சனி, 26 ஜூன், 2010

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையேற்றம்

மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி நாட்டு மக்களுக்கு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகளை உயர்த்தி அதிர்ச்சி கொடுத்துள்ளது. கச்சா எண்ணேயின் விலை சர்வதேச அளவில் உயர்ந்திருக்கிறதா என்று பார்த்தால் அதற்கான அறிகுறி இல்லை. எப்போதும் போல தங்கத்தின் விலை ஊசலாடுவதைப் போல் தான் குரூட் ஆயிலின் விலையும் இருக்கிறது. பின்னர் ஏன் மத்தியஅரசு ஒருலிட்டர்பெட்ரோலுக்கு ரூ.3.50ம் ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.2.00ம் சமையல் எரிவாயு சிலிண்டருக்குக்கு ரூ.35ம் உயர்த்தியது என்று பார்த்தால் அதற்கு பின்னால் Dr. Kirit Parikh வின் recommendataion தான் காரணம்.


பெட்ரோலியப் பொருட்களை விற்பனை செய்யும் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் கச்சா எண்ணை விலை உயர்வால் கடுமையான நிதி நெருக்கடியில் நஷ்டத்தை நோக்கி செல்வதால் இந்த விலை உயர்வாம். நாட்டில் ஏற்கனவே 17% பணவீக்கத்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்து சாமான்யமக்கள் அல்லல்படுகின்றனர். ஏப்ரல் மாதத்தில் தான் பட்ஜெட் முடிந்தவுடன் பெட்ரோல்,டீசல் விலையை “ஒரு ரவுண்ட்” விலை ஏற்றினார்கள். இதற்கு திமுக மம்தா, சரத்பவார் போன்றவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையாம். இவர்களுக்கு மட்டும் இந்தக் கொள்ளையில் பங்கு இல்லையா் என்ன? காரணம் சமையல் எரிவாயுக்கு இன்னும் மானியம் தொடர்கிறதாம்.

இந்த விலையுயர்வு வந்தவுடன் பொதுமக்கள் தரப்பில் கடுமையான கோபம் கொண்டிருப்பார்கள், ஆனால் இந்திய கார்ப்பரேட்டுகளின் அமைப்பான CII, FICCI விழுந்தடித்து வரவேற்றுள்ளது, ஏனென்றால் இதற்கு முக்கிய காரணமே தனியார் எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் கடை திறப்பதற்குத்தானே இந்த விலை உயர்வு. ரிலையன்சும் எஸ்ஸார் நிறுவனமும் நாடெங்கும் சில்லரை விற்பனை நிலையங்களை திறந்துவிட்டு பின்னர் கட்டுபடியாகாமல் மூடிவிட்டது. இப்போதைய “derugulaton" ல் மீண்டும் அவர்கள் சந்தையில் வருவார்கள். சென்ற மே மாதத்தில் தான் தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக CNG எனப்படும் கேஸ் விலையை $1.8 / mmBtu விலிருந்து $ 4.2 வுக்கு உயர்த்தியது இதன் மூலம் கிருஷ்னா-கோதாவரி பேசினிலிருந்து கிடைக்கும் எரிவாயுவை ரிலையன்ஸ் நிறுவனம் $ 4.2 /mmBtu விற்கு விற்றுக்கொள்ளலாம். இயற்கை எரிவாயுவை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் மத்தியரசின் மின்சாரம், உரம் ஆகிய நிறுவனங்களுக்கு ரூ8000 கோடி அதிக சுமையை ஏற்படுத்தியுள்ளது, அதுமட்டுமல்ல டெல்லி, மும்பை போன்ற பெரு நகரங்களில் எரிவாயு மூலம் போக்குவரத்தும் இயங்குகிறது, இதனால் கடைசியில் மக்கள் தலையிலும் சுமை. இந்திய அரசின் பொருளாதார கொள்கைகள் “வர்க்க” ரீதியில் வகுக்கப்படுவது தெளிவாக தெரிய ஆரம்பித்துவிட்டது.


பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த நிதியாண்டில் லாபமே ஈட்டியுள்ளது, அது நஷ்டமடைந்தால் மத்திய அரசு மானியம் அளிக்கலாம். ஏனென்றால் எண்ணெய் நிறுவனங்கள் வாயிலாக customs duty, excise duty, corporate tax, Dividend, sales tax என்று வருடத்திற்கு ரூ 1,61,798 கோடி (2008-09) கிடைக்கிறது. இதிலிருந்து அந்த நஷ்டத்தை தாங்கினால் யாருடைய குடி முழுகிப்போய்விட்டது. மத்தியரசு உண்மையிலேயெ மக்கள் மீது அக்கறை கொண்டால் தான் விதித்த வரியை சர்வ தேச அள்வில் கச்சா எண்ணெய் உயரும் போது மாற்றியமைக்கவேண்டும். பெட்ரோலியப் பொருட்களின் உண்மையான உற்பத்தி விலையை மத்திய அரசு தெரிவிக்கவேண்டும். சர்வதேச விலையில் எரிவாயுவின் விலை ஒரு டன்னுக்கு 700 டாலர் விற்பனையாகிறது. அதை இந்தியபணத்திற்கு மாற்றி போக்குவரத்து செலவைச் சேர்த்தால் 14.2 கிலோ சிலிண்டருக்கு அதிகபட்சமாக ரூ.500 ஆகிறது, இதில் மத்தியரசு மானியம் கொடுப்பது உண்மைதான். ஆனால் டீசலுக்கும் மானியம் தருகிறோம் என்கிறார்கள். சென்ற ஆண்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் வரிகள் இல்லாமல் 28ரூ தான். பெட்ரோலுக்கு மேலே எவ்வளவு சுமைகள்...

Excise duty: Rs 14.35
Education Tax: Rs 0.43
Dealer commission: Rs 1.05
VAT: Rs 5.5
Crude Oil Custom duty: Rs 1.1
Petrol Custom: Rs 1.54
Transportation Charge: Rs 6.00

பொதுத்துறையை வலுப்படுவதற்காக இந்த விலை உயர்வு இல்லை, ஏற்கனவே Disinvestment மூலம் தனியார்மயப் படுத்துவதால் அந்த நிறுவனங்கள் லாபம் பார்த்தேயாக சூழலில் உள்ளது.இந்தியா தன்னுடைய கச்சா எண்ணெய்யின் 74 சதவீதத் தேவையை இறக்குமதியின் மூலம் பெறுகிறது. ஆனால் உள்நாட்டில் கிடைக்கும் 26 சதவீதம் எண்ணெய் வளத்தை பொதுத்துறை நிறுவங்களே துரப்பணம் செய்யலாமே. கையில் உள்ள நெய்யை விட்டு விட்டு வெண்ணெய்க்காக ONGC, GAIL போன்ற நிறுவனங்கள் சூ்டானுக்கும், வெனிசூலாவிற்கும், ரஷ்யாவிற்கும் அலைகின்றன. பொதுத்துறை நிறுவனங்கள் லாபமானாலும் நஷ்டமானாலும் சந்தையில் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கச்செய்கின்றன. இந்தியாவில் லாபம் இல்லாவிட்டால் தனியார் நிறுவனங்கள் உடனே மூடிவிடுவார்கள். பத்தாண்டுகளுக்கு முன்பு காசு கொடுக்காமல் சாலையில் பயணிக்க முடியாது என்று கம்யூனிஸ்ட்கள் கூறினார்கள் அது வேடிக்கையாக இருந்தது, ஆனால் இன்று தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கம் செலுத்தாமல் பயணிக்கமுடியவில்லை. எத்தனையோ வரிகள் சாலைகள் அமைப்பதற்கு அதை டீசலில்,பெட்ரோலில் செஸ் என்று விதிக்கிறார்கள். ஆனாலும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது என்று சாலை, விமானநிலையம், ஹார்பர் எல்லாவற்றையும் தனியார்மயமாக்குகிறார்கள். எங்கே சென்று முடியுமோ தெரியவில்லை.

