சனி, 23 மார்ச், 2013

கிறிஸ்தவத்தில் பிரிவினைச்சுவர்கள்

"கடந்தகாலத்தை மதிப்பிடுவதோ, எதிர்கால நல்னுக்காக நிகழ்காலத்திற்கு அறிவுறுத்தலோ வரலாற்றின் பணியன்று, என்ன நிகழ்ந்ததோ அதனை அப்படியே கூறுவதுதான் வரலாறு " -  German historian Leopold von Ranke.

வரலாற்றில் பல பிரிவினைசுவர்களை பார்த்திருக்கிறோம், பெர்லின் சுவர்  சித்தாந்த ரீதியில் ஜெர்மானியர்களை பிரித்தது, இஸ்ரேல்-பாலஸ்தீனத்திற்கு இடையில் இனரீதியான மெகாசுவர்  ‘பாதுகாப்பு அரண்’ என்ற பெயரில் எழுப்பப்பட்டுவருகிறது. தமிழகத்தில்  உத்தபுரத்தில் மேல்சாதிக்காரர்கள் கீழ்சாதிக்காரர்கள் குடியிருப்புகளுக்கிடையில் தடுப்புச்சுவர் எழுப்பினார்கள். எல்லா சுவர்களும் யார் ஆதிக்கம் செலுத்துகிறார்களோ அவர்களால் கட்டப்பட்டது என்பது உண்மை. மக்களைப் பிரிக்கின்ற சுவர்கள் உடைந்துவருகின்றன. அப்படி சாதிஆதிக்கத்திலிருந்து விடுபட்டு கிறிஸ்தவத்திற்கு மாறியபின்பும் அங்கேயும் குறுக்குச்சுவர்கள் மறித்தன. பொருட்களால் கட்டப்பட்ட சுவர்களைவிட மனதளவில் கட்டியுள்ள சுவர்கள் மிகப்பெரியதாக உள்ளதால் ஒன்றைவிட்டு ஒன்றைமட்டும் இடிக்கமுடியாது.  “கிறிஸ்தவமும் சாதியும்” என்ற நூல் தமிழகத்தின் தென்மூலையிலுள்ள வடக்கன்குளம் தேவாலயத்தில் 19ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சாதிப்பிரிவினை சுவர் 20ம் நூற்றாண்டில் இடிக்கப்பட்டது வரையிலான வரலாற்றைப் பற்றியது.

16ம்நூற்றாண்டில் அராபிய மூர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள, கொச்சியிலிருந்த போர்த்துக்கீசியர்களின் உதவியை பரதவர்கள் நாடினார்கள். போர்த்துக்கீசியர்கள் பரவதவர்களை மூர்களிடமிருந்து காப்பாற்றியதுடன அவர்களை கத்தோலிக்கர்களாக மாற்றினர். தமிழகத்தின் கடற்கரைப் பகுதியில் காலூன்றிய கத்தோலிக்கம் தன் செயல்பாடுகளை உள்நாட்டுப்பகுதிக்கும் விரிவுப்டுத்தியது, மதுரைய ஆண்ட நாயக்கமன்னர்களின் ஆதரவுடன் ’மதுரைமறைத்தளம்’ 1606ல் உருவானது. மதம் பரப்புவதற்காக போர்ச்சுக்கல், இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளிலிருந்து துறவிகள் இந்த மறைத்தளங்களில் பணியாற்றியிருக்கிறார்கள். ஐரோப்பிய துறவிகள் தமிழகத்தில் நிலவிவந்த சாதியவேறுபாடுகளை-தீண்டாமையைக் கண்டு வியப்புற்றனர். இந்த சாதியவேறுபாடு இருவிதத்தில் அவர்களின் மதமாற்றம் வேலைக்கு உதவியது. 1) தனிமனிதனை மதமாற்றம் செய்வதைவிட, ஒரு குறிப்பிட்ட சாதியில் செல்வாக்குள்ள குழுவை மதமாற்றம் செய்தால் அவர்களைச்சார்ந்துள்ள்  ஒட்டுமொத்த சாதியையும் மதமாற்றம் செய்யமுடிந்தது. 2) ஒரு குழுவாக மதம் மாறும் சாதியினர் அதற்குப் பின்னர் வேறுமதத்திற்கு மாறுவதில்லை.

அதே சமயத்தில் தாழ்த்தப்பட்டமக்கள் கட்டிடங்கள் எதுவுமின்றி பீடங்களாகவும், சிலைகளாகவும் மரத்தடியில், களத்துமேட்டில் இருந்த கிராமதெய்வ வழிபாட்டுடன் நிறைவுபெறவேண்டியிருந்தது. கட்டிடவடிவில் அமைந்த இந்துக்கொவில்களுக்குள் நுழைவதை நினைத்துப்பார்க்கவும் முடியாது. கத்தோலிக்க ஆலயத்தில் நிலவிய இந்த சமத்துவம், தாழ்த்தப்பட்ட மக்களை ஈர்க்கும் சக்தியாக விளங்கியது.  அதே சமயத்தில் இந்துசமூகத்திலிருந்த உயர்சாதியினரும் கத்தோலிக்கத்த்ற்கு மதம் மாறினார்கள். அப்படி மாறியவர்கள் தாங்கள் முன்பு கடைபிடித்துவந்த சாதிவேறுபாட்டை தீண்டாமையை கிறிஸ்தவமதத்திலும் செயல்படுத்தினார்கள். ஐரோப்பாவிலிருந்து வந்த பல சமயகுருக்களும் இத்தகைய வேறுபாட்டினை நீண்டகாலம் அரவணைத்தார்கள். இத்தாலியிலிர்ந்து வந்த ராபர்ட் டி-நொபிலி என்ற  பாதிரி குறிப்பாக பிராமணர்களை மதமாற்றம் செய்வதில் கவனம் செலுத்தினார். அவர் சொன்னார் “கிறிஸ்தவர்களாக மதம் மாறுபவர்கள் சாதியையோ, சாதிய அடையாளங்களையோ, சாதிய பழக்கங்களையோ, சமூக உயர்நிலையையோ விட்டுவிடத்தேவையில்லை” மேலும் ராஜரிஷி என்று தம்மை அழைத்துக்கொண்டு பாதிரிகளுக்கான அங்கிகளுக்குப் பதிலாக காவியுடைதரித்து முப்புரி நூலும் அணிந்தார்.  பிராமணர் சமைத்த உணவைமட்டும் சாப்பிட்டார். வடமொழியிலுள்ள் நான்கு வேதங்களை அறிந்துள்ள உங்களுக்கு ஐந்தாவது வேதமான ‘ஏசுரவேதம்’ என்று கூறி பைபிளின் சிலபகுதிகளை வடமொழியில் மொழிபெயர்ப்பு செய்து பிரச்சாரம் செய்தார். இவர் உருவாக்கிய தேவாலயத்தில் மேல்சாதி- கீழ்சாதியை பிரிக்க கைப்பிடிச்சுவர்கள், சற்றுப்பள்ளமான பகுதி தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கினார்.

18ம் நூற்றாண்டில் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழிருந்த புதுச்சேரியில் கத்தோலிக்க மதம் மாறியிருந்த பறையர் சாதியினர் தேவாலயத்தில் தனித்து ஒதுக்கப்பட்டிருநதனர். இதனை எதிர்த்து கலகம்செய்த செய்திகள் “அனந்தரங்கப்பிள்ளையின்’ டைரியில் குறிப்பிட்டுள்ளார். அந்த தேவாலயத்தில் உட்புறம் ஒரு சுவர் பிரித்தது, ஒருபுறம் உயர்சாதிகிறிஸ்தவர்கள், ஐரோப்பியர்கள், ஈரோசிய்ரகள் ஆகியோரும் மறுபுறம் பறையர்களும் வழிபாட்டின்போது அமர்ந்தனர் என்று குறிப்பிட்டிருக்கிறார். காரைக்கலிலிருந்து வந்த ஒரு பாதிரி இந்த பிரிவினைசுவரைப் பார்த்து எரிச்சலைந்து பறையர்களிடம் சுவருக்கெதிராக தூண்டிவிட்டார்.  “நாங்கள் உண்மையிலேயே உங்கள் சிஷ்யர்கள் என்றால் எங்கள் அனைவரையும் ஒன்றுபோல் நடத்தவேண்டும். தேவனானவர் அவரை வழிபடுகிறவர்களிடம் வேறுபாடு காட்டுவதில்லை, ஆனாலும் சாதி கிறிஸ்தவர்கள் வேலியின் மூலம் எங்களை வேறுபடுத்துகின்றனர், நீங்களும் அதற்கு உடன்பட்டுள்ளீர்கள்” என்று மூத்தகுருவிடம் முறையிட்டார்கள். இதை கேட்டகுரு புகாரின் நியாயத்தை உணர்ந்து சுவரை இடிக்க 16-10-1745 அன்று உத்த்ரவிட்டார். மறுநாள் பூசையின்போது பறையர்களை மற்றவர்களிடமிருந்து பிரிக்க சுவருக்குப் பதிலாக மேசைகள் நாற்காலிகள் வேலியாகப் போடப்பட்டன.

வடக்கன்குளம் தேவாலயம

வடக்கன்குளம் கிராமத்தில் முதல்குடியேற்றம் 1680ல் நடந்தாகத்தெரிகிறது, அப்படி குடியேறிய்வர்கள் நாடார்சாதியைச் சேர்ந்தவர்கள், கத்தோலிக்கத்தை தழுவியிருந்தார்கள். அவ்வழியே சென்ற கத்தோலிக்கத்துறவி ஜாண்டி-பிரிட்டோ அந்த மக்களைச் சந்தித்தபின் 1685ல் வழிபாட்டுக்கூடம் ஒன்றை கட்டிக்கொடுத்தார். சுமார் 60 ஆண்டுகள் கழித்து அந்த ஊருக்கு பாளையங்கோட்டைக்கு அருகேயிருந்து வெள்ளாள சாதியினர் குடிபுகுந்தனர். வடக்கன்குளத்தில் வாழும் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக புதிய ஆலயம் ஒன்றை கட்டநேர்ந்தது. அந்த ஆலயம் சிலுவை வடிவில் அமைந்தது, கோவிலை இரண்டாகப்பிரிக்க வேலி போடப்பட்டிருந்தது முதற்பகுதியில் வெள்ளாளர், முதலிமார்,ராசாக்கள், கம்மாளர் ஆகியோரும் பின்பகுதியில் கீழ்சாதிக்காரர்கள் இருந்தார்கள். கோவில் பீடத்தில் வேலை செய்வது, பூசையில் உதவிசெய்வது, பாட்டுபாடுவது, தீபம் ஏற்றுவது எல்லாம் பிள்ளைமார், முதலிமாருக்கு மாத்திரமே உரியது. கீழ்ச்சாதிக்காரர்கள் மேல்சாதிக்காரரைத்தாண்டி வரக்கூடாது என்பதினால் சுவாமியார் அவர்களிருக்கும் இடத்திற்கே சென்று நன்மை கொடுப்பார். காலப்போக்கில் கிரிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும், 1752ல் கட்டப்பட்ட ஆலயத்திற்கு மாற்றாக இன்னொரு புதிய ஆலயம் கட்ட அவசியமேற்பட்டது.

காற்சட்டை ஆலயம்1850களில் வடக்கன்குளம் வெள்ளாளர்கள், நாடார்கள் பாளையங்கோட்டை வந்திருந்த மதுரை ஆயர் கானோஸ் என்பவரை சந்தித்து புதிய ஆலயம் கட்டவேண்டும் என்கிற வேண்டுகோளை வைத்தார்கள். இரு சாதியினரைப் பிரிக்க கம்பியளி அமைத்து இரு சாதியினரும் பிரிக்கப்பட்டிருய்க்க வேண்டமென்றும் விரும்பினர். 1855ல் தொடங்கிய புதிய ஆலயப்பணி 1872ம் ஆண்டு முற்றுப்பெற்றது. இப்பணியில் நாடார்களும் வெள்ளாளர்களும் தங்கள் உழைப்பையும் பணத்தையும் அளித்தார்கள். இந்த கட்டிடம் அமைப்பில் விசித்திரமானது மேலிருந்து பார்த்தால் கால்சட்டைமாதிரி வடிவம் இருக்கும். உட்புறம் "V" போன்றிருக்கும். இரண்டு கோவில்கள் என்று கூறத்தக்கமுறையில் அமைந்த ஆலயம் அது. ஒவ்வொரு சாதிப்பிரிவுக்கும் (வெள்ளாளர் - நாடார்)  ஒரு கால் என்ற முறையில் இது அமைந்திருந்தது.இரு தரப்பினரையும் பிரிக்க இரு சுவர்கள், அந்த சுவர்களுக்கு நடுவே ஒரு பாதை. இந்த பாதையில்வழியாகத்தான் பங்குக்குரு பலிபீடத்தற்குச்செல்வார். இப்புதிய கோவிலை கட்டும்போதே இருதரப்பாரும் ஒப்பந்தம் செய்துகொண்டார்கள், அது பழைய கோவிலில் என்ன சலுகையோ அதே சிறப்புச்சலுகையை அனுபவிக்கும் உரிமையை வெள்ளாளர்கள் பெற்றார்கள். 1872ல் ஆயர் கனோச் ஒரு சுற்று மடல் வெளியிட்டார், அதில் வெள்ளாளர்களுக்கும் நாடார்களுக்கும் ஆலயத்திலுள்ள உரிமைகளை வரையறுத்துச் சொல்லப்பட்டிருந்தன. எண்ணிக்கையில் அதிகமாக இருந்த நாடார்களுக்கு வடபகுதிக்கூடம் போதவில்லை. தென்பகுதிக்குரிய சாதியினர் எண்ணிக்கையில் குறைவாக இருந்ததால் இடம் காலியாக இருந்தது ஆனாலும், நாடார்கள் அப்பகுதியினுள் செல்ல அனுமதியில்லையாதலால் வெளியே நின்று பூசை கேட்டனர்.

1909ம் ஆண்டில் திருஇருதயசபை சகோதரர் இருவர் ஆலயத்திற்கு தணிக்கை செய்ய வந்தார்கள், அவர்களில் ஒருவர் நாடார்சாதியைச் சார்ந்ததால் தென்பகுதியில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது, எனவே இருவரும் ஆலயத்திற்குள் செல்லாமல் திரும்பிச்சென்றனர். இதே ஆண்டில் நாடார் ஒருவர் பலிபீடப்ப்குதியில் எண்ணெய் ஊற்றுவதற்க்காகத் தென்பகுதிவழியாக நுழைந்ததற்கு அபராதம் விதிக்கப்பட்டார். 1910ம் ஆண்டில் புனித வெள்ளியன்று ஆலயத்தில் பாடியதற்காக ஒரு நாடார் கண்டிக்கப்பட்டார். வெள்ளாள ஆண்கள் அனைவரும் இதர்குப் பழிவாங்குவதற்காக ஆலய வளாகத்தில் கூச்சலிட்டனர். அதே ஆண்டு துணை ஆயர் ஃபைசாந்தியர் வடக்கன்குளத்திற்கு வந்தார். பிரிவினைச் சுவரின் இடையேயுள்ள குறுகியசந்துவழியே பலிபீடத்திற்கு செல்வது அவருக்கு அதிர்ச்சி அளித்தது, மேலும் சொன்னார் “சாதிப்பகையுணர்வால் கத்தொலிக்கர்களின் பண்டிகைகள் கொண்டாடப்படவில்லை, சமூகவாழ்வு முடக்கப்பட்டுள்ளது என்று குறிப்பேட்டில் பதிவுசெய்தார்.  ஃபைசாந்தியரின் குறிப்புகள் சாதிய ஆதிக்கத்திலிருந்து வடக்கன்குளம் திருக்குடும்ப ஆலயத்தை விடுவிக்க வேண்டுமென்ற அவரது விருப்பத்தை வெளிக்காட்டின. இரண்டு தரப்புக்கும் இடையேயான முரண்பாடு நாளுக்குநாள் அதிகரித்தவண்ணமிருந்தது. ஃபைசாந்தியரின் எண்ணம் குரித்து வெள்ளாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக் இனி ஆலயத்தில் பாடமாட்டார்கள் என்று அவர்கள் தரபிலிருந்து தெரிவிக்கப்பட்டது.

கெளசனால் “இனி வெள்ளாளர்கள் பாடமறுத்தால் நாடார்களிடம் பாடும்படி சொல்லுவேன்” என்று சொல்லிவிட்டுச் சென்றார். இது இருசாதியாரும் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீறுவதாகச்சொல்லி வெள்ளாளர்கள் ‘கெளசனால்’ மீது ஆத்திரம் கொண்டார்கள். அடுத்த பாவமன்னிப்பு கேட்க வெள்ளாளர்கள் யாரும் வரவில்லை, அதனால நாடார்கள் பாடினார்கள். அன்றுமாலை வழிபாட்டிற்கு வெள்ளாள ஆண்கள் கெள்சனால் மீது தாக்குதல் நடத்த திட்டம்போட்டார்கள். இதனால அவருக்கு பாதுகாப்பாக 100 நாடார்கள் சூழ்ந்துகொண்டு அவருடைய வீட்டிற்கு அழைத்துச்சென்றனர். இதையடுத்து கெள்சனால் ஆலயத்தில் வெள்ளாளர் நுழௌவதற்கு தடைவிதித்தார். 1877ம் ஆண்டு வடக்கன்குளம் தேவாலயத்தில்  வெள்ளாளர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை ரத்து செய்யவேண்டுமென்று மறைவட்ட தலைவர்கள் முடிவுசெய்தார்கள். திருனெல்வேலி மறைவட்டத்தலைவர் 18-11-1910 அன்று பிரிவினைச்சுவரை இடித்துத்தள்ளும்படி கெளசனாலுக்கு உத்த்ரவிட்டார். 22-11-1910 அன்று சாதிய ஆதிக்கத்தின் குறியீடாக விளங்கிய அந்த சுவர் உடைந்தது. ஆனால் எழுப்பப்பட்ட மனச்சுவர்களை இடிக்கமுடியவில்லை.

நீண்டகாலமாகத் தங்கள் சாதிய உயர்வின் குறியீடாக விளங்கிய பிரிவினைச்சுவர் இடிக்கப்பட்டதை வெள்ளாளர்களால் தாங்க்கிக்கொள்ள முடிய்வைல்லை. இதை எதிர்த்து மாவட்ட துணைநீதிமன்றத்தில் வழக்குதொடுத்தார்கள்.  தீர்ப்பு பிள்ளைமார்களுக்கு ஆதரவாக வந்தது, இத்தீர்ப்பை சேசு சபையினர் மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறியீடு செய்தார்கள். மாவட்டதுணை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்துசெய்வதாக அமைந்தது மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பு. மாவட்ட முன்சீப் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வெள்ளாளர் சார்பில் மனுச்செய்தார்கள். இவ்வழக்கை ஆராய்ந்த நேப்பியர் என்ற ஆங்கிலேயரும் சதாசிவ அய்யர் என்ற இந்தியரும்  பிரிவினை சுவரை இடித்தது சரியே என்று தீர்ப்பை வழங்கினார்கள்.

ஞாயிறு, 17 மார்ச், 2013

பரதேசி

வரலாறு, என்பது மன்னர்களின் பரம்பரைக்கதை அல்ல. அது, விவசாயத்தை அடிப்படை ஜீவனோபாயமாகக் கொண்ட உழவர்கள் தம் போராட்டங்களின், கிளர்ச்சிகளின் கதை. சுரண்டப்படுகிறவர்களின் கதை, வரலாறு என்பது சாமானிய மக்களின் வாழ்க்கைக்கதை -பிரபஞ்சன்


பாலா இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் “பரதேசி”, பிழைப்புக்காக வேறு இடம் தேடி செல்பவர்களெல்லாம் பரதேசிதான். அப்படி பிழைப்பு தேடி ஒரு ஊரே செல்கிறது. இந்திய சுதந்திரத்திற்கு முன்பு வெள்ளைக்காரர்கள் தாங்கள் கண்டுபிடித்த ‘தேநீர்’ பயிரை வளர்ப்பதற்கு ஏற்ற இடமான மேற்குத்தொடர்ச்சி மலையை தேர்ந்தெடுக்கிறார்கள். அங்கே தேயிலைப்பயிர் வள்ர்க்கவேண்டுமானால் மலைக்காடுகளை அழிக்கவேண்டும், அதற்கு ஏராளமான மனித உழைப்பு தேவை. வெள்ளைக்காரர்கள் ‘கங்காணி’ என்றழைக்கபடுகிற சூப்பர்வைசர்களைக் கொண்டு வேலைக்கு ஆள்பிடிக்கிறார்கள். பஞ்சம், பசியால் வாடுகிற அந்த கிராமத்து மக்களிடம் ‘தேன்’ தடவிய வார்த்தைகள் பேசி அட்வான்ஸ் கொடுத்து மலைக்கு கூட்டிவருகிறான். இப்படி வெள்ளைக்காரகள், பிரெஞ்சுக்காரர்கள் தங்களுடைய காலனிநாடுகளுக்கும் தமிழர்களை கொத்தடிமைகளாக கூட்டிக்கொண்டு போனார்கள் அவர்கள் இலங்கையில் மலையகத்தமிழர்களாகவும் பல தீவுகளில் சுதந்திரம் அடைந்த நாடுகளில் பிரஜையாகிப்போனார்கள்.
வால்பாறை தேயிலைத் தோட்டத்திற்கு ஒரு கிராமத்திலிருந்து ஒட்டுமொத்த மக்களும் பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள் கைக்குழந்தைகளுடன் கால்நடையாக செல்கிறார்கள். தேயிலைத்தோட்டத்தில் அவர்களுக்கான இருப்பிடம் என்பது பன்றிகள் கூட வாழத்தகுதியற்ற குடியிருப்புகள். சூரியன் உதிப்பற்கு முன்பே ’கொம்பு’ ஊதப்படுகிறது. அதுதான் வேலையின் தொடக்கம், மீண்டும் அந்தியாகும்வரை கடும் உழைப்பு. பெண்களென்றால் தேயிலை பறிக்கவேண்டும் ஒரு நாளைக்கு மூன்று கூடைக்கு குறையாமல் பறிக்கவேண்டும். ஆண்களுக்கு பாறைகள் உடைத்தல், தேயிலைத்தோட்டத்தை புதிதாக உண்டாக்கும் பணி. பெண்களிடம் வெள்ளைக்காரத்துரையின் பாலியல் சீண்டலும் உண்டு. புதிதாக வந்த ஒரு பெண்ணை சீண்டுகிற வெள்ளைக்காரனை அந்தப்பெண் உதைத்துவிடுகிறாள்.கோபம் கொண்ட வெள்ளைக்காரன் கங்காணியை அடி அடியென்று அடிக்கிறான், அடிவாங்கிய கங்காணி இன்னும் அதிகமாக அந்த பெண்ணையும் அவளது கணவனையும் அடிக்கிறான்.  அவர்களது உடையே கிழிந்த சாக்குப்பை, குளிருக்கு கிழிந்த கம்பளி. செருப்புகள் அற்ற அவர்களின் கால்களை அட்டைகள் ‘ரத்தம்’ உறிஞ்சுகிறது, மீதி ரத்தத்தை நிர்வாகம் அட்டையாக உறிஞ்சுகிறது. தினமும் அவர்களது வாழ்க்கை பயத்தால் நகர்கிறது.  கல்வியறிவு அற்ற அந்த மக்களுக்கு வரும் நோயை தீர்க்க ஒரு சாமியாடி தாயத்து கட்டி காசுபணம் பார்க்கிறான், இன்னொரு போலி டாக்டர் மருந்து தடவி காசு பிடுங்குகிறான்.

வருடத்திற்கொருமுறை கணக்குப்பார்த்து சம்பளம் கொடுத்து ஊருக்கு அனுப்புவார்கள் என்ற நம்பிக்கையில் உழைப்பாளிகள் பெட்டி, படுக்கையை எடுத்துக்கொண்டு சைட் ஆபீஸ்க்கு  ஒரு நாளில் வருகிறார்கள். கங்காணி வேலைபார்த்த நாள்கணக்கு, சம்பளம் அதில் கேப்பை, வெங்காயம், விறகு என கொஞ்சம் கடைக்காரன் பிடிங்குகிறான், டாக்டர் ஒரு கணக்கெழுதி வைத்தியச்செலவுக்கு பிடிங்கிக்கொள்கிறான், மீதிச்சம்பளத்திற்கு பதிலாக கடனே மிஞ்சுகிறது, அதைக் கழிப்பதற்கு இன்னும் சில ஆண்டுகள் இலவசமாக உழைக்கவேண்டும்,இப்படியே வருடங்கள் நகர்கின்றன. அங்கிருந்து தப்பிக்க வழியே கிடையாது, அடியாட்கள் இரவுகளில் ரோந்து செய்கிறார்கள், பிடிபட்டால் கடுமையான அடி உதை. சக வேலைக்காரனை அடியாட்கள் அடிக்கும்போது மற்றவர்கள் பயந்து ஒடுங்குகிறார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ரோமாபுரியில் அடிமைகள் ஸ்பார்ட்டகஸ் தலைமையில் கிளர்ச்சி செய்தார்கள். ஆனால் இங்கே ஒன்றும் நடக்கவில்லை.

தீடிரென்று ஒரு கொள்ளைநோய் வந்து நிறையபேர் செத்துப்போகிறார்கள், அவர்களுக்கு மருத்துவம் பார்க்க ஒரு ஏற்பாடும் இல்லை. நிர்வாகத்திற்கு எந்த கவலையும் இல்லை, செத்துப்போனவர்களை எரித்துவிட்டு புதிய பட்டினிபட்டாளத்தைக் கொண்டுவந்து நிரப்பிவிடலாம். நோய் பரவிதைத் தொடர்ந்து ஒரு டாக்டர் வருகிறார், அவர் வந்து இந்த மக்களுக்கு வைத்தியம் செய்வாரென்றால் எல்லார் தலையிலும் நாக்கிலும் + போட்டு மதமாற்றம் செய்கிறார்கள். நம்ம கதாநாயகன் எப்ப இந்த மக்களை அணிதிரட்டி போராடுவான் என்று பார்த்தால் ஊரிலிருந்து அவனுடைய தாலிகட்டாத பொண்டாட்டி, பிள்ளையும் மலைக்கு வந்துவிடும். கொத்தடிமை வாழ்க்கை அப்படியே எந்த மாற்றமில்லாமல் தொடருகி்றது. இது நிச்சயமாக வழக்கமான தமிழ் பொழுதுபோக்கு  சினிமா அல்ல மாறாக ஒரு வரலாற்று ஆவணப்படம். Red Tea என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம்.

வெள்ளி, 15 மார்ச், 2013

கேணி சந்திப்பில் முன்னால் நீதிபதி சந்துரு

சென்னையில் ஒவ்வொரு மாதத்தின் இரண்டாம் ஞாயிற்றிக்கிழமை ‘கேணி’ கூட்டத்தை பத்திரிக்கையாளர் ஞாநி தன்னுடைய வீட்டில் நடத்துகிறார்.  இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் தான் அதிகமாக பேசியிருக்கிறார்கள். சமீபத்தில் ஓய்வுபெற்ற நீதியரசர் அல்ல நீதிபதி சந்துரு அவர்கள் பங்கேற்று பேசினார்கள் வழக்கமாக வாசகர்  கலந்துரையாடல் நிகழ்ச்சியும் உண்டு. சமீபகாலமாக நீதிபதி சந்துரு பற்றி சில வழக்குகளை கேள்விப்பட்டிருந்தேன், அதில் குறிப்பாக சாதிக்கொரு சுடுகாட்டை முடிவுகட்டி தீர்ப்பு எழுதினார். குறிப்பாக அடித்தட்டு மக்கள், பெண்கள் தொழிலாளர்கள் போன்றவர்களுக்கு நியாயமான தீர்ப்பை வழங்கியுள்ளார், மனித உரிமை சம்மந்தமாக வழக்குகளில் அவர் வழக்கறிராக இருக்கும்போது வாதாடியிருக்கிறார், அதில் பொடாவுக்கு எதிராக, ராஜீவ் காந்தி கொலையாளிகள் என்று 4 பேருக்கு வாங்கிய தூக்கு தண்டனையை எதிர்த்து வாதாடியிருக்கிறார். இன்று நீதிமன்றத்தில் சில வழ்க்கறிஞர்கள் தொழில் தர்மத்தை மீறி காசுக்காக ரவுடித்தனம், கட்டப்பஞ்சாயத்து போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள், சங்கம் அமைப்பு என்ற பெயரில் அடிக்கடி வேலைநிறுத்தம், உள்ளூர், வெளியூர், குறிப்பாக இலங்கைப் பிரச்சனைக்காக அடிக்கடி வேலைநிறுத்தம் செய்கிறார்கள்.தாமதமான நீதி என்பது மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம், ஒரு வழக்கு இழுத்துக்கொண்டே போனால் சாமானியர்களால் வழக்கை நடத்தமுடியௌமா? அதற்கு வழக்கறிஞர்கள் துணைபோகலமா? இங்கே வேலைநிறுத்ததிற்கு எதிராக பேசவில்லை, அவர்களுடைய அறிவிக்கப்படாத வேலைநிறுத்தங்களைப் பற்றித்தான் சொல்கிறேன். இன்னும்மைப்பு ரீதியாக சேர்ந்துகொண்டு சிலருக்கு வாதாடமாட்டோம் என்கிறார்கள், இது இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது, அது அப்சல்குருவாக இருந்தாலும், அஜ்மல் கசாப் ஆக இருந்தாலும் அவர்களுக்கு சட்டௌதவி செய்வது என்பது இந்திய அரசியலமிப்புச்ச்ட்டம். அப்படி காஞ்சி மடம் பற்றி முரண்பாடான கருத்துகொண்ட சந்துரு அவர்கள் ஜெயேந்திரருக்காக வாதாடியதைக் குறிப்பிட்டார்.

அறிமுகம் செய்து பேசிய ஞாநி தனக்கும் சந்துரு அவர்களுக்கும் உள்ள நெடு நட்பை விளக்கினார், ஞாநி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிள் வேலைசெய்தபோது சங்கம் அமைத்ததால் வேலைநீக்கம் செய்யப்பட்டார், அந்த வழக்கை  வழக்கறிஞராக சந்துரு ஏற்று நடத்தி நியாயம் வாங்கிக்கொடுத்தார் என்பதைவிட ஒரு பைசா காசு வாங்கவில்லை, இது அவருடைய நண்பர் என்பதற்காக மட்டுமல்ல, அவருடைய கொள்கைப்பிடிப்பு. சந்துரு அவர்கள் பேசும்போது என்னுடைய நீதிமன்ற அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறேன் என்று பல வழக்குகளைப் பற்றி பேசினார்.

அவர் மதுரை நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கும்போது, மதுரை மாநகராட்சி மதுரை மாநராட்சியில் பணியிலிருக்கும்போது ஒரு கார்டனர் இறந்துவிட்டார், அவர் பணியிலிருக்கும்போது நகராட்சி கொடுத்த குவார்ட்டர்ஸ் என்று சொல்லப்பட்ட குடியிர்ப்பில் அவர் குடும்பம் தொடர்ந்தது, அதே  சமயம் அவருடைய மாணவி தினக்கூலியாக நாளொன்றுக்கு 60 ரூ சம்பளத்தில் வேலை செகிறார். கார்ப்பரேசன் கமிஷனர் வீட்டை காலி செய்ய நோட்டீஸ் கொடுத்தார், அந்தப்பெண்மணி ஸ்டே ஆர்டர் வாங்க நீதிமன்றத்தை அணுகினார், அதற்கு கமிசனர் அந்தப் பெண்ணிடம் என்னுடைய வேலைநேரத்தை வீணடிதாய் என்று நோட்டீஸ் கொடுத்திருக்கிறார். அந்த கார்ப்பரேசன் கமிஷனரை நீதிமன்றத்திற்கு வரவழைத்து நீதிமன்றத்திற்கு ஒரு பெண், ஜனநாயக நாட்டில் யாரும் நீதிமன்றத்தை அணுகலாம் நீங்கள் எப்படி தடுக்கலாம என்று 5000 ரூ அபராதம் விதித்திருக்கிறார்.

இன்னும், அங்கன்வாடி ஊழியரை மன்நலம் சரியில்லை என்று பணிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் முதலில் அந்த பெண்ணிற்கு மனநலம் சரியில்லை என்பது பொய், அப்படியே பணியில்ருக்கும்போது ஒருவருக்கும் விபத்து ஏற்பட்டால் வேலைநீக்கம் செய்யாமல் வேறு வேலை கொடுக்கவேண்டும் அல்லத் ஓய்வுபெறும்வரை ஊதிஒயம் வழங்கவேண்டும் என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறார், பெண்கள் பூசாரியாகலாமா? என்ற வழக்கு அகில இந்திய கவனத்தை பெற்றது. அவருடைய ஒரு தீர்ப்பால் 22000 தலித்களுக்கு அங்கன்வாடியில் இடஒதுக்கீடு கிடைத்தது மட்டுமல்ல, தலித் அங்கன்வாடி பெண் சமையல் செய்வதை ஏற்காத தனியார் பள்ளி நிர்வாகத்தை மாவட்டநிர்வாகம்  கையிலெடுத்து நடத்தவேண்டும் என்ற தீர்ப்பை அடுத்து பள்ளி நிர்வாகம் பணிந்துபோனது. சமபந்தி போஜனத்தை வருசத்திற்கொரு நாள் சடங்கு மாதிரி செய்யாமல் இந்த அங்கன்வாடியில் தலித்கள் ச்மைத்து அதை எல்லா மாணவகளும் சாப்பிட்டார்ல் அதுவே சமபந்தி யென்று வரலாற்றில் வ.வே.சு ஐயர் நடத்திய சேரன்மகதேவி விடுதியில் பிராமணர்கள் அல்லாதவர்களுக்கு தனி பந்தி என்பதை எதிர்த்து பெரியார் போராடியதை சுட்டிக்காட்டினார்.

ஒரு பெண் போலிஸ்துறையில் வேலைசெய்யும்போது அதிக (15நாள்) தொடர்விடுப்பு காரணமாக பணிநீக்கம், அந்த வழக்கில் அந்த பெண் சொல்கிறார், நான் பிராமண சமூகத்தை சார்ந்தவள், கணவனை இழந்த பிராமணப்பெண் வெளியே உடனே நடமாடக்கூடாது என்பது இந்த சமூகத்திற்குத் தெரியும். காவல்துறை அதிகாரிகள் என்னுடைய கணவனின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். அந்த வழக்கில் சமூக நிலைமையை விளக்கி தீர்ப்பு வழங்கியதால் மீண்டும் வேலை கிடைத்தது.

வக்கீல்கள் வேலைநிறுத்தம் அன்று ஒரு பெண்மணி, நீதிமன்றத்திற்கு வந்தார், அவர் செல்போன் உபயொகித்தார் என்பதற்காக வக்கில்கள் அந்தப்பெண் மீது நீதிமன்ற அவமதிப்புவழக்கு போட்டார்கள், தீர்ப்பை வழங்க பல நீதிபதிகள் வழக்கறிஞர்களுக்கு (ஒரு சில வக்கீல்கள் கூட்டம் சேர்த்துகொண்டு  குண்டாஸ் போல செயல்படுவது தமிழர்களுக்கு தெரியும்) பயந்து வழக்கை எடுத்துகொள்ள மறுத்தார்கள். சந்துரு அந்த வழக்கில் அந்த பெண்னை மொபைலில் போட்டோ எடுத்த வழக்கறிஞருக்கு அபராதம் விதித்தார். இன்னும் சில வழக்குகளில் வக்கீல்கள் இவருக்கெதிராக கோஷம் போட்ட சம்பவங்களும் உண்டு. ஆனால் சாமானியர்களுக்காக நீதிமன்றத்தில் உழைத்தார்.

ராஜீவ் கொலைவழக்கில் 4 பேருக்கு தூக்கு வழங்கியபின் கருணைமனு, தமிழக அமைச்சரவைக்கு வருகிறது அப்போதைய முதல்வர்  கருணாநிதி அப்படியே ஆளுநர பாத்திமா பீவிக்கு அனுப்பிவிட்டார். பாத்திமாபீவி அவர்கள் தள்ளுபடி செய்துவிட்டார். மீண்டும் அமைச்சரவைக்கு வருகிறது சோனியாகந்தி என்னுடைய குழந்தைகள்மாதிரி குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனுபவிக்கவேண்டாம் என்பதை அடுத்து நளினிக்கு மட்டும் கருணை கிடைத்தது. கருணாநிதி நினைத்திருந்தால் எல்லாருக்கும் கருணை வழங்கியிருக்காலாம் அதிகாரத்தில் இருக்கும்போது செய்யாமல் இப்போது மற்ற 3பேரின் தூக்குதண்டனையை பேசுவதை விமர்சித்தார். சமீபத்தில் நீதிமன்ற விழாவில் நீதிபதியாக இருந்த சந்துரு அவர்கள் கலந்துகொள்ளவில்லை, ஏனென்றால் நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்ட முதல்வர் ஜெயலலிதா தலைமையில் விழாவில் கலந்துகொள்ள விருப்பம் இல்லை என்று ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

இன்னும் எத்தனையோ சமூக முன்னேற்றத்திற்காக தீர்ப்புகளை வழங்கி ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு அவர்களுக்கு ஒரு சல்யூட்.

நிகழ்ச்சியின் காணொளியின் இணைப்பு கீழே...

http://www.youtube.com/watch?v=y5p0GYavVSE

Regards
Hariharan

செவ்வாய், 12 மார்ச், 2013

சில பகிர்வுகள்.


சமீபத்தில் குழுமத்தில் ஒரு நண்பர் ‘அறிஞர்’ அண்ணாவை அரைவேக்காடு என்றார், கண்மூடித்தனமான திராவிட எதிர்ப்பு கொண்டவர்களுடைய கருத்து அது. திராவிட இயக்கத்தின் நேர்மையாக வாழ்ந்த தலவர் அண்ணா,  அவரை அரசியல்வாதியாக அல்லாமல் பேச்சாளராக, எழுத்தாளராகவும் தமிழகம் அறியும். அவருடைய சிறப்பான  சிறுகதை ஒன்று ‘செவ்வாழை’ அந்த சிறுகதை 1949ல் எழுதினார். நிலப்பிரபுக்கள், நிலமில்லா விவசாயத்தொழிலாளிகள் பற்றிய கதை. அந்த விவசாயத்தொழிலாளி தன்னுடைய குழந்தைகளில் ஒன்றாக செவ்வாழைக்கன்றை பேணிவளர்த்து அவனுடைய ஏழை குழந்தைகள் அந்த வாழை குலைபோடுகிற நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் அதே பேச்சுதான் எப்போதும் மற்றசிறுவர்களுடன்.  அந்த ஏழை விவசாயி குடும்பத்துடன் பண்ணையாருக்கு உழைக்கிறார், எஞ்சிய நேரத்தில் தன்னுடைய சொந்த கொல்லையில் வள்ரும் வாழையை பராமறிக்கிறார். அந்த வாழை குலைதள்ளி பழுக்கின்ற நேரத்தில் பண்ணையார் வீட்டுக்கு வாழைப்பழம் தேவைப்படும்போது கணக்குப்பிள்ளை போட்டுக்கொடுத்துவிட்டான். கணக்குப்பிள்ளைகளின் வேலைகளில் அது முக்கியமான வேலை. விவசாயியால் மறுத்துப்பேசமுடியவில்லை, வீட்டில் எதிர்பார்த்து காத்திருந்த சிறார்கள் அது கிடைக்காமல் அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் அவர்களை அவனால் தேற்றமுடியவில்லை. அந்த குழந்தைகளுக்குத் தெரியுமா நிலப்பிரபுக்களுக்குத்தான் முதல் உரிமையென்று?  அதே வாழைப்பழத்தின் சில சீப்புகளை கணக்குப்பிள்ளை ‘சுட்டுவிடுகிறான்’ அந்த சுட்ட பழம் கடையில் விற்கிறது. விவசாயியின் குழந்தைகளால் அதை காசுகொடுத்து வாங்கமுடியவில்லை இப்படி முடிகிறது அந்தக்கதை.

நேற்று ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தபோது சொன்னார், தமிழகத்தில் பிராமணர்களை ஒதுக்கிவைக்கிறார்கள் கிராமங்களிலிருந்து அவர்கள் விரட்டப்பட்டார்கள், அரசில் எந்த சலுகையும் இல்லையென்றார். நான் இபடியொரு கதையை இப்போதுதான் கேள்விப்படுகிறென். சமூகத்தில் முன்னேறிய பிரிவினர் நிலவுடமைச்சமூகத்தில் அதிக விவசாய நிலங்களை வைத்திருந்தார்கள். இன்னும் பலர் கிராமங்களில் கோவில் ஊழியம், கல்யாணம், மற்ற விசேசங்களில் சடங்கு செய்து விவசாயிகளை நம்பி வாழ்ந்தவர்கள் ஒரு பக்கம், ஆனால் கல்வியில் முன்னேறியவர்களுக்கு கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு எப்படி கிடைக்கும், நகரத்திற்கு புதிய வாய்ப்புகளுக்கு குடிபெயர்ந்தார்கள். பத்தாண்டுகளுக்கு முன்புவரை அரசாங்கத்தின் நிர்வாகம், நீதி போன்ற உயர்பதவிகளில் அவர்கள் நிறைந்திருந்தார்கள், இப்போது பிற்படுத்தப்பட்ட பிரிவினர் சமூகநீதியின் அடிப்படையில் கிடைத்த இடஒதுக்கீட்டின் விளைவாகவும் அவர்களுக்கு கிடைக்கவேண்டிய இடத்தை பிடித்தார்கள். இன்னும் அந்த விகித்தத்தை தொடமுடியாமல் இருப்பவர்கள் பட்டியல்சாதியினர் தான். ஜெண்டில்மேன் கதையை வைத்துக்கொண்டு எங்கோ ஒருசிலர் வறுமையில் வாடுவதை அந்த சமூகமே இடஒதுக்கீட்டின் விளைவால் பாதிக்கப்பட்டதாக பொதுப்புத்தியை உருவாக்குகிறார்கள் சிலர். இன்னும் சிலர் பிற்படுத்தப்பட்ட சாதியின் சலுகைகளை அனுபவித்துக்கொண்டே தலித்கள் பெறும் இடஒதுக்கீட்டை பொறுக்கமுடியாமல் இடஒதுக்கீட்டை எதிர்க்கிறார்கள். அதே நண்பர் இன்னும் சொன்னார், கிராமங்களில் இப்போது நிலைமை மாறிவிட்டது இப்போது தாழ்த்தப்பட்டவர்கள் மற்ற சாதியினரை ஒடுக்குவதாகவும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை வைத்துக்கொண்டு மற்ற சமூகத்தவரை மிரட்டுவதாகவும் கதையைச் சொன்னார்.

இந்தியாவில் தினந்தோறும் தலித்கள் மீதான வன்முறை நடந்துகொ’ண்டெயிருக்கிறது, தமிழகத்தில் சமீபத்தில் தலித் மக்களுக்கெதிரான தர்மபுரி, கடலூர் வன்முறை ஒரு சான்று.  எங்கோ ஒன்று இரண்டு இடங்களில் தலித்கள் பிறசாதியினர்மீது வன்முறை நடத்துகிறார்கள் என்பதற்காக ஒட்டுமொத்தமாக சொல்லக்கூடாது. ncrb ன் ஆண்டறிக்கை 2011ல் தலித் மக்கள்மீது நடத்தப்பட்ட வன்செயல்கள் பதிவுசெய்யப்பட்டது மட்டும் 33719. வடமாநிலங்களில் அதிகமான வன்முறை நிகழ்த்தப்படுகிறது. உ.பி, ரஜஸ்தான், பீகார், மத்தியப்பிரதேசம் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் தலித்களின்மீது அதிகமாக வன்முறை நிகழ்த்தப்படுகிறது. அரசாங்கத்தில் அதிகமான இடஒதுக்கீட்டை தலித்கள் அனுபவிக்கிறார்கள் எனும்போது குரூப் 4 எனப்படுகிற கடைநிலை, துப்புரவு பணியை பிற்படுத்தப்பட்ட, முன்னேறிய சாதியினர் செய்யமுன்வருவதில்லை. அரசாங்க உத்தியோகமே கொடுத்தாலும் தலித் அல்லாத முன்னேறிய சாதியினர் சாக்கடை அள்ள முன்வருவார்களா? நான் சென்னையில் வேலைபார்த்த நிறுவந்த்தில் சுமார் 250 பேரில் தாழ்த்தப்பட்ட சாதியினர் ஓரிலக்கத்தில் தான் இருந்தார்கள். பெரும்பாலான தனியார் நிறுவனக்களில் நேரடி வேலைவாய்ப்பில் இதுதான் நிலைமை. சாதி அடிப்படியில் மக்கள்தொகை பொருளாதாரம் வாழ்க்கைநிலை கணக்கிடபடவேண்டும். அப்போது தெரியும்.

வெள்ளி, 8 மார்ச், 2013

ஹுகோ சாவேஸ் மறைந்தார்

வெனிசுலாவின் ஜனாதிபதி சாவேஸ் இரண்டு வருடங்களாக புற்றுநோயுடன் மக்கள் பணியாற்றியார் கடைசியில் மரணம் அவரை வென்றுவிட்டது, ஆனால் கோடானகோடி மக்கள் நெஞ்சங்களிலிருந்து சாவேஸை நீக்கமுடியாது. தென் அமெரிக்காவின் அங்கமான   வெனிசுலாவை   சென்ற நூற்றாண்டு வரை உலக்த்திற்கே தெரியாது, அந்த  நாட்டை இன்று உலகம் முழுவதும் பேசுவதற்கு காரணம் ஹூகோ சாவேஸ் எனும் மனிதர் தான் காரணம். அவர் மறைந்த நாளிலிருந்து இன்று வரை உலகத்தின் முக்கிய ஊடகங்களில் சாவேஸின் மறைவு பேசப்படுகிறது.  “யூரோ நியூஸ்” தொலைக்காட்சி ஊடகம் அன்னாரின் இறுதி ஊர்வலத்தை நேரடி ஒளிபரப்பு செய்கிறது. எப்படி கோடானகோடி மக்களின் மனதில் இடம் பிடித்தார்?

மேற்கத்திய ஊடகங்கள் அவரை Firebrand leader என்றழைக்கிறார்கள்! அவர் உண்மையை அச்சமில்லாமல் பேசுகிறார். அதனால் அந்த அடைமொழி வழங்குகிறார்கள்.  2010ம் ஆண்டில் அவர் பிபிசிக்கு அளித்த "hardtalk" பேட்டியை பார்த்தேன். அது ஸ்டீபனுடன் உரையாடல். ஸ்டீபனுடைய முதல் கேள்வியே “உங்கள் நாட்டில் மனித உரிமைகள் மீறப்படுகின்றனவே?” என்பதுதான். மேற்கத்திய நாடுகள் தங்களுக்கு பிடிக்காத தங்களுடைய பன்னாட்டு நிறுவனக்களின் நலன்களுக்கு எதிராக உள்ள ஒவ்வொரு நாட்டிலும் “மனித உரிமை மீறல்களை” கண்டுபிடிப்பார்கள். இந்த கேள்விக்கு சரியாக பதிலளித்தார்., அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈராக்கில் பெண்கள், குழந்தைகள் என்றும் பாராமல் இலட்சணக்கணக்கில் கொன்று குவித்தார்களே அவர்கள் தான் வெனிசுலாவை பார்த்து மனிதௌரிமைகள் மீறப்படுகின்றன என்கிறார்கள் என்றார்.  உங்கள் நாட்டின் பொருளாதரம் மோசமடைந்து வருகிறது, பணவீக்கம் அதிகரிக்கிறது அதனால் உங்களின் சோசலிசம் தோல்வி எனலாமா என்ற கேள்விக்கு, அமெரிக்க ஐரோப்பாவில் தற்போது என்ன வாழுதாம்? அங்கெ ஏற்பட்டுள்ள் வீழ்ச்சி எங்களையும் பாதிக்கத்தான் செய்யும் ஆனால் நாங்கள் முன்னேறுவோம் என்றார்.ஒரு கேள்விக்கு ஸ்டீபனை எதிர்கேள்வி கேட்டார், ஸ்டீபனால் ஒன்றும் சொல்லமுடியவில்லை. லத்தின் அமெரிக்க நாடுகளை ஒன்றிணைக்கிறீர்கள் ஆனால் அதில் தென் அமெரிக்க நாடுகள் எல்லாம்சேரவில்லை குறிப்பாக உங்கள் அண்டை நாடான கொலம்பியாவுடன் எல்லையில் பதற்றம் நிலவுகிறதே? அதர்கு பதிலளித்த சாவேஸ், 19, 20ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பா எப்படி  இருந்தது? எங்கும் ரத்தவெறி! இரண்டாம் உலக்ப்போரில் ஐரோப்பாவில் ஒவ்வோரு நாடும் பக்கத்து நாட்டை ஆக்ரமித்தார்கள் , எத்தனை மில்லியண் மக்கள் அநியாயமாக கொல்லப்பட்டார்கள். இன்று மாறவில்லையா? அதுபோல தென் அமெரிக்காவிலும் நிலைமை மாறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். 2012ல் எதிர்கொள்ளவுள்ள தேர்தலில் வெற்றி பெறுவீர்களா? என்ற கேள்விக்கு இன்னும் 21/2 ஆண்டுகள் உள்ளன, அதற்குள் என்ன நடக்கும் என்பது எனக்குத் தெரியாது  மக்கள் தான் தீர்மானிப்பார்கள் ,இங்கே நடக்கின்ற தேர்தல்கள் நெர்மையாக நடக்கின்றன என்பதை உலகம் அறியும். நான் குடியரசுத்தலைவராக இப்போது பணியாற்றுகிறேன்,  தேர்தலில் தோல்வி ஏற்பட்டால் ஓர் ஆசிரியனாக இந்த நாட்டின் முன்னேற்றத்திற்கு என்னால் என்ன வேலை செய்யமுடியுமோ அதை செய்வேன் என்றார் சாவேஸ்.

எண்ணெய் வளமிக்க வெனிசூலா அதைப்பயன்படுத்தி மக்கள் நலனில் செலவிடுகிறது, கடந்த 10 ஆண்டுகளில் 770 பில்லியண் டாலர்கள் மக்கள் நலனிற்காக செலவிடப்பட்டுள்ளன. வறுமை ஒழிப்பு 40 சதத்திலிருந்து 7 சதமாக குறைந்துள்ளது. கியூபாவிற்கு மலிவான கச்சா எண்னெய் வழங்கப்படுகிறது பதிலாக அங்கேயிருந்து மருத்துவர்கள் வெனிசூலாவில் மக்கள் பணியாற்றுகிறார்கள். அவர் எங்கு சென்றாலும் எளிதாக மக்களுடன் ஐக்கியமாகிவிடுவார். ஒரு நாட்டின் ஜனாதிபதி ஒரு ராணுவ சிப்பாயுடன் கட்டித்தழுவி அன்பை தெரிவிப்பார்.  இந்தியாவிற்கு 2005ம் ஆண்டில் வந்தபோது கல்கத்தா நகரில் திறந்த ஜீப்பில் அப்போதைய மாநில முதல்வர் புத்ததேவுடன் வலம்வந்தார், இப்படியொரு மகத்தான வரவேற்பை நான் பிரேசிலுக்கு அடுத்தப்டியாக இந்தியாவில்தான் பார்க்கிறேன் என்றார். சாவேஸின் மரணம் வெனிசுலாவிற்கும், லத்தின் அமெரிக்க மக்களுக்குமான இழப்புமட்டுமல்ல ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் கோடானகோடி மக்களுக்குமான பேரிழப்பு.

சனி, 2 மார்ச், 2013

Patrice Lumumba

லுமும்பாவைப் பற்றிய ஆவணப்படம் 2000ம் ஆண்டு வெளிவந்தது, சமீபத்தில் ஒரு வலைப்பூ மூலமாக அந்த படத்தை பார்த்தேன். அவசியம் காண்வேண்டிய ஆவணப்படம் இது, நேர்மையான ஒரு பிரதமர், தமது சொந்த மக்களின் நலனிற்காக ஏகாதிபத்தியத்தை எதிர்கொண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற 200வது நாளில் சுட்டுக்கொல்லப்பட்டார். ஏகாதிபத்தியம் எல்லா நாடுகளிலும் தனக்கு சாதகமான அரசியல்வாதிகளை வென்றெடுக்கிறது அவர்களின் நலனிற்கு எதிரானவர்களை ஆட்சியிலிருந்து இறக்குவதற்கு அந்தந்த நாட்டில் அவர்களோடு ஒத்துழைக்கிற அரசியல் கட்சிகளுக்கு உதவுகிறார்கள். ராணுவ ஜென்ரல்களை விலைக்கு வாங்குகிறார்கள். அப்படி ஏகாதிபத்தியம் மக்களாட்சியை ரத்தவெள்ளத்தில் மூழ்கடித்த கதை. லுமும்பாவை கொல்வதற்கு அவரால் ராணுவத்தில் உயர்பதவியில் நியமிக்கப்பட்ட மொபுடு கைப்பாவையாகிறான், அவனுடைய சுவிஸ் வங்கிகணக்குகளில ஊழல் செய்த பணம் 15 பில்லியன் டாலர்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்பிரிக்காவின் காங்கோ நாடு 1885ம் ஆண்டிலிருந்து அடிமை நாடாக இருக்கிறது, ஐரோப்பாவில் சின்னஞ்சிறிய நாடான பெல்ஜியம் அதை அடிமைப்படுத்திவைத்திருந்தது, காங்கோவில் ஏராளமான இயற்கை வளங்கள் கிடைக்கின்றன, தாமிரவயல்கள், வைரச்சுரங்கம், ரப்பர் காடுகள், கோபால்ட், டைட்டானியம் அங்கு கிடைக்கிற முக்கிய பொருட்கள். இந்தியாவை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் கொள்ளையடித்ததைப் போல் ஆப்பிரிக்காவை ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகள் கூறுபோட்டார்கள். இரண்டாம உலகப்போருக்குப் பின்னால் காலனிநாடுகளில் தேசிய இயக்கங்களின் விடுதலை போராட்டம் வலுவடைந்தது.  காங்கோவிலும் பெல்ஜிய ஆட்சிக்கு எதிராக மக்கள் கடுமையான அடக்குமுறையை எதிர்கொண்டு விடுதலைக்காக போராடினார்கள். 1958ல் காங்கோவின் தேசிய காங்கோலிச இயக்கத்தின் தலைவராக தேர்தெடுக்கப்படுகிறார். சாதாரண விவசாயிக்கு மகனாகப் பிறந்த பாட்ரிச் லுமும்பா பள்ளிக்கல்வியை முடித்துவிட்டு தபால்துறையில் கிளார்க் வேலை பார்க்கிறார். 1950களில் காங்கோவில் பள்ளிக்கல்வியை தாண்டுவதே பெரியவிசயம், மொத்தத்தில் 100பேர் கல்லூரிப்படிப்பை கடந்திருப்பார்கள்.  போராட்டக்காரர்களை அடக்கி ஒடுக்கி சிறையில் தள்ளுகிறது பெல்ஜிய அரசு. காலனி நிர்வாகத்தில் அரசு அதிகாரிகள், காவல்துறை, ராணுவத்தில் உயர்ந்த பதவியில் பெல்ஜியத்தினர் இருந்தார்கள். 1958ல் லுமும்பா சிறையில் அடைக்கப்படுகிறார்.

1959ல் மக்கள் இயக்கம் மேலும் வலுவடைதற்கு முன்னால் பெயரளவில் சுதந்திரம் வழங்க பெல்ஜியம் முன்வருகிறது, அதற்கான வட்டமேஜை மாநாடு பிரசல்ஸ் நகரில் நடைபெற உள்ளதால் அதில் விடுதலை இயக்கத்தின் தலைவர் என்ற முறையில் பிரதிநிதியாக கலந்துகொள்வதர்கு சிறையிலிருந்து விடுவிக்கப்படுகிறார். மாநாட்டில் 1960 ஜூன் மாதம் 30தேதி சுதந்திரம் வழங்க பெல்ஜியம் ஒப்புக்கொண்டது. அச்சமயத்தில் எந்த இயக்கத்திடம் ஆட்சியை ஒப்படைப்பது என்ற வாக்கெடுப்பில் லுமும்பாவின் தேசிய காங்கோலிச இயக்கம் அதிக வாக்குகளை பெறுகிறது, ஆனாலும் அவர் நாட்டின் பிரதமராகி  ஆட்சிப்பொறுப்பில் இரண்டாம் இடத்தை வகித்தார். பெல்ஜியத்தின் ஆளும் வர்க்கம் சுதந்திர காங்கோ பெல்ஜியத்தின் அதிகாரத்தையும், ராணுவத்தையும், பெல்ஜிய நிதியையும் சார்ந்திருக்குமாறு விரும்பினார்கள்.

சுதந்திரம் வழங்கும் நாளில் பெல்ஜிய மன்னன் ஒன்றாம் பதோயின் கலந்துகொள்ள வந்திருந்தான், கால்னிஆதிக்கவாதிகளும், அடிமைப்பட்டவர்களும் பரஸ்பரம் புகழுரைத்துக்கொண்டு பழைய நடைமுறை அப்படியே தொடரவேண்டும் என்று விரும்பினான், அவனது பேச்சில் “கனவான்களே, நீங்கள் நம்பிக்கை வைக்கத் தகுந்தவர்கள் என நிரூபிப்பது இனி உங்கள் பொறுப்பு! ” என்றான்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட லுமும்பா மேடையேறியதும் அரங்கில் அம்ர்ந்திருந்த காங்கோ மக்கள் எழுச்சியும் உற்சாகவும் கொள்ளத்துவங்கினார்கள். பெல்ஜியத்தின் கீழ் தம்மக்கள் அனுபவித்த இன்னல்களையும், அடிமைகாளாக நடத்தப்பட்டத்தையும் எதிர்கால  நாட்டில் இனி யாரும் அடிமையில்லை, கறுப்பர்களும் பெல்ஜியர்களும் சமம் என்று தமது எதிர்கால எண்ணங்களயும் லுமும்பா எடுத்துரைத்தார், அவரது பேச்சு வானொலியில் ஒலிபரப்பு செய்யப்பட்டது.  அவரது பேச்சைக் கேட்ட பெல்ஜிய அரசனுக்கு பேயரைந்தது போலிருந்தது. ஆட்சிப்பொறுப்பேற்ற பின்னர் காங்கோ மக்கள் சிலர் பெல்ஜியர்களை தாக்கினார்கள், காங்கோ சிப்பாய்கள் பெல்ஜிய ராணுவ அதிகாரிகளிடம் அடிபணிய மறுத்தார்கள். பெல்ஜிய ராணுவ அதிகாரிகளோ காங்கொவின் புதிய அமைச்சரவையின் உத்தரவை சட்டைசெய்யவில்லை. இப்படி ஏராளமான பிரச்சனைகளை லுமும்பா சந்தித்தார். ஒருமுறை காங்கோ சிப்பாய்கள் பிரதம அலுவலக்கத்தை முற்றுகையிட்டு பெல்ஜிய ராணுவத்திற்கு அடிபணிய மாட்டோம் என்று மிரட்டிவிட்டு சென்றார்கள், மறுநாள் ராணுவத்தின் ஜென்ரலான பெல்ஜியத்தவரை பதவிவிலகுமாறு வலுயுறுத்தினார் அவன் மறுத்துப்பேசவும் பெல்ஜிய தூதரை வரவழைத்து உடனே பெல்ஜிய ஜெனரல் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று கட்டளையிட்டார். அந்த பதவிக்கு காங்கோ ராணுவத்தில் சிப்பாயாக பணிபுரிந்த மொபுடு கர்னலாக லுமும்பாவால் நியமிக்கப்பட்டான். இந்த மொபுடு தான் பின்னர் அமெரிக்க கைக்கூலியாக மாறி லுமும்பாவை வீட்டுச்சிறையில் வைத்தான்.

ஏற்கனவே நாட்டின் பிரதமருக்கும் குடிய்ரசுத்தலைவரான ஜோசப் கெசவுபு க்கும் கொள்கை வேறுபாடு இருந்தது. காங்கோவின் தெற்குப் பிராந்தியமான கடாங்கா இயற்கைவளமிக்க பகுதி. அந்தப் பகுதியை சுரங்க நிறுவனங்கள், தங்களது நம்பகமான அரசியல்வாதிகளின் கையில் அரசியல் அதிகாரம் நீடிக்க விரும்பியது, அவர்களது உள்ளூர் கைப்பொம்மையான மோயீஸ் ஷோம்பே என்பவன், தொலைதூர கடாங்கா மாகாணம் காங்கோவிடமிருந்து விடுதலையடைந்து விட்டதாக, லுமும்பா பதவிக்கு வந்த ஒரு மாதத்திலேயே அறிவித்தான். பிரதமர் லுமும்பாவும் குடியரசுத்தலைவரும் கடாங்காவிர்கு செல்லும்போது அவர்களது விமானத்தை தரையிறங்க அனுமதி மறுத்தான் மோயீஸ். லுமும்பா விமானியை நீ தரையிரக்கு என்றபோது நான் பெல்ஜியன் எனது அர்சாங்கம் சொல்வதைத்தான் கேட்பேன் என்றான். ஒருவாறு தரையிரக்கபட்ட பின்னர் அங்கே பெல்ஜிய ராணுவம் குவிக்கப்பட்டதைக் கண்டார்கள்.

இதற்கிடையே அமெரிக்க உளவாளிகள் சில அரசியல்வாதிகளையும், ராணுவ அதிகாரிகளையும் ஏஜெண்டுகளாக வென்றெடுத்தார்கள், அதில் முக்கியமானவன் ஜோசப் டிசியரே மொபுடு.  லுமும்பாவிற்கு நாட்டின் நிலைமை புரிந்தது, கைமீறிபோய்விட்டது. தங்களுக்கான ஆயுதம் தாங்கிய குழுவை உருவாக்காதது மிகப்பெரிய தவறாக உணர்ந்தார். பிரிவினை சக்திகளை முறியடிக்க ஐநாவின் உதவியை நாடினார், ஆனால் பயனளிக்கவில்லை. சோவியத்தின் உதவியை நாடப்போவதாக குடியரசுத்தலவரிடம் சொன்னார், இதற்கிடையில் ஊடகங்கள் லுமும்பாவை கம்யூனிஸ்ட் முத்திரை குத்தியது, சோவியத்தின் கைப்பாவையாக செயல்படுகிறார் என்று பத்திரிக்கைகள் எழுதின. நாடாளுமன்றத்தில் காரசார்மான விவாதங்கள் நடைபெற்றன.

அமெரிக்க ஏஜெண்டாக மாறிய ராணுவ ஜெனரல் மொபுடு 1960ம் ஆண்டு செப்டம்பரில் அரசியல் கட்சிகளை தடைசெய்து உத்தரவு செய்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதுபோன்ற சூழலை ஏற்படுத்தினான். குடியரசுத்தலவர் பிரதமரை பதவிநீக்கம் செய்ததாகவும் பிரதமர் லுமும்பாவை வீட்டுச்சிறையில் அடைத்தான். 1960 ஆண்டு நவம்பர் 27ம் தேதியன்று ஒரு மழையிரவில் வீட்டுக்காவலில்இருந்து தப்பி தன்னுடைய செல்வாக்குள்ள ஸ்டான்லிவில்லெ பகுதிக்கு தப்பியோட முயன்றார், ஆனால் மொபுடுவின் ஆட்களால் சங்குரு நதிக்கரையில் டிசம்பர் 2ம்தேதி கைதுசெய்யப்பட்டார். அங்கிருந்த ஐநா படைகள் அமெரிக்க ஆணைக்கு இணங்க வெறுமனே வேடிக்கை பார்த்தன.


கைதுசெய்யப்பட்ட லுமும்பாவும் சக அமைச்சரவை சகாக்கள் இருவரும் பெல்ஜியத்துருப்புக்களின் கட்டுப்பாட்டில் சித்ரவதைக்குள்ளானார்கள். பெல்ஜியாவும் அமெரிக்காவும் லுமும்பாவை சுட்டுக்கொள்வதற்கு ஏற்பாடுசெய்தன. கடைசியில ஏகாதிபத்தியத்தின் கைப்பவையான ஷோம்பே வின் கட்டுப்பாட்டிலுள்ள கடாங்கா மாகாணத்த்இற்கு அனுப்பப்பட்டார். சிறையிலிருந்து தான் கொல்லப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன் தன்னுடைய மனைவிக்கு எழுதிய கடிதத்தில்,

 “எந்தவொரு அடக்குமுறையும், சித்திரவதையும் என்னைப் பணிய வைக்க முடிந்ததில்லை. ஏனெனில், அடிமைப்பட்டும், தலை குனிந்தும் எனது புனிதமான கொள்கைகளுக்கு துரோகம் செய்தும் வாழ்வதை விட, எனது நாட்டின் எதிர்காலத்தின் மீது நம்பிக்கையைக் கைவிடாமலும், அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாமலும் மரிக்கவே நான் விரும்புகிறேன். எனது கூற்றை வரலாறு ஒரு நாள் சரியென நிரூபிக்கும். அந்த வரலாறு பிரஸ்ஸல்சும், பாரிசும், வாஷிங்டனும், ஐ.நாவும் கற்பிக்கும் வரலாறாக இராது. மாறாக காலனியாதிக்கத்திலிருந்தும், அதன் கைப்பொம்மைகளிலிருந்து விடுபட்ட ஒடுக்கப்பட்ட நாட்டு மக்களின் வரலாறாக இருக்கும்.” இவ்வாறு எழுதினார்.

ஜெனரல் மொபுடு ஆட்சியைக் கைப்பற்றினான், அரசாங்க விழாவில் கான்கோவின் தேசிய நாயகன் “லுமும்பா” என்றான், அதே சமயம் 1960ம் ஆண்டு ஜனவரி 18ம்தேதி லுமும்பாவும் அவரது இரு தோழர்களும் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். தடயங்களை அழிப்பதற்கு உடல்களை ரம்பத்தால் அறுத்து அமிலக்கரைசலில் தீயிட்டு எரித்தார்கள். உலகெங்கும் ஏகாதிபத்தியம் விலைக்கு வாங்கமுடியாத மக்கள் தலைவர்களை  கொலைசெய்தார்கள், அதில் பாட்ரிச் லுமும்பா கடைசிவரை அனைத்து சித்திரவதைகளையும் உறுதியோடு எதிர்கொண்டதாகவும், தனது மரண நொடியிலும் கூட கொலையாளிகளை தைரியமாக எதிர்கொண்டதாகவும் பிற்காலத்தில் அவரது கொலையாளிகள் ஒப்புக் கொண்டனர்.

அவர் கொல்லப்பட்டபோது அவருடைய வயது 35, இளம் வயதில் ஒரு நாட்டிற்கு பிரதமராவது ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு அடுத்தபடியாக லுமும்பா இருந்தார்.

வெள்ளி, 1 மார்ச், 2013

உறிஞ்சப்படும் தண்ணீர்!

கடந்த வாரத்தில் மக்கள் நலனை முன்வைத்தும் எழுதும் பத்திரிக்கையாளர் சாய்நாத் அவர்கள் `தண்ணீர்` பற்றி `the hindu' வில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். தண்ணீர் தட்டுபாடு நிலவிவருகிற காலத்தில் மேல்தட்டு வர்க்கத்தினருக்காக வீடுகள், நீச்சல் குளங்களுடன் கட்டப்பட்டுவருகின்றன. அதேபோல் வாட்டர் தீம் பார்க்குகள், கோல்ப் மைதானங்கள் அமைக்கப்படுகின்றன. இதெல்லாம் பணக்காரர்களுக்கு., அவர்களால் தண்ணீரை எந்த விலை கொடுத்தும் வாங்கம்முடியும். ஆனால் சாமானிய இந்தியர்கள், மக்களால் நகராட்சி குடிநீர் லாரிகளின் வரவை எதிர்பார்த்து காத்திருந்து வாழ்க்கை நடத்துபவர்கள், தண்ணீர் இல்லாமல் பயிர்செய்ய முடியாமல் வறுமைவாடும் விவசயிகளும் உள்ள நாடு இந்தியா என்பதை காண்வேண்டியதிருக்கிறது. மஹாராஷ்டிரா மாநிலத்தின் நிலைமை ஆராய்ந்து எழுதிய கட்டுரையில் மாநிலஅரசு அறிவித்துள்ளபடி 7000 கிராமங்கள் வறட்சியின் பிடியில் சிக்கியிருக்கிறது, மாநிலத்தின் நீர்த்தேக்கத்தின் நீரின் அளவு 15 விழுக்காட்டிற்கும் கீழெ, இந்த வறட்சி `மனிதனால் உண்டாக்கப்பட்டது` என்கிறார்.

ஒவ்வொரு மாநிலத்திலும் விவசாயத்திற்கும் மக்களின் குடிநீருக்கும் தேவையான தண்ணீரை தொழிற்சாலைக்கு திசைதிருப்புகிறார்கள், இது தேவையில்லை என்றால் எப்படி வெலைவாய்ப்பு உருவாகும் என்ற கேள்வி எழுகிறது. அந்நிய செலவானியை ஈட்டிய தமிழகத்தின் தோல் தொழிற்சாலைகளை பாலாற்றை பாழ் படுத்தியது, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் நொய்யல் ஆறு சுத்திகரிக்கப்படாத கழிவுநீரால் மாசுபடுத்துப்பட்டு விளைநிலங்கள் களர் நிலங்களாக மாற்றப்பட்டன. இப்படி ஏற்றுமதி, அந்நிய செலவாணி வெலைவாய்ப்பு என்கிற காரணங்களால் இயற்கை சீரழிவதோடு எதிர்கால சந்ததியன்ருக்கு தேவையான இயற்கை வளங்களை அழிக்கிறோம். 2005ம் ஆண்டில் நாக்பூர் அருகே ஒரு 'Fun & Food Village Water & Amusement Park' தொடங்கபட்டது அதில் 18 வகையான தண்ணீர் சறுக்கு விளையாட்டுக்கள் இருக்கின்றன,கோடையில் 47 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கொண்ட பூமியில் செயற்கையாக பனியை கேளிக்கைக்காக உருவாக்குகிறார்கள், இதற்கு எவ்வளவு மின்சாரம் பிடிக்கும், அதே பகுதியில் 15 மணிநேரம் வரை மின்சாரம் இல்லாமல் தவிப்பவர்களும் இருக்கிறார்கள். புதிதாக `லவாசா` என்ற பகுதியில் ரியல் எஸ்டேட் உருவாக்கியிருக்கிறார்கள்,  செல்வந்தர்களுக்கென்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஹில் சிட்டி  அது. அங்கே 0.87 டிஎம்சி கொள்ளளவு கிட்டத்தட்ட 24.6 பில்லியன் லிட்டர் தண்ணீரை தேக்கிவைக்க அனுமதி வான்கியிருக்கிறார்கள்.

மஹா. மாநிலத்தில் புதிதாக கோல்ஃப் விளையாட்டு மைதானக்கள் உருவாகிவருகின்றன, இதுவரை 22 மைதானங்கள் இருக்கின்றனவாம், அந்த மைதானத்திற்கு அதிகமான நீர் தேவைப்படுவதோடு பூச்சிக்கொல்லி மருந்துகள் அதிகமாக தெளிக்கப்படுகின்றன. இது நிலத்தடி நீரை மாசுபடுத்துகிறது. கர்நாடக மாநிலத்திலிருந்து காவிரியில் தண்ணீர் திறந்துவிட மறுக்கிற போது 'Sharing distress' என்று பேசுகிறோம், ஆனால் ஏற்றுமதி விவசாயத்திற்கும் ஏற்றுமதி பொருட்களை உருவாக்கும் தொழிற்சாலைகளுக்கும் அரசாங்கம் ஊக்கப்படுத்துகிறது. குளிர்பானங்கள் தயாரிக்க பெப்சி, கோக் நிறுவனக்கள் ஆறுகளை கையூட்டு மூலம் வசப்படுத்தி ஆழ்துளை கிணறுகள் அமைத்து நிலத்தடி நீரை உற்ஞ்சி அதே மக்களுக்கு மினரல் வாட்டராக விற்கிறார்கள். வசதிபெற்றவர்கள் காற்றையும் கூட வாங்கிவிடலாம், அரசாங்கம் சாமானியர்களைப் பற்றி எப்போது கவலைப்பட்டது. தமிழகத்தில் மின் தட்டுப்படு நிலவியபோது சென்னையில் ஒருமணிநேரம்கூட மின் தடையில்லை ஆனால் கிராமப்புறங்களில் 14- 16 மணி நேரம் மின் தடை நிலவியது. சென்னைக்குள்ளும் நிலைமை ஒரே மாதிரி இருக்காது தென்சென்னை மத்தியசென்னையில் சாலைகள், குடிநீர் வசதிகள்  மாதிரி தொழிலாளார்கள் அதிகம் வசிக்கும் வடசென்னையில் இருக்காது. பல பத்தாண்டுகளாக பொருளாதாரத்தடையை சந்தித்துவருகிற கியூபாவில் தேவைப்படாத மின்விளக்குகளை அணைத்துவிடுங்கள் என்றால் சாரி அணைத்துவிடுகிறென் என்பார்களாம், அதே மாதிரி வளர்ந்த நாடுகளின் மக்களிடம் சொன்னால் why i pay money for that என்பார்களாம்.


பொருளாதார ஆய்வறிக்கை 2011-12ன் படி எந்த மாநிலத்திலும் விவசாயத்திற்கான தண்ணீர் வசதி கடந்த பத்தாண்டுகளில் 0.1 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது, தாணிய உற்பத்தி 23 சதவீதம் வீழ்ச்சியடைந்திருக்கிறது. ஒரு ஏக்கர் சர்க்கரை பயிரிட தேவையான நீரை வைத்து 10 -12 ஏக்கர் நிலத்தில் சோளம் பயிரிடலாம், அதுபோல ரோஜாப்பூ பயிரடுவதற்கு அதிகமான நீர் தேவை சர்க்கரையும் ரோஜாப்பூவும் ஏற்றுமதிக்காக பயிரிடப்படுபவை. மஹா. மாநிலத்தின் அனுபவம் மட்டுமல்ல, எல்லா மாநிலத்திற்கும் பொருந்தும்.