சனி, 23 மார்ச், 2013

கிறிஸ்தவத்தில் பிரிவினைச்சுவர்கள்

"கடந்தகாலத்தை மதிப்பிடுவதோ, எதிர்கால நல்னுக்காக நிகழ்காலத்திற்கு அறிவுறுத்தலோ வரலாற்றின் பணியன்று, என்ன நிகழ்ந்ததோ அதனை அப்படியே கூறுவதுதான் வரலாறு " -  German historian Leopold von Ranke.

வரலாற்றில் பல பிரிவினைசுவர்களை பார்த்திருக்கிறோம், பெர்லின் சுவர்  சித்தாந்த ரீதியில் ஜெர்மானியர்களை பிரித்தது, இஸ்ரேல்-பாலஸ்தீனத்திற்கு இடையில் இனரீதியான மெகாசுவர்  ‘பாதுகாப்பு அரண்’ என்ற பெயரில் எழுப்பப்பட்டுவருகிறது. தமிழகத்தில்  உத்தபுரத்தில் மேல்சாதிக்காரர்கள் கீழ்சாதிக்காரர்கள் குடியிருப்புகளுக்கிடையில் தடுப்புச்சுவர் எழுப்பினார்கள். எல்லா சுவர்களும் யார் ஆதிக்கம் செலுத்துகிறார்களோ அவர்களால் கட்டப்பட்டது என்பது உண்மை. மக்களைப் பிரிக்கின்ற சுவர்கள் உடைந்துவருகின்றன. அப்படி சாதிஆதிக்கத்திலிருந்து விடுபட்டு கிறிஸ்தவத்திற்கு மாறியபின்பும் அங்கேயும் குறுக்குச்சுவர்கள் மறித்தன. பொருட்களால் கட்டப்பட்ட சுவர்களைவிட மனதளவில் கட்டியுள்ள சுவர்கள் மிகப்பெரியதாக உள்ளதால் ஒன்றைவிட்டு ஒன்றைமட்டும் இடிக்கமுடியாது.  “கிறிஸ்தவமும் சாதியும்” என்ற நூல் தமிழகத்தின் தென்மூலையிலுள்ள வடக்கன்குளம் தேவாலயத்தில் 19ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சாதிப்பிரிவினை சுவர் 20ம் நூற்றாண்டில் இடிக்கப்பட்டது வரையிலான வரலாற்றைப் பற்றியது.

16ம்நூற்றாண்டில் அராபிய மூர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள, கொச்சியிலிருந்த போர்த்துக்கீசியர்களின் உதவியை பரதவர்கள் நாடினார்கள். போர்த்துக்கீசியர்கள் பரவதவர்களை மூர்களிடமிருந்து காப்பாற்றியதுடன அவர்களை கத்தோலிக்கர்களாக மாற்றினர். தமிழகத்தின் கடற்கரைப் பகுதியில் காலூன்றிய கத்தோலிக்கம் தன் செயல்பாடுகளை உள்நாட்டுப்பகுதிக்கும் விரிவுப்டுத்தியது, மதுரைய ஆண்ட நாயக்கமன்னர்களின் ஆதரவுடன் ’மதுரைமறைத்தளம்’ 1606ல் உருவானது. மதம் பரப்புவதற்காக போர்ச்சுக்கல், இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளிலிருந்து துறவிகள் இந்த மறைத்தளங்களில் பணியாற்றியிருக்கிறார்கள். ஐரோப்பிய துறவிகள் தமிழகத்தில் நிலவிவந்த சாதியவேறுபாடுகளை-தீண்டாமையைக் கண்டு வியப்புற்றனர். இந்த சாதியவேறுபாடு இருவிதத்தில் அவர்களின் மதமாற்றம் வேலைக்கு உதவியது. 1) தனிமனிதனை மதமாற்றம் செய்வதைவிட, ஒரு குறிப்பிட்ட சாதியில் செல்வாக்குள்ள குழுவை மதமாற்றம் செய்தால் அவர்களைச்சார்ந்துள்ள்  ஒட்டுமொத்த சாதியையும் மதமாற்றம் செய்யமுடிந்தது. 2) ஒரு குழுவாக மதம் மாறும் சாதியினர் அதற்குப் பின்னர் வேறுமதத்திற்கு மாறுவதில்லை.

அதே சமயத்தில் தாழ்த்தப்பட்டமக்கள் கட்டிடங்கள் எதுவுமின்றி பீடங்களாகவும், சிலைகளாகவும் மரத்தடியில், களத்துமேட்டில் இருந்த கிராமதெய்வ வழிபாட்டுடன் நிறைவுபெறவேண்டியிருந்தது. கட்டிடவடிவில் அமைந்த இந்துக்கொவில்களுக்குள் நுழைவதை நினைத்துப்பார்க்கவும் முடியாது. கத்தோலிக்க ஆலயத்தில் நிலவிய இந்த சமத்துவம், தாழ்த்தப்பட்ட மக்களை ஈர்க்கும் சக்தியாக விளங்கியது.  அதே சமயத்தில் இந்துசமூகத்திலிருந்த உயர்சாதியினரும் கத்தோலிக்கத்த்ற்கு மதம் மாறினார்கள். அப்படி மாறியவர்கள் தாங்கள் முன்பு கடைபிடித்துவந்த சாதிவேறுபாட்டை தீண்டாமையை கிறிஸ்தவமதத்திலும் செயல்படுத்தினார்கள். ஐரோப்பாவிலிருந்து வந்த பல சமயகுருக்களும் இத்தகைய வேறுபாட்டினை நீண்டகாலம் அரவணைத்தார்கள். இத்தாலியிலிர்ந்து வந்த ராபர்ட் டி-நொபிலி என்ற  பாதிரி குறிப்பாக பிராமணர்களை மதமாற்றம் செய்வதில் கவனம் செலுத்தினார். அவர் சொன்னார் “கிறிஸ்தவர்களாக மதம் மாறுபவர்கள் சாதியையோ, சாதிய அடையாளங்களையோ, சாதிய பழக்கங்களையோ, சமூக உயர்நிலையையோ விட்டுவிடத்தேவையில்லை” மேலும் ராஜரிஷி என்று தம்மை அழைத்துக்கொண்டு பாதிரிகளுக்கான அங்கிகளுக்குப் பதிலாக காவியுடைதரித்து முப்புரி நூலும் அணிந்தார்.  பிராமணர் சமைத்த உணவைமட்டும் சாப்பிட்டார். வடமொழியிலுள்ள் நான்கு வேதங்களை அறிந்துள்ள உங்களுக்கு ஐந்தாவது வேதமான ‘ஏசுரவேதம்’ என்று கூறி பைபிளின் சிலபகுதிகளை வடமொழியில் மொழிபெயர்ப்பு செய்து பிரச்சாரம் செய்தார். இவர் உருவாக்கிய தேவாலயத்தில் மேல்சாதி- கீழ்சாதியை பிரிக்க கைப்பிடிச்சுவர்கள், சற்றுப்பள்ளமான பகுதி தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கினார்.

18ம் நூற்றாண்டில் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழிருந்த புதுச்சேரியில் கத்தோலிக்க மதம் மாறியிருந்த பறையர் சாதியினர் தேவாலயத்தில் தனித்து ஒதுக்கப்பட்டிருநதனர். இதனை எதிர்த்து கலகம்செய்த செய்திகள் “அனந்தரங்கப்பிள்ளையின்’ டைரியில் குறிப்பிட்டுள்ளார். அந்த தேவாலயத்தில் உட்புறம் ஒரு சுவர் பிரித்தது, ஒருபுறம் உயர்சாதிகிறிஸ்தவர்கள், ஐரோப்பியர்கள், ஈரோசிய்ரகள் ஆகியோரும் மறுபுறம் பறையர்களும் வழிபாட்டின்போது அமர்ந்தனர் என்று குறிப்பிட்டிருக்கிறார். காரைக்கலிலிருந்து வந்த ஒரு பாதிரி இந்த பிரிவினைசுவரைப் பார்த்து எரிச்சலைந்து பறையர்களிடம் சுவருக்கெதிராக தூண்டிவிட்டார்.  “நாங்கள் உண்மையிலேயே உங்கள் சிஷ்யர்கள் என்றால் எங்கள் அனைவரையும் ஒன்றுபோல் நடத்தவேண்டும். தேவனானவர் அவரை வழிபடுகிறவர்களிடம் வேறுபாடு காட்டுவதில்லை, ஆனாலும் சாதி கிறிஸ்தவர்கள் வேலியின் மூலம் எங்களை வேறுபடுத்துகின்றனர், நீங்களும் அதற்கு உடன்பட்டுள்ளீர்கள்” என்று மூத்தகுருவிடம் முறையிட்டார்கள். இதை கேட்டகுரு புகாரின் நியாயத்தை உணர்ந்து சுவரை இடிக்க 16-10-1745 அன்று உத்த்ரவிட்டார். மறுநாள் பூசையின்போது பறையர்களை மற்றவர்களிடமிருந்து பிரிக்க சுவருக்குப் பதிலாக மேசைகள் நாற்காலிகள் வேலியாகப் போடப்பட்டன.

வடக்கன்குளம் தேவாலயம

வடக்கன்குளம் கிராமத்தில் முதல்குடியேற்றம் 1680ல் நடந்தாகத்தெரிகிறது, அப்படி குடியேறிய்வர்கள் நாடார்சாதியைச் சேர்ந்தவர்கள், கத்தோலிக்கத்தை தழுவியிருந்தார்கள். அவ்வழியே சென்ற கத்தோலிக்கத்துறவி ஜாண்டி-பிரிட்டோ அந்த மக்களைச் சந்தித்தபின் 1685ல் வழிபாட்டுக்கூடம் ஒன்றை கட்டிக்கொடுத்தார். சுமார் 60 ஆண்டுகள் கழித்து அந்த ஊருக்கு பாளையங்கோட்டைக்கு அருகேயிருந்து வெள்ளாள சாதியினர் குடிபுகுந்தனர். வடக்கன்குளத்தில் வாழும் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக புதிய ஆலயம் ஒன்றை கட்டநேர்ந்தது. அந்த ஆலயம் சிலுவை வடிவில் அமைந்தது, கோவிலை இரண்டாகப்பிரிக்க வேலி போடப்பட்டிருந்தது முதற்பகுதியில் வெள்ளாளர், முதலிமார்,ராசாக்கள், கம்மாளர் ஆகியோரும் பின்பகுதியில் கீழ்சாதிக்காரர்கள் இருந்தார்கள். கோவில் பீடத்தில் வேலை செய்வது, பூசையில் உதவிசெய்வது, பாட்டுபாடுவது, தீபம் ஏற்றுவது எல்லாம் பிள்ளைமார், முதலிமாருக்கு மாத்திரமே உரியது. கீழ்ச்சாதிக்காரர்கள் மேல்சாதிக்காரரைத்தாண்டி வரக்கூடாது என்பதினால் சுவாமியார் அவர்களிருக்கும் இடத்திற்கே சென்று நன்மை கொடுப்பார். காலப்போக்கில் கிரிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும், 1752ல் கட்டப்பட்ட ஆலயத்திற்கு மாற்றாக இன்னொரு புதிய ஆலயம் கட்ட அவசியமேற்பட்டது.

காற்சட்டை ஆலயம்



1850களில் வடக்கன்குளம் வெள்ளாளர்கள், நாடார்கள் பாளையங்கோட்டை வந்திருந்த மதுரை ஆயர் கானோஸ் என்பவரை சந்தித்து புதிய ஆலயம் கட்டவேண்டும் என்கிற வேண்டுகோளை வைத்தார்கள். இரு சாதியினரைப் பிரிக்க கம்பியளி அமைத்து இரு சாதியினரும் பிரிக்கப்பட்டிருய்க்க வேண்டமென்றும் விரும்பினர். 1855ல் தொடங்கிய புதிய ஆலயப்பணி 1872ம் ஆண்டு முற்றுப்பெற்றது. இப்பணியில் நாடார்களும் வெள்ளாளர்களும் தங்கள் உழைப்பையும் பணத்தையும் அளித்தார்கள். இந்த கட்டிடம் அமைப்பில் விசித்திரமானது மேலிருந்து பார்த்தால் கால்சட்டைமாதிரி வடிவம் இருக்கும். உட்புறம் "V" போன்றிருக்கும். இரண்டு கோவில்கள் என்று கூறத்தக்கமுறையில் அமைந்த ஆலயம் அது. ஒவ்வொரு சாதிப்பிரிவுக்கும் (வெள்ளாளர் - நாடார்)  ஒரு கால் என்ற முறையில் இது அமைந்திருந்தது.இரு தரப்பினரையும் பிரிக்க இரு சுவர்கள், அந்த சுவர்களுக்கு நடுவே ஒரு பாதை. இந்த பாதையில்வழியாகத்தான் பங்குக்குரு பலிபீடத்தற்குச்செல்வார். இப்புதிய கோவிலை கட்டும்போதே இருதரப்பாரும் ஒப்பந்தம் செய்துகொண்டார்கள், அது பழைய கோவிலில் என்ன சலுகையோ அதே சிறப்புச்சலுகையை அனுபவிக்கும் உரிமையை வெள்ளாளர்கள் பெற்றார்கள். 1872ல் ஆயர் கனோச் ஒரு சுற்று மடல் வெளியிட்டார், அதில் வெள்ளாளர்களுக்கும் நாடார்களுக்கும் ஆலயத்திலுள்ள உரிமைகளை வரையறுத்துச் சொல்லப்பட்டிருந்தன. எண்ணிக்கையில் அதிகமாக இருந்த நாடார்களுக்கு வடபகுதிக்கூடம் போதவில்லை. தென்பகுதிக்குரிய சாதியினர் எண்ணிக்கையில் குறைவாக இருந்ததால் இடம் காலியாக இருந்தது ஆனாலும், நாடார்கள் அப்பகுதியினுள் செல்ல அனுமதியில்லையாதலால் வெளியே நின்று பூசை கேட்டனர்.

1909ம் ஆண்டில் திருஇருதயசபை சகோதரர் இருவர் ஆலயத்திற்கு தணிக்கை செய்ய வந்தார்கள், அவர்களில் ஒருவர் நாடார்சாதியைச் சார்ந்ததால் தென்பகுதியில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது, எனவே இருவரும் ஆலயத்திற்குள் செல்லாமல் திரும்பிச்சென்றனர். இதே ஆண்டில் நாடார் ஒருவர் பலிபீடப்ப்குதியில் எண்ணெய் ஊற்றுவதற்க்காகத் தென்பகுதிவழியாக நுழைந்ததற்கு அபராதம் விதிக்கப்பட்டார். 1910ம் ஆண்டில் புனித வெள்ளியன்று ஆலயத்தில் பாடியதற்காக ஒரு நாடார் கண்டிக்கப்பட்டார். வெள்ளாள ஆண்கள் அனைவரும் இதர்குப் பழிவாங்குவதற்காக ஆலய வளாகத்தில் கூச்சலிட்டனர். அதே ஆண்டு துணை ஆயர் ஃபைசாந்தியர் வடக்கன்குளத்திற்கு வந்தார். பிரிவினைச் சுவரின் இடையேயுள்ள குறுகியசந்துவழியே பலிபீடத்திற்கு செல்வது அவருக்கு அதிர்ச்சி அளித்தது, மேலும் சொன்னார் “சாதிப்பகையுணர்வால் கத்தொலிக்கர்களின் பண்டிகைகள் கொண்டாடப்படவில்லை, சமூகவாழ்வு முடக்கப்பட்டுள்ளது என்று குறிப்பேட்டில் பதிவுசெய்தார்.  ஃபைசாந்தியரின் குறிப்புகள் சாதிய ஆதிக்கத்திலிருந்து வடக்கன்குளம் திருக்குடும்ப ஆலயத்தை விடுவிக்க வேண்டுமென்ற அவரது விருப்பத்தை வெளிக்காட்டின. இரண்டு தரப்புக்கும் இடையேயான முரண்பாடு நாளுக்குநாள் அதிகரித்தவண்ணமிருந்தது. ஃபைசாந்தியரின் எண்ணம் குரித்து வெள்ளாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக் இனி ஆலயத்தில் பாடமாட்டார்கள் என்று அவர்கள் தரபிலிருந்து தெரிவிக்கப்பட்டது.

கெளசனால் “இனி வெள்ளாளர்கள் பாடமறுத்தால் நாடார்களிடம் பாடும்படி சொல்லுவேன்” என்று சொல்லிவிட்டுச் சென்றார். இது இருசாதியாரும் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீறுவதாகச்சொல்லி வெள்ளாளர்கள் ‘கெளசனால்’ மீது ஆத்திரம் கொண்டார்கள். அடுத்த பாவமன்னிப்பு கேட்க வெள்ளாளர்கள் யாரும் வரவில்லை, அதனால நாடார்கள் பாடினார்கள். அன்றுமாலை வழிபாட்டிற்கு வெள்ளாள ஆண்கள் கெள்சனால் மீது தாக்குதல் நடத்த திட்டம்போட்டார்கள். இதனால அவருக்கு பாதுகாப்பாக 100 நாடார்கள் சூழ்ந்துகொண்டு அவருடைய வீட்டிற்கு அழைத்துச்சென்றனர். இதையடுத்து கெள்சனால் ஆலயத்தில் வெள்ளாளர் நுழௌவதற்கு தடைவிதித்தார். 1877ம் ஆண்டு வடக்கன்குளம் தேவாலயத்தில்  வெள்ளாளர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை ரத்து செய்யவேண்டுமென்று மறைவட்ட தலைவர்கள் முடிவுசெய்தார்கள். திருனெல்வேலி மறைவட்டத்தலைவர் 18-11-1910 அன்று பிரிவினைச்சுவரை இடித்துத்தள்ளும்படி கெளசனாலுக்கு உத்த்ரவிட்டார். 22-11-1910 அன்று சாதிய ஆதிக்கத்தின் குறியீடாக விளங்கிய அந்த சுவர் உடைந்தது. ஆனால் எழுப்பப்பட்ட மனச்சுவர்களை இடிக்கமுடியவில்லை.

நீண்டகாலமாகத் தங்கள் சாதிய உயர்வின் குறியீடாக விளங்கிய பிரிவினைச்சுவர் இடிக்கப்பட்டதை வெள்ளாளர்களால் தாங்க்கிக்கொள்ள முடிய்வைல்லை. இதை எதிர்த்து மாவட்ட துணைநீதிமன்றத்தில் வழக்குதொடுத்தார்கள்.  தீர்ப்பு பிள்ளைமார்களுக்கு ஆதரவாக வந்தது, இத்தீர்ப்பை சேசு சபையினர் மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறியீடு செய்தார்கள். மாவட்டதுணை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்துசெய்வதாக அமைந்தது மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பு. மாவட்ட முன்சீப் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வெள்ளாளர் சார்பில் மனுச்செய்தார்கள். இவ்வழக்கை ஆராய்ந்த நேப்பியர் என்ற ஆங்கிலேயரும் சதாசிவ அய்யர் என்ற இந்தியரும்  பிரிவினை சுவரை இடித்தது சரியே என்று தீர்ப்பை வழங்கினார்கள்.

கருத்துகள் இல்லை: