வெள்ளி, 21 ஜனவரி, 2011

மக்களின் சுகாதாரமும் அரசின் கொள்கையும்

உலகில் வருடந்தோறும் சுமார் ஒரு கோடி மக்கள் மருத்துவத்திற்கு செலவு செய்தே ஏழைகளாகிறார்கள் என்கிறது ஐநாவின் ஆய்வறிக்கை. இந்தியாவிலும் மருத்துவத்திற்கான செலவு வருடத்திற்கு வருடம் அதிகரித்துவருகிறது. அரசு திட்டமிட்டு பொதுசுகாதாரத்தை சீர்குலைத்து வருவதால் மக்கள் தனியார் மருத்துவமனைகளை அதிகமாக நாடவேண்டியுள்ளது. வளர்ந்த நாடுகளில் மக்களின் சுகாதாரம் என்பது அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும் 70 முதல் 90 சதவீத மருத்துவ செலவை அரசே ஏற்கிறது. ஆனால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் சுகாதாரம் என்பதை சந்தைச்சரக்காக மாற்றிவிட்டார்கள்.மூன்றாம் உலக நாடுகளில் மொத்த சுகாதார செலவீனத்தில் அரசின் பங்கு 15- 20 சதவீதம் தான் உள்ளது. தமிழகத்தில் அரசின் திட்டங்களில் மக்களால் மிகவும் வரவேற்கப்பட்ட “கலைஞர் காப்பீட்டுத்திட்டம்” அரசு மருத்துவமனைகளை தற்கொலைப் பாதைக்கு இட்டுச்செல்கிறது. இந்தத்திட்டம் மக்களின் மருத்துவ காப்பீட்டுத்திட்டம் என்பதற்குப் பதிலாக காப்பீட்டு நிறுவனங்களுக்கு நிரந்தர ‘வருமானத்திற்கான’ காப்பீடு என்று சொல்லலாம். நடுத்தர மக்களிடையே இந்தத்திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றதற்குக் காரணம் தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை பெறலாம் என்பதாலேயே. அரசு மருத்துவமனைகளுக்கு நடுத்தரவர்க்க மக்களும் உயர்வகுப்பாரும் செல்வதில்லை, ஏழைமக்கள் தான் அதிகமாக செல்கிறார்கள். அரசு மருத்துவமனைகளின் தரம் அவ்வள்வு மோசமாக உள்ளது. பள்ளி ஆசிரியர்கள் தனியாக டியூசன் எடுப்பதைப் போல அரசு மருத்துவர்கள் தங்கள்வேலை நேரத்திலும் தனியார் மருத்துவமனைகளுக்கு ‘விசிட்’ செய்கிறார்கள், தனியாக கிளினிக் நடத்துகிறார்கள். அரசு பொதுமருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையை சமாளிக்கக்கூடிய மருத்துவர்களோ ஊழியர்களோ இல்லை. இந்தியாவில் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தின் சுகாதாரத்துறை சிறப்பாக செயல்படுகிறது என்று பாராட்டுபெற்றுள்ளது. ஆனால் வருடந்தோறும் காப்பீட்டு என்ற பெயரில் அரசு செலுத்தும் ரூ 750 கோடியை அரசு மருத்துவமனையின் உள்கட்டமைப்பு மேம்படுத்துதல் போதிய ஊழியர்களை நியமித்தல், தேவையான நவீன உபகரணங்களை நிறுவுதல் என்று செய்திருந்தால் மக்களின் நீண்டகால நலனை அடையலாம். இதனால் தர்மாஸ்பத்திரிகளின் செயல்பாடு குறைந்துவிடும். ஆண்டுக்கு ஆண்டு பொது மருத்துவமனைகளை கொஞ்சம் கொஞ்சமாக சீர்குலைத்து விட்டால், தனியார் மருத்துவமனைகள், மருந்தகங்கள் வைப்பது தான் சட்டமாகிவிடும். ஆளும் கட்சியினரும் அவர்தம் உறவினர்களும் செய்கிற தொழிலாக ‘மருத்துவம்’ மாறிவிட்டது. எந்தவிதமான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமலேயே MCIயிடம் லஞ்சம் கொடுத்து ஒரு மருத்துவக்கல்லூரி துவங்குவதற்கான அனுமதியைப் பெறலாம் என்ற நிலையை நாம் கண்டோம். அந்த கேதான் தேசாய், ஸ்பெக்ட்ரம்,ஆதர்ஸ்,காமன்வெல்த் ஊழல் போன்றவற்றால் அரசும் நீதிமன்றமும் அவரை கண்டுகொள்ளவில்லை. மத்தியில் அன்புமணி ராமதாஸ் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது பொதுத்துறை நோய்தடுப்பு மருந்து உற்பத்தி நிறுவனங்களின் ‘தரம்’ சரியில்லை என்று மூடினார். அடுத்த சில மாதங்களில் போலியோ சொட்டுமருந்துக்கு பற்றாக்குறை நிலவியது.பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து பலமடங்கு விலையில் சொட்டுமருந்துகளை வாங்கி மக்கள் பணத்தை வீணடித்தார்கள்.

மருத்துவ காப்பீடுத்துறையில் தனியார் நிறுவனங்களும் பன்னாட்டு நிறுவனங்களும் நுழைந்தவுடன் தங்களின் வருமானத்தை உத்திரவாதப்படுத்த அரசுக்கு ஆலோசனை தருகிறார்கள். மத்திய கிழக்கு நாடுகளில் அரசு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்குகிறார்கள், இதன் மூலம் ஊழியர் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். அரசு நிறுவனங்கள் காப்பீட்டு நிறுவனத்திற்கு வருடத்திற்கொருமுறை பிரிமியம் செலுத்திவிடுகிறது. நடப்பாண்டில் காப்பீட்டு நிறுவனங்கள் புதிய நிபந்தனை விதித்துள்ளது இதன் மூலம் ஒவ்வொருமுறை மருத்துவமனிக்கு செல்லும் போது காப்பீட்டு அட்டையுடன் 25 ரியால் செலுத்தவேண்டும் இதை பயனாளி தான் செலுத்தவேண்டும். அவர் பணிபுரியும் நிறுவனத்திடம் Re-imbursement செய்யமுடியாது. இதன் மூலம் பயனாளி அடிக்கடி மருத்துவமனைக்கு செல்வதை தடுத்து காப்பீட்டு நிறுவனத்தின் வருமானம் அதிகரிக்க வழிவகை செய்துள்ளது.

காப்பீட்டு அட்டையின் மூலம் மருத்துவ சிகிச்சை பெறும்போது கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன, அதை பயனாளியும் கண்டுகொள்வதில்லை ஏனென்றால் அவர் கையிலிருந்து எதையும் கொடுக்கப் போவதில்லை. இப்படி கட்டணங்கள் உயரும் போது காப்பீட்டை பயன்படுத்தாத நோயாளியும் அதிக கட்டணத்தை செலுத்தவேண்டியுள்ளது.