வியாழன், 31 டிசம்பர், 2015

கொல்கத்தா பயணம் -2

பேலூர் மடத்திலிருந்து படகுமூலம் தட்சினேஷ்வர் வந்தோம், சிறிய படகுதான் கொஞ்சதூரத்துல இன்ஞின் நின்னுபோச்சு.. கீ ஆச்சே என சிலர். கிச்சு நா. ஸ்டார்ட் கோயகாச்சி.ஹூக்ளியே எவ்வளவு அகலம் எவ்வள்வு தண்ணீ. அப்ப கங்கை எப்படியிருக்கும்? தலைக்கு 10 ரூயா 20 ரூயா ஞபாகமில்லை.
நதியிலிருந்து  தட்சினேஷ்வர் பார்ப்பதற்கு அழகாக இருந்தது.




                                தட்சினேஷ்வர் அல்ல.. அதே மாதிரி இன்னொரு கோவில்


ஹூக்ளியின் 3வது பாலம் விவேகானந்தர் பாலம்.

தட்னேஷ்வர் கோவில் ஹூக்ளியின் நதிக்கரையில்.


கோவிலுக்கு உள்ளே சென்றோம், சாமி தரிசனத்திற்கு நீண்ட வரிசை, கையில் மலர் கூடைகளோடு பக்தர்கள் நின்றிருந்தார்கள், இன்னொரு பக்கத்தில் வரிசையாக சிவலிங்கங்கள் 8 ?  9 ஆ பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கோவில் சுத்தமாக இருந்தது  மனசுக்குள்ளே கும்பிடுபோட்டுவிட்டு வெளியேவந்தோம், காலை உணவு கச்சோரி எனப்படும் ஒருவகை பூரி அதற்கு சென்னா டால் சாப்பிட்டோம். பாலா ரெம்ப நாளா சங்கு வேணுமென்றான், சரி பேரம் பேசத்தெரியாமல் 200ரூக்கு நல்ல சங்கு வாங்கினோம். கோவிலைவிட்டு வெளியே வந்தால் பிச்சைபெறுவோர் கூட்டம் கூட்டமாக ஒரிடத்தில் 5ரூ 10 ரூயோ போட்டா நம்மை மொய்த்துவிடுவார்கள். சில்லரையாக கொஞ்சம் வைத்திருப்பது நல்லது. திட்டப்படி அடுத்து Belegachia விலுள்ள ஜெயின் மந்திருக்கு போகவேண்டும்.

தட்சினேஷ்வரிலிருந்து டாக்சியிலிருந்து டம்டம் செல்லலாமென்று ஒரு ஆட்டோக்காரரிடம் கேட்டேன், ஏன் டாக்ஸியில் போற லோக்கல் ட்ரெயின் இருக்கு போ என்றான். அதுவும் நல்லதென்று லோக்கல் ட்ரெயினில் டம்டம் சென்று அங்கிருந்து மெட்ரோவுக்கு டிக்கெட் எடுத்து அடுத்த ஸ்டேசன் பெலிகாச்சியாவில் இறங்கி ட்ராம் டிப்போ நோக்கி நடந்தோம் ஜெயின் மந்திர் வந்துவிட்டது. கேட் மூடியிருந்தது. சார் உள்ளே பார்க்கவேண்டுமென்றேன்.. ஜெயின்? இல்லை நாங்கள் மதராஸிலிருந்து சுற்றிப் பார்க்கவந்தோம் என்று சொன்னதால் உள்ளேவிட்டார் காவலாளி.




இதென்ன சிவப்புகலர் கோவில், நம்ம எதிர்பார்த்தது மார்பில்ஸ் வைத்து கட்டப்பட்ட கோவிலாச்சே என்று விசாரித்தால் இது திகம்பரர் ஜெயின் கோவில் என்றார்கள். திகம்பரர்கள் ஆடை அணியமாட்டார்கள், திசைகளையே ஆடைகளாக அணிந்தவர்கள்தான் திகம்பர சமணத்துறவிகள். தமிழகத்தில் முன்னர் சமணமதம் வைதீக மதத்திடம் தோல்வி கண்டதும் இப்படி ஆடையில்லாமல் பெண்களுக்கும் மதத்திற்கும் சம்பந்தமில்லாமல் போனதும் ஆடைகளற்ற துறவுமுறை ஒரு காரணம் என்கிறார்கள். அவர்கள் ஊரில் தங்கமாட்டார்கள், மலைகளில் படுக்கை செய்து குகைகளில் வாழ்ந்தார்கள், இரவு அருகிலுள்ள ஊருக்குச்சென்று பிச்சைகேட்டு உண்டு வாழ்ந்தார்கள். அவர்கள் ஆரம்பித ‘பள்ளி’ இன்றைய்க்கு பள்ளிக்கூடம் என்று சொல்கி\றோம். சமண மதத்தின் 23வது தீர்த்தங்கரரான் பார்ஸவநாதரின் கோவில். தமிழகத்தின் பல பகுதிகளிலும் 23வது தீர்த்தங்கருக்கு சிலைகள் இருக்கின்றன, மதுரை அருகே சமணப்படுக்கைகள் இருப்பதாக தொ.பரமசிவன் ஒரு நூலில் எழுதியுள்ளார். ஆனால் இந்த கோவில் 20ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. கல்கத்தாவில் எல்லா மதத்தினருக்கும் வழிபாட்டுத் தளங்கள் உள்ளன. 

அங்கிருந்து வேறெங்கு செல்வது மதிய உணவுக்காக நேரமும் ஆகிவிட்டது, சரி ஆளுக்கு ரெண்டு வாழைப்பழத்தை சாப்பிட்டுவிட்டு மீண்டும் பெலிகாச்சியா மெட்ரோவில் ஏறி  M G Road மெட்ரோவில் இறங்கி மார்பிள் பேலஸ் பார்க்கலாம் என்று நடந்தோம். அங்கே சென்றால் இன்னைக்கு விடுமுறை உள்ளே அனுமதி கிடையாது என்றார்கள், சரி எங்காவது போய் சாப்பிடலாம் என்று நடந்தோம், சித்தரஞ்சன் சாலையின் கீழ்தான் மெட்ரோ ஓடிக்கொண்டிருக்கிறது. நல்ல ரெஸ்டாரெண்டை எங்க தேடுறது கண்ணுல பட்டா பார்க்கலாம் என்று மகாத்மா காந்தி சாலையில் கொஞ்சம் தூரம் நடந்தோம் ..எல்லா நகரங்களிலும் எம்.ஜி. ரோடு சிறப்பானதாக இருக்கும். கொல்கத்தாவில் நெரிசல் மிகுந்த சாலையாக இருந்தது. நல்ல ரெஸ்டாரெண்ட் எதுவும் கண்ணில் படவில்லை, பாரதிக்கும் பாலாவுக்கும் நடக்கவும் தெம்பில்லை. சரியென்று சித்தரஞ்சன் சாலைக்கு சென்று அங்கிருந்து பேருந்தில் எஸ்பிளனேட் சென்றோம்.

பதினைந்து வருடத்திற்கு முன்பு ரசகுல்லா சாப்பிட்ட கே.சி.தாஸ் கடை நினைவில் வந்தது, சரியென்று அங்கே சென்றோம், சிங்காடா (சமோசா) ரசகுல்லா, ரசமலாய்,ராஜ்போக் என வகையான இனிப்புகளை பசிக்கு சாப்பிட்டோம். அடுத்து கொஞ்சம் உறங்கினால் நன்றாகயிருக்கும். ஆனால் நேரம் விரயமாகுமே கிளம்பு இண்டியன் மியூசியம் 1 கி.மீ தூரம் ஜவஹர்லால் நேரு சாலையில் தெற்கு நோக்கி நடந்தால் நியூமார்க்கெட் தாண்டி இடதுபக்கம் பெரிய பில்டிங் இந்தியன் மியூசியம். சித்தரஞ்சன் சாலையேதான் எஸ்பிளனேடுக்கு தெற்கே ஜ.நேரு சாலை அது சென்னையின் மெளண்ட் ரோடு போன்றது.  ‘தேசபந்து’ சித்தரஞ்சன் தாஸ் என்று இந்திய சுதந்திரப்போராட்ட வரலாற்றில் படித்த அவரின் பெயரில் சித்தரஞ்சன் அவென்யூ. இந்தியாவின் மிகவும் பழ்மையான மியூசியம் கொல்கத்தாவின் இந்தியன் மியூசியம்தான். புத்தர்சிலைகள் அதிகம் வைத்திருந்தார்கள் , இந்தியாவில் பல்வேறு சாம்ராஜ்பத்தில் புழங்கிய நாணயங்களை காட்சிபடுத்தி இருக்கிறார்கள். தொல்லியல் ஆர்வம் உள்ள்வர்களுக்கும் மாணவர்களுக்கும் காண நிறைய உள்ளது.

குழந்தைகளுக்கு சும்மா மியூசியம் கோவில் என்றெல்லாம் போரடித்துவிடக்கூடாது என்பதற்க்காக மில்லிணியம் பார்க் சென்றோம். ஹூக்ளியின் கரையில் அமைந்துள்ள பார்க்கில் குழந்தைகள் விளையாட இடமே கிடையாது மட்டுமல்ல.அங்கே குழந்தைகளை கூட்டிக்கொண்டு செல்லக்கூடாது. மாலை மயங்கும் வேளையில் காதலர்கள் ஒதுங்குமிடமாக இருக்கிறது. இதைவிட இந்தியன் மியூசியம் எதிரே இருந்த எலியாட் பார்க்கிற்கு சென்றிருக்கலாம். மில்லிணியம் பார்க்கிலிருந்து ஹொரா பாலம் ஹொரா ரயில் முனையம் தெளிவாகத் தெரிந்தது. அருகிலேயே பி.பி.டி பாக் என்ற லோக்கல் ரயில் செல்லும் ஸ்டேசன் உள்ளது. பி.பி.டி.பாக் ஏரியாவைச்சுற்றிலும் நிறைய அரசு அலுவலகங்கள் வங்கிகள் உள்ளன, மாலை அலுவலகம்விட்டு வீடு திரும்புவோர்கள் சர்குலர் ரயிலில் ஏறி செல்கிறார்கள், ஹொரா செல்வதற்கு பெரிய படகுகள் ghat களில் காத்திருக்கின்றன. சாலையில் நெருசலில் விலகி எளிதாக ஹொரா ரயில் முனையம் செல்ல படகு போக்குவரத்து உதவியாக உள்ளது. அந்தியாகிவிட்டது எல்லோருக்கும் ஓய்வும் தேவை, காளிகாட் செல்லலாம். மெட்ர்ரோ தான் எளிதான மார்க்கம் என்று அருகேயுள்ள மெட்ரோ ஸ்டேசன் எதுவென்று ஓ தாதா கொத்தோ தூர் ஆச்சே? என்று கேட்டோம் 1 கி.மீ தூரம்தான் செண்ட்ரல் என்றார், நடந்தோம் நடந்தோம் 2 கி.மீ, குறுகிய நடைமேடையில் மெல்லிய மழைச்சாரலில் நடந்து களைப்பாகிப்போனோம்.

மில்லிணியம் பார்க்கிலிருந்து ஹொரா ரயில் முனையம் மற்றும் பாலம்

காளிகாட் வந்து  சேர்ந்து அத்தோடு அன்றைய சுற்றலை முடித்துக்கொண்டோம்.



புதன், 30 டிசம்பர், 2015

கல்கத்தா காளி

கல்கத்தா காளி..

பயணக்குறிப்புகளை எழுதுவதற்கு என்ன காரணமென்றால், நான் மற்றவர்களின் அனுபவத்தை எங்கெங்கெ போனார்கள், எங்கே தங்கினார்கள், எங்கே சாப்பிடலாம் என்ன பொருட்களை வாங்கலாம் தெரிந்து கொள்ள கூகுளில் தேடினேன். Trip Advisor Google மிகவும் உதவியாக இருந்தது என்பதைவிட அங்கே தங்களின் அனுபவத்தை எழுதியவர்களுக்கு நன்றி சொல்லவேண்டும். Kairali channel ல் Flavours of India  என்ற நிகழ்ச்சியில் எந்தெந்த ஊர்களில் என்ன சாப்பாடு நல்லாயிருக்கும் அதாவது சாப்பாட்டு புராண நிகழ்ச்சி தான், கொல்கத்தாவின் உணவுகள், ஹோட்டல்கள் மட்டுமல்ல் சுற்றிபார்க்கவும் உதவியாக இருந்தது அந்த நிகழ்ச்சி. யூ டியூபில் தான் பார்த்தேன். ஒருவேளை தமிழில் கொல்கத்தா பயணம் என்றே யாரேனும் தேடினால் நம்முடைய அனுபவமும் பயன் தரலாம். நமக்கே சிலநாட்க\ளோ வருடங்களோ கழித்து நினைவுகளை வாசித்து அசைபோடலாம்.

 வழக்கம்போல காலை 5 மணிக்கு எழுந்து டீ சாப்பிட்டு விட்டு வரலாம் என ஹோட்டலிலிருந்து கீழே வந்தேன், ஒருகடையும் திறக்கவில்லை. ராஷ்பிகாரி அவென்யூ சாலையை குப்பையை அள்ளி தூய்மைப் பணியில் மாநகராட்சி வண்டிகள் மட்டும் போய்க்கொண்டிருந்தது. கோமளவிலாஸில் டீ, காபி 6 மணிக்கு மேல் தான் ரெடியாகும். சரி கொஞ்சம் தூரம் நடக்கலாம் டீக்கடை இல்லாமல போகும் என்று சென்றேன் எதிரே ஒரு லேக் மார்க்கெட் ஏரியா இருக்கிறது அப்ப லேக் எங்கே? அது அங்கிருந்து தெற்கே  ரபீந்திர சரோவர் ஏரி என்ப்படும் பெரிய நீர்நிலையும் பொழுதுபோக்கு பூங்காவும் உள்ளது. அந்த லேக் மார்க்கெட் பகுதியில் டீக்கடை இருப்பதாக வாக்கிங் சென்றவர் மூலம் தெரிந்து கொண்டேன். ஓ தாதா ஏக் டா சா தீன் ! மண்குவளையில் தேனீர் கிடைக்கிறது. சில இடங்களில் 5 ரூ 4 ரூ க்கு எல்லா இடங்களிலும் மண்குவளைகளில் டீ கிடைக்கும். பெங்காலிகள் டீ குடிக்கும்போது கொஞ்சம் விலகியிருக்கவேண்டும் ! உறிஞ்சு குடிக்கும்போது ஒரு சததம்.. ஆகா. அப்படி குடிப்பதை பக்கத்திலிருப்பவன் வித்தியாசமாக உணர்ந்தால் அவன் வெளியூர்!

காலை 8 மணிக்கு பனானா லீபில் free breakfastக்கு காத்திருந்தால் பயணம் தடைபடுமென்று 6மணிக்கு இன்னொரு காபி குடித்துவிட்டு காளிகாட் காளியை பார்க்க போனோம். Rashbஎhari avenue சாலையில் மேற்கு நோக்கி நடந்தோம். ஒவ்வொரு சாலையின் பெயரும் வரலாற்றை நினைவுகூரும். ராஷ்பிகாரி போஸ் இந்திய விடுதலைப்போரில் ஒரு தீவிரவாதியாக இருந்தார், சுபாஷ் போஸோடு இணைந்து  இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கியவ்ர்களில் இவரும் ஒருவர். காளிகாட் மெட்ரோவைத்தாண்டி நேரே மேற்குநோக்கி நடந்தால் காளிகாட் சாலை என்றொரு வீதி குறுக்கிடும் அதிலே வடக்கு நோக்கி நடந்தால் காளிகாட் காளி கோவில். நம்மூர் தெரு பிள்ளையார் கோவில் சைஸ்தான். ஆனால் இது புராணா கோவில். காளிகாட் மெட்ரோவிலிருந்து 1 கி.மீ தூரம்தான். வரும்போது இன்னொரு வீதிவழியா வந்தோம், கொஞ்ச தூரத்துக்கு கார், ஆட்டோ ரிக்‌ஷா எதுவ்ம் போகமுடியாது அவ்வளவு குறுகலான சந்து. வழியில் யாருகிட்டயும் வழிகேட்டா கைபிடிச்சி இப்படிபோகனும் என்று சொல்கிறார்கள். கோவிலுக்கு பக்கத்துல போகும்போதே புரோக்கர்கள் ஓடிவார்கள், அங்க ஹிந்தில பேசுவாங்க .. வெளியூர்க்காரன் தான் சாதாரண நாள்ல வருவான்..செம்பருத்தி பூ மாலை வாங்கிக்கொ மாதாவுக்கு ஸ்ந்தேஷ் ஸ்வீட் வாங்கிக்கோ என்று நச்சரிப்பார்கள். எனக்கு ஏண்டா உள்ளே போனோம் ங்கிற நிலைக்கு வந்துட்டேன். வெளியூர் பார்ட்டி நல்ல டிரஸ் பண்ணியிருக்கான், அர்ச்சனை, தாயத்து, தகடு கட்டி 2000 ரூ 5000 ரூ யோ கறந்துடலாமுன்னு நினைச்சாங்க, இந்தா 101 டக்கா செம்பருத்தி பூ மட்டும் கொடுத்துட்டு பெங்காலி ஏதோ திட்டுனா.. சரி புரியலை சந்தோஷம். அடுத்து சாமிக்கு பக்கத்துல பூசாரி கருவறைக்குள்ள இழுக்கிறாரு! சாமி நான் உள்ள வரல.. நாங்கள்ளாம் அங்க வரப்படாதுன்னு எஸ்கேப். சரி காளியைபாத்தாச்சு! பாரதி கேட்டா.. என்னம்மா சாமி நாக்கை தொங்கபோட்டுகிட்டு இப்படியிருக்கு !

6மணிக்கு ரூம்லயிருந்து கிளம்பி 1கி.மீ நடந்து 7 மணிக்கு தரிசனம்! முடிச்சு திரும்ப 1 கி.மீ நடந்து Rashbehari சாலைக்கு வந்தாச்சு. டாக்சியில் ஹொரா போகலாமென்றால் டாக்சி ஸ்ட்ரைக் வைச்சு10 கி.மீக்கு  200 ரூ கேட்டான், தாதா மீட்டர் டாலோன்னா , ஆஜ் டாக்சி ஸ்ட்ரைக் மாலும்! சரி பஸ்ல போகலாமென்று பஸ் நிறுத்தத்திற்கு வந்தோம். சரி எந்த பஸ்ல ஏறுறது? ஓ தாதா கோன்ஸா நம்பர் பஸ் ஹொரா ஜாச்சி? அமி ஹொரா ஜாச்சி! என் கூட ஏறுன்னார், ஆகா நம்ம கேட்டது அவருக்கு புரிஞ்சாச்சு.
அந்த காலை நேரத்தில் அவ்வளவா சாலை நெரிசல் இல்லை, ஹொரா பாலத்தை கடந்து ரயில்நிலையம் அருகில்லுள்ள பஸ்நிலையம் வந்தோம். ஹொரா பாலத்தின் பெயர் ரபீந்திர சேது. உலகின் மூன்றாவது நீளமான கேண்டிலீவர் பிரிட்ஜ் சுமார் 500மீ இடையில் எந்த பில்லரும் கிடையாது. ஒரு அதிசயம்தான் 1942ல் கட்டிமுடித்திருக்கிறார்கள். எவ்வளவோ இரும்பு .. ஒரு நாளைக்கு ஒரு லட்சம் வண்டியாவது அதை கடந்து போகும் .. நடந்து போறவங்களும் நிறைய போய்க்கிட்டேயிருக்காங்க..

ஹொரா ரயில்நிலையத்திலிருந்து பேலூர் மடத்திற்கு லோக்கல் ரயில் உள்ளது, 7 கி.மீ தூரம் தான் 1வது நடமேடையிலிருந்து கிளம்பும். பேலூர் என்ற பெயரிலும் பேலூர் மடம் என்ற பெயரிலும் ஸ்டேசன் உள்ளது. பேலூர் மடத்தின் ஸ்டேசனுக்கு அருகில் 100 மீட்டர் தொலைவில் தான் இராமகிருஷ்ண மடம் உள்ளது. இந்தியாவெங்கும் உள்ள இராமகிருஷ்ண மடத்தின் தலைமை நிலையம் அது தான். ஒரு தியான மண்டபத்தின் இராமகிருஷ்ண பரம்கம்சரின் உருவச்சிலை உள்ளது.  பக்தர்கள் , சுற்றுலா பயணிகள் தியான மண்டபத்தில் அமைதியாக தியானத்தில் இருந்தார்கள். ஹூக்ளி நதியின் கரையில் உள்ளதால் படித்துறை உள்ளது ஹூக்ளியில் குளிக்க ஆசையாக இருந்தது. அங்கிருந்து படகு மூலம் தட்சினேஷ்வர் சென்றோம்







செவ்வாய், 29 டிசம்பர், 2015

கொல்கத்தா பயணம்-1

மதியம் 1 மணிக்கு விமானம் தரையிறங்கியது, நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் பெயர்தாங்கிய கொல்கத்தா விமான நிலையம் எங்களை வரவேற்றது. சென்னை மும்பை அளவிற்கு பிரம்மாண்டமானது அல்ல சிறியதும் அல்ல. Indigo Airlines ல் தண்ணீர் மட்டும் இரண்டு கிளாஸ் இலவசமாக வாங்கிக்கொள்ளலாம். உணவிற்காக ஆன் லைனில் புக் செய்திருந்தென். இதுதான் domestic விமானத்தில் முதல்பயணம். ஹைதராபாத் பிரியாணி வேண்டும் என்றான் பாலா, சரி வாங்கிக்கோ என்றால் packed food, அதை என்றோ தயாரித்து பாக்கெட்டில் கெட்டுப்போகாமல இருப்பதற்கு பல சேர்மானங்களை சேர்த்திருப்பார்கள்.பாக்கெட்டின் மூடியைத் திறக்கவெண்டும், அவர்களே வெந்நீர் இலவசமாக ஊற்றுகிறார்கள் 8 நிமிடம் கழித்து சாபிடவேண்டுமாம். கேவலம், இந்தியாவின் எந்த விமான நிலையத்திலும் உணவு தயாரித்து வழங்க உணவகங்களே இல்லையா? Srilankan விமானத்தில் மட்டுமல்ல, வளைகுடாவிலிருந்து இருந்து சென்னை வந்து திரும்பும் விமானங்கள் அந்த பிரதேசவாசிகளின் ப்ரெஷ் உணவை வாங்கி கொடுக்கிறார்கள் சிறிய தோசை, உப்புமா , வெஜிடபிள் பிரியாணி, சிக்கன் பிரியாணி எல்லாம் உண்டு.


தெரியாமல் ஆர்டர் செய்த ஹைதராபாத் பிரியாணி! இனிமே சாப்பிடுவ!, அப்புறம் பிரட் சாண்ட்விச் அதுவும் மகாமோசம். சரி அதான் லஞ்ச்க்கு கொல்கத்தா banana leafல் சாப்பிடலாம் என்ற திருப்தியோடு பயணம் செய்தோம்.ப்ரீபெய்டு டாக்சியின் பணத்தை 350ரூயை ஏர்போர்ட்டிலேயெ கட்டிவிட்டோம், ஒருவேளை அதிகமானால் ஓட்டுனரிடம் தரவேண்டும், கட்டியதைவிட குறைவான பில் காமித்தால் ரிடன்மணி தருவாரா? டாக்சி ஓட்டுனர். டாக்சியில் 90 நிமிடப் பயணத்தில் kalighat rashbihari avenue  வந்து சேர்ந்தோம். எதிர்பார்த்ததை விட 50 ரூபாய் குறைவாகத்தான் பில் வந்தது, மீதமும் நான் கேட்கவில்லை, அதிக புன்னகையோடு எங்களை இறக்கிவிட்டார். மதிய உணவை திருப்தியாக சாப்பிட்டோம். கோமளவிலாஸின் கட்டிடம் கொல்கத்தாவின் நூறாண்டு பழமைவாய்ந்த கட்டிடங்களில் ஒன்று அதை நவீனப்படுத்தியிருக்கிறார்கள்.






விக்டோரியா மெமோரியலுக்கு மெட்ரோவில் செல்லலாம் Maidan மெட்ரோ ஸ்டேசனில் இறங்கினால் 1 கி.மீ நடந்தால் போதும். மாலை 4:30யோடு விக்டோரியா மெமோரியல் ஹாலின் நுழைவு டிக்கெட் கவுண்டரை மூடிவிடுவார்கள் என்ற அவசரத்தில் டாக்சியை பிடித்துக்கொண்டு கிளம்பினொம். மறுநாள் ஒருபிரிவு டாக்சிகளின் 48 மணிநேர வேலைநிறுத்தத்திற்கு முந்தைய நாளே மீட்டர் போடாமல் தயாராகிவிட்டார்கள் இருந்தாலும் 6 கி.மீ பயணத்திற்கு 100 ரூபாய் பரவாயில்லை தான். ராஜாஸ்தான் மார்பிளை வைத்து அந்த மாளிகை விக்டோரியா ராணியின் நினைவாக 1921ம் ஆண்டில்  கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. 64 ஏக்கர் பரப்பள்வில் சுற்றிலும் பூங்கா, நீர்நிலையும் அமைத்திருக்கிறார்கள். கொல்கத்தாவில் பார்க்கவேண்டிய இடங்களில் விக்டோரியா நினைவகம் முக்கியமானது. மாலை 4:30 மணிக்கே கதிரவன் மறையத்தொடங்கிவிட்டான் அதுவும் குளிர்காலம் அல்லவா? அப்படியே வெளியேவந்து இரபீந்திரசதன் என்ற கொல்கத்தாவில் திரைப்படவிழா நடக்கும் இடத்திற்கு வந்தொம், தேசிய நாடகவிழாவின் நிறைவு நாளில் நஷ்ரூதின் ஷா இயக்கிய நாடகம் நடைபெறவிருந்தது, கல்லூரி மாணவர்கள் அதிகமாக இருந்தார்கள்.



அத்தோடு அங்கிருந்து நியூமார்க்கெட் சென்றோம், நடந்துசெல்லலாம், பேருந்து , டாக்ஸி, மெட்ரோவிலும் செல்லலாம். Rabindra sadan என்ற மெட்ரோ ஸ்டேசன் நந்தன் ப்லிம் செண்டரிலிருந்து 200 மீட்டர் தூரம் தான், அங்கிருந்து டம்டம் நோக்கி செல்லும் மெட்ரோவில் ஏறினால் 5 ரூபாய் டிக்கெட்டில் எஸ்பிள்னேடு மெட்ரோ ஸ்டேசனில் இறங்கினால் 1/2 கி.மீ தூரத்தில் நியூ மார்க்கெட் உள்ளது. பெங்கால் காட்டன் புடவைகள், தோலினால் செய்யப்பட்ட பொருட்களை வாங்கலாம். Sree Leathers  என்றொரு பெரிய கடை உள்ளது அங்கே தோலினால் செய்யப்பட்ட பொருட்களை ஷு, பெல்ட், பேக், லெதர் ஜர்க்கின் எல்லாமே நல்ல விலையில் வாங்கலாம், நிறைய கலெக்‌ஷன் உள்ளது. கொல்கத்தா நினைவாக அப்பாவுக்கு ஒரு ஸ்வெட்டரும் அம்மாவுக்கு ஒரு புடவையும் எனக்கு ஒரு லெதர் பெல்ட்டும் நியூ மார்க்கெட் ஷாப்பிங் முடித்து மெட்ரோவைத்தேடி நடந்தோம், எஸ்பிளனேடுக்கு பதிலாக பார்க் ஸ்டீர்ட் மெட்ரோவிற்கு போய்விட்டோம் கொஞ்சம் அதிக நடை 750 மீ. பார்க் ஸ்டீர்ட் மெட்ரோவிலிருந்து காளிகாட் மெட்ரோவிற்கு பயணம் 7 கி.மீ தூரம் 5 ஸ்டேசன்கள்  5 ரூபாய் டிக்கெட். மெட்ரோவில் யாரும் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்திடமுடியாது, டிக்கெட்டிற்கு பதிலாக டோக்கன் தருகிறார்கள், அதை ஸ்கேன் செய்தால் தான் வழிவிடும் கேட், மெட்ரோவில் எல்லா நேரமும் கூட்டம்தான்.



மெட்ரோவில் ‘அடுத்த’ ஸ்டேசன் என்னவென்பதை பெங்காலியில் அறிவிப்பார்கள், Rabindra sadan க்கு  ரொபீந்திரசொதன், Maidan க்கு மொய்தான் என்ற உச்சரிப்பு பாலாவுக்கு காமெடியாக இருந்தது. kalighat  ஸ்டேசனிலிருந்து இறங்கி 1/2 கி.மீ தூரம் நடந்தால் லேக் மார்க்கெட்டிலுள்ள கோமளவிலாஸை சென்றடையலாம். ஒவ்வொரு மெட்ரோ ஸ்டேசனிலும் வெளியே செல்ல மூன்று அல்லது நான்கு வழிகள் இருக்கும், ஒவ்வொரு வழியும் ஒவ்வொரு பிரதான சாலையின் மேற்பகுதிக்கு செல்லும், சரியான வழியில் சென்றால் குறைந்த நடை இல்லையென்றால் சாலையை கடக்க  இன்னும் கொஞ்சம் சிரமேற்கொள்ளவெண்டும். சாலையின் ஓரங்களில் நடைபாதையெங்கும் குடியிருப்புகள், கடைகள், கடைகளின் முகப்பே தெரியாமல் சாலையோரக்கடைகள் மறைத்திருக்கும், கடைகளை இரவு 9 மணிக்கு முன்பே அடைத்துவிடுகிறார்கள். இரவு  ‘பனானா லீப்’ ல் தோசை சாப்பிட்டுவிட்டு அடுத்த நாளைக்கு திட்டமிடலும் பின்பு உறக்கம். ட்ராமின் சத்தம், கார்களின் ஹார்ன் ஓசை, எல்லாம் இரவு 10 மணிக்கு அடங்கிவிட்டது.
---------------------------------------------------------------------- இன்னும் நாளைக்கு சுற்றலாம்..




கொல்கத்தா பயணம்...



கொல்கத்தா பயணம்..


சுமார் பதினாறு ஆண்டுகளுக்கு முன் பார்த்த கொல்கத்தா இப்போது எப்படி இருக்கும் என்ற ஆவல், இந்த விடுமுறையில் சுற்றுப்பயணத்திற்காக எங்கே தங்கலாம், எந்த இடங்களை அவசியம் பார்க்க வேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிட்டேன். கொல்கத்தாவை சுற்றிப்பார்த்துவிட்டு அப்படியே நினைவில் அகலாது நிற்கும் ஹல்தியாவை பார்க்கவேண்டும். ஐஓசி ல் பணியாற்றும் நண்பர் செல்வத்திடம் பேசினென் நீ..ண்ட வருடங்களுக்குப் பின் சந்திக்கும் ஆவல் அவரிடம் அதிகமிருந்தது.


நவம்பரின் நடுவிலே சென்னையை கலக்கிய மழை, வெள்ளம் நிற்குமா? என்ற சந்தேகம் இருந்தது. மிண்டும் மழை, வெள்ளம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு. போக்குவரத்து தரைமார்க்கம், இரயில் மார்க்கம் ஆகாயமார்க்கமும் துண்டிக்கப்பட்டது சென்னை. இந்த மழையில் பயணம் தேவைதானா? எத்தனை மக்கள்  வெள்ளம் வடியாத வீடுகளோடும், தங்கள் வீடுகளை இழந்தும் ஏழை பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வை இந்த மாமழை நீக்கியது. ஆன்லைனில் ஆர்டர் செய்தும், கிரடிட் கார்டுகளை சாப்பிடமுடியாது, இயற்கையை சீரழிக்கக்கூடாது என்ற பாடத்தை கற்றுக்கொடுத்தது. இந்த மழையில் எல்லா இடத்திலும் மனிதத்தை பார்க்கமுடிந்தது. எல்லா அவசர காலத்திலும் நீளும் கைகளும் இணையும் உள்ளங்களும் சாதாரண காலங்களிலும் நிலைக்கவெண்டுமென்பதே அவா!


கோவையிலிருந்து சென்னை வழியாக போகவேண்டிய விமானம் சென்னைவிமான நிலையம் மூடப்பட்டதால் நேரடியாக கொல்கத்தா சென்றது. விமான்நிலையத்திலிருந்து சுமார் 25 கி.மீ பயணம் செய்து காளிகாட் சென்றோம். பழமை மாறாத மஞ்சள்நிற அம்பாசிடர் கார்கள் கொல்கத்தாவில் மட்டும் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது.. அந்த வாகனங்களுக்கு உதிரி பாகங்கள் கிடைக்கிறதா? என்னவோ! கொல்கத்தா டாக்சிகளில் பயமின்றி செல்லலாம், மீட்டருக்கு மேலே எவ்வளவு கேப்பானொ? சூடுவச்சிருப்பானோ என்று பயப்படவேண்டாம். சாலைகளில் டிராபிக் ஜாம், காரன் சத்தம் பழகிக்கொள்ள வெண்டும். ஒரு வண்டிக்கும் அடுத்த வண்டிக்கும் இன்ச் கேப் இடைவெளியில் நிப்பாட்டுகிறார்கள். நமக்குத்தான் எங்கே போய் இடிச்சிருவானோ? என்ற பயம்.


நவம்பரில் வரவெண்டிய குளிர் திசம்பர் முதல் வாரம் வரை வரவேயில்லை, தாமதம் கடந்த ஆண்டைவிட குறைந்தபட்ச வெப்பநிலை 7டிகிரி அதிகம் என்பதை நாளிதழில் பார்த்தேன். காளிகாட்டில் கோமளவிலாஸ் ஹோட்டல் தமிழரால் நடத்தப்படுகிறது, அந்த ஹோட்டல்காரர்களே பனானா லீப் என்ற உணவகத்தை நடத்துகிறார்கள். கொல்கத்தாவில் முதல்தர தென்னிந்திய உணவு இங்கே தான் கிடைக்கிறது. காலையில் நல்ல காபியை அருந்துவதற்கு நடைபயிற்சி செல்வோர் 6 மணிக்கு வந்து செல்கிறார்கள். நாங்கள் சுவையான காபி குடிப்பதற்கு இங்கே தினம் தவறாமல் வருவதாக வயதான தம்பதிகள் சொன்னார்கள். ஆம் சரவணபவன், அன்னபூர்ணா காபியை விட சிறந்த காபி என் எனது மனைவியும் சொன்னார்கள். ’ கோமளவிலாஸ்’ காளிகாட் மெட்ரோவிலிருந்து நடக்கிற தூரம்தான்.


எந்த இடங்களை பார்க்கவேண்டும் என்ற லிஸ்ட் முன்னமே தயாரித்திருந்தேன் .


விக்டோரியா மெமோரியல்
காளிகாட் கோவில்
ஹொரா பாலம்
தட்சினேஸ்வர் கோவில்
பேலூர் மடம்
மெட்ரோவில் பயணம்
மில்லினியம் பார்க்
நியூ மார்க்கெட்
சயின்ஸ் சிட்டி
 காலெஜ் ரோடு
இந்தியன் காபி ஹவுஸ்
ஜெயின் மந்திர்
பி.பி.டி பாக்
ரைட்டர்ஸ் பில்டிங்
அன்னை தெரஸா நினைவில்லம்
ட்ராமில் பயணம்
இந்தியன் மியூசியம்
தாகூர் இல்லம்
மார்பிள் பேலஸ்
பிரின்சிப் காட்
இரபீந்திரசரொவர் ஏரி
பிர்லா கோளரங்கம்




                                                                                                 - இன்னும்சுற்றுவேன்
---