர், நாட்டின் உணவு தானியக்கிடங்குகளில் புழுத்துப் போகும் அரசியை, கோதுமையை பட்டினியி வாடும் மக்களுக்கு இலவசமாக தரவேண்டும் என்று சுப்ரீம் உத்திரவிட்டும் அதை அரசின் “பாலிஸி” மேட்டரில் கோர்ட் தலையிடக்கூடாது என்று பிரதமர் சொல்கிறார். இன்னும் அந்தத் துறை அமைச்சர் சரத்பவார் வெளியிலேயெ தலைகாட்டவில்லை காரணம் ICC யிலும் BCCI யிலும் ரொம்ப பிஸி, இதில் பிரதமருக்கு என்னுடைய “வேலைப்பளு” அதிகம் என்று கடிதம் எழுதுகிறார். உடல்நலக்குறைவால் அவதிப்படும் ஒருவரை ஏன் மன்மோகன்சிங் விடாப்பிடியாக உட்காரவைத்து அமைச்சர் வேலை கொடுக்கறார் என்று தெரியவில்லை.

சரத்பவார் பணம் தரும் விளையாட்டில் கவனம் செலுத்துவது போல இன்னொரு மத்திய அமைச்சர் மம்தா பானர்ஜி மேற்குவங்க அரசியலுக்காக ரயில்வே அமைச்சத்தின் தலைமையகத்தையே கல்கத்தாவிற்கு மாற்றிவிட்டார். இவர் பதவியேற்றதிலிருந்து ரயில் விபத்துக்களால் இதுவரை 270 பேர் பலியாகியிருக்கிறார்கள். ஒவ்வொரு விபத்திற்கும் மார்க்சிஸ்ட் கட்சியே காரணம் என்று கூசாமல் குற்றம் சாட்டுகிறார். பிரதமர் மன்மோகன்சிங், மாவோயிஸ்ட்கள் தான் தேசபாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று அறிக்கை விடுக்கிறார். ஆனால் மந்திரிசபையில் இடம்பெற்றுள்ள மம்தா பானர்ஜி மாவோயிஸ்ட்களை ஆதரிக்கிறார். சென்ற மக்களவை தேர்தலிருந்து இதுவரை மேற்குவங்க மாநிலத்தில் மாவோயிஸ்ட்களால் 280க்கும் அதிகமான மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள், ஆதரவாளர்கள், பழங்குடியினர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆயுத உதவியும் கூட மம்தாவின் கட்சியான திருணாமூல் காங்கிரஸ் அளித்து வருகிறது. அரசியல் ரீதியாக ஆளும் இடதுசாரிகளை எதிர்கொள்ளமுடியாமல் மாவோயிஸ்ட்கள் என்ற சீரழிவு சக்திகளை “இறக்குமதி” செய்து வன்முறையின் மூலம் சாதிக்கலாம் என்று நினைக்கிறார். மம்தாபான்ர்ஜி யின் கட்சிக்கும் மாவோயிஸ்ட்களுக்கும் உள்ள தொடர்பை ஆதாரங்களுடன் பலமுறை பிரதமரிடமும் உள்துறை அமைச்சருடனும் முறையிட்டும் பலனில்லை.காங்கிரஸ் கட்சிக்கும் இடதுசாரிகளை முக்கியமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை ஒழித்துவிட்டால் பாராளுமன்றத்தில் பொருளாதார சீர்திருத்தத்திற்கு எந்த எதிர்ப்பும் இருக்காது என்று கள்ள மெளனம் காக்கிறார்கள்.

அமெரிக்க கார்ப்பரேட் நலன்களுக்கு நன்மை தரும் அணுசக்தி இழப்பீட்டு மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறவில்லையென்றால் பதவி துறப்பேன் என்று கூறும் பிரதமர், சக நாட்டு விவசாயி வாழ்வாதாரம் இல்லாமல் தற்கொலை செய்வதைக் கண்டு எப்போதாவது மனம் வருந்தினாரா? காமன்வெல்த் விளையாட்டில் ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல், மருத்துவத்துறை அதிகாரி கேதன் தேசாய் செய்த ஊழல், இந்த நாட்டின் இயற்கை கனிம வளங்கள் அனுமதியில்லாமல் கொள்ளையடித்து செல்லப்படுகின்றன அதை குறித்து கவலைப் படுகிறாரா? இந்த தேசத்தை கொஞ்ச கொஞ்சமாக பெருமுதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவங்களுக்கும் விற்று வருகிறார். நாட்டின் GDP 8 முதல் 9 சதம் உயர்கிறது என்று அறிக்கைவிட்டால் போதுமா? யாருக்கான வளர்ச்சி. குறிப்பிட்ட சில கார்ப்பரேட் நிறுவனங்கள் அதீத வளர்ச்சியடைந்தால் அது அரசாங்கத்தின் “பாலிஸி” யால் தானே?

ஐக்கியமுண்ணனியின் கூட்டாளிகள் திமுக உட்பட யாரும் காங்கிரஸின் மக்கள் விரோத கொள்கைகளை கேள்வி கேட்பது கிடையாது,ஏனென்றால் இவர்களுக்கும் அந்த “பாலிஸி” யில் பங்கு தானே! இதையெல்லாம் மக்கள் எப்போதும் சகித்துக்கொண்டேயிருக்கமாட்டார்கள்.

புதன், 15 செப்டம்பர், 2010

தலித் மக்கள் வீட்டில் ராகுல் காந்தியும் மகாத்மா காந்தியும்சமீபகாலமாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும் நேருவின் குடும்ப வாரிசான ராகுல் காந்தி எல்லா மாநிலங்களையும் சுற்றிவருகிறார். “தலித்” மக்களுக்கு நெருக்கமாக தான் இருக்கின்ற மாதிரி அவர்கள் வீடுகளில் தங்கவும் அம்மக்களுடன் சேர்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுப்பது என்று “வாக்குகளை” மையமாக கொண்டு விளம்பரம் தேடிவருகிறார். இந்தியாவில் தீண்டாமை நெடுங்காலமாக நிலவி வருவதன் காரணமாக அம்மக்களுக்கு கோவிலில் வழிபாட்டு உரிமையில்லை,பொதுமயானம் பயன்படுத்த ஆதிக்க சாதிகள் தடுப்பது, சில கிராமங்களில் பொது கிணற்றில் தண்ணீர் எடுக்க மறுப்பு, தடுப்புச்சுவர் மூலம் அம்மக்களை பிரித்துவைப்பது (உத்தபுரம் சாட்சி) என்பதெல்லாம் காங்கிரஸ் கட்சிக்கு தெரியவில்லையா என்ன? வரலாற்றில் மகாத்மா காந்திக்கே அல்வா கொடுத்திருக்கிறார்கள்.

இந்திய சுதந்திரப்போராட்டம் நடக்கும்போது அதன் ஒருபகுதியாக காந்திஜி தீண்டமைக் கொடுமைக்கெதிராக போராடினார். சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகாலம் ஆகியபின்பும் கிராமங்களில் நிலமில்லா விவசாயக் கூலிகளாக பெருமளவு “தலித்” மக்கள் தான் இருக்கிறார்கள், அன்றைய நிலையை யோசித்துப் பார்த்தால் சமூகத்தில் எவ்வளவு கொடுமைகளை அனுபவித்திருப்பார்கள். காந்திஜியின் இந்த முயற்சிகளை காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் விரும்பவில்லை. காந்தி தாமாகவே வறுமை வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து அதில் உறுதியாக இருக்கும் நிலையில் அவரை காங்கிரஸ் கட்சியால் உண்மையில் பாதுகாத்திட முடியுமா என்று இந்தியாவுக்கு கடைசி வைஸ்ராயாக பொறுப்பேற்றிருந்த மெளண்ட்பேட்டன் பிரபு கவிக்குயில் சரோஜினிநாயுடுவிடம் கேட்டார். ‘ஓ..’ ‘அவருக்குப் பொருத்தமான மக்கள் கூட்டம் நிறைந்த மூன்றாம் வகுப்பு ரயில் பெட்டியைத்தேடி கல்கத்தா ரயில் நிலைய பிளாட்பாரத்தில் அவர் தனியாக நடந்து செல்வதாக நீங்களும்(மெளண்ட்பேடன்) காந்தியும் வேண்டுமானால் கற்பனை செய்து கொள்ளலாம். அல்லது தீண்டத்தகாதோரின் காலனியின் குடிசையில் காந்தி தங்கியிருக்கும்போது பாதுகாப்பின்றி அவர் இருப்பதாகவும் நினைக்கலாம்.

