செவ்வாய், 15 அக்டோபர், 2013

Europa Europa (1990) உலகசினிமா

ஒரு வகுப்புக்கலவரம் நேரிட்டால் அவன் நல்லவனா? கெட்டவனா? என்றெல்லாம் பார்க்க கலவரக்காரர்களுக்கு நேரமிருக்காது. அவன் எதிரியா? அவனுடைய அடையாளம் என்ன? உயிர்பயத்தின் காரணமாக பொய்கூட சொல்லலாம், ஆனால் அவனுடைய அங்க உறுப்புகள் அவனை இந்த இனத்தவன், மதத்தினன் என்று காட்டிக்கொடுத்துவிடும். Mr.& Mrs. Iyer என்ற திரைப்படத்தில் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த பயணிகள் நடுவழியில்  மதக்கலவரத்தின் காரணமாக நிறுத்தப்படுகிறார்கள்.  இந்துமதவெறியர்கள் சிலர் பேருந்தை நிறுத்தி பயணிகளிடம் இஸ்லாமியர்களைத் தேடுகிறார்கள். அப்போது அந்த மதவெறியர்கள் சந்தேகப்படுபவர்களின் ஆடைகழைந்து பிறப்புறுப்பைப் பார்த்து அடையாளம் கொள்கிறார்கள். அப்போது பின்னிருக்கையில் அம்ர்ந்திருக்கின்ற ஒரு பயணி மற்றொரு சக பயணியை இஸ்லாமியன் என்று காட்டிகொடுத்து விடுகிறான். கலவரக்காரர்கள் அந்தப் பயணியை கொண்டுசென்று கொன்றுவிடுகிறார்கள். ஆனால் காட்டிக்கொடுத்தவன் அழுகிறான், ஏனென்றால் அவன் ஒரு யூதன் அந்த மதத்தினரும் circumcision செய்துகொள்வார்கள். கலவரக்காரர்களிடமிருந்து தன்னுயிரை காப்பாற்றிக்கொள்ள அவன் ஒருவனை காட்டிக்கொடுத்தான்.
 
 
 
Europa Europa. இந்த திரைப்படத்தில் நாஜிகளின் பிடியிலிருந்த ஜெர்மனியில் ஒரு யூதக்குடும்பத்தில் தங்கள் மகன்களை  வீட்டைவிட்டு தப்பித்து செல்லும்படி படி பெற்றோர்கள் சொல்கிறார்கள். கனத்த இதயத்தோடு பெற்றோர்களை விட்டு Solek மற்றும் அவனுடைய அண்ணன் Issac தப்பித்து செல்கிறார்கள். செல்லும்வழியில் அண்ணனும் தம்பியும் பிரிந்துவிடுகிறார்கள். Solek சென்ற இடம் சோவியத் ஆளுகையிலிருந்த போலந்து. அங்கே கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பள்ளியில் கல்விபெறுகிறான். அந்தபகுதியை நாஜிகள் ஆக்ரமித்ததால்  ஜெர்மன் படைகளிடம் சிக்குகிறான். அவன் கண்முன்னே அவனுடன் இருந்த தங்களுடைய கம்சமோல் உறுப்பினர் அடையாள அட்டையை காண்பித்ததால் சுட்டுக்கொல்லப்படுகின்றனர். Solek  தன்னிடமிருந்த கம்சமோல் உறுப்பினர் அடையாள அட்டையை மறைத்துவிட்டு தன்னை ஒரு ஜெர்மானியன் என்றும் தன்னுடைய பெற்றோர்களை சோவியத்படையினர் சுட்டுக்கொன்றனர் என்றும் சொல்கிறான். அவனுக்கு ரஷ்ய மொழியும், ஜெர்மன் மொழியும் தெரிந்திருந்ததால் ஜெர்மானிய ராணுவத்தில்  வேலைசெய்யச் சொல்கிறார்கள். யூதர்களை தேடிப்பித்து கொன்றுகொண்டிருந்த சமயம் ஒரு யூதன் ஜெர்மானியன் என்று சொல்லவும் நாஜி ராணுவம் பிடிபட்டவனின் ஆடைகழைந்து யூதன் என்று உறுதிப்படுத்தியவுடன் சுட்டுக்கொல்கிறார்கள். இந்த சம்பவம் Solek ஐ எப்போது மாட்டுவோம் என்று தெரியாமல் பயப்படுகிறான்.
 
ஒரு சண்டையின்போது இவன் சார்ந்திருந்த யூனிட்டில் பலர் இறந்துவிடுகிறார்கள், இவன் தன்னந்தனியாக சோவியத் வீரர்களை சரணடையச்செய்கிறான். இந்த செயலால் அவன் மிகவும் மதிக்கப்படுகிறான். 16 வயது நிரம்பியுள்ள இளைஞனான இவனுக்கு நாஜிகளின் இளைஞர் பள்ளியில் கல்வியளிக்கப்படுகிறது. அங்கே யூதர்கள் மீதான வெறியை ஏற்படுத்தும் கல்வியை கொடுக்கிறார்கள். யூதனை எப்படி அடையாளம் காணுவது என்று வகுப்பறையில் சொல்லித்தருகிறார்கள். அவனுடைய அங்கங்கள் ஒவ்வொன்றும் எப்படியிருக்கும் அள்வீடுகளையும் சொல்கிறார்கள். வகுப்பிலிருந்த solek (அவன் இப்போது joseph peters என்று மாற்றியிருக்கிறான்) ஐ அழைத்து மண்டையோட்டின் அளவுகளை விரிவுரையாளர் அளக்கிறார். அப்போது இவனுடைய மனம் திக்திக் என்றிருக்கிறது. அளந்துவிட்டு உன்னுடைய உடலமைப்பு பால்டிக் கலப்பினம், ஆனாலும் நீ `மேன்மையான் ஆரிய` இனம் தான் என்கிறார். யூதர்களை இழிவுபடுத்தி மாணவர்களும் அங்குவரும் போதனையாளர்களும் சொல்லும்போது இவனுக்கு சித்ரவதையாக இருக்கிறது. ஒரு சமயத்தில் இளம்வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெறுகிறது, அப்போது ஆடைகழையவேண்டும் என்று கேள்விப்படுகிறான், அவ்வள்வுதான் மாட்டிக்கொள்வோம் என்று எனக்கு பல்வலி என்று வேறுடாக்டரிடம் சிகிச்சைக்குச் சென்று அத்தருணத்தில் தப்பித்துவிடுகிறான்.
 
தன்னுடைய பெற்றோர்கள் ஏதோ ஒரு யூதமுகாம்களில் தான் இருப்பார்கள் அவர்களை காணவேண்டுமென்று டிராமில் செல்லும்பொது ஜன்னல்வழியாக ghetto வை பார்க்கிறான், ஆங்காங்கே தள்ளுவண்டியில் பிணங்களும், யூதர்கள் மீது சித்ரவதைகளும் நடைபெறுகிறது. இவன் அடிக்கடி அந்த டிராமில் செல்வதைப் பார்த்த போலிஸ் இவனிடம் அடையாள அட்டைகுறித்த விபரங்கள் கேட்கிறது. அவனுடைய மனச்சிக்கல் மிகுந்த சூழ்நிலையில் சோவியத்படை முன்னேறிவருகிறது. அப்போது ஏற்பட்ட சண்டையில் நாஜிகளின் அணியிலிருந்து தப்பித்து சோவியத் படையிடம் சரணடைகிறான், தான் யூதன் என்று சொல்லவும் அங்கே நம்பமறுக்கிறார்கள். நாஜிகளிடமிருந்து  விடுவிக்கப்பட்ட பிணையக்கைதிகளாக இருந்த செம்படைவீரன் ஒருவனிடம் இவனை சுட உத்தரவு வருகிறது. தீடீரென்று முகாமிலிருந்து அவனுடைய அண்ணன் Issac  இவனை கண்டுகொண்டு காப்பாற்றுகிறான். போர் நிறுத்தடத்திற்குப்பின்பு பாலஸ்தீனம் வந்துசேர்கிறான். தன்னுடைய குழந்தைகளுக்கு circumcision செய்யப்போவதில்லை என்று முடிவுசெய்கிறான்.
 
உயிர்பிழைப்பதற்காக ஜெர்மானியன் என்று சொன்ன Solek நாஜிகளின் படையில் யூதர்களை கருவறுக்க சத்தியம் செய்துகொள்ள வேண்டியிருந்தது, ஒவ்வொரு நாளும் அவன் படும் அவஸ்தையை படம் விளக்குகிறது.

கருத்துகள் இல்லை: