வியாழன், 29 ஆகஸ்ட், 2013

ஸ்டீபன் ஹாக்கிங் - சக்கரநாற்காலியில் சிக்கிய பிரபஞ்சம்.

மனிதர்கள் பிரமிப்பு நீங்காமல் இருப்பது இந்த பிரபஞ்சத்தை பற்றிதான், பிரபஞ்சம் எப்போது தோன்றியது, யாராவது படைத்தார்களா? இன்னும் எவ்வளவு நாள் உலகம் / பிரபஞ்சம் நீடிக்கும்? பூமியில் மட்டும் உயிரினமா? வேற்று கிரகங்களில் மனிதர்கள் உண்டா? குழந்தைகள் எல்லாவற்றையும் வியப்பதைப்போல் மனிதர்கள் பிரபஞ்சத்தை பார்த்து வியக்கிறார்கள். இயற்பியல் விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தின் மர்மான முடிச்சுகளை ஒவ்வொன்றாக கட்டுடைத்துவருகிறார்கள்.அப்படிப்பட்ட விஞ்ஞானிகளில் நீயூட்டன், ஐன்ஸ்டீன் வரிசையி ல் சமகால விஞ்ஞானியாக அறியப்படுபவர்தான் ஸ்டீபன் ஹாக்கிங். பிரபஞ்சத்தைப் பற்றி ஆராய்ச்சி நடந்தாலே கடவுள் உண்டா இல்லையா? என்ற கேள்வி வந்துவிடும். அப்படி பிரபஞ்சத்தின் தோற்றுவாய் குறித்து ஸ்டீபன் ஹாக்கிங்கிடம் கேட்கப்பட்டபோது “அப்படியெல்லாம் ஒருவருமில்லை; அவருக்கு இங்கு வேலையுமில்லை; அப்படியொருவர் இங்கு அவசியமுமில்லை” என்று சொல்லிவிட்டார். பைபிளில் சொன்னதற்கு மாற்றாக சூரியமையக்கருத்தை வலியுறுத்திய கலிலியோவுக்கு தனிமைச்சிறை தண்டனை, புரூனோவை உயிரோடு எரித்துக்கொன்றார்கள். 21ம் நூற்றாண்டில் விஞ்ஞானயுகத்தில் ஸ்டீபனுக்கு அப்படியொரு தண்டனைதந்துவிடமுடியுமா? சரி உட்கார்ந்து பேசுவோம் என்று வாடிகன் நகருக்கு விஞ்ஞானிகளை போப் ஆண்டவர் அழைத்தார், அதில் ஸ்டீபனும் கலந்துகொண்டார், மனம்விட்டுப் பேசினார்கள்.

போப்: கோளம் வெடித்துப்பிரபஞ்சம் தோன்றிய பரிணாமத்தைப் பேசுகிற உங்கள் கோட்பாட்டில், "what place you have assigned for God".

ஹாக்கிங்: In my theory there is no place for God! முற்காலத்தில் மழைக்கென்று ஒரு கடவுளையும், புயலை உற்[பத்தி செய்ய ஒரு கடவுளையும், நோய்வந்தால் அதையும் கூட ஒரு கடவுளின் தண்டனையாகவே கருதினோம். ஆனால் அவையெல்லாம், சில நியதிகளுக்கு உட்பட்டு நிகழ்கிற பிரபஞ்ச நிகழ்ச்சிகள் என்று நாம் இப்போது உணர்கிறோம். அப்போதெல்லாம் கடவுள்தான் எங்கோ உட்கார்ந்துகொண்டு எல்லாச்செயல்களயும் செய்துகொண்டு வருகிறார் என்று நம்பினோம். In those days God was full of jobs; but now we have made God incresingly jobless!

கனத்தமெளனம் நிலவிய சூழ்நிலையில் மறுபடியும்..

போப்: கோளம் வெடித்ததாகச் சொல்கிறீர்களே கோளத்தை வெடிக்கச்செய்தது யார்? who casused the Big Bang?
நிதானமாக...

ஹாக்கிங்: Perhaps there, to cause the Big Bang, We may require a God!

போப்: Thank God! God is there!

விடைதெரியாத கேள்விகளுக்கு எல்லாம் ஈசன்செயல் என்று சொல்வது மாதிரி போப்பிற்கு திருப்தியானவுடன், விஞ்ஞானிகளுக்கு அன்பான ஒரு எச்சரிக்கை விடுத்தார், “ பிரபஞ்சம் எங்கே எப்போது தோன்ரியது என்ற விசயத்தை விஞ்ஞானத்தின் கைகளில் விட்டுவிடமுடியாது, அது கடவுளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் அதில் மூக்கை நுழைக்கவேண்டாம்”.

