இந்தியாவில் தங்களுக்கு தாங்களே சம்பளத்தை நிர்ணயிக்கின்ற உரிமை நமது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் தான் இருக்கிறது. ஆளும்கட்சி எதிர்கட்சி என்றபேதம் இல்லாமல் கொஞ்சமும் கூச்சமில்லாமல் 5 மடங்கு சம்பள உயர்வு வேண்டுமாம். அதுவும் அரசுச்செயலாளர்களை விட 1 ரூபாய் அதிகமாக சம்பளம் வேண்டுமாம். மக்களுக்கு பணியாற்ற தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்காமல் தங்களது சம்பளத்தை விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். 543 உறுப்பினர்கள் உள்ள மக்களவையில் இதை இடதுசாரி உறுப்பினர்களைத்தவிர யாரும் எதிர்க்கவில்லை என்பது வியப்பளிக்கவில்லை. பாராளுமன்றத்தில் முதன்முறையாக சம்பளம் ரூ 350 லிருந்து ரூ 400க்கு உயர்த்தப்பட்ட போது AKG என்படுகிற தோழர் A.K.கோபாலன் “நம்மை இதற்காக மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை” என்று சொன்னதோடு உயர்த்தப்பட்ட சம்பளத்தை ஏற்க மறுத்தார்.
courtesy: "The Hindu"
ஆனால் இன்றைய எம்பிக்களின் நிலைமை வேறு, மக்களவையில் 543 உறுப்பினர்களில் 300 எம்பிக்கள் கோடீஸ்வரர்கள்.சென்ற மக்களவையில் 154 உறுப்பினர்கள் கோடீஸ்வரர்களாக இருந்திருக்கிறார்கள், நல்ல வளர்ச்சி தான். நாட்டிலுள்ள தொழிலபதிர்கள், கோடீஸ்வரர்கள் மக்களாலேயே தேர்ந்தெடுக்கப்பட்டு பாராளுமன்றத்திற்கு செல்கிறார்கள். அப்படிப்பட்ட வாய்ப்புகளை நமது நாட்டில் காங்கிரஸ் கட்சியிலிருந்து புதிதாக முளைக்கின்ற கட்சிகள் வரை தருவதற்கு தயாராக உள்ளனர். ஏனென்றால் முதலீடு இல்லாமல் தொழில் இல்லை. பெருமுதலாளிகளின் தொழில் வளர்வதற்கு பாராளுமன்றமும், சட்டத்தை இயற்றுவதற்கும், மாற்றுவதற்கும் அப்பதவி தேவைப்படுகிறது. விஜய்மல்லயா, எம் ஏஎம் ராமசாமி, அம்பானி, நவீன் ஜிண்டால் போன்றோர் பாராளுமன்றத்தில் யாருக்காக பேசுவார்கள். கோடீஸ்வர எம்பிக்களில் முதலிடம் பெறுவது காங்கிரஸ் கட்சி தான் 203 உறுப்பினர்களில் 138 பேரும், இரண்டாவதாக பாஜகவில் 58 உறுப்பினர்களும் கோடீஸ்வரர்களாக உள்ளனர். தேர்தல் காலத்தில் மொத்த எம்பிக்களும் தங்களுடைய சொத்து பற்றிய விபரம் வெளியிட்டபோது அதன் மதிப்பு ரூ3075 கோடி. ஆனால் உண்மையில் இதன் மதிப்பு பல மடங்கு இருக்கும்.
மக்களிடையே இந்த சம்பள உயர்வு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தாலும் இந்திய பத்திரிகைகள் விமர்சித்து தலையங்கம் எழுதவில்லை, மாறாக “டைம்ஸ் ஆப் இந்தியா” வில் இந்திய எம்பிக்களின் சம்பளம் அமெரிக்க செனட்டர்களைவிட 13 மடங்கு குறைவு என செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க செனட்டர்களின் மாத சம்பளம் இந்திய ரூபாயில் 675,203ம், கனடாவில் எம்பிக்கள் இந்திய எம்பிக்களை விட 11 மடங்கு அதிகமாகவும் வாங்குகிறார்கள்.
இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதம் ரூ399,941ம், ஆஸ்திரிலேயாவில் எம்பிக்களுக்கு ரூ442,485ம் வழங்கப்படுகிறது. ஜப்பானில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ரூ684,000ம் சிங்கப்பூர் எம்பிக்கள் ரூ471,364ம் மாத சம்பளமாக வாங்குகிறார்கள்.
பிரான்ஸ் , இத்தாலி, ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் பாராளுமன்ற உறுப்பினர்கள் முறையே ரூ420,000,ரூ329,220,ரூ461,280 மற்றும் ரூ187,560ம் மாத ஊதியமாக பெறுகிறார்கள்.
அமெரிக்க செனட்டர்களின் சம்பளத்தையும் இந்திய எம்பிக்களின் சம்பளத்தையும் பற்றி எழுதிய பத்திரிக்கை சாதாரண அமெரிக்க பிரஜையின் வாழ்க்கைத்தரத்தையும் இந்திய குப்பன் சுப்பனின் வாழ்க்கைத் தரத்தையும் ஒப்பிடவேண்டும். ஒருவேளை இது முதல்வர் கருணாநிதியின் யோசனையாக இருக்கலாம். அவரும் தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஊதிய உயர்வையும் சென்னைக்கு அடுத்தபடியாக முக்கிய இடத்தில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வீட்டுமனை வழங்க ஏற்பாடுசெய்தவர் தானே. மக்கள் பணத்தை தன் பெயரால் இலவசத்திட்டம் என்று அறிவிக்கிற முறை மன்னராட்சி காலத்தில் கூட இருந்ததில்லை. கொஞ்ச நாட்களில் தமிழ்நாடே கலைஞர் மாநிலம் என்று சூட்டபட்டால் வியப்பில்லை.வாழ்க இந்திய ஜனநாயகம்!!!