சனி, 7 செப்டம்பர், 2013

உயிர்நிலம் நாவல் - வாசிப்பு அனுபவம்

மேலாண்மை பொன்னுசாமி அவர்கள் எழுதிய “உயிர்நிலம்” நாவலை வாசித்தேன், வாசித்தபோது எனது சிறுவயது ஞாபகங்களை உழுதுபோட்டமாதிரி இருந்தது. விவசாயத்தை இயற்கை முறை பகுதியாகவும் நவீனமுறையை? பகுதியாகவும் செய்துவந்த காலகட்டத்தில் எங்கள் குடும்பம் விவசாயத்தைவிட்டு விலகியது, கிணற்றுப்பாசனம், ஆற்றுப்பாசனம் ஓரளவு நம்பலாம் மானாவாரி விவசாயம் என்பது வானம்பார்த்த பூமியாக மழையை மட்டும் நம்பி செய்யும் விவசாயம். பருவமழை பொய்த்துப் போனால் ஓராண்டுப்பயிரே நாசம். இப்போது உரத்திற்கும், பூச்சிமருந்திற்கும், விதைகளுக்கும் செய்கின்ற செலவுதான் மத்திய இந்தியாவில் பருத்திவிவசாயிகளை தற்கொலையில் தள்ளியது. விவசாயிகளின் விளைபொருட்களுக்கு கட்டுபடியாகாத விலைகள் ஒருபக்கம் விவசாயிகளை அட்டை பூச்சியாக உறிஞ்சிவாழும் உரம், பூச்சிமருந்து வியாபாரம், பாக்கெட் விதை ஒருபக்கம் கழுத்தை நெரிக்கிறது. நான் பருத்திவியாபாரிகளை பார்த்திருக்கிறேன், அவர்கள் பருத்தியை வாங்கி அதை பஞ்சு தனியாகவும் விதையை தனியாகவும் பிரிப்பார்கள். பொதுவாக பருத்திவிதைகளை தரம்பார்த்து நல்லவிதைகளை அப்படியே விவசாயிகளிடம் ஒரு ரேட் போட்டு கொடுப்பார்கள், மீதவிதைகளை பால்மாடு வைத்திருப்பவர்கள், உழவுமாடுகளுக்கும் அரைத்து ஊற்றுவதற்கு வாங்கிச்செல்வார்கள். இன்னும் லாபம் பெருக்கவேண்டுமானால் விதைதயாரிப்பு என்ற சான்றிதழை வாங்கிவிட்டு அதே விதைகளை பாக்கெட் போட்டு விவசாயிகளிடம் பலமடங்கு விலையில் விற்பார்கள் அரசாங்கம் அவர்களுக்கு சான்றிதழ் கொடுக்கும். பல விவசாயிகளுக்கு மானியவிலையில் வேளாண்விரிவாக்க மையத்தின் வாயிலாக கிடைக்கும். தரத்தில் பெரிதாக மாற்றம் இருக்காது. இப்போது பன்னாட்டு நிறுவனக்கள் கையில் விதைகள்,பூச்சிமருந்து விவசாயிகள் எப்படி மீளமுடியும்.



இந்த நாவல் ஒரு சம்சாரியின் குடும்பத்தைப் பற்றியது, முக்கால் குறுக்கம் (ஏக்கர்) வைத்திருந்த பரமசிவம் கடின உழைப்பால் முன்னேறுகிறார், அவருடைய மனைவி காமாட்சியும் கணவருக்கு நிகராக என்பதைவிட வீட்டுவேலைகளையும் சேர்த்து அதிகமாக உழைக்கிறார்கள், அவர்கள் உழைப்பில் பல ஏக்கர் நஞ்சை, புஞ்சை நிலங்களை வாங்குகிறார்கள் அவர் மரபுவழியான இயற்கை விவசாயத்தை செய்துவருகிறார். அவருடைய இரண்டு மகன்களில் மூத்தவன் அழகேசன் தந்தையை யொட்டி அதே வழியில் விவசாயம் செய்கிறான். இளையமகன் முருகேசன் பத்தாம்வகுப்புவரை படித்தான், தாய் தந்தையைப் போல் கடின உழைப்பில்லாமல், வியர்வை சிந்தாமல் எல்லாவற்றிற்கும் வேலையாட்களை வைத்து விவசாயம் செய்யவும், மாட்டு உழவுக்குப் பதிலாக டிராக்டர் உழவு, இயற்கை தொழு உரத்திற்குப் பதிலாக ரசாயாண உரங்களான டி.ஏ.பி. பொட்டாஷ், யூரியா போட்டு புதியமுறை விவசாயம் செய்யவேண்டுமென ஆசைப்படுகிறான். தந்தையின் மரபுவழி விவசாயத்தை பழமை என்று புறந்தள்ளுகிறான், அதனால் அய்யாவிடம் சொத்துபிரித்து பாலையா நாய்க்கர் தோட்டம் ஆறு ஏக்கரில் விவசாயம் செய்கிறான். கடைசிவரை அவனுடைய வியர்வை நிலத்தில் சிந்தாமலேயே பண்ணையார் முறை விவசாயம் பார்க்கிறான், கடனுக்கு மேல் கடன் உரக்கடை, மருந்துக்கடை, டிராக்டர்கார்கள் என எல்லாயிடத்திலும் கடன் பெருகுகிறது. ஆறுவருட விவசாயத்தில் மூன்று லட்சம் கடனாகிவிட்டது, மனைவியின் நகைகள் அடமானம் என்ற பெயரில் மூழ்கிவிட்டது. தந்தையுடன் ஏற்பட்ட மனமுறிவால் அவரிடம் சரண்டைய மனம் தடுக்கிறது. உரக்கடைகாரர்கள் தாங்கள் வசூலிக்கவேண்டிய பாக்கியை கந்துவட்டிக்காரனிடம் 100க்கு 4ரூ வட்டிக்கு சிபாரிசு? செய்து அவர்கள் பாக்கியை வசூலித்துவிடுகிறார்கள். கொடுத்தகடனுக்கு அசலுக்கும் மேலாக மாதமாதம் கந்துவட்டியிடம் கடன்கட்டி வருகிறான். தீடிரென்று அசல்பணத்தையும் அடுத்தவாரத்திற்குள் தரவேண்டும் இல்லையென்றால் உன் மனைவியை தூக்கிட்டு போய்விடுவேன் என்று மிரட்டுகிறார்கள் கந்துவட்டிக்காரர்கள். அவமானம் தாங்கமுடியாமல் பயிர்களுக்கு வாங்கிவைத்திருந்த எக்காலக்ஸ் மருந்துகுடித்து தற்கொலை செய்துகொண்டான் என்று நாவல் முடிகிறது.

மரபுக்கும் பழமைக்கும் உள்ள வித்தியாசத்தை அழகாக சொல்லியிருக்கிறார். “பழைமை என்பது வளர்ச்சிக்குத்தடையாக இருக்கும் உடைத்துத் தகர்த்தால் தான், முன்னேற்றம் சாத்தியப்படும்”. மரபு என்பது வளர்ச்சிக்கு உரமாக இருக்கும். மாற்றத்திற்கும் ஒளியாகத்திகழ்ந்து வழிகாட்டும். “மரபு” என்று நினைத்துப் பழைமையை துதித்திவிடக்கூடாது. “பழைமையோ” என்று நினைத்து மரபை புறந்தள்ளிவிடக்கூடாது. பழைமையையும் மரபையும் இனம்பிரித்து ...தள்ளுவது தள்ளி, கொள்ளுவதைக் கொள்வதற்கு பகுத்தறிவு வேண்டும். எனகிறார். பரமசிவம் வீட்டிலும் காமாட்சிக்கு துணையாக பல வேலைகள் செய்கிறார், குடம் எடுத்து நீர் எடுத்துவருவது, வெளக்குமாறு பிடிச்சு வீடு கூட்டுவது பெண்கள் வேலையென்று சில ஆண்கள் ஓய்வெடுக்க பரமசிவம் அப்படியில்லை. காமாட்சியும் அப்படித்தான் ஆண்கள் செய்கிற வேலைஎன்பதையெல்லாம் பார்ப்பதில்லை, ஓய்வறியா உழைப்பாளிகள். அந்த தம்பதிகள் இயல்பாகவே ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வேலைகளை போட்டி போட்டுக்கொண்டு செய்கிறார்கள். வியர்வையை அழகு என்று வர்ணித்து எழுதுகிறார். இந்த உலகமே உழைப்பால் உருவானது, உணவும், ஓய்வும், இனபெருக்கத்தின் இன்பமும் உழைப்புக்கானவை என்று வர்ணிக்கிறார். மளிகைக்கடை அருஞ்சுணைக்கும் பரமசிவத்திற்கும் உள்ள நட்பு, மளிகைக்கடையில் மாலை நேரத்தில் உழைத்துக்களைத்து வரும் பெண்களிடம் வியாபாரம் செய்யும் நேர்த்தி. பாலையா நாய்க்கர் மாதிரி வளர்ந்த விவசாயிகள் நிலங்களை வாரிசுகளின் நகரவாழ்க்கைக்காக விற்கிறார்கள். சிறுவிவசாயிகளில் உழைப்பாளிகளாக இருப்பவர்களுக்கு சில நேரங்களில் வாய்ப்பாக குறைந்த விலைக்குநிலம் கிடைக்கும். அப்படி ஒரு ஏக்கர் ஆயிரம் ரூபாய் விலைக்கு விற்றுச்சென்றவர்கள் எங்கள் ஊரில் இருந்தார்கள், அப்படி ஒரு கசப்பு.

ஆதியில் மனிதர்கள் நிலையாக வாழ்வதற்கு விவசாயம் செய்தார்கள், இன்று வசதியாக வாழவேண்டுமானால் விவசாயத்தை விட்டு ஓடுகிறார்கள். மனித வாழ்க்கையே comfortable வாழ்க்கையைத் தேடி ஓடுவதுதான். மரபுவழியில் விவசாயம் செய்யவேண்டுமானால் அதிக உழைப்பு வேண்டும், ஆள்வைத்து விவசாயம் செய்து வெற்றியடையமுடியாது, சொந்த உழைப்பு வேண்டும், நேரம், காலம் பார்க்காத உழைப்பு வேண்டும். நகரத்தில் 8மணிநேர உழைப்பில் நன்றாக வாழமுடிகிறது, நல்ல ஆடைகள்,கல்விவச்தி, பொழுதுபோக்கு, நுகர்வு எல்லாவற்றிற்கும் கிராமமும் ஏங்குகிறது. சொந்த விவசாயத்தைவிட்டு கூலி உழைப்புக்காக வளைகுடா தேடி ஓடுகிறது. வங்கிகளில் அம்பானிகளை விவசாயிகள் கணக்கில் சேர்த்துவிட்டு அவர்களுக்கு விவசாயக்கடன் கொடுக்கிறார்கள், மஹாராஷ்டிரா மாநிலத்தில் கொடுக்கப்பட்ட விவசாயக்கடனில் 53 சதமானம் மும்பை நகரின் மெட்ரோ கிளைகளின் வாயிலாக வழங்கப்பட்டுள்ளது ஒட்டுமொத்த கிராமப்புற விவசாயத்திற்கு 38 சதமானம் மட்டுமே விவசாயக்கடன் கொடுத்துள்ளார்கள். இப்படித்தான் இந்தியவிவசாயிகளை அரசாங்கம் வஞ்சிக்கிறது.

இயற்கை வேளாண்மையா? நவீன வேளாண்மையா? என்று விவசாயிகளிடம் எது சிறந்தது பட்டிமன்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இயற்கை வேளாண்மையில் இடுபொருட்கள் யாவும் விவாசாயிகளால் உருவாக்கப்படுபவை, எதையும் விலைக்கு வாங்க வேண்டிய அவசியமில்லை. மண்ணுக்கும் தீங்கு இல்லை. ரசாயண உரங்கள் பூச்சிமருந்துகளால் விவசாயிகளின் இடுபொருட்செலவு ஒருபக்கம், மண்வளம் மங்கிப்போவது ஒருபக்கம். குறுகிய காலத்தில் அதிக லாபம் என்ற சமீபத்து உலகம்யக்கொள்கைகள் விவசாயத்தையும் வெகுவாக பாதித்திருக்கிறது. ஒருவருடத்திற்கு முன்னால் ஸ்டார் டிவியில் இயறகை மரபுவழி வேளாண்மை பற்றிய விவாதம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற பூச்சிமருந்து உற்பத்தியாளர் அவர் தரப்பு வாதத்தை வைத்துக்கொண்டிருந்தார். கடைசியில் அவருடைய சகோதரர் இயற்கைவழி விவசாயத்தில் காய்கறிகள் பழங்கள் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்துஅதிக லாபம் சம்பாதிப்பதாகச் சொன்னார். இன்று சந்தையில் ஆர்கானிக் முறையில் தயாரிக்கப்பட்ட வேளாண்பொருட்களுக்கு அதிகவிலை. அதை உற்பத்தி செய்பவர்கள் மேல்தட்டு விவசாயிகள், கிடைப்பதோ அதிகவிலை. அதிக இடுபொருட்செலவில் உற்பத்தியாகும் நவீன வேளாண்மையில் விளயும் காய்கறிகளுக்கு குறைந்தவிலை கிடைக்கிறது அல்லது சந்தை தீர்மானிக்கிறது.

“புதினங்கள் பொதுமக்களுக்கு வெறும்கதை; அறிஞர்களுக்கு கருத்துவிளக்கம்; கற்று உணர்ந்தார்க்கு அனுபவப்பிழிவு” என்கிறார் அறிஞர் மார்ரே. நாவல் இலக்கியத்தில் ஒருதுறைதான், தனிமனிதனின் முழுவாழ்வை வெளியிடுவதில் வேறு எந்தக் கலைத்துறையாலும் நாவலை விஞ்சமுடியாது என்பதை இந்த நாவல் உறுதிப்படுத்துகிறது. மேலாண்மை பொன்னுசாமி அவர்கள் எழுதிய சிறுகதைகளை வாசித்திருக்கிறேன், பெரும்பாலான கதைகளின் பின்புலம் கிராமப்புறம், விவசாயம் சார்ந்தது. ஒரு நாவல் வெறும் கற்பனைகொண்டு மட்டும் எழுதிவிடமுடியாது எண்ணற்ற தகவல்கள் திரட்டவேண்டும். விவசாயிகளை அவர் தினந்தோறும் பார்ப்பதால் விவசாயமுறையை எளிதாக விளக்கமுடியும். சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னால் பருத்திவிலை ஒரு குவிண்டாலுக்கு 10 கிராம் தங்கம் வாங்கலாம் என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது , இப்போது 1 குவிண்டால் பருத்தி போட்டால்தான் ஒரு கிராம் தங்கம்தான் வாங்கமுடியும். நூல்விலை பலமடங்கு கூடியிருக்கிறது. பூச்சிமருந்து, டி.ஏ.பி உரம் 20 ஆண்டுகளுக்கு முன்னால் 180 ரூ இப்போது 1300 ரூ பல மடங்கு கூடியிருக்கிறது. பஞ்சுமிட்டாய்காரன் கூட மிட்டாய்விலையை அவன் நிர்ணயம் செய்கிறான், ஆனால் விவசாயிகளால் தாங்கள் விளைவித்த பொருட்களுக்கு விலை சொல்லமுடியவில்லை அந்த நிலைமை.

இந்தியா ஒரு விவசாயநாடு என்பதிலிருந்து கூலி உழைப்பாளிகளை உற்பத்திசெய்யும் நாடு என்ற ரீதியில் செல்கிறது, அரசாங்கத்தின் கொள்கை தனிமனிதனின் வாழ்க்கையை எப்படி பாதிக்கிறது என்பதை இப்போது நாடு சந்தித்துக்கொண்டிருக்கிறது. மென்பெல்லாம் விவசாயி கிராமத்திலிருந்து எதற்கும் வெளியே செல்லத்தேவையில்லை. அவனுக்குத் தேவையான விதைகளை, உரங்கள், மருந்துதெளிப்பதற்கு வேப்பெண்ணெய், அவனே தயாரித்தான். இன்று அவன் எல்லாவற்றிற்கும் கையேந்தும் நுகர்வோன் ஆகிவிட்டான். இந்த மாற்றம் உலகமயம் கொண்டுவந்த விளைவுகளில் ஒன்று. ஒவ்வொரு கிராமத்திலும் காளைமாடுகள் நூற்றுக்கணக்கில் இருக்கும். சின்னவிவசாயி யென்றால் ஒரு பசு, ஒன்று, இரண்டு ஆடுகள்,கோழிகள் எல்லாம் வளர்ப்பார்கள். ஒவ்வொரு வீட்டுக்கும் குப்பைக்கிடங்கு இருக்கும். வீட்டில் சேர்கிற குப்பைகளை அங்கேதான் கொட்டுவார்கள், மக்காத பொருட்கள், பிளாஸ்டிக் என்பது வல்லிசாக கிடையாது. குப்பையை சேர்ப்பதில் கில்லாடிகளாக இருப்பார்கள். பெரிய பண்ணை வீடுகளில் எருமைகள் நிறைய வைத்திருப்பார்கள் அதை மேய்ப்பதற்கு ஒரு அடிமை இருப்பான், அவன் எங்கிருந்து வந்தானென்பதே தெரியாது அவன் வயதுஎன்ன என்பதை அவனுக்கே தெரியாது அப்படியிருப்பான். காலை எட்டு அல்லது ஒன்பது மணிக்கு எருமைகளை அவுத்துவிட்டால் வீதிகளை அடைத்துக்கொண்டுபோகும், போகும்போது கூடைகூடையாக சாணிபோடும், அந்த ப்ச்சையான சாணியை சில வயசாளிகள் கூடைவைத்து அள்ளி குப்பையை வளப்படுத்துவார்கள். இப்போது பாலுக்கே பாக்கெட் பால் வாங்கவேண்டியிருக்கிறது. மோரை விற்கமாட்டார்கள்,சொம்பு சொம்பாக கேட்டவர்களுக்கு இனாமாகக் கொடுப்பார்கள். மாடுகளுக்கு தீவனாக சோளம் போடுவார்கள் அதை நெருக்கமாகப் போடுவார்கள் தடித்துவிட்டால் மாட்டால் கடிக்கமுடியாது. அதை அறுத்து கோடைகாலத்தில் தீவனத்திற்கு படப்பில் சேமிப்பார்கள். படப்பு அடுக்குவதை ‘மேய்வது’ என்பார்கள். எல்லாருக்கும் அந்த தொழில் தெரியாது, வீட்டுக்கூரை வேய்வதுமாதிரி. நல்ல நாட்டுக் கம்மந்தட்டைகளை அறுத்து நனைத்து காயப்போட்டு வேய்வார்கள், மழைத்தண்ணீர் உள்ளே நுழையமுடியாது. படப்பை அடுக்கும்போது கிரிக்கெட்பேட் மாதிரி செய்யப்பட்ட பலகையால் லெவலுக்கு தட்டுவார்கள். மாடுகளுக்கு வாய்க்கூடு பின்னுவது அவர்களே, மாட்டுவண்டியில் தட்டி என்று சொல்லப்படுகிற காடிகளை நாட்டுப்பருத்தி ஓய்ந்தவுடன் பிடுங்கி அதில் முடைவார்கள். அதெல்லாம் பழங்கதையாகிவிட்டது.

அப்போதெல்லாம் நெல்லுச்சோறு என்பது வசதியானவர்கள் வீட்டில்தான், ஏதேனும் விசேசம், விரத நாட்களில், தீபாவளி, பொங்கல் சமயங்களில் நெல்லுச்சோறு கிடைக்கும். அதிகமாக கம்பு அதிலும் நாட்டுக்கம்பு பயிரிடுவார்கள், அதற்கு மருந்தடிப்பு கிடையாது, களைவெட்டுகிடையாது, பயிருழவு மட்டும்தான், ஒவ்வொரு ஆறு கோட்டுப்பயிருக்கும் ஒருகோடு தட்டாம்பயிறு, பாசிப்பயிறு ‘சால்’ என்ற பெயரில் போடுவார்கள். பருத்தியிலும் நாட்டுப்பருத்திதான் போடுவார்கள், உளுந்து பயிரிடுவது குறைவாகத்தான் இருக்கும்.பருத்தியை ஒரு ஆண்டு முடிந்தால் வெட்டிவிட்டால் அடுத்த ஆண்டும் ‘கட்டப்பருத்தி’ எடுக்கலாம். இடுபொருட்செலவு கிடையாது, நோய் தாக்க்குவது பருத்திச்செடிகளுக்குத்தான் அதுவும் நாட்டுப்பருத்தியை அவ்வளவாக தாக்காது. அதற்கு வேப்பெண்ணெயை ஸ்பேயரில் சிலர் வேப்பங்கொப்பை வைத்து தெளிப்பார்கள். பசுமாட்டு கோமியத்தை சேர்த்துவைத்து அதையும் தெளிப்பார்கள். உழவென்பது மாட்டு உழவுதான், கூட்டணி சேர்ந்து உழுவார்கள் ஒரு ஜோடிமாடு ஒரு நாளைக்கு ஒரு ஏக்கர் உழமுடியும். மாடுவாங்க வசதியில்லாத சிறுவிவாசாயிகள் பெரிய விவசாயிகளிடம் வேலைக்கு இருப்பார்கள், உழவு, விதைப்பு, மாட்டுவண்டியை பயன்படுத்துவது எல்லாம் கருணையில்தான். மானாவாரி விவசாயத்தில் ஒரு பருவ விளைச்சலுக்குக்கூட வருடம் முழுவதும் உழைப்பை செலுத்துவார்கள். சித்திரையில் உழவடிப்பார்கள், செடி, அருகு நீக்குவார்கள், ஆடிமாதம் சேமித்த குப்பைகளை வண்டி மூலம் சுமப்பார்கள், சிதறுவார்கள், மீண்டும் ஒரு உழவு. ஆவணியில் பருத்தி விதைகளை வாங்கி நல்ல களிமண்ணைத் தேர்ந்தெடுத்து பிரட்டி உருட்டுவார்கள் உலரவைப்பார்கள். புரட்டாசி பட்டத்தில் விதைப்பு,ஐப்பசி அடைமழையில் செடிகளின் வனப்பு, மார்கழி, தையில் அறுவடை. புஞ்சையில் அதே பயிரை ஒவ்வொரு வருடமும் விதைத்தால் மண்வளம் குன்றிவிடும் என்று ‘அடி’ மாற்றி கம்பு விதைத்த புஞ்சையில் பருத்தி போடுவார்கள். பருத்தி விதைத்த புஞ்சையில் சோளமே, கம்போ பாயிர் செய்வார்கள். இப்போது அதெல்லாம் கட்டுபடியாகவில்லையென்று எல்லா வருடமும் அதே நிலத்தில் உளுந்து மட்டும் பயிர்செய்கிறார்கள். டி.ஏ.பி உரம் ஏக்கருக்கு 10 கிலோவிலிருந்து இப்போது ஒரு மூட்டையை போடுகிறார்கள், மண்வளத்தை ஒரெடியாக விவசாயி அதிக விளைச்சலுக்கு சுரண்டிவருகிறான். இன்னும் விவசாயம் ஒரு நாள் மரபு வழிக்கு மாறும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

கருத்துகள் இல்லை: