ஞாயிறு, 17 மார்ச், 2013

பரதேசி

வரலாறு, என்பது மன்னர்களின் பரம்பரைக்கதை அல்ல. அது, விவசாயத்தை அடிப்படை ஜீவனோபாயமாகக் கொண்ட உழவர்கள் தம் போராட்டங்களின், கிளர்ச்சிகளின் கதை. சுரண்டப்படுகிறவர்களின் கதை, வரலாறு என்பது சாமானிய மக்களின் வாழ்க்கைக்கதை -பிரபஞ்சன்


பாலா இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் “பரதேசி”, பிழைப்புக்காக வேறு இடம் தேடி செல்பவர்களெல்லாம் பரதேசிதான். அப்படி பிழைப்பு தேடி ஒரு ஊரே செல்கிறது. இந்திய சுதந்திரத்திற்கு முன்பு வெள்ளைக்காரர்கள் தாங்கள் கண்டுபிடித்த ‘தேநீர்’ பயிரை வளர்ப்பதற்கு ஏற்ற இடமான மேற்குத்தொடர்ச்சி மலையை தேர்ந்தெடுக்கிறார்கள். அங்கே தேயிலைப்பயிர் வள்ர்க்கவேண்டுமானால் மலைக்காடுகளை அழிக்கவேண்டும், அதற்கு ஏராளமான மனித உழைப்பு தேவை. வெள்ளைக்காரர்கள் ‘கங்காணி’ என்றழைக்கபடுகிற சூப்பர்வைசர்களைக் கொண்டு வேலைக்கு ஆள்பிடிக்கிறார்கள். பஞ்சம், பசியால் வாடுகிற அந்த கிராமத்து மக்களிடம் ‘தேன்’ தடவிய வார்த்தைகள் பேசி அட்வான்ஸ் கொடுத்து மலைக்கு கூட்டிவருகிறான். இப்படி வெள்ளைக்காரகள், பிரெஞ்சுக்காரர்கள் தங்களுடைய காலனிநாடுகளுக்கும் தமிழர்களை கொத்தடிமைகளாக கூட்டிக்கொண்டு போனார்கள் அவர்கள் இலங்கையில் மலையகத்தமிழர்களாகவும் பல தீவுகளில் சுதந்திரம் அடைந்த நாடுகளில் பிரஜையாகிப்போனார்கள்.
வால்பாறை தேயிலைத் தோட்டத்திற்கு ஒரு கிராமத்திலிருந்து ஒட்டுமொத்த மக்களும் பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள் கைக்குழந்தைகளுடன் கால்நடையாக செல்கிறார்கள். தேயிலைத்தோட்டத்தில் அவர்களுக்கான இருப்பிடம் என்பது பன்றிகள் கூட வாழத்தகுதியற்ற குடியிருப்புகள். சூரியன் உதிப்பற்கு முன்பே ’கொம்பு’ ஊதப்படுகிறது. அதுதான் வேலையின் தொடக்கம், மீண்டும் அந்தியாகும்வரை கடும் உழைப்பு. பெண்களென்றால் தேயிலை பறிக்கவேண்டும் ஒரு நாளைக்கு மூன்று கூடைக்கு குறையாமல் பறிக்கவேண்டும். ஆண்களுக்கு பாறைகள் உடைத்தல், தேயிலைத்தோட்டத்தை புதிதாக உண்டாக்கும் பணி. பெண்களிடம் வெள்ளைக்காரத்துரையின் பாலியல் சீண்டலும் உண்டு. புதிதாக வந்த ஒரு பெண்ணை சீண்டுகிற வெள்ளைக்காரனை அந்தப்பெண் உதைத்துவிடுகிறாள்.கோபம் கொண்ட வெள்ளைக்காரன் கங்காணியை அடி அடியென்று அடிக்கிறான், அடிவாங்கிய கங்காணி இன்னும் அதிகமாக அந்த பெண்ணையும் அவளது கணவனையும் அடிக்கிறான்.  அவர்களது உடையே கிழிந்த சாக்குப்பை, குளிருக்கு கிழிந்த கம்பளி. செருப்புகள் அற்ற அவர்களின் கால்களை அட்டைகள் ‘ரத்தம்’ உறிஞ்சுகிறது, மீதி ரத்தத்தை நிர்வாகம் அட்டையாக உறிஞ்சுகிறது. தினமும் அவர்களது வாழ்க்கை பயத்தால் நகர்கிறது.  கல்வியறிவு அற்ற அந்த மக்களுக்கு வரும் நோயை தீர்க்க ஒரு சாமியாடி தாயத்து கட்டி காசுபணம் பார்க்கிறான், இன்னொரு போலி டாக்டர் மருந்து தடவி காசு பிடுங்குகிறான்.

வருடத்திற்கொருமுறை கணக்குப்பார்த்து சம்பளம் கொடுத்து ஊருக்கு அனுப்புவார்கள் என்ற நம்பிக்கையில் உழைப்பாளிகள் பெட்டி, படுக்கையை எடுத்துக்கொண்டு சைட் ஆபீஸ்க்கு  ஒரு நாளில் வருகிறார்கள். கங்காணி வேலைபார்த்த நாள்கணக்கு, சம்பளம் அதில் கேப்பை, வெங்காயம், விறகு என கொஞ்சம் கடைக்காரன் பிடிங்குகிறான், டாக்டர் ஒரு கணக்கெழுதி வைத்தியச்செலவுக்கு பிடிங்கிக்கொள்கிறான், மீதிச்சம்பளத்திற்கு பதிலாக கடனே மிஞ்சுகிறது, அதைக் கழிப்பதற்கு இன்னும் சில ஆண்டுகள் இலவசமாக உழைக்கவேண்டும்,இப்படியே வருடங்கள் நகர்கின்றன. அங்கிருந்து தப்பிக்க வழியே கிடையாது, அடியாட்கள் இரவுகளில் ரோந்து செய்கிறார்கள், பிடிபட்டால் கடுமையான அடி உதை. சக வேலைக்காரனை அடியாட்கள் அடிக்கும்போது மற்றவர்கள் பயந்து ஒடுங்குகிறார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ரோமாபுரியில் அடிமைகள் ஸ்பார்ட்டகஸ் தலைமையில் கிளர்ச்சி செய்தார்கள். ஆனால் இங்கே ஒன்றும் நடக்கவில்லை.

தீடிரென்று ஒரு கொள்ளைநோய் வந்து நிறையபேர் செத்துப்போகிறார்கள், அவர்களுக்கு மருத்துவம் பார்க்க ஒரு ஏற்பாடும் இல்லை. நிர்வாகத்திற்கு எந்த கவலையும் இல்லை, செத்துப்போனவர்களை எரித்துவிட்டு புதிய பட்டினிபட்டாளத்தைக் கொண்டுவந்து நிரப்பிவிடலாம். நோய் பரவிதைத் தொடர்ந்து ஒரு டாக்டர் வருகிறார், அவர் வந்து இந்த மக்களுக்கு வைத்தியம் செய்வாரென்றால் எல்லார் தலையிலும் நாக்கிலும் + போட்டு மதமாற்றம் செய்கிறார்கள். நம்ம கதாநாயகன் எப்ப இந்த மக்களை அணிதிரட்டி போராடுவான் என்று பார்த்தால் ஊரிலிருந்து அவனுடைய தாலிகட்டாத பொண்டாட்டி, பிள்ளையும் மலைக்கு வந்துவிடும். கொத்தடிமை வாழ்க்கை அப்படியே எந்த மாற்றமில்லாமல் தொடருகி்றது. இது நிச்சயமாக வழக்கமான தமிழ் பொழுதுபோக்கு  சினிமா அல்ல மாறாக ஒரு வரலாற்று ஆவணப்படம். Red Tea என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம்.

கருத்துகள் இல்லை: