வியாழன், 27 செப்டம்பர், 2012

சாமான்ய மனிதர்களைப் பற்றி கவலைப் படாத தேசம்.



நேற்று சென்னை திருவிக நகரில் பாதாளச்சாக்கடை அடைப்பை சுத்தம் செய்யும்போது ஈடுபட்ட தொழிலாளர் ஒருவரும் மாநகராட்சி அதிகாரி ஒருவரும் பலியாகியுள்ளனர். இதை எதிர்பாராத சம்பவம் , விபத்து என்றெல்லாம் காவல்துறை வழக்குப்பதிவு செய்துவிட்டுப் போய்விடலாம். ஆனால் இது கொலை, அரசு செய்த கொலை அதனால் யாருக்கும் தண்டனை கிடையாது. மனிதக்கழிவை மனிதர் அள்ளும் நிலையை நீதிமன்றம் தடைசெய்துவிட்டதாக செய்திகளில் வருகின்றன. ஆனால் தடையை மீறுவது சமூக விரொதிகளோ, லாபம் ஒன்றே குறிக்கொளுடன் செயல்படும் முதலாளியும் அல்ல. சட்டத்தை உருவாக்கி அமல்படுத்துகிற அரசு இயந்திரம். இது தான் முதல்முறையா? என்றால் பட்டியலுக்குள் செல்லமுடியாத அளவிற்கு மரணங்கள் ! கொலைகள் நிகழ்ந்துள்ளன. இந்தியா வல்லரசு நாடுகளுடன் போட்டிபோட வேண்டும் அந்நிய நாட்டு மால்கள் இங்கே கடைவிரிக்கவேண்டும், என்று சொல்வோர்கள் யாரும் சாக்கடை அடைப்பை நீக்கம் செய்ய இயந்திரம் வேண்டுமென்று சொல்லவில்லை. ஏன் இந்த அலட்சியம், அரசுக்கு, ஆட்சியாளர்களுக்கு. அதை செய்வது இழிந்த சாதி என்பதால் தான்.


இச்சம்பவத்தில் ஒரு காண்ட்ராக்ட் தொழிலாளி கொல்லப்பட்டுள்ளார், அவரை மீட்க உதவி செய்த பொறியாளரும் கொல்லப்பட்டுள்ளார். பெரும்பாலான சம்பவங்களில் அடைப்பு நீக்கும் தொழிலாளிகள் தான் உயிரிழக்கிறார்கள். இதைப்பற்றி விழிப்புணர்வு அவர்களுக்கு இல்லை,  வேலைவாங்கும் நிர்வாகம் அந்த வேலையில் என்ன ஆபத்து இருக்கிறது என்று தெரியப்படுத்துதலும் இல்லை. 19ம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளில் ஆலைப்பணிகளில் தொழிலாளி இறந்தால் அவனைத்தூக்கி வீசிவிட்டு இன்னொருவனை அதெ பணியில் அமர்த்திக்கொள்வார்கள் எந்த இழப்பீடும் தரத்தேவையில்லை. அந்த நிகழ்ச்சி கண்ணெதிரே நம் நாட்டில் நடந்துவருகிறது. அதில் முறைசாராத் தொழிலாளர்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள். 1990களுக்குப் பின் புதிய வேலைவாய்ப்புகள் எல்லாம் காண்ட்ராக்ட் மயம்தான். அது அரசு நிறுவனமாக இருந்தாலும் தனியார் நிறுவனமாக இருந்தாலும் ஆபத்தான பணிகளை செய்வது ஒப்பந்தத் தொழிலாளர்கள்தான். ஏனென்றால் நிர்வாகத்தை கேள்வி கேட்டால் அதே வேலையைச் செய்ய ஒருவன் வரிசையில் நிற்கிறான். பணிப்பாதுகாப்பும் இல்லை, உயிருக்கு பாதுகாப்பும் இல்லை. இழப்பீடும் வழங்கத் தேவையில்லை.

“இன்னொரு முறை நான் பிறக்க வாய்ப்பில்லைதான். ஆனால் அப்படி ஒரு வாய்ப்ப்ய்க் கிடைத்து இப்பூமியில் பிறக்க நேர்ந்தால் ஒரு துப்புரவுத் தொழிலாளியின் குடும்பத்தில்தான் பிறக்க விரும்புகிறேன். மனிதர் மலத்தை மனிதர் அள்ளும் மனிதாபிமானமற்ற , சுகாதாரமற்ற, வெறுக்கத்தக்க பணியிலிருந்து அவர்களை விடுவிப்பதற்காகவே அப்பிறவியைப் பயன்படுத்துவேன்” என்று மகாத்மாகாந்தி ஒரு முறை எழுதினார்.  தான் இன்னொருமுறை பிறக்கமாட்டேன் என்று மகாத்மாவுக்குத் தெரியும் போல.

இந்தியா- பாகிஸ்தான் பிரிவினையில் ஏராளமானவர்கள் இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்கும் புலம் பெயர்ந்தார்கள். பொறுப்புக்கு வந்ததும் முதல் காரியமாக பாகிஸ்தான் அரசு தாழ்த்தப்பட்ட , தீண்டத்தகாத மக்கள் இந்தியாவுக்கு புலம் பெயர்வதை உடனடியாகத் தடைசெய்து உத்தரவு போட்டது. எல்லா தாழ்த்தப்பட்டோரும் இந்தியா சென்றுவிட்டால் கக்கூஸ் அள்ளுவது யார்? சாக்கடை அள்ளுவது யார்? அவர்கள் எஸ்மா சட்டத்தில் கைது செய்யப்பட்டு கக்கூஸ்களுக்கு அனுப்பபட்டனர். இந்தியாவிலும் இது தான் நடந்தது. சுகாதாரப் பணி செய்த தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் முஸ்லீம் எஜமானர்களைப் பின்தொடர்ந்து செல்ல எல்லையில் நின்றனர்.

யுவா சுவாங் இந்தியாவுக்கு வந்தபோது நகரங்கள் இங்கே சுத்தமாக இருப்பதாகவும் கழிவுகள் சுத்தம் செய்ய தனி ஏற்பாடுகள் இருப்பதாகவும் அப்படி கழிவுகளைச் சுத்தம் செய்யும் மனிதர்கள் நகர மக்களின் சுகாதாரத்தைக் கணக்கில் கொண்டு நகருக்கு வெளியே தூரமாகக் குடியமர்த்தபட்டுள்ளதாகவும் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார். இன்றும் அந்த வேலைகளை செய்யும் அந்த மக்கள் ஆகாத மக்களாகத் தள்ளித்தான் சேரிகளில் வைக்கப்பட்டுள்ளனர்.

அருந்ததியர்கள் தமிழகத்தில் பலபெயர்களில் அழைக்கப்படுகிறார்கள். பகடை, தொம்மான், மாதிகா, மாதாரி, சக்கிலியர், தோட்டி, ஆதி ஆந்திரர், ஆதி கர்நாட்கர் என. இவர்களுக்கு எந்த உடமையும் இல்லை. இந்த தொழிலிலிருந்து விடுபட்டால் மாற்று ஏற்பாடு செய்வதற்கு அரசுகள் தயாராக இல்லை. இடஒதுக்கீட்டின் பயனை பெறமுடியவில்லை. கல்விக்கூடங்களுக்குச் சென்று அங்கேயும் பள்ளிக்கூட கக்கூஸை ஆசிரியர்கள் சுத்தம் செய்யச் சொன்ன சம்பவங்கள் நிறைய உண்டு. சக உயர்சாதி மாணவர்கள் இவர்களுடன் பழகுவதில்லை.  ஆரம்பக்கல்வியோடு நின்று போன குழந்தைகள் நிறைய உண்டு. அப்புறம் எங்கே அரசு வேலைக்கு போட்டிபோடுவது. தனியார் நிறுவனக்கள் கண்ணுக்குத் தெரியாமல் சில சாதிகளுக்கு திறமையிருந்தும் வேலை தருவதில்லை.

நாளும் பொழுதும் நரகலையே பார்த்துப் பார்த்து விதவிதமான ஒவ்வாமை உணர்வுகளுக்கு ஆளாகும் இத்தொழிலாளிகள் வெத்திலை போட்டும் சாராயம் குடித்தும் மனம் அழிக்கிறார்கள். சமைத்துச் சாப்பிடும் மனநிலையே வாய்க்காமல் ஓட்டல்களில் ஏதாவது வாங்கிச் சாப்பிடும் பழக்கம் ஏராளமானவர்களுக்கு இருக்கிறது.  குடும்பமே ஓட்டலில் சாப்பிட்டுக் கடனாளியாகி சாராயம் குடித்துக் கடனாளியாகி என அருந்ததியர் வாழ்வு கொடுமையான கந்துவட்டிக் கடனில் மூழ்கிக்கிடக்கிறது. இவர்களிடம் வட்டி வாங்கியே கோடிஸ்வரர்களாக பிழைக்கும் கூட்டம் ஒவ்வொரு நகராட்சி, மாநகராட்சி களிலும் இருக்கிறது. ஏழைகள் எல்லாச் சாதியிலும் இருக்கிறார்கள், ஆனால் எந்தச் சாதியாரும் பிறசாதியாரின் மலத்தைச் சுமப்பதில்லை.

மனிதர் கழிவை மனிதர் அள்ளும் நிலைமை பற்றி Frontline magazine செப்டம்பர் 2006ம் ஆண்டு இதழில் கவர்ஸ்டோரி வெளியிட்டுள்ளது. அருந்ததியர்கள் வாழ்க்கை பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும். இன்னும் அவர்களை எட்டிப்பார்க்காத கல்வி, கவுரமான வேலைக்கு வகைசெய்யும் இடஒதுக்கீடு பற்றிய சிந்தனைகளில் மாற்றம்பெரும். ஊடகங்கள் இந்தச்சாவு சம்பவங்கள் வரும்போது அதை விவாதப்பொருளாக க்கொள்ளும். ஆனால் அது அரசியல் கட்சிகளுக்கும் பொதுமக்களுக்கும் அது விவாதப்பொருளாக  வரவேண்டும்.

http://www.frontlineonnet.com/fl2318/stories/20060922005900400.htm



ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

உலகமொழி - வடமொழி



சில வாரங்களுக்கு முன்பு ” ஹிந்தி” இந்தியாவில் தோன்றிய மொழி அல்ல, அது தற்போதைய துருக்கியில் தோன்றியது என்பதாகும். ஹிந்தி நேரடியாக அங்கே பேசப்பட்டிருக்கிறதா என்பதைவிட ஹிந்தியின் மூலமொழியான சமஸ்கிருதத்திற்கும் ,கிரேக்கம், இலத்தீன் மற்றும் ஐரோப்பிய மொழிகளுக்கு மிடையே ஒப்புமையுள்ளது.  சமஸ்கிருதத்தை இந்தோ-ஐரோப்பிய மொழி என்றே மொழியியலாளர்கள் அழைக்கிறார்கள்.  இந்த கருத்தின் மூலம் வேதங்களை இயற்றிய ஆரியர்கள் மத்திய ஆசியா அல்லது மேற்கு ஐரோப்பாவில் வசித்திருக்கவேண்டும் என்ற கொள்கை முன்வைக்கப்பட்டது. ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்வதினால் புதிய கிளைமொழிகள் தோன்றினாலும் சில பொதுவான சொற்கள் தொடரவே செய்யும். தமிழுக்கும் , மலையாளத்திற்கும் உள்ள ஒற்றுமை இதற்கு சான்று.

சுமார் 200 ஆண்டுகளாக வடமொழி, கிரேக்கம்,லத்தீன் முதலிய மொழிகள் தொடர்புடையன என அறிஞர்கள் அறிந்திருந்தனர். குறிப்பாக புனைவுக்கதைகள்,சொற்கள் முதலியவற்றில் ஒப்புமை அமைந்திருப்பது இனம்காணப்பட்டது. பரவலாகப் பயன்படுத்தபடும் பொருட்கள், உடலின் பகுதிகள், அடிப்படைக் கருத்துக்கள், உறவினர்களைச் சுட்டும் பெயர்கள் என பல அம்சங்களில் ஒப்புமை அமைந்திருக்கிறது.

வடமொழியில் ‘தேயூஸ் பித்தர்’ என்பது ஆகாயத்திற்கு தந்தையாக இருப்பவன் எனும் பொருள தரும். கிரேக்கத்தில் ஆகாயக்கடவுளுக்கு ‘தேயுஸ் பட்டர்’ என்றும் லத்தீனில் ‘ஜூப்பிட்டர்’ என்றுஇம் வழங்கப்படுகிறது. எண்கள் வரிசையிலும் ஒப்புமை உள்ளது. குதிரையை வடமொழியில் அஸூவ என்கிறார்கள், அவெஸ்டா (ஈரான்) மொழியில் அஸ்பா, கிரேக்கத்தில் ஹப்போஸ், லத்தீனில் இக்கியுஸ். தேர் என்பதை வடமொழியில் ரத என்றும், ஜெர்மனில் ராட் லத்தீனில் ரோட்டா என்றழைக்கப்படுகிறது. 18ம் நூற்றாண்டில் வில்லியம் ஜோன்ஸ் வடமொழி மற்ற ஐரோப்பிய மொழியின் சாயல் உள்ளது என்று கண்டுபிடித்தார்.


 இந்தோ-ஐரோப்பியர்கள் ஆரியர் என்றழைக்கப்படுகின்றனர்.  ‘ஆர்ய’ எனும் சொல் ரிக் வேதத்திலும் ‘அவெஸ்டா’விலும் குறிக்கப்பட்டுள்ளது. ஈரானியர்களாகவும் மற்றும் இந்தியர்களாகவும் பிரிவதற்கு முன்பிருந்த ஆரியர்களால் பேசப்பட்ட மொழியினைக் குறிக்கும் சொல் இந்தோ-ஈரானியன் என்பதாகும். இந்தோ-ஐரோப்பிய  மொழிக்கூறுகள் வடசிரியாவில் அல்லது மித்தானிஸ் நிலப்பகுதியில் கி.மு.1400 களில் தோன்றிவிட்டன. மித்தானின் கல்வெட்டுகளில் சில சொற்கள் குறிப்பிடப்படுகின்றன. அவை கச்சிதமாக (Mitra)மித்ர,  (Varuna) வருண,  (Indra) இந்த்ர, (Nasatya)  நாசத்ய போன்றவற்றை ஒத்துள்ளன. இதே கடவுளகள் ரிக்வேதத்திலும் காணப்படுகின்றன. மித்தானியர்களின் மன்னர்களின் பெயர்களில் இந்தோ-ஆர்ய சொற்கள் உள்ளன. கி.மு. 14 அல்லது 15ம் நூற்றாண்டுகளில் ஹிட்டைட் பனுவல்களில் இந்தோ-ஐரோப்பிய மொழியே ஊடகமாகப் பயன்படுத்தப்பட்டது. இப்பனுவல்களில் தேர், குதிரை பற்றிய செய்திகள் உள்ளன. தேர் பற்றிய அள்வுகளைக் குறிக்கப் பயன்படுத்திய எண்கள் குறித்த சொற்கள் சமஸ்கிருத எண்களை மிகவும் ஒத்துள்ளன. அவை aika(eka), tera (tri), Panza (Panca), satta (sapta) , anna (nava). அதேபோல் குதிரைகளின் நிறங்களை குறிக்க  babu (babhru) , parita (palita) , pinkar (pingala) போன்ற சொற்கள் அரக்கு, சாம்பல், சிவந்த நிறங்களைக் குறிக்கும்.

கி.மு. 1600 வாக்கில் இந்தோ-ஐரோப்பியச் சொற்கள் பாபிலோனியாவிலும், இன்றைய ஈராக் பகுதிகளிலும் உள்ள காசிட் (Kassite) கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. காசிட்கள் ஆட்சி கி.மு. 18ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தொடங்கியது, அக்கல்வெட்டுகள் சூர்யஷ் (Suryash) , மருதாஷ் (Marutash), என்ற இரு குறிப்புகளைத் தருகின்றன, இவையிரண்டும் ரிக் வேதத்தின் சூர்ய(Surya) , மருத் (Marut) என்ற இரண்டையும் அடையாளம் காட்டுகின்றன. காசிட் மொழியில் காற்றுக்கான கடவுள் புரியாஷ் (Buriyash) என்றழைக்கப்பட்டுள்ளது. இச்சொல்லை வேதக்கடவுளான ‘ வாயு’ என்பதுடன் தொடர்பு படுத்தலாம். ‘வாயுவை’ குறிக்கும் Bayar எனும் சொல் இந்தியில் இருந்துவருகிறது.

வேதநாகரீகமே இந்திய நாகரீகம், உண்மையில் ஆரியர்களின் பூமி இந்தியா: இங்கிருந்து தான் உலகம் முழுமைக்கும் ஆரியர்கள் பரவினர்” என்ற கருத்தெல்லாம் இந்திய இன மேன்மையை உயர்த்திப் பிடித்து ‘இந்து’ என அனைவரையும் அணிதிரட்டப் பயன்பட்டது. 
தொன்மையான நாகரீகங்கள் பாபிலோனியா, எகிபது மட்டுமே என்று வரலாற்று அறிஞர்கள் கருதியிருந்தார்கள். ஆரிய வருகைக்குப் பின்னர் தான் இந்தியாவில் நாகரீகம் எனவும் கருதியிருந்தனர். வேத நாகரீகமே இந்தியாவின் தொடக்கம் எனக்கருதி யிருந்தோருக்கு சிந்துவெளி நாகரீகம் பெரும் சவாலாக அமைந்தது. மொகஞ்சதாரோ, ஹரப்பா முதலிய சிந்துவெளி நாகரீகங்கள் 5000 ஆண்டுகள் பழமையானவை. இச்சான்று ஒரு வளர்ந்த வேதநாகரீத்திற்கு வெகுமுன்பே இந்தியாவில் வளர்ந்த நாகரீகம் இருந்துள்ளதை தெளிவாக எடுத்துக்காட்டியது.

# தகவல்கள் சில மாதங்களுக்கு முன்பு மறைந்த இந்திய வரலாற்று அறிஞர் ராம்சரன் சர்மா அவர்கள் எழுதிய looking for the aryans என்ற நூலின் தமிழாக்கம் ‘ஆரியரைத்தேடி’ என்று என்சிபிஎச் நிறுவனம் வெளிட்ட நூலில் உள்ளது.
#மொழி ஒப்புமை சான்றுகள் The Aryans - V.Gordon Childe 1926ல் எழுதிய நூலில் கிடைத்தது.

வியாழன், 20 செப்டம்பர், 2012

தமிழகத்தில் பெளத்தம், சமணம்.


தமிழ்நாட்டில்  கி.பி. 7ம் நூற்றாண்டுவரை சமணமும் பெளத்தமும் செல்வாக்குடன் இருந்தன. அதே நூற்றாண்டில் தோன்றிய பக்தி இயக்கம் தோன்றியபிறகு பெளத்தம் படிப்படியாக மறைந்தது.இன்றளவும் வடமாவட்டங்களில் திண்டிவனம், வந்தவாசி,காஞ்சிபுரம் பகுதிகளில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் சமணர்களாக வாழ்ந்துவருகிறார்கள்.  இந்த செய்தியை பலர் அறியாமல் இருக்கலாம்.

சமண, பெளத்த மதங்களின் தொல்லெச்சங்கள் இன்றும் நம்மிடையே இருக்கின்றன. சைவ, வைணவ, சுமார்த்தத் துறவிகள் துறவுக்கு அடையாளமாகச் சிவப்பு ஆடை அணிகின்றனர். துறவு நெறியை இந்தியாவில் உருவாக்கி வளர்த்தவை சமண, பெளத்த மதங்கள் தான். பெளத்த மதத்தின் துறவிகள்தாம் முதலில் செவ்வாடை அணிந்தவர்கள், ‘சீவர’ ஆடை அணிந்தவர்கள் என்று அவர்களை தேவாரம் கண்டிக்கிறது. பெளத்தமதம் அழிந்தபிறகு சைவ, வைணவ சுமார்த்தத் துறவிகள் சிவப்பு ஆடையை அணியத்தொடங்கினர். பெளத்தம் தந்த மற்றொரு வழக்கம் தலையினை மொட்டையடித்துக் கொள்வது. வேத, புராணங்களில், தேவார, திவ்வியப் பிரபந்தகளில் இவ்வழக்கம் பற்றிய பேச்சேயில்லை. திருப்பதி, பழனி, திருச்செந்தூர் ஆகிய கோவில்களில் மொட்டையடித்துக் கொள்ளும் வழக்கம் பரவலாக உள்ளது (இவ்வழக்கத்தை பிராமணர்கள் ஏற்றுக்கொள்வதில்லை). பெளத்த மதத்தின் துறவிகள் கையில் வைத்திருக்கக்கூடிய எட்டுப் பொருட்களில் தலைமழிக்கும் கத்தியும் ஒன்று. மதத்தின் பெயரால் தலைமுடியினைப் புனிதத்தலங்களில் மழித்துக்கொள்ளும் வழக்கத்தைப் பெளத்தத் துறவிகளிடமிருந்து தான் தமிழ்மக்கள் கற்றுக்கொண்டனர்.
அரசமரம் பெளத்தர்களுடைய புனிதச்சின்னமாகும் அது ஞானத்தின் குறியீடாகக் கருதப்படுகிறது. அதைப் பின்பற்றி தமிழர்களும் அரசமர வழிபாட்டினைக் கைக்கொண்டிருக்கிறார்கள்.

‘பள்ளி’ என்ற சொல்லுக்கு படுக்கை என்று பொருள். பள்ளியறை என்றால் படுக்கையறை பள்ளிகொள்ளுதல் என்பது என்பது உறங்குதல். இந்த சொல் எப்படி கல்விக்கூடத்திற்கும் குறிப்பதாயிற்று?

கிறிஸ்துவுக்கு இரண்டு நூற்றாண்டிற்கு முன்னர் தமிழகம்வந்த சமண மதத்தின் திகம்பரத் துறவிகள் மலைக்குகைகளில் தங்கத்தொடங்கினர். சமண மதத்தின் கொடையாளர்கள் இவ்வகையான ஆடையில்லாத் துறவிகளுக்காக அவர்கள் தங்கும் குகைகளில் தரைப்பகுதியை படுக்கையைப் போல சமதளமாக செதுக்கிக்கொடுத்தனர்.  இப்படிப்பட்ட குகைத்தளங்கள் திருப்பறங்குன்றம், திருவாதவூர், சமணமலை, நாகமலை ஆகிய இடங்களில் இன்றும் இருக்கிறது. நாகமலையிலுள்ள புலியங்குளம் குகையில் மட்டும் 50 படுக்கைகளுக்கு மேலாக வெட்டப்பட்டுள்ளது. ஆடையில்லாத சமணத்துறவிகள் பசித்த நேரத்தில் மட்டும் அருகிலுள்ள ஊருக்குள் நுழைந்து பிச்சை ஏற்று உண்டுசெல்வர். கல்வி, மருந்து, உணவு ஆகிய மூன்று கொடைகளும் அடைக்கலம் அளித்தலும் சமண மதத்தின் தலையாய அறங்கள். ‘ஞானதானம்’ செய்வதற்காகச் சிறுபிள்ளைகளைத் தங்கள் இருப்பிடத்திற்கு துறவிகள் அழைத்துக் கற்றுக்கொடுத்தனர். குகைத்தளத்தில் பிள்ளைகள் அமர்வதற்கு வேறுஇடம் கிடையாது.  கற்படுக்கைகளின் மீதுதான் அமர்ந்திருக்க இயலும். பள்ளிகளின் மீது பிள்ளைகள் அமர்ந்து கற்றதனால் கல்விக்கூடம் பள்ளிக்கூடம் ஆயிற்று.

தேசிய இயக்கத்தின் வளர்ச்சியில் உண்ணாநோன்பு என்பது மிகப்பெரிய போராட்டக் கருவி. உண்ணா நோன்புக் காலத்தில் தண்ணீர் மட்டும் அருந்துவது சமணர்களிடமிருந்து நாம் கற்றுக்கொண்டதாகும். கடுமையான துறவை வலியுறுத்தியதும், தொல்பழைய சடங்குகளை நிராகரித்ததும், ஆடல் பாடல், போன்ற நுண்கலை உணர்வுகளை ஏற்றுக்கொள்ளாததும், புலால் உணவை முற்ரிலுமாக மறுத்ததும், பாண்டிய, சோழப்பேர்ரசுகள் வேத நெறிக்கு ஆதரவு அளித்ததும் சமண மதம் தமிழ்நாட்டில் வீழ்ச்சியடையக் காரணங்களாயின.

தகவல்பண்பாட்டு அசைவுகள்- தொ.பரமசிவன்

சனி, 15 செப்டம்பர், 2012

அனுமன் வாலில் வைத்த நெருப்பு....

அவரோட பயோடேட்டா ஈமெயில் வைத்திருக்கிற எல்லாருக்கும் வந்திருக்கும், இதை பர்வார்டு செய்ய்ங்கள் என்ற வேண்டுகோள் வேறு, இவ்வள்வு படிப்பா, பட்டமா என்றெல்லாம் ஆச்சரியப்பட்டு இந்தப் பதவிக்கு பொருத்தமான ஆள்தான் என்று எண்ணச்செய்தார்கள். சில ஆண்டுகள் கடந்தன. அப்படியெ நிலைமை தலைகீழ் பேஸ்புக், டிவிட்டற் அமெரிக்க ஜர்னல்கள் என எல்லா ஊடகங்களும் கேவலப்படுத்தின. அவர் மன்மொகன் சிங் தான். இதுவரைக்கும் இந்தியாவின் ஒரு தலைசிறந்த பதவியில் இருப்பவர் இவரைமாதிரி இவ்வளவு கேவலப்பட்டதில்லை. படிப்புக்கும் பட்டத்திற்கும் மக்கள் நலனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உலகவங்கியில் ட்ரெய்னிங் எடுத்த எபெக்ட் இது.நாட்டின் வளர்ச்சிக்கு டீசல் விலை உயர்வு அவசியம் என்கிறார். மக்கள் அந்த விலை உயர்வால் துயரமடைவார்கள் எப்படி நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் என்பது தெரியவில்லை.
டீசல் விலையை லிட்டருக்கு 5 ரூ கூட்டியதால், இனி பஸ் கட்டண உயர்வை தவிற்கமுடியாது, லாரி வாடகை, டாக்சிவாடகை கூட்டாமல் கட்டுபடியாகாது. அதனால் பால், காய்கறி, பழங்கள், மளிகை எல்லாம் கூடும். ரயில் கட்டணம் உயர்த்தாமல் அதை சரக்கில் ஏற்றிவிடுவார்கள். டீ, காபி, ஒன்னும் அதே விலைக்கு விக்கமுடியாது, மணல், செங்கல், சிமெண்ட் ஏற்கனவே உச்சத்தில இருக்கு. வியாபாரிகள் யாரும் இதை தாங்கப்போவதில்லை. இங்க கொடுக்கிறதை இன்னொரு இடத்தில் பிடிங்கிவிடலாம். அரசு ஊழியருக்குக் கூட பரவாயில்லை டிஏவில் கொஞ்சம் சமாளிக்கலாம். எல்லாம் உழைப்பை மட்டுமெ விற்பவர்கள்தான் தாங்கவேண்டும். உழைப்புக்கும் டீசல் தொடர்பு நேரடியா இல்லயே. இன்னும் நாடாளுமன்ற தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகள் முழுமையாக இல்லை, ஆனாலும் மக்களை சந்திக்க கொஞ்சம் கூட மன்மோகன்சிங் அரசு பயப்படவில்லை. இந்த விலை உயர்வால் மகிழ்ச்சியடையது ficci, assocham cii மற்றும் உலகவங்கி தான். அவர்களின் சேவகர்களாக பணியாற்றுவதில் காங்கிரஸும் அதன் கூட்டணிகளும் பணியாற்றுவதில் எந்த வெட்கமும் இல்லை, உணர்வும் இல்லை.

மன்மோகன் வைத்த அனுமன் வாலில் தீ வேகமாக இன்றே பரவும்.

பண்பாட்டு அசைவுகள் -நூல் அறிமுகம்.

சோறு ஆக்கும்போது அதில் உப்பு போட்டு சோறாக்குவது எங்க ஊரில் பெரும்பாலான்வர்களின் பழக்கம், ஆனால் மற்ற ஊர்களில் இருக்கிற பழக்கம் சோறு ஆக்கும்போது உப்பு சேர்ப்பதில்லை, உப்பு போடாமல் செய்தால் வெப்பமண்டல பிரதேசத்தில் நீண்டநேரம் கெடாமல் இருக்கும். இதற்கு சமூககாரணியும் இருந்திருக்கிறது தமிழகத்தில். ஒடுக்கப்பட்ட சாதியினர் சோறு உலையில் கொதிக்கும்போதே உப்பிடும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள், இலையில் தனியாக உப்பிட்டு உண்ணும் வழக்கம் மேட்டிமையின் சின்னமாக கருதப்பட்டது. மனிதன் உப்பை பயன்படுத்தக் கற்றுக்கொண்டது தான் முதல் வேதியியல் விஞ்ஞானம். சம்பளம் என்று சொல் உப்பு விளைகிற ‘அளம்’ என்பதிலிருந்து உண்டானது, slarary என்ற சொல் salt என்பதன் அடியாக பிறந்தது என்கிறார்கள்.

தமிழில் உப்புக்கு சுவை என்று பெயரும் உண்டு அதிலிருந்துதான் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு,கசப்பு என்ற சொற்கள் உண்டாகி -யிருக்கின்றன. உப்பிற்கு உணர்வும் இருக்கிறது, உப்பு போட்டுதான் திங்கிறியா? என்று சொல்வார்கள். உப்பு ஒரு மங்கலப்பொருளும் கூட புதுவீடு கட்டி குடியேறிவர்களுக்கு அவர்களின் உறவினர்கள் உப்புகொண்டு செல்வது கிராமத்தில் இன்றும் நிலவுகிறது. அதே மாதிரி துட்டி (துக்கம் அனுஷ்டிக்கிற) வீட்டில் உப்பு போட்டு சமைக்கமாட்டார்கள், இறந்தவரோடுள்ள உறவை அறுத்துகொள்கிற அடையாளம் அது. இதுபோன்ற தமிழர்களின் பண்பாடோடுடைய தொடர்புடையவற்றை களஆய்வோடு தமிழகம் அறிந்த பேரா. தொ.பரமசிவன் ‘பண்பாட்டு அசைவுகள்’ என்ற நூல் எழுதியுள்ளார்.


திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு துஷ்டிவீட்டுக்கு சென்றிருக்கிறார், அந்த வீட்டில் திருமணமாகியுள்ள ஒருவர் சாலைவிபத்தில் பலியாகியுள்ளார். அவருக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. ஊர்க்காரர்கள் எல்லாம் வீட்டுக்கு வெளியே கூடியிருக்கிறார்கள், பெண்கள் வீட்டுக்குள்ளே ஒப்பாரிவைத்திருக்கிறார்கள். அப்போது ஒரு மூதாட்டி வீட்டிலிருந்து வெளியே ஒரு சொம்பு நீருடன் வந்திருக்கிறார், பேசிக்கொண்டேயிருந்த மக்கள் மெளனமானார்கள், ஒருகையில் கொஞ்சம் முல்லைப்பூ வைத்துள்ள மூதாட்டி கூட்டத்தை பார்த்தவண்ணம் ஒரு பூவை சொம்பு நீரில் இட்டுள்ளார், மக்கள் த்சொ என்று அனுதாபம் காட்டியிருக்கிறார்கள், இன்னும் தொடர்ந்து இரண்டு, மூன்று பூக்களை தண்ணீரில் போட்டிருக்கிறார். பேராசியருக்கு இது என்ன சடங்கு என்று புரியவில்லை. மெளனமொழியில் உறையாடிய இந்த சடங்கின்மூலம் இறந்தவரின் மனைவி ‘மூன்று மாதம் கர்ப்பம்’ அதற்கு இறந்தவன் தான் காரணம. இன்னும் ஏழு மாதன் கழித்து பிறக்கும் குழந்தைக்கு தகப்பன் யார் என்ற கேள்வி எழக்கூடாது என்பதற்கான சடங்கு அது.

தமிழ் என்ற சொல்லுக்கு நீர், இனிமை, எளிதில் புழங்கும் தன்மை என்ற பொருளும் உடையது, குளிர்ச்சியுடையதால் நீரை தமிழர்கள் ‘தண்ணீர்’ என்ற பெயரிட்டார்கள். நீரினால் உடலைத்தூய்மை செய்தல் மட்டும் குளித்தல் இல்லை உடலை குளிர்ச்சி செய்தலே குளித்தல். வெப்பமண்டலத்து மக்களின் நீர் பற்றிய வெளிப்பாடு. இயறகையின் ஆற்றலில் நெருப்பை ஆரியர்கள் போற்றியது போல தமிழர்கள் நீரினை முதன்மைப் படுத்தியிருக்கிறார்கள். தமிழ்ர்கள் வீட்டுச்சடங்கில் ஒரு சொம்பு நீர் இடம்பெறும். (கட்டப்பஞ்சாயத்திலும் சொம்பு நீரா?). மொஹஞ்சதாரோ அகழ்வாய்வில் படிகளுடன் கூடிய நீர்த்துறை இடம்பெற்றிருக்கிறது. அது நீர்ச்சடங்கு செய்கிற குளம் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

சோறு என்பது நெல்லரிசி சோற்றை மட்டும் குறிக்கவில்லை,கம்பஞ்சோறு, சோளச்சோறூ, குதிரைவாலிச்சோறு என்றும் சொல்கிறார்கள், கற்றாழையின் சதைப்பற்றையும் சோறு என்று சொல்கிறார்கள். ‘சோறும் நீரும் விற்பனைக்குரிய பொருள் தமிழக்த்தில் இருந்ததில்லை. கிராமப்புறங்களில் ஊர்மடத்தில் (சாவடி)வழிச்செல்வோர் யாரும் உண்ணாமல் இரவில் உறங்கக்கூடாது என்று ஊர்க்காரர்கள் ‘ இரவுச்சோறு’ கொடுக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. தமிழகத்தில் சமணம் நிலைபெற்ற காலத்தில் அவர்களின் தானத்தில்( கல்வி, உணவு, மருத்துவம்) உணவு தானமும் ஒன்று. விஜய நகரப் பேரரசு ஆட்சிக்குப் பின்னர் தான் சோறு விற்கப்பட்டு ஆங்கில ஆட்சியில் ஹோட்டல்கள் முளைத்திருக்கின்றன.

சங்க இலக்கியத்தில் வீடு என்பதற்கு பதிலாக ‘மனை’ என்ற சொல்லேயிருக்கிறது. உண்டு, உறங்கி, இனம் பெருக்கும் இந்த இடத்திற்குரியவளே ‘மனைவி’ எனப்பட்டாள். மன்னராட்சி காலத்தில் சாதிவாரியாக வீடுகட்டும் முறை நடைமுறையில் இருந்திருக்கிறது. சுட்டசெங்கலால் வீடுகட்டவும் மாடி எடுக்கவும் வீட்டுத்தோட்டத்தில் கிணறு வெட்டிக்கொள்ளவும் பிராமணர்களுக்கு மட்டுமெ அந்த உரிமை இருந்திருக்கிறது. நிறைவாசல் சன்னல்கள், சுட்டசெங்கலால் சுவர் பின்புறவாசல் ஆகியவை தனித்தனி உரிமைகளாக வகுக்கப்பட்டிருந்தது. 18ம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை தமிழகத்தில் அரைக்கால், முழுக்கால் சட்டை அறியப்படவில்லை. ஆங்கிலேயர்கள், நவாபு எனப்படுகிற வட நாட்டு முஸ்லீம்களால் தைத்த சட்டை அறிமுகம் ஆகியிருக்கிறது. ஆண்யாயினும் பெண்ணாயினும் உயர்குடிமக்களே முழங்காலுக்கீழே கணுக்கால் வரையிலான ஆடையினை அணிந்திருந்தார்கள். ஏனைய ஆண்களெல்லாம் முழங்கால்வரை தார்ப்பாய்ச்சி அணிந்திருந்தார்கள். இன்று சேலை தமிழர்களின் பண்பாட்டு ஆடை என்று சொல்கிறார்கள். சேலை 15ம் நூற்றாண்டில் தமிழக்த்தில் நடைபெற்ற விஜயநகரப் பேர்ரசு, தெலுங்கு மக்களின் குடியேற்றமும் தமிழர்களின் வாழ்வில் ஏற்படுத்திய மாற்றம். இக்காலத்திற்கு முன்னர் ‘புடவை’ என்ற சொல் ஆண்களும் பெண்களும் மேலே அணியும் நீண்ட துணியினையே குறித்தது. சாதிய அமைப்பில் ஓர் இளைஞன் தன் திருமண நாளன்றுதான் பெரியவர்கள்முன்பு தோளில் துண்டு அணிய அனுமதிக்கப்படுகிறான்.பெரியவர்களிடம் பேசும்போது இளைஞர்களின் துண்டோ வேட்டியோ காற்றில் அலையுமாறு நின்ரு பேசுவது மரியாதைக்குறைவு என்று கருதப்பட்டது, அதனல் ஒடுக்கப்பட்டவர்கள் மேல்சாதிக்காரகள் முன்னிம் துண்டை இடிப்பில் கட்டும் பழக்கம் இன்றும் நிலவுகிறது.

கி.பி. 17ம்நூற்றாண்டுவரை தமிழ்மக்களின் இயற்பெயர்கள் பெரும்பாலும் நான்கு அல்லத் ஐந்து எழுத்துப்பெயர்களாகவே இருந்து வந்திருக்கின்றன. ஷ, ஸ, ஹ, ஜ, ஆகிய எழுத்துக்கள் உள்ளடக்கிய பெயர்களெல்லாம் உயர்வு தருபவையென்று சமீபத்தில் பத்திரிக்கை, வானொலி, டி.வி மூலம் உருவாகியிக்கிற மா்ற்றம். சாதிவாரியாக பெயர் வைக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்புவரை ‘பெயர் சொன்னால் எளிதில் சாதி விளங்கும்’ என்ற நிலை இருந்திருக்கிறது. அமாவாசை, பலவேசம், சுடலை, கழுவன், ஒச்சன், ஆடி, கருப்பன், மாடசாமி, பிச்சை, பேச்சி முதலியவை ஒடுக்கப்பட்டவர்கள் வைத்துக்கொள்ள வேண்டிய பெயர்கள். மனுஸ்ருமிதியிலும் பெயர்கள் வர்ணக்கொட்பாடின் அடிப்படியில் வைக்கவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. மேலோர், கீழோர் என்ற பிரிவு விஜயநகரப் பேரரசு என்ற இந்து சாம்ராஜ்யத்தால் விளைந்தவை. தாலி அணியும் வழக்கம் கி.பி.10ம் நூற்றாண்டுவரை தமிழகத்தில் இருந்ததில்லை. ‘தாலியறுத்தான் சந்தை’ என்ற ஊர் குமரிமாவட்டத்தில் உள்ளது. தோள்சீலைப் போராட்ட காலத்தில் நாயர்கள் போராடிய சாதி பெண்களின் தாலிகளை அறுத்தனர். அதன் காரணப்பெயரில் ஊர் விளங்குகிறது.

தீபாவளிப் பண்டிகையும் 15ம் நூற்றாண்டில் விஜயநகரப்பேரரசு கொண்டுவந்த திருவிழா,சமண மதத்தின் 24ம் தீர்த்தங்கரரான் வர்த்தமானரின் இறந்த நாள் தான் தீபாவளி. தான் இறந்த நாளை வரிசையாக தீபங்களை ஏற்றிக் கொண்டாடுமாறு மகாவீரார் தம் மதத்தவரைக் கேட்டுக்கொண்டார். பிராமணீய மதத்தின் பழைய எதிரிகளான சமணர்களும் தீபாவளியை சிறப்பாக கொண்டாடுகின்றனர். நரகாசுரன் அழிந்ததாக தீபாவளிக்கதைகள் குறிப்பிடுவது மகாவீரர இறந்த நாளை ஆகும்.பிள்ளையார் கி.பி. 6ம் நூற்றாண்டில் தான் தமிழ்நாட்டிற்கு அறிமுகம் ஆகியிருக்கிறார். இந்தக்கடவுள் வழிபாடு மாராட்டியத்தில் தென்பகுதியில் சித்பவனப் பிராமணர்கள் இடையே தோன்றியது. பின்னர் கீழைச்ச்ளுக்கியருடைய வாதாபி நகரத்தில் நிலைகொண்டு அங்கிருந்து தமிழ்நாட்டிற்குள் பரவியது. விநாயகர் என்பபடும் பிள்ளையார் வழிபாடு, வியாபாரம் செய்த சாதியார் மூலமாகவே தமிழ்நாட்டில் பரவியிருக்கவேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.


பறையர்கள் எனப்படுவோர் தமிழகத்தின் தொல்குடிகளுள் ஒரு பிரிவினர் ஆவர். பறை எனும் தோற்கருவியின் அடையாளமாக இச்சொல் பிறந்திருக்கிறது. தோலைப் படுத்தத் தேவைப்படும் மூலப்பொருள்கள் சுண்ணாம்பு, அதை சேகரித்து காளவாசிலி இட்டுச் சுடுகின்ர பறையர் ‘சுண்ணாம்புப்ப்றையர்’ எனப்பட்டனர். வர்ணகோட்பாட்டில் மான் தோல் தவிற்த்து எல்லா தோல்களும் தீட்டுகுரியவை, எனவே இந்த வேலையை செய்பவர்கள் ‘இழிந்த’ சாதி ஆக்கப்பட்டனர். பறையர்கள் சில சாதியினருக்கு சமய குருவாக இருந்து பல சடங்குகளை நடத்தியுள்ளார்கள். ‘பார்ப்பானுக்கு மூப்பு பறையன், கேட்பார் இல்லாமல் கீச்சாதியானான்’ என்னும் சொல்லடை தென்மாவட்டங்களில் வழங்கி வருகிறது. சிவபெருமான் சாபம் கொடுத்த கதை ஒன்று. திருவாரூர்க் கோவிலுக்குள் பார்ப்பனர்கள் யாகம் செய்துகொண்டிருந்தார்கள், அந்த் அவேள்வியின் பயனாக சிவபெருமான் ஒரு பறைமகன் வேடத்தில் செத்த கன்றுக்குட்டியைத் தோளில்போட்டுக்கொண்டு வேள்விக்கூடத்திற்கு வந்துவிட்டார். “பறையன் உள்ளே வந்துவிட்டான்; யாகம் தீட்டுப்பட்டுவிட்டது’ என்று கத்திக்க்கொண்டே யாகம் செய்த பார்ப்பனர்கள் வெளியே ஓடிவிட்டனர். சீனங்கொண்ட சிவபெருமான்’ நீங்களும் பறையன் ஆகுங்கள்’ என்று சாபம் கொடுத்தாரம். சாபத்திலிருந்து விமோசனம் தருமாறு கெஞ்சியிருக்கிறார்கள். மனம் இரங்கிய சிவன் நிரந்தரமாக பறையன் ஆக்குவதற்குப் பதில் மத்தியானம் ஒரு நாளிகை நேரம் பறையர்களாகிவிடுவார்கள் என்பது அங்குள்ளவர்களின் நம்பிக்கை. இதனால் திருவாரூர்க் கோயில் பார்ப்பனர்களுக்கு ‘மத்தியானப் பறையர்கள்; என்ற பெயர் ஏற்பட்டது.

இன்னும் ஏராளமான பண்பாட்டு தகவல்கள் நிறைந்துள்ள நூல் ‘ பாண்பாட்டு அசைவுகள்’, பெளத்தம், சமணம் தமிழகத்தில் செய்த மாற்றங்கள் என்ன என்பதையும் அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

வியாழன், 13 செப்டம்பர், 2012

அநாமதேயர்கள் வழங்கிய நிதியா?



அநாமதேயர்கள் வழங்கிய நிதியால் அரசியல் கட்சிகளின் கஜானா நிரம்பிவழிகிறது என்ற செய்தி வந்தது. adrindia.org என்ற இணையதளத்தில் அரசியல் கட்சிகளின் வருமானம்,  வரவு- செலவு கணக்கு வெளியிட்டுள்ளார்கள். 2001- 02 முதல் 2008-09 வரையிலான நிதியாண்டில் இரண்டு பெரிய தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக வும் முறையே ரூ1500 கோடி, 750 கோடி பணம் கையிருப்பில் உள்ளதாகவும் மூன்றாவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)  வசம் மேலே குறிப்பிடப்பட்ட நிதியாண்டில் ரூ338 கோடி இருப்பதால் அந்த கட்சிகள் மாதிரி சிபிஎம் கட்சியும் ஊழல் செய்து சம்பாதித்தது என்ற ஊடகங்கள் சொல்ல வருகிறார்கள். சாதாரண மக்களைவிட ஊடகத்துறைக்கு இடதுசாரிகளின் அரசியல் அமைப்பு பற்றி அதிகம் தெரிந்திருக்கும். அவர்கள் இதுவரை இந்தியாவின் பெருமுதலாளிகள் அல்லது பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து தேர்தல் நிதியோ, கட்சி நிதியோ பெறவில்லை. பிறகு எப்படி இத்தனை கோடி ரூபாய் உங்களிடம் இருக்கிறது என்பதன் மூலம் மற்ற கட்சிகள் மாதிரி இவர்களும் ஊழல்வாதிகள் தான் என்கிறார்கள்.
 
முதலில் பணம் கொடுத்தவர்கள் யாரும் அநாமதேயர்கள் அல்ல, தேர்தல் ஆணையம் வகுத்துள்ள சட்டத்தில் ரூ 20000 க்கும் அதிகமாக நிதிஅளிப்பவர்களின் பட்டியல்தான் சமர்பிக்கவேண்டும். அந்தப்படி கம்யூனிஸ்ட் கட்சிக்கு அதிகமாக வசூலாவது தொழிலாளர்களிடமிருந்து தான் இயற்கையாகவே நிதியளித்த 98 சதவீதம் பேர் சட்டத்திற்கு அநாமதேயர்கள்.



காங்கிரஸ், பாஜக, அல்லது பிற முதலாளித்துவ கட்சிகள், பிராந்திய கட்சிகள் எப்படி பணம் வசூலித்தன என்பது குறித்த ஆராய்ச்சியை நாம் அலசவேண்டியதில்லை. அந்த கட்சிகளின் தலைவர்கள், மந்திரிகள் அடிக்கிற கொள்ளைகள் தினந்தோறும் வெளிச்சத்திற்கு வந்து கொண்டேயிருக்கின்றன. தேர்தலில் அதிகபணம்  செலவு செய்து வெற்றிபெற்று பின்னர் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துகொண்டு மந்திரிபதவியை பேரம்பேசி வாங்கி சொத்துகுவிப்பது, நாட்டின் இயற்கை வளங்களை குறைந்த விலைக்கு உள்நாட்டு, பன்னாட்டு பெரிய நிறுவனக்களுக்கு தாரைவார்த்து அதன் மூலம் கட்சியின் கஜானாவையும் அதிகமாக சொந்த கஜானாவையும் நிரப்பிவருகிறார்கள் என்பது கண்கூடு. இடதுசாரிக் கட்சியான சிபிஎம் மீது வைக்கப்பட்டுள்ள புகாருக்கு விளக்கம் அளிப்பதே நம் கட்டுரை.

ADRINDIA நிறுவனத்தின் இன்னொரு அட்டவணையில் சிபிஎம்  2007-08 மற்றும் 2008-09  நிதியாண்டில் மட்டும் லெவியாக ரூ.45.51 கோடி ரூபாய் பெற்றிருக்கிறது. Voluntory Contribution  ஆக இந்த இரண்டு ஆண்டுகளில் ரூ.55 கோடி ரூ பெற்றிருக்கிறது என்கிறது. இந்த  Voluntory Contribution  ஐ எந்த பெரு முதலாளிகளிடமிருந்து பெருவதில்லை என்ற கொள்கையில் சிபிஎம் உறுதியாக இருக்கிறது. 2009ம் ஆண்டு கணக்கின்படி 10 இலட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் அக்கட்சியில் இருக்கிறார்கள், ஒவ்வொருவரும் தங்களுடைய வருமானத்தில் 5 சதவீதம் கட்சிக்கு மாதந்தோறும் வழங்கவேண்டும் , அது மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிற சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளமும் பொருந்தும். கட்சியின் மிகப்பெரிய நிதி ஆதாரம் அதன் உறுப்பினர்கள் தரும் லெவிதான், இதுபோக வருடந்தோறும் கட்சி உறுப்பினர்கள் கட்சிநிதி வழங்கவேண்டும். தொழிலாளர்கள், சிறுவியாபாரிகள், சிறுதொழில் செய்வோரிரமிருந்து கட்சிவளர்ச்சிக்கு நிதி பெறுகிறார்கள். ADR India சொல்கிற மாதிரி ரூ.20,000 க்கும் அதிகமாக கட்சிக்கு நிதி வழங்கியோர் 2 சதவீதம் தான், அதுவும் தேர்தல் ஆணையத்திற்கு வருடந்தோறும் கணக்குகளை முறையாக வழங்கிவருவது இடதுசாரிகள் மட்டும் தான். மடியில் கணமில்லையென்றால் வழியில் என்ன பயம்.
சமீபத்தில் மறைந்த சிபிஎம் மாநில செயலாளர் வரதராஜன் அவர்களுக்கு குடியிருக்க சொந்தவீடு கூட இல்லை. ஆனால் கட்சி ஒவ்வொரு நகரத்திலும், கிராமத்திலும் அலுவலகம் வைத்துள்ளது. இன்னொரு விசயம் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு யாரும் வாடகைக்கு இடம் தரமாட்டார்கள், அப்படியொரு பிரச்சாரம். அதனால் சொந்த கட்டிடத்தின் தேவை, அன்றாடம் கட்சிப்பணிக்காக இயங்குபவர்கள் ஒதுங்குவதற்கு இடம் தேவை. சொந்த நலனைவிட கட்சியின் நலன்தான் முக்கியம் என்று நினைக்கும் இடதுசாரிகள் கட்சிக்கு இடம், சொந்தகட்டிடம் கட்டுகிறார்கள், மற்றவர்கள் கட்சியின் பணத்தை தலைவரின் பணமாக மாற்றி அதை ஒரு டிவியில் முதலீடு செய்து அது சொந்த உழைப்பு என்று வாழ்ந்துவருகிறார்கள். முதலாளித்துவ கட்சிகள் அடிக்கிற கொள்ளையைப் பார்த்துவிட்டு எல்லா கட்சிகளும் ஊழல்தான் அப்படி பொத்தாம்பொதுவாக பேசுவது சமூக நோயாகிவிட்டது. எங்காவது பஸ்ஸிலோ, ரயில் பயணத்திலோ தங்களுடைய அரசியலை பேசமாட்டார்கள் எல்லா அரசியல்வாதிகளையும் சாடுவார்கள். அது எளிது. நான் எந்த அரசியலுக்கு சாய்வில்லை என்று சொல்லும்போது விவாதத்திற்கு அங்கே இடமில்லை, பதில் சொல்வதற்கு தயாராக இல்லை, வெறும் ஒருவழிப்பாதை அல்லது சொற்பொழிவு மாதிரி தான். இது அவதூறுக்கு பதில்.
 






சனி, 8 செப்டம்பர், 2012

ஆதாமிண்ட மகன் அபு . . . .



இந்த திரைப்படம் சென்ற ஆண்டிற்கான தேசியவிருது வாங்கியிருக்கிறது, சிறந்த திரைப்படத்திற்கும், நடிப்பிற்கும், ஒளிப்பதிவிற்கும், பிண்ணனி இசைக்கும் விருதுகள் வாங்கியிருக்கிறது.  மலையாள சினிமாவிற்கான விருதையும் வாங்கியிருக்கிறது. அப்படியென்ன இந்த சினிமா என்பதற்காக இந்த திரைப்படத்தைப் பார்த்தேன். தமிழ் சினிமாவில் வழக்கமாக இஸ்லாமியனை கடத்தல்காரனாக, தீவிரவாதியாக தேசவிரோதியாக சித்தரிப்பதைக் கடந்து நல்ல மனிதர்கள் பற்றி பாத்திரங்கள் படைத்திருக்கிறார்களா? என்றால் இல்லை.

படத்தில் வசீகரிக்கும் கதநாயகன், கதாநாயகி இல்லை, காதல் இல்லை அதனால்  வெளிநாட்டுப் படபிடிப்பு இல்லை, ஹீரோயிசம் இல்லவேயில்லை, சாதாரண மனிதனைப்பற்றிய கதை.   வில்லன் இல்லை,  கதாநாயகன் நல்லவன் என்பதற்காக கெட்டவன் பாத்திரம் இல்லை,  படம் தயாரிக்க அதிக செலவுமில்லை. இதுவரை காமெடி பாத்திரங்களில் மட்டுமே நடித்துவந்த சலீம் தான் கதையின் நாயகன்.   ஒரு ஏழை இஸ்லாமியன் ஹஜ் யாத்திரை செல்ல ஆசைப்படுகிறான், அவன் கனவு நிறைவேறுகிறதா என்பது தான் படத்தின் கரு.

அபு ஒரு அத்தர்விற்கும் வயதான சிறு வியாபாரி, அவருக்கு ஆயிசா என்ற மனைவி. அவருடைய மகன் சத்தார் துபாய் சென்றுவிட்டான், தாய் தந்தையை அவன் கைவிட்டுவிட்டான். இவர்களுடைய வருமானம் என்பது அத்தர் விற்பதில் கிடைக்கும் வருமானம், வீட்டில் பசு வளர்த்து பால்விற்பதில் மற்றும் பலாமரம் மூலம் கிடைக்கும் வருமானம். ஹஜ் யாத்திரை செல்வதற்கு ஒரு வசதியான பலமுறை ஹஜ்யாத்திரை சென்றுவந்த ஒரு இஸ்லாமியரிடம் சென்று ஆலோசனை கேட்கிறார்.  கோழிக்கோட்டிலுள்ள அக்பர் டிராவல்ஸ் நிறுவனம் வருடந்தோறும் ஹஜ் யாத்திரைக்கு ஒரு பேக்கேஜ் வைத்திருக்கிறார்கள் அதன் மூலமாக சென்றால் எல்லாவற்றையும் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்கிறார். அக்பர் டிராவல்ஸ் சென்று விசாரிக்கிறார், அந்த நிறுவனத்தின் மேலாளர் நிச்சயமாக உங்களை ஹஜ்க்கு அனுப்பி பத்திரமாக திரும்பி அழைத்துவருவது என்னுடைய பொறுப்பு என்று ,அவர்களே அபுவிற்கும் அவரது மனைவி ஆயிசாவிற்கும் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கிறார்கள்.

 மிக எளிமையான அவர்கள் வாழ்க்கையில் பிற தேவைகளுக்கோ, தேடல்களுக்கோ இடமில்லை. ஹஜ் யாத்திரைக்காக நீண்டநாட்களாக ஒரு டிரங்க் பெட்டியை உண்டியலாக மாற்றி பணத்தை சேமிக்கிறார். 100, 50,20,10 என பல கசங்கிய நோட்டுகள். பயணத்திற்கான அட்வான்ஸ் தொகையை டிராவல்ஸிடம் தருகிறார். மீதி பணம் புறப்படும் சில நாளுக்கு முன்பு அடைக்கவேண்டும். மீதி பணத்திற்கு என்ன செய்வதென்று வீட்டிலுள்ள பலா மரத்தை மரவியாபாரி ஜான்சனுக்கு (கிறிஸ்டியன்) விற்கிறார். விலையை அவரே 60,000 ரூ என்று 10,000 ரூ அடவான்ஸ் தருகிறார். இவ்வளவு விலை போகும் என்பதே அபுவிற்கு ஆச்சரியம். மரம் வெட்டியவுடன் மீதி 50,000 ரூ தருகிறேன் என்கிறார் மரவியாபாரி.  வீட்டிற்கு வந்து கணக்குப் பார்த்தால் இன்னும் பணம் தேவைப்படுகிறது. பால்வருவாய் தரும் பசுவையும் கன்றையும் விற்கிறார், கடைசியாக மனைவியின் கம்மல், மோதிரம் விற்க ஏற்பாடுசெய்கிறார்.

பயணநாட்கள் நெருங்கிவருகிறது, தன்னுடன் நெருங்கிப் பழகியவர்களிடம் சென்று பயணவிடை பெறுகிறார். ஒரு புனிதயாத்திரை செல்லும்போது எவர் மனதையும் புண்படுத்தியிருக்கக்கூடாது , தெரியாமல் நடந்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்கிறார். பல ஆண்டுகளுக்கு முன் தன் அண்டையில் வசித்துவந்த சுலைமான் தன்னுடன் நிலத்தகராறு செய்தார், அவர் தன்மீது ஏதாவது கோபம் கொண்டிருக்கலாமென்று அவரை பார்க்க மனைவியுடன் சுலைமான் வீட்டிற்கு பழம்,பிஸ்கட் வாங்கிச் செல்கிறார். விபத்தில் அடிபட்டு மரணத்தின் தருவாயில் இருக்கும் சுலைமான் அபுவின் பெருந்தன்மையால் நெகிழ்ந்துபோகிறான். கணவனும் மனைவியும் பயணத்திற்கான பொருடகளை வாங்கி சேகரிக்கிறார்கள். இன்னும் ஒருவாரம்தான் இருக்கிறது. 

இறுதித்தவணை மரவியாபாரியிடம் வாங்கி டிராவல்ஸ் க்குத் தரவேண்டும். வெளியூர் சென்றிருந்த அபுதம்பதி திரும்பிவரும்போது அவரது குடைரிப்பேர் நண்பர், மரவியாபாரி தங்களை தேடியதாகச்சொன்னார். உடனே மரவியாபாரி ஜான்சனை சென்று பார்த்தவுடன் மீதிப் பணம் 50,000 த்தை தருகிறார். தந்துவிட்டு உங்கள் மரத்தைப் பார்த்தீர்களா என்று கேட்கிறார். இல்லை வரும் வழியில் உங்களை சந்திருக்கிறேன் என்றார் அபு.  அந்த மரம் ‘உள்ளீடு’ அற்ற வெறும் விறகிற்கே பயன்படும் என்பதை ஜான்சன் சொன்னதும் அபுவின் முகம் வாடிவிடுகிறது. அந்தப் பணத்தைப் பெறுவது தவறு என்று ஜான்சனுக்கே திருப்பித்தருகிறார். மரம் வாங்கிய ஜான்சன், வியாபாரத்தில் லாபம் நஷ்டம் வரும் அதற்காக உங்கள் பயணம் தடைபடவேண்டாம் என்கிறார். ஒருவரை நஷ்டப்படுத்தி கிடைக்கும் பயணம் செய்யக்கூடாது என்று  தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக நின்று பணத்தை வாங்க மறுத்துவிடுகிறார்.

டிராவல்ஸ் நிறுவனத்திடம் தன்னால் 50,000 ரூ அடைக்கமுடியவில்லை அதனால் ஹஜ் பயணக் குழுவிலிருந்து தன்னையும் ஆயிசாவையும் நீக்கிவிடுங்கள் என்கிறார். டிராவல்ஸ் மேலாளர் இந்தப் பணத்திற்க்காக உங்கள் பயணம் தடையாகவேண்டாம், மீதிப்பணத்தை கம்பெனி சரிசெய்துகொள்ளும் என்றார்.  அபு மறுத்துவிடுகிறார். அபுவின் பயணம் தடைப்பட்ட செய்தி அந்த ஊரில் பரவுகிறது, அபுமீது அன்பு செலுத்தியவர்கள் அதற்காக வருந்துகிறார்கள், அவருடன் பழகிய ஆசிரியர் (இந்து ) தன்னுடைய சேமிப்புப் பணத்தை தரமுன்வருகிறார், தன்னை சகோதரனாக ஏற்று பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறார். அவர் மனதை புண்படுத்த விரும்பவில்லையென்றாலும் அந்த பணம் கொண்டு செல்வது ஹஜ் ஆகாது என்று திடமாகமறுத்துவிடுகிறார். வீட்டைவிற்றால் திரும்பிவந்து தங்குவதற்கு ஒரு நிழல்வேண்டுமே என்பதற்காக அதை விற்கவில்லை.

வீட்டில் மனைவியுடன் நமக்கு ஹஜ்பயணம் செய்வதற்கு கொடுத்துவைக்கவில்லை அவ்வளவுதான் நாம் வேறு ஏதாவது தவறுசெய்திருக்கிறோமா என்று ஆராயும்போது பலாமரம் என்பது ஓர் உயிர் அதை வெட்டி அந்தவருவாயில் ஹஜ் செய்வதை இறைவன் விரும்பவில்லைபோலும் என்று அதே இடத்தில் பலா மரக்கன்றை நடுகிறார்.

அடுத்த ஆண்டு ஹஜ் செய்யலாம் என்ற நம்பிக்கை அபு இன்னும் இழக்கவில்லை.