செவ்வாய், 12 மார்ச், 2013

சில பகிர்வுகள்.


சமீபத்தில் குழுமத்தில் ஒரு நண்பர் ‘அறிஞர்’ அண்ணாவை அரைவேக்காடு என்றார், கண்மூடித்தனமான திராவிட எதிர்ப்பு கொண்டவர்களுடைய கருத்து அது. திராவிட இயக்கத்தின் நேர்மையாக வாழ்ந்த தலவர் அண்ணா,  அவரை அரசியல்வாதியாக அல்லாமல் பேச்சாளராக, எழுத்தாளராகவும் தமிழகம் அறியும். அவருடைய சிறப்பான  சிறுகதை ஒன்று ‘செவ்வாழை’ அந்த சிறுகதை 1949ல் எழுதினார். நிலப்பிரபுக்கள், நிலமில்லா விவசாயத்தொழிலாளிகள் பற்றிய கதை. அந்த விவசாயத்தொழிலாளி தன்னுடைய குழந்தைகளில் ஒன்றாக செவ்வாழைக்கன்றை பேணிவளர்த்து அவனுடைய ஏழை குழந்தைகள் அந்த வாழை குலைபோடுகிற நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் அதே பேச்சுதான் எப்போதும் மற்றசிறுவர்களுடன்.  அந்த ஏழை விவசாயி குடும்பத்துடன் பண்ணையாருக்கு உழைக்கிறார், எஞ்சிய நேரத்தில் தன்னுடைய சொந்த கொல்லையில் வள்ரும் வாழையை பராமறிக்கிறார். அந்த வாழை குலைதள்ளி பழுக்கின்ற நேரத்தில் பண்ணையார் வீட்டுக்கு வாழைப்பழம் தேவைப்படும்போது கணக்குப்பிள்ளை போட்டுக்கொடுத்துவிட்டான். கணக்குப்பிள்ளைகளின் வேலைகளில் அது முக்கியமான வேலை. விவசாயியால் மறுத்துப்பேசமுடியவில்லை, வீட்டில் எதிர்பார்த்து காத்திருந்த சிறார்கள் அது கிடைக்காமல் அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் அவர்களை அவனால் தேற்றமுடியவில்லை. அந்த குழந்தைகளுக்குத் தெரியுமா நிலப்பிரபுக்களுக்குத்தான் முதல் உரிமையென்று?  அதே வாழைப்பழத்தின் சில சீப்புகளை கணக்குப்பிள்ளை ‘சுட்டுவிடுகிறான்’ அந்த சுட்ட பழம் கடையில் விற்கிறது. விவசாயியின் குழந்தைகளால் அதை காசுகொடுத்து வாங்கமுடியவில்லை இப்படி முடிகிறது அந்தக்கதை.

நேற்று ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தபோது சொன்னார், தமிழகத்தில் பிராமணர்களை ஒதுக்கிவைக்கிறார்கள் கிராமங்களிலிருந்து அவர்கள் விரட்டப்பட்டார்கள், அரசில் எந்த சலுகையும் இல்லையென்றார். நான் இபடியொரு கதையை இப்போதுதான் கேள்விப்படுகிறென். சமூகத்தில் முன்னேறிய பிரிவினர் நிலவுடமைச்சமூகத்தில் அதிக விவசாய நிலங்களை வைத்திருந்தார்கள். இன்னும் பலர் கிராமங்களில் கோவில் ஊழியம், கல்யாணம், மற்ற விசேசங்களில் சடங்கு செய்து விவசாயிகளை நம்பி வாழ்ந்தவர்கள் ஒரு பக்கம், ஆனால் கல்வியில் முன்னேறியவர்களுக்கு கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு எப்படி கிடைக்கும், நகரத்திற்கு புதிய வாய்ப்புகளுக்கு குடிபெயர்ந்தார்கள். பத்தாண்டுகளுக்கு முன்புவரை அரசாங்கத்தின் நிர்வாகம், நீதி போன்ற உயர்பதவிகளில் அவர்கள் நிறைந்திருந்தார்கள், இப்போது பிற்படுத்தப்பட்ட பிரிவினர் சமூகநீதியின் அடிப்படையில் கிடைத்த இடஒதுக்கீட்டின் விளைவாகவும் அவர்களுக்கு கிடைக்கவேண்டிய இடத்தை பிடித்தார்கள். இன்னும் அந்த விகித்தத்தை தொடமுடியாமல் இருப்பவர்கள் பட்டியல்சாதியினர் தான். ஜெண்டில்மேன் கதையை வைத்துக்கொண்டு எங்கோ ஒருசிலர் வறுமையில் வாடுவதை அந்த சமூகமே இடஒதுக்கீட்டின் விளைவால் பாதிக்கப்பட்டதாக பொதுப்புத்தியை உருவாக்குகிறார்கள் சிலர். இன்னும் சிலர் பிற்படுத்தப்பட்ட சாதியின் சலுகைகளை அனுபவித்துக்கொண்டே தலித்கள் பெறும் இடஒதுக்கீட்டை பொறுக்கமுடியாமல் இடஒதுக்கீட்டை எதிர்க்கிறார்கள். அதே நண்பர் இன்னும் சொன்னார், கிராமங்களில் இப்போது நிலைமை மாறிவிட்டது இப்போது தாழ்த்தப்பட்டவர்கள் மற்ற சாதியினரை ஒடுக்குவதாகவும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை வைத்துக்கொண்டு மற்ற சமூகத்தவரை மிரட்டுவதாகவும் கதையைச் சொன்னார்.

இந்தியாவில் தினந்தோறும் தலித்கள் மீதான வன்முறை நடந்துகொ’ண்டெயிருக்கிறது, தமிழகத்தில் சமீபத்தில் தலித் மக்களுக்கெதிரான தர்மபுரி, கடலூர் வன்முறை ஒரு சான்று.  எங்கோ ஒன்று இரண்டு இடங்களில் தலித்கள் பிறசாதியினர்மீது வன்முறை நடத்துகிறார்கள் என்பதற்காக ஒட்டுமொத்தமாக சொல்லக்கூடாது. ncrb ன் ஆண்டறிக்கை 2011ல் தலித் மக்கள்மீது நடத்தப்பட்ட வன்செயல்கள் பதிவுசெய்யப்பட்டது மட்டும் 33719. வடமாநிலங்களில் அதிகமான வன்முறை நிகழ்த்தப்படுகிறது. உ.பி, ரஜஸ்தான், பீகார், மத்தியப்பிரதேசம் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் தலித்களின்மீது அதிகமாக வன்முறை நிகழ்த்தப்படுகிறது. அரசாங்கத்தில் அதிகமான இடஒதுக்கீட்டை தலித்கள் அனுபவிக்கிறார்கள் எனும்போது குரூப் 4 எனப்படுகிற கடைநிலை, துப்புரவு பணியை பிற்படுத்தப்பட்ட, முன்னேறிய சாதியினர் செய்யமுன்வருவதில்லை. அரசாங்க உத்தியோகமே கொடுத்தாலும் தலித் அல்லாத முன்னேறிய சாதியினர் சாக்கடை அள்ள முன்வருவார்களா? நான் சென்னையில் வேலைபார்த்த நிறுவந்த்தில் சுமார் 250 பேரில் தாழ்த்தப்பட்ட சாதியினர் ஓரிலக்கத்தில் தான் இருந்தார்கள். பெரும்பாலான தனியார் நிறுவனக்களில் நேரடி வேலைவாய்ப்பில் இதுதான் நிலைமை. சாதி அடிப்படியில் மக்கள்தொகை பொருளாதாரம் வாழ்க்கைநிலை கணக்கிடபடவேண்டும். அப்போது தெரியும்.

கருத்துகள் இல்லை: