சனி, 18 ஜூன், 2011

ஊழலுக்கு மரியாதை..



Courtesy:'The Hindu'

மரியாதையாக அழைப்பதற்கு ஹிந்தியில் “ஜி” என்பார்கள், ஆனால் இப்போதோ ஊழல்கள் எல்லாம் 2G, CWG, KG என வந்துகொண்டேயிருக்கிறது. தோண்டத்தோண்ட புதிய பூதங்கள் கிளம்பிகிட்டேயிருக்கு. இதுக்கு எல்லையேயில்லை. தனியார்மயம் என்றாலே அது அரசுக்கு வருவாய் இழப்பில்தான் முடியும். அதையெல்லாம் தாண்டி ஊழல் தாராளமயம், உலகமயம் ரேஞ்சுக்கு போயிருச்சு. ஊழலுக்கு வேர் எதுன்னு தெரியாம சும்மா ‘லோக்பால்’ அமைக்கனும் ‘சிவில் சொசைட்டி’ ஆளுங்க கிளம்பிட்டாங்க. இப்ப யாரு ‘சொசைட்டி’ பெரிசுங்கிற போட்டி வேற நடக்குது. சில வெளிநாட்டு ஆளுக நம்ம ஊருல்ல நடக்குற இந்த ‘சிவில் சொசைட்டி’ கூத்தை பாத்துட்டு இந்தியால இராணுவ ஆட்சியா நடக்குதுன்னு கேட்கிறாங்க. அவங்களுக்கு தெரியாது போல..உலகத்துலேயெ பெரிய ஜனநாயக நாடு இந்தியா தான் என்கிற விஷயம். எனக்கும்தான் புரியல ஹசாரே, அப்புறம் இந்த சாமியாரு பாபா ராம்தேவ் இவங்கெல்லாம் சிவில் சொசைட்டின்னு சொன்னா நம்ம தேர்தல்ல நின்னு ஓட்டு வாங்கி ஜெயிச்சவங்க எல்லாம் யாரு? எல்லாம் இந்த பேப்பர் காரனும் டிவிகாரனும் பண்ற வேல. இந்த ‘சிவில் சொசைட்டி’ வார்த்தையை அமெரிக்காவிலிருந்து பிடிச்சாங்களோ? இந்த வருசம் டெல்லியில இலட்சக் கணக்காண தொழிலாளர்கள் விலைவாசி உயர்வை எதிர்த்து காங்கிரஸ் கட்சியோட INTUC உட்பட தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தியது, அதை பிபிசி, ரூயிடர்ஸ், செய்தி சேகரிச்சாங்க ஆனா இந்தியன் மீடியா அதை கவரேஜ் பண்ணவேயில்ல, இல்ல அவங்களால ரோடு டிராபிக் ஜாம் ஆயிடுச்சுன்னு ‘தினமலர்’ மாதிரி சொல்வாங்க. இலட்சக்கணக்காண சாதாரண மக்களை , தொழிலாளிகளை பிரதிநுவப்படுத்துகிற தொழிற்சங்கங்கள் ‘சிவில் சொசைட்டி’ கிடையாது. கார்ப்பரேட் பக்தர்களுக்கு சிஷ்யர்களாகயிருக்கிற எலைட் மெடில்கிளாஸ் மக்கள்தான் சிவில் சொசைட்டி என்னய்யா நியாயம்.

பாரதீய ஜனதாக் கட்சி ஊழலுக்கு எதிரா தேசிய அளவில பெரிய யாத்திரை நடத்தப்போறாங்கன்னு சொன்னாங்க. முதல்ல கர்நாடகா சுரங்க ஊழல் செஞ்ச மந்திரிய வெளிய தள்ளிட்டு அப்புறம் தொடங்கலாம். நேத்து வரைக்கு ஊழல்ன்னு பேசுனவங்க இப்ப அம்பானி பிரதர்ஸ் பண்ற கோதாவரி பேசின் ஊழலை பத்தி வாயே தொறக்கல. ஏன்னா, அவங்க பைனான்சியர் ஆச்சே? நாட்டுல புதுசா இரும்பு கிடைச்சா, நிலக்கரி கிடைச்சா, காப்பர்கிடைச்சா, எரிவாயு, கச்சா எண்ணெய் கிடைச்சா நாடு முன்னேறியிரும் சொல்றாங்க. ஆனா அதெல்லாம் தனியார் கல்லாவுக்கு தான் போயிட்டுஇருக்கு. ஒரு டன் இரும்புத்தாது தோண்டுனா அரசாங்கத்துக்கு 27ரூபாய் தான் போகுது, மார்க்கெட் விலை 5000ரூபாய். வருசத்துக்கு 100 மில்லியன் டன் இரும்புத்தாது இந்தியாவிலயிருந்து ஏற்றுமதியாகுது. கையில இருக்குற வெண்ணெய இப்ப கொடுக்குறாங்க.. சில வருஷம் கழிச்சு இரும்புத்தாதுவை அரசே இறக்குமதி பண்ணுவாங்க. சீனா தன்னுடடைய நாடு வளர்ச்சியடைனும் சொல்லி இரும்பு, காப்பர், அலுமினியம் அவங்ககிட்ட சுரங்கமிருந்தாலும் எங்க கிடைக்கிதோன்னு தேடி அலையுது. அமெரிக்கா அங்கயிருக்கிற எரிவாயுகிணறுகளை இன்னும் தோண்டவேயில்லை. ஆனா நம்ம ஊருல ஆத்து மணலைக்கூட வித்து அதுல தனியார் காசு பாக்க வழிசெய்றாங்க.

இந்த ‘சிவில் சொசைட்டி’ ஆளுங்க இதைப்பத்தியெல்லாம் பேசமாட்டாங்க, அப்படி பேசுனா இந்த கார்ப்பரேட் மீடியா அவங்கள காட்டியிருக்கவே மாட்டாங்க. பாபா ராம்தேவ் நடத்துன உண்ணாவிரத டிராமவை ‘லைவ்’காமிச்சவங்க உத்தர்கண்ட்ல ஒரு சாமியார் கங்கையை தூய்மைப்படுத்தனும் சொல்லி உண்ணாவிரதம் இருந்து செத்தே போனாரு. அவரைப் பத்தி அவ்வளவா கவரெஜ் இல்ல. ஏன்ன அது சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட விவகாரம். சுற்றுச்சூழலை பத்தி பேச ஆரம்பிச்சா வேதாந்தா அலுமினியச்சுரங்கம் பண்ற மாசு பத்தி பேசவேண்டியிருக்கும், ஸ்டெர்லைட் காப்பர் ஆலை செய்கிற மாசு பத்தி சொல்லனும். அம்பானியோட ரிலையன்ஸ் 'Dept free' கம்பெனியா மாறிடுச்சுன்னு செய்தி வந்தது, அதான் இந்தியா கடனாளி ஆகிருச்சே? மாறன், அம்பானி, வேதந்தா எல்லாம் திறமையாலயா முன்னுக்கு வந்தாங்க? பிஜேபி, காங்கிரஸ் ஆட்சியெல்லாம் அவங்களுக்கு தோதா பட்ஜெட் போட்டு, வரியை தள்ளுபடி பண்ணி அவங்கள பில்லிணியர் ஆக்கினாங்க. காணி நிலம் பாரதி கேட்டான், இந்தியக் குடிமகன் மனைநிலம் கேட்கிறான் அதெல்லாம் கிடைக்கல. ஆனா பன்னாட்டு நிறுவனக்களுக்கு இருக்கிற நிலத்தையும் பிடுங்குது அரசாங்கம். ஆகஸ்டு15ம் தேதிக்குள்ள ‘லோக்பால்’ நிறைவேறவில்லையென்றால் Elite மெடில்கிளாஸ் எல்லாம் மெழுகுவர்த்தி ஏந்துவாங்களா? இல்ல மறியல் பண்றாங்களான்னு பார்ப்போம்.

வெள்ளி, 10 ஜூன், 2011

நெடுஞ்சாலை விபத்துகள்



காஞ்சிபுரம் அருகே நடந்த சாலைவிபத்தில் 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்ற செய்தி தமிழகம் சாலைப்பாதுகாப்பில் மிகவும் பின் தங்கியிருப்பதை மேலும் உறுதிப்படுத்துகிறது. இந்தியாவில் சாலைவிபத்துகள் ஒரு நிமிடத்து ஒரு விபத்து ஏற்படுகிறது, நான்கு நிமிடத்தில் ஒருவர் அதாவ்து ஒரு மணிநேரத்தில் 14 பேர் கொல்லப்படுகின்றனர். கடந்த ஆண்டில் இந்தியாவில் சாலைவிபத்தில் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1.60 இலட்சம் பேர், அதுவே 2009ம் ஆண்டில் 1.25 பேர் மரணமடைந்துள்ளனர். வருடத்திற்கு வருடம் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது போல விபத்தில் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. 2009ம் ஆண்டில் தமிழகத்தில் மட்டும் 13,746 பேர் சாலைவிபத்தில் இறந்துள்ளனர். இது மொத்தவிபத்தில் 11 சதவீதம் ஆகும். இந்தியாவில் ஆந்திரம்,மஹாராஷ்டிரா,தமிழகம் மற்றும் கர்நாடகாவில் சாலை விபத்தில் கொல்லப்படுகிறவ்ர்களின் எண்ணிக்கை தேசிய அள்வில் 50 சதவீதமாகும்.




சாலைகள் அதிக அள்வில் விரிவுபடுத்தப்பட்டாலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் குறைவாக உள்ளன, தேசிய நெடுஞ்சாலையில் 120 கீமீ வேகத்தில் வாகனக்கள் செல்லக்கூடிய சாலைவச்தியிருந்தாலும் இணைப்பு சாலைகளில் முக்கிய சாலைகளில் கூடுமிடங்களில் தேவைப்படுகிற எச்சரிக்கைகள் இல்லை. கல்வியறிவு நமது மக்களிடம் வளர்திருந்தாலும் சாலைப்பாதுகாப்பு பற்றிய கல்வியோ பயிற்சியோ இல்லை. ஓட்டுனர் உரிமங்களை வீட்டிலிருந்தபடியே கையூட்டு மூலம் பெறமுடியும் என்ற நிலை இருந்தால் என்ன செய்யமுடியும். இருசக்கர வாகன் ஓட்டிகள் பின்னால் வருகிற வாகந்த்தை அறிய உதவுகிற கண்ணாடிகளை பொருத்துவதில்லை, தலைக்கவசம் அணிவதில்லை. புதிதாக வந்த கார்களில் சீட்பெல்ட் இருந்தாலும் அணிவதில்லை. படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற பாகுபாடு இல்லை புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. அண்டை மாநிலமான கேரளத்தில் சீட்பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது, சாலை விபத்துகளில் மரணவிகிதம் குறைவாக உள்ள மாநிலங்களில் கேரளும் ஒன்றாகும். உலக அளவில் இந்தியாவில் சாலைவிபத்தில் மரணமடைபவர்கள் குறித்து ஐ நா எச்சரிக்கை செய்துள்ளது. சீனாவில் 2004 முதல் சாலை விபத்துகளை தடுப்பதில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. விதிகள் கடுமையாக்கப் படவேண்டும் என்பதைவிட தாங்களாகவே பாதுகாப்பாண பயணத்தை மேற்கொள்வதற்கு சாலைப்பாதுகாபு விழாக்கள் கொண்டாடி விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.

வியாழன், 9 ஜூன், 2011

பங்குச்சந்தை - Stock Index or Misrey Index.



சமீபத்தில் ‘பெரு’ நாட்டில் நடந்த அதிபர் தேர்தலில் இடதுசாரிக்கட்சியை சேர்ந்த ஒல்லண்டா ஹூமாலா வெற்றியடைந்துள்ளார். தேர்தல் முடிவுகள் வெளிவானவுடன் அந்த நாட்டின் பங்குச்சந்தை 12.5% சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. இதே அனுபவம் நிறைய நாடுகளுக்கு உண்டு, எப்போதெல்லாம் பெருவாரியான மக்கள் மாற்றத்திற்க்காக புதிய அரசை தேர்ந்தெடுக்கும் போது பங்குச்சந்தை அதற்கு மாறாக இருக்கும். சாதாரண மக்கள் ஒரு அரசை விரும்பினால் அப்போது பங்குச்சந்தை எதிர்மறையாக இருக்கும். இதைத்தான் Stock Index ஐ misrey Index என்று பிரபல் பத்திரிக்கையாளர் சாய்நாத் குறிப்பிடுவார்.

இந்தியாவில் 2004ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் அதற்கு முன்பு ஆட்சியிலிருந்த பாஜக ‘இந்தியா ஒளிர்கிறது’ என்ற பிரச்சாரமும் காங்கிரஸ் கட்சியும் அதற்கு மாற்றாக இருக்கமுடியாது என்று மீடியாவின் ‘பண்டிட்கள்’ சொன்னதற்கு மாறாக பிரதேச கட்சிகளும் இடதுசாரிகட்சிகளும் குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றன. தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் இடதுசாரிக்கட்சிகள் இல்லாத ஆட்சியை மத்தியில் காங்கிரஸ் அமைக்கமுடியாது என்ற நிலை ஏற்பட்டவுடன் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் படுபதாளத்திற்கு சென்றுவிட்டது. இந்தியாவில் 1.15 சதவீதம் பேர் விளையாடுகிற அந்த பங்குச்சந்தை வீழ்ந்தவுடன் துடித்துப்போய் சிதம்பரம் மும்பைக்கு ஓடினார், முதலீட்டளர்களை காப்பாறுவதற்கு. ஐ மு -1 வது ஆட்சியில் மத்திய அரசு நினைத்த அள்விற்கு ‘சீர்திருத்தம்’ செய்யமுடியவில்லை. இன்றைக்கு பெட்ரோல் விலை தாறுமறாக உயருவதற்கு காரண்மான ‘கீர்த்தி பரேக்’ கமிட்டியின் அறிக்கை 2004 அமல்படுத்த அரசு முனைந்த போது இடதுசாரிகள் தடுத்தார்கள். இன்சூரண்ஸ் துறையிலும், வங்கித்துறையிலும் அந்நிய மூலதனத்தின் கட்டுப்பாடு வரம்புகளை தள்ர்த்த முனைந்த போதும் ‘கடிவாளம்’ தடுத்தது. உலகெங்கும் 2008ல் பொருளாதார மந்தம் தேக்கம் ஏற்பட்ட போது இந்தியா அப்படிப்பட்ட சிக்கலை சந்திக்காதற்கு காரணம் ‘வங்கிகள், இன்சூரன்ஸ்’ போன்றவை அரசின் கட்டுப்பாட்டில் இருந்த்தால் தான் என்று ’தாராளவாதி’மன்மோகன்சிங் அவர்களே ஒத்துக்கொண்டார். மீடியாக்கள், மத்தியதர வர்க்கத்தின் பொதுப்புத்திகளை தாண்டி முதல் ஐக்கிய முண்ணனி அரசு தக்வல் அறியும் உரிமைச்சட்டம், நூறு நாள் வேலை உறுதியளிப்பு திட்டம் போன்ற மக்கள் நலத்திடங்களை அறிவித்தது. மீண்டும் பங்குச்சந்தைக்கு வ்ருவோம்..

2004 ஆண்டு டிசம்பர் மாதத்தில் தெற்கு ஆசியாவில் சுனாமியின் தாக்குதலில் இந்தியா, இந்தோனேசியா, இலங்கை தாய்லாந்து ஆகிய நாடுகள் அதிக அள்வில் பாதிப்பிற்கு உள்ளாயின, அதிக பட்சமாக இந்தோனேசியாவில் 160,000 பேர் கொல்லப்பட்டனர். இந்தியாவிலும் குறிப்பாக தமிழக்த்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மட்டும் 30,000 பேர் வீடுகளை இழந்தனர். சுனாமி ஆழிப்பேர்லை பலி கொண்ட சில நாட்களில் இந்தியா, இந்தோனேசியா,இலங்கை போன்ற பங்குச்சந்தைகளின் புள்ளிகள் உச்சத்தில் இருந்தன. அதாவது நிவாரணப்பணிகளுக்கு அந்நிய மூலதனம் வரவேற்பதற்கு. அதனால் தான் Misrey Index என்ற பதம் மிகவும் கச்சிதமாக பொருந்துகிறது. இந்தியாவில் சாதாரணம்க்கள் பாதிப்படைகிற மாதிரி பட்ஜெட் அமைந்தாலோ அல்லது விலைவாசி உயர்ந்தாலோ சென்செக்ஸ் அதிகரிக்கும். 30 சதவீதம் வரிபோட்டு பெட்ரோல் விலையால் வருமானம் சேர்க்கும் அரசு பெட்ரோலுக்கு மானியம் தருவதாக சொல்கிறது.

சம்பந்தப்பட்ட கட்டுரைகள்
http://www.cashthechaos.com/blog/?p=668

செவ்வாய், 7 ஜூன், 2011

அழகர்சாமியின் குதிரை.


முன்பெல்லாம் சினிமாவை விமர்சனம் செய்வது என்பது பத்திரிக்கைகள், தொலைக்காட்சி செய்கிற வேலையில் ஒன்றாக இருந்தது, இப்போது இணையத்தில்,வலைப்பூக்களில் யார் வேண்டுமானாலும் தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கலாம். பத்திரிக்கைகள் அல்லது தொலைக்காட்சி ஊடகங்களே சினிமாவை தயாரித்து வெளியிடுகிற சூழ்நிலையில் நம்பகத்தன்மையான விமர்சனங்களை அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. வலைப்பதிவர்கள் அப்படியல்ல, வணிகத்திற்காக எழுதுவதில்லை. தான் ரசித்ததை தனக்குப் பிடித்ததை மற்றவர்களுக்கு பரிந்துரை செய்கிறார்கள். அப்படித்தான் ‘தமிழ்வீதி’யில் வந்த அழகிரிசாமியின் குதிரை விமர்சனத்தை படித்தபின்பு அப்படத்தை பார்த்தேன். சமீபத்தில் பார்த்த சிறந்த படங்களில் இதுவும் ஒன்று. ஹீரோயிசமில்லாத, அதிக பட்ஜெட் இல்லாத, ஆபாசக்காட்சிகள் இல்லாத படங்கள் முன்பு அரிதாக இருந்தது. இயக்குனர் இமயம் என்று கிராமப்பிண்ணனியிலிருந்து சினிமாவிற்கு வந்தவர்கள் கூட இப்படி சாமானியர்களின் கதையை படமாக்கவில்லை. ஆரம்பகாலத்தில் அப்படி சில படம் அவர்கள் எடுத்திருந்தாலும் கடைசியில் சாதிப்பெருமைகளை கொண்டாடும் பழம்பெருமைகள் பேசும் தனிநபர்களை சுற்றியே படமாக்கினர்.

இலக்கியங்களை சினிமாவாக ஆக்கும் பணியில் தமிழ் சினிமா சற்று தாமதமாக இருந்தாலும் அப்படி உருவாக்கப்பட்ட பூ, ஒன்பது ரூபா நோட்டு, சொல்லமறந்தகதை என எல்லாப் படங்களும் தரமானதாக இருந்தது, அதே வரிசையில் அழகிரிசாமியின் குதிரையும் பாஸ்கர் சக்தி எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டது. கிராமத்து மக்களின் தெய்வ நம்பிக்கையை நல்ல முறையில் பகடி செய்திருக்கிறது. படத்தில் யார் கதாநாயகன் என்பது முக்கியமில்லை, கதாநாயகன் பத்துபேரை புரட்டிஎடுக்கும் வலிமை தேவையில்லை, வசீகரிக்கும் அழகு தேவையில்லை. அழகர் ஆற்றில் இறங்கினால் மழை பெய்யும் என்ற நம்பிக்கை மதுரை வட்டாரத்தில் இன்னும் சில கிராமங்களில் இருக்கிறது. கிராமத்து மக்களின் அளவு கடந்த நம்பிக்கைகள் அவர்களின் வாழ்வில் ஏற்படுகிற துன்பங்களின் அடிப்படையில் வருகிறது. இதை செய்தாலாவது நல்லது நடக்கதா? என்ற ஏக்கம். என்னுடைய கிராமத்திலும் மழைக்காக மக்கள் செய்த வேடிக்கைகள் நிறைய இருக்கிறது. ஒரு மலைமீதுள்ள கடவுளுக்கு ஆயிரக்கணக்கான குடம் நீரை சுமந்து சென்று சிலைக்கு ஊற்றுவார்கள், அப்படியாவது தெய்வத்தின் உள்ளம் குளிராதா? ஊரின் எல்லைக்குச் சென்று பொங்கல் வைப்பார்கள் அதற்கு எல்லைப்பொங்கல் என்றே பெயர். இன்னும் சில கிராமங்களில் மழைக்காக கழுதைகளுக்கு கல்யாணம் செய்விப்பது இன்றும் நடக்கிறது.

30 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிராமம் எப்படியிருந்தது என்பதை காஸ்ட்யூம்கள் இல்லாமல் கதை நகர்கிறது. ஒரு குதிரையை வைத்து பிழைப்பை ஓட்டும் அழகர்சாமி தன்னுடைய குதிரையை மீட்க கிராமத்து இளைஞர்கள் ஊர்திருவிழாவிற்கு முன்பே உதவுவதை ஏற்க மறுத்து, திருவிழாவின் மூலம் வேலைவாய்ப்பு பெற்ற ரேடியோசெட்காரன், மேளக்காரன், பந்தல்காரன் போன்றோரின் வருவாயைப்பற்றியும் கவலைப்படுகிறான். குதிரை இல்லாவிட்டால் திருவிழா நிச்சயம் நடக்காது, சந்தோசமாக திருவிழாவிற்காக காத்திருக்கிற மக்களின் முகங்களை நினைக்கிறான். ஊர்க்காரர்கள் குதிரைக்காரனை அடித்துப்போட்டு சென்றவுடன் ஒரு விதவைத்தாய் அவனுக்கு ஆறுதல் கூறி உணவளிக்கிறாள், அதேபோன்று ஏழ்மையில் திருடுபவனை ஊர்க்காரகள் போட்டு அடித்து கட்டிவைக்கிறார்கள்.திருடனையும் மனிதனாக மதிக்கவேண்டும் நேசிக்கவேண்டும் என்பதை கற்றுக்கொடுத்திருக்கிறது.மலையாள மாந்திரீகன் செய்யும் ஏமாற்று வேலைகளையும் சினிமா பகடி செய்கிறது. வில்லனின் ஆட்கள் குதிரைக்காரனை அடித்தபோது எஜமானனுக்காக குதிரை கயிற்றை முறித்துக்கொண்ட எதிரிகளை துவம்செய்வது கொஞ்சம் நம்பும்படியாக இல்லையென்றாலும், அது மைனரை ‘குறி’வைத்து மிதிப்பது நகைச்சுவைக்காக. இதுவரை போலீஸ்காரர்களை சமூகவிரோதிகளுக்கு துணைபோவர்களாகவே காண்பித்த தமிழ்சினிமாவில் இப்படியும் சில சப் இன்ஸ்பெக்ட்ர்கள் இருக்கிறார்கள் என்பதை பதிவுசெய்திருக்கிறது. கிராமத்தில் பள்ளிக்கு செல்லவேண்டிய பெண்குழந்தைகள் குடும்பச்சூழ்நிலைக்காக திருப்பூர் பனியன் கம்பெனிக்கு வேலைக்கு அனுப்புவது இன்றும் கிராமப்புறங்களில் ‘சுமங்கலித்திட்டம்` என்ற பெயரால் கொத்தடிமையாக வேலைக்குச் செல்வது நடப்பிலுள்ளது. திருமணத்தில் சாதி என்பது கிராம நகர வேறுபாடு இல்லாமல் எங்கும் நிலவுகிறது. ஊர்த்தலைவரின் மகன் தாழ்த்தப்பட்ட சாதிப்பெண்ணை திருமணம் செய்ததால் இனி இந்த ஊரில் மழையே பெய்யாது என்ற ஊர்த்தலைவரின் சாபம் ‘சாமியாலேயெ’ மறுக்கப்பட்டு உடனே கொட்டோகொட்ட்டென்று மழை பெய்கிறது.

இயக்குனர் சுதீந்திரனின் முதல் படமான வெண்ணிலா கபடிக்குழு வை அடுத்து அழகர்சாமியின் குதிரையும் சிறந்த படம்.நல்ல தமிழ்சினிமாக்கள் இன்னும் வளரவேண்டும், அதற்காக இந்தப் படம் வெற்றியடையவேண்டும்.

ஞாயிறு, 5 ஜூன், 2011

ஊழலை ஒழிக்க சாமியார்கள்?

ஒரு மாசத்துக்கு முன்னாடி எப்படி அண்ணா ஹசாரே எப்படி இந்தியா முழுசும் பேமஸ் ஆனாரோ அதேமாதிரி இன்னைக்கு பாபா ராம்தேவ் ஊழலை ஒழிக்க வந்துட்டார், ஏற்கனெவே லோக்பால் மசோதாவுக்கு மத்திய அரசு ஒரு குழு அமைச்சு சும்மானாச்சும் வாரவாரம் மீட்டிங் போட்டு பேசிகிட்டு இருக்காங்க. எப்படி தீடிர்னு பாபா ராம்தேவ் உள்ளவந்தார்ன்னு தெரியல , நம்ம மீடியாகாரங்க நினைச்சா இந்த மாதிரியான புரட்சியை உடனே பத்தவைக்க முடியும். லோக்பால் மூலமா பிரதமரையும் உச்சநீதிமன்ற நீதிபதியையும் விசாரிக்க இடம் தரக்கூடாதுன்னு ராம்தேவ் சொன்னாரு, அப்புறம் பல்டி அடிச்சாரு. இப்ப ராம்லீலா மைதானத்துல 18ரூபா செலவு செஞ்சு பிரம்மாண்டமா செட் போட்டு, குழுகுழு ஏசி போட்டு நாடகத்தை ஆரம்பிச்சிடாங்க. எதையோ மறைக்கிறதுக்கு முயற்சி நடக்குற மாதிரி தெரியுது.

மத்திய அரசாங்கமே கறுப்புப்பணத்தை ஒழிக்க ஏதோ ஒரு டிபார்ட்மெண்ட் மூலமா நடவடிக்கை எடுக்கப்போறதா செய்தி வந்துச்சு, அம்பானி பிரதர்ஸ் ஒண்ணா இருந்தப்போ வெளிநாட்டு அழைப்புகளை உள்ளூர் அழைப்பா மாத்தி ஒரு கொள்ளையை அடிச்சதை CBI நடவிடிக்கை எடுக்கலன்னு சொல்லி CIC மத்திய தகவல் ஆணையத்தலைவர் CBI க்கு கடிதம் எழுதினாரு. தயாநிதிமாறன் டெலிகாம் மந்திரியா இருந்தப்ப 323 டெலிபோன் லைன்களை சொந்த வியாபாரத்துக்காக அமைச்சாராம், கலைஞர் டிவிக்கு 200 கோடி ரூபாய் வந்தது மாதிரி சன் டிவிக்கும் 700கோடி ரூபாய் வந்துருக்குது. அதப்பாத்துத்தான் கலைஞருக்க்கு ஐடியா வந்திருக்கொ என்னன்வோ? இப்படி சமீப காலமாத்தான் ஒரு பதினைஞ்சு வருஷ்மா பெரிய அளவுல கோடி,ஆயிரம்கோடி, லட்சம் கோடின்னு ஊழல் நடக்குது, மக்களோட பணம் பெரிய கார்ப்பரேட் ஆளுக பாக்கெட்டுக்கு போயிகிட்டு இருக்கு. இல்லன அம்பானி குழுமமொ சன் டிவி குழுமமோ உலகம் பூராவும் தெரியருது மாதிரி பில்லிணியர் ஆகமுடியுமா? அப்படி என்ன திறமை அவங்க கிட்ட இருக்குது? புதுதா வருகிற தலைமுறை அவங்களப் பாத்து மோசடி பண்ண ஆரம்பிச்சா நாடு தாங்குமா? மத்தியில காங்கிரஸ் ஆட்சியானாலும் பாஜக ஆட்சியானலும் இந்த கார்ப்பரேட் ஆளுகளுக்கு புரோக்கர் வேலையைத்தான செய்றாங்க. உண்மையா ஊழல்ல அதிக பலன் அடைஞ்சது கார்ப்பரேட் ஆளுக தான், அரசியல் வாதிங்களுக்கு கிடைக்கிற பங்கு ஏதோ பத்து முதல் இருபது சதம் இருக்கும்.ஆனா கார்ப்பரேட் ஆளுக சீன்ல்யே வருகிறது இல்ல, எல்லாத்தையும் நாங்க தாங்கிக்கிறோம்னு அவங்களுக்கு ஏஜெண்ட் வேலை பார்க்கிற அரசியல்வாதிங்க இடிதாங்கியா ஏத்துகிறாங்க. மீடியாவும் டாடாவையும், அம்பானியையும் இல்ல புதுசா வந்த வேதாந்தா குழுமத்தையும் பத்தி பேசுறதே இல்ல. ஊழலுக்கு முக்கிய காரணம் உலகமயம்ன்னு தெரிஞ்சுபோச்சு.

ஹசாரேயை வைச்சு எப்படியாவது ஆதாயம் பார்க்கலாம்னு இருந்தது பாஜக, தீடிர்னு ஹசாரே காந்தி பிறந்த குஜராத்துல பாலைவிட சாராயம் நிறைய விக்குது, மோடி அரசாங்கம் மோசம்னு பேச ஆரம்பிச்சவுடனே பாபாவை உள்ள கொண்டுவந்துட்டாங்க.எல்லாம் துறந்த? இந்த சாமியாருக்கு வருசத்துக்கு 1000கோடி வருமானம் வருது.யோகா சொல்லித்தரது அப்புறம் எல்லா சாமியார் செய்யறவேலை, மக்களை அரசியல் பக்கம் போகாமா பாத்துக்கிறது. மத்திய அரசாங்கம் மக்களை கொள்ளையடிக்கிற மாதிரி பெட்ரோல் விலையை ஏத்துறது பத்தி இந்த சாமியாருக்கு கவலை கிடையாது, அதுக்கு எதிரா பேசினா அது கார்ப்பரேட்ட்டு ஆளுகளுக்கு எதிரா பேசினமாதிரி ஆயிடுமே?

நம்ம மெடில்கிளாஸ் ஆளுங்களுக்கு தீனி போடுறது மாதிரி பரபரப்புக்கு பஞ்சமே இல்லாம செய்தி சொல்ற இங்கிலீஷ் நீயூஸ் சேனல்கள் ஊழலுக்கு எதிரா அவங்களும் இருக்கிறது மாதிரி காட்டிறாங்க. NDTV யில நீயூஸ் வாசிக்கிற பர்கா தத் மன்மோகன் சிங் அரசாங்கத்துக்கும் கார்ப்பரேட்டு ஆளுகளுக்கு புரோக்காரா இருந்ததை மக்கள் மறந்துட்டாங்களா? எல்லாரும் அனுபவத்துல இருந்து தெரிஞ்சுக்கணும் யாரு உண்மையிலேயே மக்களுக்காக அரசியல் நடத்துறாங்க, இதுவரைக்கும் ஊழல் குற்றச்சாட்டு இல்லாம ரெம்ப காலம் ஆட்சி செய்தவங்க இருக்காங்க. நம்ம நினைக்கிற மாதிரி எல்லா அரசியல்வாதியும் ஊழல்வாதிகள், சுயநலவாதிகள் இல்ல.மீடியா இதுவரைக்கும் இடதுசாரி கட்சிகளை இருட்டடிப்பு செய்றதை கொஞ்சம் கவனிக்கனும். மீடியாக்கள், சாமியார்கள் மாதிரி தீடீர்னு ஊழலை ஒழிச்சிடமுடியாது! அதுக்கு சட்டம் மட்டும் போட்டா போதுமா? செயல்ல காட்ட வேண்டாமா? ஊழலுக்கு முக்கிய காரணம் பொதுச்சொத்துகளை தனியார்மயமாக்கும் போது நடக்குது, அப்புறம் நாட்டோட இயறகை வளங்களை தனியாருக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஏலம் விடும் போது நடக்குது, விலைவாசி ஏறுனா கம்பெனிகளுக்கு லாபம் வர்றதுல ஊழல். அதுக்கு கிளைகள் நிறைய இருக்குது. இந்த கொள்கைகளை அமல்படுத்துற ஆட்சியாளர்கள் அதிகாரிகள் இருக்கிறது வரை ஊழ்லை ஒழிக்கமுடியாது.

வியாழன், 2 ஜூன், 2011

ஏர் இந்தியா இனி மெல்லச் சாகும்....



வாங்கிய பெட்ரோலுக்கு காசு கொடுக்கமுடியாமல் ஏர் இந்தியா 60 விமானங்களை ரத்துசெய்துவிட்டதாக செய்தி வந்துள்ளது. இரு ஆண்டுகளுக்கு முன்பு தனியார் விமான சேவை நிறுவனங்கள் சிக்கலில் தவித்தபோது மத்திய அரசு அவர்களுக்கு பல வரிகளை தள்ளுபடி செய்தும் எரிபொருளுக்கு மானியம் அளித்தும் அவர்களை லாபமீட்டச் செய்தது. ஆனால் ஏர் இந்தியா விமானத்தை அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அரசு அதிகாரிகளும் அமைச்சரவைகளும் தங்கள் சுயலாபத்திற்காக இஷ்டத்துக்கும் விமானத்தை இயக்கி இன்று திவாலாகும் சூழ்நிலைக்கு கொண்டு வந்துவிட்டனர். பிரதமர் அலுவலகம் உட்பட பல அமைச்சரவைகள் வைத்துள்ள கட்டணபாக்கி, லிபியாவில் இந்தியர்கள் சிக்கலை சந்தித்தபோது அவர்களை தாயகம் அழைத்துவந்தது என பலவற்றிற்கும் அரசு பணம் கொடுக்கவில்லை. ஒரு மாதத்திற்கு முன்பு ஊழியர்களின் வேலைநிறுத்தம் அதை காதில் வாங்காத அமைச்சகத்தால் அரசுக்கு வருவாய் இழப்பு மட்டுமல்ல, எதிர்கால வியாபாரமும் பாதித்தது. இப்போது எரிபொருளுக்கு பணம் தராததால் அர்சு பொதுத்துறை நிறுவனமே மற்றொரு பொதுத்துறை நிறுவனத்திற்கு உதவ மறுக்கிறது. பெரும்பாலான உள்ளூர் ,சர்வதேச பயணிகள் ஏர் இந்தியா மீது நம்பிகையை இழந்துவிட்டார்கள்.ஏர் இந்தியாவில் டிக்கெட் எடுத்தால் விமானத்தை எப்போது இயக்குவார்கள் எப்போது கேன்சல் செய்வார்கள் எனப்து தெரியவில்லை.

மன்மோகன் சிங் அரசால் ஒரு விமானசேவையைக் கூட சரிவர நடத்தமுடியவில்லை யென்றால் இதில் மத்திய அரசு ஓரேடியாக “மஹாராஜாவை’ கொல்ல சதி செய்கிறதோ என ஐயம் ஏறப்டுகிறது. ஒவ்வொரு நாடும் தேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தை திறம்பட இய்க்குகிறது. அது ஒரு நாட்டின் பெருமையும் அடங்கியிருக்கிறது, ஏர் இந்தியாவை மூடிவிட்டால் திருவாளர் மன்மோகன்சிங் வெளிநாட்டிற்கு அரசுமுறை பயணத்தில் எந்த ஏர்லைன்ஸில் பயணம் செய்வார். ஏர் இந்தியா மூடப்பட்டால் மத்திய அரசுக்கு ஒன்றும் நஷ்டமில்லை அவர்கள் அதிகமாக காசு கொடுத்து தனியார் விமானத்தில் பறப்பார்கள்.லிபியாவிலும், ஈராக்கிலும் முன்பு குவைத்திலும் உள்நாடு பிரச்சனை ஏற்பட்டபோது அங்கு பணிபுரியும் இந்தியர்களை யார் காப்பாற்றி அழைத்துவந்தார்கள். தனியார் நிறுவனங்கள இக்கட்டான நேரத்திலும் வியாபாரம் செய்துகொண்டிருக்கும். ஏர் இந்தியாவை காப்பற்றவேண்டியது மக்களின் தேவை. உள்ளூரிலும் சர்வதேச அளவிலும் விமான கட்டணங்கள் பங்குச்சந்தை புள்ளிகள போல ஏற்ற் இறக்கம் காணுகின்றன, ஆனால் ஏர் இந்தியாவில் முதலில் புக் செய்தவர்களுக்கு குறைந்த விலையில் டிக்கெட் என நியாயமான கட்டணக்கொள்கை வைத்துள்ளது.

அரசு நிறுவங்களின் தவறான நிர்வாகத்திற்கு ஊழியர்கள் பலியாகிறார்கள், தாய் நாட்டில் இயற்கையில் கிடைக்கின்ற சிறிய அளவு எண்ணெய் வளத்தையும் அம்பானிகளுக்கு எழுதிவைத்துவிட்டார்கள். வருடந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவிக்கின்ற பேலன்ஸ் சீட்டில் நஷ்டக்கணக்கு வந்ததே இல்லை. நாள் தோறும் எண்ணெய் நிறுவனக்கள் சர்வதேச விலை உயர்வால் நஷ்டமடைகின்றன என கூசாமல் பொய்யுரைக்கின்றாரே? பண்டிட் நேருவால் நவ இந்தியாவின் கோவில்கள் என்றழைக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் மன்மோகன் சிங் அரசால் இனிமெல்லச் சாகும்!