தீண்டத்தகாதவர் போல உடையணிந்து காங்கிரஸ்காரர்கள் பலர் அவர் பின்னால் நடந்து செல்வதையும் மூன்றாம் வகுப்பு ரயிபெட்டியில் அவருடன் பயணம் செய்வதையும் காந்திஜி அறியமாட்டார். டில்லியின் பங்கி காலனிக்குள் போது ஹரிஜன்கள் போலவே உடை உடுத்தி அவரைச்சுற்றியுள்ள குடில்களில் காங்கிரஸ்காரர்கள் பலர் குடியிருந்தனர் என்று விளக்கியிருக்கிறார். மேலும், அந்த வயதான மனிதரை வறுமையில் வாழ வைப்பதற்கு காங்கிரஸ் கட்சி எவ்வளவு தொகையை செலவிடுகிறது என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள்’ என்று கூறி சரோஜினி நாயுடு விளக்கத்தை முடித்தார்.

இந்தக் கொள்கையும் நடைமுறையும் தான் அவர்களின் யோக்கியதை, இன்றில்லாவிட்டாலும் ஒருநாள் அம்மக்கள் தங்களது அனுபத்தில் தங்களுக்காக யார் போராடுகிறார்கள் என்று புரிந்துகொள்வார்கள்.

சனி, 11 செப்டம்பர், 2010

A Cabinet of crorepatisமத்திய அமைச்சரவையில் “பில்லினியர்கள்” யார் யார், அவர்களுக்கு எவ்வள்வு சொத்து மதிப்பு உள்ளது என தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலமாக திரு.S.C.அகர்வால் கேட்டப்போது கிடைத்த விபரங்கள், யாரும் உண்மையான “ரியல்” சொத்து மதிப்பை வெளியிடவில்லை என்பது மட்டும் தெளிவாகிறது. இந்திய பாராளுமன்றத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களில் கிட்டத்தட்ட 60 சதமானத்திற்கும் மேலானவர்கள் “பில்லினியர்களாக” உள்ளனர். அந்த விவரங்கள் எல்லாம் அவர்கள் தேர்தலில் போட்டியிட்ட போது தாக்கல் செய்த சொத்து மதிப்பு தான்.அமெரிக்க நலன்களுக்காகவே அதிகமாக உழைக்கின்ற நமது பாரதப் பிரதமர் திருவாளர். மன்மோகன் சிங் அவர்களுக்கு ரூ 4.3 கோடி தான், அதிகபட்சமாக சொத்து வைத்திருக்கும் அமைச்சர் பிரபுல் படேல், அவருடைய சொத்து மதிப்பு 35 கோடிதானாம், பெரும்பாலான அமைச்சர்களின் சொத்துமதிப்பை விட அவர்களின் மனைவிமார்களின் சொத்து அதிகமாக உள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் பினாமிகளின் பேரில் உள்ள சொத்துமதிப்பை எப்படி கணக்கெடுப்பது. அமைச்சரவையிலும் சில ஏழை அமைச்சர்கள் இருக்கிறார்களாம், அதுவும் பாதுகாப்பு அமைச்சர் அந்தோனி அவர்களின் மொத்த சொத்து மதிப்பு ஒரு இலட்சம். வேடிக்கையாக நமது ஸ்பெக்டரம் புகழ் ராசா அவர்களுக்கு ரூ88 இலட்சம் மட்டுமே உள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. எல்லாரும் தங்களுடைய இந்திய முதலீடுகளை மட்டும் தான் சொல்லியிருக்கிறார்களோ என்னவோ? இது குறித்த செய்தி இன்றைய “ஹிந்து” வில் வந்துள்ளது.

பிரதமர் மற்றும் சில அமைச்சரவை சகாக்களின் சொத்துமதிப்பைப் பார்ப்போம்..

பிரதமர் மன்மோகன் சிங் : 4.3 கோடி

பிரணாப் முகர்ஜி : 1 கோடி மனைவிக்கு 1.5கோடி

S.M.கிருஷ்ணா : 1 கோடி (மனைவி பேரில் உள்ள சொத்து)

சரத்பவார் : 3.9 கோடி மனைவியின் பேரில் 2.16 கோடி

கபில் சிபல் : 14 கோடி மனைவியின் சொத்து மதிப்பு 7 கோடி

ப.சிதம்பரம் : 5 கோடி மனைவியின் சொத்து மதிப்பு 7 கோடி

முரளி தியோரா : 15 கோடி மனைவியின் பேரில் 31 கோடி

ஆனந்த் சர்மா : 2.5 கோடி

கமல் நாத் : 3 கோடி மனைவியின் சொத்து 1.5 கோடி

மு.க.அழகிரி : 9 கோடி மனைவி,மகன் பேரில் 6 கோடி

பிரபுல் படேல் : 35 கோடி மனைவி வர்ஷாவின் பேரில் 40 கோடி

ஜோதிர்தயா சிந்தியா : 30 கோடி (ராயல் குடும்ப சொத்து தவிர்த்து)

