வெள்ளி, 20 செப்டம்பர், 2013

ஒற்றை வைக்கோல் புரட்சி - மசானபு ஃபுகாகோ

இயற்கை வேளாண்மை பற்றி இப்போது அதிகமாக பேசப்பட்டுவருகிறது, இதை பயன்படுத்தி ரசாயண உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், நாட்டு விதைகள் என பாரம்பரிய விவசாய முறையில் விளைந்த காய்கறிகள், பழங்கள, தானியங்கள் என அதையும் ஒரு வணிக நோக்கத்தில் அதிகவிலைக்கு விற்றுவருகிறார்கள். உண்மையாக ரசாயண உரம், பூச்சிமருந்து செலவில்லாமல் விதைத்து அறுவடை செய்யும் பயிருக்கு ஏன் அதிகவிலை என்று கேட்கலாம், சிலர் அந்த முறையில் விளைச்சல் குறைவு, பூச்சிகளால் பயிர் தாக்குறும்போது இன்னும் குறைந்துவிடுகிறது அதனால் அத்கவிலைக்கு விற்றால் தான் கட்டுபடியாகும் என்பது சிலர் வாதம், தற்போது வேதியல் உரங்கள், பூச்சிமருந்துகள் ப்யன்படுத்திவரும் விவசாயி கூட இயற்கை முறைக்கு மாறினால் விளைச்சல் அதிகமிராது என்றே எண்ணுகிறார். இந்த எண்ணத்தை தவிடுபொடியாக்கியவர் ஜப்பானில் இயற்கை வேளாண்மையை ஆய்வுசெய்து தன்னுடைய வாழ்க்கையை அதே விவசாயத்தில் செலவிட்ட மாசானபு ஃபுகாகோ அவர்கள்.

அவர் சொல்கிறார், “இயற்கை வேளாண்மை என்பது வேட்டையாடி உணவு சேகரித்த காலம் ஒன்றுதான் இயற்கை வேளாண்மைக்காலம். ஒரே இடத்தில் மனித சமூகம் தங்கி வாழ்க்கை நடத்துவதற்கு பயிர்கள் வளர்க்கப்பட்டது என்பது கலாச்சாரக் கண்டுபிடிப்பு”.அதற்கு அறிவும் தொடர்ச்சியான முயற்சியும் தேவைப்படுகிறது. ஃபுகாகோவின் முறையிலுள்ள முக்கியவேறுபாடு என்னவென்றால், அது இயற்கையோடு ஒத்துழைப்பதில் இருக்கிறது. இயற்கையை ஆக்ரமித்து அதை ‘மேம்படுத்து’ வதில் அல்ல. ஜப்பானில் யகோஹாமா நகரில் நுண்ணியிரிகள் நிபுனராக வாழ்க்கையைத் துவக்கினார், தாவர நோய்கள் குறித்த நிபுணராக உருவான அவர் ஒரு சோதனைச்ச்லையில் சில ஆண்டுகள் பணிசெய்துவிட்டு மீண்டும் தன்னுடைய கிராமத்திற்கே திரும்பினார். அப்போது அவர் தரிசு நிலத்தின் வழியாக சென்றபோது அங்கே நெற்பயிர்கள் நல்ல திரட்சியான தானியங்களோடு விளந்திருப்பதை பார்த்து அதிசயித்தார். ஒரு உழாத,உரமிடாத, பூச்சிமருந்து தெளிக்காத, களைபறிக்காத நிலத்தில் எப்படி பயிர் செழிப்பாக வளர்ந்ததைப் பார்த்தபின் அவருக்கு ‘எதையுமே செய்யாமல் விவசாயம் செய்யவேண்டும்’ என்ற ஆர்வம் ஏற்பட்டது, தன் தந்தை பார்த்துவந்த விவசாயத்தில் இவர் ஏற்பட்த்திய மாற்றங்கள் சில ஆண்டுகள் தொடர்ச்சியாக நஷ்டம் ஏற்பட்டதுண்டு. செய்முறைகளை மாற்றி மாற்றி அனுபவத்தில் கற்ற பாடம் நிலத்தை பாழ்படுத்தாமல் வேதியல் உரங்கல், பூச்சிக்கொல்லி மருந்துகள் என பயன்படுத்தி உற்பத்தி செய்த தானியங்களைவிட அதிக மகசூல் எடுத்தார்.  மனிதர்கள் ‘அதிக உற்பத்தி’ அல்லது ‘அதிக தர’த்துக்காக உழைக்காமல், மனிதகுல நன்மைக்காக உழைகும்போது அவர்கள் உழைப்பு சிறந்து விளங்குகிறது. ஆனால் தொழில்மயப்படுத்தப்பட்ட வேளாணமையின் தாரக மந்திரமோ ‘அதிக உறப்த்தி’ யாக உள்ளது. ஃபுகாகோ மேலும் சொல்கிறார், “வேளாண்மையின் இறுதி லட்சியம் பயிர்களை வளர்ப்பதல்ல; மனிதர்களை வளர்த்து முழுமை பெறச்செய்வதுதான்” என்கிறார். 1975ம் ஆண்டில் அவர் எழுதிய one straw revoultion என்ற புத்தகம் எழுதியதைத் தொடர்ந்து ஜப்பானில் இயற்கை வேளாண்மை குறித்த ஆர்வம் வேகமாகப் பரவியுள்ளது.

இயற்கை வேளாண்மையின் நான்கு அடிப்படைகள்:

1. மண்பதப்படுத்துதல் : நாம் மண் பதப்படுத்துவதற்கு அதிகமாக உழுகிறோம், இது தேவையற்றது இயற்கை தானாக உழுதுகொள்ளும், அதாவது மண்ணிலுள்ள நுண்ணியிர்கள், தாவரவேர்கள் தரையில் நுழைதன் மூலம், சிறு விலங்குகள் மூலமும் நிலம் உழுதுகொள்ளும் நாம் ஆழமாக உழும்போது தேவையில்லாத களையின் விதைகள் பூமிக்குமேலெ வந்து களை அதிகமாக முளைத்து தொல்லைதரும். நிலத்தை தரைதெரியாமல் வைக்கோலை பரப்பிவைக்கவேண்டும் அது போதும் அது மண்ணில் மக்கிப்போவதுமல்லாது களைகளை கட்டுப்படுத்தும் என்கிறார்.

  2. உரங்கள் :வேதியல் உரங்களை இடுவதன் மூலம் மண்ணின்வாழும் நுண்ணியிர்கள் அழிக்கப்படுகின்றன, வைக்கோல், பசுந்தாழ், பறவியின் எச்சங்கள் ஆகியவற்றை உபயோகித்தே அதிக மகசூல் பெறமுடியும் என்கிறார்.

3. களைகள் : உழுவதை நிறுத்தும்போது களைகளும் குறைந்துவிடுகின்றன, தற்போது களைகளை ஒழிப்பதற்கு களைக்கொல்லிகள் (வேதியல்) பயன்படுத்திவருகிறார்கள், இதனால் மண்ணின் வளமும் நுண்ணியிர்களும் அழிக்கப்படுவதோடு மழைபெய்யும் நீரில் கலந்து அது நிலத்தடி நீரையும் மாசுபடுத்துகிறது. அறுவடை முடிந்ததும், வயல் முழுதும் வைக்கோல் போட்டுமூடினால் களைகள் முளைவது தடைபடும்பயிருடன் தீவனப்பயிர்களை விதைக்கும்போது நிலத்தை மூடிமறைப்பதால் அது களைகளை கட்டுப்படுத்துகிறது.

4. பூச்சிக்கட்டுப்பாடு: நிலத்தில் நீர்தேங்காமல் பார்த்துகொண்டாலே பூச்சிக்ளை ஒரு கட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம், நாம் ரசாயண பூச்சிக்கொல்லிகள் தெளிக்கும்போது பூச்சிகளின் ‘இரையினங்களையும்’ சேர்த்தே அழித்துவிடுகிறோம். இயற்கையாக பூச்சிகளை கட்டுபப்டுத்த இரையினக்கள் உண்டு. எலிகளை கட்டுப்படுத்த பாம்புகள் உள்ளதுபோன்று. இந்த ரசாயண பூச்சிக்கொல்லி மருந்துகள் செடிகளில் பத்து சதவீதமும் மீதம் நிலத்தில்தான் தெளிக்கப்படுகிறது அது நிலத்தடி நீரை மாசுபடுத்துவதோடு நுண்ணியிர்களையும் அழித்துவிடுகிறது.

  ஃபுகாகோ செல்லும் பாதை என்பது உலகம் செல்லும் பாதைக்கு நேரெதிரானது, அதனால் சொல்கிறார், “ நான் காலத்தால் பின்னடைந்துவிட்டதாக தோன்றக்கூடும். ஆனால் நான் சென்றுகொண்டிருக்கும் பாதைதான் அறிவுபூர்வமானது என்பதை நான் உறுதியாக நம்புகிறென்”. மேலும் ‘இயற்கையில் இருந்து மக்கள் எவ்வளவு தூரம் விலகி செல்கிறார்களோ, அவ்வளவுதூரம் அதன் மையத்திலிருந்து சுழற்றி எறியப்படுவார்கள். அதே சமயம் குவிமைய விசையால் இயற்கைக்குத்திரும்பும் ஆசை அவர்களுக்கு வருகிறது’ என்கிறார்.

வாணிபப்பயிர்களை விளைவிக்காதீர்கள் ,பொதுவாக வாணிப வேளாண்மை முன்கூட்டி கனிக்கமுடியாத ஒரு விசயமாகும் என்கிறார் ஃபுகாகோ.சமீபத்தில் பி.சாய்நாத் அவர்கள் பெங்களூரில் ஆற்றிய உரையில் இந்திய விவசாயிகள் கடந்த 15 ஆண்டுகளில் 2 லட்சத்துக்கும் மேல் தற்கொலை செய்துகொண்டார் அவர்கள் அனைவரும் பணப்பயிரான பருத்தி பயிரிட்டவர்கள். கேரளாவில் வயநாடு மாவட்டத்தில் ‘வெண்ணிலா’ பயிரிட்டவர்கள் விலை வீழ்ச்சிகாரணமாக கடன் சுமையில் தற்கொலை செய்துகொண்டார்கள். ஏனென்றால் வணிகப்பயிர்களின் சந்தை என்பது பன்னாட்டு,அல்லது பெருமுதலாளிகளின் கைகளில் சிக்குயுள்ளது. எந்த ஒரு விவசாய இடுபொருளான விதையோ, உரமோ, பூச்சிமருந்தோ விவசாயிகள் நலனோ, மக்கள் நலனோ கருத்தில் கொள்ளாமல் பணம் சம்பாதிப்பதன் நோக்கமும் ஏகபோக நோக்கமும் கொண்டதாக இருக்கிறது. இந்தியாவில் மரபணு மாற்றுப் பயிர்களை அனுமதிக்கூடாதென்று விவசாயிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், திரு.பாசுதேவ் ஆச்சார்யா தலைமையில் உள்ள பாராளுமன்ற நிலைக்குழுவும் அனுமதிக்கக்கூடாது என்று தெரிவித்தார்கள். ஆனால் வேளாண் அமைச்சரோ மான்சாண்டோவின் நலன்களுக்காக ‘ஒரு கார்ப்பரேட் ஆலோசோகர்’ ஒருவரை நியமித்து ஆய்வு செய்யச்சொன்னார். உச்சநீதிமன்றம் நியமித்த வல்லுநர்கள் குழுவும் அனுமதிக்கக்கூடாது என்றே பரிந்துரைத்தார்கள். இயற்கையாக விளையும் காய்கறிகள். பழங்கள் மனிதனுக்கு நோய் தருவதில்லை, செயற்கையான முறைகளில் வளர்க்கப்படும் பொருடகள் மனிதரளின் தேவைகளை தணித்தாலும் பக்கவிளைவ்கள் ஏற்படுத்தி வைட்டமின் மாத்திரைகள், மருந்துகள் இன்றிய்மையாததாகிவிடுகிறது. இது விவசாயிக்கும், நுகர்வோருக்கும் கஷ்டத்தை உண்டாக்குகிறது.

ஃபுகாகோ விளைவித்த காய்கறிகள், பழங்கள், தானியங்களை செயற்கைமுறை விவசாய உற்பத்தி விலையைவிட சந்தையில் குறைவாக விற்குமாறு கடைக்காரர்களை கேட்டுக்கொண்டார். ஏனென்றால் செலவீனமே இல்லாத முறையில் விளையும் பொருட்களை சந்தைவிலையில் ஏன் விற்கவேண்டும் என்கிறார்.

தமிழகத்தில் இயற்கை வேளாண்மை முறைக்காக நம்மாழ்வர் போன்றவர்கள் மாசானபு ஃபுகாகோ போன்று பணியாற்றுகிறார்கள். வேளாண்மையை கார்ப்பரேடுகளின் நலன்களுக்காக செய்யாமல் விவசாயிகள், நுகர்வோர் நலன்களுக்காக செய்யும் முறையை இப்புத்தகம் ஏற்படுத்தும் என்று நம்பலாம்.

நூல் வெளியீட்டுப்பதிப்பகம்
தமிழில் பூவுலகின் நண்பர்கள்
எதிர்வெளியீடு
பொள்ளாச்சி
 

சனி, 7 செப்டம்பர், 2013

உயிர்நிலம் நாவல் - வாசிப்பு அனுபவம்

மேலாண்மை பொன்னுசாமி அவர்கள் எழுதிய “உயிர்நிலம்” நாவலை வாசித்தேன், வாசித்தபோது எனது சிறுவயது ஞாபகங்களை உழுதுபோட்டமாதிரி இருந்தது. விவசாயத்தை இயற்கை முறை பகுதியாகவும் நவீனமுறையை? பகுதியாகவும் செய்துவந்த காலகட்டத்தில் எங்கள் குடும்பம் விவசாயத்தைவிட்டு விலகியது, கிணற்றுப்பாசனம், ஆற்றுப்பாசனம் ஓரளவு நம்பலாம் மானாவாரி விவசாயம் என்பது வானம்பார்த்த பூமியாக மழையை மட்டும் நம்பி செய்யும் விவசாயம். பருவமழை பொய்த்துப் போனால் ஓராண்டுப்பயிரே நாசம். இப்போது உரத்திற்கும், பூச்சிமருந்திற்கும், விதைகளுக்கும் செய்கின்ற செலவுதான் மத்திய இந்தியாவில் பருத்திவிவசாயிகளை தற்கொலையில் தள்ளியது. விவசாயிகளின் விளைபொருட்களுக்கு கட்டுபடியாகாத விலைகள் ஒருபக்கம் விவசாயிகளை அட்டை பூச்சியாக உறிஞ்சிவாழும் உரம், பூச்சிமருந்து வியாபாரம், பாக்கெட் விதை ஒருபக்கம் கழுத்தை நெரிக்கிறது. நான் பருத்திவியாபாரிகளை பார்த்திருக்கிறேன், அவர்கள் பருத்தியை வாங்கி அதை பஞ்சு தனியாகவும் விதையை தனியாகவும் பிரிப்பார்கள். பொதுவாக பருத்திவிதைகளை தரம்பார்த்து நல்லவிதைகளை அப்படியே விவசாயிகளிடம் ஒரு ரேட் போட்டு கொடுப்பார்கள், மீதவிதைகளை பால்மாடு வைத்திருப்பவர்கள், உழவுமாடுகளுக்கும் அரைத்து ஊற்றுவதற்கு வாங்கிச்செல்வார்கள். இன்னும் லாபம் பெருக்கவேண்டுமானால் விதைதயாரிப்பு என்ற சான்றிதழை வாங்கிவிட்டு அதே விதைகளை பாக்கெட் போட்டு விவசாயிகளிடம் பலமடங்கு விலையில் விற்பார்கள் அரசாங்கம் அவர்களுக்கு சான்றிதழ் கொடுக்கும். பல விவசாயிகளுக்கு மானியவிலையில் வேளாண்விரிவாக்க மையத்தின் வாயிலாக கிடைக்கும். தரத்தில் பெரிதாக மாற்றம் இருக்காது. இப்போது பன்னாட்டு நிறுவனக்கள் கையில் விதைகள்,பூச்சிமருந்து விவசாயிகள் எப்படி மீளமுடியும்.இந்த நாவல் ஒரு சம்சாரியின் குடும்பத்தைப் பற்றியது, முக்கால் குறுக்கம் (ஏக்கர்) வைத்திருந்த பரமசிவம் கடின உழைப்பால் முன்னேறுகிறார், அவருடைய மனைவி காமாட்சியும் கணவருக்கு நிகராக என்பதைவிட வீட்டுவேலைகளையும் சேர்த்து அதிகமாக உழைக்கிறார்கள், அவர்கள் உழைப்பில் பல ஏக்கர் நஞ்சை, புஞ்சை நிலங்களை வாங்குகிறார்கள் அவர் மரபுவழியான இயற்கை விவசாயத்தை செய்துவருகிறார். அவருடைய இரண்டு மகன்களில் மூத்தவன் அழகேசன் தந்தையை யொட்டி அதே வழியில் விவசாயம் செய்கிறான். இளையமகன் முருகேசன் பத்தாம்வகுப்புவரை படித்தான், தாய் தந்தையைப் போல் கடின உழைப்பில்லாமல், வியர்வை சிந்தாமல் எல்லாவற்றிற்கும் வேலையாட்களை வைத்து விவசாயம் செய்யவும், மாட்டு உழவுக்குப் பதிலாக டிராக்டர் உழவு, இயற்கை தொழு உரத்திற்குப் பதிலாக ரசாயாண உரங்களான டி.ஏ.பி. பொட்டாஷ், யூரியா போட்டு புதியமுறை விவசாயம் செய்யவேண்டுமென ஆசைப்படுகிறான். தந்தையின் மரபுவழி விவசாயத்தை பழமை என்று புறந்தள்ளுகிறான், அதனால் அய்யாவிடம் சொத்துபிரித்து பாலையா நாய்க்கர் தோட்டம் ஆறு ஏக்கரில் விவசாயம் செய்கிறான். கடைசிவரை அவனுடைய வியர்வை நிலத்தில் சிந்தாமலேயே பண்ணையார் முறை விவசாயம் பார்க்கிறான், கடனுக்கு மேல் கடன் உரக்கடை, மருந்துக்கடை, டிராக்டர்கார்கள் என எல்லாயிடத்திலும் கடன் பெருகுகிறது. ஆறுவருட விவசாயத்தில் மூன்று லட்சம் கடனாகிவிட்டது, மனைவியின் நகைகள் அடமானம் என்ற பெயரில் மூழ்கிவிட்டது. தந்தையுடன் ஏற்பட்ட மனமுறிவால் அவரிடம் சரண்டைய மனம் தடுக்கிறது. உரக்கடைகாரர்கள் தாங்கள் வசூலிக்கவேண்டிய பாக்கியை கந்துவட்டிக்காரனிடம் 100க்கு 4ரூ வட்டிக்கு சிபாரிசு? செய்து அவர்கள் பாக்கியை வசூலித்துவிடுகிறார்கள். கொடுத்தகடனுக்கு அசலுக்கும் மேலாக மாதமாதம் கந்துவட்டியிடம் கடன்கட்டி வருகிறான். தீடிரென்று அசல்பணத்தையும் அடுத்தவாரத்திற்குள் தரவேண்டும் இல்லையென்றால் உன் மனைவியை தூக்கிட்டு போய்விடுவேன் என்று மிரட்டுகிறார்கள் கந்துவட்டிக்காரர்கள். அவமானம் தாங்கமுடியாமல் பயிர்களுக்கு வாங்கிவைத்திருந்த எக்காலக்ஸ் மருந்துகுடித்து தற்கொலை செய்துகொண்டான் என்று நாவல் முடிகிறது.

மரபுக்கும் பழமைக்கும் உள்ள வித்தியாசத்தை அழகாக சொல்லியிருக்கிறார். “பழைமை என்பது வளர்ச்சிக்குத்தடையாக இருக்கும் உடைத்துத் தகர்த்தால் தான், முன்னேற்றம் சாத்தியப்படும்”. மரபு என்பது வளர்ச்சிக்கு உரமாக இருக்கும். மாற்றத்திற்கும் ஒளியாகத்திகழ்ந்து வழிகாட்டும். “மரபு” என்று நினைத்துப் பழைமையை துதித்திவிடக்கூடாது. “பழைமையோ” என்று நினைத்து மரபை புறந்தள்ளிவிடக்கூடாது. பழைமையையும் மரபையும் இனம்பிரித்து ...தள்ளுவது தள்ளி, கொள்ளுவதைக் கொள்வதற்கு பகுத்தறிவு வேண்டும். எனகிறார். பரமசிவம் வீட்டிலும் காமாட்சிக்கு துணையாக பல வேலைகள் செய்கிறார், குடம் எடுத்து நீர் எடுத்துவருவது, வெளக்குமாறு பிடிச்சு வீடு கூட்டுவது பெண்கள் வேலையென்று சில ஆண்கள் ஓய்வெடுக்க பரமசிவம் அப்படியில்லை. காமாட்சியும் அப்படித்தான் ஆண்கள் செய்கிற வேலைஎன்பதையெல்லாம் பார்ப்பதில்லை, ஓய்வறியா உழைப்பாளிகள். அந்த தம்பதிகள் இயல்பாகவே ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வேலைகளை போட்டி போட்டுக்கொண்டு செய்கிறார்கள். வியர்வையை அழகு என்று வர்ணித்து எழுதுகிறார். இந்த உலகமே உழைப்பால் உருவானது, உணவும், ஓய்வும், இனபெருக்கத்தின் இன்பமும் உழைப்புக்கானவை என்று வர்ணிக்கிறார். மளிகைக்கடை அருஞ்சுணைக்கும் பரமசிவத்திற்கும் உள்ள நட்பு, மளிகைக்கடையில் மாலை நேரத்தில் உழைத்துக்களைத்து வரும் பெண்களிடம் வியாபாரம் செய்யும் நேர்த்தி. பாலையா நாய்க்கர் மாதிரி வளர்ந்த விவசாயிகள் நிலங்களை வாரிசுகளின் நகரவாழ்க்கைக்காக விற்கிறார்கள். சிறுவிவசாயிகளில் உழைப்பாளிகளாக இருப்பவர்களுக்கு சில நேரங்களில் வாய்ப்பாக குறைந்த விலைக்குநிலம் கிடைக்கும். அப்படி ஒரு ஏக்கர் ஆயிரம் ரூபாய் விலைக்கு விற்றுச்சென்றவர்கள் எங்கள் ஊரில் இருந்தார்கள், அப்படி ஒரு கசப்பு.

ஆதியில் மனிதர்கள் நிலையாக வாழ்வதற்கு விவசாயம் செய்தார்கள், இன்று வசதியாக வாழவேண்டுமானால் விவசாயத்தை விட்டு ஓடுகிறார்கள். மனித வாழ்க்கையே comfortable வாழ்க்கையைத் தேடி ஓடுவதுதான். மரபுவழியில் விவசாயம் செய்யவேண்டுமானால் அதிக உழைப்பு வேண்டும், ஆள்வைத்து விவசாயம் செய்து வெற்றியடையமுடியாது, சொந்த உழைப்பு வேண்டும், நேரம், காலம் பார்க்காத உழைப்பு வேண்டும். நகரத்தில் 8மணிநேர உழைப்பில் நன்றாக வாழமுடிகிறது, நல்ல ஆடைகள்,கல்விவச்தி, பொழுதுபோக்கு, நுகர்வு எல்லாவற்றிற்கும் கிராமமும் ஏங்குகிறது. சொந்த விவசாயத்தைவிட்டு கூலி உழைப்புக்காக வளைகுடா தேடி ஓடுகிறது. வங்கிகளில் அம்பானிகளை விவசாயிகள் கணக்கில் சேர்த்துவிட்டு அவர்களுக்கு விவசாயக்கடன் கொடுக்கிறார்கள், மஹாராஷ்டிரா மாநிலத்தில் கொடுக்கப்பட்ட விவசாயக்கடனில் 53 சதமானம் மும்பை நகரின் மெட்ரோ கிளைகளின் வாயிலாக வழங்கப்பட்டுள்ளது ஒட்டுமொத்த கிராமப்புற விவசாயத்திற்கு 38 சதமானம் மட்டுமே விவசாயக்கடன் கொடுத்துள்ளார்கள். இப்படித்தான் இந்தியவிவசாயிகளை அரசாங்கம் வஞ்சிக்கிறது.

இயற்கை வேளாண்மையா? நவீன வேளாண்மையா? என்று விவசாயிகளிடம் எது சிறந்தது பட்டிமன்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இயற்கை வேளாண்மையில் இடுபொருட்கள் யாவும் விவாசாயிகளால் உருவாக்கப்படுபவை, எதையும் விலைக்கு வாங்க வேண்டிய அவசியமில்லை. மண்ணுக்கும் தீங்கு இல்லை. ரசாயண உரங்கள் பூச்சிமருந்துகளால் விவசாயிகளின் இடுபொருட்செலவு ஒருபக்கம், மண்வளம் மங்கிப்போவது ஒருபக்கம். குறுகிய காலத்தில் அதிக லாபம் என்ற சமீபத்து உலகம்யக்கொள்கைகள் விவசாயத்தையும் வெகுவாக பாதித்திருக்கிறது. ஒருவருடத்திற்கு முன்னால் ஸ்டார் டிவியில் இயறகை மரபுவழி வேளாண்மை பற்றிய விவாதம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற பூச்சிமருந்து உற்பத்தியாளர் அவர் தரப்பு வாதத்தை வைத்துக்கொண்டிருந்தார். கடைசியில் அவருடைய சகோதரர் இயற்கைவழி விவசாயத்தில் காய்கறிகள் பழங்கள் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்துஅதிக லாபம் சம்பாதிப்பதாகச் சொன்னார். இன்று சந்தையில் ஆர்கானிக் முறையில் தயாரிக்கப்பட்ட வேளாண்பொருட்களுக்கு அதிகவிலை. அதை உற்பத்தி செய்பவர்கள் மேல்தட்டு விவசாயிகள், கிடைப்பதோ அதிகவிலை. அதிக இடுபொருட்செலவில் உற்பத்தியாகும் நவீன வேளாண்மையில் விளயும் காய்கறிகளுக்கு குறைந்தவிலை கிடைக்கிறது அல்லது சந்தை தீர்மானிக்கிறது.

“புதினங்கள் பொதுமக்களுக்கு வெறும்கதை; அறிஞர்களுக்கு கருத்துவிளக்கம்; கற்று உணர்ந்தார்க்கு அனுபவப்பிழிவு” என்கிறார் அறிஞர் மார்ரே. நாவல் இலக்கியத்தில் ஒருதுறைதான், தனிமனிதனின் முழுவாழ்வை வெளியிடுவதில் வேறு எந்தக் கலைத்துறையாலும் நாவலை விஞ்சமுடியாது என்பதை இந்த நாவல் உறுதிப்படுத்துகிறது. மேலாண்மை பொன்னுசாமி அவர்கள் எழுதிய சிறுகதைகளை வாசித்திருக்கிறேன், பெரும்பாலான கதைகளின் பின்புலம் கிராமப்புறம், விவசாயம் சார்ந்தது. ஒரு நாவல் வெறும் கற்பனைகொண்டு மட்டும் எழுதிவிடமுடியாது எண்ணற்ற தகவல்கள் திரட்டவேண்டும். விவசாயிகளை அவர் தினந்தோறும் பார்ப்பதால் விவசாயமுறையை எளிதாக விளக்கமுடியும். சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னால் பருத்திவிலை ஒரு குவிண்டாலுக்கு 10 கிராம் தங்கம் வாங்கலாம் என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது , இப்போது 1 குவிண்டால் பருத்தி போட்டால்தான் ஒரு கிராம் தங்கம்தான் வாங்கமுடியும். நூல்விலை பலமடங்கு கூடியிருக்கிறது. பூச்சிமருந்து, டி.ஏ.பி உரம் 20 ஆண்டுகளுக்கு முன்னால் 180 ரூ இப்போது 1300 ரூ பல மடங்கு கூடியிருக்கிறது. பஞ்சுமிட்டாய்காரன் கூட மிட்டாய்விலையை அவன் நிர்ணயம் செய்கிறான், ஆனால் விவசாயிகளால் தாங்கள் விளைவித்த பொருட்களுக்கு விலை சொல்லமுடியவில்லை அந்த நிலைமை.

இந்தியா ஒரு விவசாயநாடு என்பதிலிருந்து கூலி உழைப்பாளிகளை உற்பத்திசெய்யும் நாடு என்ற ரீதியில் செல்கிறது, அரசாங்கத்தின் கொள்கை தனிமனிதனின் வாழ்க்கையை எப்படி பாதிக்கிறது என்பதை இப்போது நாடு சந்தித்துக்கொண்டிருக்கிறது. மென்பெல்லாம் விவசாயி கிராமத்திலிருந்து எதற்கும் வெளியே செல்லத்தேவையில்லை. அவனுக்குத் தேவையான விதைகளை, உரங்கள், மருந்துதெளிப்பதற்கு வேப்பெண்ணெய், அவனே தயாரித்தான். இன்று அவன் எல்லாவற்றிற்கும் கையேந்தும் நுகர்வோன் ஆகிவிட்டான். இந்த மாற்றம் உலகமயம் கொண்டுவந்த விளைவுகளில் ஒன்று. ஒவ்வொரு கிராமத்திலும் காளைமாடுகள் நூற்றுக்கணக்கில் இருக்கும். சின்னவிவசாயி யென்றால் ஒரு பசு, ஒன்று, இரண்டு ஆடுகள்,கோழிகள் எல்லாம் வளர்ப்பார்கள். ஒவ்வொரு வீட்டுக்கும் குப்பைக்கிடங்கு இருக்கும். வீட்டில் சேர்கிற குப்பைகளை அங்கேதான் கொட்டுவார்கள், மக்காத பொருட்கள், பிளாஸ்டிக் என்பது வல்லிசாக கிடையாது. குப்பையை சேர்ப்பதில் கில்லாடிகளாக இருப்பார்கள். பெரிய பண்ணை வீடுகளில் எருமைகள் நிறைய வைத்திருப்பார்கள் அதை மேய்ப்பதற்கு ஒரு அடிமை இருப்பான், அவன் எங்கிருந்து வந்தானென்பதே தெரியாது அவன் வயதுஎன்ன என்பதை அவனுக்கே தெரியாது அப்படியிருப்பான். காலை எட்டு அல்லது ஒன்பது மணிக்கு எருமைகளை அவுத்துவிட்டால் வீதிகளை அடைத்துக்கொண்டுபோகும், போகும்போது கூடைகூடையாக சாணிபோடும், அந்த ப்ச்சையான சாணியை சில வயசாளிகள் கூடைவைத்து அள்ளி குப்பையை வளப்படுத்துவார்கள். இப்போது பாலுக்கே பாக்கெட் பால் வாங்கவேண்டியிருக்கிறது. மோரை விற்கமாட்டார்கள்,சொம்பு சொம்பாக கேட்டவர்களுக்கு இனாமாகக் கொடுப்பார்கள். மாடுகளுக்கு தீவனாக சோளம் போடுவார்கள் அதை நெருக்கமாகப் போடுவார்கள் தடித்துவிட்டால் மாட்டால் கடிக்கமுடியாது. அதை அறுத்து கோடைகாலத்தில் தீவனத்திற்கு படப்பில் சேமிப்பார்கள். படப்பு அடுக்குவதை ‘மேய்வது’ என்பார்கள். எல்லாருக்கும் அந்த தொழில் தெரியாது, வீட்டுக்கூரை வேய்வதுமாதிரி. நல்ல நாட்டுக் கம்மந்தட்டைகளை அறுத்து நனைத்து காயப்போட்டு வேய்வார்கள், மழைத்தண்ணீர் உள்ளே நுழையமுடியாது. படப்பை அடுக்கும்போது கிரிக்கெட்பேட் மாதிரி செய்யப்பட்ட பலகையால் லெவலுக்கு தட்டுவார்கள். மாடுகளுக்கு வாய்க்கூடு பின்னுவது அவர்களே, மாட்டுவண்டியில் தட்டி என்று சொல்லப்படுகிற காடிகளை நாட்டுப்பருத்தி ஓய்ந்தவுடன் பிடுங்கி அதில் முடைவார்கள். அதெல்லாம் பழங்கதையாகிவிட்டது.

அப்போதெல்லாம் நெல்லுச்சோறு என்பது வசதியானவர்கள் வீட்டில்தான், ஏதேனும் விசேசம், விரத நாட்களில், தீபாவளி, பொங்கல் சமயங்களில் நெல்லுச்சோறு கிடைக்கும். அதிகமாக கம்பு அதிலும் நாட்டுக்கம்பு பயிரிடுவார்கள், அதற்கு மருந்தடிப்பு கிடையாது, களைவெட்டுகிடையாது, பயிருழவு மட்டும்தான், ஒவ்வொரு ஆறு கோட்டுப்பயிருக்கும் ஒருகோடு தட்டாம்பயிறு, பாசிப்பயிறு ‘சால்’ என்ற பெயரில் போடுவார்கள். பருத்தியிலும் நாட்டுப்பருத்திதான் போடுவார்கள், உளுந்து பயிரிடுவது குறைவாகத்தான் இருக்கும்.பருத்தியை ஒரு ஆண்டு முடிந்தால் வெட்டிவிட்டால் அடுத்த ஆண்டும் ‘கட்டப்பருத்தி’ எடுக்கலாம். இடுபொருட்செலவு கிடையாது, நோய் தாக்க்குவது பருத்திச்செடிகளுக்குத்தான் அதுவும் நாட்டுப்பருத்தியை அவ்வளவாக தாக்காது. அதற்கு வேப்பெண்ணெயை ஸ்பேயரில் சிலர் வேப்பங்கொப்பை வைத்து தெளிப்பார்கள். பசுமாட்டு கோமியத்தை சேர்த்துவைத்து அதையும் தெளிப்பார்கள். உழவென்பது மாட்டு உழவுதான், கூட்டணி சேர்ந்து உழுவார்கள் ஒரு ஜோடிமாடு ஒரு நாளைக்கு ஒரு ஏக்கர் உழமுடியும். மாடுவாங்க வசதியில்லாத சிறுவிவாசாயிகள் பெரிய விவசாயிகளிடம் வேலைக்கு இருப்பார்கள், உழவு, விதைப்பு, மாட்டுவண்டியை பயன்படுத்துவது எல்லாம் கருணையில்தான். மானாவாரி விவசாயத்தில் ஒரு பருவ விளைச்சலுக்குக்கூட வருடம் முழுவதும் உழைப்பை செலுத்துவார்கள். சித்திரையில் உழவடிப்பார்கள், செடி, அருகு நீக்குவார்கள், ஆடிமாதம் சேமித்த குப்பைகளை வண்டி மூலம் சுமப்பார்கள், சிதறுவார்கள், மீண்டும் ஒரு உழவு. ஆவணியில் பருத்தி விதைகளை வாங்கி நல்ல களிமண்ணைத் தேர்ந்தெடுத்து பிரட்டி உருட்டுவார்கள் உலரவைப்பார்கள். புரட்டாசி பட்டத்தில் விதைப்பு,ஐப்பசி அடைமழையில் செடிகளின் வனப்பு, மார்கழி, தையில் அறுவடை. புஞ்சையில் அதே பயிரை ஒவ்வொரு வருடமும் விதைத்தால் மண்வளம் குன்றிவிடும் என்று ‘அடி’ மாற்றி கம்பு விதைத்த புஞ்சையில் பருத்தி போடுவார்கள். பருத்தி விதைத்த புஞ்சையில் சோளமே, கம்போ பாயிர் செய்வார்கள். இப்போது அதெல்லாம் கட்டுபடியாகவில்லையென்று எல்லா வருடமும் அதே நிலத்தில் உளுந்து மட்டும் பயிர்செய்கிறார்கள். டி.ஏ.பி உரம் ஏக்கருக்கு 10 கிலோவிலிருந்து இப்போது ஒரு மூட்டையை போடுகிறார்கள், மண்வளத்தை ஒரெடியாக விவசாயி அதிக விளைச்சலுக்கு சுரண்டிவருகிறான். இன்னும் விவசாயம் ஒரு நாள் மரபு வழிக்கு மாறும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

வெள்ளி, 6 செப்டம்பர், 2013

நல்லாசிரியர்

ஒவ்வொரு வருசமும் ஆசிரியர் தினம் கொண்டாடுறோம், அரசாங்கம் அந்த தினத்தையொட்டு சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து “நல்லாசிரியர்” விருது கொடுக்கிறது. நம்ம படிச்ச ஸ்கூல்ல நல்லாசிரியர் யாராக இருக்குமென்று ஒரு கேள்வி ஓடியது. ஆரம்பப் பள்ளியில் மாணவர்களை கால்நகத்தை வெட்டச்சொன்ன ஆசிரியரை நினைத்துப் பார்த்தேன், மாணவர்களை வாய்ப்பாடு பாடச்சொல்லிவிட்டு வேட்டி விலகியதுகூட தெரியாமல் தூங்கியவாத்தியார்கள் உண்டு. சேரிப்பிள்ளைகளை அவர் தொட்டு அடிக்காமல் மற்ற மாணவர்களைச்சொல்லி குட்டச்சொன்ன வாத்தியார். வீட்டுவேலைக்கு மாணவர்களை கூப்பிடுகிற வாத்தியார்கள். டியூசனில் படிக்கிற மாணவர்களுக்கு மட்டும் பரீட்சைக்கு வரவுள்ள முக்கிய கேள்விகளை குறித்துக்கொடுத்து எல்லாரையும் டுயூசன் படிக்கத்தூண்டுகிற வாத்தியார்கள். இப்படிப்பட்ட வாத்தியார்கள்தான் நிறையவந்தார்கள். நல்லாசிரியர் என்ற வாத்தியார் தகுதி சிலுவைமுத்து சாருக்கு மட்டும்தான். அவர் வரலாறு பாடம் நடத்துவார், புத்தகத்தை புரட்டமாட்டார், மேப் கண்டிப்பாக மாட்டிவைக்கனும். கடைசி பென்ஞ் மாணவனுக்கு புரியவைப்பது தான் அவருடைய குறிக்கோள். டுயூசன் எடுக்கிற வாத்திமார்களை வைவார், மாணவர்களையும்தான். ஸ்பெசல் கிளாஸ் என்றால் ஒரு பயலும் வரமாட்டான், காசுகொடுத்துப் படிச்சாதான் தரமானது என்ற சிந்தனை மோசமானது என்பார். தினமும் செய்தித்தாளை வாசித்துவிட்டு முக்கிய செய்திகளை சொல்லுவார்.

  “கனவு ஆசிரியர்” என்ற கட்டுரைத்தொகுப்பு சென்ற ஆண்டில் வாசித்தேன், அதை தொகுத்தவர் கே.துளசிதாசன், சமயபுரம் எஸ்.ஆர்.வி. பள்ளியில் முதல்வராக இருக்கிறார். அந்த பள்ளியில் ஆண்டுதோறும் சமூக ஆர்வலர்களை வரவழைத்து கவுரவிப்பது, எழுத்தாளர்களை, கலைஞர்களை அழைத்து மாணவர்களிடம் பேசச்சொல்வது, அறிஞர்களை அழைத்து மாணவர்களுடன் உரையாட வாய்ப்பு அளிப்பது என்ற புதுமுறையை கையாளுகிறார்கள் என்று அறிந்தேன். அந்த துளசிதான் ஆசிரியருக்கு இந்தவருடம் அரசு நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்திருக்கிறது. அந்த நூலில் எழுத்தாள்ர்கள் கல்வியாள்ர்கள் தங்கள் ஆசிரியர்களைப் பற்றி சொல்லியிருக்கிறார்கள். ஆசிரியர்கள் என்பவர்கள் ஏதோ அவருக்குத் தெரிந்தவற்றை மாணவர்களுக்கு உபதேசம் செய்பவர்கள் அல்லர், அவர்களும் மாணவர்களுடன் சேர்ந்து கற்கவேண்டியவர்கள். சந்தேகம் கெட்கிற மாணவர்களை ஆசிரியர்களுக்குப் பிடிக்காது, எனக்குத்தெரிந்து யாரும் புரியவில்லை என்று கேட்டதுகிடையாது. தேர்வில் குறைவான மதிப்பெண் வாங்குகிறவர்களைத்தான் டீ வாங்க அனுப்புவார்கள்.

இரா.நடராஜன் அவர்கள் எழுதிய “ஆயிஷா” நாவல் ஆசிரியர்- மாணவர்கள் உறவைப்பற்றியது. அறிவியல் ஆர்வமுள்ள ஒரு மாணவி பாடப்புத்தகம் அல்லாமல் மற்ற அறிவியல் நூல்களை வாசித்துவிட்டு அத்லிருந்து சந்தேகம் எழுகிறது. விடை ஆசிரியரிடம் இல்லை. புதிய முறைகளை தெரிந்துகொண்டு மாணவியின் சந்தேகத்தை போக்கவில்லை. தேர்வுகளுக்கு நோட்ஸ் லுள்ள விடைகளைத்தவிற சொந்தமான எழுதினால் மார்க் கிடையாது. கேள்வி கேட்டால் அடிக்கிறார்கள். எல்லா பாடநூல்களுக்கும் நோட்ஸ் வந்துவிட்டது அப்போதே! கணிதத்திற்கும் உண்டு. ஆயிஷா என்ற அந்த மாணவி ஒரு ஆசிரியரை புத்தகம் எழுதத்தூண்டினாள். எட்டாம்வகுப்பு படிக்கிற உனக்கு லைப்ரரியிலுள்ள பெரிய ஆங்கிலப்புத்தகம் புரியுதா? கொஞ்சம் கொஞ்சம் புரியுது மிஸ்! ஆனா தாய்மொழியில இருந்தா நல்லாயிருக்கும் நீங்க எழுதுங்க மிஸ் என்று ஆசிரியரை தூண்டுகிறாள். வேதியியல் பிரிவு ஆசிரியர் கொடுத்த அடிகளுக்கு வலிக்காமல் இருக்க நைட்ரஸ் ஆக்சைடு மருந்தை உடலில் செலுத்தி, டீச்சர் எனக்கு இப்ப எதைவச்சி அடிச்சாலும் வலிக்கல மிஸ்! என்று இறந்துபோனாள் என்று முடிகிறது அந்த நாவல். அந்த குறுநாவல் குறும்படமாகவும் வந்துள்ளது www.youtube.com/watch?v=8-BuyTExd_o.

ருஷ்ய நாவலஒன்று “முதல் ஆசிரியன்” சிங்கிஸ் ஐத்மத்தாவ் எழுதியது, நகரிலிருந்து தொலைதூர கிராமமொன்றில் குதிரை லாயத்தை பள்ளிக்கூடமாக மாற்றி பாடம் சொல்லித்தருகிறார். அவருக்கு பாடத்திட்டம் என்றால் என்ன, என்ன சொல்லிக்கொடுக்க வேண்டுமென்பதே தெரியாது. ஆனால் ஆடு, மாடு, குதிரை மேய்த்த குழந்தைகளை வகுப்பறைக்கு கொண்டுசென்றார். அவரிடம் பயின்ற ஒரு மாணவி நாட்டின் சிறந்த கல்வியாளாராக உருவாகி பள்ளியின் ஆண்டுவிழாவிற்காக் அந்த கிராமத்திற்கு வந்தார். அப்போது அவருடைய ஆசிரியர் ஒரு தபால்காராரக உழைத்துக்கொண்டிருந்தார். இதை தழுவியே தமிழில் “வாகைசூடவா” என்ற திரைப்படம் வந்தது. ஆசிரியர் எப்படி இருக்கவேண்டும் என்று சமீபத்தில் வந்த மற்றொரு திரைப்படம் “சாட்டை”.

அரசாங்கப்பள்ளிகளை ஆசிரியர் சமுகத்தைவைத்தே அரசாங்கம் ஒழித்துக்கட்டியது, கட்டணக்கல்வி தான் சிறந்தது என்ற பொதுப்புத்தியை விதைத்த ஊடகங்கள். மாணவர்கள் சேர்க்கை குறைவு என்ற காரணம் காட்டி அரசாங்கப்பள்ளியை மூடிவிட்டு தனியார் பள்ளிகளை ஊக்கும்விக்கும் அரசின் கொள்கை. கல்வி என்பது சாராயவியாபாரிகளின் கையில் இருந்தால் அவர்கள் ஆசிரியர்களை எப்படி நடத்துவார்கள், மாணவர்கள் என்பவர்கள் வெறும் சரக்குகள் தான். சிறந்த ஆசிரியர்கள் தான் சிறந்த சமூகத்தை உருவாக்கமுடியும்.