சனி, 23 ஏப்ரல், 2011
இன்று உலக புத்தகதினம்.......
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23ம்தேதி உலக நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் பிறந்த தினமான நாளை உலக புத்தக தினமாக கொண்டாடப்படுகிறது, இந்த நாளில் மக்களிடத்தில் புத்தகங்கள் பற்றிய செய்தியையும் வாசிப்பின் இனிமையும் கொண்டுசெல்ல வேண்டும், இந்த நாளிற்காக பாரதி புத்தகாலயம் http://bookdaytn.blogspot.com/ உலக புத்தகதினம் என்ற வலைப்பூவைத் தொடங்கியுள்ளது. ஒவ்வொருவருடமும் உலக புத்தக தினத்தில் பதிவர் அண்ணன் மாதவராஜ் புத்தகதினம் பற்றி எழுதுவார். நானும் கொஞ்சம் பகிர்ந்திருக்கிறேன்.
புத்தகம், இலக்கியம் ஏன் படிக்கனும்னு நான் நேசிக்கிற எழுத்தாளர் பிரபஞ்சன் “மனிதனை மேலும் மனிதனாக்குவது இலக்கியம்” என்று சொல்கிறார், அப்படி ஒரு இலக்கியம் நம்மை மேம்படுத்தவில்லை யென்றால் அது இலக்கியமே இல்லை என்றும் சொல்றார். அதுக்கு நம்மூர்ல ஒரு பழமொழி சொல்றாங்க ‘படிக்கிறது ராமாயாணம்’ இடிக்கிறது பிள்ளையார் கோவில் இல்ல பாபர் மசூதின்னு வைச்சுக்கலாம். அவங்க படிச்சது இராமாயணம் இல்லை சங்பரிவார் அமைப்புகள் இலக்கியம் படிக்கனும் சொல்லி எங்கயாவது பிரச்சாரம் பண்ணியிருக்காங்கல இல்ல, ஏன் படிச்சா கேள்வி கேட்பான் என்கிறதால. ஒரு மாணவி கிறிஸ்தவ பள்ளிக்கூடத்துல படிக்குது, அப்போ மத சம்பந்தமான வகுப்புல படைப்புக் கோட்பாட்டை பத்தி தேவன் உலகத்தை 6 நாள்ல படைச்சாரு, மனிதர்களை படைப்பதர்கு முதலில் ஆதாம் ஏவாள் படைக்கப்பட்டார்கள் என்று படிச்சிருக்கு, அப்புறம் சமூக அறிவியல் பாடத்தில மனிதன் குரங்கிலிருந்து வந்தான்னு படிச்சவுடனே அந்த மாணவிக்கு சந்தேகம் வந்து கேட்டிருக்கு எது உண்மை அப்படின்னு? அந்த டீச்சர் அந்தப் பாடத்தில கேள்வி கேட்டா அந்த பதில எழுதனும் சமூக அறிவியல்ல கேள்வி கேட்டா மனுசன் குரங்கிலிருந்து வந்தா னு எழுதனும்னு சொல்லியிருக்காங்க.
ஒருத்தர், எனக்கு வரலாறு ரெம்ப பிடிக்கும்னு சொன்னாரு, சரி யார் எழுதின வரலாறு பிடிக்கும்னு கேட்டென். அதுக்கு புத்தகம் படிக்கிறதுக்கு நேரமில்லை.ஏதாவது டாக்குமெண்ட்ரி மூவியைப் பார்ப்பேன் அப்படின்னார். சினிமா பார்த்து வரலாறை தெரிஞ்சிக்கமுடியுமான்னு தெரியல. வரலாறு ரெண்டுவகையா இருக்கு ஒன்று மக்களின் வரலாறு இன்னொன்று ஆட்சியாளர்களின் வரலாறு. பொன்னியின் செல்வனை படிச்சிட்டு சோழர்களின் வரலாற்றைப் படிச்சேன்னு சொல்லமுடியுமா. தமிழ்ல வரலாற்றுப்புனைவு என்கிற பேர்ல எழுதுன சாண்டில்யன், இன்னும் எத்தனையோ பேர் எதை எழுதினாங்க, அந்த சக்கரவர்த்திக்கு என்னென்ன பட்டப்பெயர்கள், அதுக்கு என்ன காரணம் எத்தனை மனைவிகள் அந்தப்புரம் எவ்வளவு பெரிசு, போர்வெறியர்களைக்கூட இன்னைக்கு தவறான வரலாற்றை படிச்சிட்டு கடாரம் கொண்டான், கங்கையைக் கொண்டான் என்று சொல்லி கொண்டாறுமே. மக்களுக்கு கல்வி கொடுத்தானா, எந்தமாதிரி வரி போட்டான், சாதிய அடிப்படையில் சனாதன தர்மத்தை உயர்த்திப் பிடித்தான், கோவிலுக்கு பெண்களை தாசிகளாக்கினான் இதெல்லாம் அந்த புனைவுகளில் பார்க்கமுடியாது. அரசன் விஷ்ணுவின் அம்சம் பிறக்கும்போதே கையில சங்கு சக்கரரேகையிருக்கு அப்படியின்னு எழுதினாங்க. ஆனா பிரபஞ்சன் எழுதுன ‘வானம் வசப்படும்’ ‘மானுடம் வெல்லும்’ போன்ற நாவல்கள் தான் மக்கள் எப்படி வாழ்ந்தார்கள், பெண்களின் நிலைமையென்ன, அடிமைகள், தாசிகள் எப்படி உருவானர்கள் என்று மனிதர்கள் இப்படியெல்லாம் வாழ்ந்தார்கள் என்று பதிவு செய்தார். அவர் இத எழுதும்போது முன்னோடிகளாக டிடி.கோசாம்பியையும் ரொமிலா தாப்பரையும் குறிப்பிடுகிறார். சங்கபரிவார அமைப்புகளுக்கு இந்த வரலாற்று ஆசிரியர்களை பிடிக்காமல் போனது வியப்பில்லை.இங்கு தான் எது இலக்கியம் எது குப்பை என்று நாம் பிரித்துப்பார்க்க வேண்டும்.
என்னை முதல்ல புத்தகம் வாசிக்கவைச்சது பெரியார் சிந்தனைகள் தான், 1ரூ, 2ரூக்கு அப்போது பெரியாரின் சிந்தனைகள் வெளிவந்தது, ஊர்தோறும் பிரச்சாரம் செய்தார்கள். இன்றைக்கு திகவின் தலைமையே பெரியாரின் சிந்தனைகள் மக்களை எளிமையாக சென்றடைவதற்கு தடைபோட்டுக் கொண்டிருக்கிறது. இன்று இடதுசாரி இயக்கங்கள் மக்களுக்கு இலக்கியம் சென்றடையவேண்டும் என்று இயக்கம் நடத்துகிறார்கள். புத்தகம் என்பது எழுத்துரிமையின் வெளிப்பாடு ஆனா பிரிட்டிஷ் ஆட்சியில நிறைய புத்தகங்களை தடை செய்திருக்கிறார்கள். இப்பவும் அப்படி தடைசெய்யப்பட்ட புத்தகங்கள் இருக்கு. அம்பானியைப் பத்தி ஒருத்தர் எழுதின புத்தகம் கூட தடைசெய்யப்பட்டிருக்கிறதாக கேள்விப்பட்டேன். தமிழ்நாட்டில் புத்தகவாசிப்பிற்காக ஒரு இயக்கமே பாரதி புத்தகாலயம் நடத்துறாங்க. பெரிய நகரங்களில் வருடந்தோறும் புத்தகத்திருவிழாக்கள் நடைபெறுகிறது. ஒவ்வொரு வருடமும் கடந்த ஆண்டைவிட அதிகமா புத்தகம் விற்பனையாகிறதா தகவல் கிடைக்குது, ஆனால் கல்விகற்ற சமூகத்திலும் ‘புதுமைப்பித்தன்’ என்ற எழுத்தாளரை தெரியாதவர்கள் இருக்கிறார்கள். எஸ்ரா சொல்வார் ரஷ்யாவிற்கு ஆண்டன் செகாவ் மாதிரி தமிழகத்திற்கு ‘புதுமைப்பித்தன்’ இருவரும் நிறைய ஒற்றுமை இருந்திருக்கிறது சமகாலத்தில் வாழ்ந்தவர்கள், இருவரது எழுத்திலும் அதிகாரத்தை நோக்கிய ‘கிண்டல்’ இருக்கும். சமவயதில் அதாவது 44 வயதிலேயே இறந்துவிட்டார்கள். இருவருக்கும் காசநோயே எமனாக வாய்த்துள்ளான். ஆண்டன் செகாவ் உலக சிறுகதை எழுத்தளர்களின் தந்தை என அறியப்படுகிறார். அவருக்கு முன்னோடி டால்ஸ்டாய் ,மகாத்மா காந்தியே டால்ஸ்டாய் தான் முன்னோடி என்று சொல்கிறார். காந்தியை தென்னாப்பிரிகாவில் நிறவெறிக்கெதிராக போராடனும் தூண்டியது அவர் வாசித்த புத்தகம் தான்.
மேற்கத்திய நாடுகள்ல Bes Time Stories இருக்கிறதா சொல்றாங்க, தூங்குவதற்கு முன்னாடி குழந்தைகளையும் படிக்கவைக்கிறாங்க. நம்ம ஊர்ல இந்த டிவி பொட்டி வீட்ல நடக்கிற பேச்சையே குறைச்சிருச்சி. நான் எங்க பாட்டிகிட்ட கேட்டகதையெல்லாம் மறந்து போச்சு, இன்னைக்கு நிறைய வீட்ல பெரியங்களுக்கு கதைகள், சொல்வடை எதுவும் ஞாபகம் இருக்கிறதா தெரியல, அதுக்கு கி.ரா வோட கதையைப் படிச்சாப்போதும். தாத்தா இல்ல பாட்டி சொல்றமாதிரியிருக்கும். சிறுவர் இலக்கியம் என்பதற்காகவே நிறைய புத்தகங்கள் தமிழ்ல இருக்கு. இரா.நடராஜன் சிறுவர்களுக்கு நாவலை அறிவியல் மாதிரி எழுதியிருக்கிறார் ஆயிஷா என்கிற நாவல் ஒரு லட்சம் பிரதி விற்பனையாயிருக்கு.அதே மாதிரி எஸ்ரா எழுதுன ‘கிறுகிறுவானம்’ குழந்தைகளுக்கு ரெம்பப் பிடிக்கும். அதுல வர்ற ‘ஓட்டைப்பலலை’ ப்பத்தி என்னோட மகன் அதை தினம் வாசிக்கச்சொல்லுவான். உலகைக் குலுக்கிய புத்தகங்கள் என்ற தலைப்பில் நிறையப் பேர் பேசியிருக்காங்க, நான் அறிந்தது மார்க்ஸ்,ஏங்கெல்ஸ் எழுதுன ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’ தான். படிக்கவேண்டிய நூல்கள் எவ்வள்வோயிருக்கு.
எனக்குப் பிடிச்ச சில நாவல், சிறுகதைகள், நீங்களும் படிச்சிருப்பீங்க...
# கோபல்ல கிராமம், கோபல்லகிராமத்து மக்கள், அந்தமான் நாயக்கர் - கி.ரா
# ராஜா வந்திருக்கிறார்- கு.அழகிரிசாமி
# வால்கா முதல் கங்கைவரை, மனிதசமுதாயம் -ராகுல்ஜி
# தாய் - மார்க்சிம் கார்க்கி
# மானுடம் வெல்லும், வானம்வசப்படும் -பிரபஞ்சன்
# நள்ளிரவில் சுதந்திரம் - டொமினிக் லேப்பியர்
# மேலாணமை பொன்னுசாமி சிறுகதைகள்
# தமிழ்ச்செல்வன் சிறுகதைகள்
# வேரில் பழுத்தபலா -சு.சமுத்திரம்
# செம்மீன் -தகழி சிவசங்கரன் பிள்ளை
# உபபாண்டவம் -எஸ்ராமகிருஷ்ணன்
# புதுமைப்பித்தன் சிறுகதைகள்
# ஜெயகாந்தன் சிறுகதைகள்
இனிமே யாருக்காவது பிறந்த நாள் பரிசு, திருமண நாள் பரிசா ஒரு நல்ல புத்தகத்தைக் கொடுங்க, படிச்ச புஸ்தகத்தை மற்றவர்களுக்கு அறிமுகப்படுங்க. அது தான் இன்னைக்கு நாம ‘உலகப் புத்தகதினத்திற்கான்’ செய்தி. இன்னும் எவ்வளவோயிருக்கு எழுதினா உங்களுக்கு போரடிக்கும்..வாழ்த்துக்களுடன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்து:
புத்தக தின வாழ்த்துக்கள்.
இன்றைக்கு ஒரு புத்தகம் விற்காத ஒரு புத்தகம் வாங்கினேன்.கேட்பாரற்ற என் புத்தகத்தை ஒருவருக்கு கொடுத்தேன்.
கருத்துரையிடுக