இன்று இந்திய மக்களும், இந்தியாவும் சந்தித்துவரும் மிகத்திவிரமான
பிரச்சனை வகுப்புவாதமே ஆகும். அது இந்திய சமுதாயத்தைப் பிளவுபடுத்துவதுடன், கடுமையாகப்
போராடி அடைந்த இந்திய மக்களின் ஒற்றுமைக்கும் ஆபத்தாகவும் உள்ளது. வறுமை, வேலையின்மை,
பட்டினி இவையெல்லாவற்றையும் எதிர்க்க மக்கள் ஒற்றுமை என்பது மிக அவசியம் ஆனால், வகுப்புவாதிகள்
ஏகாதிபத்தியவாதிகள் செய்தது போல பிரித்தாளும் சூழ்ச்சியை செய்து ஆளும் வர்க்கத்திற்கு
சேவை செய்கிறார்கள் என்பதையும் விட மக்கள் மதத்தின்பால் ஒருவருக்கொருவர் வெட்டிக்கொல்லப்படுவதற்கு
பிண்ணனியில் இருக்கிறார்கள். வன்முறை, கலவரம் இவற்றைவிட இது உருவாக காரணமாக இருக்கின்ற
கருத்துக்களை விதைப்பதுதான் மிகவும் ஆபத்தானது.
முதலில் வகுப்புவாதம்
என்றால் என்ன? இந்திய சமூகம் பல்வேறு மதச்சமூகங்களாகப் பிரிந்துள்ளது மட்டுமல்ல,
ஒன்றையொன்று எதிர்ப்பதாகவும் இருக்கிறது என்கிற யூகத்தின் அடிப்படையில் அமைந்ததுதான்
வகுப்புவாதம். இந்தியாவில் பொருளாதரம், அரசியல், சமூகம், பண்பாடு போன்ற மதம்சாராத காரணங்களுக்காக
மத அடையாளங்களைப் பயன்படுத்தி மட்டுமே மக்களை அணிதிரட்டிடமுடியும் என்ற நம்பிக்கையிலிருந்து
வகுப்புவாதம் தொடங்குகி’றது. மதம் சாராத காரணங்களுக்காகவும் தனித்த சமுதாயங்களையோ அல்லது
ஒத்த இனக்குழுக்களையோ உருவாக்குகின்றனர். இந்தியாவை
வகுப்புமயமாக்குதல் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக நிகழ்ந்து வந்துள்ளது. நாட்டு விடுதலைக்கு
50 ஆண்டுகள் முன்பாகவே அன்றைய காலனி ஆட்சியாளர்கள் இதனை ஊக்கப்படுத்தத் தொடங்கிவிட்டனர்.
குறிப்பாக 1858க்கு பிறகு காலனி அரசு தீவிரமாக இந்தியமக்களை சாதி, மதம், மொழி, பிரதேசரீதியாக
பிளவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டது. 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றிய வகுப்புவாதசக்திகள்
இந்திய மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்திற்கு அச்சுறுத்தலாக இருந்தனர் அதனால் காலனி அரசு
வகுப்புவாதிகளுக்கு பெருத்த ஆதரவு அளித்தது.
வகுப்பவாதக்
கருத்தியல்: வகுப்புவாதம் என்பதை ஒருமுறை புரிந்துகொண்டால்,
ஒரு வாகுப்புவாதக்கட்சி என்றால் என்ன என்பதை வரையறை செய்வது சுலபமாகிவிடும். வகுப்புவாதக்
கருத்தியலைச் சுற்றி கட்டமைக்கப்படுவைதான் வகுப்புவாதக் கட்சிகள், குழுக்கள் ஆகும்.
இவற்றிலிருந்து வகுப்புவாதக் கருத்தியலை எடுத்துவிட்டால் அங்கு ஒன்றுமே இருக்காது.
1937ல் ஜின்னாவிற்கு, முஸ்லீம் லீக்கிற்கும் இது தான் நேர்ந்தது. அவர்களது வகுப்புவாத
கோரிக்கைகள் அனைத்தையும் காலனி ஆட்சி வகுப்புவாத ஒப்பந்தம் என்ற பெயரில் ஏற்றுக்கொண்டது,
இதனால் முஸ்லீம் லீக் கட்சியைக் கலைத்துவிடுவது அல்லது வகுப்புவாதக் கருத்தியலை அதிகப்படுத்தி
ஒரு மதத்தீவிரவாதக் கட்சியாக மாறுவது என்ற இருவழிகளைத் தவிர முஸ்லீம் லீக்கிற்கு வேறுவழி
இருக்கவில்லை. இந்துமகாசபையின் வகுப்பவாதத்தை எதிர்த்து தேசிய இயக்கம் மதச்சார்பின்மை
கொள்கையை பிரச்சாரம் செய்ததால் இந்துமகா சபை அழிவைச்சந்திக்க நேரிட்டது. தமது அமைப்பை
கலைப்பதற்குப் பதிலாக 1920ல் தீவிரவகுப்புவாதத்திற்கு மாறியது.
தங்கள் மதம், பண்பாடு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது அல்லது
நாம் பெரும்பான்மையினர் நமது மதம் ஆட்சி செய்யவேண்டும், அண்டை நாடுகளான பாகிஸ்தானிலும்,
வங்கதேசத்திலும் இஸ்லாம் ஆட்சியில் சிறுபான்மையினர் இரண்டாம் தரக்குடிமகனாக இருக்கிறார்கள்.
நம்முடைய அரசியல்வாதிகள் `போலி` மதச்சார்பின்மைவாதிகளாக உள்ளார்கள். இந்துக்களின் நலனை
உணர்ந்தவர்கள்தான் ஆட்சி அதிகாரத்தில் அமரவேண்டும். இதே போல் 1937ல் ஜின்னா , இந்தியாவில்
இஸ்லாம் அழிந்துகொண்டிருக்கிறது, இந்துக்களிடமிருந்து வேறுபட்ட தேசியம் இஸ்லாம், எனவே
தனி இஸ்லாம் பாகிஸ்தான் நாடு உருவாகப்படவேண்டும் என்றார் இத்தகைய கருத்தியல் விதைக்கப்படுகிறது
மட்டுமல்லாமல் ஒன்றுக்கொன்று முரணானது என்பதையும் பரப்புகிறார்கள்.
இந்த வகுப்புவாத கருத்தியல்கள் இன்று சமூக ஊடகங்கள் வழியே விரைவாக
மக்களை சென்றடைகிறது, ஆயுதபலத்தாலோ, நிர்வாகத் தடைகளாலோ கட்டுப்படுத்தமுடியாது என்பதை
அனுபவ ரீதியாக பார்க்கிறோம். 1960களுக்குப் பிறகு வகுப்புவாதக் கருத்தியல்கள் அரசு
இயந்திரத்திற்குள் ஊடுருவியாயிற்று. பல அரசு அதிகாரிகள் நேரடியாகவும், மறைமுகமாகவும்
வகுப்புவாத சக்திகளை ஊக்கப்படுத்திவருகிறார்கள், வகுப்புவாத உணர்வுகளுக்கும் அடிபணிந்துவிடுகிறார்கள்.
இதனால் காவல்துறையினர் கலவரங்களில் வேடிக்கை பார்க்கும் சம்பவங்கள் அதிகரித்திற்கின்றன.
`போலி மதச்சார்பின்மை
மற்றும் சிறுபான்மைவாதம்: மதச்சார்பின்மைக்கு எதிராக இந்து வகுப்புவாதிகள் தொடுக்கும்
தாக்குதல் மதச்சார்பின்மை என்பதே போலி-மதச்சார்பின்மை, சிறுபான்மைவாதம் என்று வர்ணிப்பது
தான். வகுப்புவாதப் பிரச்சாரத்தின் முக்கியக்கருவி வாய்மொழிதான். மதச்சார்பற்ற கட்சிகளும்
நபர்களும் சிறுபான்மைக்கு மதத்திற்கு ஆதரவாக உள்ளனர்; இந்து மக்களை இரண்டாம் தரகுடிமக்களாக்கப்
பார்க்கிறார்கள் என்பதாக இப்பிரச்சாரம் இருக்கிறது. இதன் நோக்கம் இந்துக்கள் மத்தியில்
அச்சத்தை விதைப்பது- நாட்டில் 80 சதவீததிற்கும் அதிகமாக உள்ள இந்துக்கள் மத்தியில்
சிறுபான்மை வகுப்பாரால் ஆட்சி செய்யப்படுவோம் என்ற அச்சத்தை ஏற்படுத்துவது.
நேரு காலத்தின்போதே மதச்சார்பின்மைவாதிகள் `முஸ்லீம்களை தாஜா
செய்பவர்கள்` என்று குற்றம் சாட்டினார்கள். காந்திஜியும் இவ்வாறுதான் விமர்சனம் செய்யப்பட்டார்.
முஸ்லீம் வகுப்புவாதிகள் ஒருபக்கம் `முஸ்லீம் எதிரி` என்றும்; இந்து வகுப்புவாதிகள்
`நாட்டின் துரோகி` என்று குற்றம் சாட்டினார்கள்.
`சிறுபான்மை மக்களை தாஜா செய்வதாக` இந்து வகுப்புவாதிகள் குற்றம்
சுமத்தியபோதிலும், இந்தியா முழுவதும் ஒரு சிறிய பகுதிகூட முஸ்லீம் மக்களுக்கு ஆதரவாக
இல்லை; அரசு பணியிடங்கள், கல்வி நிலையங்கள், தனியார், பொதுத்துறை, காவல்துறை, ராணுவம்,
ஊடகம் போன்ற துறைகளிலும் முஸ்லீம் மக்கள் முஸ்லீம் என்பதால் எந்த பலனையும் அடைந்துவிடவில்லை.
மற்ற பிற்படுத்தப்பட்ட பிரிவினரைவிட மிகவும் குறைவான வாய்ப்புகளையே அவர்கள் பெற்றுள்ளனர்
என்பதை சச்சார் அறிக்கையும் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, மதச்சார்பற்ற இந்தியாவில்
இந்துக்கள் பழிவாங்கப்படுகிறார்கள் அல்லது இரண்டாம் தரக்குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள்
என்று சொல்வது வேடிக்கையானது, பொய் எவ்வளவு பெரியதொ அவ்வளவுக்கு அது பலந்தரும் என்ற
கோயபல்ஸ் பாணி பிரச்சாரத்துக்கு உதாரணமாக இருக்கிறது.
காந்திஜியின் படுகொலைக்குப் பின்னர் வகுப்புவாதத்திற்கெதிரான
தீவிர பிரச்சாரத்தை நேரு மேற்கொண்டார், அதற்குப் பின்னர் தேசிய அளவில் மிகப்பெரிய பிரச்சாரத்தை
மதச்சார்பற்ற சக்திகள் செய்யவில்லை. மதச் சார்பற்றவர்கள் என்று கூறிகொண்டோர் `ஆட்சிஅதிகாரத்தின்
மீதான மோகத்தின்` காரணமாக ஒருவித ஊசலாட்டத்தில் இருந்தனர். மேலும் சிறுபான்மை மதவெறியை
கண்டிப்பதில் மென்மையான அணுகுமுறையை கடைபிடித்தது பெரும்பான்மை வகுப்புவாதிகளின் பிரச்சாரத்திற்கு
சாதகமான அம்சமாக இருந்தது. 19ம் 20ம் நூற்றாண்டில் வாழ்ந்த மாபெரும் சமூக சீர்திருத்தவாதிகளை தமது அரசியல் – கருத்தியல் மூதாதையர்களாகவும்
காட்ட முயற்சிக்கிறார்கள். காந்தியை பழிப்பதற்கு நேதாஜியை முன்னிறுத்துகிறார்கள். ஆனால்
நேதாஜி வகுப்புவாதிகளை சகித்துக்கொள்ளவில்லை. 1938ல் தேசிய இயக்கத்தின் தலைமைப் பொறுப்புவகித்த
நேதாஜி வகுப்புவாத அமைப்புகளான இந்துமகாசபை, முஸ்லீம் லீக் உறுப்பினர்களை தேசிய இயக்கத்திலிருந்து
நீக்கினார்.
நடுத்தர மக்களின் ஒரு பிரிவினரை பெரிய அளவிற்கு பாஜக வென்றெடுக்க
முடிந்ததற்கு முக்கிய காரணங்களில் ஒன்று அதன் தேசியம் குறித்த அறைகூவல் என்பது குறிப்பிடத்தக்கது.
வகுப்புவாதத்தை `தேசியவாதம்` என்று குறிப்பிடுவது அபத்தமானது. 1950களில் மேற்கத்திய
எழுத்தாளர்களும் இதழாளர்களும் இந்து தேசியவாதம், முஸ்லீம் தேசியவாதம் என்ற சொற்பிரயோகங்களை
பயன்படுத்தினர். 1947க்கு முன்னர் காந்திஜி மற்றும் தேசிய இயக்கத்தலைவர்கள் இந்து-முஸ்லீம்
வகுப்புவாதிகளை வகுப்புவாதிகள் என்றே குறிப்பிட்டனர்.
வகுப்புவாதமும்
மதமும்: வகுப்புவாதத்திற்கு ஆணிவேராக இருப்பது மதமோ அல்லது மதவெறுபாடுகளோ
அல்ல. தாம் சார்ந்த மதத்தின் மேம்பாடு, சீர்திருத்தம் , வளர்ச்சி ஆகியவைகளைப் பற்றி
வகுப்புவாதிகள் கவலைப்படுவதில்லை. அவர்கள் மதத்தால் ஆகர்ஷிக்கப்படவில்லை, வகுப்புவாத
அரசியலின் இறுதி இலக்கு மதமும் அல்ல. மதம் என்பது அவர்கள் அரசியல் அதிகாரத்திற்கான
பயணத்திற்கான வாகனம் மட்டுமே!
இந்த வகுப்புவாதத் தலைவர்களின் இந்துக்களோ-முஸ்லீம்களோ மதப்பழக்கத்தை உற்று நோக்கினால் அவர்களில் பெரும்பாலானவர்கள்
ஆசாரமற்றவர்கள். 1947க்கு முந்தைய முஸ்லீம் வகுப்புவாதத் தலைவர்கள் பலர் ஜின்னாவும்
இப்படித்தான். இந்து வகுப்புவாத கருத்தியலின் தந்தை வி.டி.சாவார்க்கர் ஒரு பகுத்தறிவுவாதி.இன்னும்
பல இந்து வகுப்புவாதத் தலைவர்கள் பலர் ஆரிய சமாஜக்கொள்கையுடையவர்கள். ஆரிய சமாஜக்கொள்கையின்
அடிப்படை ஒரே கடவுள். ராம்ரோ, கிருஷ்ணரோ அல்லது பிற கடவுள்களோ தெவதைகளோ புனிதம் அல்ல
என்பவர்கள்.
1947க்கு முன்னர் முஸ்லீம் வகுப்புவாதிகள் முல்லாக்கள், மெளல்விகளையும்
மசூதிகளையும் பயன்படுத்தி மக்களிடம் வகுப்புவாதத்தை பிரச்சாரம் செய்ததுபோல இந்து வகுப்புவாதிகள்
சாதுக்களையும், பூஜாரிகளையும் பயன்படுத்தினர்.
இந்திய ஒற்றுமையும், நாட்டு முன்னேற்றமும் மதச்சார்பின்மை கொள்கையை
சரியாக கடைபிடித்தால் மட்டுமே சாத்தியமாகும். அதற்கு கோயில்கள், சாதுக்களின் ஆசிரமங்கள், மசூதிகள், குருத்வாராக்கள், தேவாலயங்கள் மற்றும் அனைத்து மத வழிபாட்டுத்தலங்கள், அரசியல் நோக்கங்களுக்கும், அரசியல் பிரச்சாரத்திற்கும் பயன்படுத்துவதற்கு முழுமையாக தடைவிதிக்கப்படவேண்டும். மதவிவகாரம் தொடர்பான அனைத்து இடங்களிலும் அரசியல் பேசுவது குற்றம் என்று அறிவிக்கப்படவேண்டும். தேர்தலில் மதத்தை பயன்படுத்துவதற்கு எதிரான சட்டபூர்வ தடையை கறாராகச் செயலபடுத்த வேண்டும். மதச்சார்பற்ற கட்சிகளும், குழுக்களும் சங்கராச்சிரியார்கள், இமாம்கள், மெள்ல்விகள், பாதிரியார்கள், மதகுருக்கள் போன்றோருடன் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ளகூடாது. மதமும் அரசியலும் கலக்காமல் இருக்கவேண்டியது மிகவும் அவசியம்.
நூல் ஆசிரியர்: பேரா.பிபன் சந்திரா
வெளியீடு: நேஷனல் புக் டிரஸ்ட்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக