வியாழன், 1 ஜூலை, 2010

தினமணியின் தலையங்கத்தின் சிறப்பு

ஒரு பத்திரிக்கையின் தரம், அதன் தலையங்கத்தின் பொருள் குறித்து தான் அறியப்படுகிறது. செய்திகளை பல பத்திரிக்கையாசிரியர்கள் எழுதினாலும், பெரும்பாலான் செய்திகள் செய்தி நிறுவங்களிடமிருந்து பெறப்படுகிறது. எந்த செய்தியை தலைப்புச்செய்தியாக வைக்கவேண்டும் எந்த செய்தியை பெரிய எழுத்தில் எழுதவேண்டும்,எந்த செய்தியை மறைக்கவேண்டும் என்பதை முடிவு செய்வது அதன் எடிட்டர் “முதன்மை ஆசிரியர்” தான். அவர் தான் அந்தப்பத்திரிக்கையை பிரதிபலிக்கிறார் என்று சொல்லலாம். தமிழில் வருகிற எல்லா செய்தித்தாளிலும் “தலையங்கம்” வருவதில்லை. தினமணியில் மட்டும் தான் தலையங்கம் எழுதுகிற வழக்கம் இருக்கிறது. தினத்தந்தி, தினமலர்,தினகரன் போன்ற பத்திரிகைகள் தலையங்கம் எழுதுவதில்லை. கட்சி சார்பு பத்திரிக்கைகளான முரசொலி, தீக்கதிர், ஜனசங்கம் போன்றவைகளில் தலையங்கம் பகுதி உள்ளது.

மீடியா என்பது குறிப்பாக பத்திரிக்கைகள் இந்திய மக்களாட்சியில் நான்காவது தூண் என்று சொல்லப்படுவதுண்டு. அரசு எவ்விதம் செயல்படுகிறது, மசோதாக்களின் அம்சம் என்ன, மக்களுக்கு நலத்திட்டங்கள் சென்றடைகிறதா எல்லாவற்றையும் கண்காணிப்பது பத்திரிக்கைகள் தான். தொலைக்காட்சி ஊடகங்கள் மக்களுக்கான பொழுதுபோக்கு சாதனங்களாக மட்டுமே இருக்கின்றன. இன்னும் சொல்லபோனால் இந்தியாவில் முண்ணனியில் இருக்கின்ற பெரும்பாலான தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் மக்களை செய்திகள் பார்ப்பதிலிருந்து பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை மட்டுமே பார்க்கசெய்பவையாக இருக்கின்றன. பிரத்யேகமாக செய்திகளுக்காக உள்ள ஆங்கில தொலைக்காட்சி சேனல்கள் பரபரப்பு செய்திகள் தருபவையாக அதன் மூலம் “ரேட்டிங்” பெற்று அதிக விளம்பரம் பெறும் நோக்கமே உள்ளது. எனவே பத்திரிக்கைகள் தான் முழுமையான செய்திகளுக்காகவே செயல்படுகின்றன என்று கூறமுடியும்.

தினமணியின் பெரும்பாலான வாசகர்கள் அதன் தலையங்கத்திற்காகவும்,நடுப்பக்க கட்டுரைகளுக்காகவும் உள்ளனர். நானும் தினமணியின் வாசகன் ஆனது அதன் கட்டுரை, தலையங்கத்திற்காகத்தான். மேலும் குறைவான விளம்பரங்கள். ஒரு பத்திரிக்கை வாசகர்களையும், விளம்பரத்தையும் சமநிலைப் படுத்தவேண்டும். விளம்பரங்களின் வருவாய்க்காகவே மட்டுமே பத்திரிக்கை நடத்தினால் வாசகர்களை இழக்க நேரிடும். தினமணியின் பெரும்பாலான தலையங்கங்கள் ”பெரும்பான்மை”மக்களின் நலன்களை பிரதிபலிப்பதாகவே இருக்கும். அந்த சமயத்தில் அரசின் கொள்கைகளை விமர்சிக்கவும் துணிவுவேண்டும். சில பத்திரிகைகள் செய்திகளை படித்தவுடன் அதன் “சார்பு நிலை” தெரிந்துவிடும். சில செய்தித்தாள்கள் ஆட்சியாளர்கள் எந்தக் கட்சியோ அதை ஆதரிக்கும் நிலை எடுக்கிறார்கள். அரசையும் ஆட்சியாளர்களையும் பகைக்கவேண்டாம், அரசு கொடுக்கும் விளம்பரவருவாய் பாதிக்கும், சில கெடுபிடிகளையும் சந்திக்கவேண்டும்.

சென்ற பாரளுமன்றத்தேர்தலையொட்டி மிகவும் பரப்பானவை “PAID NEWS" அதில் மஹாராஷ்டிர முதலமைச்சர் சிக்கியுள்ளார். paid news என்பது பத்திரிக்கைகளுக்கு அரசியல் கட்சியோ, தனிநபரோ பணம் கொடுத்து அவர்கள் ஆதாயம் பெறுகிற வடிவில் செய்திகளை வெளியிடுவது தான். இதன் மூலம் பத்திரிக்கைகள் அதன் நோக்கத்தை சிதைக்கின்றன. இது குறித்து மூத்த பத்திரிக்கையாளர் சாய்நாத் நிறைய கட்டுரை எழுதியுள்ளார். இனி தினமணியை பாராட்டிவிட்டு கீழேயுள்ள தலையங்கத்தை பார்ப்போம்...........ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது' என்று கிராமங்களில் பழமொழி சொல்வார்கள். அந்தச் சொலவடை எதற்குப் பொருந்துமோ இல்லையோ, நமது மத்திய ஆட்சியாளர்களுக்குப் பொருந்தும். பல பொருளாதார மேதைகள் (பேராசிரியர்கள்?) நம்முடைய தேசத்தின் நிதி நிலைமையைக் கண்காணிப்பதாலோ என்னவோ, பல அடிப்படை நடைமுறை உண்மைகளையும் தேவைகளையும் தெரிந்து கொள்ளாமல் தொடர்ந்து தவறான முடிவுகளை மட்டுமே எடுக்கிறார்கள் என்று தோன்றுகிறது.

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கட்டுக்கடங்காமல் அதிகரித்தது என்பதைக் காரணம் காட்டிக் கடந்த ஆண்டு பெட்ரோல், டீசல் விலையைக் கணக்கு வழக்கில்லாமல் உயர்த்தியவர்கள், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்து ஏறத்தாழ பழைய நிலைமைக்கு வந்தபோது, அதே அளவுக்கு விலையைக் குறைத்தார்களா என்றால் இல்லை. ஏதோ பெயருக்குக் குறைத்தார்கள். அதிக லாபத்தை நமது எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் அள்ளிக் குவித்தன.

இப்போது சர்வதேசச் சந்தையைக் காரணம் காட்டி மீண்டும் ஒரு முறை பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயுவின் விலையைக் கணிசமாக உயர்த்தியிருக்கிறது மத்திய அரசு. இது போதாது என்று, பெட்ரோல் விலை மீது இருந்த கட்டுப்பாடுகளை முற்றிலுமாக அகற்றி, இனி விலை நிர்ணயம் சர்வதேசச் சந்தையையும், எண்ணெய் விற்பனை நிறுவனங்களையும் சார்ந்து இருக்கும் என்று தீர்மானித்திருக்கிறது.

மேலெழுந்தவாரியாகப் பார்த்தால், இதில் தவறில்லாததுபோலத் தோன்றும். அரசு நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதால் மக்களின் வரிப்பணம்தானே வீணாகிறது என்கிற போலி வாதம் முன் வைக்கப்பட்டு ஏதோ புத்திசாலித்தனமாக நிதி நிர்வாகம் நடத்தப்படுவது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது மத்திய அரசு. உண்மை நிலை அதற்கு நேர் எதிரானது.

பெட்ரோலியப் பொருள்களின் உள்நாட்டு விற்பனை விலை கட்டுப்படுத்தப்பட்டு, சர்வதேசச் சந்தையில் விலை உயரும்போது, பெட்ரோலிய விற்பனை நிலையங்கள் நஷ்டமடைகின்றன என்பதுதான் அரசு முன்வைக்கும் வாதம். ஆனால், இந்த விலையேற்றத்தால் இந்த நிறுவனங்களின் ஒட்டுமொத்த லாபம் பாதிக்கப்பட்டு அவை நஷ்டத்தில் மூழ்குகிறதா என்றால் இல்லை.

பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு போன்ற பொருள்கள் மட்டும்தான் கட்டுப்படுத்தப்பட்ட விலையில் விற்கப்படுகின்றன. இந்த நிறுவனங்களின் என்ஜின் எண்ணெய் போன்ற ஏனைய பொருள்களுக்கு எந்தவித விலைக் கட்டுப்பாடுகளும் கிடையாது. ஆகவே, அவற்றிலிருந்து கிடைக்கும் அதீத லாபம், ஏனைய விலை கட்டுப்படுத்தப்பட்ட பெட்ரோலியப் பொருள்களின் விலை வித்தியாசத்தால் ஏற்படும் நஷ்டத்தை ஓரளவு சரிகட்டி விடுகின்றன. லாபத்தில் சிறிது நஷ்டம் ஏற்படுமே தவிர, நிறுவனமே நஷ்டத்தில் தள்ளப்பட்டுவிடும் அபாயம் கிடையாது என்பதை கடந்த நாற்பது ஆண்டு கால அனுபவம் உறுதி செய்கிறது.

பிறகு ஏன் இந்த திடீர் விலை உயர்வு? இப்படி ஒரு முடிவை நமது மத்திய அரசு எடுக்க வேண்டிய அவசியம்தான் என்ன? இருக்கிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை, பெட்ரோலியப் பொருள்களின் தயாரிப்பு மற்றும் விற்பனையில் அரசு நிறுவனங்களான இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் கம்பெனி, இந்தோ பர்மா பெட்ரோலியம் கம்பெனி ஆகியவை மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தன. அப்போது, சர்வதேசக் கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்படும் நஷ்டத்தையோ, லாபத்தில் குறைவு ஏற்பட்டாலோ, பணக்காரர்கள் மீது சுமத்தப்படும் வரிகள் மூலம் ஈடுகட்ட முடிந்தது.

மேலும், அரசுத்துறை பெட்ரோலிய நிறுவனங்கள், என்ஜின் எண்ணெய் போன்ற ஏனைய பொருள்களின் விற்பனையில் கிடைக்கும் லாபத்தால் தங்கள் நஷ்டத்தை ஈடுகட்டி வந்தன. இப்போது, ரிலையன்ஸ், எஸ்ஸôர் போன்ற தனியார் நிறுவனங்கள் பெட்ரோலிய விநியோகத்திலும், எண்ணெய் சுத்திகரிப்பிலும் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்குத் தங்களது நஷ்டத்தை ஈடுகட்ட, அல்ல அல்ல, லாபத்தில் ஏற்படும் குறைவை சரிகட்ட அரசு உதவாமல் இருந்தால் தகுமா? இந்தத் தனியார் நிறுவனங்கள் தங்களது லாபம் குறைந்தால் அதை நஷ்டம் என்று கூறிக் கூக்குரலிடுவார்கள் என்றுகூடத் தெரியாத, அல்லது தெரிந்தும் தெரியாதவர்கள் போல நடிப்பவர்கள் நமது இன்றைய ஆட்சியாளர்கள் என்றுதான் கூறத் தோன்றுகிறது.

ஒருபுறம், கணக்கு வழக்கில்லாமல் தனியார் வாகன உற்பத்தி நிறுவனங்களை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் நாளுக்கொரு மாடல் பொழுதுக்கொரு புதிய ரக வாகனம் என்று தயாரித்து விற்பனை செய்ய அனுமதிக்கிறது அரசு. அந்த நிறுவனங்களின் விற்பனையை உறுதிப்படுத்த வங்கிகளைக் கடனை வாரி வழங்கச் செய்து, மத்தியதரக் குடும்பங்களைக் கடனாளியாக்கித் தவிக்க வைக்கிறது.

இன்னொரு புறம், பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு என்று எதையும் விட்டு வைக்காமல் விலையை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. பொதுப் போக்குவரத்தையாவது அதிகரித்துக் குறைந்த கட்டணத்தில் பஸ்களும், மெட்ரோ ரயில்களும் இயக்கப்படுகின்றனவா என்றால் கிடையாது. வாங்கும் சம்பளத்தின் கணிசமான பகுதியை வாகன கடனுக்கான தவணைத் தொகையையும், வட்டியையும் அடைப்பது போதாது என்று பெட்ரோலுக்கும், டீசலுக்கும் செலவு செய்து விட்டு, வயிற்றில் ஈரத் துண்டைப் போட்டுக் கொண்டு காலம் கழிக்க வேண்டிய கதிக்கு நடுத்தர வகுப்பு இந்தியனைத் தள்ளியிருக்கிறார்களே, இதுதான் இவர்கள் படித்த பொருளாதாரம் முன் வைக்கும் தீர்வா?

தனியார் நிறுவனங்களின் லாபம் குறைந்துவிடாமல் பாதுகாக்கப் பொதுமக்கள் தலையில் பாரத்தை சுமக்க வைப்பது என்ன புத்திசாலித்தனம்? இதனால் ஏற்பட இருக்கும் தொடர் விளைவான விலைவாசி உயர்வு, சராசரி இந்தியரின் வாழ்க்கையை மேலும் கடினமாக்கப் போகிறதே, அதைப் பற்றி அரசின் பொருளாதார மேதைகளுக்குக் கவலையே கிடையாதா?

என்ன அரசோ? என்ன ஆட்சியோ? என்ன நிர்வாகமோ? கோபம் வருகிறது...!