செவ்வாய், 15 அக்டோபர், 2013

Europa Europa (1990) உலகசினிமா

ஒரு வகுப்புக்கலவரம் நேரிட்டால் அவன் நல்லவனா? கெட்டவனா? என்றெல்லாம் பார்க்க கலவரக்காரர்களுக்கு நேரமிருக்காது. அவன் எதிரியா? அவனுடைய அடையாளம் என்ன? உயிர்பயத்தின் காரணமாக பொய்கூட சொல்லலாம், ஆனால் அவனுடைய அங்க உறுப்புகள் அவனை இந்த இனத்தவன், மதத்தினன் என்று காட்டிக்கொடுத்துவிடும். Mr.& Mrs. Iyer என்ற திரைப்படத்தில் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த பயணிகள் நடுவழியில்  மதக்கலவரத்தின் காரணமாக நிறுத்தப்படுகிறார்கள்.  இந்துமதவெறியர்கள் சிலர் பேருந்தை நிறுத்தி பயணிகளிடம் இஸ்லாமியர்களைத் தேடுகிறார்கள். அப்போது அந்த மதவெறியர்கள் சந்தேகப்படுபவர்களின் ஆடைகழைந்து பிறப்புறுப்பைப் பார்த்து அடையாளம் கொள்கிறார்கள். அப்போது பின்னிருக்கையில் அம்ர்ந்திருக்கின்ற ஒரு பயணி மற்றொரு சக பயணியை இஸ்லாமியன் என்று காட்டிகொடுத்து விடுகிறான். கலவரக்காரர்கள் அந்தப் பயணியை கொண்டுசென்று கொன்றுவிடுகிறார்கள். ஆனால் காட்டிக்கொடுத்தவன் அழுகிறான், ஏனென்றால் அவன் ஒரு யூதன் அந்த மதத்தினரும் circumcision செய்துகொள்வார்கள். கலவரக்காரர்களிடமிருந்து தன்னுயிரை காப்பாற்றிக்கொள்ள அவன் ஒருவனை காட்டிக்கொடுத்தான்.
 
 
 
Europa Europa. இந்த திரைப்படத்தில் நாஜிகளின் பிடியிலிருந்த ஜெர்மனியில் ஒரு யூதக்குடும்பத்தில் தங்கள் மகன்களை  வீட்டைவிட்டு தப்பித்து செல்லும்படி படி பெற்றோர்கள் சொல்கிறார்கள். கனத்த இதயத்தோடு பெற்றோர்களை விட்டு Solek மற்றும் அவனுடைய அண்ணன் Issac தப்பித்து செல்கிறார்கள். செல்லும்வழியில் அண்ணனும் தம்பியும் பிரிந்துவிடுகிறார்கள். Solek சென்ற இடம் சோவியத் ஆளுகையிலிருந்த போலந்து. அங்கே கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பள்ளியில் கல்விபெறுகிறான். அந்தபகுதியை நாஜிகள் ஆக்ரமித்ததால்  ஜெர்மன் படைகளிடம் சிக்குகிறான். அவன் கண்முன்னே அவனுடன் இருந்த தங்களுடைய கம்சமோல் உறுப்பினர் அடையாள அட்டையை காண்பித்ததால் சுட்டுக்கொல்லப்படுகின்றனர். Solek  தன்னிடமிருந்த கம்சமோல் உறுப்பினர் அடையாள அட்டையை மறைத்துவிட்டு தன்னை ஒரு ஜெர்மானியன் என்றும் தன்னுடைய பெற்றோர்களை சோவியத்படையினர் சுட்டுக்கொன்றனர் என்றும் சொல்கிறான். அவனுக்கு ரஷ்ய மொழியும், ஜெர்மன் மொழியும் தெரிந்திருந்ததால் ஜெர்மானிய ராணுவத்தில்  வேலைசெய்யச் சொல்கிறார்கள். யூதர்களை தேடிப்பித்து கொன்றுகொண்டிருந்த சமயம் ஒரு யூதன் ஜெர்மானியன் என்று சொல்லவும் நாஜி ராணுவம் பிடிபட்டவனின் ஆடைகழைந்து யூதன் என்று உறுதிப்படுத்தியவுடன் சுட்டுக்கொல்கிறார்கள். இந்த சம்பவம் Solek ஐ எப்போது மாட்டுவோம் என்று தெரியாமல் பயப்படுகிறான்.
 
ஒரு சண்டையின்போது இவன் சார்ந்திருந்த யூனிட்டில் பலர் இறந்துவிடுகிறார்கள், இவன் தன்னந்தனியாக சோவியத் வீரர்களை சரணடையச்செய்கிறான். இந்த செயலால் அவன் மிகவும் மதிக்கப்படுகிறான். 16 வயது நிரம்பியுள்ள இளைஞனான இவனுக்கு நாஜிகளின் இளைஞர் பள்ளியில் கல்வியளிக்கப்படுகிறது. அங்கே யூதர்கள் மீதான வெறியை ஏற்படுத்தும் கல்வியை கொடுக்கிறார்கள். யூதனை எப்படி அடையாளம் காணுவது என்று வகுப்பறையில் சொல்லித்தருகிறார்கள். அவனுடைய அங்கங்கள் ஒவ்வொன்றும் எப்படியிருக்கும் அள்வீடுகளையும் சொல்கிறார்கள். வகுப்பிலிருந்த solek (அவன் இப்போது joseph peters என்று மாற்றியிருக்கிறான்) ஐ அழைத்து மண்டையோட்டின் அளவுகளை விரிவுரையாளர் அளக்கிறார். அப்போது இவனுடைய மனம் திக்திக் என்றிருக்கிறது. அளந்துவிட்டு உன்னுடைய உடலமைப்பு பால்டிக் கலப்பினம், ஆனாலும் நீ `மேன்மையான் ஆரிய` இனம் தான் என்கிறார். யூதர்களை இழிவுபடுத்தி மாணவர்களும் அங்குவரும் போதனையாளர்களும் சொல்லும்போது இவனுக்கு சித்ரவதையாக இருக்கிறது. ஒரு சமயத்தில் இளம்வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெறுகிறது, அப்போது ஆடைகழையவேண்டும் என்று கேள்விப்படுகிறான், அவ்வள்வுதான் மாட்டிக்கொள்வோம் என்று எனக்கு பல்வலி என்று வேறுடாக்டரிடம் சிகிச்சைக்குச் சென்று அத்தருணத்தில் தப்பித்துவிடுகிறான்.
 
தன்னுடைய பெற்றோர்கள் ஏதோ ஒரு யூதமுகாம்களில் தான் இருப்பார்கள் அவர்களை காணவேண்டுமென்று டிராமில் செல்லும்பொது ஜன்னல்வழியாக ghetto வை பார்க்கிறான், ஆங்காங்கே தள்ளுவண்டியில் பிணங்களும், யூதர்கள் மீது சித்ரவதைகளும் நடைபெறுகிறது. இவன் அடிக்கடி அந்த டிராமில் செல்வதைப் பார்த்த போலிஸ் இவனிடம் அடையாள அட்டைகுறித்த விபரங்கள் கேட்கிறது. அவனுடைய மனச்சிக்கல் மிகுந்த சூழ்நிலையில் சோவியத்படை முன்னேறிவருகிறது. அப்போது ஏற்பட்ட சண்டையில் நாஜிகளின் அணியிலிருந்து தப்பித்து சோவியத் படையிடம் சரணடைகிறான், தான் யூதன் என்று சொல்லவும் அங்கே நம்பமறுக்கிறார்கள். நாஜிகளிடமிருந்து  விடுவிக்கப்பட்ட பிணையக்கைதிகளாக இருந்த செம்படைவீரன் ஒருவனிடம் இவனை சுட உத்தரவு வருகிறது. தீடீரென்று முகாமிலிருந்து அவனுடைய அண்ணன் Issac  இவனை கண்டுகொண்டு காப்பாற்றுகிறான். போர் நிறுத்தடத்திற்குப்பின்பு பாலஸ்தீனம் வந்துசேர்கிறான். தன்னுடைய குழந்தைகளுக்கு circumcision செய்யப்போவதில்லை என்று முடிவுசெய்கிறான்.
 
உயிர்பிழைப்பதற்காக ஜெர்மானியன் என்று சொன்ன Solek நாஜிகளின் படையில் யூதர்களை கருவறுக்க சத்தியம் செய்துகொள்ள வேண்டியிருந்தது, ஒவ்வொரு நாளும் அவன் படும் அவஸ்தையை படம் விளக்குகிறது.

திங்கள், 14 அக்டோபர், 2013

Train of Life...

இனவெறிக்கு உலகிலேயெ அதிகம் பாதிக்கப்பட்ட இனம் யூதர்கள். அதுவும் இரண்டாம் உலகப்போர் காலத்தில் ஹிட்லரின் இனவெறி அரசியல் அவர்களை சின்னாபின்னப் படுத்தியது. அதைப்பற்றி என்னற்ற இலக்கியங்கள் நாவல்களாகவும், திரைப்படங்களாகவும் வந்திருக்கின்றன. Gloomy Sunday  படத்தை பார்த்தபின்பு Train of Life  என்ற படத்தை பார்த்தேன். யூதர்கள் ஒட்டுமொத்த கிராமத்தை காலிசெய்துவிட்டு ஒரு ரயிலை உருவாக்கி தப்பிச்செல்வது தான் கதை.

அந்த கிராமத்தில் ஸ்லோமோ என்பவன் வெளியூர் சென்றுதிரும்புகையில் பக்கத்து கிராமத்தில் நாஜிப்படைகள் யூதகுடியிருப்புகளின் மீது நடத்திய அக்கிரமங்களை பார்த்தான். தனது கிராமத்துக்கு வந்தவுடன் மதத்தலைவரிடமும் ஊர்பெரியவர்களிடமும் விவரத்தை சொல்கிறான், ஆபத்து நெருங்கிக்கொண்டிருக்கிறது , நாம் தப்பித்தாகவேண்டும் என்று யோசனையில் மூழ்கியிருக்கிறார்கள். அப்போது ஸ்லோமோ ஒரு யோசனை சொல்கிறான், ஒரு ரயிலைப் பிடித்து கிராமம் முழுவதுமுள்ள மக்கள் காலிசெய்து பாலஸ்தீனம் அல்லது ரஷ்யா சென்றுவிடவேண்டும் என்கிறான்.

ரயிலை எப்படி வாங்குவது, அப்படி ரயிலில் போனால் நாஜிகளின் கட்டுப்பாட்டிலுள்ள ரயில்நிலையங்களுக்குத் தெரியாமல் எப்படி தப்பிப்பது என்றெல்லாம் யோசனை செய்கிறார்கள். முடிவில் அவர்களே சிலர் நாஜி ராணுவத்தினராக நடித்து யூதர்களை நாடுகடத்துவது போல ரயிலை வடிவமைக்கிறார்கள். யூதர்கள் ஐரோப்பாவெங்கும் இருந்தாலும் அவர்கள் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு கூட்டம் கூட்டமாக குடியிருப்பில் வாழ்ந்து வருகிறார்கள். எல்லோரிடமும் பணம் வசூலித்து பழைய ரயில்பெட்டிகளை காயலான் கடையிலிருந்து வாங்கி புதுபிக்கிறார்கள், ரயில் இஞ்சினும் அப்படித்தான். முதல் இரண்டு ரயில்பெட்டிகள் பச்சைநிறத்தில் நல்ல உள்கட்டமைப்புடன் நாஜி படைகளின் கமாடெண்ட்க்காக வும், படைவீரர்களுக்காகவும் அமைக்கிறார்கள். மற்ற பெட்டிகள் எல்லாம் யூதர்களுக்கு ஏதோ கூட்ஸ் வண்டியில் ஆளை ஏற்றுவது போல தயாரிக்கிறார்கள். நல்ல் ஜெர்மன் மொழி பேசத்தெரிந்த ஜெர்மானிய ஜாடை உள்ளவருக்கு கமாண்டெட் உடைகள், நாஜிப்படைவீரர்களைப் போல சில யூதர்களுக்கு மொழிப்பயிற்சி,ராணுவப் பயிற்சி அளிக்கிறார்கள்.

ரயில்பெட்டிகள், ரயில் இஞ்சின் கூட வாங்கியாகிவிட்டது, ரயிலை யார் ஓட்டுவது. யாரோ ஒரு யூதன் ரயிலை ஓட்டும் ஆசையில் புத்தகத்தை படித்துக்கொண்டிருக்கிறான். புத்தகம்(Manual) பார்த்து ரயிலை இயக்க தீர்மானித்துவிட்டான். ஒட்டுமொத்தகிராம யூதர்களே குறிப்பிட்ட நாளன்று இரவில் இரயிலில் தப்பிச்செல்ல பயணிக்கிறார்கள். எப்படி வழியில் ஏற்படும் சிக்கல்களை சமாளிக்கிறார்கள் என்பதுதான் கதை.

ஞாயிறு, 13 அக்டோபர், 2013

Gloomy Sunday

சினிமா வாரம்.....

இந்த வாரத்துல மட்டும் நிறைய படம் பார்த்தாகிவிட்டது.

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்

Gloomy sunday (hungarian)

Train of life (french)
...
Europa Europa (French)

Kikujiro (Japanese)

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படம் ரெம்ப பிரமாதம், ஒரு கதாநாயகி, காதல், பாடல்கள், காமெடி, விரசம் இல்லாமல் ஒரு கதையை சொல்லமுடியும்
என்பதற்கு இந்தப் படம் உதாரணம். பாராட்டுகளையும், லாஜிக் இல்லாத கதை என நிறைய விமர்சனங்கள் வைக்கிறார்கள். ஆனால் என்னவோ
படத்தை ரசிக்கமுடிந்தது. குறைவான உரையாடல்கள் அதை இசைமூலம் நிரப்பியது இசைஞானிக்கு செய்யும் மரியாதையாகப்பட்டது.

இடுகாட்டில் ஓநாய் சொன்ன கதைதான் படத்தின் சிறப்பு, பார்ப்பவர்களை உருகவைக்கும் விதமாக கதை சொன்னவிதம். மிஷ்கின் படம் என்றாலே
ஏதாவது காப்பி இருக்கும் என்கிறார்கள். காப்பி அடித்து நம் மொழியில் தருவது நல்ல் விசயம்தான். ஆனால் மூலக்கதையை சொல்லவேண்டும்.
எத்தனையோ வெற்றிப்படங்களின் பின்னால் தழுவல்கள் இருக்கின்றன.

அடுத்து Kikujiro என்ற ஜப்பானிய படம், இதைவைத்துதான் மிஷ்கின் ‘நந்தலாலா’ உருவாக்கினார் என்றார்கள். தழுவல் இருக்கிறது, 100 சதவீதக் காப்பி கிடையாது. பாட்டியிடம் வளரும் சிறுவன் கோடை விடுமுறையில் அதுவரை அம்மாவை பார்த்ததேயில்லை அதனால் அம்மாவைத்தேடி தனியாக பயணக்கிறான். அவனுக்கு துணையாக  ஒரு ஊதாரி இளைஞன் வழித்துணைக்கு வருகிறான். அம்மா கிடைத்தார்களா? ஒரு பயண அனுபவம், அதை காமெடியாகவும் செய்திருக்கிறார்கள். மிஷ்கின் படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அப்படியே தலைகுனிந்து ரெம்ப நேரம் நிற்பது, இந்தப்படத்தின் தழுவல்தானோ!

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தின் பிண்ணனி இசையை அவ்வளவு சீக்கிரம் மறக்கமுடியவில்லை. அதைவிட மேலான ஒரு இசையைக்  கேட்டால் மட்டுமெ அதை மறக்கமுடியும் என்ற தருணத்தில் நிர்மல் அவர்கள் Gloomy Sunday வின் இசையை பகிர்ந்தார். அந்தப் படத்தையும்  பார்த்தேன். இரண்டாம் உலகப்போரில் ஒடுக்கப்பட்டவர்களின் வலியை சுமந்து செல்லும் இசை பலரை ‘தற்கொலை செய்யத்தூண்டுகிறது’. ஒரு யூதன் Budapest நகரத்தில் ரெஸ்ட்டாரெண்ட் நடத்துகிறான், மேற்கத்திய நாடுகளில் ரெஸ்ட்டாரெண்ட் களில் இசை ஒரு அங்கம். நாம் ஹோட்டலுக்கு அரக்கப்பரக்க சாப்பிட்டுவிட்டு செல்கிறோம். ரெஸ்ட்டரெண்டில் விருந்தோம்பல் சிறப்பான அம்சமாகயிருக்கிறது. அங்கெ பணிபுரியும்   பெண் அந்த யூதனை காதலிக்கிறாள், பியானோ வாசிப்பதற்கு வேலைக்கு வரும் ஒருவன் வாசித்த இசையால் அந்த ரெஸ்ட்டாரெண்ட் புகழ்   பரவுகிறது. ரெஸ்ட்டாரெண்டை நடத்துபவன் பியானோ வாசிப்பவனின் வளர்ச்சியில் உறுதுணையாக இருக்கிறான். அந்த பெண் பியானோ வாசிப்பவனையும் காதலிக்கிறாள்.
இருவரை ஒருபெண் காதலிக்கிறாள், அந்த் இருவரும் ஏற்றுக்கொள்கிறார்கள்.
 
ஒருமுறை ஜெர்மானிய ராணுவ அதிகாரி ஒருவன் ரெஸ்ட்டாரெண்ட்க்கு வருகிறான்.அவன் பணிபுரியும் பெண்ணை காதலிப்பதாக அவளிடம் கூறுகிறான், அவள் மறுக்கவே ‘டனுபே’ ஆற்றில் விழுந்து தற்கொலை முயற்சி செய்கிறான். ரெஸ்ட்டாரெண்டை நடத்துபவன் அவனை காப்பாற்றி அவனை ;பெர்லின்’ க்கு வழியனுப்புகிறான். அவன் இசைக்கும் Gloomy sunday இசையைக்கேட்டு பலர் தற்கொலை செய்த நிகழ்வு அவனை கவலைப்படசெய்கிறது , பியானோ வாசிக்க வெறுக்கிறான்.

இரண்டாம் உலகப்போரில் நாஜிகள் யூதர்களை சித்ரவதைமுகாம்களுக்கு அனுப்புகிறார்கள். ஹங்கேரி ஜெர்மன் நாஜிகளின் ஆட்சிக்கு வர்கிறது.
அந்த ராணுவ அதிகாரி மீண்டும் ரெஸ்ட்டாரெண்ட்க்கு வருகிறான். இந்தமுறை அவனிடம் மாற்றம். ரெஸ்ட்டாரெண்டை நடத்துபவன் அவனை பெயர் சொல்லி  அழைக்கும்போது பொதுவெளியில் Colonel ஏன்று கூப்பிடு என்கிறான்., சென்றமுறை அவனுக்கு ரெஸ்ட்டாரெண்டில் மறுக்கப்பட்ட பியானோவைத் தொடுவது, கிச்சனுக்குள் செல்வது இந்தமுறை இல்லை. யூதர்களை இரண்டாம் தரக்குடிமகன்களாக நடத்தப்படுகிறார்கள். பணமுள்ள யூதர்கள் ஆயிரக்கணக்கான டாலர்கள்  கொடு த்து exitpermit வாங்கிகொண்டு தப்பிச்செல்கிறார்கள். ஒருமுறை இரண்டு நாஜி அதிகாரிகள் வந்து ரெஸ்ட்டாரெண்டில் அவர்களுக்குப் பிடித்த இசையை  வாசிக்கச் சொல்லும்போது பியானோ வாசிப்பவன் மறுக்கிறான், ஒரு அடிமை எஜமானன் சொல்வதை கேட்க மறுப்பதா, என்பதால் விளாவுகளை உணர்ந்து
ரெஸ்ட்டாரெண்ட் பணிப்பெண் Gloomy sunday வின் கவிதையை வாசிக்கிறாள். வாசித்துமுடிந்தவுடன் பியானோ வாசிப்பவன் ராணுவவீரனின்  துப்பாக்கி கொண்டு தற்கொலை செய்துகொள்கிறான்.
 
அடுத்த யுதர்களின் வேட்டையில் ரெஸ்ட்டாரெண்ட் நிர்வாகி சித்ரவதை முகாமுக்கு அனுப்பப்  படுகிறான். காதலியும் ரெஸ்ட்டாரெண்ட் பணிப்பெண் அவனைக் காப்பாற்ற தன் உடலை ஜெர்மானிய ராணுவ அதிகாரிக்கு தந்தபின்னும் யூதன் காப்பற்றப் படவில்லை  ஜெர்மானிய ராணுவ அதிகாரியின் தற்கொலையிலிருந்து காப்பாற்றிய அதே யூதனை சித்ரவதை முகாமுக்கு அனுப்புகிறான்.

Gloomy sunday பாடலின் இசை “மயிர்நீப்பின் உயிர்வாழா கவரிமான்” என்ற அர்த்தம் கொடுக்கிறது. இசையில் சூன்யஞானமுடைய எனது காதிலும் Gloomy sunday ஒலித்துக்கொண்டேயிருக்கிறது.

Train of Life மற்றும் Europa Europa இரண்டும் heil Hilter ஐ நினைவு படுத்தும் சினிமாக்கள். ஜெய் நரேந்திரமோடி என்ற சொல்ல்மறுத்தவர்களை பூனாவில்
ABVP மாணவர்கள் அடித்து உதைத்த சம்பவம் நினைவில் வந்துபோனது.

சனி, 5 அக்டோபர், 2013

வகுப்புவாதம் : ஓர் அறிமுக நூல்இன்று இந்திய மக்களும், இந்தியாவும் சந்தித்துவரும் மிகத்திவிரமான பிரச்சனை வகுப்புவாதமே ஆகும். அது இந்திய சமுதாயத்தைப் பிளவுபடுத்துவதுடன், கடுமையாகப் போராடி அடைந்த இந்திய மக்களின் ஒற்றுமைக்கும் ஆபத்தாகவும் உள்ளது. வறுமை, வேலையின்மை, பட்டினி இவையெல்லாவற்றையும் எதிர்க்க மக்கள் ஒற்றுமை என்பது மிக அவசியம் ஆனால், வகுப்புவாதிகள் ஏகாதிபத்தியவாதிகள் செய்தது போல பிரித்தாளும் சூழ்ச்சியை செய்து ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்கிறார்கள் என்பதையும் விட மக்கள் மதத்தின்பால் ஒருவருக்கொருவர் வெட்டிக்கொல்லப்படுவதற்கு பிண்ணனியில் இருக்கிறார்கள். வன்முறை, கலவரம் இவற்றைவிட இது உருவாக காரணமாக இருக்கின்ற கருத்துக்களை விதைப்பதுதான் மிகவும் ஆபத்தானது.
முதலில் வகுப்புவாதம் என்றால் என்ன? இந்திய சமூகம் பல்வேறு மதச்சமூகங்களாகப் பிரிந்துள்ளது மட்டுமல்ல, ஒன்றையொன்று எதிர்ப்பதாகவும் இருக்கிறது என்கிற யூகத்தின் அடிப்படையில் அமைந்ததுதான் வகுப்புவாதம். இந்தியாவில் பொருளாதரம், அரசியல், சமூகம், பண்பாடு போன்ற மதம்சாராத காரணங்களுக்காக மத அடையாளங்களைப் பயன்படுத்தி மட்டுமே மக்களை அணிதிரட்டிடமுடியும் என்ற நம்பிக்கையிலிருந்து வகுப்புவாதம் தொடங்குகி’றது. மதம் சாராத காரணங்களுக்காகவும் தனித்த சமுதாயங்களையோ அல்லது ஒத்த இனக்குழுக்களையோ உருவாக்குகின்றனர்.  இந்தியாவை வகுப்புமயமாக்குதல் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக நிகழ்ந்து வந்துள்ளது. நாட்டு விடுதலைக்கு 50 ஆண்டுகள் முன்பாகவே அன்றைய காலனி ஆட்சியாளர்கள் இதனை ஊக்கப்படுத்தத் தொடங்கிவிட்டனர். குறிப்பாக 1858க்கு பிறகு காலனி அரசு தீவிரமாக இந்தியமக்களை சாதி, மதம், மொழி, பிரதேசரீதியாக பிளவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டது. 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றிய வகுப்புவாதசக்திகள் இந்திய மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்திற்கு அச்சுறுத்தலாக இருந்தனர் அதனால் காலனி அரசு வகுப்புவாதிகளுக்கு பெருத்த ஆதரவு அளித்தது.
வகுப்பவாதக் கருத்தியல்: வகுப்புவாதம் என்பதை ஒருமுறை புரிந்துகொண்டால், ஒரு வாகுப்புவாதக்கட்சி என்றால் என்ன என்பதை வரையறை செய்வது சுலபமாகிவிடும். வகுப்புவாதக் கருத்தியலைச் சுற்றி கட்டமைக்கப்படுவைதான் வகுப்புவாதக் கட்சிகள், குழுக்கள் ஆகும். இவற்றிலிருந்து வகுப்புவாதக் கருத்தியலை எடுத்துவிட்டால் அங்கு ஒன்றுமே இருக்காது. 1937ல் ஜின்னாவிற்கு, முஸ்லீம் லீக்கிற்கும் இது தான் நேர்ந்தது. அவர்களது வகுப்புவாத கோரிக்கைகள் அனைத்தையும் காலனி ஆட்சி வகுப்புவாத ஒப்பந்தம் என்ற பெயரில் ஏற்றுக்கொண்டது, இதனால் முஸ்லீம் லீக் கட்சியைக் கலைத்துவிடுவது அல்லது வகுப்புவாதக் கருத்தியலை அதிகப்படுத்தி ஒரு மதத்தீவிரவாதக் கட்சியாக மாறுவது என்ற இருவழிகளைத் தவிர முஸ்லீம் லீக்கிற்கு வேறுவழி இருக்கவில்லை. இந்துமகாசபையின் வகுப்பவாதத்தை எதிர்த்து தேசிய இயக்கம் மதச்சார்பின்மை கொள்கையை பிரச்சாரம் செய்ததால் இந்துமகா சபை அழிவைச்சந்திக்க நேரிட்டது. தமது அமைப்பை கலைப்பதற்குப் பதிலாக 1920ல் தீவிரவகுப்புவாதத்திற்கு மாறியது.
தங்கள் மதம், பண்பாடு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது அல்லது நாம் பெரும்பான்மையினர் நமது மதம் ஆட்சி செய்யவேண்டும், அண்டை நாடுகளான பாகிஸ்தானிலும், வங்கதேசத்திலும் இஸ்லாம் ஆட்சியில் சிறுபான்மையினர் இரண்டாம் தரக்குடிமகனாக இருக்கிறார்கள். நம்முடைய அரசியல்வாதிகள் `போலி` மதச்சார்பின்மைவாதிகளாக உள்ளார்கள். இந்துக்களின் நலனை உணர்ந்தவர்கள்தான் ஆட்சி அதிகாரத்தில் அமரவேண்டும். இதே போல் 1937ல் ஜின்னா , இந்தியாவில் இஸ்லாம் அழிந்துகொண்டிருக்கிறது, இந்துக்களிடமிருந்து வேறுபட்ட தேசியம் இஸ்லாம், எனவே தனி இஸ்லாம் பாகிஸ்தான் நாடு உருவாகப்படவேண்டும் என்றார் இத்தகைய கருத்தியல் விதைக்கப்படுகிறது மட்டுமல்லாமல் ஒன்றுக்கொன்று முரணானது என்பதையும் பரப்புகிறார்கள்.
இந்த வகுப்புவாத கருத்தியல்கள் இன்று சமூக ஊடகங்கள் வழியே விரைவாக மக்களை சென்றடைகிறது, ஆயுதபலத்தாலோ, நிர்வாகத் தடைகளாலோ கட்டுப்படுத்தமுடியாது என்பதை அனுபவ ரீதியாக பார்க்கிறோம். 1960களுக்குப் பிறகு வகுப்புவாதக் கருத்தியல்கள் அரசு இயந்திரத்திற்குள் ஊடுருவியாயிற்று. பல அரசு அதிகாரிகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வகுப்புவாத சக்திகளை ஊக்கப்படுத்திவருகிறார்கள், வகுப்புவாத உணர்வுகளுக்கும் அடிபணிந்துவிடுகிறார்கள். இதனால் காவல்துறையினர் கலவரங்களில் வேடிக்கை பார்க்கும் சம்பவங்கள் அதிகரித்திற்கின்றன.
`போலி மதச்சார்பின்மை மற்றும் சிறுபான்மைவாதம்: மதச்சார்பின்மைக்கு எதிராக இந்து வகுப்புவாதிகள் தொடுக்கும் தாக்குதல் மதச்சார்பின்மை என்பதே போலி-மதச்சார்பின்மை, சிறுபான்மைவாதம் என்று வர்ணிப்பது தான். வகுப்புவாதப் பிரச்சாரத்தின் முக்கியக்கருவி வாய்மொழிதான். மதச்சார்பற்ற கட்சிகளும் நபர்களும் சிறுபான்மைக்கு மதத்திற்கு ஆதரவாக உள்ளனர்; இந்து மக்களை இரண்டாம் தரகுடிமக்களாக்கப் பார்க்கிறார்கள் என்பதாக இப்பிரச்சாரம் இருக்கிறது. இதன் நோக்கம் இந்துக்கள் மத்தியில் அச்சத்தை விதைப்பது- நாட்டில் 80 சதவீததிற்கும் அதிகமாக உள்ள இந்துக்கள் மத்தியில் சிறுபான்மை வகுப்பாரால் ஆட்சி செய்யப்படுவோம் என்ற அச்சத்தை ஏற்படுத்துவது.
நேரு காலத்தின்போதே மதச்சார்பின்மைவாதிகள் `முஸ்லீம்களை தாஜா செய்பவர்கள்` என்று குற்றம் சாட்டினார்கள். காந்திஜியும் இவ்வாறுதான் விமர்சனம் செய்யப்பட்டார். முஸ்லீம் வகுப்புவாதிகள் ஒருபக்கம் `முஸ்லீம் எதிரி` என்றும்; இந்து வகுப்புவாதிகள் `நாட்டின் துரோகி` என்று குற்றம் சாட்டினார்கள்.
`சிறுபான்மை மக்களை தாஜா செய்வதாக` இந்து வகுப்புவாதிகள் குற்றம் சுமத்தியபோதிலும், இந்தியா முழுவதும் ஒரு சிறிய பகுதிகூட முஸ்லீம் மக்களுக்கு ஆதரவாக இல்லை; அரசு பணியிடங்கள், கல்வி நிலையங்கள், தனியார், பொதுத்துறை, காவல்துறை, ராணுவம், ஊடகம் போன்ற துறைகளிலும் முஸ்லீம் மக்கள் முஸ்லீம் என்பதால் எந்த பலனையும் அடைந்துவிடவில்லை. மற்ற பிற்படுத்தப்பட்ட பிரிவினரைவிட மிகவும் குறைவான வாய்ப்புகளையே அவர்கள் பெற்றுள்ளனர் என்பதை சச்சார் அறிக்கையும் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, மதச்சார்பற்ற இந்தியாவில் இந்துக்கள் பழிவாங்கப்படுகிறார்கள் அல்லது இரண்டாம் தரக்குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள் என்று சொல்வது வேடிக்கையானது, பொய் எவ்வளவு பெரியதொ அவ்வளவுக்கு அது பலந்தரும் என்ற கோயபல்ஸ் பாணி பிரச்சாரத்துக்கு உதாரணமாக இருக்கிறது.
காந்திஜியின் படுகொலைக்குப் பின்னர் வகுப்புவாதத்திற்கெதிரான தீவிர பிரச்சாரத்தை நேரு மேற்கொண்டார், அதற்குப் பின்னர் தேசிய அளவில் மிகப்பெரிய பிரச்சாரத்தை மதச்சார்பற்ற சக்திகள் செய்யவில்லை. மதச் சார்பற்றவர்கள் என்று கூறிகொண்டோர் `ஆட்சிஅதிகாரத்தின் மீதான மோகத்தின்` காரணமாக ஒருவித ஊசலாட்டத்தில் இருந்தனர். மேலும் சிறுபான்மை மதவெறியை கண்டிப்பதில் மென்மையான அணுகுமுறையை கடைபிடித்தது பெரும்பான்மை வகுப்புவாதிகளின் பிரச்சாரத்திற்கு சாதகமான அம்சமாக இருந்தது. 19ம் 20ம் நூற்றாண்டில் வாழ்ந்த மாபெரும் சமூக  சீர்திருத்தவாதிகளை தமது அரசியல் – கருத்தியல் மூதாதையர்களாகவும் காட்ட முயற்சிக்கிறார்கள். காந்தியை பழிப்பதற்கு நேதாஜியை முன்னிறுத்துகிறார்கள். ஆனால் நேதாஜி வகுப்புவாதிகளை சகித்துக்கொள்ளவில்லை. 1938ல் தேசிய இயக்கத்தின் தலைமைப் பொறுப்புவகித்த நேதாஜி வகுப்புவாத அமைப்புகளான இந்துமகாசபை, முஸ்லீம் லீக் உறுப்பினர்களை தேசிய இயக்கத்திலிருந்து நீக்கினார்.
நடுத்தர மக்களின் ஒரு பிரிவினரை பெரிய அளவிற்கு பாஜக வென்றெடுக்க முடிந்ததற்கு முக்கிய காரணங்களில் ஒன்று அதன் தேசியம் குறித்த அறைகூவல் என்பது குறிப்பிடத்தக்கது. வகுப்புவாதத்தை `தேசியவாதம்` என்று குறிப்பிடுவது அபத்தமானது. 1950களில் மேற்கத்திய எழுத்தாளர்களும் இதழாளர்களும் இந்து தேசியவாதம், முஸ்லீம் தேசியவாதம் என்ற சொற்பிரயோகங்களை பயன்படுத்தினர். 1947க்கு முன்னர் காந்திஜி மற்றும் தேசிய இயக்கத்தலைவர்கள் இந்து-முஸ்லீம் வகுப்புவாதிகளை வகுப்புவாதிகள் என்றே குறிப்பிட்டனர்.
வகுப்புவாதமும் மதமும்: வகுப்புவாதத்திற்கு ஆணிவேராக இருப்பது மதமோ அல்லது மதவெறுபாடுகளோ அல்ல. தாம் சார்ந்த மதத்தின் மேம்பாடு, சீர்திருத்தம் , வளர்ச்சி ஆகியவைகளைப் பற்றி வகுப்புவாதிகள் கவலைப்படுவதில்லை. அவர்கள் மதத்தால் ஆகர்ஷிக்கப்படவில்லை, வகுப்புவாத அரசியலின் இறுதி இலக்கு மதமும் அல்ல. மதம் என்பது அவர்கள் அரசியல் அதிகாரத்திற்கான பயணத்திற்கான வாகனம் மட்டுமே!
இந்த வகுப்புவாதத் தலைவர்களின் இந்துக்களோ-முஸ்லீம்களோ  மதப்பழக்கத்தை உற்று நோக்கினால் அவர்களில் பெரும்பாலானவர்கள் ஆசாரமற்றவர்கள். 1947க்கு முந்தைய முஸ்லீம் வகுப்புவாதத் தலைவர்கள் பலர் ஜின்னாவும் இப்படித்தான். இந்து வகுப்புவாத கருத்தியலின் தந்தை வி.டி.சாவார்க்கர் ஒரு பகுத்தறிவுவாதி.இன்னும் பல இந்து வகுப்புவாதத் தலைவர்கள் பலர் ஆரிய சமாஜக்கொள்கையுடையவர்கள். ஆரிய சமாஜக்கொள்கையின் அடிப்படை ஒரே கடவுள். ராம்ரோ, கிருஷ்ணரோ அல்லது பிற கடவுள்களோ தெவதைகளோ புனிதம் அல்ல என்பவர்கள்.
1947க்கு முன்னர் முஸ்லீம் வகுப்புவாதிகள் முல்லாக்கள், மெளல்விகளையும் மசூதிகளையும் பயன்படுத்தி மக்களிடம் வகுப்புவாதத்தை பிரச்சாரம் செய்ததுபோல இந்து வகுப்புவாதிகள் சாதுக்களையும், பூஜாரிகளையும் பயன்படுத்தினர்.
இந்திய ஒற்றுமையும், நாட்டு முன்னேற்றமும் மதச்சார்பின்மை கொள்கையை சரியாக கடைபிடித்தால் மட்டுமே சாத்தியமாகும். அதற்கு கோயில்கள், சாதுக்களின் ஆசிரமங்கள், மசூதிகள், குருத்வாராக்கள், தேவாலயங்கள் மற்றும் அனைத்து மத வழிபாட்டுத்தலங்கள், அரசியல் நோக்கங்களுக்கும், அரசியல் பிரச்சாரத்திற்கும் பயன்படுத்துவதற்கு முழுமையாக தடைவிதிக்கப்படவேண்டும். மதவிவகாரம் தொடர்பான அனைத்து இடங்களிலும் அரசியல் பேசுவது குற்றம் என்று அறிவிக்கப்படவேண்டும். தேர்தலில் மதத்தை பயன்படுத்துவதற்கு எதிரான சட்டபூர்வ தடையை கறாராகச் செயலபடுத்த வேண்டும். மதச்சார்பற்ற கட்சிகளும், குழுக்களும் சங்கராச்சிரியார்கள், இமாம்கள், மெள்ல்விகள், பாதிரியார்கள், மதகுருக்கள் போன்றோருடன் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ளகூடாது. மதமும் அரசியலும் கலக்காமல் இருக்கவேண்டியது மிகவும் அவசியம்.
நூல் ஆசிரியர்: பேரா.பிபன் சந்திரா
வெளியீடு: நேஷனல் புக் டிரஸ்ட்