அ.ராசா : 88 இலட்சம்

மம்தா பானர்ஜி : 6 இலட்சம்

A.K.அந்தோணி : 1 இலட்சம்

குறிப்பு: உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் 2009ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டபோது தேர்தல் கமிசனுக்கு அளித்த விபரத்தின் படி அவருடைய அசையும்,அசையா சொத்துமதிப்பு 27 கோடியே 51 இலட்சம். http://www.elections.tn.gov.in/ECI/Affidavits/S22/GE/31/CHIDAMBARAM%20P/chidambaram_SC7.jpg

வெள்ளி, 3 செப்டம்பர், 2010

FCI குடோன்களில் வீணாகும் உணவு தானியம்

இந்திய உணவு தானிய கிடங்குகளில் (FCI) கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 10 இலட்சம் டன்கள் அளவிற்கு உணவுதானியங்கள் வீணாக்கப்பட்டுள்ளன. வறுமைக்கோட்டிற்கு கீழும் மேலும் வாழும் கோடிக்கணக்கான் மக்கள் உணவின்றி பட்டினியாகி கிடக்க, அம்மக்களுக்கு அளிக்க வேண்டிய உணவு தானியத்தை அரசு புழுக்கச்செய்திருக்கிறது. ஐநா வின் சமீபத்திய அறிக்கையின் படி 63 சதவீத இந்தியக் குழந்தைகள் ஒருவேளை உணவின்றி படுக்கைக்கு செல்கின்றன. இந்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் வறுமையைப் போக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன, ஆனால் மக்களின் பசி, பட்டினி தான் இன்னும் தீர்ந்தபாடில்லை.


courtesy: "The Hindu"

தில்லியைச் சேர்ந்த திரு.ஆசிஸ் தேவ் பட்டாசார்யா தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் இந்திய உணவுக் கழகத்திடம் உணவு தானிய இருப்புகளையும் வீணாண விபரத்தையும் கேட்டதன் வாயிலாகவே இச்செய்தியை அறியமுடிகிறது. உச்சநீதிமன்றமும் மத்திய அரசை பட்டினியால் வாழும் மக்களுக்கு வீணாவதற்கு முன்பே உணவு தானியங்களை இலவசமாக மக்களுக்கு வழங்க அறிவுறுத்திய பின்பும் மைய அரசு செயல்படாமல் உள்ளது.

உணவுக்கிடங்குகளை சரியாக நிர்வகித்தாதன் விளைவாக ஒவ்வொரு வருடமும் இலட்சக்கணக்கான அரிசி, கோதுமை, மக்காச்சோளம் மற்றும் நெல் வீணாகிவந்துள்ளது. FCI-யின் அறிக்கையின்படி 1997-2007 க்கும் இடைப்பட்ட காலத்தில் 183,000 டன் கோதுமையும், 395,000 டன் அரிசியும், 22,000 டன் நெல் மற்றும் 110 டன் அளவிற்கு மக்காச்சோளமும் வீணடிக்கப்பட்டுள்ளது. எலிகள் தின்கிற தானியத்தைக் கூட மக்களின் பட்டினியைப் போக்க தர அரசு மறுக்கிறது. உணவுப் பஞ்சம் உற்பத்தி குறைவால் ஏற்பட்டதல்ல மாறாக விநியோக முறையின் கோளாறால் தான்.இந்தியமக்களின் சராசரி தனிமனிதன் உட்கொள்ளும் உணவுதானியத்தின் அளவு (2005-2008 வரை) 436 கிராம், 1955-1958 க்கும் இடைப்பட்ட காலத்தில் இது 440 கிராமாக இருந்துள்ளது. இது தான் வளர்ச்சியா? இந்திய உணவுக்கழகத்தை நிர்வகிக்கும் விவசாயத்துறை அமைச்சர் தனது துறையைக் கவனிக்காமல் கிரிக்கெட் நிர்வாகத்தை கவனித்துக் கொண்டிருக்கிறார். இப்படிப் பட்ட அமைச்சரவை சகாக்களை இன்னும் நிர்வாகத்தில் வைத்துக்கொண்டு அழகு பார்க்கிறார் தன்னிச்சையாக இயங்கமுடியாத பிரதமர் மன்மோகன்சிங்.