வெள்ளி, 25 ஜூன், 2010

ஆப்கனில் கனிம வளங்கள்

சமீபத்திய செய்திகளில் ஆப்கானிஸ்தானில் சுமார் 1 டிரில்லியன் டாலர் மதிப்பிலான கனிமவளங்கள் தோண்டப்படாமல் உள்ளன என்பது தான். உடனே ஆப்கானிஸ்தான் உலக சுரங்கங்களின் மையமாக திகழும் அந்த நாட்டின் பொருளாதாரம் உயர்ந்துவிடும் என்ற செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது அல்கயிதா தீவிரவாதத்தை ஒடுக்க போர் தொடுத்தபோது அது இரட்டை கோபுரத்தை தாக்கிய உலக மகா தீவிரவாதத்தை அழிப்பதற்குத் தான் ஆப்கனில் தனது ராணுவத்தை நிலை நிறுத்திவைத்துள்ளது என நம்பப்பட்டது ஆனால் நாளடைவில் வறட்சிமிக்க இயற்கைவளமில்லாத, ஏன் தன்னுடைய உள்நாட்டிற்கே தேவையான உணவளிக்க முடியாத ஒரு நாட்டில் அமெரிக்காவும் அதன் கூட்டணியினரும் ஏன் டேரா போடவேண்டும் என யோசிக்கவைத்தது. ஒருவேளை ஆசியப் பிராந்தியத்தில் பொருளாதாரரீதியாகவும் ராணுவரீதியாகவும் வளர்ந்து வருகிற சீனாவை கண்காணிக்கவும் அதேவேளை இந்தியாவையும் கண்காணிக்கலாம் என ஆப்கனில் தன்னுடைய ராணுவத்தை வைத்திருக்கிறதோ என ஐயம் ஏற்பட்டது. கடைசியில் அந்த நாட்டில் புதைந்துகிடக்கிற கனிம வளங்கள் தான் அதற்கு காரணம் என புலப்படுகிறது.ஈராக் நாட்டை சதம்ஹூசேன் கிருமி,ரசாயன ஆயுதங்கள் வைத்துள்ளார் என ஆரம்பித்து அந்த நாட்டின் எண்ணெய் வளத்தை சூரையாட போர் தொடுத்து சதாம் கொல்லப்பட்டு வேறு அவர்கள் பாணியிலான ஜனநாயக ஆட்சி அமைந்தபின்பும் அமெரிக்க ராணுவம் விலக்கிக்கொள்ளப்படவில்லை. அதே நிலைமை தான் ஆப்கனில் ஏற்படும்.

ஒரு வேளை ஆப்கன் மக்கள் புதிய கனிமவளங்கள் மூலம் தங்கள் நாடும் மக்களும் வளம்பெறுவார்கள் என்று நினைத்தால் அவர்கள் எண்ணம் தவறாக இருக்கும். ஆப்பிரிக்க ஏழைநாடுகளில் காங்கோ,சியாரோ-லியோன், நைஜீரியா போன்றவற்றில் கனிமவளங்கள், தங்கச்சுரங்கம், கச்சாஎண்ணெய் வளம் நிறைந்திருந்தாலும் உள் நாட்டுப் போர்களால் அந்த நாட்டின் மண்ணின் மைந்தர்கள் அடுத்த வேளை உணவிற்காக அல்லல் படுகின்றனர். ஆனால் உள் நாட்டுப் போர்களின் மூலம் பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்கு ஒன்றும்குறைவில்லை. இன்று மூன்றாம் உலக நாடுகளில் அன்னியமூலதனம் என்ற பெயரால் அந்த நாட்டின் செல்வத்தை போர் தொடுக்காமல் பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையடித்துச் செல்கின்றன. இந்தியாவில் கச்சா எண்ணெய் வளம் குறைவாக இருந்தாலும் கனிமவளத்திற்கு குறைவில்லை, ஆனால் இந்த இயற்கை வளம் நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படாமல உலகமயம், தனியார்மயம் என்ற கொள்கையால் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சுரங்கங்களை குத்தகைவிட்டுள்ளனர். ஜார்க்கண்ட், சத்தீஸ்கர்,ஒரிஸ்ஸா போன்ற மாநிலங்களில் இரும்பு, நிலக்கரி, காப்பர், பாக்சைட் போன்ற கனிமங்கள் அதிகமாக இருக்கின்றன. பழங்குடியினர் பெருமளவு உள்ள இந்த பகுதிகளில் தான் கனிமவளங்கள் உள்ளன, அந்த மக்களை காடுகளிலிருந்து விரட்டிவிட்டு அந்த கனிமவளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்க்கின்றனர்.

இந்தியாவில் கிடைக்கக்கூடிய 60% பாக்சைட்,95% குரோமைட், 90% நிக்கல், 70% கிராபைட், 67% மாங்கனீசு, 30% இரும்புத்தாதன் மற்றும் 25% நிலக்கரி ஒரிஸ்ஸாவில் கிடைக்கிறது. அந்த மாநிலம் ஒன்றும் வளர்ச்சி கண்டுவிடவில்லை. அங்குதான் பழங்குடிமக்கள் பட்டினியால் இறந்தனர். ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மாநிலங்களிலும் அதே நிலைமை தான். பாஜக அரசு சிறிய மாநிலங்களாக பிரிக்கப்பட்டால் அந்த மாநிலங்கள் நன்றாக முன்னேறும் என்று சிறிய மாநிலங்களாக மாற்றியமைத்தனர், ஆனால் பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையடிக்கவும் அதற்கு உடந்தையாக மதுகோடா வகையாறாக்கள் ஊழலில் நாறியதும் இந்த நாடறியும். ரெட்டி சகோதரர்கள் அனுமதி பெறாமல் ஆந்திராவிலும் கர்நாடகாவிலும் சுரங்கங்கள் அமைத்து நாட்டிற்கு பெருமளவு அந்நிய செலவானியை? களவானித்தனமாக ஈட்டுத்தந்தனர். இதையெல்லாம் பார்க்கும் போது இயற்கை வளங்களே வேண்டவே வேண்டாம் என எண்ணத்தோன்றுகிறது.உலகமே இன்று கனிமவளங்களுக்காகவும் கச்சா எண்ணெய்க்காகவும் தேடியலைகிறது. ஆனால் இந்தியாவில் கிடைக்கின்ற கனிமவளத்தை பன்னாட்டு நிறுவங்களுக்கு சொற்ப பணத்திற்காக ஏலம்விடப்படுகிறது. கிருஷ்னா-கோதாவரி ஆற்றுப்படுகையில் கிடைக்கும் எண்ணெய் வளத்தை ரிலையன்சிற்கு கொடுத்துவிட்டு GAIL, ONGC போன்ற பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சூடானுக்கும், ரஷ்யாவிற்கும் ஓடுகிறது. இப்போது காப்பர், அலுமினியம் போன்றவற்றை Vedanta விற்கு கொடுத்துவிட்டு இதற்காக ஆப்கனில் உள்கட்டமைப்பை இந்தியா அமைக்கப்போகிறது.

வளர்ந்துவருகிற இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளே பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாறிவரும்போது அமெரிக்காவையே நம்பியிருக்கிற ஆப்கானிஸ்தானால் என்ன செய்யமுடியும்.

திங்கள், 21 ஜூன், 2010

போபால் பற்றிய செய்திகள்....

போபால் விஷவாயு வழக்கில் தீர்ப்பு வந்தவுடன் அதையொட்டி அதிக தகவல்கள் வந்து கொண்டேயிருக்கிறது. யூனியன் கார்பைடு சேர்மன் ஆண்டர்சன் பத்திரமாக அமெரிக்காவிற்கு அனுப்பிவைத்தது யார் என்ற சர்ச்சை இன்னும் நிலவிவருகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியாகாந்தி இதுகுறித்து வாயே திறக்கவில்லை. ஏதோ இரண்டு நாட்களுக்கு முன்னால் தான் சம்பவம் நடந்தமாதிரி பிரதமர் 10 நாட்களுக்குள் அமைச்சரவை சகாக்களிடம் அறிக்கை கேட்கிறார். வீரப்பமொய்லி ஆண்டர்சன் வழக்கு இன்னும் முடியவில்லை, நமது சட்டம் சரியில்லை என்றும் விளக்கம் கொடுக்கிறார்.காங்கிரஸ் கட்சியையும் ராஜீவ்காந்தியின் இமேஜையும் காப்பாற்ற அர்ஜூன்சிங் பலிகடாவாகப் போகிறார்.தினமும் “ஹிந்து”வில் புதிய தகவல்கள் வருகின்றன, அதில் யூனியன் கார்பைடு ஆலைக்கான அனுமதி எமர்ஜென்சி காலத்தில் வழங்கப்பட்டதாக தகவல். 1970 ல் ஆலை அமைப்பதற்கான அனுமதியைக் கோரியிருந்தர்கள். ஆனால் 1975ம் ஆண்டு அக்டோபர் 31ம்தேதி வழங்கப்பட்டது. அமெரிக்காவில் காலாவதியான டெக்னாலஜிக்கு எமர்ஜென்சியில் அனுமதியளித்தால் யாரும் கேள்வி கேட்கமுடியாது.அதற்காக எவ்வளவு லஞ்சம் பெற்றார்களோ.

இந்த விவகாரத்தில் பாஜக ராஜீவ்காந்தி, சோனியாவை விமர்சிக்க கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டது. காங்கிரஸ் பாஜகவின் விமர்சனத்தை எதிர்கொள்ளும்போது புதிய தகவல் சொன்னது, அதாவது யூனியன் கார்பைடின் “டெள கெமிக்கல்ஸ்” யிடமிருந்து 2006-07ல் தேர்தல் நிதியாக ரூ.1 லட்சம் பாஜக வாங்கியுள்ளது என்ற விவரம் தான். அதற்குப் பின்னர் பாஜகவிடமிருந்து மறுப்பே கானோம்.ஆனால் காங்கிரஸ் தவிர 1984க்கு பின்னால் ஆட்சியமைத்த பாஜக இந்த வழக்கிற்காக என்ன செய்தது. மத்தியில் ஆட்சியில்பங்குகொண்ட கட்சிகள் அனைத்தும் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளது. இப்போதாவது போபாலை “சயனைடு” பாதிப்பிலிருந்து சுத்தப்படுத்தவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தகுந்த நஷ்டைஈட்டை “டெள கெமிக்கல்ஸ்” யிடமிருந்து மத்தியரசு பெற்றுத்தரவேண்டும்.

சனி, 19 ஜூன், 2010

கோடிகளில் புரளும் CEO-க்கள்

இந்தியாவிற்குள்ளே இன்னொரு இந்தியாவும் இருக்கிறது, பெரிய இந்தியா என்பது பெரும் எண்ணிக்கையிலான மக்கள் வறுமைக்கோட்டிற்கு இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் சிலர் மதில் மேல் பூனையாக மத்தியதர வர்க்கமாகவும், இல்லாமலும் இருக்கிறார்கள். நாளொன்றுக்கு தனிநபர் ரூ.20 வீதம் செலவு செய்து வாழும் மக்கள் சுமார் 70 சதவீதம் பேர் இந்தியாவில் உள்ளனர் என்று மத்திய அரசு நியமித்த கமிட்டியே கூறியுள்ளது.

மற்றொரு சிறிய இந்தியா என்பது கோடிகளில் புரளும் பெரும் பணக்காரர்கள், இந்திய அரசே இவர்களை முன்னிலைப் படுத்திதான் பொருளாதார கொள்கைகளை வகுக்கிறது. இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனங்களின் CEO க்கள் பெறும் சம்பளமும் சலுகைகளும் பல கோடிகளைத் தாண்டுகிறது.இதில் முதல் இடத்தைப் பிடித்தவர் சன் குழுமத்தின் கலாநிதிமாறன் இவர் வாங்கும் சம்பளம் வருடத்திற்கு 37 கோடி, இவருடைய மனைவி காவேரி கலாநிதிமாறன் இணை நிர்வாக இயக்குனராக சன் குழுமத்தில் பணியாற்றுகிறார், இந்த தம்பதிகளின் வருட சம்பளம் ரூ.74.16கோடி.

இந்தியாவின் முதல் பணக்காரரான முகேஷ் அம்பானி வாங்கும் சம்பளம் வருடத்திற்கு ரூ.15கோடிகள். இவரின் RIL நிருவனத்தில் செயல் இயக்குனர்களுக்கும் ரூ10 கோடிக்கும் மேல் சம்பளம். இதில் முகேஷ் அம்பானிக்கு ரூ.39.36 கோடி அளவிற்கு சம்பளம் வழங்க அனுமதியிருந்தாலும் சிக்கன நடவடிக்கைகாக அவர் சம்பளத்தை ரூ.44 கோடியிலிருந்து (2007-08) 15 கோடிகளாகக் குறைத்துக்கொண்டார். 2007-08ம் ஆண்டிற்கான அதிக சம்பளம் பெற்றவர் முகேஷ் அம்பானி என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போல JSW Steel, atni Computers, Ranbaxy, Hindustan Construction, HDFC Bank, Sobha Developers, Infosys, IndusInd Bank, ACC, GlaxosmithKline Pharma, Crisil, Raymond, Sterlite Industries, Development credit Bank, ICICI Bank, Axis Bank, Nestle India, Yes Bank மற்றும் Rallis India நிறுவனங்களும் தங்கள் நிறுவந்த்தின் CEOக்களுக்கு கோடிகளில் சம்பளம் வழங்குகிறது.

ஆதாரம்: "The Hindu"

அரசியல் எனக்குப் பிடிக்கும்- 5

அரசியல் எனக்குப் பிடிக்கும் - தமிழக அரசு

ஒண்ணரை லட்சம் வருடங்களுக்கு முன்னால் ஆப்பிரிக்காக் கண்டத்தை விட்டுக் கால்நடையாகப் புறப்பட்ட நம் முப்பாட்டிகளும் முப்பாட்டண்களும் பல திசைகளாக பரவிச் சென்றது போல நடந்து நடந்தே தமிழ்நாட்டுக்கும் வந்து சேர்ந்தனர் ஒரே நடையாக ஆப்பிரிக்காவில் பிடித்த நடையைத் தமிழ்நாட்டில் வந்துதான் நிறுத்தியதாக நினைக்க வேண்டாம். வழி நெடுக அங்கு பத்து வருசம் இங்கு முப்பது வருசம் அங்கன ஒரு நூறு வருசம் இங்கன ஒரு ஆயிரம் வருசம் என்று தங்கி தங்கித் தான் வந்து சேர்ந்தார்கள். அப்போது இங்கே மனிதர்கள் யாரும் கிடையாது. பறவைகளும், சில மிருகங்களும் கூப்பாடு போட்டுக் கொண்டு கிடந்தன.

வந்தவர்கள் தண்ணியும், இரையும் கிடைத்த இடங்களில் ஆங்காங்கே சின்ன சின்னக் குழுக்களாகத் தங்கிவிட்டார்கள். ‘இனக்குழுக்கள்’ என்று அக்குழுக்களைக் கூறுவார்கள். மலையும் மலை சார்ந்த இடமுமான குறிஞ்சி நிலப்பகுதியில்தான் முதலில் ‘செட்டில்’ ஆனார்கள். அங்குதான் வேட்டையாட விலங்குகளும் இருந்தன. சாப்பிட காய்கறிகளும் தேனும் தினையும் குடிக்கத்தண்ணீரும் வளமாகக் கிடைத்தன.அப்போது அங்கே அரசு இல்லை. பொதுவுடைமைதான்.

இனக்குழு வாழ்க்கையில் அரசு தேவைப்படவில்லை. மலை சார்ந்த குறிஞ்சியில் மட்டுமல்லாது காடும் காடு சார்ந்த இடமுமான முல்லை நிலப்பகுதியிலும் இனக்குழுக்கள் வாழ்ந்தன. நாம் ஏற்கனவே சொன்னபடி பெண்கள் விவசாயத்தைக் கண்டுபிடித்த பிறகு வளர்ச்சியின் வேகம் கூடியது. வயலும் வயல் சார்ந்த இடமும் அதிகரித்தது. அதற்கு மருதநிலம் என்று பெயர். அது அனேகமாக நதிகளை ஒட்டியே இருந்தது. மருதநிலத்தில் தனிச்சொத்து குவியத் துவங்கியது. தனிச்சொத்து வந்தால் கூடவே அடியாட்களும் அதைத் தொடர்ந்து அரசும் வந்தாகவேண்டுமே. மருத நிலமெங்கும் முதலில் சிறு சிறு அரசுகள் தோன்றின. காவிரி , வைகை, தாமிரபரணி, பெண்ணை, பாலாறு போன்ற நதிக்கரைகளில் சிற்றரசுகள் பல தோன்றின.

சிற்றரசு என்ன சிற்றரசு விவசாயம் செய்யும் நிலப்பரப்பு கொஞ்சமாக இருந்து அடியாட்கள் கூட்டமும் சின்னதாக இருந்தால் சிற்றரசு அடியாட்கள் படை பெருங்கூட்டமாக இருந்தால் பேரரசு அவ்வளவுதான்.

நதிகளைத் திருப்பி சமவெளிகளில் வயல்களை உருவாக்குவதற்கு ஏராளமான ஆள்பலம் வேண்டும். எனவே மருதநிலத்தில் தோன்றிய அரசுகள் குறிஞ்சியிலும், முல்லையிலும் ”சிவனேன்னு” வேட்டையாடிப் பிழைத்துக் கொண்டிருந்த இனக்குழுக்களை வம்படியாக அடித்துப்பத்திக் கொண்டு வந்து மருதநிலத்தி குடியேற்றி “பண்டு விளைந்தறியாக் களர் நிலங்களை” சாகுபடி நிலங்களாக மாற்றக் கடுமையாக உழைக்கச் செய்தனர். கட்டாய உழைப்புதான். காவிரிக்கரையில் கரிகாலன் கட்டிய கல்லணைதான் முத்ன் முதலாக மிகப்பெரிய அளவிலான விவசாயத்தை சாத்தியப்படுத்தியது. அதற்கு ஏற்றாற் போன்ற ஆள் பலத்தையும் அரசையும் தோற்றுவித்தது. அப்போதும் இன்றைய தமிழகம் முழுவதையும் அடக்கிய ஒரு தமிழக அரசு உருவாகி விடவில்லை.

அதியர், ஆவியர், ஆதன், இளையர், உதியர், நவ்வி, ஒளியர், கவுரியர், கழா அர், கிள்ளி, கொங்கர், சென்னி, செழியன், பழவர், பழையர், பஞ்சவர், புலியர், வழுதியர், வில்லோர், மறவர் எனப் பலநூறு தமிழ்இனக்குழுக்கள் அழிக்கப்பட்டு சிற்றரசுகளும் சிற்றரசுகளை அழித்தும் உட்கொண்டும் பேரரசுகளும் தமிழ்மண்ணில் தோன்றின.
கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலிருந்தே இனக்குழுக்கள் “அழிப்பு” துவங்கிவிட்டது. கி.மு. இரண்டு முதல் கி.பி. இரண்டுக்குள் இனக்குழுக்கள் அழிந்து சிற்றரசுகளும் சிற்றரசுகள் இணைக்கப்பட்டு சேர, சோழ, பாண்டிய என்று மூன்று முடியரசுகளும் தோன்றிவிட்டன. முடியரசு என்றதும் ஏதோ பெரிய சாம்ராஜ்ஜியம் என்று நினைத்துவிட வேண்டாம். ரெண்டு, மூணு மாவட்டங்கள் சேர்ந்தால் என்ன சைஸ் இருக்குமோ அதுதான் ஒரு முடியரசு.

தமிழ்நாடு என்ற நினைப்பே அப்போது யாருக்கும் வந்திருக்கவில்லை. நாங்க பாண்டிய நாட்டார், நீங்க சேர நாடு என்ற அளவில்தான் சிந்தனை இருந்தது. அதற்கு அடுத்த காலகட்டத்தில் தோன்றிய சிலப்பதிகாரத்தில்தான் முதன்முறையாக “வட வேங்கடம் தென்குமரி ஆயிடை”. அதாவது இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பு ஒரே நிலம் என்று இளங்கோவடிகளால் கூறப்படுகிறது.

கி.பி. 6-9 காலப்பகுதியில்தான் தமிழ் பேசும் நிலப்பரப்பில் கொஞ்சம் பெரிய அரசுகள் தோன்றின. வட தமிழகத்தில் பல்லவ அரசும் தென் தமிழகத்தில் பாண்டி நாடும் எழுந்தன. எனினும் தமிழகம் முழுவதும் ஆண்ட அரசு உருவானது கி.பி. 9 ஆம் நூற்றாண்டில்தான். அது சோழப் பேரரசுதான். கி.பி 846-ல் பல்லவ அரசின் கீழ் சிற்றரசனாக இருந்த விஜயாலயன் தனி அரசை நிறுவினான். அவனது வாரிசுகள் தொண்டைமண்டலத்தையும் பாண்டிய நாட்டையும் தோற்கடித்துக் கைப்பற்றினார்கள்.

அதற்குப்பின் ராஜராஜசோழனும் ராஜேந்திரசோழனும் பெரும் விஸ்தரிப்புப் போர்களில் ஈடுபட்டனர். தமிழகம் தாண்டிய நிலப்பரப்புகளையும் கைப்பற்றி சோழப்பேரரசை நிறுவினர். அவர்களுக்குப் பிறகு குலோத்துங்கசோழன் ஆட்சிக்காலத்தில்தான் சோழப்பேரரசு அதிக நிலப்பரப்பைக் கொண்டிருந்தது. மூன்று குலோத்துங்கசோழர்களுக்குப் பிறகு சோழப்பேரரசு வீழத்துவங்கியது.


முத்துக்குளிக்கும் துறைமுகங்களின் மூலமாகவும் அரேபியருடனான வாணிபத்தாலும் பெருகிய வருமானத்தின் பலத்தில் படைகளைப் பெருக்கிக்கொண்டு மாறவர்ம சுந்தரபாண்டியனும் சடையவர்ம சுந்தரபாண்டியனும் நடத்திய இறுதிப்போர்களில் சோழப்பேரரசு சரிந்து விழுந்தது. அப்போது காலம் கி.பி.1281. நானூறு ஆண்டுகளுக்கு மேல் தமிழகத்தை ஆண்ட ஒரே அரசு இந்த சோழப்பேரரசுதான்.

அதன் பிறகு கி.பி.1400- வாக்கில் தான் ஒரு பேரரசு ஏற்படுகிறது. அது வெளியிலிருந்து வந்த அரசு. கர்நாடகம், ஆந்திரா, தமிழகம் முழுவதையும் அடக்கிய விஜயநகரப் பேரரசு. கி.பி.1700-களின் நடுப்பகுதி வரை நீடித்தது. அந்த நாயக்கர்களின் அரசு தன் ஆட்சிப் பகுதிகளை 72 பாளையங்களாகப் பிரித்தது. நாயக்கர் ஆட்சியின் சிதைவுக்குப் பின் பாளையக்காரர்கள் தம் இஷ்டம் போல் ஆட்சி நடத்தி வருகிறார்கள்.

அப்போது வெள்ளைக்காரன் உள்ளே வருகிறான் சூழ்ச்சிகள் வஞ்சனைகள் செய்தும் ராணுவ பலத்தைக் கொண்டும் ஆட்சியைப் பிடிக்கிறான். காலனி ஆட்சி துவங்குகிறது. கி.பி.1803-ல் மெட்ராஸ் பிரசிடண்சி-ஐ வெள்ளைக்காரன் உருவாக்குகிறான். அது தமிழ்நாடு, மற்றும் கேரளத்தின் சில பகுதிகளை உள்ளடக்கியதாக அமைந்தது. வெள்ளையனை விரட்டிய பிறகு 1947-ல் புதிய இந்திய அரசு உருவானது. 1956-ல் மொழிவழி மாகாணங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழக அரசு இப்போது உள்ள நிலையில் தோன்றியது.

ஸ்டாப்…… ஸ்டாப்…… இப்படி ஒரேயடியாகக் கதையை இழுத்துக் கொண்டு போனால் எப்படி? இந்த அரசுகள் செய்தது என்ன? வலது சாரியா இடது சாரியா அது அல்லவா முக்கியம்?. தமிழன் கங்கை கொண்டான் – கடாரம் வென்றான் – கலிங்கத்தை வென்றான் என்று சும்மா கதை சொல்லிக் கொண்டே போனால் உடம்பெல்லாம் புல்லரிக்கிறதே. தொழிலாளிகளாகிய நமக்கு இந்த வெட்டிப் புல்லரிப்புகள் தேவையா? வென்று வென்று வந்த இந்தத் தமிழ் மன்னர்கள் அன்றையப் பாட்டாளிகளான ஏழை விவசாயக்கூலிகளுக்கு இருந்தார்களா? அதைச் சொல்லுங்க முதல்ல.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் ஒன்று பார்ப்போம். சோழப்பேரரசில் குட வோலை முறையில் கிராம சபை தேர்ந்தெடுக்கப்பட்டது பற்றி எல்லோரும் ஆகா ஓகோ என்று பேசுவார்கள். அந்தக் காலத்திலேயே தமிழன் ஓட்டுப் போட்டு கிராம சபையைத் தேர்ந்தெடுத்திருக்கிறான் பார்த்தீர்களா. என்னே சோழர்களின் ஜனநாயக உணர்வு என்று பாராட்டுபவர்கள் நிறைய உண்டு. ஆனால் உண்மை என்ன? யாரெல்லாம் கிராம சபைக்குப் போட்டியிட முடியும் தெரியுமா?.

உத்திரமேரூர் என்ற இடத்திலுள்ள சோழர்காலக் கல்வெட்டு இந்தக் குடும்பு என்கிற கிராமசபைக்கு உறுப்பினராகும் தகுதி பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறது.

“கால்வேலி நிலத்துக்கு மேல் இறை நிலம் (அதாவது வரி கட்டும் நிலம்) உடையவனாகவும் தன் சொந்த மனையிலேயே வீடு கட்டிக் கொண்டவனாகவும் முப்பது வயதிலிருந்து அறுபது வயதுக்கு உட்பட்டவனாகவும் வேத சாஸ்திரங்களில் நிபுனனாகவும் இருப்பவனே கிராமசபையின் உறுப்பினனாகமுடியும்”.

இக்கல்வெட்டு தகுதி என்ற பெயரில் பெருவாரியான ஏழை உழைப்பாளி மக்களை ஆரம்பத்திலேயே புறந்தள்ளி விடுகிறது. வேத சாஸ்திரங்களை சூத்திரர்கள் படிக்க முடியாது என்பதை நாம் அறிவோம். ஆகவெ பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியார் யாரும் சோழகாலத்து கிராமசபையில் உறுப்பினராக முடியாது. ஆகவே பண்டைய தமிழக அரசுகள் வலது சாரிகளான நில உடைமமையாளர்களுக்கே ஆதரவாக இருந்தன என்பதற்கு இந்த உதாரணமே போதும். கிராமசபைக்கேப் போக முடியாத பாட்டாளிகள் அரண்மனை அரசியலைப் பற்றி யோசிக்கவே முடியாது.

அது மட்டுமல்ல எந்த அரசாக இருந்தாலும் அதன் தலையாயவேலை மக்களிடமிருந்து வரி என்ற பேரில் அடித்துப்பிடுங்குவது தான். சோழர்கள் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வரிகள் விதிக்கப்பட்டிருந்தன. கொடுமையான முறையில் இவ்வரிகள் வசூலிக்கப்பட்டன. “வெண்கலம் எடுத்து மண்கலம் உடைந்தது” வரி வசூலித்ததாக சோழர்காலக் கல்வெட்டுகள் கூறுகின்றன. அதாவது விலைபோகக்கூடிய பொருட்களை எடுத்துச்செல்வது. விலை போகாத மண்பானை போன்ற பொருட்களை அம்மக்கள் பயன்படுத்த முடியாதபடிக்கி உடைத்து நொறுக்கிப் போட்டுவிடுவது. அரசன் அன்று கொல்லும் என்னும் பழமொழிக்கு இதுதான் அர்த்தம் போலும். ஆண்ட சோழனும் தமிழன். மண்சட்டியும் இழந்த வரிகட்ட முடியாத மனிதனும் தமிழன். வெள்ளைக்காரனை எதிர்த்து வீரமிக்க போர்புரிந்த கட்டபொம்மு உள்ளிட்ட பாளையக்காரர்கள்கூட வரிவசூலில் தம் நாட்டு மக்களைக் கசக்கிப் பிழிவதில் எந்தக் குறையும் வைக்கவில்லை என்பதற்கு அரசாங்க ஆவணங்களே ஏராளமான சான்றுகளாக உள்ளன.

பேசும் மொழி ஒன்றானாலும் இருவரின் வர்க்கங்களும் வேறு வேறல்லவா? இது அன்றைய தமிழக அரசு. இன்றும் கூட தமிழா தமிழா என்று சொல்லி தமிழ் உணர்வைத் தட்டி எழுப்பி தமிழ் நாட்டில் மாறி மாறி ஆட்சி செய்யும் அரசுகள் ஒரு வேற்றுமொழி பேசும் முதலாளியின் ஆலையில் தொழிலாளிகள் வேலைநிறுத்தம் செய்தால் தங்கள் அரசின் காவல்துறையை தமிழ்த் தொழிலாளிக்கு ஆதரவாக நிறுத்துவதில்லை. அரசு என்றாலே அது தனிச்சொத்துக்குப் பாதுகாப்பாக-உழைக்கும் வர்க்கத்தை ஒடுக்குவதற்குத்தான்.

எனவே அது மன்னராட்சி ஆனாலும், காலனி ஆட்சி ஆனாலும் பாளையக்காரர்கள் ஆட்சியானாலும் சொத்தை உருவாக்குகிற பாட்டாளிவர்க்கம் அச்சொத்தின் மீது உரிமை கொண்டாடாமல் பார்த்துக்கொள்வதற்காகவே அரசுகள் இருந்தன.

ஆனால் மக்களே ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுக்கும் இன்றைய மக்களாட்சி இதற்குமுன் இருந்த ஆட்சிகளிலிருந்து வேறுபட்டதா? மக்களுக்கு-பாட்டாளி வர்க்கத்துக்கு அதிகாரம் தந்துள்ளதா?

வெள்ளி, 11 ஜூன், 2010

போபால்: மறுக்கப்பட்ட நீதி

இந்த வாரத்தில் மிகுந்த வேதனையடையச்செய்த சம்பவம் பெரிய விபத்தோ உயிரிழப்பிற்கோ அல்ல 26 ஆண்டுகளுக்கு முன்னால் போபாலில் விஷவாயுக் கசிவினால் ஏற்பட்ட பாதிப்பு மீதான நீதி(?)மன்றத் தீர்ப்பு தான். தாமதமாக வழங்கப்படுகிற நீதியே மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம் என்பார்கள் ஆனால் தீர்ப்பைத் தாமதாக்கி நீதியையே கொன்று விட்டார்கள். குற்றம் சாட்டப்பட்ட 8 பேர்களுக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனையும் ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது மேலும் 25000 பணம் செலுத்தினால் ஜாமீனிலும் செல்லலாம். நீதியை விமர்சிக்கக் கூடாது என்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வேறு, இதை நீதி என்று சொன்னால் இந்திய அரசு மனித உயிரின் மதிப்பை இதைவிட கேவலப் படுத்தமுடியாது. விஷவாயுக்களை மூலப்பொருட்களைக் கொண்ட நிறுவனத்தை நகரின் எல்லைக்குள் எப்படி அனுமதித்தார்களோ தெரியவில்லை. நள்ளிரவில் ஏற்பட்ட விஷவாயுக் கசிவில் அரசாங்கம் கூறும் உயிரிழப்பு மூவாயிரத்திற்கும் அதிகமானோர் ஆனால் உண்மையில் 25000 பேர் உடனடியாக இல்லாவிட்டாலும் அதன் பாதிப்பினால் இறந்திருக்கிறார்கள். இன்னும் அந்த சயனைடு மண்ணில் சென்று நிலத்தடி நீரை மாசுபடுத்தி அதனால் பாதிக்கப்பட்டவர்கள் இலட்சக்கணக்கில்.


முக்கியக் குற்றவாளியான யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவர் வாரண் ஆண்டர்சன் இந்தியாவில் கைதாகி எப்படி ஜாமீனில் வெளியே போனார் என்பது மர்மமாகவே உள்ளது. இப்போது வழங்கப்பட்ட தீர்ப்பிலும் அவரைப் பற்றி ஒரு வார்த்தை இல்லை போலும், அமெரிக்க பிரஜைகள் குற்றவாளி என்ன தீவிரவாதிகளகவே இருந்தாலும் அவர்களை இந்தியா தண்டனைக்குள்ளாக்க முடியாது என்பதை சமீபத்திய டேவிட் ஹெட்லியே உதாரணம். பன்னாட்டு நிறுவனமான யூனியன் கார்பைடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளிக்கவேண்டிய நஷ்ட ஈட்டுத்தொகையான 3.3 பில்லியன் டாலரில் 15% மான 470 டாலரை வழங்கிவிட்டு கைகழுவி விட்டது. பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் முதலீடு என்ற பெயரில் தொழில் தொடங்க வருவது இந்தியாவை வளப்படுத்தவோ இந்திய மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவோ அல்ல, வளர்ந்த நாடுகளில் சுற்றுச்சூழல் பிரச்சனைகளால் அங்கு நடத்த முடியாத பாதுகாப்பற்ற தொழிற்சாலைகளை தான் இங்கு அமைக்கிறார்கள். இதற்கு இந்தியா போன்ற நாடுகள் அவர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பளித்து ஆட்சியாளர்கள் பன்னாட்டு நிறுவனங்கள் வழங்குகிற இலஞ்சப்பணதிற்காக சொந்த மக்களை காவுகொடுக்கிறார்கள்.

தற்போதைய காங்கிரஸ் கூட்டணியரசு “அணுசக்தி இழப்பீட்டு மசோதா” வை நிறைவேற்றத்துடிக்கிறது, இதன் மூலம் அமெரிக்க அணு உலைகளால் எதிர்காலத்தில் இந்தியாவில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அவர்கள் நஷ்ட ஈடு வழங்குவதற்கு உச்சவரம்பையும் நமது அரசு அளிக்க தயாராகயிருக்கிறது. இந்த சமயத்தில் வெளிவந்த இந்த “கருணைமிக்க” தீர்ப்பை பன்னாட்டு நிறுவனங்கள் இருகரம் கூப்பி வரவேற்கும் ஆனால் சர்வதேச சமூகத்தில் இந்தியாவிற்கே தலைகுனிவை ஏற்படுத்தும். தன் மக்களை காப்பாற்றுவதற்கு பதிலாக பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாற்றுவதற்கு நமது சட்டங்கள் பலவீனமாக இருக்கிறதா அல்லாது அவ்வளவு தூரம் வளைத்துவிட்டார்களா?அமெரிக்க அணு உலைகள் இந்தியாவில் அமைக்கும்போது எதிர்காலத்தில் ஏதேனும் விபத்து நடந்தால் நிச்சயம் மக்களுக்கு நீதி கிடைக்காது. அணுசக்தி இழப்பீட்டு மசோதாவை நிறைவேற்ற இந்தியாவிற்கு அமெரிக்கா இன்னும் அழுத்தம் கொடுத்துக் கொண்டேயிருக்கிறது. லாபமே முக்கிய நோக்கமாகக் கொண்டிருக்கின்ற பன்னாட்டு நிறுவனங்கள் சுற்றுச்சூழல் சீர்கேட்டையும் எதிர்கால சந்ததிகளையும் பல்லுயிர்களையும் பற்றி சிறிதும் கவலைப்படாது என்பதை மெக்சிகோ வளைகுடாவில் பிரிட்டிஸ் பெட்ரோலியம் ஏற்படுத்திய எண்ணைக்கசிவிற்கு எவ்வளவு அலட்சியம் காட்டுகிறது என்பது தெளிவாகிறது. எண்ணெய் வளலாபத்தை தனியார் நிறுவனமும் அதனால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் சீர்கேட்டை சரிசெய்ய மக்கள் வரிப்பணத்தை பயன்படுத்துவதையும் நாம் காண்கிறோம்.

இந்தியாவில் அன்னிய நேரடி முதலீடு என்ற பெயரால் சொந்த மக்களை காடுகளிலிருந்து விரட்டிவிட்டு, சுற்றுச்சூழல் சீர்கேட்டால் யார் பாதிப்படைந்தால் என்று அக்கறையில்லாமல் விவசாய நிலங்களை வலிந்து கையகப்படுத்தி தொழில் வளர்ச்சி காணத்துடிக்கிறது. இந்திய மாநிலங்களும் போட்டிபோட்டுக் கொண்டு வரிச்சலுகைகளையும் தடையில்லா மின்சாரத்தையும் தொழிலுக்குகந்த “தொழிலாளர் நலச்சட்டங்கள்” களால் பாதிக்கப்படாமல் SEZ அமைக்கிறார்கள். தொழில் வளர்ச்சி என்ற பெயரால் மேற்கொள்ளப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மக்கள் மன்றத்தில் வைக்கப்பட வேண்டும். வெளிப்படையான நிர்வாகம் நடத்துகிற ஆட்சியாளர்களுக்கு வெள்ளையறிக்கை வெளியிட ஒன்றும் கஷ்டமில்லையே?

செவ்வாய், 8 ஜூன், 2010

மாயாவதியின் சொத்து மதிப்பு

உத்திரப்பிரதேச முதலமைச்சர் மாயாவதி அவர்கள் சட்டமன்ற மேலவைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக மனுதாக்கல் செய்துள்ளார். அதில் தனது மொத்த சொத்து மதிப்பு 88 கோடி ரூபாய் என தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 2007ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டபோது அவர் அறிவித்த சொத்து மதிப்பு 52.27கோடி ரூபாயாகும். மூன்றாண்டு காலத்தில் 35கோடி சொத்தின் மதிப்பு அதிகமாகிவிட்டது. தொண்டர்கள் அணிவித்த பண மாலைகளினால் சொத்து அதிகரித்துவிட்டதா?. தேர்தலில் போட்டியிடும் போது சொத்து மதிப்பு வெளியிடப்பட வேண்டியது வெறும்சம்பிரதாய நிகழ்ச்சி போலத் தெரிகிறது. எப்படி இவ்வளவு சொத்து சேர்த்தீர்கள் என்று கேள்விக்கேட்கவேண்டிய அரசு இலாக்கக்களின் கைகளில் அரசு பூட்டு போட்டு இருக்கிறது. அதை அவ்வப்போது சூழ்நிலைகளின் அடிப்படையில் ஏவி விடுவதும் அடக்கிவைப்பதும் மத்திய அரசின் வேலையாக இருக்கிறது.

பாராளுமன்றத்தில் உள்ள மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் 100 கோடிக்கும் அதிகமாக சொத்துடையவர்களாக இருக்கிறார்கள். சில மந்திரிகளின் சொத்து மதிப்பு மாயாவதியின் சொத்து வளர்ச்சியை விட வேகமாக வளர்கிறது. இவர்கள் கடந்தகாலத்தில் அறிவித்த சொத்துமதிப்பு என்ன என்றோ, அதை ஆராயவோ யாருக்கு நேரமிருக்கிறது.

நாட்டில் அதிகமாக ஊழல் நடைபெறுகிற இடமாக நீதிமன்றங்கள் இருக்கின்றன. இல்லையென்றால் தகவல் அறியும் உரிமைச் சட்டம் நீதிபதிகளுக்குப் பொருந்தாது என்று சொல்லுவார்களா?. ஆனாலும் சில நேர்மையான நீதிமான்கள் தாமாக தமது சொத்துமதிப்பை வெளியிட்டார்கள், மாவட்ட ஆட்சித்தலைவர்களும் கூட சொத்து மதிப்பை வெளியிட்டார்கள்.

கீழ்நிலையில் பணிபுரியும் அரசு ஊழியர்கள்கூட சுயமாகத் தொழில் தொடங்கத் தடையாக இருக்கும்போது உயர்மட்டத்தில் மந்திரிகள் பல தொழில்கள் புரியும் தொழிலதிபர்களாக உள்ளார்கள். தமிழ்நாட்டில் ஆட்சி செய்த ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிய முதல்வர் கோடிகளை குவித்தார், தமிழுக்காகவே தொண்டாற்றிகொண்டே சினிமாவிற்கும் கதை எழுதுகிற முதல்வரின் குடும்பத்தினரும் ஆசியாவில் உள்ள பணக்காரர்களின் பட்டியலில் இடம் பெருகிறார்கள். கேள்விக்கேட்கவேண்டிய அமைப்புகளே லஞ்ச லாவண்யத்தில் மூழ்கிக்கிடக்கிறது. இச்சூழ்நிலையில் வருமானத்திற்கு அதிகமாக யார் சொத்து சேர்த்தால் என்ன?

புதன், 2 ஜூன், 2010

அரசியல் எனக்குப் பிடிக்கும்-4

அரசியல் எனக்குப் பிடிக்கும்-அரசு பிறந்த கதை

அரசு என்கிற இந்த ஏற்பாடு (நீதி, நிர்வாகம், ராணுவம், போலீஸ் என்கிற இந்த ஏற்பாடு) எப்போது தோன்றியது? ஏன் தோன்றியது? என்று பார்ப்பதுதான் இப்போதைக்கு நம்முடைய தேவை.

வரலாற்றில் இரண்டு வகை உண்டு. ஒன்று எழுதப்பட்ட வரலாறு. இன்னொன்று எழுத்து கண்டுபிடிப்பதற்கு முன்பாக நடந்த வரலாறு எனப்படும். எழுதப்பட்ட வரலாறு நமக்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு மட்டும் தான் இருக்கிறது. சில கல்வெட்டுக்கள், மலைக்குகைகளில் வரையப்பட்ட ஓவியங்கள் இவற்றை வைத்துக் கொண்டு மேலும் சில ஆண்டுகளுக்கு முன் பூமியில் நடந்தவற்றை சொல்ல முடிகிறது. எழுதப்பட்ட வரலாறுகளில் எல்லாம் அரசு பற்றியக் குறிப்புகள் இருந்து வந்திருப்பதால் எப்போதுமே அரசு இருந்து வந்ததாக ஒரு கருத்து நம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். ஆனால் மனிதன் பூமியில் தோன்றி லட்சக்கனக்கான ஆண்டுகள் ஆகிவிட்டனவே. எழுதப்பட்ட வரலாறு ஒரு 5000 வருடத்துக்கு உட்பட்டுத்தானே இருக்கிறது.

மனிதன் முதன் முதலில் தோன்றியது ஆப்பிரிக்கக் கண்டத்தில்தான் என்று இப்போது விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்டுவிட்டது. அங்கிருந்து கால்நடையாகப் புறப்பட்ட மனிதன் உலகம் முழுவதும் பரவினான். தன் பிறந்த பூமியான ஆப்பிரிக்காக் கண்டத்தில் அவன் இருந்த போது அரசு கிடையாது.

குரங்குகளில் ஒரு பிரிவு போல அங்கே வாழ்ந்து பிறகு முன்னங்கால்களைத் தூக்கி நட்டமாக நடக்கத் துவங்கிய பிறகு தான் மனிதனான். கூட்டம் கூட்டமாக நடக்கத் தொடங்கிய மனிதன் சாப்பிட கறியும் கிழங்கும் பழமும், குடிக்கத்தண்ணீரும் கண்ட இடங்களிலெல்லாம் தங்கி வாழ ஆரம்பித்தான். அதை ஆதிகால இனக்குழுக்கள் என்கிறோம். கூட்டாக இரை தேடி கூட்டாக வேட்டையாடி கூட்டாக பகிர்ந்து உண்டு வாழ்ந்த அப்போதும் அரசு என்ற எதுவும் கிடையாது. தேவைப்படவும் இல்லை.
அன்றைய காலத்தில் வேட்டையாடிய மிருகங்கள் மற்றும் தேடிக் கோண்டு வந்த பழங்கள், கிழங்குகள் பூராத்தையும் ஒரே நாளில் தின்று முடிக்கவும் முடியாது. அதை மறுநாளைக்கு வச்சிக்கிடலாம் என்று பாதுகாக்கவும் வழி தெரியாது. ஆகவே கிடைத்ததை எல்லோரும் சமமாகப் பங்கிட்டுக் கொண்டனர்.வேறு வழி இல்லை. அந்தக் கட்டத்தில் அரசு தோன்றியிருக்கவில்லை. தனியாக எந்த மனிதனுக்கும் அப்போது சொத்து என்று எதுவும் இல்லை. எல்லாமே பொதுச்சொத்துதான். யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எடுத்து சாப்பிடலாம். பயன்படுத்தலாம். காற்று போல தண்ணீரைப் போல ஆகாயத்தைப் போல பூமியும் அதிலுள்ள அத்தனையும் அப்போது எல்லாருக்கும் பொதுவாகத்தானே இருந்தது. அது தான் ஆதிகால பொதுவுடமை சமூகம்.

அடுத்தகட்டமாக மனிதன் மிருகங்களை வளர்க்க ஆரம்பித்தான். அது மேய்ச்சல் காலத்தின் தொடக்கம். மேய்ச்சல் காலத்தில் நிறைய மிருகங்களை மனிதன் பழக்கினான். அந்த மிருகங்களும் அவற்றை மேய்க்கப் பயன்படுத்திய கருவிகளும்தான் மனித வாழ்க்கையின் முதல் சொத்துக்களாகின.

ஆரம்பத்தில் ஆண்களும் பெண்களும் சேர்ந்து தான் வேட்டைக்குப் போனார்கள். பிரசவம் போன்ற காரணங்களால் வேட்டைக்குப்போக முடியாத பெண்கள் குகைகளில் தங்கி இருந்தபோது மரம் செடிகொடிகளை உன்னிப்பாகக் கவனித்து அவை வளரும் விதத்தை அறிந்தனர். அதேபோல தாங்களும் பயிரிட்டு வளர்க்க முடியும். பகல் பூராவும் மிருகங்களோடு சண்டை போட்டுக்கொண்டு இரை தேடி நாயாக அலைய வேண்டியதில்லை. நாம் இருக்குமிடத்திலேயே எல்லாத்தையும் உண்டாக்க முடியும் என்பதை பெண்கள் கண்டுபிடித்தனர். விவசாயம் வளரத்துவங்கியது. சொத்தும் பெருகலாயிற்று.

சொத்து வந்தாலே தகராறுதானே? என்று சொல்லுவர்கள். ஆனால் உண்மை அதுவா? சொத்து என்பது இயற்கையில் எப்போதும் இருந்து கொண்டேதானே இருக்கிறது. இது என் சொத்து என்கிற “ தனிச்சொத்து” என்பது மனிதகுல வரலாற்றில் எப்போது வந்ததோ அப்போதுதான் பிரச்சனை ஆரம்பமாயிற்று. பொதுச்சொத்தால் பிரச்சனை இல்லை. தனிச்சொத்துதான் பிரச்சனை. தங்களுடைய சொத்தைப் பாதுகாப்பதற்காக சொத்துக்காரர்கள் அடியாட்களை வைத்துக்கொண்டார்கள். சொத்து என்ன பெரிய சொத்து. அன்னக்கித் தேதியில் கொஞ்சம் ஆடு மாடுகளும் ஆடு மேய்க்கிற கம்புகளும் தொரட்டிகளும் கொஞ்சம் தானியம் தவசமும்தான் இருந்திருக்கும். பிறகு தனிச்சொத்து மேலும் பெருகப் பெருக அடியாட்களின் எண்ணிக்கையும் பெருகியது.

இப்படி “தனிச்சொத்து” என்று அதற்கு முன் கிடையாது. ஆரம்பத்தில் எல்லாமே வாலி பாடியதுபோல “கொடுத்ததெல்லாம் கொடுத்தான் இல்லை ஊருக்காகக் கொடுத்தான்” என்கிறபடிதான் இருந்தது. எல்லாத்தையுமே பொதுவுடமையாகத் தான் இயற்கை படைத்தது. வலுத்தவன் இது என் சொத்து” என்று வளைத்துப் போட்டுக்கொண்டு தனியுடமையை இயற்கைக்கு விரோதமாக உருவாக்கினான். எல்லாம் பொதுவாக இருந்தபோது யார் வேண்டுமானாலும் எந்த மரத்திலும் எந்தப் பழத்தையும் பிடுங்கி சாப்பிடலாம். ஆனால் இப்போதோ பசிக்கிதே என்று ஒரு பழக்கத்தைத் தொட்டால் அடியாள் வந்து அடித்து இழுத்துப்போகிறான். தண்டனை தருகிறான்.

இப்படியே நாள் போகப்போக காடுகரையெல்லாம் ஒருசிலர் வளைத்துப் போட மற்றவர்கள் அதில் உழைத்து வாட என்கிற நிலை உருவானது. அது உடைமை வர்க்கம். இது உழைக்கும் வர்க்கம் என்றல் ஒரே நிலையில் உள்ளவர்களின் கூட்டம் என்று அர்த்தம். இவர்கள் உழைத்தால்தான் அவனுக்குச் சொத்து சேரும். அவனுக்குச் சொத்து சேரச்சேர இவர்கள் தேய்ந்து கட்டெரும்பாக வேண்டும்.

இரண்டும் நேர் எதிரான இரண்டு வர்க்கங்களாக வளர்ந்தன. மோதல்களும் அடிக்கடி நடக்காமலா இருக்கும்? உடைமை வர்க்கம் என்பது கொஞ்ச பேர்தான். உழைக்கும் வர்க்கம் தான் பெரும்பகுதி. இரண்டுக்கும் இடையிலான மோதல் வலுத்தது. ஒன்றின் அழிவில் தான் இன்னொரு வர்க்கம் வளர முடியும் என்கிற நிலைமை வந்தது. அப்போது ’சரி சரி நமக்குள்ளே சண்டை வேண்டாம். எது நியாயமோ-எது நீதியோ – எது சட்டமோ அதை ரெண்டு பேரும் ஒத்துக்கொள்வோம்’ என்றது உடைமை வர்க்கம். அவரவர் சொத்து அவரவருக்கு அடுத்தவன் சொத்துக்கு ஆசைப்பட்டால் ஜெயில். இதுதான் சட்டம், நீதி சரியா…என்றது.

ஆதிகாலத்தில் இயற்கையோடு போராடியபோது மனிதர்கள் எல்லோரும் ஆயுதங்கள் வைத்திருந்தார்கள். தனிச்சொத்துக்காரர்கள் அரசு என்பதை உருவாக்கியபோது முதலில் செய்த காரியம் மக்களிடமிருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்ததுதான். ராணுவம், போலிஸ் என்று ஆயுதங்களை வைத்திருக்கும் தனிவகை அமைப்புகளை உருவாக்கிவட்டது. நிராயுதபாணிகளாக உழைப்பாளிகளை வைத்துக்கொண்டு அவர்கள் மீது அதிகாரம் செலுத்துகிறது அரசு. அதனால் தன் அரசு என்பது ’ஒரு ஒழுங்கு முறை செய்யப்பட்ட வன்முறைக் கருவி’ என்றார் லெனின்.

இப்படியாக தனிச்சொத்து என்று ஒன்று இந்த பூமியில் வந்த பிறகு தான் அதைப் பாதுகாப்பதற்காக நீதி, நிர்வாகம், ராணுவம், போலீஸ், ஜெயில் என்று எல்லா இழவும் வந்தது. இம்மூன்றும் சேர்ந்ததுதான் வன்முறைக் கருவி.

“வர்க்கப்பகைமைகள் இணக்கம் காணமுடியாதவை ஆனதன்விளைவாய்த் தோன்றியதே அரசு” என்றார் லெனின்.

சொத்துக்காரன் ஆரம்பகாலத்தில் உண்டாக்கிவைத்த அடியாள் தான் பிற்காலத்தில் ரத கஜ துரோக பதாதிகள் என்றானது. அதற்கும் பிற்காலத்தில் ராணுவம் போலீஸ் என்று சீருடைமாட்டி நின்றது. லெனின் மேலும் கூர்மையாகச் சொன்னார்.

”ஒரு வர்க்கம் பிறிதொன்றை ஒடுக்குவதற்கான உறுப்பே அரசு…. அரசு எனப்படும் சக்தி சமுதாயத்திலிருந்து உதித்தது. ஆனால் சமுதாயத்துக்கு மேலானதாய்த் தன்னை இருத்திக் கொள்கிறது. சமுதாயத்திலிருந்து மேலும் மேலும் அயலானாக்கிக் கொள்கிறது. இந்த சக்தி பிரதானமாய் எவற்றால் ஆனது? சிறைக்கூடங்களையும் இன்னபிறவற்றையும் தமது ஆதிக்கத்தில் வைத்திருக்கும் ஆயுதமேந்திய ஆட்களைக்கொண்ட தனிவகைப் படைகளால் ஆனது”.

மனிதன் தோன்றிய காலம் முதலாக இன்றுவரை உலகத்தில் உருவான அரசுகளை கீழ்க்கணடவாறு வகைப்படுத்தலாம்.

1. ஆதி பொதுவுடைமை சமூகம்: இதை அரசு என்று கூற முடியாது. ஏனெனில் சொத்து எல்லோருக்கும் பொதுவாக இருக்கிறது. மக்கள் இனங்களாக, இனக்குழுக்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வர்க்கமும் இல்லை. வர்க்கப்பகைமையும் கிடையாது.

2. ஆண்டான் – அடிமை சமூகம்: மோதிக்கொண்ட இரண்டு இனக்குழுக்களில் தோற்ற குழு அடிமையானது. ரோம், கிரேக்கம் போல இல்லாவிடினும் தமிழகத்திலும் அடிமை முறை இருந்தது. ”சந்திராதித்தர் உள்ளவரை” “யானும் என் வம்சத்தாரும்” பரம்பரை பரம்பரையாகைருந்தது பற்றி ஏராளமான சோழர் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.

அடிமைகள் ஏலம் போகிறார்கள்

3. நில உடைமை அரசு: நாந்தான் ராஜா , இந்த நாடு பூரா எனக்கே சொந்தம் என்று ஒருத்தன் சொல்லி படை பலத்தால் மக்களை நேரடியாக ஒடுக்குவது. நீதி, நிர்வாகம், ராணுவம், போலீஸ் எல்லாமே அவன் கையில்தான். விவசாயம் தான் அடிப்படைத்தொழில்.

4.முதலாளித்துவ அரசுகள்: இப்போது உலகம் பூராவும் இருப்பது இது தான் இதில் நேரடியாக முதலாளி நம் கண்ணுக்குத் தெரியமாட்டான். அது மக்களாட்சியாக இருக்கலாம் (இந்தியாவைப் போல), ராணுவ ஆட்சியாக இருக்கலாம்(பாகிஸ்தானைப் போல), பாசிச ஆட்சியாக இருக்கலாம். (ஹிட்லரின் ஜெர்மனியைப் போல), ரொம்ப புத்திசாலியான அரசு இதுதான். ஏனெனில் உண்மையான ராஜாவான முதலாளிகள் பின்னணியில் திரை மறைவில் இருக்க அரசு என்பது எல்லோருக்கும் பொதுவானது போல படம் காட்டிக் கொண்டு நீதி, நிர்வாகம், ராணுவம், போலீஸ் எல்லாம் முதலாளிகளுக்கு நேரடியாக சம்பந்தமே இல்லாதது போல மக்கள் நம்பும் விதமாக இருக்கிறது.

5.சோஷலிச அரசு: இதற்கு முன்பு இருந்ததெல்லாம் கொஞ்சப்பேரான உடைமை வர்க்கத்துக்காக பெரும்பான்மையான உழைக்கும் வர்க்கத்தை ஒடுக்கும் அரசுகள். சோஷலிச அரசுதான் உலக வரலாற்றில் முதன் முறையாக பெரும்பான்மையான உழைக்கும்
மக்களின் நலன்களைக் காப்பதற்காக உருவான அரசு. 1917 முதல் 70 ஆண்டு காலம் சோவியத் நாட்டில் இருந்தது. இப்போது மக்கள் சீனம், கியூபா,வியட்நாம், வடகொரியா போன்ர நாடுகளில் இருப்பது.

சரி. இது பொதுவாக அரசு தோன்றி வலர்ந்த கதையாக இருக்கிறது. அரசு என்பதே தனிச்சொத்து உடைமையாளர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு ”சட்டப்பூர்வமான” (!) வன்முறை ஏற்பாடு என்பது பொதுவாகப் புரிகிறது.சொத்து ஆதி காலத்தில் தன்னைக் காத்துக்கொள்வதற்காக ஏற்படுத்திய அடியாள் மற்றும் கூலிப்படைதான் பிற்காலத்தில் போலீஸ், ராணுவம், சிறைஎன்றானது. நாகரிகம் வளர வளர வெரும் அடியாள் மட்டும் வைத்து பெருவாரி மக்களை கட்டுப்படுத்த முடியாது என்பதைப் புரிந்துகொண்ட தனிச்சொத்து (இப்போது அதன் பெயர் மூலதனம்) நீதி , சட்டம், பரம்பரைச்சொத்து அப்படி இப்படி என்று கண்ட கண்ட விசயங்களையும் மக்கள் மண்டையில் ஏத்தி தனிச்சொத்து இருப்பதும் நியாயம் அதைக் பாதுகாக்க அரசு இருப்பதும் நியாயம், தேவை என்று மனப்பூர்வமாக மக்களை நம்பவைத்துவிட்டது.

இப்படியாக பிறந்த அரசு நம்ம தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த கதை நாம் அவசியமாக தெரிந்து கொள்ளவேண்டிய ஒன்று.

--ச.தமிழ்ச்செல்வன்