திங்கள், 23 டிசம்பர், 2013

மாதங்களில் மார்கழி!

மார்கழி என்றாலே அதிகாலை பஜனை தான், அதை வைணவர்கள் தான் தெருத்தெருவாக ஆண்டாளின் திருப்பாவையை பாடுவார்கள். ஒரு நாளைக்கு ஒரு பாடல் வீதம் முப்பது நாட்கள் பாடுவார்கள். 1980களில் தான் ஊருக்கு பஜனை என்பது அறிமுகம் ஆகிறது. சம்சாரிகள் ஊர்த்திருவிழா தவிற மற்ற நாட்களில் இன்றைக்குவரை யாரும் கிராமத்துக்கு கோவிலுக்கு பொவதில்லை, அது பூசாரியின் வேலை. இப்போது செவ்வாய், வெள்ளி கிழ்மைகளில் பெண்கள் சிலர் அம்மன் கோவிலுக்கு செல்கிறார்கள்.

வைணவர்கள் குடும்பம் கிராமத்தில் இரண்டு அல்லது மூன்று தான் இருக்கும், அவர்களின் சாமி ஒன்றே ஒன்று  தான் அவனுடைய அவதார புருஷ்ர்களையும் அவதாரங்களின் தாரங்களையும் மட்டுமே வணங்குவார்கள். இந்த பிள்ளையார், முருகன், மாரியம்மா, ஈஸ்வரன் என்ற எந்த கடவுளர்களையும் அவர்கள் மதிப்பதில்லை. வைணவம் என்பது தனி மதம், அங்கே சேர்ந்துவிட்டால் அவர்களுடைய தோள்களில் திருமாலின் சங்கு, சக்கரச் சின்னங்களை பதித்துவிடுவார்கள். அதற்குப் பின் அவர்கள் புலால் சாப்பிடக்கூடாது, சிலர் சின்னவெங்காயம், பூண்டு கூட சமையலில் சேர்க்கமாட்டார்கள். அவர்களின் ஷேத்திரயாத்திரை யாவும் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகத் தான் இருக்கும். பன்னிரெண்டு ஆழ்வார்களின் பாடல்களை அவர்கள் பாடுவார்கள், நாலாயிர திவ்யபிரபந்தம் என்ற நூல் மிக முக்கியமானது. வைணவம் என்பது அது தமிழகத்தில் வள்ர்ந்த மதம், அது மைசூர், திருவிதாங்கூரையும் உள்ளடக்கியது வைணவத்தை சோழர்கள், பாண்டியர்கள் ஆதரித்திருக்கிறார்கள். பனிரெண்டு ஆழ்வார்கள் அனைவரும் தமிழில்தான் பாடல்கள் இயற்றியிருக்கிறார்கள்.

1980களில் கிராமத்திற்கு இடைசெவலிலிருந்து ஒரு பாகவதர் வந்து திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கொவிலுக்கு ஆடித்திருவிழா வசூலுக்கு வருவார். அவருடன் நான் பல வீடுகளுக்குச் செல்வேன், 50பைசா, 1 ரூ, 2ரூ என சில்லரைகளில் வசூலாகும். கிராமத்திலிருந்து ஆண்டாள் கொவிலுக்கு வைணவர்களைத் தவிற வேற யாரும் பொனதில்லை, ஆண்டாள் கோவிலில் சில பஜனை கோஷ்டிகளில் கானத்தை பார்த்த வைணவர்கள் நம்மூரிலும் அதேமாதிரி பஜனை கோஷ்டியை உருவாக்க நினைத்தார்கள். அப்படியே ஒரு மார்கழி மாதத்தில் அந்த ஊர் பஜனை கோஷ்டியை அழைத்துவந்து ஊரில் பாடவைத்தார்கள். மக்களுக்கும் ஆர்வம் பெருகியது. அந்த பஜனை கோஷ்டியின் ஆசிரியரை வரவழைத்து பாடல்களும், அதற்கு நடனமும் கற்றுத்தர ஏற்பாடாயிற்று.

பல வாரங்கள் பயிற்சி நடைபெற்றது, எல்லோரும் எளிதாக ஆடும்படியான நடனம் தான் அதிகம், சில பாடல்களுக்கு மட்டும் நடனம் மாறுபடும். அதை அதிக சிரமேற்கொண்டு ஆடவெண்டும். பாடுவதற்கு எல்லோருக்கும் வராது, சிலர் வசனம் போல் வாசிப்பார்கள். அதற்கு ஒரு ஆசிரியர் தேர்தெடுக்கப்பட்டார், இது தவிற ஆர்மொனியம், ஜால்ரா என எளிய இசைக்கருவிகளும் இருக்கும். ஆடுவதற்கு நிறைய இளைஞர்கள் இருந்தார்கள், காலில் சலங்கையும் அணிவார்கள். சிறுவர்களுக்கு காலில் சலங்கை கட்டி ஆடவேண்டும் என்ற ஆசையிருக்கும் ஆனால் வாய்ப்பு கிடைக்காது. நானும் அப்போது சிறுவன் தான். மார்கழி தொடங்கியதும் பஜனை தொடங்கியது.


ஊரை கிழக்கும் மேற்குமாக பிரிக்கும் நீளமான தெருவில் பஜனையின் பயணம். பஜனைக்கென்று ஒரு சிறிய மடம் அந்த வீதியில் யாராவது ஒரு அறையை அந்த மாதத்திற்கு மட்டும் கொடுப்பார்கள். அதிகாலை 4 மணிக்கு எழுந்து குளத்து நீரில் குளித்துவிட்டு ஆடைமாற்றிக்கொண்டு நாமம் எல்லாம் போட்டுக்கொண்டு பஜனை துவங்கும். மார்கழி ஒன்றாம் தேதியில் புதிதில் சுமார் 30 பேர் பஜனையில் பங்கெடுப்பார்கள், ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவராக கழண்டிவிடுவார்கள், ஏகாதசி அன்று விமரிசையான பஜனை இரவு 9 மணிக்கு ஆரம்பமாகிற பஜனை அதிகாலை வரை நீடிக்கும், அன்று விளம்பரத்திற்காகவும் விட்டுப்போனவர்கள் அநேகம்பேர் வருவார்கள். ஏகாதசி மார்கழியின் துவக்கத்தில் வந்துவிட்டால் பங்கெற்போர் மிகவும் குறைந்துவிடுவார்கள். பள்ளிச்சிறுவர்கள் அதிகமாக வருவார்கள். பஜனைக்காக போட்ட நாமத்தை அழித்துவிட்டுத்தான் பள்ளிக்கு செல்வார்கள். பஜனை கோஷ்டி தெருவெங்கும் சுற்றிவந்தவுடன் ஏதாவது ஒரு வீட்டிலிருந்து வந்த பிரசாதத்தை கொடுப்பார்கள். அதற்காக சில குழந்தைகள் மார்கழியின் அதிகாலை குளிரை பொருட்படுத்தாது வருவார்கள்.

சில வருடங்களுக்குப்பின் கார்த்திகை மாதம் மாலைபோடும் சீசன் வந்தது, ஒன்று ஐயப்பனுக்கும் மற்றொன்று திருச்செந்தூர் முருகனுக்கும். வசதியானவர்கள் ஐயப்பனுக்கு மாலை போடுவார்கள், மற்றவர்கள் முருகனுக்காக மாலை போடுவார்கள். மாலை பொடும் சீசன் வந்ததும் பஜனை டல்லடிக்க ஆரம்பித்தது. பஜனை கோஷ்டியில் இருப்பவர்கள் ஒவ்வொருவராக குறைந்துவிட்டார்கள். ஒரு மாணவன் தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்கினால் அவன் பஜனையில் பாடினான், அதனால் நல்ல மார்க் வாங்கினான் என்பார்கள். கிராமத்தில் இப்போது பஜனை நடப்பதாகத் தெரியவில்லை. அந்த பாடல்களும் நடனமும், வாத்தியங்களும் தொடரவில்லை.

என்னுடைய பெற்றோர் 1980களில் இறுதியில் வைணவத்தில் சேர்ந்தார்கள், எனது தந்தை வைணவத்தில் சேர்வதற்கு என்னுடைய பெரியப்பாவும் அவர் சாப்பிட்ட சீக்குவந்த நாட்டுக்கோழிக்கறிக் குழம்பும்யும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன். ஏதாவது பண்டிகை நாட்களில் ஆழ்வர்களின் பாடல்களை பாடுவார்கள், வாசிப்பதே பாடுவது போன்று. அவர்களுடன் சேர்ந்து வாசித்ததில் திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி என சில பாசுரங்கள் மனனம் செய்திருந்தேன். ஒரு சமயம் பெற்றோர் வைணவத்தில் சேர்ந்ததற்கு பின்னர் நானும் வைணவத்தில் சேர்ந்து அந்த முத்திரை குத்திக்கொள்வதாக இருந்தேன், அச்சமயங்களில் அசைவ உணவுவகைகளை தவிற்த்திருந்தேன். தச்சு வேலை செய்ய வந்த ஆசாரி ஒருவர் கருவாட்டுக் குழம்பைவைத்து என் எண்ணத்தை சீரழித்துவிட்டார்.

ஆனாலும் வைணவத்தின் மீதான பற்றுதல் நீங்கவில்லை, சென்னை வந்த பின்பும் சில ஆண்டுகள் மார்கழி பஜனையும், கடைசிச்சனி பார்த்தசாரதி கோவிலுக்கு செல்வது வழக்கமாக இருந்தது. நூலகம் சென்றேன், எந்த புத்தகத்தை வாசித்தேனென்று தெரியவில்லை சாமிகளை விட்டு விட்டு பெரியார் கட்சிக்காரர்கள் பேசும் கூட்டத்திற்கு சென்று அங்கிருந்து இடதுபக்கம் திரும்பிவிட்டேன்.
 

கருத்துகள் இல்லை: