வெள்ளி, 6 செப்டம்பர், 2013

நல்லாசிரியர்

ஒவ்வொரு வருசமும் ஆசிரியர் தினம் கொண்டாடுறோம், அரசாங்கம் அந்த தினத்தையொட்டு சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து “நல்லாசிரியர்” விருது கொடுக்கிறது. நம்ம படிச்ச ஸ்கூல்ல நல்லாசிரியர் யாராக இருக்குமென்று ஒரு கேள்வி ஓடியது. ஆரம்பப் பள்ளியில் மாணவர்களை கால்நகத்தை வெட்டச்சொன்ன ஆசிரியரை நினைத்துப் பார்த்தேன், மாணவர்களை வாய்ப்பாடு பாடச்சொல்லிவிட்டு வேட்டி விலகியதுகூட தெரியாமல் தூங்கியவாத்தியார்கள் உண்டு. சேரிப்பிள்ளைகளை அவர் தொட்டு அடிக்காமல் மற்ற மாணவர்களைச்சொல்லி குட்டச்சொன்ன வாத்தியார். வீட்டுவேலைக்கு மாணவர்களை கூப்பிடுகிற வாத்தியார்கள். டியூசனில் படிக்கிற மாணவர்களுக்கு மட்டும் பரீட்சைக்கு வரவுள்ள முக்கிய கேள்விகளை குறித்துக்கொடுத்து எல்லாரையும் டுயூசன் படிக்கத்தூண்டுகிற வாத்தியார்கள். இப்படிப்பட்ட வாத்தியார்கள்தான் நிறையவந்தார்கள். நல்லாசிரியர் என்ற வாத்தியார் தகுதி சிலுவைமுத்து சாருக்கு மட்டும்தான். அவர் வரலாறு பாடம் நடத்துவார், புத்தகத்தை புரட்டமாட்டார், மேப் கண்டிப்பாக மாட்டிவைக்கனும். கடைசி பென்ஞ் மாணவனுக்கு புரியவைப்பது தான் அவருடைய குறிக்கோள். டுயூசன் எடுக்கிற வாத்திமார்களை வைவார், மாணவர்களையும்தான். ஸ்பெசல் கிளாஸ் என்றால் ஒரு பயலும் வரமாட்டான், காசுகொடுத்துப் படிச்சாதான் தரமானது என்ற சிந்தனை மோசமானது என்பார். தினமும் செய்தித்தாளை வாசித்துவிட்டு முக்கிய செய்திகளை சொல்லுவார்.

  “கனவு ஆசிரியர்” என்ற கட்டுரைத்தொகுப்பு சென்ற ஆண்டில் வாசித்தேன், அதை தொகுத்தவர் கே.துளசிதாசன், சமயபுரம் எஸ்.ஆர்.வி. பள்ளியில் முதல்வராக இருக்கிறார். அந்த பள்ளியில் ஆண்டுதோறும் சமூக ஆர்வலர்களை வரவழைத்து கவுரவிப்பது, எழுத்தாளர்களை, கலைஞர்களை அழைத்து மாணவர்களிடம் பேசச்சொல்வது, அறிஞர்களை அழைத்து மாணவர்களுடன் உரையாட வாய்ப்பு அளிப்பது என்ற புதுமுறையை கையாளுகிறார்கள் என்று அறிந்தேன். அந்த துளசிதான் ஆசிரியருக்கு இந்தவருடம் அரசு நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்திருக்கிறது. அந்த நூலில் எழுத்தாள்ர்கள் கல்வியாள்ர்கள் தங்கள் ஆசிரியர்களைப் பற்றி சொல்லியிருக்கிறார்கள். ஆசிரியர்கள் என்பவர்கள் ஏதோ அவருக்குத் தெரிந்தவற்றை மாணவர்களுக்கு உபதேசம் செய்பவர்கள் அல்லர், அவர்களும் மாணவர்களுடன் சேர்ந்து கற்கவேண்டியவர்கள். சந்தேகம் கெட்கிற மாணவர்களை ஆசிரியர்களுக்குப் பிடிக்காது, எனக்குத்தெரிந்து யாரும் புரியவில்லை என்று கேட்டதுகிடையாது. தேர்வில் குறைவான மதிப்பெண் வாங்குகிறவர்களைத்தான் டீ வாங்க அனுப்புவார்கள்.

இரா.நடராஜன் அவர்கள் எழுதிய “ஆயிஷா” நாவல் ஆசிரியர்- மாணவர்கள் உறவைப்பற்றியது. அறிவியல் ஆர்வமுள்ள ஒரு மாணவி பாடப்புத்தகம் அல்லாமல் மற்ற அறிவியல் நூல்களை வாசித்துவிட்டு அத்லிருந்து சந்தேகம் எழுகிறது. விடை ஆசிரியரிடம் இல்லை. புதிய முறைகளை தெரிந்துகொண்டு மாணவியின் சந்தேகத்தை போக்கவில்லை. தேர்வுகளுக்கு நோட்ஸ் லுள்ள விடைகளைத்தவிற சொந்தமான எழுதினால் மார்க் கிடையாது. கேள்வி கேட்டால் அடிக்கிறார்கள். எல்லா பாடநூல்களுக்கும் நோட்ஸ் வந்துவிட்டது அப்போதே! கணிதத்திற்கும் உண்டு. ஆயிஷா என்ற அந்த மாணவி ஒரு ஆசிரியரை புத்தகம் எழுதத்தூண்டினாள். எட்டாம்வகுப்பு படிக்கிற உனக்கு லைப்ரரியிலுள்ள பெரிய ஆங்கிலப்புத்தகம் புரியுதா? கொஞ்சம் கொஞ்சம் புரியுது மிஸ்! ஆனா தாய்மொழியில இருந்தா நல்லாயிருக்கும் நீங்க எழுதுங்க மிஸ் என்று ஆசிரியரை தூண்டுகிறாள். வேதியியல் பிரிவு ஆசிரியர் கொடுத்த அடிகளுக்கு வலிக்காமல் இருக்க நைட்ரஸ் ஆக்சைடு மருந்தை உடலில் செலுத்தி, டீச்சர் எனக்கு இப்ப எதைவச்சி அடிச்சாலும் வலிக்கல மிஸ்! என்று இறந்துபோனாள் என்று முடிகிறது அந்த நாவல். அந்த குறுநாவல் குறும்படமாகவும் வந்துள்ளது www.youtube.com/watch?v=8-BuyTExd_o.

ருஷ்ய நாவலஒன்று “முதல் ஆசிரியன்” சிங்கிஸ் ஐத்மத்தாவ் எழுதியது, நகரிலிருந்து தொலைதூர கிராமமொன்றில் குதிரை லாயத்தை பள்ளிக்கூடமாக மாற்றி பாடம் சொல்லித்தருகிறார். அவருக்கு பாடத்திட்டம் என்றால் என்ன, என்ன சொல்லிக்கொடுக்க வேண்டுமென்பதே தெரியாது. ஆனால் ஆடு, மாடு, குதிரை மேய்த்த குழந்தைகளை வகுப்பறைக்கு கொண்டுசென்றார். அவரிடம் பயின்ற ஒரு மாணவி நாட்டின் சிறந்த கல்வியாளாராக உருவாகி பள்ளியின் ஆண்டுவிழாவிற்காக் அந்த கிராமத்திற்கு வந்தார். அப்போது அவருடைய ஆசிரியர் ஒரு தபால்காராரக உழைத்துக்கொண்டிருந்தார். இதை தழுவியே தமிழில் “வாகைசூடவா” என்ற திரைப்படம் வந்தது. ஆசிரியர் எப்படி இருக்கவேண்டும் என்று சமீபத்தில் வந்த மற்றொரு திரைப்படம் “சாட்டை”.

அரசாங்கப்பள்ளிகளை ஆசிரியர் சமுகத்தைவைத்தே அரசாங்கம் ஒழித்துக்கட்டியது, கட்டணக்கல்வி தான் சிறந்தது என்ற பொதுப்புத்தியை விதைத்த ஊடகங்கள். மாணவர்கள் சேர்க்கை குறைவு என்ற காரணம் காட்டி அரசாங்கப்பள்ளியை மூடிவிட்டு தனியார் பள்ளிகளை ஊக்கும்விக்கும் அரசின் கொள்கை. கல்வி என்பது சாராயவியாபாரிகளின் கையில் இருந்தால் அவர்கள் ஆசிரியர்களை எப்படி நடத்துவார்கள், மாணவர்கள் என்பவர்கள் வெறும் சரக்குகள் தான். சிறந்த ஆசிரியர்கள் தான் சிறந்த சமூகத்தை உருவாக்கமுடியும்.

கருத்துகள் இல்லை: