வெள்ளி, 31 டிசம்பர், 2010

திமுக : மிசா முதல் ஸ்பெக்ட்ரம் வரை



இந்திய வரலாற்றில் 2010ம் ஆண்டு ஒரு ஊழல் நிறைந்த ஆண்டாகவே எதிர்கால சந்ததிக்கு அறிமுகப்படுத்தப்படும். காமன் வெல்த் ஊழல், ஆதர்ஷ் ஊழல், ஐ.பி.எல் கிரிக்கெட் ஊழல், பூனா, கொல்கத்தா உள் ளிட்ட பல்வேறு இடங்களில் ராணுவத்திற்கு சொந்தமான நில ஆக்கிரமிப்பு ஊழல், இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போல் வெளிவந்துள்ள ஸ்பெக்ட்ரம் ஊழல் என ஊழல் கொடிகட்டி பறக்கிறது. இந்திய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் இந்த ஊழல்கள் குறித்த செய்திகள் ஊடகங் களில் உலா வந்துகொண்டிருக்கின்றன.

காங்கிரஸ் - திமுக, திரிணாமுல் கட்சி கள் அடங்கிய ஐக்கிய முற்போக்கு கூட்ட ணியின் ஆட்சி இந்திய நாட்டின் ஏழை-எளிய மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. மாறாக பன்னாட்டு முதலாளிகளுக்கும் அம்பானி, டாடா போன்ற பெரு முத லாளிகளுக்குமே சேவை செய்கிறது.

இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து சில்லரை ஊழல்கள் குறித்த செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தாலும், தாராளமய சந்தைப்பொருளாதாரம் தீவிரமாக அமல் படுத்தப்பட்ட பிறகு, ஊழல் என்பது அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாகவே மாற்றப்பட் டிருக்கிறது.

மன்மோகன் சிங் ஒரு பொருளாதார நிபுணர் என்று அழைக்கப்படுகிறார். ஆனால் அவர் ஏழை, எளிய இந்திய மக்களின் பிரதமராக இல்லை. மாறாக முதலாளிகளின் சேவகராகவே செயல்படுகிறார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைச் சரவையில் தொலைத்தொடர்புத்துறை உள்ளிட்ட கேந்திரமான இலாகாக்களை யார் நிர்வகிக்க வேண்டும் என்பதை டாடா, அம்பானி போன்ற பெருமுதலாளிகளே தீர்மானிக்கிறார்கள். திமுக தலைவர் கலைஞர் “நான்தான் ராசாவுக்கு தொலைத் தொடர்புத்துறையை மீண்டும் பெற்றுக் கொடுத்தேன்” என்று கூறிக் கொண்டாலும் உண்மையில் பெருமுதலாளிகளே தங்களது தேவைக்காக அவருக்கு அந்தத்துறையை மீண்டும் பெற்றுக்கொடுத்துள்ளனர் என்பது தெளிவாகிறது.

தயாநிதிமாறன் தங்களுக்கு ஒத்துவரமாட் டார் என்பதால் ஆ. ராசாவை தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் பொறுப்புக்கு பெருமுதலாளிகள் கொண்டுவந்தார்கள் என்பதை நீரா ராடியா உரையாடல் டேப் தெளிவாக்கியுள்ளது. இதை திமுக எந்த வகையிலும் மறுக்கமுடியாது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக எதிர்க் கட்சிகள் கேள்வி எழுப்பியபோது, ஆ.ராசா நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங் களவையிலும், “அனைத்தும் பிரதமருக்கு தெரிந்துதான் நடந்தது” என்று ஓங்கி கூறி னார். அப்போது அவையிலிருந்த பிரதமர், வாய் மூடி மவுனியாக இருந்தார். ஆனால் தில்லி யில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங் “மறைப்பதற்கு என் னிடம் எதுவும் இல்லை” என்று சாதிக்கிறார். ஆ.ராசா மீது வழக்கு தொடர 16 மாத காலம் எடுத்துக் கொண்டது ஏன் என்று உச்சநீதி மன்றம் கேள்வி எழுப்பியபோதும், பிரதமரின் அறிவுரைகளையே ஆ.ராசா மீறியுள்ளார் என்று உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டிய போதும் பிரதமர் மன்மோகன் சிங் மவுனத்தையே பதிலாகத் தந்தார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது பங்கிற்கு ஊழல் ஒழிப்புக்கு ஐந்து அம்சத்திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இத்தகைய திட்டங்களை அறிவிப்பது காங் கிரஸ் கட்சிக்கு ஒன்றும் புதிதல்ல; 20 அம்ச திட்டம், 10 அம்ச திட்டம், 5 அம்ச திட்டம் என்று காங்கிரஸ் அறிவித்த திட்டங்களைக் கேட்டு கேட்டு மக்களுக்கு புளித்துப் போய் விட்டது. எதையுமே அவர்கள் நிறைவேற்றிய தில்லை.

ஆ.ராசா எந்தத் தவறுமே செய்யவில்லை என்று திமுக தலைவர் கலைஞர் சாதித்து வந்தார். இனி வேறு வழியேயில்லை என்ற நிலையில்தான் அவர் ராஜினாமா செய்ய வைக்கப்பட்டார். “நான் ஒரு வழக்கறிஞர், சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன்” என்று ராசா ஜம்பமாக கூறி னார். முதல் நாள் அவரிடம் எட்டு மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ள னர். இரண்டாவது நாள் ஐந்து மணி நேரத்திற் கும் மேலாக விசார ணை நடத்தப்பட்டது. இரண்டாவது நாள் ஆ.ராசா தன்னுடன் ஒரு மருத்துவரையும் கூடவே அழைத்துச் சென்றுள்ளார். மருத்துவரை பக்கத்தில் வைத்துக்கொள்ளும் அளவுக்கு விசாரணை நடந்துள்ளது எனத் தெரிகிறது. அவரிடமும், நீரா ராடியாவிடமும் மீண்டும் சிபிஐ விசார ணை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.

மத்திய தணிக்கை துறை அதிகாரியின் 77 பக்க அறிக்கையில் ஆ.ராசா மீது 25க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட் டுள்ளன. இதுதவிர, நீரா ராடியா உரையாடல் அடங்கிய டேப்பில் பல்வேறு விவரங்கள் உள்ளன. இதுகுறித்தெல்லாம் ஆ.ராசாவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது - அவருக்கு அடிப்படையில் சம்மன் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலும் ஆ.ராசா எந்தத் தவறுமே செய்யவில்லை என்று திமுக பிரச்சாரம் துவக்கியிருப்பது வியப்பாக உள்ளது.

‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சியில் ஒளி பரப்பான ஒரு நேர்காணலில் இந்தியாவின் புகழ்பெற்ற காவல்துறை அதிகாரிகளில் ஒருவரான கிரண் பேடியிடம் “ஹர்ஷத் மேத்தா, கார்பரேட் முதலாளி சத்யம் ராமலிங்க ராஜூ ஆகியோரை கைது செய்த பிறகே சிபிஐ அவர்களிடம் விசாரணை நடத்தியது. ஆனால் ஆ.ராசா, நீரா ராடியா போன்றவர் களை கைது செய்யாமல் விசாரணை நடத்தி யது ஏன்?” என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கிரண் பேடி “ நீங்கள் ஒன் றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். நம் நாட்டில் உள்ள சிபிஐ உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் எதுவும் சுயேட்சையாக இயங்கு பவை அல்ல. அவை அனைத்தும் அரசுக்கு கட்டுப்பட்டவை. அரசு என்ன கருதுகிறதோ அதன்படியே வழக்கு விசாரணை நடத்தப் படும். இந்த வழக்கும் அப்படித்தான்” என்றார்.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஆ.ராசாவுக்கு மட்டும் தொடர்பு இல்லை. இந்தியாவின் பெரு முதலாளிகள், பன்னாட்டு முதலாளிகள் இதில் லாபம் பெற்றிருக்கிறார்கள். ஹவாலா மூலம் பல நாடுகளில் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது. திமுகவை மட்டும் சுட்டிக் காட்டி காங்கிரஸ் கட்சி விலகிக்கொள்ள முடியாது. ஊழலின் முழு பரிணாமும் வெளியே வரவேண்டுமானால் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை மட்டுமே ஒரே வழி. ஆனால் இதற்கு காங்கிரஸ்-திமுக கூட் டணி அரசு மறுத்து வருகிறது. பொது கணக்குக்குழு முன்பு ஆஜ ராகத் தயார் என பிரதமர் தாமாக முன்வந்து கடிதம் எழுதியுள்ளார். ஆனால் அவர் நாடாளு மன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு மறுப்பது ஏன் என்ற மர்மம்தான் புரியவில்லை.

அவசரநிலைக் காலத்தில் ஜனநாயக உரிமைகளுக்காக போராடி, திமுகவைச் சேர்ந்த பலரும் சிறை சென்றார்கள். சிலர் அடிஉதை பட்டார்கள். சாத்தூர் பாலகிருஷ் ணன், சிட்டிபாபு போன்றவர்கள் சிறையி லேயே மரணமடைந்தனர். அவசரநிலைக் காலம் முடிந்து சிறையிலிருந்து வெளியே வந்தவர்களின் பெயருக்கு முன்னால் ‘மிசா’ என்ற அடைமொழி கொடுத்து பெருமையாக அழைத்தது திமுக. ஆனால் இன்றைக்கு திமுகவைச் சேர்ந்த ஆ.ராசாவின் பெயருக்கு முன்னால் ‘ஸ்பெக்ட்ரம்’ ராசா என்று ஊடகங் கள் அடைமொழி கொடுக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. திமுக தேசிய கட்சியாக மாறி விட்டது என்று கூறப்பட்டதன் பொருள் இதுதான்.

திமுகவைப் பொறுத்தவரை ஊழல் குற்றச்சாட்டுக்களை எப்போதும் அவர்கள் ஒத்துக் கொள்வதில்லை. வீராணம் ஏரி ஊழல், சர்க்காரியா கமிஷனால் கண்டறியப் பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் என எதையும் திமுக ஒத்துக் கொண்டதில்லை. இப்போது ஸ்பெக்ட்ரம் ஊழல் விசயத்திலும் அதே நிலைபாட்டையே மேற்கொள்கிறார்கள்.

நாட்டின் கஜானாவுக்கு வந்து சேர்ந் திருக்க வேண்டிய ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி சூறையாடப்பட்டுள்ளது. ஆனால் இது இழப்புதானே தவிர ஊழல் அல்ல என்கிறார்கள். திமுக இந்த குற்றச்சாட்டை எதிர்கொள்ள முடியாமல், நியாயப்படுத்த முடியாமல் தடுமாறுகிறது. ஆ.ராசா ஒரு தலித் என்பதாலேயே இந்த குற்றச்சாட்டு எழுந்துள் ளதாக சொல்லி சமாளிக்கப் பார்த்தார்கள். அது முடியாமல் போய்விட்டது. இத்தகைய ஒரு பெரிய ஊழலை ஒருவர் செய்திருக்க முடி யாது என்று அடுத்து கூறினார்கள். யார் யார் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை இவர் களாவது வெளிப்படுத்தலாம் அல்லவா?

நாட்டின் பணம்,கொள்ளையடிக்கப்பட் டிருக்கிறது. ஆனால் திமுகவும், காங்கிரசும் இது ஏதோ அவர்களது கூட்டணி சம்பந்தப் பட்ட பிரச்சனை என்பதுபோல, உறவில் விரிசல் இல்லை, கூட்டணி பலமாக உள்ளது என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

முந்தைய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர்கள் மேற்கொண்ட அணுகுமுறை யைத்தான் ஆ.ராசாவும் பின்பற்றினார் என்று சாமர்த்தியமாக வாதிடுகிறார்கள். அமைச்சர் துரைமுருகன் கரூரில் இந்த கருத்தைத்தான் வெளியிட்டுள்ளார். தயாநிதி மாறனும் இதே கொள்கையைத்தான் பின்பற்றினார் என்றும் அவர் கூறினார். இதுகுறித்தெல்லாம் தயாநிதி மாறன் வாய்திறக்க மறுப்பது ஏன் என்று தெரியவில்லை?

மார்க்சிஸ்ட் கட்சியை பொறுத்தவரை ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடைய அனை வரையும் கண்டறிந்து சட்டப்பூர்வ நட வடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு அரசு கஜானாவுக்கு வந்திருக்க வேண்டிய பல ஆயிரம் கோடி ரூபாயை மீட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

திமுகவை அண்ணா அவர்கள் துவக்கும் போது, இந்த கட்சி சாமானியர்களுக்காகவும், குப்பன்களுக்காகவும், சுப்பன்களுக்காகவும் துவக்கப்பட்டுள்ளது என்றும், பஞ்சை பராரி களுக்காக உருவாக்கப்பட்டுள்ள இயக்கம் இது என்றும் கூறினார். ஆனால் இன்றைக்கு திமுக என்பது டாடா, அம்பானி போன்ற பெரு முதலாளிகளுக்கு சேவை செய்யும் கட்சியாக மாறிவிட்டது. மாநில சுயாட்சி கேட்ட அந்த கட்சி, மத்திய அதிகாரத்திற்கு சென்றவுடன் மாநில சுயாட்சிகளுக்காக போராடவில்லை. மாறாக அனைத்து துறைகளிலும் மாநில உரிமைகள் பறிக்கப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

ஆனால் வலுவான இலாகாக்களை பெற்று, அதன் மூலம் பெருமுதலாளி களுக் கும் பன்னாட்டு முதலாளிகளுக்கும் சேவகம் செய்து வருகிறது. என்னதான் வாய் சாதுர் யத்தால் தப்பிக்க முயன்றாலும் ஸ்பெக்ட்ரம் ஊழல் கறையிலிருந்து திமுக தப்பமுடியாது.

-டி.கே.ரங்கராஜன் எம்.பி.

நன்றி: தீக்கதிர்

வியாழன், 30 டிசம்பர், 2010

நீதித்துறை : சீனாவும் இந்தியாவும்

அண்மையில் சீனாவின் நீதித்துறையைப் பற்றி செய்தி வந்தது, அங்கு வழக்கு பதிவு செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்குள் தண்டனை உறுதிசெய்யப்படுகிறதாம், இந்தியாவின் சுப்ரீம் கோர்ட் நீதிபதி சிர்புர்கர் தலைமையில் சீனாவின் நீதித்துறை பார்வையிடச் சென்ற ICJ என்ற சர்வதேச நீதிபதிகளின் கூட்டமைப்பு சார்பில் பார்வையிட்டுள்ளார்கள். சீனாவில் 23 வயது நிரம்பியவர் உயர்நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்கமுடியும், ஒருவர் நீதிபதியாவதற்கு முன்பு வழக்கறிஞராக பணியாற்றவேண்டிய அவசியம் இல்லை. NJE எனப்படும் National Judiciary Examination தேர்வில் வெற்றியடைந்தால் சில மாதங்களுக்கு சிறப்புப் பயிற்சி பெற்றபின்பு நீதிபதியாக நியமிக்கப்படுகிறார்கள். NJE என்பது இந்தியாவின் ICS தேர்வுக்குச் சமமானது. பிரைமரி கோர்ட் லிருந்து சுப்ரீம் கோர்ட் வரை முழுவதும் கணணிமயமாக்கம் செய்யப்பட்டுள்ளது, நீதிமன்றத்திற்கான வசதிவாய்ப்புகள் பிரைமரி கோர்ட், இண்டர்மீடியட் கோர்ட், உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றம் என பாகுபாடு இல்லாமல் எல்லா நீதிமன்றங்களுக்கும் சமவசதி வாய்ப்பு அளித்திருக்கிறார்கள்.சீனா முழுவதும் 1,90,000நீதிபதி பணியிடங்கள் உள்ளன, அதில் 700 பேர் மட்டுமே உச்சநீதிமன்ற நீதிபதிகள். நீதித்துறைக்கான மொத்த பணியாளர்கள் 3,20,000 பேர். பதவியில் இருக்கும் ஒரு நீதிபதி மீது ஊழல் புகார் எழுப்பபட்டால் நீதிபதிகளின் கமிட்டி பரிந்துரைக்குப் பின்னர் அரசு நீதிபதியை உடனே பதவி நீக்கம் செய்துவிடுகிறது. சீனாவைப் போல அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியாவும் சீன நீதித்துறையிடம் கற்றுக் கொள்ளவேண்டியதுள்ளது.

இந்தியாவில் எல்லாத்துறைகளைவிட நீதித்துறையில் அதிகமாக லஞ்சம் ஊழல் நிலவுவதாக அடிக்கடி செய்திகள் வருகின்றன, உச்சநீதிமன்றத்தின் பிரபல வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான பிரசாந்த் பூஷன், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சிலர் ஊழல்பேர்வழிகள் என்று பேட்டிகொடுத்ததால் நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளானார். ஊழல் செய்த உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதி களைப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்றால் இந்திய அரசியல் சட்டப் பிரிவு 124 (4) படியும், நீதிபதிகள் விசாரணைச் சட்டம் 1968-ன் படியும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியரசுத் தலைவர் மூலம் அதுவும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பி னர்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். நீதிபதியின் ஊழல் குறித்த ஆதாரங்களைப் பாரா ளுமன்றத்தின் மக்களவை உறுப்பி னர்கள் 100 பேர் அல்லது மாநிலங்களவை உறுப்பினர்கள் 50 பேர் கையெழுத்திட்டு அளிக்க வேண்டும். அதன் அடிப்படையில் குற்றச்சாட்டுகள் பற்றி விசாரிக்க மூவர் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்படும். அக்குழுவில் ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி, ஒரு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் ஒரு சட்ட வல்லுநர் ஆகியோர் உறுப்பினராக இருப்பார்கள். இக்குழு விசாரணை மேற் கொண்டு அளிக்கும் அறிக்கை யின் அடிப்படையில் பாராளுமன் றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஆதரவோடு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆனால், இந்தியா சுதந்திரம் அடைந்து 63 ஆண்டுகள் ஆகியும் இதுவரையில் ஊழல் செய்த ஒரு நீதிபதி மீதும் சின்ன நடவடிக்கைகூட எடுக்க முடிய வில்லை.

1993-ல் நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது தமிழ்நாட்டைச் சேர்ந்த, உச்சநீதிமன்ற நீதிபதி வி.ராமசாமி மீது பாராளுமன் றத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அவர் சண்டிகரில் தலைமை நீதிபதியாக இருந்த போது அவரது அதிகாரபூர்வ இல்லத்திற்கு அளவுக்கு அதிகமாக செலவு செய்தது பற்றி குற்றச் சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரிக்க பாராளுமன்றத்தால் அமைக்கப்பட்ட மூவர் குழு முன் அவர் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப் பட்டன. காங்கிரஸ் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளிக்காததால் அவர் நடவடிக்கையிலிருந்து தப்பித் துக் கொண்டார். அவர் தென்னிந் தியாவைச் சேர்ந்தவர் என்ற காரணத்தைக் காட்டி தி.மு.க. அன்று அந்த ஊழல் நீதிபதியைக் காப்பாற்றியது. வெறும் 196 பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே அவர் மீது நடவடிக்கை எடுக்க ஆதரவுத் தெரிவித்தனர்.




ஆனால் கடைசியாக உச்சிநீதிமன்ற நீதிபதியாக பதவிவகித்த கே.ஜி.பாலகிருஷ்ணன் மீது இப்போது ஊழல் புகார் வந்துள்ளது. குற்றச்சாட்டை வைத்தவர் வேறுயாருமல்ல உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த மனித உரிமைப் போராளியுமான நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் தான்.
தலித் சமுதாயத்தைச் சேர்ந்த கே.ஜி.பாலகிருஷ்ணன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றபோது நான் புதிய அத்தியாயம் பிறந்ததாக மகிழ்ந்தேன். ஆனால் இப்போது நாம் ஏன் நீதிபதியாக இருந்தோம் என்று வருத்தமடைகிறேன். கே.ஜி.பாலகிருஷ்ணன் குடும்பத்தினர் பெருமளவில் சொத்துக்களைக் குவித்ததாக புகார்கள் கிளம்பியுள்ளன. இதுகுறித்து தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டும்”.
என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் கோரிக்கை விடுத்துள்ளார். கே.ஜி.பாலகிருஷ்ணனின் மருமகன் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கேரள சட்டமன்றத்திற்கு போட்டியிட்டபோது தன்னுடைய சொத்துமதிப்பு ரூ25000 மட்டுமே எனகூறியவரின் சொத்துமதிப்பு இன்று பலகோடி மதிப்பு வாய்ந்தவை. தகவல் அறியும் உரிமச்சட்டத்தின் அடிப்படையில் நீதிபதிகளின் சொத்துவிபரம் வெளியிடவேண்டும் என்ற விவாதம் வ்ரும்போது உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி அதிலிருந்து விதிவிலக்காவார் என்று தப்பித்தவர். அண்மையில் மத்தியயமைச்சர் ராசா சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பில் தலையிட்டதாக செய்தி வந்தபோது அதற்கு உடந்தையாக இருந்தவர் கே.ஜி.பாலகிருஷ்ணன்.
இதில் நிச்சயம் காங்கிரஸ் கட்சிக்கு தொடர்பு இருக்கும்,இல்லையென்றால் இவரை தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக நியமிப்பார்களா? கறைபடிந்த கே.ஜி.பாலகிருஷ்ணன் குற்றமற்றவர் என நிரூபிப்பாரா அல்லது நான் ஒரு ‘தலித்’ என்று தப்பிக்கப் பார்ப்பாரா, தமிழக முதல்வர் கருணாநிதி இன்னும் அறிக்கைவிடவில்லையே?

ஞாயிறு, 19 டிசம்பர், 2010

அமெரிக்காவிற்கே பிடிக்காத ‘மூன்றாவது அணி’



2009ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்குப்பின் இந்தியாவில் இடதுசாரிகளின் தலைமையில் மூன்றாவது முண்ணனி ஆட்சியைப் பிடித்துவிடுமோ என்று அமெரிக்கா கவலைப்பட்டதாக விக்கிலீக்ஸ் மூலம் செய்தி வெளியாகியுள்ளது, அதற்கு முந்தைய நாள் தான் கம்யுனிஸ்ட் கட்சியின் செயலர் பிரகாஷ்காரட் காங்கிரஸ் கட்சியை ‘மிரட்டியே’ காரியம் சாதித்தார் என்று அமெரிக்க தூதரகம் தன்னுடைய நாட்டுக்கு தகவல் அனுப்பியுள்ள செய்தியும் வெளியாகியுள்ளது. நிச்சயமாக அமெரிக்காவின் கவலை நியாயமானது தான், ஏனென்றால் 2008ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார தேக்கநிலையால் அவதிப்படும் அமெரிக்காவிற்கு இந்தியாவுடன் செய்துகொண்ட அணுசக்தி ஒப்பந்தம் மூலம் தன்னுடைய நாட்டில் வேலைவாய்ப்பு பெருகுவதுடன் அமெரிக்க நிறுவனங்களுக்கு கிடைக்கயுள்ள வாழ்வு பறிபோகுமே என்ற பயம் தான். இடதுசாரிகள் தலைமையில் அல்லது ஆதரவுடன் ஆட்சி அமைந்தால் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையிலும் கை வைப்பார்கள். அணிசேரா நாடுகளை ஒன்று சேர்ப்பார்கள், தற்போதுள்ள அமெரிக்க சார்பு கொள்கையை தலைகீழாக மாற்றுவார்கள் என்ற பயம் தான்.

இந்தியாவில் அமெரிக்க தூதரக அதிகாரிகள் ஏதாவது விழாக்களில் பங்கேற்கிறார்கள் என்று தினந்தோறும் நாளிதழ்களில் செய்தி வருகிறது. இதிலிருந்து அமெரிக்கா இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவது வெளிச்சமாகிறது. உலகம் முழுவதிலும் கம்யூனிச எதிர்ப்பை கடைபிடித்துவரும் அமெரிக்கா இந்தியாவிலும் கம்யூனிச எதிர்ப்பாளர்களுக்கு ஏன் உதவி புரிந்திருக்க வாய்ப்பில்லை? என்ற கேள்வி வருகிறது. அடுத்தடுத்து வெளிவருகிற விக்கிலீக்ஸ் மூலம் நமக்கு தகவல் கிடைக்கலாம். ஓரிரு மாதங்களுக்கு முன்னர் வெனிசூலாவில் நடைபெற்ற தேர்தலில் சாவேஸூக்கு எதிராக தேர்தல் களத்தில் உள்ள கட்சிக்கு அமெரிக்கத் தூதரகம் பணவுதவி செய்தது வெளிச்சத்திற்கு வந்தது.

மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுசெயலர் பிரகாஷ்காரட் காங்கிரஸ் கட்சியை ‘மிரட்டியே’ காரியம் சாதித்தார் என்ற செய்தியை அமெரிக்க தூதரகம் விரிவாகச் சொன்னால் இந்திய மக்களுக்கு நல்லது, ஏனென்றால் தன்னுடைய சொந்த நலனுக்காகவும் கட்சியின் நலனுக்காகவும் அமைச்சரவையில் பங்கு போட்டு அரசியலை லாப நோக்கத்தில் நடத்துபவர்கள் மத்தியில் 60க்கும் மேற்பட்ட மக்களவை உறுப்பினர்களைக் கொண்ட இடதுசாரிகள் எந்தவித எதிர்பார்ப்புமின்றி நாட்டுமக்கள் நலனே முக்கியம் என்றிருந்தார்கள். அது தான் அமெரிக்கவிற்கே கிலி ஏற்படுத்தியிருக்கிறது.உண்மைகள் வெளிவரும் காலம், உரக்கப்பேசட்டும் விக்கிலீக்ஸ்..

சனி, 11 டிசம்பர், 2010

அமெரிக்க ஆணவம்

அமெரிக்காவிற்கான இந்திய தூதரான மீரா சங்கர் அமெரிக்க உள்நாட்டு பயணத்தின் போது விமானநிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகளால் சோதனை என்ற பேரில் அவமானப்படுத்தப்படுள்ளார். தான் அமெரிக்காவிற்கான இந்திய தூதர் என்ற அடையாள அட்டையை காண்பித்த பின்னரும் அவர்கள் சட்டை செய்யவில்லை. இது போன்று இந்திய அதிகாரிகள், அமைச்சர்கள் அவமரியாதைக்குள்ளாவது இது முதல் முறையல்ல. அமெரிக்கப் பயணத்தின் போது முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்ணாண்டஸின் ஆடைகளை கழைந்து சோதனைக்கு உள்ளானதை நீண்ட நாட்கள் கழித்து வெளியில் சொன்னார். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் ஷூ வைக் கழட்டச் சொல்லி சோதனைக்கு உள்ளாக்கினார்கள். வழக்கமாக இந்தியத் தரப்பில் கண்டன அறிக்கை வாசித்தபின்பு ஏதோ தெரியாமல் நடந்துவிட்டதாக வருத்தம் தெரிவிப்பது வாடிக்கையாகிவிட்டது. இது போன்ற சோதனைகள் மூலம் அமெரிக்க-இந்திய உறவு பற்றி அவர்களின் எண்ணமும் நமது எண்ணமும் வெவ்வேறாக இருக்கிறது. நாம் தோழமையாக பார்க்கிறோம் ஆனால் அவர்கள் இந்தியாவை ஒரு அடிமை நாடாக ஏகாதிபத்திய நோக்கில் பார்க்கிறார்கள்.இது போன்ற செயல்களுக்கு பதில் நடவடிக்கை தேவை, இந்தியாவும் அமெரிக்க அமைச்சர்களை விமானநிலையத்தில் பாதுகாப்பு சோதனைக்குள்ளாக்கவேண்டும். இந்தியாவில் உள்நாட்டு பயணம் மேற்கொள்ளும் அமெரிக்கத் தூதர்களை இதே போன்ற சோதனைக்கு உள்ளாக்கவேண்டும்.



அவர்கள் கொடுக்கும் நிலையிலும் இந்திய அரசு பெற்றுக்கொள்ளும் நிலையிலும் ஏதும் இல்லை,பரஸ்பர உறவு தான் தேவை. மாறாக இப்போது அமெரிக்க பொருளாதாரத்தையும் வேலைவாய்ப்பை உருவாக்காவும் இந்திய ஒப்பந்தங்கள் அவர்களுக்கு தேவை. மன்மோகன் சிங் இந்தியாவை தலைநிமிர வைப்பாரா?

மகாகவிக்கு 128வது பிறந்தநாள்



வாழ்க நின்புகழ் வாழிய வாழியவே!!!

வெள்ளி, 10 டிசம்பர், 2010

விக்கிலீக்ஸூம் ஜனநாயகமும்..



அமெரிக்கா ஈராக்கிலும் ஆப்கனிலும் நடத்திய போர்க்குற்றங்களை அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ், ஓவ்வொரு நாட்டிலும் உள்ள அமெரிக்க தூதரங்கள் அமெரிக்க அரசுக்கு அனுப்பும் ரகசிய அறிக்கைகளையும் இப்போது வெளியிட்டுவிட்டது.திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்திய செய்திகளை மறுக்கமுடியவில்லை என்னசெய்வது பழிவாங்கல் தான். விக்கிலீக்ஸின் தலைவர் ஜூலியன் அசாங்கே பாலியல் வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ளார். உலகத்திற்கே ஜனநாயகம் பற்றி டியூசன் எடுக்கும் அமெரிக்கா உண்மைச்செய்திகளை வெளியிட்ட விக்கிலீக்ஸின் இணையதளத்தை தடை செய்துள்ளது. எப்படியும் உண்மைகளை மறைக்கமுடியாது. அமெரிக்கா உலகின் பிற நாடுகளில் தூதரகத்தை ஏற்படுத்திக்கொண்டு அதன் மூலம் அந்த நாடுகளின் அந்தரங்க விஷயங்களில் தலையிடுவதும் விக்கிலீக்ஸ் வெளிப்படுத்தியுள்ளது. மத்தியகிழக்கில் ஒரு நாடு தீவிரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கிறது என்று தெரிந்திருந்தும் அந்த நாட்டுடன் ராணுவதளவாடங்கள் விற்பதற்கு 60பில்லியன் டாலர் அளவிற்கு ஓப்பந்தம் போட்டுள்ளது. அந்த நாடு ஈரானை அமெரிக்கா தாக்கவேண்டும் என திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டுள்ளது. மத்தியகிழக்கில் பல நாடுகளின் முகமூடியையும் கிழித்துவிட்டது விக்கிலீக்ஸ்.உண்மைகளை வெளிக்கொணர்ந்த விக்கிலீக்ஸை ஆதரிப்போம்.



விக்கிலீக்ஸ் விவகாரம் பற்றி ஒவ்வொரு நாடும் வெவ்வேறு அணுகுமுறையை கையாண்டுள்ளன. தென் அமெரிக்க நாடான ஈக்வடார் விக்கிலீக்ஸிற்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளது, விக்கிலீக்ஸை நடத்துபவர்களுக்கு அடைக்கலம் தரவும் தயாராக உள்ளது. வெனிசூலா அதிபர் ஹூகோ சாவேஸ், அமெரிக்கா பிற நாடுகளில் செய்துள்ள உளவு வேலைகளுக்கு பொறுப்பேற்று ஹிலாரி கிளிண்டன் பதவி விலகவேண்டும் என அறிக்கை விட்டுள்ளார்.இந்தியா அமைதிகாத்து வருகிறது, மன்மோகன் சிங்கிற்கு உள்ளூர பயம் இருக்கத்தான் செய்யும். இப்பதான் ஸ்பெக்ட்ரம், நீரா ராடியா விவகாரம் பிடித்து ஆட்டிவருகிறது அதுக்குள்ள இன்னொரு பூதம் என்னைக்கு கிளம்புதோ தெரியலையே...

சனி, 27 நவம்பர், 2010

உறவுகள் வெளிச்சம்


கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக நாடாளுமன்றம் முடங்கிக்கிடக்கிறது,JPC விசாரனைக்காக காங்கிரசும் அதன் தோழமைகளும் ஏன் அஞ்சுகின்றன. இதற்கு முன்னர் ஹர்சத் மேத்தாஊழல்,போபர்ஸ்பீரங்கி ஊழல் மற்றும் பங்குச்சந்தை ஊழலுக்காக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை அமைக்கப்பட்டுள்ளது.தேசம் இதுவரை கண்டிராத ஒரு வருமான இழப்பிற்காக அல்லது பெருந்திருட்டுக்காக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை ஏன் நடத்தக்கூடாது. இடதுசாரிகளும் பாஜகவும் ஆளும் கூட்டணிக்கு நெருக்குதலை தருகின்றனர்.ஆனால் கர்நாடகாவில் பாஜகவின் தலைகள் பெரும் ஊழலில் சிக்கியிருப்பதால் பரஸ்பரம் நலன்காக்க பாஜக-காங்கிரஸ் பேரம் திரைமறைவில் ஏற்படக்கூடும். முடிவில் பெரிய தலைகள் யாரும் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்பது தான் கடந்தகாலத்தின் வரலாறு.

நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்கள் இப்போது பரபரப்பாக பேசப்படுகின்றன, இதில் பெரிய ஊடகங்களின் செய்தியாளர்கள் புரோக்ககர்களாக செயல்பட்டுள்ளனர். அரசியல் கட்சிகள் தேர்தல் உடன்பாடுகளுக்காக செய்துகொள்ளும் கூட்டணிதான் மக்களுக்கு தெரியவருகிறது. திரைக்குப்பின்னால் தொடர்ந்து நடைபெற்றுவருகிற பேரங்கள் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன. சிலநேரங்களில் ஊடகங்கள் அரசியல்வாதிகளின் ஊழல்களை அம்பலப்படுத்தும் போது நாம் அந்த ஊடகங்களை அளவுக்குமீறி புகழ்கிறோம்.ஆனால் அவர்களும் இதில் கூட்டு அல்லது புரோக்கர் வேலை செய்கின்றனர் என்ற செய்தி நம்மை அதிர்ச்சியடையச் செய்கிறது. பெருமுதலாளிகள் தங்களுக்கு தேவையான காரியத்தை சாதிப்பதற்கு யாரும் நேரடியாக அரசின் இலாகாவையோ அல்லது அமைச்சர்களையோ சந்திப்பதில்லை பெரும்பாலும் கன்சல்டண்ட் மூலமாகவே இந்த பேரங்கள் நடைபெறுகின்றன என்பது அம்பலமாகிறது. சாதாரண மக்கள் ‘அரசு’ என்பது பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களுக்காக இருக்கிறது என்று நம்புகின்றனர்.இடதுசாரிகள் குறிப்பாக கம்யூனிஸ்ட்கள் தான் இந்த அரசு என்பது பெருமுதலாளிகளால் அவர்களுடைய நலன்களுக்காகவே நடத்தப்படுகிறது என்பதை மக்களுக்கு சொல்கின்றனர். நான் வாசித்த எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் எழுதிய‘அரசியல் எனக்குப்பிடிக்கும்’ என்ற புத்தகம் திரைமறைவில் இருந்து கொண்டு இந்த பெருமுதலாளிகள் எப்படி ஆட்சி நடத்துகிறார்கள் என்பதை தெளிவுபடுத்துகிறது.

கண்ணுக்கு தெரியாத பல மறைமுக கூட்டணிகள் உள்ளன.....

முதலாளித்துவ அரசியல் கட்சிகள் vs பெருமுதலாளிகள், அந்நியமூலதனம்.

சில நேரங்களில் முதலாளித்துவ அரசியல் கட்சிகளின் தலைவர்களே பெருமுதலாளிகளாகவும் அல்லது பெருமுதலாளிகளை இந்த அரசியல் கட்சிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக ஆக்கிவிடுகின்றனர்.

பெருமுதலாளிகள் vs ஊடகங்கள் (பெரும்பாலும் அவர்களாலேயே நடத்தப்படுகிறது)

இந்த கூட்டணிதான் காலவரையற்ற ஒப்பந்தம் போல நீடித்துவருகிறது, அதாவது mutual benefit அடைகின்றனர்.மக்களை திசைதிருப்புவது, குறிப்பிட்ட செய்திகளின்மீது அதிக ஒளியை பாய்ச்சும்போது பல முக்கிய விவரங்கள் மக்களின் பார்வைக்கு வராமலேயே போய்விடும். மக்களை எப்போதும் பொழுதுபோக்கு அம்சங்களில் கட்டிப்போடும் வேலையை செய்கிறது.நாம் பார்க்கின்ற எல்லா நிகழ்ச்சிகளும் விள்ம்பரதாரர் நிகழ்ச்சிகள் தான்.தொலைக்காட்சி அல்லது அச்சு ஊடகங்களின் நிலையான வருமானத்தை பெருநிறுவனங்கள் உறுதிப்படுத்துகின்றன.அதனாலேயே சமீபகாலத்தில் தொலைக்காட்சி ஊடகத்தின் வருமானம் பன்மடங்கு பெருகியுள்ளது.

தினமும் நாம் பார்க்கின்ற ஊழலில் பெரும்பாலும் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் இலக்காகின்றனர்,ஆனால் அதிக பலன்பெருகிற வர்க்கமான பெருமுதலாளிகள் ‘வெளிச்சத்திற்கே’ வருவதில்லை. அவர்கள் புனிதப்பசுக்களாகவே உலவிவருகின்றனர். ஸ்பெக்ட்ரம் ஊழலில் ரூ1.75 இலட்சம் கோடிகள் என்பது அரசின் கருவூலத்திற்கு வந்து சேரவேண்டிய பணம் வரவில்லை அதன் பலன்களை தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் வருமானமாக ஈட்டியுள்ளன. இதற்கு உடந்தையாக இருந்த அமைச்சர், அத்துறையின் செயலாளர், முக்கியக்கட்சி, கூட்டணிக்கட்சி என அவர்களுக்குரிய பங்குத்தொகை கிடைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை. நாள்தோறும் 230கோடி ரூபாய் இந்தியாவிலிருந்து லஞ்சம்,வரிஏய்ப்பு,கறுப்புப்பணம் போன்றவற்றால் வெளியேறுகிறது என செய்திகள் வருகின்றன. தினமணியில் வெளியான ஸ்பெக்ட்ரம் தொடர்பான தொலைபேசி உரையாடல்கள் வேறு சில செய்தித்தாள்களில் வரவில்லை. மீடியா என்பதே முதலாளித்துவ நலன்களில் தான் இயங்குகிறது .மாற்று ஊடகம் என்பது மக்களிடம் செல்லாதவரை உண்மைகள் வெளிச்சத்திற்கு வர சாத்தியமில்லை.

புதன், 17 நவம்பர், 2010

ஒரு குடிமகனின் புலம்பல்கள்



ஒரு வழியாக ஸ்பெக்டரம் புகழ் ‘ராசா’ பதவி விலகிவிட்டார். இதுவரை நாடு இவ்வளவு பெரிய ஊழலைக் கண்டிருக்குமா என்பது சந்தேகம் தான். இருபது முப்பதாண்டுகளுக்கு முன்னாலும் ஊழல் இருந்தது, ஆனால் அது இலட்சங்கள்,சில கோடிகளில் இருந்தது. இது ஏன் இப்போது இலட்சம் கோடிகளில் இருக்கிறதென்றால் அதற்கு புதிய பொருளாதாரம் தான் ஊழலையும்‘தாராளமய’மாக்கியிருக்கிறது. ஒருவேளை BSNL நிறுவனம் மட்டுமே தொலைத்தொடர்பில் கோலோச்சியிருந்தால் இந்த ஊழல் நடந்திருக்குமா? என்பது சந்தேகம் தான். உடனே BSNLன் சேவையை குறைசொல்லத் தொடங்கிவிடுவார்கள். நமது மக்களுக்கு லஞ்சம், ஊழல் என்பெதெல்லாம் பழகிவிட்டது அதனால் அந்த சொற்கள் சாதாரணமாகிவிட்டது, இனிமேல் ஊழலை ‘பெருந்திருட்டு’ என்று மாற்றவேண்டும் அப்போதாவது ‘திருடன்’ மேல் கோபம் வருகிறதா என்று பார்க்கலாம்.

ஒரு பதிவர் சொன்னார், சினிமாவில் அநியாயத்தையும்,அக்கிரமத்தையும் எதிர்க்காத இளைஞர்கள் உண்டா? திரைப்படத்தில் விஷாலும்,விஜய்யும் அநியாயக்காரர்களையும், அக்கிரமக்காரர்களையும், பந்தாடும்போது சமூகத்தின் மீது உள்ள அந்த இளைஞனின் கோபம் வடிந்துவிடுகிறது. இந்த நிலைமையில் தான் நாம் உள்ளோம்,அதற்குத் தான் மதங்களே அநியாயங்கள் அதிகரிக்கும்போது ‘கடவுள்’ அவதாரம் எடுத்துவருவார் என்று மக்களின் கோபத்தை தணிக்கிறது.இந்த அமைப்பே ‘பெருந்திருட்டு’களை ஊக்குவிக்கும் அமைப்பாக உள்ளது. ரெண்டுபேர் பேசிக்கொண்டால் சினிமாவில் ஆரம்பித்து அரசியல்வாதிகளை திட்டி உரையாடல்களை முடித்துக்கொள்வார்கள், அதன் வேர் என்ன? முதலாளித்துவ அரசியல் கட்சிகள் எப்படி ‘தொழில்’ (அரசியல் என்பது அவர்களுக்கு தொழில் தானே)நடத்துகிறார்கள் என்ற கேள்வியை யாரும் வைப்பதில்லை, அவர்கள் கைக்காசைப் போட்டு இயக்கம் நடத்தினால் அது வட்டியுடன் திரும்ப எடுக்கவேண்டும். சேவையாக நடத்தினால் மக்களிடம் அவர்கள் சந்தா வசூல் செய்யவேண்டும், யாருக்கும் தருவதற்கு விருப்பம் இல்லை, வாக்குகளையே விற்பவர்கள் எப்படி தருவார்கள்? அதனால் தேர்தல் மற்றும் கட்சி செலவீனங்களுக்கு சமூகத்தின் சிறுபான்மை பிரிவினரான தொழிலதிபர்களையும், பன்னாட்டு நிறுவனங்களையும் நாடுகிறார்கள். பதவிக்கு வந்தவுடன் நன்றிமறவாமல் ‘கைமாறு’செய்கிறார்கள், எப்படியென்றால் ஸ்பெக்ட்ரம் மாதிரி. இது அவர்களுக்கான ‘Win Win' ஒப்பந்தம். மொத்தத்தில் அரசின் கஜானாவிற்கு உண்மையாக வந்துசேர வேண்டிய பணம் அந்த சிறுபான்மை பிரிவினரான தொழிலபதிர்களிடமிருந்து வரவில்லை. இது தான் சமூகத்தின் ஒருபிரிவினர் குறுகிய காலத்தில் பில்லிணியர்களாக மாறுவதும் மற்றொருபுறம் வறுமைக்கோடு இன்னமும் அழியாமல் இருப்பதற்கும் காரணம்.



முதலாளித்துவ அரசியல்வாதிகளுக்கும் பெரும்தொழிலதிபர்களுக்கும் உள்ள மானசீக உறவு இது தான். இதைப்போல் இப்போது ஊடகங்களும் மேற்குறிப்பிட்ட இரு பிரிவினரை பாதுகாக்கும் வேலையைச் செய்கின்றன. 50ரூ, 100ரூ லஞ்சம் பெறுகின்ற அரசு அதிகாரிகள் தண்டிக்கபடுவதை நாம் செய்திகளில் வாசிக்கிறோம், ஆனால் கோடிகளில் ‘பெருந்திருட்டில்’ ஈடுபடுவோர் இதுவரை தண்டனை பெற்றதை இந்தியாவில் நிகழ்ந்ததில்லை.அது இந்த அமைப்பு நீடித்திருக்கும் வரை தொடரும். அண்மையில் கோவையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவனை காவல்துறை ‘என்கெளண்டரில்’ சுட்டவுடன் மக்கள் நரகாசுரன் இறந்தான் என தீபாவளியே கொண்டாடினார்கள், ஆனால் ஹரியானாவில் முன்னாள் DGP ரத்தோர்ட் அதே பாலியல் பலாத்காரதிற்காக ஜாமீன் பெற்றான் (’ர்’விகுதி அவசியமில்லை). அதை மீடியாவோ மக்களோ கேள்விக்குள்ளாக்கவில்லை. உடனே தண்டனை கொடுக்கவேண்டும் என்று மக்கள் உணர்ச்சிவசப்படுகிறார்கள்.

சமீபத்திய பெருந்திருட்டுகளில் முதலிடம் பெறுவது ‘ஸ்பெக்ட்ரம்’ தான், அடுத்து ஆதர்ஸ் வீடு ஒதுக்கீட்டு ஊழல்,(கார்கில் சவப்பெட்டி,ஆயுதபேர ஊழல் என்னாச்சு?) காமன்வெல்த் ஊழல் என மத்தியில் ஆளும் காங்கிரஸும் அதன் கூட்டணியும் நாறுகிறது. சுரங்க ஊழலில் பாஜக திணறுகிறது. பிரதமர் இதுநாள் வரை ‘சட்டப்படி’ தான் என்று சப்பைக்கட்டு கட்டி திமுகவைக் காப்பாற்றினார். எதிர்க்கட்சிகளின் சீறிய முயற்சியால் தான் ராசா பதவி விலகினார். எதிர்க்கட்சிகல் பாராளுமன்றத்தில் அமளி மக்கள் பணம் வீண் என்று எந்த மீடியாவும் வாய் திறக்கமுடியவில்லை, இந்த தேசத்தில் சுதந்திரம் பெற்றபின்பும் போராடமல் எதுவும் கிடைப்பதில்லை (சிலருக்கு விதிவிலக்கு). உச்சநீதிமன்றம் அடிக்கடி பெருந்திருட்டையும், சிறுதிருட்டையும் விமர்சிக்கிறது, ஆனால் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஊழலைப் பற்றி பிரசாந்த் பூஷன் பேசியதும் அவர்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இது நீதிமன்றத்தின் இரட்டைத்தன்மையை காண்பிக்கிறது. நீதிமன்றம் சாந்திபூஷனிடமும் பிரசாந்த் பூஷனிடமும் மன்னிப்பு கேட்கச் சொல்லுகிறது.ஆனால் தங்களின் கூற்று உண்மையில்லாத பட்சத்தில் தாங்கள் சிறைக்குச் செல்லவும் தயார் என்றனர். சமூகத்தில் இப்படி சில தனிநபர்கள் சிறந்த சேவையை செய்கிறார்கள் அவர்களை பாராட்டவேண்டும்.

அண்மையில் டாடா நிறுவன அதிபர், விமானத்துறை தொடங்குவதற்கு முன்னாள் விமானப்போக்குவரத்து அமைச்சர் ஒருவர் தன்னிடம் ரூ15 கோடி லஞ்சம் கேட்டதாக மீடியாவில் சொன்னார், உடனே சிலருக்கு கிலி ஏற்பட்டுவிட்டது. முதலில் சி.எம்.இப்ராஹிம் நான் கேட்கவில்லை அந்த அரசிற்கு அப்படியொரு கொள்கையே இல்லையென்றார். நேற்று பாஜகவின் முன்னாள் விமான போக்குவரத்து அமைச்சர் ஒருவர், தானோ அனந்த்குமாரோ அல்லது ஷனாவாஷ் ஹுசைனிடமோ டாடா நிறுவனம் அணுகவில்லை என்றார். இந்த ப்ரப்ரப்பு நீடிக்கிறது இதை ரத்தன் டாடா தான் முடித்துவைக்க வேண்டும்.ஏதோ அவர் லஞ்சத்தை ஊக்குவிப்பவர் அல்ல என்பதைப் போல் பேசிவிட்டார். அரசின் எந்தத்துறையையும் லஞ்சமில்லாமல் சந்திக்க முடியாமா? தேர்தல் கட்சிகளுக்கு யார்யார் நிதி கொடுக்கிறார்கள், அரசியல் கட்சிகளின் வரவு செலவு என்ன? தேர்தலுக்கு எவ்வள்வு செலவு? என்பதை இந்தியத் தேர்தல் ஆணையம் தனது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. பொது அறிவுக்காக பார்த்துக்கொள்ளலாம். நெடுந்தொடரையும் மானடமயிலாட நிகழ்ச்சிகளை பார்த்தும் நேரமிருந்தால் சிலரை யோசிக்கவைக்கலாம். முடிவாக மக்கள் எவ்வழி ..மன்னன் அவ்வழி. வாழ்க ஜனநாயகம்.

Thanks 'The Hindu' for Cartoons.

வெள்ளி, 29 அக்டோபர், 2010

Manual Scavenging Must Stop Now


இருதினங்களுக்கு முன்பு செய்தித்தாளில் வந்த கட்டுரை “manual scavenging” ஒழிக்கப்படவேண்டும் என்று, மனிதக் கழிவுகளை மனிதனே சுமக்கும் அவலம் நாகரீக சமூகத்தில் நிலவக்கூடாது, இச்செயல் இப்போதும் நடைபெற்றால் நாம் நாகரீகமானவர்கள் இல்லை, ஏனென்றால் சுமார் 5000 ஆண்டுகளுக்கு சிந்து சமவெளியில் வாழ்ந்த மக்கள் தங்கள் வீடுகளை சுட்ட செங்கற்களாலும், வீட்டினுள் குளியறை மற்றும் தண்ணீர் வசதியுடன் கூடிய கழிவறைகளை பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று நாம் பாடபுத்தகத்தில் படித்தோம். அறிவியலைப் பற்றி அறியாத ஒரு சமூகம் வாழ்ந்த காலத்தில் சுகாதாரமான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள். அங்கு வாழ்ந்த மக்கள் திராவிடர்களா? ஆரியர்களா? என்று செல்லத்தேவையில்லை.

இந்தியா சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகளாகியும் இன்றளவும் மனிதக்கழிவுகளை அறவே ஒழிப்பது பற்றி விவாதங்கள் நடைபெறுவது கேலிக்கூத்து. இதை ஒழிப்பதற்கு 1993ம் ஆண்டு பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது, ஆனால் 1997ம் ஆண்டுவரை இந்திய அரசிதழில் வெளிடப்படவில்லை, பொதுமக்களுக்கும் 2000ம் ஆண்டு தான் தெரியவந்தது. சமூகத்தின் பெரும்பான்மையான் மக்களும் இந்த அவலத்தை கண்டுகொள்ளவில்லை ஏனென்றால் இத்தொழிலை செய்வது தலித் களிலும் தலிகளான அருந்ததியினர் என்பதாலோ? எப்படி இந்த தொழில் ஒரு சாதி மக்களின் வாழ்க்கையானது? இந்த சாதிக்கு இந்த தொழில் என்று உலகின் வேறு எந்த பகுதியிலாவது இருக்கிறதா? நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது அருந்ததியர் என்பவர்கள் யார் என்று வினா எழுப்பும் போது பெரும்பாலானவர்களுக்கு தெரியவில்லை, அவர்கள் தமிழகத்தில் சக்கிலியர் என்றும் மாதீகா என்றும் விளிக்கப்படுகின்றனர். ஜாதியின் பெயரால் இந்தியாவில் தலித்துகள் மீது இன்று நடக்கும் கொடூரங்கள் குறித்து நாம் பெருமை கொள்ள இயலுமா?

சுத்தம், சுகாதாரம், தூய்மை, மாசுபாடு, தலைவிதி குறித்த பார்ப்பனிய விழுமியங்களின் அடிப்படையில்தான் இன்று நடைமுறையில் உள்ள இழிவான ஜாதியப் படிநிலை உருவானது. அந்தப் படிநிலையின் கீழ்த் தளத்தில் தலித்துகள் மொத்த ஜாதிய கட்டுமானத்தின் சுமையைத் தாங்குபவர்களாக வடிவமைக்கப் பெற்றது. தெருக்களைச் சுத்தம் செய்வது, குப்பைகளைப் பெறுக்குவது, தோல் பயன்பாட்டுடைய தொழில், மனித-மிருக சடலங்களை அப்புறப்படுத்துவது/ எரியூட்டுவது, பன்றிகள் வளர்ப்பது/ மேய்ப்பது, மனித மலத்தை அள்ளுவது /அப்புறப்படுத்துவது என இந்தப் பணிகள் மட்டுமே குறிப்பிட்ட ஜாதிகளுக்கு உரியதாகப் பட்டியலிடப்பட்டது. 2000 ஆண்டுகளாக அது தொடர்ந்து நடைமுறையிலும் கச்சிதமாக இருந்தும் வருகிறது. பார்ப்னியர்கள் மட்டுமின்றி இந்தக் கட்டுமானத் திட்டத்தை அப்படியே இடைநிலை ஜாதிகளும் அப்படியே சுவிகரித்துக் கொண்டனர்.

நம் தேசத்தின் தலை நகரத்தில் பீ அள்ளுபவர்கள் பெரும்பகுதி தமிழர்கள் மற்றும் தெலுங்கர்களே. இந்திய - பாகிஸ்தான் பிரிவினையின் பொழுது பாகிஸ்தான் அனைத்து இந்துக்களையும் இந்தியாவிற்கு அனுப்பியது, ஆனால் அதுகாறும் அங்கு மலம் அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்த தலித்துகளை அனுப்ப மறுத்தது. அத்தியாவசிய சேவைகள் என அவர்களைத் தலைப்பிட்டுப் பாதுகாத்துக் கொண்டது. 1947 டிசம்பரில் அம்பேத்கார் இது குறித்துப் பல முறை கேள்விகளை எழுப்பினார், நேருவுக்குக் கடிதம் எழுதினார். இந்திய அரசோ காங்கிரஸ் கட்சியோ இதனைக் கண்டுகொள்ளவேயில்லை.

மனிதக்கழிவுகளை மனிதன் சுமக்கும் சட்டம் ஒன்றும் சும்மா வந்துவிடவில்லை, அதற்கு சபாயி கர்மசாரி ஆந்தொலன் நடத்திய போராட்டம் தான் இந்த சட்டம் இயற்றுவதற்கு முக்கிய காரணி, அதை அமல்படுத்டுவதற்கும் அந்த அமைப்பு இயக்கம் நடத்திக் கொண்டிருக்கிறது. 1996ம் ஆண்டு விஜயவாடாவில் இந்த அமைப்பு தொடக்கப்படுவதற்கு முக்கிய காரணமாய் இருந்தவர்களில் பெசவாடா வில்சன் என்பவர். இவர் கர்நாடக மாநிலத்தில் மாதீகா குடும்பத்தில் பிறந்தவர். இவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் கோலார் தங்கவயலில் வசிக்கும் தொழிலாளர் குடியிருப்பில் உள்ள திறந்தவெளி உலர் கழிப்பிடங்களில் கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள். ஆந்திராவின் குப்பத்தில் தொடக்கக் கல்வி, பெங்களூரில் முதுகலைப் பட்டம் மற்றும் இறையியல் இளநிலை பட்டப்படிப்பும் அதன் பின்னர் சமூகப்பணியென அவரது பயணம் தொடங்கியது. பின்னர் கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களின் பிரச்சினைகளை ஆராயத் துவங்கினார், அவர்களில் பெரும் பகுதி குடிகாரர்களாக இருந்தனர். அவர்களின் பணியிடங்களுக்குச் சென்று சூழ்நிலையை விழுங்க முற்பட்டார் வில்சன். அந்த வீச்சம், நாற்றம்தான் அவர்களைக் குடியின் பால் இட்டுச் சென்றது. நாள்தோறும் கழிவறைகளிலிருந்து வெளியேறும் கழிவுகளைப் பெரிய தொட்டிகளில் கொட்டி, பின்னர் அதை வேறு ஒரு இடத்திற்குச் சென்று அப்புறப்படுத்த வேண்டும். மல வாளியைத் தூக்கி ட்ராக்டரில் ஏற்ற வேண்டும். இந்த வேலையைச் செய்யும் பொழுது அவர்களின் உடலில் மலம் வடிந்துவிடுவதைப் பார்த்த வில்சன் கதறக்கதற வெடித்து அழுதார்.

“எனக்கு இரண்டு வழிகள் இருந்தன: ஒன்று, நான் சாக வேண்டும் அல்லது இந்தக் கொடிய வழக்கத்தை நிறுத்த நான் ஏதாவது செய்தாக வேண்டும். முதலில் சொன்னது எளிதானது. இரண்டாவது கடினமானது. நான் செத்துப் போவதால் எதுவும் மாறிவிடப் போவதில்லை என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன்.” 1982 முதல் இயங்கத்துவங்கிய வில்சன் 1996ல் தீவிரமான மனித உரிமை ஆர்வலர்களான தனது நண்பர்களுடன் இணைந்து அமைப்பைத் தொடங்கினார். சமீபத்தில் அவுட்லுக் இதழ் 25 நபர்களை கொண்ட பட்டியல் ஒன்றை வெளியிட்டது. அது இந்தியாவில் எக்காலத்திலும் அதிகாரத்திற்குச் செல்ல முடியாத வர்களின் பட்டியல். மகத்தான போராளிகள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், அதிகாரத்திற்கு எதிரான அறிவுஜீவிகள், சமூகங்சார் களப்பனியாளர்கள் என நிண்டு சென்றது. அதில் பெசவாடா வில்சன் இடம் பெற்றிருந்தார். இது அவரது பணிக்குக் கிடைத்த பெரும் அங்கீகாரம்.

சபாயி கர்மச்சாரிகளின் தேசிய ஆணையம் தனது விரிவான ஆய்வை மேற்கொண்டது. ராணுவம், பொதுத் துறை நிறுவனங்கள், மாநகராட்சிகள் எனப் பல துறைகளில் இன்றும் இழிவான நடைமுறைகள் உள்ளதை அது சுட்டிக்காட்டியது. ராணுவத்தின் பல முகாம்களில் இன்றளவும் கையால் மலம் அள்ளும் வழக்கம் உள்ளது. இதில் இந்திய ரயில்வே துறைதான் அதிகப்படியான ஆட்களை இத்தகைய பணியில் ஈடுபடுத்தி வருகிறது. 2010 க்குள் உலர் கழிப்பிடங்களை இல்லாமல் ஆக்க வேண்டும், கையால் மலம் அள்ளும் நடைமுறை ஒழிய வேண்டும் என்கிற வில்சனின் கனவை நடை முறைப்படுத்தும் பணிகள் தொடர்கிறது.

நன்றி- கீற்று..
அ.முத்துகிருஷ்ணன் அவர்கள் கீற்றுவில் எழுதிய “மலத்தில் தோய்ந்த மானுடம்” கட்டுரையை தழுவி எழுதப்பட்டது.
பிரண்ட்லைன் இதழின் கவர்ஸ்டோரி. http://www.frontlineonnet.com/fl2318/stories/20060922005900400.htm

திங்கள், 25 அக்டோபர், 2010

உலக அரங்கில் இந்தியா

ஐ நா சபையின் நூற்றாண்டு வளர்ச்சி இலக்குகள் பற்றி உலகமெங்கும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன, 2015ம் ஆண்டுக்குள் உலகில் வறுமையை ஒழிக்கவேண்டும், சிசுமரணம், கல்லாமை, எய்ட்ஸ், மலேரியா மற்றும் காசநோயை ஒழிப்பது, அனைவருக்கும் உணவுபாதுகாப்பு அளிப்பது, அடிப்படை கல்வியை உரிமையாக்குவது என பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் இது ஒவ்வொரு ஆண்டும் பிரதமர் சுதந்திரதின உரையில் வாசிப்பது போன்று தான் இருக்கிறது, ஏனென்றால் இந்த வாசிக்கவேண்டிய உரையை 1947 லிருந்து இன்னமும் மாற்றவில்லை, பிரதமர்கள், கட்சிகள் மாறியிருக்கலாம், ஆனால் வறுமையை ஒழிப்பது நாடு சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகளாகியும் முற்றுப்பெறவில்லை மாறாக பட்டினி பட்டாளங்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. உண்மையிலேயே இந்தியாவிடம் வளமையில்லையா? இப்போது ஆளும் காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியாகாந்தி “Inclusive Growth” பற்றி பேசுகிறார், அவரின் வாரிசான ராகுல்காந்தி இந்தியாவிற்குள்ளே இரண்டு இந்தியாக்கள் அதாவது ஒளிரும் இந்தியா, வறுமை இந்தியா இருக்கிறது என ஒத்துக்கொள்கிறார்கள். ஆனால் இதை மாற்றுவதற்கான எண்ணமோ, திண்ணமோ நிச்சயமாக இவர்களிடம் இல்லை.

மக்களின் சார்பாக பேசுகிற காங்கிரஸ் கட்சியில் உள்ள மணிசங்கர் ஐயர் தான் அரசின் கொள்கைகளை வெளிப்படையாக விமர்சனம் செய்கிறார், பணக்காரகளுக்கும் ஏழைகளுக்குமான இடைவெளியை குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, நிலத்தை அடிப்படையாகக் கொண்ட பிரபுத்துவத்திற்குப் பதிலாக ‘பங்குச்சந்தையை’ அடிப்படையாகக் கொண்ட பிரபுத்துவம் இங்கே ஆட்சி செய்கிறது என்றார். மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்யமுடியாத நிலையில் 70,000 கோடி ரூபாய் செலவு செய்து காமன்வெல்த் விளையாட்டை நடத்துவது தேவையற்றது என்றார். இந்தியா –ஈரான் எரிவாயு குழாய் மூலம் நீண்டகால எரிசக்திக்கு தேவையான பாதையை வகுத்த மணிசங்கர் ஐயரின் பெட்ரோலிய அமைச்சர் பதவி யாரால் பறிக்கப்பட்டது என தெரியவில்லை.

உலக அரங்கில் 50 பில்லிணியர்களில் இந்தியர்கள் 6 பேர், ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி ஆசியாவிலேயே முதல் பணக்காரர் என்ற பெருமையை இந்தியாவின் பொருளாதாரக் கொள்கை தேடித்தந்திருக்கிறது. நாட்டின் இயற்கை எரிவாயு வளங்கள் பொதுத்துறை நிறுவனங்களுக்கு தருவதன் மூலம் நாட்டின் எரிசக்தி செலவை குறைப்பதற்கு மாறாக கிருஷ்ணா-கோதாவரி எண்ணைய் படுகையை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு தாரை வார்த்துள்ளது, மற்றொரு புறம் தனியார் எண்ணெய் நிறுவனங்கள் தங்களின் மூடப்பட்ட சில்லரை விற்பனை நிலையங்களை மீண்டும் சந்தைக்கு வர பெட்ரோலிய பொருட்களின் விலைகளை ‘derugulate’ செய்து அம்பானிகளின் சொத்து மதிப்பை கூட்டுவதோடு மக்களின் அத்தியாவசிய உணவுப் பண்டங்களின் விலையை மறைமுகமாக ஏறுவதற்கு உதவிசெய்கிறது.

இந்திய பில்லிணியர்கள் உலக அரங்கில்………….. முதல் 50 இடத்தில்

முகேஷ் அம்பானி - $ 29 பில்லியண் – 4 வது இடம்
லஷ்மி மிட்டல் - $ 28.7 பில்லியண் – 5 வது இடம்
அஸிம் பிரேம்ஜி - $ 17 பில்லியண் 28 வது இடம்
அனில் அம்பானி - $ 13.7 பில்லியண் 36 வது இடம்
எஸ்ஸார் குழுமம் - $ 13 பில்லியண் 40 வது இடம்
ஜிண்டால் குழுமம் - $ 12.2 பில்லியண் 44 வது இடம்

பில்லிணியர்கள் எத்தனை பேர் …….அமெரிக்கா - 329 ,
சீனா - 79
இந்தியா - 58 மூன்றாவது இடம்
ஜெர்மனி - 54
ரஷ்யா - 32
இங்கிலாந்து - 25
ஜப்பான் - 17 (நமக்குப் பின்னாடி தான்)

ஆசியப் பொருளாதாரத்தில் இந்தியா மூன்றாவது இடத்தில்…

ASIA’S RICHEST GNP

சீனா - $ 7.7 பில்லியண்
ஜப்பான் - $ 3.8 பில்லியண்
இந்தியா - $ 3.4 பில்லியண்
ரஷ்யா - $ 1.4 பில்லியண்
கொரியா - $1.0 பில்லியண்

உலகப்பொருளாதாரத்தில் இந்தியா 4வது இடத்தில்……….
Richest GDP 2006

அமெரிக்கா - $ 13 டிரில்லியண்
சீனா - $ 10 டிரில்லியண்
ஜப்பான் - $ 4.17 டிரில்லியண்
இந்தியா - $ 4.16 டிரில்லியண்
ஜெர்மனி - $ 2.6 டிரில்லியண்

2050ம் ஆண்டில் இந்தியா உலக அரங்கில் சீனா, அமெரிக்கா வை அடுத்து மூன்றாவது இடத்திற்கு வரும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது ஒருபுறம் இந்தியாவின் வளர்ச்சி என்பதே பெருமுதலாளிகளின் வளர்ச்சி என்று வாசிக்கவேண்டும், இந்தியா மக்களின் நலன்களில் எவ்வளவு அக்கறை கொண்டுள்ளது என்பதை பார்க்கலாம்.

Hunger Index ல் நாம் 23.9 புள்ளிகளில் அதாவது மோசமான பசியால் அதிகம் வாடும் மக்கள் கொண்ட 30 நாடுகளில் இந்தியாவும் ஒன்று Hunger Index ‘0’ என்பது No Hunger, 20 புள்ளிகள் முதல் 29.9 வரை ‘alaraming’ என்ற நிலையில் உள்ளோம்,

நம்மோடு இதில் போட்டி போடும் நாடுகள் …..

எத்தியோப்பியா 30.8, நேபாளம் 20, சூடான் 20.9, தான்சானியா 20.9, ருவாண்டா 23, கம்போடியா 20.9, உகாண்டா 14.8, இலங்கை 13.7, சீனா 5.7, கியூபா <5 (நாம் யாருடன் போட்டி போடுகிறோம்).

Poverty- இந்தியாவில் வறுமைக்கோட்டுக்கு கீழேயுள்ள மக்கள் 37 சதவீதம், கிராமப்புறங்களில் 22% பேரும் நகர்ப்புறங்களில் 15% பேரும் இருக்கிறார்கள். நாள் ஒன்றுக்கு $1.25 சம்பாதிப்பவர்கள் இந்தியாவில் 41.6%, ஐநா வின் வறுமை பட்டியலில் நாம் 88வது இடத்தில் இருக்கிறோம்(out of 134).

மக்களின் மருத்துவ வசதிகளைப் பார்ப்போம்…………

இந்தியாவில் மலேரியா காய்ச்சலால் வருடத்திற்கு 1,25,000 பேர் இறப்பதாக The Lancet என்ற மருத்துவ இதழின் ஆய்வறிக்கை கூறுகிறது, ஐநா வின் திட்டப்படி உலகம் முழுவதிலும் 1,00,000 பேர் இறக்கின்றனர் என்ற கூற்றை விட இந்தியாவில் அதிகமாக இறக்கிறார்கள். இந்த நோயால் மரணிப்பதை தடுக்கமுடியதா?

காசநோயால் பாதிக்கப்பட்ட மக்கள் வளரும் நாடுகளில் உள்ள விகிதத்தை விட இந்தியாவில் அதிகம் இந்தியாவில் ஒரு இலட்சம் பேருக்கு 23 பேர் காசநோயால் பாதிக்கப்படுகின்றனர் / மரணிக்கின்றனர். அதே நிலைமை மற்ற ஏழை நாடுகளில் ..
இலங்கை யில் 10 பேரும், நேபாளத்தில 22 பேரும், சீனாவில் 12 பேரும், கென்யாவில் 19 பேரும், கினியா-பிசோவில் 25 பேரும், உகாண்டாவில் 27 பேரும், பாகிஸ்தானில் 39 பேரும் இறக்கின்றனர்.

குழந்தைகள் பிறந்தவுடன் சரியான மருத்துவ வசதி, சத்தான உணவு கிடைக்காமல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இந்தியாவில் மரணமடைவது அதிகமாக உள்ளது. (மரணவிகிதம் /1000 குழந்தைகள் பிறக்கும்போது)

இந்தியாவில் 69, பங்களாதேஷில் 54, நேபாளத்தில் 51, எரித்ரியாவில் 51, கானா வில் 76, பாகிஸ்தானில் 89, சூடானில் 200, இலங்கை 17, சீனாவில் 21 குழந்தைகளும் இறக்கின்றனர்.

அதே போல் ஐந்து வயதிட்குட்ட குழந்தைகள் எடை குறைவாக இந்தியாவில் 43.5%..

பங்களாதேஷில் 41.3%, நேபாளத்தில் 38%, எத்தியோப்பியாவில் 34.6%, சூடானில் 31.7%, சோமாலியாவில் 32.8, நைஜீரியாவில் 37.9% இலங்கையில் 21.1%, வடகொரியாவில் -20.6%, சீனாவில் 6.8%, ருவாண்டா 18% , கியூபாவில் 3.9% குழந்தைகள் எடை குறைவாக உள்ளன. பொருளாதாரத்திலும் ராணுவ பலத்திலும் வளர்ந்த நாடுகளோடு போட்டியிடும் நாம் மக்கள் நலனில் உள்நாட்டுக் கலவரங்களாலும், பஞ்சத்தாலும் அவதிப்படும் நாடுகளைவிட கீழேயுள்ளோம்.

இந்தியாவில் கழிவறையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை விட செல்போனை உபயோகிப்போரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக ஐ நா கூறுகிறது. வளர்ந்த நாடுகளில் 100 சதவீத மக்கள் சுகாதரமான கழிவறையை உபயோகப்படுத்தும் போது இந்தியாவில் 31சதவீத மக்களே சுகாதரமானக் கழிவறையைப் பயன்படுத்துகிறார்கள். மற்ற நாடுகளில்…………….

அமெரிக்காவில் 100%, இலங்கையில் 91%, சீனாவில் 55%, பங்களாதேஷில் 53%, பிரேசிலில் 80%, உகாண்டாவில் 48%, ருவாண்டாவில் 54%, நேபாளத்தில் 31% பேரும் சுகாதாரமான கழிவறையைப் பயன்படுத்துகிறார்கள்.

இந்தியாவில் மருத்துவர்களின் எண்ணிக்கை 10,000 மக்களுக்கு 6 மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். பிற நாடுகளில்…………………….

அமெரிக்காவில் 27 மருத்துவர்களும், கியூபாவில் 64 மருத்துவர்களும், எகிப்தில் 25 மருத்துவர்களும், சீனாவில் 14 மருத்துவர்களும், பாகிஸ்தானில் 8 மருத்துவர்களும், ஜமைக்காவில் 9 மருத்துவர்களும், ரஷ்யாவில் 43 மருத்துவர்களும் உள்ளனர்.

இந்தியா மருத்துவம் மற்றும் சுகாதார நலன்களுக்கு மொத்த உள் நாட்டு உற்பத்தியில் (GDP) 4.1% மட்டுமே ஒதுக்குகிறது. மற்ற நாடுகள் சுகாதரத்துறைக்கு ஒதுக்கும் GDP யின் அளவைக் காண்போம்.
அமெரிக்கா 15.7% கியூபா 10.4%, சீனா 4.3%, கனடா 10.1%, பிரேசில் 8.4%, கானா 8.3%, நேபாளம் 5.1%, உகாண்டா 6.3%,பாகிஸ்தான் 2.7%,ரஷ்யா 5.4% அளவிற்கு ஒதுக்குகிறது.

இந்தியா விண்வெளியிலும், அறிவியல் தொழில்நுட்பத்திலும் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக முன்னேறியுள்ளது, ஆனால் ‘ஆம் ஆத்மி’ யைப் பற்றிய அக்கறை ஆள்வோருக்கு ஒருபோதும் இருந்ததில்லை. இந்த தகவல்கள் யாவும் ஐ நாவின் ஆய்வறிக்கையிலிருந்து பெறப்பட்டவை.

புதன், 20 அக்டோபர், 2010

ஸ்டெர்லைட் ஆலை ஏன் மூடப்படவில்லை?

சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டுமென்று 1996ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு 14 ஆண்டுகள் கழித்து தாமிர உருக்காலையை மூடவேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழ்ங்கியது. ஸ்டெர்லைட் வெளியேற்றும் கழிவு மற்றும் மாசால் பாதிக்கப்படும் அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி ஆரவாரத்தோடு அந்த தீர்ப்பை வரவேற்றார்கள், ஆனால் இரு வாரத்திற்குள் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை வழங்கிவிட்டது (எல்லாம் எதிர்பார்த்தது தான்). சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் இந்த ஆலையை மஹாராஷ்ட்ரா அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து தமிழக அரசு வாரியணைத்து தூத்துக்குடி அருகே ஸ்டெர்லைட் ஆலையமைக்க நிலம் கொடுத்தது. எந்த ஆட்சியானலும் தமிழகம் தொழிற்துறையினருக்கு மிகவும் சாதகமாகவே, அந்த தொழிற்சாலையால் மக்களுக்கு எவ்வளவு பாதகம் இருந்தாலும் ஆட்சியாளர்களுக்கு கவலை இருந்ததில்லை.







இந்த ஆலை அமைக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் “தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரிய” த்தின் அறிக்கை தான் என உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இந்த பதினான்கு ஆண்டுகால தொழிற்சாலையின் சுற்றுச்சூழல் சீர்கேட்டால் அருகிலுள்ள மீளவிட்டான்,தெற்குவீரபாண்டியபுரம் ஆகிய இரண்டு கிராமங்களிலும் நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, அடிகுழாய்களில் குடிநீர் பிடித்தால் மஞ்சள் நிறமாக உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையின் ஜிப்சம் கழிவு அருகிலுள்ள ஓடையில் கலந்துள்ளதால் செப்டம்பர் 30 தேதியன்று 7 ஆடுகள் நீரைக்குடித்ததால் இறந்துள்ளன. அருகிலுள்ள கிராம மக்கள் மூச்சுத்திணறால் பாதிக்கப்படுகின்றனர், குழந்தைகள் மூட்டுவழியாலும் பல் வலியாலும் அவதிப்படுகின்றனர். பரிசோதனைக்காக எடுக்கப்பட்ட நிலத்தடி நீரில் copper,chrome, lead, cadmium மற்றும் arsenic போன்ற நச்சுகள் உள்ளதாக உயர்நீதிமன்றத் தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.மேலும் chloride மற்றும் fluride ன் அளவு சராசரியாக குடிநீரில் உள்ளதைவிட அதிகமாக இருந்துள்ளது.

சுற்றுச்சூழலை சீரழிக்கும் இந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வேலைசெய்கின்றனர். ஸ்டெர்லைட் தொடங்கப்பட்ட 1996ம் ஆண்டிலிருந்து 2004ம் ஆண்டுவரை 13 பேர் விபத்தில் இறந்துள்ளனர்,139 பேர் காயமடைந்துள்ளனர். 1997ம் ஆண்டு நடந்த கொதிகலன் வெடிப்பால் இரு ஊழியர்கள் கோரமாக உயிரிழந்துள்ளனர். கடந்த செப்டம்பர் 26ம் நாள் ஆஸிட் டேங்கர் லாரியை சுத்தம் செய்யும் போது ஒருவர் மரணமடைந்தார். தொழிற்சாலைகளில் செயல்படுத்தும் பாதுகாப்புவிதிகளை மீறுவதினாலேயே இந்த விபத்துகள் ஏற்படுகின்றன.

தூத்துக்குடியின் கடலில் பவளபாறைகள் உலகில் ஐந்து பவளப்பாறை படிவங்களில் ஒன்றாகும், கந்தக அமிலம் கலந்த வாயுக்கள் 25 கிலோமீட்டர் வரை பவளப்பாறைகளைப் பாதிக்கிறது, ஆனால் பவளப்பாறை தீவிலிருந்து ஸ்டெர்லைட் ஆலை 15 கிமீ தூரமே உள்ளது. எல்லா விதிகளையும் மீறி தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் இந்நிறுவனத்திற்கு அனுமதியளித்துள்ளது. இந்த அனுமதி குறித்து முழுமையாக விசாரிக்கப்படவேண்டும்.

1998ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் NEERI என்ற சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவனத்திடம் ஸ்டெர்லைட் குறித்த அறிக்கை கேட்டுள்ளது, NEERI அளித்த அறிக்கையில் நிறுவனம் தொடங்க தவறான வகையில் அனுமதி,அளவுக்கதிகமான உற்பத்தி, ஆபத்தான கழிவுகள், கழிவுநீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றியது, நிலத்தடிநீர் மாசுபாடு, தேவையான கிரீன்பெல்ட் ற்கு மரங்களை வளர்க்கவில்லை என அறிக்கையளித்ததால் 1998 நவம்பர் மாதத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது, அதன் பின்னர் இரண்டு மாதங்கள் ஆலையை இயக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்தபோது மீண்டும் NEERI யிடம் மற்றொரு அறிக்கை கேட்டது. ஆனால் அந்த அறிக்கையில் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு சாதகமாக அவர்கள் சுற்றுச்சூழலை பாதிக்காதவண்ணம் ஆலையை மறுசீரமதைத்தாக அறிக்கையளித்தது.

அரசின் நிரவாகம், தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம், நீதிமன்றம் என அனைத்தும் வேதாந்தா என்ற பன்னாட்டு நிறுவனத்திற்கு உடந்தையாக செயல்படுகிறது. குறுகிய காலத்தில் அதிக லாபம் ஈட்டுவதற்காக பன்னாட்டு நிறுவங்கள் சுற்றுச்சூழல், பாதுகாப்பு விதிமுறைகள் எவற்றையும் பின்பற்றாமல் இந்தியாவை மட்டுமல்ல இந்தப் புவியையே நாசம் செய்து வருகிறார்கள். வேதாந்த நிறுவனம் ஒரிஸ்ஸாவில் ஃபாக்சைட் சுரங்கம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மறுத்துள்ளதோடு அந்த நிறுவனம் அலுமினிய சுத்திகரிப்பு ஆலைகழிவுகளை வெளியேறியதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து விசாரணை நடத்தவும் ஆணையிட்டுள்ளது.

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அரசின் சட்டமன்றம்,நிர்வாகம் எங்கும் லஞ்சப்பணத்தின் சீர்கேட்டால் மக்கள் நீதிமன்றங்களிடம் செல்கின்றனர். நீதிமன்றத்தீர்ப்புகளும் முன்னே குறிப்பிட்ட அமைப்புகளிடமிருந்து எவ்விதத்திலும் மாறுபட்டதல்ல என்பதை சமீபத்திய தீர்ப்புகள் விளக்குகின்றன. மனிதசமுதாயம் நாகரீகமடைந்து “வலுத்தவன் வாழ்வான்” என்ற கோட்பாடிலிருந்து மாறி எளியோரை வலியோரின் அடக்குமுறைகளிடமிருந்து காக்கவே அரசு செயல்படுவதாக தோற்றமளிக்கிறது. எளியோர் பாதிக்கப்படும்போது அதற்காக நீதிமன்றத்தை சாதாரணமக்களும் நாடலாம் என உரிமையளிக்கிறது, ஆனால் நீதிமன்றங்கள் கோபம் கொண்ட மக்கள் வன்முறையை நாடாமல் செய்வதற்குள்ள “relief device" ஆகத்தான் உள்ளது.மக்களுக்கு ஏற்படுகிற பாதிப்பையும், சுற்றுச்சூழல் சீர்கேட்டையும் கருத்தில் கொண்டு வெகுவிரைவிலேயெ உச்சநீதிமன்றம் மக்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கட்டும், தாமதமான நீதியும் மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம் என்பதையும் கவனத்தில் கொள்ளட்டும்.

ஞாயிறு, 10 அக்டோபர், 2010

நள்ளிரவில் சுதந்திரம்

"நள்ளிரவில் பெற்றோம்
இன்னும் விடியவேயில்லை”


என்ற மொழிபெயர்ப்பாளர்களின் முன்னுரையுடன் தொடங்கும் இந்நாவல் டொமினி லேப்பியர் மற்றும் லேரி காலின்ஸ் ஆகிய எழுத்தாள இரட்டையர்களால் எழுதப்பட்ட “Freedom at Midnight" என்ற ஆங்கில நூலின் தமிழாக்கமாகும். 600 பக்கங்களைக் கொண்ட மூலநூலை தமிழ் வாசகர்களுக்காக சிரத்தையுடன் “நடை” மாறாமல் வி.என்.ராகவன் மற்றும் மயிலை பாலு என்ற இரு பத்திரிக்கையாளர்கள் மொழிபெயர்த்திருக்கிறார்கள். பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் சார்ந்த இனக்குழு / சாதி மற்றும் ஒவ்வொரு தேசத்திற்கும் வரலாறு இருக்கிறது, “ஒரு வரலாற்று ஆசிரியரின் பணி கடந்த காலத்தை நேசிப்பதோ வெறுப்பதோ அல்ல; கடந்த காலத்தை புரிந்து கொள்வதே”. இந்த வகையில் வரலாற்றை எழுதுவது என்பது மிகவும் சிரமமானதாகும். இந்தியாவில் கடந்தகால வரலாற்றையும் தங்கள் அரசியல் நோக்கங்களுக்காக திருத்தியிருக்கிறார்கள். சிந்துவெளி நாகரீகத்தை ஆரிய நாகரீகமாக மாற்ற காளையை குதிரையாக மாற்றிய பெருமை மத்தியில் ஆட்சி நடத்திய பாஜக வுக்கு உண்டு. இந்த நூல் வரலாற்று வரிசையில் உள்ள நூலேயாகும், தொடங்கும் காலம் 1947 புத்தாண்டு தினம், காந்தியின் கொலை “இரண்டாவது சிலுவையேற்றம்” நடந்த ஜனவரி30 1948 ல் நிறைவடைகிறது.


மெளண்ட்பேட்டன் பிரபுவை மையமாக வைத்து எழுத்தப்பட்டது போல் தோன்றினாலும் காந்தி,நேரு,ஜின்னா மற்றும் படேல் என ஒவ்வொருவரைப் பற்றியும் நிறைய தகவல்கள் உள்ளன. காந்திஜியின் வாழ்க்கை வரலாற்றையும் சுருக்கமாகவும் அவரது போராட்ட வடிவமான ‘அகிம்சை’ தத்துவத்தையும் புரிந்துகொள்ள உதவுகிறது.இந்த நூலின் முதல்பதிப்பு 1975ல் வெளிவந்தவுடனேயே உலகம் முழுவதிலும் பிரபலம் அடைந்திருக்கிறது, ஆனால் பாகிஸ்தானில் தடைசெய்யப்பட்டது அதற்குக் காரணம் ஜின்னாவின் வாழ்க்கைமுறையை பற்றி எழுதியது தான், அவர் முஸ்லீமாக இருந்தாலும் மேற்கத்திய கலாச்சார வாழ்க்கையைத்தான் வாழ்ந்தார், காலை உணவில் மதுவோடு இஸ்லாமியர்கள் வெறுக்கும் பன்றி இறைச்சியை சாப்பிட்டார் என்பதற்காகத்தான்.

நள்ளிரவில் சுதந்திரம்’ பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் இறுதிக் கட்டங்களில் வளர்ந்த ப்ரிவினை வாதமும், அதனைத்தொடர்ந்து மதக்கலவரங்களால் இலட்சணக்கான மக்கள் மனிதநேயத்தை மாய்த்து ஒருவரையொருவர் வெட்டிக்கொண்டார்கள், போன்ற சம்பவங்களை காட்சிப்படுத்துகிறது, இந்தக்கொடூரமான வரலாறு மீண்டும் வேண்டாம், மத நல்லிணக்கமே தேவை என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். இந்தியப்பிரிவினையால் புலம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை, இரண்டாம் உலகப்போரில் தோற்ற நாடுகளில் அகதிகளின் இடப்பெயர்வோடு ஒப்பிடலாம். இந்தியப்பிரிவினை ரணத்தை உணர்ந்து கொள்ள உதவுகிறது. மதக்கலவரங்களால் அதிகம் பாதிக்கப்பட்ட லாகூர், அமிர்தசர்ஸ், பஞ்சாப் முழுவதிலும் ராணுவத்தால் கட்டுப்படுத்த முடியாத மதமோதல்களை காந்திஜி கல்கத்தாவில் தனிநபராக அமைதியை விதைத்தார். இது போன்ற காந்திஜியின் மதநல்லிணக்க கொளகை மட்டுமில்லாது பிரிவினையின் மூலம் இந்தியா பாகிஸ்தானுக்கு சட்டப்படி அளிக்க வேண்டிய 55கோடி ரூபாயை உடனடியாக இந்தியா வழங்கவேண்டுமென்று உண்ணாநோன்பிருந்தார். காந்திஜி கொண்ட இந்தக்கொள்கைகளை வெறுத்த மதவெறிபிடித்த கோட்சே தேசப்பிதாவை கொன்றான்.

இன்றளவும் நேருவுக்கும் எட்வினாவிற்கும் இருந்த அந்தரங்கத்தை அலசுவோருக்கு நேருவின் சகோதரி பதிலளிக்கிறார். இங்கிலாந்து இரண்டாம் உலகப்போரில் ஈடுபட்டதன் காரணமாக அதனுடைய பொருளதாரம் அதலபாதளத்திற்கு சென்றுவிட்டது, அப்போது நடைபெற்ற இங்கிலாந்துத் தேர்தலில் தொழிலாளர் கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்தியா போன்ற காலனி நாடுகளை விடுதலை செய்வோம் என்ற பிரச்சாரத்தினால் அட்லி பிரதமாகத் தேர்ந்தெடுக்கபட்டார். அவர் பதவியேற்ற சமயத்தில் இந்தியத் துணைக்கண்டத்தில் இந்தியப்பிரிவினை வாதமும் மதக்கலவரங்களும் கட்டுப்படுத்தமுடியாத அளவில் இருந்திருக்கிறது, இந்த காரணத்தினால் மெளண்ட்பேட்டன் பிரபு அதிகாரமாற்றத்தை(அதாவது கைகழுவ)சீக்கிரம் முயன்றிருக்கிறார்.

இந்தியாவிற்கு நள்ளிரவில் ஏஅன் சுதந்திரம் வழங்கப்பட்டது என்று யோசிக்கும் போதும் பலரிடம் விடை கேட்டபோதும் விடை கிடைக்கவில்லை, இந்த நூலில் உள்ளது. அந்த பாழாய்ப்போன நாளும் கிழமையும் தான், இந்தியமன்னர்களை பற்றி இதுவரை கொண்ட கருத்துக்கள் எல்லாம் தலைகீழாக மாற்றியது இந்நூல் என்றால் மிகையாகாது. இந்திய மக்கள் வறுமையில் வாடியிருக்க சமஸ்தான மன்னர்கள் மிகவும் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள். பாட்டியாலா மன்னரின் ஆடம்பரம் நம்மை கோபம் கொள்ளச்செய்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்த போது 500க்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள் இருந்திருக்கின்றன, ஒவ்வொரு மன்னரையும் இந்திய யூனியனில் சேர்க்க கெஞ்சல், மிரட்டல், விண்ணப்பம் என பல வழிமுறைகளை கையாண்டிருக்கிறார்கள். இன்றும் எரிந்து கொண்டிருக்கின்ற காஷ்மீர் பிரச்சனையை இந்நூல் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது.
600 பக்கங்கள் கொண்ட இந்நூலை வாசிக்க ஆரம்பிக்கும் போது மலைப்பாக இருந்தாலும் அதன் நடையின் சிறப்பால் நம்மை தொடர்ந்து வாசிக்க உத்வேகமளிக்கிறது. நீங்களும் வாசியுங்கள், இந்த நூலை தமிழில் படைத்த திரு.வி.என்.ராகவன் மற்றும் திரு.மயிலை பாலு அவர்களுக்கும் நூலை வெளியிட்ட ‘அலைகள் வெளீயீட்டக’ திற்கும் வாழ்த்துக்கள்.

வியாழன், 30 செப்டம்பர், 2010

கறைபடிந்த நீதித்துறை



இந்தியாவில் காலத்திற்கு ஏற்றவாறு சில சட்டதிருத்தங்கள் கொண்டுவரப்படுகின்றன. ஆனாலும் நீதிமன்ற தீர்ப்பை அல்லது நீதிபதியை விமர்சனம் செய்தால் அது நீதிமன்ற அவமதிப்பு ஆகிறது. தீர்ப்பு வழங்குகிற நீதிபதியும் மக்களில் ஒருவர்தான். அவரும் மற்ற அரசு ஊழியர்களைப் போல லஞ்சம் பெற்று தவறான நீதியை வழங்கும் போது எப்படி விமர்சனம் பண்ணாமல் இருப்பது. சில சமயங்களில் சட்டமன்றம், பாராளுமன்றங்களினால் செயல்படுத்த முடியாதவற்றை நீதித்துறை தீர்ப்பின் மூலம் கட்டாயமாக அமலாக்கப்படுகிறது. நீதித்துறையில் “இறையாண்மை” என்ற பெயரால் ஜனநாயகம் மறுக்கப்படுகிறது. நீதித்துறையின் மீது எந்த வித குற்றச்சாட்டு வைக்கப்படும்போது அதற்கு பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளது. ஊழலின் வடிவங்கள் கோடிகளில் பரிமாணம் பெற்றுள்ள சூழலில் நீதித்துறையின் களங்கத்தை தாமாகவே துடைக்க வேண்டும். லஞ்சஒழிப்பை எங்கிருந்து தொடங்குவது, மேலிருந்து கீழா அல்லது கீழிருந்து மேலா எனும் கேள்வி வரும் போது முதலில் அதிகாரம் படைத்த மேல் நிலையில் இருந்து தொடங்கும் போது கீழ் நிலையில் தானாக மாறிவிடும்.


உச்ச நீதிமன்றத்தின் முன்னால் தலைமை நீதிபதிகளில் 16 பேரில் 8 பேர் ஊழல் பேர்வழிகள் என்று பிரசாந்த்பூஷன் “Tehelka” விற்கு பேட்டியளித்த பின்பு அவர் மீது உச்ச நீதிமன்றம் அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தது. அத்துடன் தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு பிரசாந்பூஷனின் தந்தையும் முன்னால் சட்ட அமைச்சருமான சாந்திபூஷன் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அத்துடன் ஊழல் புகார் சுமத்தியுள்ள 8 நீதிபதிகளின் ஊழல்களையும் தகுந்த ஆதாரத்துடன் உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பியுள்ளார். சாந்திபூஷன் உச்சநீதிமன்றத்தில் பிரபல வழக்கறிஞர், இவர் மொராஜிதேசாயின் மந்திரி சபையில் சட்ட அமைச்சராகப் பதவி வகித்தவர். இந்திராகாந்தியின் “தேர்ந்தெடுப்பு” செல்லாது என்று வாதாடியவர். அவர் வழியில் பிரசாந்பூஷன் CAMPAIGN FOR JUDICIAL ACCOUNTABLITY என்ற அமைப்பை நிறுவி நீதித்துறை செய்யவேண்டிய சீர்திருத்தம், தீர்ப்புகளின் விமர்சனம், நீதிபதிகளின் முறைகேடான தீர்ப்புகளைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டிவருகிறார்.

கர்நாடக முன்னால் தலைமை நீதிபதி P.D.தினகரன் சுப்ரிம் கோர்ட் நீதிபதியாக பதவிவுயர்வு வழங்க உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள்குழு முடிவு செய்ததை எதிர்த்து ஊழல் கறைபடிந்த நீதிபதியை உச்சநீதி மன்றத்தின் படியேறாமல் தடுத்து நிறுத்துயவர். நீதிபதி தினகரனை பதவிநீக்கம் செய்ய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தீர்மானம் கொண்டு வந்தனர். அது என்னவாயிற்று என்று இதுவரை எதுவும் தெரியவில்லை. முடிவாக சிக்கிம் மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இன்னமும் பதவியில் நீடித்து வருகிறார்.

சென்ற ஐக்கிய முன்னனியின் ஆட்சியில் நிரைவேற்றப்பட்ட மூன்று முக்கிய மசோதாக்களில் தகவல் அறியும் உரிமைச்சட்ட மசோதா இடது சாரிக் கட்சிகளின் நிர்பந்தம் காரணமாக இச்சட்டத்தை நிறைவேற்றினார்கள். ஆனால் இன்று இச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் வேலைகளில் தற்போதைய UPA அரசு முனைப்பாக உள்ளது. சமீபகாலமாக இச்சட்டத்தின் மூலம் ஆட்சியாளர்களின் முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்த சூழ்நிலையில் அந்த சட்டம் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் ஆர்வலர்கள் கொலைசெய்யப்படுகிறார்கள். தன்னார்வ நிறுவனங்கள் செய்து வரும் இவ்வியக்கத்தை இடதுசாரிக் கட்சிகள் பொறுப்பேற்று நடத்த வேண்டும். பொதுவாழ்வில் நேர்மையைக் கடைபிடிப்பவர்களால் மட்டுமே இந்த இயக்கத்தை நடத்த முடியும். இந்தியாவில் பொதுவாழ்க்கையில் உயர் பதவி வகிப்பவர்கள் தங்களின் வருடாந்திர சொத்து பற்றிய விவரங்களை மக்களுக்குத் தாமாகவே தெரியப்படுத்த வேண்டும். ஆட்சியில் இருப்பவர்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஐஏஎஸ் அதிகரிகள், நீதிபதிகள் தலைமை நீதிபதி உட்பட அனைவரும் மக்களுக்கு தகவல் அளிக்க கடமைப்பட்டுள்ளனர். அப்போதுதான் உண்மையான ஜனநாயகம் நடைபெரும்.

நம் நாடு பொருளாதார வளர்ச்சியில் முதல் பத்து இடத்திற்குள் இருந்தாலும் உலகில் வறுமையானவர்கள் இந்தியாவில் பாதிப்பேர் உள்ளனர். ஊழலின் தரவரிசையில் 180 நாடுகளில் நாம் 80-வது இடத்தில் உள்ளோம் . அணு ஆயுதங்களையும் ஏவுகணைகளையும் சோதனை செய்வதன் மூலம் இந்தியா வல்லரசு வேண்டுமானால் ஆகிக்கொள்ளலாம், அது நமக்கு வேண்டாம், நமக்குத் தேவை “நல்லரசு” அது மக்களால் மக்களுக்காக மட்டுமே. மத்திய அரசோ மாநில அரசோ நலத்திட்டங்கள் என்ற பெயரில் மக்கள் பணத்தை ஆட்சி செய்யும் அரசியல்வாதிகளும் ஆளும் வர்க்கமும் பங்குபோட்டுக் கொள்கின்றன. ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடங்கி சமீபத்திய காமன்வெல்த் போட்டிகளில் அரங்குகள் அமைப்பது வரை ஆட்சியாளர்கள் ஊழல் புரிந்துள்ளனர். இந்த நாட்டின் இயற்கை வளங்கள் தனியார் நிறுவனங்களாலும் பன்னாட்டு நிறுவனங்களாலும் சூறையாடப்படுகின்றன. நீதித்துறையும் அதன் பங்கிற்கு லஞ்சப்பணத்திற்காக சுற்றுச்சூழலை மதிக்காத பெரு முதலாளிகளின் நலன்களூக்காக தீர்ப்பு வழங்குகிறது.

மக்கள் நலன்சார்ந்த பிரச்சனைகளின் தீர்ப்புகள் விரைவாக அமையவேண்டும், சமீபத்திய ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழல் மாசுபடுத்தியதால் அந்நிறுவனத்தை மூட தீர்ப்பு அளித்துள்ளது, மத்திய அரசின் உணவு தானியக்கிடங்கில் உண்வு தானியங்கள் புளுத்துப்போவதற்குப் பதிலாக எழை மக்களுக்கு இலவசமாக வழங்கவேண்டும் என்று சுப்ரீம்கோர்ட் அரசை சாடியதை பாராட்டப்படவேண்டும். அதே நேரத்தில் குடிமக்களின் நீதியின் மீதான விமர்சனங்களை ஆராயவேண்டும். வெளிப்படையான நிர்வாகத்தில் தீர்ப்புகளை விமர்சனம் செய்வதில் என்ன தவறு? குற்றம் சாட்டப்பட்டுள்ள நீதிபதிகளின் மீது வழக்கு தொடர்ந்து நீதித்துறை அதன் களங்கத்தை துடைக்க முயற்சிக்கவேண்டும்.

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

நெஞ்சு பொறுக்குதில்லையே....



காமன்வெல்த் போட்டி நடைபெற இன்னும் ஒரு வார கால இடைவெளிதான் உள்ளது, தினமும் ஏதாவது பாலம் உடைந்துவிழுவது,கூரை சரிந்து விழுவது இன்னமும் விளையாட்டு அரங்குகளை கட்டிக்கொண்டேயிருப்பது என இருக்கிறது. ஒவ்வொரு செங்கலிலும் ஊழல் செய்திருக்கிறார்கள் அதனால் தான் விழா தொடங்குவதற்கு முன்பே இடிந்து விழ ஆரம்பிக்கிறது. ரூ 70,000 கோடி செலவில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டிகள் தோல்வியடைய வேண்டும் என்று அரசின் செயல்பாடுகளை கண்டு மனம் நொந்து காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மணிசங்கர் ஐயர் கருத்து தெரிவித்தார். உடனே பாஜகவும் காமன்வெல்த் அமைப்பாளர்களும் கொதித்தார்கள். அவர் உண்மையைத்தான் கூறியிருக்கிறார். நாட்டின் மக்களில் 70 சதவீதத்திற்கும் மேல் வறுமையால் வாடிக்கொண்டிருக்கும் வேளையில் நமக்கு இந்த தம்பட்டம் தேவைதானா. இந்த காமன்வெல்த் போட்டியால் இந்தியாவிற்கே தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறார்கள் அதன் அமைப்பாளர்கள். அதன் தலைவர் சுரேஷ் கல்மாதியிடம் ஏன் பாலம் இடிந்து விழுகிறது என்று கேட்டால் இதெல்லாம் எல்லா நாட்டிலும் விளையாட்டு அரங்கு அமைக்கும்போது நடப்பது தான் என்று கூசாமல் சொல்கிறார். எனக்கு நினைவு தெரிந்தவரை இவர்தான் ஒலிம்பிக் கமிட்டியில் தலைவராக இருக்கிறார். இவர்கள் ஊழல் செய்து சொத்து சேர்ப்பதற்காகவே இந்த காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகள் என்பது தெளிவு. அதற்கு மக்களின் வரிப்பணம் வீண் செய்யப்படுகிறது. முதலில் இந்தியாவில் விளையாட்டு வீரர்களை உருவாக்கவேண்டும், வெள்ளைக்காரர்களின் விளையாட்டான கிரிக்கெட்டை பெப்சி,கோக்,வில்ஸ் நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்து அவர்களின் வியாபாரத்தை இந்தியாவில் பெருக்கினார்கள். ஆனாலும் இப்போது அந்த “தேசிய” கிரிக்கெட் வீரர்கள் தனியார் நிறுவனத்திற்கு விலைபோக ஆரம்பித்து விட்டார்கள். ஏற்கனவே பொய்கள் கூறும் விளம்பரங்களில் வந்து மக்களை ஏமாற்றினார்கள். உலக அரங்கில் விளையாட்டு என்றால் அது ஒலிம்பிக் தான், அதில் ஒரு நாடு எத்தனை தங்கம் பெற்றது என்பதை வைத்து தான் அந்த நாட்டின் Human Development Index வெளிப்படுகிறது. ஒரு மத்திய அமைச்சர் அதுவும் உணவு மற்றும் விவசாயத்துறைக்கு பொறுப்பு வகிப்பவர், நாட்டின் உணவு தானியக்கிடங்குகளில் புழுத்துப் போகும் அரசியை, கோதுமையை பட்டினியி வாடும் மக்களுக்கு இலவசமாக தரவேண்டும் என்று சுப்ரீம் உத்திரவிட்டும் அதை அரசின் “பாலிஸி” மேட்டரில் கோர்ட் தலையிடக்கூடாது என்று பிரதமர் சொல்கிறார். இன்னும் அந்தத் துறை அமைச்சர் சரத்பவார் வெளியிலேயெ தலைகாட்டவில்லை காரணம் ICC யிலும் BCCI யிலும் ரொம்ப பிஸி, இதில் பிரதமருக்கு என்னுடைய “வேலைப்பளு” அதிகம் என்று கடிதம் எழுதுகிறார். உடல்நலக்குறைவால் அவதிப்படும் ஒருவரை ஏன் மன்மோகன்சிங் விடாப்பிடியாக உட்காரவைத்து அமைச்சர் வேலை கொடுக்கறார் என்று தெரியவில்லை.

சரத்பவார் பணம் தரும் விளையாட்டில் கவனம் செலுத்துவது போல இன்னொரு மத்திய அமைச்சர் மம்தா பானர்ஜி மேற்குவங்க அரசியலுக்காக ரயில்வே அமைச்சத்தின் தலைமையகத்தையே கல்கத்தாவிற்கு மாற்றிவிட்டார். இவர் பதவியேற்றதிலிருந்து ரயில் விபத்துக்களால் இதுவரை 270 பேர் பலியாகியிருக்கிறார்கள். ஒவ்வொரு விபத்திற்கும் மார்க்சிஸ்ட் கட்சியே காரணம் என்று கூசாமல் குற்றம் சாட்டுகிறார். பிரதமர் மன்மோகன்சிங், மாவோயிஸ்ட்கள் தான் தேசபாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று அறிக்கை விடுக்கிறார். ஆனால் மந்திரிசபையில் இடம்பெற்றுள்ள மம்தா பானர்ஜி மாவோயிஸ்ட்களை ஆதரிக்கிறார். சென்ற மக்களவை தேர்தலிருந்து இதுவரை மேற்குவங்க மாநிலத்தில் மாவோயிஸ்ட்களால் 280க்கும் அதிகமான மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள், ஆதரவாளர்கள், பழங்குடியினர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆயுத உதவியும் கூட மம்தாவின் கட்சியான திருணாமூல் காங்கிரஸ் அளித்து வருகிறது. அரசியல் ரீதியாக ஆளும் இடதுசாரிகளை எதிர்கொள்ளமுடியாமல் மாவோயிஸ்ட்கள் என்ற சீரழிவு சக்திகளை “இறக்குமதி” செய்து வன்முறையின் மூலம் சாதிக்கலாம் என்று நினைக்கிறார். மம்தாபான்ர்ஜி யின் கட்சிக்கும் மாவோயிஸ்ட்களுக்கும் உள்ள தொடர்பை ஆதாரங்களுடன் பலமுறை பிரதமரிடமும் உள்துறை அமைச்சருடனும் முறையிட்டும் பலனில்லை.காங்கிரஸ் கட்சிக்கும் இடதுசாரிகளை முக்கியமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை ஒழித்துவிட்டால் பாராளுமன்றத்தில் பொருளாதார சீர்திருத்தத்திற்கு எந்த எதிர்ப்பும் இருக்காது என்று கள்ள மெளனம் காக்கிறார்கள்.

அமெரிக்க கார்ப்பரேட் நலன்களுக்கு நன்மை தரும் அணுசக்தி இழப்பீட்டு மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறவில்லையென்றால் பதவி துறப்பேன் என்று கூறும் பிரதமர், சக நாட்டு விவசாயி வாழ்வாதாரம் இல்லாமல் தற்கொலை செய்வதைக் கண்டு எப்போதாவது மனம் வருந்தினாரா? காமன்வெல்த் விளையாட்டில் ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல், மருத்துவத்துறை அதிகாரி கேதன் தேசாய் செய்த ஊழல், இந்த நாட்டின் இயற்கை கனிம வளங்கள் அனுமதியில்லாமல் கொள்ளையடித்து செல்லப்படுகின்றன அதை குறித்து கவலைப் படுகிறாரா? இந்த தேசத்தை கொஞ்ச கொஞ்சமாக பெருமுதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவங்களுக்கும் விற்று வருகிறார். நாட்டின் GDP 8 முதல் 9 சதம் உயர்கிறது என்று அறிக்கைவிட்டால் போதுமா? யாருக்கான வளர்ச்சி. குறிப்பிட்ட சில கார்ப்பரேட் நிறுவனங்கள் அதீத வளர்ச்சியடைந்தால் அது அரசாங்கத்தின் “பாலிஸி” யால் தானே?

ஐக்கியமுண்ணனியின் கூட்டாளிகள் திமுக உட்பட யாரும் காங்கிரஸின் மக்கள் விரோத கொள்கைகளை கேள்வி கேட்பது கிடையாது,ஏனென்றால் இவர்களுக்கும் அந்த “பாலிஸி” யில் பங்கு தானே! இதையெல்லாம் மக்கள் எப்போதும் சகித்துக்கொண்டேயிருக்கமாட்டார்கள்.

புதன், 15 செப்டம்பர், 2010

தலித் மக்கள் வீட்டில் ராகுல் காந்தியும் மகாத்மா காந்தியும்



சமீபகாலமாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும் நேருவின் குடும்ப வாரிசான ராகுல் காந்தி எல்லா மாநிலங்களையும் சுற்றிவருகிறார். “தலித்” மக்களுக்கு நெருக்கமாக தான் இருக்கின்ற மாதிரி அவர்கள் வீடுகளில் தங்கவும் அம்மக்களுடன் சேர்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுப்பது என்று “வாக்குகளை” மையமாக கொண்டு விளம்பரம் தேடிவருகிறார். இந்தியாவில் தீண்டாமை நெடுங்காலமாக நிலவி வருவதன் காரணமாக அம்மக்களுக்கு கோவிலில் வழிபாட்டு உரிமையில்லை,பொதுமயானம் பயன்படுத்த ஆதிக்க சாதிகள் தடுப்பது, சில கிராமங்களில் பொது கிணற்றில் தண்ணீர் எடுக்க மறுப்பு, தடுப்புச்சுவர் மூலம் அம்மக்களை பிரித்துவைப்பது (உத்தபுரம் சாட்சி) என்பதெல்லாம் காங்கிரஸ் கட்சிக்கு தெரியவில்லையா என்ன? வரலாற்றில் மகாத்மா காந்திக்கே அல்வா கொடுத்திருக்கிறார்கள்.

இந்திய சுதந்திரப்போராட்டம் நடக்கும்போது அதன் ஒருபகுதியாக காந்திஜி தீண்டமைக் கொடுமைக்கெதிராக போராடினார். சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகாலம் ஆகியபின்பும் கிராமங்களில் நிலமில்லா விவசாயக் கூலிகளாக பெருமளவு “தலித்” மக்கள் தான் இருக்கிறார்கள், அன்றைய நிலையை யோசித்துப் பார்த்தால் சமூகத்தில் எவ்வளவு கொடுமைகளை அனுபவித்திருப்பார்கள். காந்திஜியின் இந்த முயற்சிகளை காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் விரும்பவில்லை. காந்தி தாமாகவே வறுமை வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து அதில் உறுதியாக இருக்கும் நிலையில் அவரை காங்கிரஸ் கட்சியால் உண்மையில் பாதுகாத்திட முடியுமா என்று இந்தியாவுக்கு கடைசி வைஸ்ராயாக பொறுப்பேற்றிருந்த மெளண்ட்பேட்டன் பிரபு கவிக்குயில் சரோஜினிநாயுடுவிடம் கேட்டார். ‘ஓ..’ ‘அவருக்குப் பொருத்தமான மக்கள் கூட்டம் நிறைந்த மூன்றாம் வகுப்பு ரயில் பெட்டியைத்தேடி கல்கத்தா ரயில் நிலைய பிளாட்பாரத்தில் அவர் தனியாக நடந்து செல்வதாக நீங்களும்(மெளண்ட்பேடன்) காந்தியும் வேண்டுமானால் கற்பனை செய்து கொள்ளலாம். அல்லது தீண்டத்தகாதோரின் காலனியின் குடிசையில் காந்தி தங்கியிருக்கும்போது பாதுகாப்பின்றி அவர் இருப்பதாகவும் நினைக்கலாம்.

தீண்டத்தகாதவர் போல உடையணிந்து காங்கிரஸ்காரர்கள் பலர் அவர் பின்னால் நடந்து செல்வதையும் மூன்றாம் வகுப்பு ரயிபெட்டியில் அவருடன் பயணம் செய்வதையும் காந்திஜி அறியமாட்டார். டில்லியின் பங்கி காலனிக்குள் போது ஹரிஜன்கள் போலவே உடை உடுத்தி அவரைச்சுற்றியுள்ள குடில்களில் காங்கிரஸ்காரர்கள் பலர் குடியிருந்தனர் என்று விளக்கியிருக்கிறார். மேலும், அந்த வயதான மனிதரை வறுமையில் வாழ வைப்பதற்கு காங்கிரஸ் கட்சி எவ்வளவு தொகையை செலவிடுகிறது என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள்’ என்று கூறி சரோஜினி நாயுடு விளக்கத்தை முடித்தார்.

இந்தக் கொள்கையும் நடைமுறையும் தான் அவர்களின் யோக்கியதை, இன்றில்லாவிட்டாலும் ஒருநாள் அம்மக்கள் தங்களது அனுபத்தில் தங்களுக்காக யார் போராடுகிறார்கள் என்று புரிந்துகொள்வார்கள்.

சனி, 11 செப்டம்பர், 2010

A Cabinet of crorepatis



மத்திய அமைச்சரவையில் “பில்லினியர்கள்” யார் யார், அவர்களுக்கு எவ்வள்வு சொத்து மதிப்பு உள்ளது என தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலமாக திரு.S.C.அகர்வால் கேட்டப்போது கிடைத்த விபரங்கள், யாரும் உண்மையான “ரியல்” சொத்து மதிப்பை வெளியிடவில்லை என்பது மட்டும் தெளிவாகிறது. இந்திய பாராளுமன்றத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களில் கிட்டத்தட்ட 60 சதமானத்திற்கும் மேலானவர்கள் “பில்லினியர்களாக” உள்ளனர். அந்த விவரங்கள் எல்லாம் அவர்கள் தேர்தலில் போட்டியிட்ட போது தாக்கல் செய்த சொத்து மதிப்பு தான்.அமெரிக்க நலன்களுக்காகவே அதிகமாக உழைக்கின்ற நமது பாரதப் பிரதமர் திருவாளர். மன்மோகன் சிங் அவர்களுக்கு ரூ 4.3 கோடி தான், அதிகபட்சமாக சொத்து வைத்திருக்கும் அமைச்சர் பிரபுல் படேல், அவருடைய சொத்து மதிப்பு 35 கோடிதானாம், பெரும்பாலான அமைச்சர்களின் சொத்துமதிப்பை விட அவர்களின் மனைவிமார்களின் சொத்து அதிகமாக உள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் பினாமிகளின் பேரில் உள்ள சொத்துமதிப்பை எப்படி கணக்கெடுப்பது. அமைச்சரவையிலும் சில ஏழை அமைச்சர்கள் இருக்கிறார்களாம், அதுவும் பாதுகாப்பு அமைச்சர் அந்தோனி அவர்களின் மொத்த சொத்து மதிப்பு ஒரு இலட்சம். வேடிக்கையாக நமது ஸ்பெக்டரம் புகழ் ராசா அவர்களுக்கு ரூ88 இலட்சம் மட்டுமே உள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. எல்லாரும் தங்களுடைய இந்திய முதலீடுகளை மட்டும் தான் சொல்லியிருக்கிறார்களோ என்னவோ? இது குறித்த செய்தி இன்றைய “ஹிந்து” வில் வந்துள்ளது.

பிரதமர் மற்றும் சில அமைச்சரவை சகாக்களின் சொத்துமதிப்பைப் பார்ப்போம்..

பிரதமர் மன்மோகன் சிங் : 4.3 கோடி

பிரணாப் முகர்ஜி : 1 கோடி மனைவிக்கு 1.5கோடி

S.M.கிருஷ்ணா : 1 கோடி (மனைவி பேரில் உள்ள சொத்து)

சரத்பவார் : 3.9 கோடி மனைவியின் பேரில் 2.16 கோடி

கபில் சிபல் : 14 கோடி மனைவியின் சொத்து மதிப்பு 7 கோடி

ப.சிதம்பரம் : 5 கோடி மனைவியின் சொத்து மதிப்பு 7 கோடி

முரளி தியோரா : 15 கோடி மனைவியின் பேரில் 31 கோடி

ஆனந்த் சர்மா : 2.5 கோடி

கமல் நாத் : 3 கோடி மனைவியின் சொத்து 1.5 கோடி

மு.க.அழகிரி : 9 கோடி மனைவி,மகன் பேரில் 6 கோடி

பிரபுல் படேல் : 35 கோடி மனைவி வர்ஷாவின் பேரில் 40 கோடி

ஜோதிர்தயா சிந்தியா : 30 கோடி (ராயல் குடும்ப சொத்து தவிர்த்து)

அ.ராசா : 88 இலட்சம்

மம்தா பானர்ஜி : 6 இலட்சம்

A.K.அந்தோணி : 1 இலட்சம்

குறிப்பு: உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் 2009ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டபோது தேர்தல் கமிசனுக்கு அளித்த விபரத்தின் படி அவருடைய அசையும்,அசையா சொத்துமதிப்பு 27 கோடியே 51 இலட்சம். http://www.elections.tn.gov.in/ECI/Affidavits/S22/GE/31/CHIDAMBARAM%20P/chidambaram_SC7.jpg

வெள்ளி, 3 செப்டம்பர், 2010

FCI குடோன்களில் வீணாகும் உணவு தானியம்

இந்திய உணவு தானிய கிடங்குகளில் (FCI) கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 10 இலட்சம் டன்கள் அளவிற்கு உணவுதானியங்கள் வீணாக்கப்பட்டுள்ளன. வறுமைக்கோட்டிற்கு கீழும் மேலும் வாழும் கோடிக்கணக்கான் மக்கள் உணவின்றி பட்டினியாகி கிடக்க, அம்மக்களுக்கு அளிக்க வேண்டிய உணவு தானியத்தை அரசு புழுக்கச்செய்திருக்கிறது. ஐநா வின் சமீபத்திய அறிக்கையின் படி 63 சதவீத இந்தியக் குழந்தைகள் ஒருவேளை உணவின்றி படுக்கைக்கு செல்கின்றன. இந்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் வறுமையைப் போக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன, ஆனால் மக்களின் பசி, பட்டினி தான் இன்னும் தீர்ந்தபாடில்லை.


courtesy: "The Hindu"

தில்லியைச் சேர்ந்த திரு.ஆசிஸ் தேவ் பட்டாசார்யா தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் இந்திய உணவுக் கழகத்திடம் உணவு தானிய இருப்புகளையும் வீணாண விபரத்தையும் கேட்டதன் வாயிலாகவே இச்செய்தியை அறியமுடிகிறது. உச்சநீதிமன்றமும் மத்திய அரசை பட்டினியால் வாழும் மக்களுக்கு வீணாவதற்கு முன்பே உணவு தானியங்களை இலவசமாக மக்களுக்கு வழங்க அறிவுறுத்திய பின்பும் மைய அரசு செயல்படாமல் உள்ளது.

உணவுக்கிடங்குகளை சரியாக நிர்வகித்தாதன் விளைவாக ஒவ்வொரு வருடமும் இலட்சக்கணக்கான அரிசி, கோதுமை, மக்காச்சோளம் மற்றும் நெல் வீணாகிவந்துள்ளது. FCI-யின் அறிக்கையின்படி 1997-2007 க்கும் இடைப்பட்ட காலத்தில் 183,000 டன் கோதுமையும், 395,000 டன் அரிசியும், 22,000 டன் நெல் மற்றும் 110 டன் அளவிற்கு மக்காச்சோளமும் வீணடிக்கப்பட்டுள்ளது. எலிகள் தின்கிற தானியத்தைக் கூட மக்களின் பட்டினியைப் போக்க தர அரசு மறுக்கிறது. உணவுப் பஞ்சம் உற்பத்தி குறைவால் ஏற்பட்டதல்ல மாறாக விநியோக முறையின் கோளாறால் தான்.



இந்தியமக்களின் சராசரி தனிமனிதன் உட்கொள்ளும் உணவுதானியத்தின் அளவு (2005-2008 வரை) 436 கிராம், 1955-1958 க்கும் இடைப்பட்ட காலத்தில் இது 440 கிராமாக இருந்துள்ளது. இது தான் வளர்ச்சியா? இந்திய உணவுக்கழகத்தை நிர்வகிக்கும் விவசாயத்துறை அமைச்சர் தனது துறையைக் கவனிக்காமல் கிரிக்கெட் நிர்வாகத்தை கவனித்துக் கொண்டிருக்கிறார். இப்படிப் பட்ட அமைச்சரவை சகாக்களை இன்னும் நிர்வாகத்தில் வைத்துக்கொண்டு அழகு பார்க்கிறார் தன்னிச்சையாக இயங்கமுடியாத பிரதமர் மன்மோகன்சிங்.

திங்கள், 30 ஆகஸ்ட், 2010

வாழ்க இந்திய ஜனநாயகம்

இந்தியாவில் தங்களுக்கு தாங்களே சம்பளத்தை நிர்ணயிக்கின்ற உரிமை நமது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் தான் இருக்கிறது. ஆளும்கட்சி எதிர்கட்சி என்றபேதம் இல்லாமல் கொஞ்சமும் கூச்சமில்லாமல் 5 மடங்கு சம்பள உயர்வு வேண்டுமாம். அதுவும் அரசுச்செயலாளர்களை விட 1 ரூபாய் அதிகமாக சம்பளம் வேண்டுமாம். மக்களுக்கு பணியாற்ற தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்காமல் தங்களது சம்பளத்தை விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். 543 உறுப்பினர்கள் உள்ள மக்களவையில் இதை இடதுசாரி உறுப்பினர்களைத்தவிர யாரும் எதிர்க்கவில்லை என்பது வியப்பளிக்கவில்லை. பாராளுமன்றத்தில் முதன்முறையாக சம்பளம் ரூ 350 லிருந்து ரூ 400க்கு உயர்த்தப்பட்ட போது AKG என்படுகிற தோழர் A.K.கோபாலன் “நம்மை இதற்காக மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை” என்று சொன்னதோடு உயர்த்தப்பட்ட சம்பளத்தை ஏற்க மறுத்தார்.


courtesy: "The Hindu"

ஆனால் இன்றைய எம்பிக்களின் நிலைமை வேறு, மக்களவையில் 543 உறுப்பினர்களில் 300 எம்பிக்கள் கோடீஸ்வரர்கள்.சென்ற மக்களவையில் 154 உறுப்பினர்கள் கோடீஸ்வரர்களாக இருந்திருக்கிறார்கள், நல்ல வளர்ச்சி தான். நாட்டிலுள்ள தொழிலபதிர்கள், கோடீஸ்வரர்கள் மக்களாலேயே தேர்ந்தெடுக்கப்பட்டு பாராளுமன்றத்திற்கு செல்கிறார்கள். அப்படிப்பட்ட வாய்ப்புகளை நமது நாட்டில் காங்கிரஸ் கட்சியிலிருந்து புதிதாக முளைக்கின்ற கட்சிகள் வரை தருவதற்கு தயாராக உள்ளனர். ஏனென்றால் முதலீடு இல்லாமல் தொழில் இல்லை. பெருமுதலாளிகளின் தொழில் வளர்வதற்கு பாராளுமன்றமும், சட்டத்தை இயற்றுவதற்கும், மாற்றுவதற்கும் அப்பதவி தேவைப்படுகிறது. விஜய்மல்லயா, எம் ஏஎம் ராமசாமி, அம்பானி, நவீன் ஜிண்டால் போன்றோர் பாராளுமன்றத்தில் யாருக்காக பேசுவார்கள். கோடீஸ்வர எம்பிக்களில் முதலிடம் பெறுவது காங்கிரஸ் கட்சி தான் 203 உறுப்பினர்களில் 138 பேரும், இரண்டாவதாக பாஜகவில் 58 உறுப்பினர்களும் கோடீஸ்வரர்களாக உள்ளனர். தேர்தல் காலத்தில் மொத்த எம்பிக்களும் தங்களுடைய சொத்து பற்றிய விபரம் வெளியிட்டபோது அதன் மதிப்பு ரூ3075 கோடி. ஆனால் உண்மையில் இதன் மதிப்பு பல மடங்கு இருக்கும்.

மக்களிடையே இந்த சம்பள உயர்வு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தாலும் இந்திய பத்திரிகைகள் விமர்சித்து தலையங்கம் எழுதவில்லை, மாறாக “டைம்ஸ் ஆப் இந்தியா” வில் இந்திய எம்பிக்களின் சம்பளம் அமெரிக்க செனட்டர்களைவிட 13 மடங்கு குறைவு என செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க செனட்டர்களின் மாத சம்பளம் இந்திய ரூபாயில் 675,203ம், கனடாவில் எம்பிக்கள் இந்திய எம்பிக்களை விட 11 மடங்கு அதிகமாகவும் வாங்குகிறார்கள்.

இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதம் ரூ399,941ம், ஆஸ்திரிலேயாவில் எம்பிக்களுக்கு ரூ442,485ம் வழங்கப்படுகிறது. ஜப்பானில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ரூ684,000ம் சிங்கப்பூர் எம்பிக்கள் ரூ471,364ம் மாத சம்பளமாக வாங்குகிறார்கள்.

பிரான்ஸ் , இத்தாலி, ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் பாராளுமன்ற உறுப்பினர்கள் முறையே ரூ420,000,ரூ329,220,ரூ461,280 மற்றும் ரூ187,560ம் மாத ஊதியமாக பெறுகிறார்கள்.

அமெரிக்க செனட்டர்களின் சம்பளத்தையும் இந்திய எம்பிக்களின் சம்பளத்தையும் பற்றி எழுதிய பத்திரிக்கை சாதாரண அமெரிக்க பிரஜையின் வாழ்க்கைத்தரத்தையும் இந்திய குப்பன் சுப்பனின் வாழ்க்கைத் தரத்தையும் ஒப்பிடவேண்டும். ஒருவேளை இது முதல்வர் கருணாநிதியின் யோசனையாக இருக்கலாம். அவரும் தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஊதிய உயர்வையும் சென்னைக்கு அடுத்தபடியாக முக்கிய இடத்தில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வீட்டுமனை வழங்க ஏற்பாடுசெய்தவர் தானே. மக்கள் பணத்தை தன் பெயரால் இலவசத்திட்டம் என்று அறிவிக்கிற முறை மன்னராட்சி காலத்தில் கூட இருந்ததில்லை. கொஞ்ச நாட்களில் தமிழ்நாடே கலைஞர் மாநிலம் என்று சூட்டபட்டால் வியப்பில்லை.வாழ்க இந்திய ஜனநாயகம்!!!

வியாழன், 1 ஜூலை, 2010

தினமணியின் தலையங்கத்தின் சிறப்பு

ஒரு பத்திரிக்கையின் தரம், அதன் தலையங்கத்தின் பொருள் குறித்து தான் அறியப்படுகிறது. செய்திகளை பல பத்திரிக்கையாசிரியர்கள் எழுதினாலும், பெரும்பாலான் செய்திகள் செய்தி நிறுவங்களிடமிருந்து பெறப்படுகிறது. எந்த செய்தியை தலைப்புச்செய்தியாக வைக்கவேண்டும் எந்த செய்தியை பெரிய எழுத்தில் எழுதவேண்டும்,எந்த செய்தியை மறைக்கவேண்டும் என்பதை முடிவு செய்வது அதன் எடிட்டர் “முதன்மை ஆசிரியர்” தான். அவர் தான் அந்தப்பத்திரிக்கையை பிரதிபலிக்கிறார் என்று சொல்லலாம். தமிழில் வருகிற எல்லா செய்தித்தாளிலும் “தலையங்கம்” வருவதில்லை. தினமணியில் மட்டும் தான் தலையங்கம் எழுதுகிற வழக்கம் இருக்கிறது. தினத்தந்தி, தினமலர்,தினகரன் போன்ற பத்திரிகைகள் தலையங்கம் எழுதுவதில்லை. கட்சி சார்பு பத்திரிக்கைகளான முரசொலி, தீக்கதிர், ஜனசங்கம் போன்றவைகளில் தலையங்கம் பகுதி உள்ளது.

மீடியா என்பது குறிப்பாக பத்திரிக்கைகள் இந்திய மக்களாட்சியில் நான்காவது தூண் என்று சொல்லப்படுவதுண்டு. அரசு எவ்விதம் செயல்படுகிறது, மசோதாக்களின் அம்சம் என்ன, மக்களுக்கு நலத்திட்டங்கள் சென்றடைகிறதா எல்லாவற்றையும் கண்காணிப்பது பத்திரிக்கைகள் தான். தொலைக்காட்சி ஊடகங்கள் மக்களுக்கான பொழுதுபோக்கு சாதனங்களாக மட்டுமே இருக்கின்றன. இன்னும் சொல்லபோனால் இந்தியாவில் முண்ணனியில் இருக்கின்ற பெரும்பாலான தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் மக்களை செய்திகள் பார்ப்பதிலிருந்து பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை மட்டுமே பார்க்கசெய்பவையாக இருக்கின்றன. பிரத்யேகமாக செய்திகளுக்காக உள்ள ஆங்கில தொலைக்காட்சி சேனல்கள் பரபரப்பு செய்திகள் தருபவையாக அதன் மூலம் “ரேட்டிங்” பெற்று அதிக விளம்பரம் பெறும் நோக்கமே உள்ளது. எனவே பத்திரிக்கைகள் தான் முழுமையான செய்திகளுக்காகவே செயல்படுகின்றன என்று கூறமுடியும்.

தினமணியின் பெரும்பாலான வாசகர்கள் அதன் தலையங்கத்திற்காகவும்,நடுப்பக்க கட்டுரைகளுக்காகவும் உள்ளனர். நானும் தினமணியின் வாசகன் ஆனது அதன் கட்டுரை, தலையங்கத்திற்காகத்தான். மேலும் குறைவான விளம்பரங்கள். ஒரு பத்திரிக்கை வாசகர்களையும், விளம்பரத்தையும் சமநிலைப் படுத்தவேண்டும். விளம்பரங்களின் வருவாய்க்காகவே மட்டுமே பத்திரிக்கை நடத்தினால் வாசகர்களை இழக்க நேரிடும். தினமணியின் பெரும்பாலான தலையங்கங்கள் ”பெரும்பான்மை”மக்களின் நலன்களை பிரதிபலிப்பதாகவே இருக்கும். அந்த சமயத்தில் அரசின் கொள்கைகளை விமர்சிக்கவும் துணிவுவேண்டும். சில பத்திரிகைகள் செய்திகளை படித்தவுடன் அதன் “சார்பு நிலை” தெரிந்துவிடும். சில செய்தித்தாள்கள் ஆட்சியாளர்கள் எந்தக் கட்சியோ அதை ஆதரிக்கும் நிலை எடுக்கிறார்கள். அரசையும் ஆட்சியாளர்களையும் பகைக்கவேண்டாம், அரசு கொடுக்கும் விளம்பரவருவாய் பாதிக்கும், சில கெடுபிடிகளையும் சந்திக்கவேண்டும்.

சென்ற பாரளுமன்றத்தேர்தலையொட்டி மிகவும் பரப்பானவை “PAID NEWS" அதில் மஹாராஷ்டிர முதலமைச்சர் சிக்கியுள்ளார். paid news என்பது பத்திரிக்கைகளுக்கு அரசியல் கட்சியோ, தனிநபரோ பணம் கொடுத்து அவர்கள் ஆதாயம் பெறுகிற வடிவில் செய்திகளை வெளியிடுவது தான். இதன் மூலம் பத்திரிக்கைகள் அதன் நோக்கத்தை சிதைக்கின்றன. இது குறித்து மூத்த பத்திரிக்கையாளர் சாய்நாத் நிறைய கட்டுரை எழுதியுள்ளார். இனி தினமணியை பாராட்டிவிட்டு கீழேயுள்ள தலையங்கத்தை பார்ப்போம்...........



ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது' என்று கிராமங்களில் பழமொழி சொல்வார்கள். அந்தச் சொலவடை எதற்குப் பொருந்துமோ இல்லையோ, நமது மத்திய ஆட்சியாளர்களுக்குப் பொருந்தும். பல பொருளாதார மேதைகள் (பேராசிரியர்கள்?) நம்முடைய தேசத்தின் நிதி நிலைமையைக் கண்காணிப்பதாலோ என்னவோ, பல அடிப்படை நடைமுறை உண்மைகளையும் தேவைகளையும் தெரிந்து கொள்ளாமல் தொடர்ந்து தவறான முடிவுகளை மட்டுமே எடுக்கிறார்கள் என்று தோன்றுகிறது.

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கட்டுக்கடங்காமல் அதிகரித்தது என்பதைக் காரணம் காட்டிக் கடந்த ஆண்டு பெட்ரோல், டீசல் விலையைக் கணக்கு வழக்கில்லாமல் உயர்த்தியவர்கள், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்து ஏறத்தாழ பழைய நிலைமைக்கு வந்தபோது, அதே அளவுக்கு விலையைக் குறைத்தார்களா என்றால் இல்லை. ஏதோ பெயருக்குக் குறைத்தார்கள். அதிக லாபத்தை நமது எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் அள்ளிக் குவித்தன.

இப்போது சர்வதேசச் சந்தையைக் காரணம் காட்டி மீண்டும் ஒரு முறை பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயுவின் விலையைக் கணிசமாக உயர்த்தியிருக்கிறது மத்திய அரசு. இது போதாது என்று, பெட்ரோல் விலை மீது இருந்த கட்டுப்பாடுகளை முற்றிலுமாக அகற்றி, இனி விலை நிர்ணயம் சர்வதேசச் சந்தையையும், எண்ணெய் விற்பனை நிறுவனங்களையும் சார்ந்து இருக்கும் என்று தீர்மானித்திருக்கிறது.

மேலெழுந்தவாரியாகப் பார்த்தால், இதில் தவறில்லாததுபோலத் தோன்றும். அரசு நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதால் மக்களின் வரிப்பணம்தானே வீணாகிறது என்கிற போலி வாதம் முன் வைக்கப்பட்டு ஏதோ புத்திசாலித்தனமாக நிதி நிர்வாகம் நடத்தப்படுவது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது மத்திய அரசு. உண்மை நிலை அதற்கு நேர் எதிரானது.

பெட்ரோலியப் பொருள்களின் உள்நாட்டு விற்பனை விலை கட்டுப்படுத்தப்பட்டு, சர்வதேசச் சந்தையில் விலை உயரும்போது, பெட்ரோலிய விற்பனை நிலையங்கள் நஷ்டமடைகின்றன என்பதுதான் அரசு முன்வைக்கும் வாதம். ஆனால், இந்த விலையேற்றத்தால் இந்த நிறுவனங்களின் ஒட்டுமொத்த லாபம் பாதிக்கப்பட்டு அவை நஷ்டத்தில் மூழ்குகிறதா என்றால் இல்லை.

பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு போன்ற பொருள்கள் மட்டும்தான் கட்டுப்படுத்தப்பட்ட விலையில் விற்கப்படுகின்றன. இந்த நிறுவனங்களின் என்ஜின் எண்ணெய் போன்ற ஏனைய பொருள்களுக்கு எந்தவித விலைக் கட்டுப்பாடுகளும் கிடையாது. ஆகவே, அவற்றிலிருந்து கிடைக்கும் அதீத லாபம், ஏனைய விலை கட்டுப்படுத்தப்பட்ட பெட்ரோலியப் பொருள்களின் விலை வித்தியாசத்தால் ஏற்படும் நஷ்டத்தை ஓரளவு சரிகட்டி விடுகின்றன. லாபத்தில் சிறிது நஷ்டம் ஏற்படுமே தவிர, நிறுவனமே நஷ்டத்தில் தள்ளப்பட்டுவிடும் அபாயம் கிடையாது என்பதை கடந்த நாற்பது ஆண்டு கால அனுபவம் உறுதி செய்கிறது.

பிறகு ஏன் இந்த திடீர் விலை உயர்வு? இப்படி ஒரு முடிவை நமது மத்திய அரசு எடுக்க வேண்டிய அவசியம்தான் என்ன? இருக்கிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை, பெட்ரோலியப் பொருள்களின் தயாரிப்பு மற்றும் விற்பனையில் அரசு நிறுவனங்களான இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் கம்பெனி, இந்தோ பர்மா பெட்ரோலியம் கம்பெனி ஆகியவை மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தன. அப்போது, சர்வதேசக் கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்படும் நஷ்டத்தையோ, லாபத்தில் குறைவு ஏற்பட்டாலோ, பணக்காரர்கள் மீது சுமத்தப்படும் வரிகள் மூலம் ஈடுகட்ட முடிந்தது.

மேலும், அரசுத்துறை பெட்ரோலிய நிறுவனங்கள், என்ஜின் எண்ணெய் போன்ற ஏனைய பொருள்களின் விற்பனையில் கிடைக்கும் லாபத்தால் தங்கள் நஷ்டத்தை ஈடுகட்டி வந்தன. இப்போது, ரிலையன்ஸ், எஸ்ஸôர் போன்ற தனியார் நிறுவனங்கள் பெட்ரோலிய விநியோகத்திலும், எண்ணெய் சுத்திகரிப்பிலும் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்குத் தங்களது நஷ்டத்தை ஈடுகட்ட, அல்ல அல்ல, லாபத்தில் ஏற்படும் குறைவை சரிகட்ட அரசு உதவாமல் இருந்தால் தகுமா? இந்தத் தனியார் நிறுவனங்கள் தங்களது லாபம் குறைந்தால் அதை நஷ்டம் என்று கூறிக் கூக்குரலிடுவார்கள் என்றுகூடத் தெரியாத, அல்லது தெரிந்தும் தெரியாதவர்கள் போல நடிப்பவர்கள் நமது இன்றைய ஆட்சியாளர்கள் என்றுதான் கூறத் தோன்றுகிறது.

ஒருபுறம், கணக்கு வழக்கில்லாமல் தனியார் வாகன உற்பத்தி நிறுவனங்களை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் நாளுக்கொரு மாடல் பொழுதுக்கொரு புதிய ரக வாகனம் என்று தயாரித்து விற்பனை செய்ய அனுமதிக்கிறது அரசு. அந்த நிறுவனங்களின் விற்பனையை உறுதிப்படுத்த வங்கிகளைக் கடனை வாரி வழங்கச் செய்து, மத்தியதரக் குடும்பங்களைக் கடனாளியாக்கித் தவிக்க வைக்கிறது.

இன்னொரு புறம், பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு என்று எதையும் விட்டு வைக்காமல் விலையை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. பொதுப் போக்குவரத்தையாவது அதிகரித்துக் குறைந்த கட்டணத்தில் பஸ்களும், மெட்ரோ ரயில்களும் இயக்கப்படுகின்றனவா என்றால் கிடையாது. வாங்கும் சம்பளத்தின் கணிசமான பகுதியை வாகன கடனுக்கான தவணைத் தொகையையும், வட்டியையும் அடைப்பது போதாது என்று பெட்ரோலுக்கும், டீசலுக்கும் செலவு செய்து விட்டு, வயிற்றில் ஈரத் துண்டைப் போட்டுக் கொண்டு காலம் கழிக்க வேண்டிய கதிக்கு நடுத்தர வகுப்பு இந்தியனைத் தள்ளியிருக்கிறார்களே, இதுதான் இவர்கள் படித்த பொருளாதாரம் முன் வைக்கும் தீர்வா?

தனியார் நிறுவனங்களின் லாபம் குறைந்துவிடாமல் பாதுகாக்கப் பொதுமக்கள் தலையில் பாரத்தை சுமக்க வைப்பது என்ன புத்திசாலித்தனம்? இதனால் ஏற்பட இருக்கும் தொடர் விளைவான விலைவாசி உயர்வு, சராசரி இந்தியரின் வாழ்க்கையை மேலும் கடினமாக்கப் போகிறதே, அதைப் பற்றி அரசின் பொருளாதார மேதைகளுக்குக் கவலையே கிடையாதா?

என்ன அரசோ? என்ன ஆட்சியோ? என்ன நிர்வாகமோ? கோபம் வருகிறது...!

சனி, 26 ஜூன், 2010

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையேற்றம்

மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி நாட்டு மக்களுக்கு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகளை உயர்த்தி அதிர்ச்சி கொடுத்துள்ளது. கச்சா எண்ணேயின் விலை சர்வதேச அளவில் உயர்ந்திருக்கிறதா என்று பார்த்தால் அதற்கான அறிகுறி இல்லை. எப்போதும் போல தங்கத்தின் விலை ஊசலாடுவதைப் போல் தான் குரூட் ஆயிலின் விலையும் இருக்கிறது. பின்னர் ஏன் மத்தியஅரசு ஒருலிட்டர்பெட்ரோலுக்கு ரூ.3.50ம் ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.2.00ம் சமையல் எரிவாயு சிலிண்டருக்குக்கு ரூ.35ம் உயர்த்தியது என்று பார்த்தால் அதற்கு பின்னால் Dr. Kirit Parikh வின் recommendataion தான் காரணம்.


பெட்ரோலியப் பொருட்களை விற்பனை செய்யும் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் கச்சா எண்ணை விலை உயர்வால் கடுமையான நிதி நெருக்கடியில் நஷ்டத்தை நோக்கி செல்வதால் இந்த விலை உயர்வாம். நாட்டில் ஏற்கனவே 17% பணவீக்கத்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்து சாமான்யமக்கள் அல்லல்படுகின்றனர். ஏப்ரல் மாதத்தில் தான் பட்ஜெட் முடிந்தவுடன் பெட்ரோல்,டீசல் விலையை “ஒரு ரவுண்ட்” விலை ஏற்றினார்கள். இதற்கு திமுக மம்தா, சரத்பவார் போன்றவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையாம். இவர்களுக்கு மட்டும் இந்தக் கொள்ளையில் பங்கு இல்லையா் என்ன? காரணம் சமையல் எரிவாயுக்கு இன்னும் மானியம் தொடர்கிறதாம்.

இந்த விலையுயர்வு வந்தவுடன் பொதுமக்கள் தரப்பில் கடுமையான கோபம் கொண்டிருப்பார்கள், ஆனால் இந்திய கார்ப்பரேட்டுகளின் அமைப்பான CII, FICCI விழுந்தடித்து வரவேற்றுள்ளது, ஏனென்றால் இதற்கு முக்கிய காரணமே தனியார் எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் கடை திறப்பதற்குத்தானே இந்த விலை உயர்வு. ரிலையன்சும் எஸ்ஸார் நிறுவனமும் நாடெங்கும் சில்லரை விற்பனை நிலையங்களை திறந்துவிட்டு பின்னர் கட்டுபடியாகாமல் மூடிவிட்டது. இப்போதைய “derugulaton" ல் மீண்டும் அவர்கள் சந்தையில் வருவார்கள். சென்ற மே மாதத்தில் தான் தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக CNG எனப்படும் கேஸ் விலையை $1.8 / mmBtu விலிருந்து $ 4.2 வுக்கு உயர்த்தியது இதன் மூலம் கிருஷ்னா-கோதாவரி பேசினிலிருந்து கிடைக்கும் எரிவாயுவை ரிலையன்ஸ் நிறுவனம் $ 4.2 /mmBtu விற்கு விற்றுக்கொள்ளலாம். இயற்கை எரிவாயுவை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் மத்தியரசின் மின்சாரம், உரம் ஆகிய நிறுவனங்களுக்கு ரூ8000 கோடி அதிக சுமையை ஏற்படுத்தியுள்ளது, அதுமட்டுமல்ல டெல்லி, மும்பை போன்ற பெரு நகரங்களில் எரிவாயு மூலம் போக்குவரத்தும் இயங்குகிறது, இதனால் கடைசியில் மக்கள் தலையிலும் சுமை. இந்திய அரசின் பொருளாதார கொள்கைகள் “வர்க்க” ரீதியில் வகுக்கப்படுவது தெளிவாக தெரிய ஆரம்பித்துவிட்டது.


பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த நிதியாண்டில் லாபமே ஈட்டியுள்ளது, அது நஷ்டமடைந்தால் மத்திய அரசு மானியம் அளிக்கலாம். ஏனென்றால் எண்ணெய் நிறுவனங்கள் வாயிலாக customs duty, excise duty, corporate tax, Dividend, sales tax என்று வருடத்திற்கு ரூ 1,61,798 கோடி (2008-09) கிடைக்கிறது. இதிலிருந்து அந்த நஷ்டத்தை தாங்கினால் யாருடைய குடி முழுகிப்போய்விட்டது. மத்தியரசு உண்மையிலேயெ மக்கள் மீது அக்கறை கொண்டால் தான் விதித்த வரியை சர்வ தேச அள்வில் கச்சா எண்ணெய் உயரும் போது மாற்றியமைக்கவேண்டும். பெட்ரோலியப் பொருட்களின் உண்மையான உற்பத்தி விலையை மத்திய அரசு தெரிவிக்கவேண்டும். சர்வதேச விலையில் எரிவாயுவின் விலை ஒரு டன்னுக்கு 700 டாலர் விற்பனையாகிறது. அதை இந்தியபணத்திற்கு மாற்றி போக்குவரத்து செலவைச் சேர்த்தால் 14.2 கிலோ சிலிண்டருக்கு அதிகபட்சமாக ரூ.500 ஆகிறது, இதில் மத்தியரசு மானியம் கொடுப்பது உண்மைதான். ஆனால் டீசலுக்கும் மானியம் தருகிறோம் என்கிறார்கள். சென்ற ஆண்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் வரிகள் இல்லாமல் 28ரூ தான். பெட்ரோலுக்கு மேலே எவ்வளவு சுமைகள்...

Excise duty: Rs 14.35
Education Tax: Rs 0.43
Dealer commission: Rs 1.05
VAT: Rs 5.5
Crude Oil Custom duty: Rs 1.1
Petrol Custom: Rs 1.54
Transportation Charge: Rs 6.00

பொதுத்துறையை வலுப்படுவதற்காக இந்த விலை உயர்வு இல்லை, ஏற்கனவே Disinvestment மூலம் தனியார்மயப் படுத்துவதால் அந்த நிறுவனங்கள் லாபம் பார்த்தேயாக சூழலில் உள்ளது.இந்தியா தன்னுடைய கச்சா எண்ணெய்யின் 74 சதவீதத் தேவையை இறக்குமதியின் மூலம் பெறுகிறது. ஆனால் உள்நாட்டில் கிடைக்கும் 26 சதவீதம் எண்ணெய் வளத்தை பொதுத்துறை நிறுவங்களே துரப்பணம் செய்யலாமே. கையில் உள்ள நெய்யை விட்டு விட்டு வெண்ணெய்க்காக ONGC, GAIL போன்ற நிறுவனங்கள் சூ்டானுக்கும், வெனிசூலாவிற்கும், ரஷ்யாவிற்கும் அலைகின்றன. பொதுத்துறை நிறுவனங்கள் லாபமானாலும் நஷ்டமானாலும் சந்தையில் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கச்செய்கின்றன. இந்தியாவில் லாபம் இல்லாவிட்டால் தனியார் நிறுவனங்கள் உடனே மூடிவிடுவார்கள். பத்தாண்டுகளுக்கு முன்பு காசு கொடுக்காமல் சாலையில் பயணிக்க முடியாது என்று கம்யூனிஸ்ட்கள் கூறினார்கள் அது வேடிக்கையாக இருந்தது, ஆனால் இன்று தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கம் செலுத்தாமல் பயணிக்கமுடியவில்லை. எத்தனையோ வரிகள் சாலைகள் அமைப்பதற்கு அதை டீசலில்,பெட்ரோலில் செஸ் என்று விதிக்கிறார்கள். ஆனாலும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது என்று சாலை, விமானநிலையம், ஹார்பர் எல்லாவற்றையும் தனியார்மயமாக்குகிறார்கள். எங்கே சென்று முடியுமோ தெரியவில்லை.

வெள்ளி, 25 ஜூன், 2010

ஆப்கனில் கனிம வளங்கள்

சமீபத்திய செய்திகளில் ஆப்கானிஸ்தானில் சுமார் 1 டிரில்லியன் டாலர் மதிப்பிலான கனிமவளங்கள் தோண்டப்படாமல் உள்ளன என்பது தான். உடனே ஆப்கானிஸ்தான் உலக சுரங்கங்களின் மையமாக திகழும் அந்த நாட்டின் பொருளாதாரம் உயர்ந்துவிடும் என்ற செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது அல்கயிதா தீவிரவாதத்தை ஒடுக்க போர் தொடுத்தபோது அது இரட்டை கோபுரத்தை தாக்கிய உலக மகா தீவிரவாதத்தை அழிப்பதற்குத் தான் ஆப்கனில் தனது ராணுவத்தை நிலை நிறுத்திவைத்துள்ளது என நம்பப்பட்டது ஆனால் நாளடைவில் வறட்சிமிக்க இயற்கைவளமில்லாத, ஏன் தன்னுடைய உள்நாட்டிற்கே தேவையான உணவளிக்க முடியாத ஒரு நாட்டில் அமெரிக்காவும் அதன் கூட்டணியினரும் ஏன் டேரா போடவேண்டும் என யோசிக்கவைத்தது. ஒருவேளை ஆசியப் பிராந்தியத்தில் பொருளாதாரரீதியாகவும் ராணுவரீதியாகவும் வளர்ந்து வருகிற சீனாவை கண்காணிக்கவும் அதேவேளை இந்தியாவையும் கண்காணிக்கலாம் என ஆப்கனில் தன்னுடைய ராணுவத்தை வைத்திருக்கிறதோ என ஐயம் ஏற்பட்டது. கடைசியில் அந்த நாட்டில் புதைந்துகிடக்கிற கனிம வளங்கள் தான் அதற்கு காரணம் என புலப்படுகிறது.



ஈராக் நாட்டை சதம்ஹூசேன் கிருமி,ரசாயன ஆயுதங்கள் வைத்துள்ளார் என ஆரம்பித்து அந்த நாட்டின் எண்ணெய் வளத்தை சூரையாட போர் தொடுத்து சதாம் கொல்லப்பட்டு வேறு அவர்கள் பாணியிலான ஜனநாயக ஆட்சி அமைந்தபின்பும் அமெரிக்க ராணுவம் விலக்கிக்கொள்ளப்படவில்லை. அதே நிலைமை தான் ஆப்கனில் ஏற்படும்.

ஒரு வேளை ஆப்கன் மக்கள் புதிய கனிமவளங்கள் மூலம் தங்கள் நாடும் மக்களும் வளம்பெறுவார்கள் என்று நினைத்தால் அவர்கள் எண்ணம் தவறாக இருக்கும். ஆப்பிரிக்க ஏழைநாடுகளில் காங்கோ,சியாரோ-லியோன், நைஜீரியா போன்றவற்றில் கனிமவளங்கள், தங்கச்சுரங்கம், கச்சாஎண்ணெய் வளம் நிறைந்திருந்தாலும் உள் நாட்டுப் போர்களால் அந்த நாட்டின் மண்ணின் மைந்தர்கள் அடுத்த வேளை உணவிற்காக அல்லல் படுகின்றனர். ஆனால் உள் நாட்டுப் போர்களின் மூலம் பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்கு ஒன்றும்குறைவில்லை. இன்று மூன்றாம் உலக நாடுகளில் அன்னியமூலதனம் என்ற பெயரால் அந்த நாட்டின் செல்வத்தை போர் தொடுக்காமல் பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையடித்துச் செல்கின்றன. இந்தியாவில் கச்சா எண்ணெய் வளம் குறைவாக இருந்தாலும் கனிமவளத்திற்கு குறைவில்லை, ஆனால் இந்த இயற்கை வளம் நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படாமல உலகமயம், தனியார்மயம் என்ற கொள்கையால் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சுரங்கங்களை குத்தகைவிட்டுள்ளனர். ஜார்க்கண்ட், சத்தீஸ்கர்,ஒரிஸ்ஸா போன்ற மாநிலங்களில் இரும்பு, நிலக்கரி, காப்பர், பாக்சைட் போன்ற கனிமங்கள் அதிகமாக இருக்கின்றன. பழங்குடியினர் பெருமளவு உள்ள இந்த பகுதிகளில் தான் கனிமவளங்கள் உள்ளன, அந்த மக்களை காடுகளிலிருந்து விரட்டிவிட்டு அந்த கனிமவளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்க்கின்றனர்.

இந்தியாவில் கிடைக்கக்கூடிய 60% பாக்சைட்,95% குரோமைட், 90% நிக்கல், 70% கிராபைட், 67% மாங்கனீசு, 30% இரும்புத்தாதன் மற்றும் 25% நிலக்கரி ஒரிஸ்ஸாவில் கிடைக்கிறது. அந்த மாநிலம் ஒன்றும் வளர்ச்சி கண்டுவிடவில்லை. அங்குதான் பழங்குடிமக்கள் பட்டினியால் இறந்தனர். ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மாநிலங்களிலும் அதே நிலைமை தான். பாஜக அரசு சிறிய மாநிலங்களாக பிரிக்கப்பட்டால் அந்த மாநிலங்கள் நன்றாக முன்னேறும் என்று சிறிய மாநிலங்களாக மாற்றியமைத்தனர், ஆனால் பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையடிக்கவும் அதற்கு உடந்தையாக மதுகோடா வகையாறாக்கள் ஊழலில் நாறியதும் இந்த நாடறியும். ரெட்டி சகோதரர்கள் அனுமதி பெறாமல் ஆந்திராவிலும் கர்நாடகாவிலும் சுரங்கங்கள் அமைத்து நாட்டிற்கு பெருமளவு அந்நிய செலவானியை? களவானித்தனமாக ஈட்டுத்தந்தனர். இதையெல்லாம் பார்க்கும் போது இயற்கை வளங்களே வேண்டவே வேண்டாம் என எண்ணத்தோன்றுகிறது.உலகமே இன்று கனிமவளங்களுக்காகவும் கச்சா எண்ணெய்க்காகவும் தேடியலைகிறது. ஆனால் இந்தியாவில் கிடைக்கின்ற கனிமவளத்தை பன்னாட்டு நிறுவங்களுக்கு சொற்ப பணத்திற்காக ஏலம்விடப்படுகிறது. கிருஷ்னா-கோதாவரி ஆற்றுப்படுகையில் கிடைக்கும் எண்ணெய் வளத்தை ரிலையன்சிற்கு கொடுத்துவிட்டு GAIL, ONGC போன்ற பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சூடானுக்கும், ரஷ்யாவிற்கும் ஓடுகிறது. இப்போது காப்பர், அலுமினியம் போன்றவற்றை Vedanta விற்கு கொடுத்துவிட்டு இதற்காக ஆப்கனில் உள்கட்டமைப்பை இந்தியா அமைக்கப்போகிறது.

வளர்ந்துவருகிற இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளே பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாறிவரும்போது அமெரிக்காவையே நம்பியிருக்கிற ஆப்கானிஸ்தானால் என்ன செய்யமுடியும்.