தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வாக்குகள் பதிவாகியிருக்கிறது. மிகவும் நல்ல செய்தி. திமுக இந்த வாக்குப்பதிவை ‘கழக அரசு’ மீண்டும் வரவேண்டும் என்பதற்காக என்கிறார், ஜெ வோ மக்கள் ஆட்சி மாற்றத்திற்க்கான மக்களின் ஏகோபித்த ஆதரவு என்கிறார். நடுநிலையாளர்கள் (அப்படி யாருமே கிடையாது) இது தேர்தல் கமிஷனுக்கு கிடைத்த வெற்றி என்று பொதுஜனம் கருதுகிறது. எப்போதும் கலைஞர், ஜெயா, சன் டிவி பார்க்கிறவகளுக்கு தேர்தல் கமிஷனின் முயற்சிகள் தெரிய வாய்ப்பில்லை. அது பொதிகையில் தான் அடிக்கடி இந்த விளம்பரங்கள் வருகின்றன. மேற்கூறிய சேனல்களில் இந்த விளம்பரங்களை அடிக்கடி போட்டால் அவர்களுக்கு எதிராக மாறிவிடும் என்கிற பயமிருக்கும். தேர்தல் கமிஷனின் நடவடிக்கைகளை ‘அறிவிக்கப்படாத எமர்ஜென்ஸி’ என்றெல்லாம் வர்ணித்த திமுக தலைவர் இப்போது தேர்தல் கமிஷன் ‘மிகக் கடுமையாக நடந்துகொண்டார்கள்’ என்கிறார். தேர்தல் கமிஷ்ன் அதிகாரி ‘பார்ப்பனர்’ இல்லாமல் போய்விட்டார், இல்லாவிட்டால் அந்த ‘இன’ அம்மாவுக்காக செயல்படுகிறார்கள் என்று சொல்லியிருப்பார். கேரளாவிலோ, மேற்கு வங்கத்திலோ தேர்தல் கமிஷனை இப்படி விமர்சனம் செய்யவில்லை. அங்கெ காங்கிரசோ, இடதுசாரிகளோ பணம் கொடுத்து வாக்காளர்களை ஏமாற்றவில்லை. இன்னும் சொல்லப்போனால் மேற்குவங்கத்தில் மாவோயிஸ்ட் நடமாட்டமுள்ள பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்து மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டது இடதுமுண்ணனி.
“எதையும் , எதன் பொருட்டும் , யாரிடமும் யாசிக்காதீர்கள் .
யாசிப்பு மேலும் தரித்திரத்தைக் கொண்டு வரும்.”
பாரதிகிருஷ்ண குமார் ‘யாசகம்’ என்ற தலைப்பில் எழுதிய வரிகள், தமிழக வாக்காளர்களுக்கான அறிவுரையாக இருக்கிறது. வாக்காளர்கள் சிலர் ‘கொடுத்த பணத்தைப் பெற்றுக்கொண்டோம்’ ஆனால் ஓட்டு எங்க விருப்பத்திற்குத்தான் போடுவோம் என்கிறார்கள். இது திருப்பதி கோவிலில் சிலர் அநியயாமாக சம்பாதித்த பணத்தை ‘சாமிக்கு பங்கு’ கொடுத்தமாதிரி ஊழல் பணத்தின் சில சதவீதங்களை மக்களுக்கு கொடுத்து அவர்களையும் பங்காளிகளாக்கும் வேலையிது. பிரதமர் ஓட்டுப் போடாமலிருந்தது பெரிய சர்ச்சையாகி விட்டது. முதன்முதலாக வரிசையில் நின்று வாக்களித்த பெருமை அது கே.ஆர். நாராயணன் குடியரசுத்தலைவராக இருந்தபோது.
எழுத்தாளரும் பதிவருமான மாதவராஜ் தன்னுடைய பதிவில் ‘தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என்பது எவ்வளவு நியாயமானதோ, அதே அளவுக்கு அ.தி.மு.கவும் வரக்கூடாது என்பதும் எனக்கு நியாயமாகப் படுகிறது’ என்று சொல்லியிருக்கிறார். அவர் சாலைப்பணியாளர்களுக்காக ‘இரவுகள் உடையும்’ என்ற குறும்படத்தை நினைவுபடுத்துகிறார். திமுக அதிமுக என்ற இருவரை எடைபோட்டால் குடும்ப ஆட்சி, ஊழல் என்பதில் சமமாகவும் தொழிலாளர் விசயத்தில் கொஞ்சம் கருணாநிதி ‘மென்மையாக’ நடந்துகொள்வார். தாமிரபரணி கொலைகள், ஹூண்டாய் தொழிலாளர்களை வஞ்சித்தது மற்றதைவிட சின்னது (ஒப்பீட்டுக்குத்தான்). இப்போதுள்ள கவலை அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாதே என்பது தான். திமுக காரர்கள் இடதுசாரிகள் போயஸ்கார்டனில் காத்திருந்ததற்காக ரெம்ப வருத்தப்பட்டார்கள். ஆனால் காங்கிரஸிடம் போய் விழுந்து ‘மீசையில் மண் ஒட்டவில்லை’ என்கிறார்கள். இடதுசாரிகள் அறிவாலயத்திலும் காத்திருந்தார்கள். கலைஞர் இதயத்தில் இடமளித்தார் அப்போதும் இடதுசாரிகள் தாங்கள் நின்ற 2 தொகுதிகளைத்தவிர மற்ற தொகுதிகளில் திமுக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார்கள் இது தான் வரலாறு. 63 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு மத்தியில் முதல் UPA அமைந்தபோது மந்திரிபதவியே வேண்டாம் ‘common minimum programme' படி ஆட்சிசெய்தால் போதும் என்றார்கள். திமுக தன்னுடைய குடும்ப முன்னேற்றதிற்காக மந்திரி பதவி கேட்டது. பாஜகவின் மதவாதத்தை மறந்துவிட்டு அவர்களின் தயவிலும் மந்திரியானார்கள். இடதுசாரிகள் யாராவது தன்னுடைய மகனுக்கு இதுவேண்டும் அதுவேண்டும் என்று என்றாவது கோரிக்கை வைத்திருக்கிறார்களா. சாமான்ய மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது தானே இவர்களின் கோரிக்கை. தமிழகத்தில் அமையவுள்ள ஆட்சியின் சுக்கான் இடதுசாரிகளிடம் இருந்தால் இங்கேயும் ‘குறைந்தபட்ச பொதுசெயல்திட்டம்’ அறிமுகமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக