வியாழன், 9 ஜூன், 2016

நிழல்தரா மரம் - அருணன்

அஞ்ஞாடி நாவலில் வருகின்ற சமணர்கள், ஞானசம்பந்தர், கழுகுமலை, கழுவேற்றம் பற்றி நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தேன் உடனே அவரிடமிருந்து இரண்டு நூல்களைத் தந்தார். ஒன்று ‘மிளிர் கல்’ கண்ணகி கோவலன் கதையோடு சமணத்தையும் அறியமுடிந்தது. மற்றொன்று ‘நிழல்தரா மரம்’ அட்டைப்படத்தில் இருந்த கழுவேற்றம் குறித்த ஓவியங்கள் கோவில்களில் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.கழுவேற்றம் குறித்து எண்ணிக்கையில் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது ஆனால் கழுவேற்றியது என்பது வரலாறு அதுவும் பார்வதியிடம் பால்குடித்த ஞானசம்பந்தரின் எதிரே நடந்திருக்கிறது. அடடா..மதங்கள் அன்பை போதிக்கிறது என்றால் கேப்பையில் நெய் வடிகிறது என்று நம்புவார்களா?

‘மிளிர் கல்’ நாவலில் ஒரு தகவல், இங்கே சமணர்களைப் போல் மேற்கு ஐரோப்பாவில் பதினொன்றாம் நூற்றாண்டில் கதாரிஸம் என்ற கிறிஸ்தவ பிரிவு தோன்றியிருக்கிறது அதற்கும் கத்தோலிக்கத்திற்கும் ஏற்பட்ட அனல் வாதத்தில் கதாரிஸவாதிகள் தோற்றுப்போனார்கள் பின்பு கொல்லப்பட்டார்கள். எனவே நாவலாசிரியர் என்னுரையில் கூறியபடி ‘மதச்சண்டைகள்’ இந்த மண்ணுக்கு புதிதல்ல. மதமாற்றம் அப்போதும் நடந்திருக்கிறது, மதம் வெறும் மக்களை கவர்வதில் மட்டுமல்ல ஆட்சியாளர்களின் மதமாக ஆகவேண்டும் அப்போது தானாக குடிபடைகள் அந்த மதத்தை ஒழுகுவார்கள். தன் மதம் உயர்ந்தது என்பது மட்டுமல்ல பிற மதம் தாழ்ந்தது என்கிற சிந்தனையை சமயவாதிகள் கொள்கைகளாக வைத்திருந்தார்கள் பொதுமக்கள் அப்படியல்ல!பேரா. அருணனின் ‘ கடம்பவனம்’ நாவ்லை நீண்ட வருடங்களுக்கு முன்பே வாசித்திருக்கின்றேன். வரலாற்றை கதையாக சொல்வார். இந்த நாவலில் வர்ணனையை சிறப்பாக கையாண்டிருக்கிறார். ஏழாம் நூற்றாண்டு தமிழகம், சமணம், அப்போதைய உணவு, மொழி, வீடுகள் தெருக்கள் பண்டங்கள் பற்றி நிறைய தேடி படித்து இந்த நாவலை உருவாக்கியிருக்கிறார். இப்போதே அந்த ‘யானை மலைக்கு’ போகவேண்டும் சமண பள்ளிகளையும் சிற்பங்களையும் பார்க்கவேண்டும் என்ற ஆவல் மேலிடுகிறது. எண்பெரும் குன்றங்களுக்கு யானை மலையே தலைமை. அந்த குன்றங்களை கிரானைட் வியாபாரிகள் அழிக்கும்போது வரலாற்றியலாளர்களின் கண்களில் ‘தருமநாதன்’க்கு ஏற்பட்ட உணர்வே பொங்குகிறது நிலைமை கைமீறி போய்விட்டது.

ஒர் காலத்தில் செழுத்தோங்கிய சமணம் இன்றைய தமிழ்நாட்டில் தேடினாலும் கிடைக்காது, மன்னர்களை ஒற்றி மக்கள் மாறிவிட்டார்கள் ஆனால் அந்த குன்றங்கள் எல்லாம் என்னவாயிற்று! தொ.ப.வின் கட்டுரைகளை வாசித்தால் கோவில்களுக்கு கீழே சமணர்கள் அருகர்கோவில் இருக்கும். அவருடைய ‘அழகர் கோவில்’ நூலை வாசிக்கவேண்டும். வாசிக்கும்போது வைதிக மதங்களான வைணவம், சைவம் தங்களுடைய முரண்பாடுகளை ஒத்திவைத்து பொது எதிரிகளான அவைதிக மதங்களை ஒழிக்க நினைக்கும்போது சமணம் ஆபத்திலிருந்து காத்துக்கொள்ள பெளத்ததோடு  கூட்டணி வைக்கவில்லை. இந்த கூட்டணி தற்போதைய தேர்தல் கூட்டணியை நினைவுபடுத்துகிறது. 

அரிகேசரி மாறவர்மன் சோழநாட்டின் மீது போர்தொடுத்து வென்று சோழ இளவரசியான மங்கையர்கரசியை மணந்துகொண்டான். சமணத்தை ஒழுகி வந்தான். அவன் மனைவி சிவனை வழிபட்டார் அதை அனுமதித்தார். சமணர்கள் கண்டு முட்டு, கேட்டு முட்டு என்று வைதிகவாதிகளை காண்பதும் அவர் சொற்களை கேட்பதும் ஆகாது என்றிருந்தார்கள். குலச்சிறையார் என்ற மந்திரியும் மங்கையர்கர்சியும் ஞானசம்பந்தனை அழைத்துவர்கிறார்கள். பின்னர் மன்னருக்கு வெப்புநோய் வருகிறது, சமண வைத்தியர்களின் மருந்தால் பிணி தீர்க்கமுடியவில்லை. சம்பந்தர் வலியை குணமாக்கினார். மன்னர் கரைந்தார். சமணர்களுக்கு ஐயம், இந்த நோய் சோழதேசத்திலிருந்து வந்திருக்கிறது, எச்சிலால் பரவும். நோய் தீர்த்தவனே நோயை கொடுத்திருக்கிறான். கம்ப்யுட்டர்களில் Antivirus software விற்பவனே  virus ஐ பரப்புவதுபோல!

இப்போது அரசர் வைதிகத்திற்கு போய்விடுவாரோ என்கிற கவலை சமணமுனிகளுக்கு, அதனால தங்கள் மதம் உயர்ந்தது என்பதை வாதில் நிருபிக்கிறோம் என்று வாதிற்கு அழைக்கிறார்கள். வாதில் நிச்சயம் தோற்றுவிடுவோம் என்று வைதிகர்கள் , அனல்வாதத்திற்கு அழைக்கிறார்கள். தீயில் அவரவர் ஓலைகளை போடுகிறார்கள். சம்பந்தர் போட்ட ஓலை எரியவேயில்லை. சமணர்கள் தோற்றார்கள், இப்போதும் வாதிற்கு அழைக்கிறார்கள் புனல்வாதத்திற்கு வாருங்கள் வென்றால் வாதிற்கு வருகிறோம் என்கிறார்கள் சைவர்கள். புனல்வாதத்தில் தோற்றால் சமணத்தை விட்டு சைவத்தை ஏற்கவேண்டும் என்ற நிபந்தனையை மறுத்து கழுமரம் ஏறுவோமெ தவிற சைவத்தை ஏற்கமாட்டோம் என்கிறார்கள். புனல்வாதத்திலும் வைதிகர்கள் வென்றார்கள், சூழ்ச்சிகளையும் தந்திரங்களையும் சமணர்கள் அறியவில்லை. எண்பெருங்குன்றங்களிலிருந்த சமணத்துறவிகள் கழுமரம் ஏறுகிறார்கள். அந்த இடமே ‘சாமநத்தம்’ அன்றழைக்கப்படுகிறது. சமணர் ரத்தம் என்பதே மருவி வழங்குகிறது.

மன்னர் சைவத்திற்கு மாறினார், குடிபடைகள் எல்லாம் சைவத்திற்கு ஒழுகின, சமணத்தை வளர்த்த வணிகர்களும் மாறிவிட்டார்கள். சமணம் கருவருக்கப்பட்டது. அழியாமல் இன்றைக்கு மிச்சமிருப்பது அதன் சிற்பங்களும் இலக்கியங்களும். திருக்குறள், தொல்காப்பியம் சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி என தமிழுக்கு சமணம் அளித்துள்ள கொடையை தமிழர்கள் மறந்தார்கள். பிற உயிர்களுக்கு எந்த தீங்கும் இழைக்கக்கூடாத என்கிற சமண நெறி. கடுமையான துறவு, துறவிகள் ஆடைகள் அணியக்கூடாது, எதையும் சொந்தமாக வைத்துக்கொள்ளக்கூடாது, சூரியன் மறைவதற்கு முன்பே உணவறுந்தவேண்டும், விளக்குகள் கூட ஏற்றக்கூடாது பூச்சிகள் இறந்துவிடுமே, பல்தேய்த்தால் கிருமிகள் அழிந்துவிடுமே! குளித்தாலும் அப்படியே! வெளிச்சம் இல்லாவிட்டால் நடக்கமாட்டார்கள், பகலில் மயில்தோகைகளைக் கொண்டு தரைய பெருக்கிக்கொண்டே நடக்கவேண்டும், பெண்களுக்கு முக்கியத்துவம் இல்லை இதனாலும் மக்களிடமிருந்து அந்நியப்பட்டது சமணம்.

இந்த நூலை வாசித்துமுடித்தபோது, மதுரையை பார்க்கவேண்டும், நீலகேசியை வாசிக்கவேண்டும் யானைமலையை பார்க்கவேண்டும். வேதங்கள் யாராலும் இயற்றப்படவில்லை அது சுயம்புவானது என்று வைதீகர்கள் கூறும்போது நீலகேசி சொல்கிறார்.

யாரது செய்தவர் அறியில்
இங்கு  உரை எனின் ஒருவன்
ஊரது நடுவண் அங்கு ஓர் உறையுளில் 
மலம்பெய்திட்டு ஒளித்து ஒழியின்
பேரினும் உருவினும் பெறல்
இலனாதல் இன்றா குறித்து
தேரினும் இனி அது செய்தவர்
இல்லெனச் செப்புவே’’

சமணத்தையும் தமிழக வரலாற்றின் ஒரு காலகட்டத்தையும் மதங்களையும் அறிந்துகொள்ள இந்த நாவல் வாசிக்கப்படவேண்டும்.
பேரா.அருணன் தமிழுக்கு அளித்துள்ள கொடைஎனலாம்.


மிளிர் கல்- இரா.முருகவேள்

மிளிர் கல்
---------------
புத்தாயிரத்திற்குப்பின்னர் வந்த நாவல்கள் என்ற தலைப்பில் எஸ்.ரா அவர்கள் பரிந்துரைத்த நாவல், அதோடு நீண்ட நாட்களுக்கு முன்பே நண்பர் வாசித்த அனுபவத்தை சொல்லியிருந்தார் அதனால் அவரிடமே வாங்கி வாசித்து முடித்தேன், முல்லையும் நவீனும் கண்ணகி புகாரிலிருந்து கொடுங்களூர் வரை பயணித்த தடத்தை ஆவணப்படமாக்கும் போது எதிர்பாராத விதமாக ஸ்ரீகுமாரை சந்திக்கிறார்கள். அவரை சந்திக்காவிட்டால் இவர்களது பயணம் எப்படியிருக்கும்?
ஒரு தமிழ்ப்பேராசிரியருக்கும் தொல்பொருள் ஆய்வாளனுக்குமுள்ள வித்தியாசம் என்ன?
காங்கேயம் காளைகளுக்குத் தான் பெயர் போனது என்று நினைத்திருத்தேன், இவ்வளவு வளமிருக்குதா?
அசோகர் கலிங்கத்தை வெல்வதற்காக புத்த சமயத்தை தழுவினாரா? டிடிகோசாம்பியின் நூல்களை படிக்கத் தூண்டுகிறது. கலிங்கப்போரில் எண்ணற்ற உயிர்கள் கொல்லப்பட்டது உண்மையில்லையா? இந்த ஐயம் தீர்க்கப்படவேண்டும்.
ஏன் சமண, பெளத்ததிற்கு மாற்றாக சைவம் தோன்றியது அதற்கான விடைகள்.
குஜராத்தில் வைரம், கற்கள் பட்டை தீட்டும் தொழில் நடக்கிறது என்பதை அறிந்தோம், அந்த பட்டை தீட்டும் தொழிலாளர்களின் பாதுகாப்பற்ற பணிச்சூழல் இத்தனை மரணங்களும் சுவாச நோய்களும் ஏற்படுகின்றன என்பதை ஊடகம் சொல்லவில்லை! குழந்தைத் தொழிலாளர்கள், கொத்தடிமை முறை மூலம் லாபம் கொழிக்கிறது!
நாவலில் முல்லையும், நவீனும் ஆவணப்படத்திற்கு பயணிக்கும்போது சீரிகுமாருடன் உரையாடும்போது தொ பரமசிவன் கட்டுரைகளை வாசித்தது போல இருந்தது. நாவலில் பாத்திரங்களுக்கு தேடல் இருந்தது. வாசித்து முடித்தபின் அந்தத்தேடல் வாசகனைத்தொற்றிக்கொண்டது.
பூம்புகார் திரைப்படத்தை பார்த்தாகிவிட்டது, இனி சிலப்பதிகாரம், கோசாம்பியின் நூல்களையும் சமணம் பெளத்தம் சார்ந்த நூல்களையும் வாசிக்கவேண்டும். இந்த நாவல் வாசகனை மேலும் பரந்த வாசிப்பிற்கு இட்டுச்செல்கிறது.
இரா. முருகவேல் அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்!