அடுத்த அமர்வில், “நாம் வாழ்ந்துகொண்டிருக்கிற இப்பிரபஞ்சம், இன்று விரிந்து, விரிந்து சென்று கொண்டிருக்கிறது.ஒரு காலகட்டத்தில் அது சுருங்க ஆரம்பிக்கும்.சுருங்கிச் சுருங்கி மேலும் சுர்ங்கமுடியாத நிலையை அடையும்போது, மறுபடியும் அது விரிய ஆரம்பிக்கும்.விரிய ஆரம்பித்தவுடன் அப்படி, எப்போது தனிமங்கள் உருவாகின’ நடசத்திரங்கள் எவ்வாறு உருவாகின? அவைகளின் கதி என்ன?விதி என்ன? என்பதையெல்லாம் விரிவாக எடுத்துரைக்கும் கணிதங்கள் கைவசம் இருக்கின்றன; இதில் எங்கே கடவுள் வருகிறார்? அவர் வருவதற்கு என்ன அவசியம்; அவருக்கு இங்கே என்ன வேலை?” என்று கொஞ்சம் கடுமையாகவே வாடிகன் அமர்வில் ஸ்டீபன் பேசினார்.

அறிவியல்துறை சார்ந்தவர்களுக்கு மட்டுமே அதுவரை அறிமுகமாயிருந்த ஸ்டீபன் ஹாக்கிங் “A Brief History of Time" என்ற புத்தகத்தை எழுதியதற்கு அவருடைய புகழ் மற்ற மக்களுக்கும் பரவியது, அந்த நூலை எளிமையாக அறிவியல் துறைக்கு அப்பாற்பட்ட மக்களுக்கும் புரியும்வண்ணம் எழுதியிருந்தார். உலகில் அதிகம் விற்பனையான நூல்களில் ஒன்றான இந்த புத்தகம் விற்பனையில் கின்னஸ் சாதனை புரிந்தது, உலகின் 60 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.
                                -------------------

இவ்வளவு பிரபலமான அந்த இயற்பியல்வாதி எப்படி சக்கரநாற்காலியில் சிக்குண்டு கிடக்கிறார், அவருக்கு என்னவாயிற்று? சரியாக கலிலியோ பிறந்தபின் 300 வருடங்கள் கழித்து பிறந்தார் ஸ்டீபன். சாதாரணக்குடும்பத்தில் பிறந்த ஸ்டீபனின் தந்தை ஒரு மருத்துவர், அவருடைய தாயாரும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றவர்.பள்ளிக்கல்வியை முடித்தவுடன், தந்தை தன்னைப்போல் மகனை மருத்துவம் படிக்கவிரும்பினார். ஆனால் ஸ்டீபனுக்கு இயற்பியல் படிப்பதில் ஆர்வம். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இயற்பியலையும் வேதியியலையும் தெரிவுசெய்து படித்தார். அங்கு படித்த மூன்று ஆண்டுகளில் எப்போதும் தனிமையாக இருப்பார், விளையாட்டு எதிலும் ஆர்வமில்லை. ஒரே ஒரு விளையாட்டில் மட்டும் படகுச்சவாரி மட்டும் ஆர்வம். இயற்பியல் பாடம் மற்ற மாணவர்களுக்கு கடினமாக இருந்தது. ஆனால், ஸ்டீபனுக்கோ மிகமிக எளிதாக இருந்தது. ஸ்டீபனுக்கு பிரபஞ்சவியல் பற்றிய படிப்பில் ஆர்வமிருந்தது. அதனால் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பிரபஞ்சவியல் படித்தார். பல்கலைக்கழகத்தில் கடைசிப் பருவம் முடிவுக்கு வந்தநேரம் ஒரு நாள் மாடிப்படிகளிலிருந்து தலைகுப்புற விழுந்தார். பின்னர் தற்காலிகமாக நினைவுகளை இழந்தார். மருத்துவத்துறை அவருக்கு நரம்புமண்டலத்தை தாக்கும் நோய் வந்துள்ளதாக அறிவித்தது.

 
அவருக்கு வந்த நோயை ALS என்கிறார்கள், அமியோட்ரோஃபிக் லேட்டரல் ஸ்க்லீரோசிக் என்ற விளக்கம். இன்னும் புரியவில்லையா? இதற்கு இன்னொரு பெயர் லூ கெஹ்ரிக் நோய். அதாவது முதன்முதலில் லூகெஹ்ரிக் என்ற கூடைப்பந்துவீரரை இந்த நோய் தாக்கியதால் நோய்க்கும் அந்த பெயர் வைத்துவிட்டார்கள். நமது உடலிலிரண்டுவகையான தசைகள் உள்ளன, ஒன்று தானாக வேலைசெய்பவை (இதயம், நுரையீரல்,கிட்னி) இன்னொன்று நமது விருப்பப்படி செயல்படும் உறுப்புகள் (கை,கால்,வாய்,கண்). ALS நோய் வந்தவர்களுக்கு நமது விருப்பப்படி செயல்படும் உறுப்புக்களை இயக்கமுடியாது. நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முதலில் காரணமில்லாமல் கீழே அடிக்கடி விழுந்துவிடுவார்கள், பேச்சு கொஞ்சம்கொஞ்சமாக குளறி விடும்,கை, கால்கள் பலவீனமாகிவிடும் சாப்பிடவோ, எழுதவோ கஷ்டமாகிவிடும்.அப்படி படிப்படியாக தாக்குண்டு 30 ஆண்டுகளாக சக்கரநாற்காலியில் வாழ்ந்துவருகிறார். மனபலம் உடல்பலத்தைவிட வலிமையானது என்பதை தன் வாழ்க்கையில் நிரூபித்துக்காட்டியவர் ஸ்டீபன ஹாக்கிங்.


அவருடைய வாழ்க்கை வரலாற்றை தமிழில் நாகூர்ரூமி “சக்கர நாற்காலியில் சிக்கிய பிரபஞ்சம்” என்ற நூலை எழுதியிருக்கிறார். ஸ்டீபன் ஹாக்கிங்னுடைய இளமைப்பருவம், அவருக்குவந்த நோய், குடும்பம், அவருடைய சாதனை, விருதுகள் என்று எளிமையாக எழுதியிருக்கிறார். மற்றொரு நூல் டாக்டர். அழகர் ராமானுஜம் அவர்கள் “மூலத்தைத் தேடும் முதன்மை விஞ்ஞானி” என்ற நூல் எழுதியிருக்கிறார். 100 பக்க நூலில் 75 பக்கங்கள்வரை ஸ்டீபனுடைய ஆராய்ச்சி, குடும்பம்,கல்வி, கருங்குழி, ஆராய்ச்சிகள், ஸ்டீபன் எழுதிய நூல்பற்றி, இன்னும் ஒரு இயற்பியல்வாதியான இவர் நியூட்டனின் பிரபஞ்சம், ஐன்ஸ்டீனின் சார்பியல் என்று விளக்கிவிட்டு, கடைசியாக வேதாத்ரிமகரிஷி இதையெல்லாம் ஒரு மெய்ஞானியாக சிந்தித்திருக்கிறார், ஸ்டீபன் ஹாக்கிங் வேதாத்ரியின் தத்துவத்தை ஒட்டி சிந்தித்தால் மாமனிதராக வருவார். விஞ்ஞானத்தை ஒரு விஞ்ஞானி முடித்ததில் ஒன்னொருவர் தொடங்குகிறார், அவ்வாறே ஐன்ஸ்டீன் நீயூட்டனின் தோள்மீதிருந்து சிந்தித்தார், ஆனால் மெய்ஞானிகள் ஒவ்வொருவரும் தனித்தனியாக தத்துவங்கள் உருவாக்கினார்கள் என்ற விமர்சனத்தை வைக்கிறார்.

 
 
நியூட்டன் பிரபஞ்சத்தை காலம், வெளி, பொருள் மற்றும் ஆற்றல் என்று நான் அநாதிகள் கொள்கையை ஐன்ஸ்டைன் வெளியும் காலமும் ஒன்றில் அடங்கும்; பொருளும் ஆற்றலும் அவ்வாறே என புதுப்பார்வை கொடுத்தவர் என்கிறார். மூலம் என்பது ஒரு காலகட்டத்திற்கு முன்பு வெடித்த புள்ளி அல்ல, மாறாக அது என்றேன்றும், எங்கெங்கும் நிரந்தரமாக எல்லையற்றதாக உள்ள பெருவெளியே என விஞ்ஞானம் உணர ஸ்டீபன் அயராது முயலவேண்டும், ஸ்டீபன், வேதாத்ரிமகரிஷியாக மலரவேண்டும் என்று டாக்டர். அழகர்ராமானுஜம் அசைப்படுகிறார். அப்படி ஆராய்ந்தால்தான் நீயூட்டன், ஐன்ஸ்டீன் வரிசையில் ஸ்டீபனையும் இணைக்கமுடியும் என்கிறார். இந்த மாதிரி எல்லாம் பிரம்மம் என்று சொலலிவிட்டால் இத்தனை ஆராய்ச்சி தேவையில்லையே!  

கருத்துகள் இல்லை: