புதன், 13 ஆகஸ்ட், 2014

மணியாச்சி ..வாஞ்சிமணியாச்சி


நான் சொந்த ஊருக்கு ரயிலில் போகவேண்டுமானால் மணியாச்சி ரயில்நிலையத்தில் இறங்கி அங்கிருந்து 5 கி.மீ பயணம் செய்யவேண்டும். அந்த ரயில்நிலையத்திற்கு ஜங்ஷன் என்பதைத்தவிற எந்த பிரபலுமும் கிடையாது. கருவேல மரங்கள் நிறைந்த கரிசல் காட்டின் நடுவே பக்கத்தில் ஊரே கிடையாது குறைந்தபட்சம் 1 கி.மீ ல் தான் மணியாச்சி கிராமம் உள்ளது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் நீராவி ரயில்கள் மீட்டர் கேஜ் பாதையில் ஓடிக்கொண்டிருந்தது. திருநெல்வேலிருந்து மதுரைக்கு போகிறவழியில் 30வது கி.மீல் மணியாச்சி இருக்கிறது, அதேபோல் தூத்துக்குடியிலிருந்து மதுரைக்கு செல்லவேண்டுமானாலும் மணியாச்சி ரயில்நிலையத்தில்தான் இரண்டு பாதைகளும் இணைகிறது. எத்தனையோ நீராவி ரயில்கள் பெருமூச்சு விட்டுக்கொண்டு சகபயணியான இன்னொரு ரயிலுக்கு காத்திருக்கும், அந்த நேரத்தில் தாகத்திற்கு தண்ணீரையும் நிரப்பிக்கொள்ளும். அங்கிருந்த தண்டவாளங்களில் எரிந்துபோன கரித்துண்டுகளை சாம்பலோடு லோகோ ஓட்டுனர்கள் கீழே தட்டுவார்கள். அதை எடுத்து டீக்கடை பாய்லர்களும் ரயில்நிலையத்தின் கடைகளில் இயங்கிகொண்டிருக்கும். ராகம் போட்டு காப்பி..காப்பி என்று ஜன்ன்லோரம் விற்றுக்கொண்டிருப்பார்கள்.



அந்த ரயில் நிலையத்திற்கு ஒரு வரலாறும் உண்டு.

1911ம் ஆண்டு ஜூன்மாதம் 17ம்தேதி இரண்டு இளைஞர்கள் திருனெல்வேலிருந்து  மதுரை செல்லும் ரயிலில் ஏறினார்கள். ஒருவனுக்கு வயது 23, மற்றவனுக்கு வயது 22. அவர்கள் மேற்குறிப்பிட்ட ரயில்நிலையத்திற்கு ரயில் வந்துசேர்ந்ததும் இறங்கினார்கள். அந்த ரயில்  தூத்துக்குடியிலிருந்து இன்னொரு ரயில் வருவதற்காக காத்திருந்தது. ரயில் நிலையத்தில் பேசிவைத்தபடி ஆளுக்கொரு பக்கமாக பிரிந்துவிட்டார்கள். அதே ரயிலில் திருநெல்வேலியிலிருந்து ஆஷ் என்ற வெள்ளைக்கார கலெக்டரும் இங்கிலாந்திலிருந்து ஐந்துநாட்களுக்கு முன்பு வந்த அவனது மனைவியும் தங்களது குழந்தைகளைக்கான கொடைக்கானல் செல்கிறார்கள். அந்த 23 வயது இளைஞன் வாஞ்சிநாதன், செங்கோட்டையிலிருந்து வருகிறான், திருவாங்கூர் சமஸ்தானத்தின் எல்கைக்கு உட்பட்ட பகுதியில் காட்டிலாகா பிரிவில் ஒரு குமாஸ்தாவாக வேலைசெய்துவருகிறான். ஆஷும் அவனது மனைவியும் உட்கார்ந்திருந்த முதல்வகுப்பு பெட்டியில் வாஞ்சிநாதன் ஏறினான், குட்மார்னிங் ஆஷ் என்றான்... ஒரு இந்தியன், அடிமை நம்மை பெயர் சொல்லி அழைக்கிறான் என்ற கோபம்கொண்ட போதிலும் பதிலுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு, இங்கிருந்து போய்விடு என்கிறான். இடுப்பில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து நெஞ்சில் குறிவைத்து ஆஷ் என்பவனை சுட்டுவிட்டு கீழே இறங்கினான். துப்பாக்கியின் சத்தம்கேட்டும் , ஆஷின் மனைவியின் அலறல் கேட்டும் ஆஷின் பாதுகாப்பு அதிகாரி ஓடிவந்து வாஞ்சியை கட்டிப்பிடித்துக் கொண்டான். ரயில்நிலைய பிளாட்பாரத்தில் இருவரும் உருள்கிறார்கள். ஒருவேகம் வந்து அந்த அதிகாரியை நெட்டித்தள்ளிவிட்டு வாஞ்சி ஓட்டமெடுக்கிறான், ரயில் நிலையத்தில் வேலைசெய்வோர், ஆஷின் சிப்பந்திகள் துரத்துகிறார்கள். நடைமேடையிலிருந்த் ஒரு கழிப்பறைக்கு உள்ளேசென்று தாளிட்டுக்கொண்டான் வாஞ்சி. அங்கே கூட்டம் கூடிவிட்டது, ஆனால் யாரும் உள்ளேபோக அஞ்சுகிறார்கள் ஏனென்றால் கைத்துப்பாக்கி வைத்திருக்கிறான்.

சில நிமிடங்கள் கரைகிறது, உள்ளேயிருந்து ஒரு வெடிச்சத்தம்.. பின்னர் கழிப்பறை கதவை உடைத்தார்கள். தன்னுடைய வாயில் சுட்டுக்கொண்டதால் அடையாளம் தெரியாமல் தலை சிதறிவிட்டது. சுடப்பட்ட ஆஷை மருத்துவமனை கொண்டுசெல்ல கொடைக்கானல் செல்லும் ரயிலை திருநெல்வெலிக்கு திருப்பிவிடுகிறார்கள். திருநெல்வேலி சென்று சேரும்முன்ன்ரே ஆஷ் செத்துப்போனான். தற்கொலை செய்துகொண்ட வாஞ்சியை ஒரு கூட்ஸ் ரயிலில் ஏற்றி திருனெல்வேலி மருத்துவமனைக்கு கொண்டுசென்றார்கள். வாஞ்சியுடன் கூடவந்த இளைஞன் அவனது சொந்த மைத்துனன் மணியாச்சி ரயில்நிலையத்திலிருந்து தப்பிஓடிவிட்டான். வாஞ்சியின் சட்டைப்பையில் ஒரு கடிதம் இருந்தது. திருநெல்வேலியில் தேசபக்தர்களை கொடுமைப்படுத்தியதற்காகவும், வெள்ளைக்காரர்களை ஆயுதப்புரட்சி செய்து விரட்ட ஆட்கள் சேர்ந்திருக்கிறோம் என்றும் இந்த கொலைக்கான காரணங்களை கடிதத்தில் எழுதியிருந்தான்.

மருத்துவமனையில் அடையாளம் தெரியாத நிலையிலிருந்து வாஞ்சியின் உடலை மூன்று நாட்கள் கழித்து அவரது தந்தை, எனது மகன் வாஞ்சியின் உடல்தான். மூன்று மாதங்களாக அவனுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தன்னைக்காப்பாற்றிக் கொள்ள வாக்குமூலம் கொடுத்தார்.

வாஞ்சிநாதன் திருவனந்தபுரம் மஹாராஜா கல்லூரியில் படிக்கும்போது கல்யாணம் நடந்துவிட்டது, வாஞ்சிக்கு வயது 18, மனைவி பொன்னமாளுக்கு வயது 8 , பால்ய விவாகம். வாஞ்சி இறந்தபோது வயது 23, பொன்னம்மாள் வாஞ்சி இறந்தபின்னர்தான் பூப்படைந்தார், கல்யாணமாகி 5 வருடங்கள் கழித்து பூப்படைவதற்குள் விதவையானார் பொன்னம்மாள். கன்னியாகவே விதவையான சோகவரலாறு. இந்திய சுதந்திரம்பெற்ற பிறகும் அந்த அம்மாவுக்கு தியாகி பென்ஷன் பல்வேறு காரணங்கள் சொல்லி மறுக்கப்பட்டது 1967ல் பென்ஷன் வழங்க அரசாங்க ஆணைவந்தபோது பொன்னம்மாள் உயிரோடு இல்லை.

வாஞ்சியின் நினைவாக மணியாச்சி ரயில்நிலையம் வாஞ்சிமணியாச்சி என்று பெயர் சூட்டப்பட்டது.

திங்கள், 11 ஆகஸ்ட், 2014

ஆயுதபூஜை


இந்தியாவில் ஆயுதங்களை வழிபடுவதற்கு, நன்றி செலுத்துவதற்கு ஆயுதபூஜை கொண்டாடப்படுகிறது. இன்றைக்கு அறிவியல் வளர்ச்சியில் எத்தனையோ கருவிகள், பொருடகளை உற்பத்திசெய்வதற்கும், மனித உழைப்பை எளிமைப்படுத்தவும் கருவிகளை படைத்திருக்கிறோம். மனிதசமுதாயத்தின் ஆரம்பகாலத்தில் மற்றவிலங்குகளைப்போல் வேட்டையாடி உயிர்வாழ்ந்திருக்கிறான், விலங்களை கருவிகள் இல்லாமல் உடல்பலத்தில் வேட்டையாடும்போது உடலில் காயம்,உயிரிழப்பும் ஏற்பட்டது அதனால் தொலைவிலிருந்து விலங்குகளை தாக்குவதற்கு அவன் பயன்படுத்திய முதல் ஆயுதம் கற்கள், அந்த கற்களையே பலவிதமாக செதுக்கி வேட்டையாடுவதற்கு பயன்படுதியுள்ளான், பின்னர் வில் அம்பு வை பயன்படுத்தி விலங்குகளை தொலைவிலிருந்தே தாக்கமுடிந்தது. இப்போது எறிந்த அம்புகளை மீண்டும் உற்பத்தி செய்யவேண்டியிருந்தது, அதற்கு மாற்றாக பூமராங் எனப்படுகிற ஆயுதம். விலங்குகளை தாக்கியபின் மீண்டும் மனிதனின் கைக்கு திருப்பிவந்தது.

அதற்கு அடுத்தகட்டமாக விலங்குகளை பழக்கி மேய்ச்சல் தொழிலை செய்தான், அடுத்து பயிர்தொழிலை கண்டுபிடித்து நிலையாக ஓரிடத்தில் வாழ்வதற்கு ஏற்பாடுசெய்தான். கற்கருவிகளிருந்து, செம்பு, இரும்புக் கருவிகளை உற்பத்திசெய்தான். அப்போது இரும்பிலான கோடாரி கண்டுபிடித்தது மிகவும் மகத்தான சாதனை, அதைவைத்து காட்டை திருத்தி பயிர்செய்ய ஏற்ற நிலங்களை உருவாக்க முடிந்தது. இப்படி கருவிகளின் வள்ர்ச்சியோடுதான் மனிதவாழ்க்கை முன்னேறியது.

மனித வாழ்க்கைக்கு அவசியமான அந்த கத்தி, கோடாரி, வாள் என பலவிதமான ஆயுதங்களுக்கு நன்றிசெலுத்த வழிபடும் கடவுள்களின் கையில் ஆயுதமாக கொடுத்தான். அதற்கு வழிபாடுசெய்தான் அதுவே ஆயுதபூஜை.

தந்தை பெரியார் கேட்டார், அன்பே உருவான கடவுள்களுக்கு ஏன் கொலைகார ஆயுதங்கள் என்று. அது பெரியாரியப்பார்வை.

அந்த ஆயுதங்கள் அன்றைய உற்பத்திக்கருவிகள் என்பது மார்க்சியப்பார்வை.

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

சிதம்பர (ஸ்மரண) நினைவுகள்...........

வம்சி பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட ‘சிதம்பர நினைவுகள்’ கட்டுரைத் தொகுப்பை வாசித்தேன், அதை எழுதியவர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு என்று மலையாள எழுத்தாளர். தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களை எழுதியிருக்கிறார். தமிழில் கே.வி.ஷைலஜா அவர்கள் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார்கள். வம்சி பதிப்பகத்தையும் பவா-ஷைலஜா தம்பதியினரையும் வலைப்பூக்கள் வாயிலாக அறிந்திருக்கிறேன், அவர்கள் சம்பாதித்துள்ள் நட்புகளை பார்த்து வியந்திருக்கிறேன், கலை இலக்கியவாதிகள் சங்கமிக்கும் கூடாக 19,டி.எம்.சரோன் விளங்கிவருகிறது. திருவண்ணாமலைக்கு கிரிவலம் என்பது பொதுஅடையாளம், எனக்கு நினைவில் வருவது வம்சி பதிப்பகம்.



இதற்கு முன்னர் வம்சி வெளியீட்டில் வந்த கந்தர்வன் சிறுகதைகள், ஜெயமோகன் எழுதிய அறம் ஆகியவற்றை வாசித்திருக்கிறேன். “சிதம்பர நினைவுகள்” கட்டுரைத்தொகுப்பை வாசிக்கும்போது ஒரு மொழிபெயர்ப்பு நூல் என்பதே நினைவில் இல்லை, ஏதோ பாலச்சந்திரன் நம்மோடு பேசிக்கொண்டிருக்கிறார் என்பது போல இருந்தது. பிறப்பால் மலையாளியான ஷைலஜா அவர்களுக்கு மலையாளத்தில் எழுதவோ, படிக்கவோ தெரியாது, தன்னுடைய சகோதரியின் மகள் ஒரு சிறுமியின் மூலமாக மலையாள அட்சரங்களைத கற்றுக்கொண்டு, பயின்று மலையாளத்தில் சுள்ளிக்காட்டின் கட்டுரையை வாசித்து தமிழில் மொழிபெயர்த்ததாக முன்னுரையில் சொல்லியிருக்கிறார். இலக்கியம் படிப்பதற்கென்று வெகுசிலரே அந்நிய மொழிகளை கற்றறிந்திருக்கிறார்கள்.

பாலச்சந்திரன் சுள்ளிக்காடு என்று எழுத்துக்காரன் எனக்கு ஒரு சாகசக்காரனாகத்தான் தெரிந்தான், கல்யாண்ஜி கூட வாகிக்கும்போது தன்னை பாலச்சந்திரனாக உணர்ந்தாராம். 18 வயதில் கொண்ட கொளகைகளுக்காக சொத்து,சுகம், சோறு என எல்லாத்தை துறந்து வீட்டைவிட்டு வெளியேறினார். தவத்திரு பொன்னம்பல அடிகளார் முன்னுரையில் சொல்வது போல, சோற்றுக்காக வாழ்பவன் மூளை இருப்பதைப் பற்றியே எண்ணமாட்டான், அறிவுக்காக வாழ்பவன் வயிற்றைப்பற்றி கவலைப்படமாட்டான், வறுமைகூட இலட்சியவாதியிடம் தோற்றுப்போகும். இன்னும் சொல்கிறார், கர்ணனை கடவுளுக்கே இரத்ததானம் செய்தவன் என்றும், அவனைவிட ஒருவேளை சோற்றிற்காக தன்ரத்தத்தை விற்று பசிபோக்கவேண்டிய சூழ்நிலையில் இன்னொரு உயிரை காப்பற்றியவனின் இரத்தம் கோபுர கலசங்களில் தெளிக்கப்படும் புனித நீரைவிட சிறந்தது என்கிறார்.

வாழ்க்கையில் சந்தித்த பெரும்பேறுகளை வெளியே சொல்லமுடியும், ஆனால் அவமானங்களையும், இழிவுகளையும், தானே மிருகத்தனமாக நடந்துகொண்டதையும் இவரால் மட்டுமே எழுதமுடிகிறது. மலையாள நாட்டில் திருவோணத் திருநாளில் யாரும் பிச்சை எடுக்கமாட்டார்களாம், ஆனால் அந்த நாளில் வயிற்றுப்பசியால் ஒரு வீட்டில் யாசகம் கேட்டு பிச்சைக்காரனாக சாப்பிடுகிறார், அந்த வீட்டில் இருந்த ஒரு பெண் தன் கல்லூரியில் பார்த்த கவிஞனா? பாலச்சந்திரன் சுள்ளிக்காடு என்று வியந்து வீட்டிலுள்ள அனைவருக்கும் சொல்கிறாள்.

கல்லுரியில் சேருவதற்கு முன்பே வீட்டைவிட்டு வெளியேறி கவிதை எழுதிய பணத்திலும், பத்திரிக்கையாளனாகவும் இருந்துகொண்டு படித்தும் வந்தார், அப்போதே காதல் கல்யாணம். மருத்துவக்கல்லூரிக்கு செல்லவேண்டிய ஒரு பெண் ஒரு பொறுக்கியோடு ஓடிப்போனாள், அந்த பொறுக்கி வேறயாருமில்லை நான் தான் என்கிறார். படிப்பின் பாதியில் 6 மாதமாக ஹாஸ்டல் பீஸும் கல்லூரி பீஸூம் கட்டாமல் அவமானப்பட்டபோது சுள்ளிக்காட்டின் கவிதை வாசித்த ஜோசப் என்ற அரசியல்வாதி பீஸ்கட்டி படிப்பு தொடர உதவுகிறார்..யாரிடமும் கையேந்தவும், பிச்சைகேட்கவும் வெட்கப்பட்டதேயில்லை என்கிறார்.

பதினெட்டால் வயதில் ஒருவேளை சோற்றிற்காகவும் 5ரூபாய் சம்பள்த்திற்காகவும் நடிகர்திலகம் சிவாஜி நடித்த ‘தங்கப்பதக்கம்’ படம் திரையிடப்படுகிறது என்று ஆட்டோவில் சென்று கூவினாராம், அடுத்த 20 ஆண்டுகள் கழித்து அதே நடிகர் திலகத்தின் அரண்மனை போன்ற வீட்டில் அவரோடு ஸ்காட்ஸ் விஸ்கி பருகிய அனுபவத்தையும் சிவாஜி நடித்துக்காட்டிய கட்டபொம்மன் ஜாக்சந்துரையிடம் பேசிய வசனத்தை அருகிலிருந்து ரசித்திருக்கிறார்.

ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் கவிதைகளையும் சிறுகதைகளையும் எழுதிய கலகக்காரி என்ற புகழ்பெற்ற கமலாதஸை சந்தித்த தருணங்கள். ஸ்வீடன்நாட்டு அரசவிருந்தாளியாக Gothenburg புத்தகத்திருவிழாவில் சந்தித்த தென்னாப்பிரிக்க தாயை சந்தித்த அனுபவம்.

நோபெல்கமிட்டி சேர்மனோடு ஒருமுறை உரையாடும்போது ஷென் எஸ்மெர்க், பாலச்சந்திரனை ‘இந்த அரங்கிற்கு மீண்டும் ஒருமுறை வருவதற்கான வாய்ப்பு கிடைக்கட்டும் என்று வாழ்த்தினாராம். அதாவது நோபெல்விருது பெறுவதற்கு. அதற்கு பாலச்சந்திரன், டால்ஸ்டாய் என்ற இலக்கிய  மாமேதைக்கு வழங்காமல் ஷெல்லி ப்ருதோம் என்ற அற்பமனிதனுக்கு வழங்கினீர்களே! டால்ஸ்டாய் என்ற மகா கலைஞனுக்கு கொடுக்காத நோபெல் பரிசை அவரோடு ஒப்பிடும்போது மிகவும் சாதாரண எழுத்துக்காரனான நான் ஏற்றுக்கொள்ள்முடியாது என்று பதிவு செய்தாராம்.

ஒவ்வொரு கட்டுரையையும் வாசிக்கும்போது கண்ணீர்துளிகளை செலவிடாமல் கடக்கமுடியாது. தமிழுக்கு அளித்த கே.வி.ஷைலஜா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!.

வியாழன், 7 ஆகஸ்ட், 2014

மனித ரத்தத்தின் விலை என்ன?

ஒரு எழுத்துக்காரன் தான் கொண்ட கொள்கைகளுக்காகவும், எழுத்துக்காகவும் வீட்டைவிட்டு பதினெட்டாம் வயதில் விலக்கப்பட்டான். ஒரு பத்திரிக்கையில் பணியாற்றிக்கொண்டே, மேடைகளில் கவிதைவாசித்துகொண்டும் கல்லூரியில் படித்துவந்தான். மிகுந்த பசியோடு அழுக்கு வேட்டியும் சட்டையுமாக திருவனந்தபுரம் தம்பனூரில் ஒரு ஹோட்டலில் நுழைந்து ஒரு மசால தோசை சாப்பிட்டான். கையில் நயாபைசா கிடையாது, கல்லாவில் உட்கார்ந்திருந்த ஐயரிடம், மன்னிச்சிடுங்க கையில காசு இல்ல என்றான். ஊரு,பேரு,எல்லாம் வாஞ்சையோடு விசாரித்த ஐயர் , திருட்டுப்பயலே என்று கன்னத்தில் பளார் விட்டார். உள்ளேயிருந்து ஒருவனை கூப்பிட்டுவிட்டு இவனை உள்ளே கூட்டிட்டு போவென்றார்.

ஹோட்டலின் சமையலறையில் ஒரு சாக்கு வெங்கயாத்தை அவனுக்கு முன்னாள்தள்ளி உரிடா தாயோளி என்றார்கள். எல்லா வெங்காயத்தை உரித்துமுடித்துவிட்டு வீங்கிய கண்களுடன் வெளியே வந்தபோது கல்லாவிலிருந்த ஐயர் , காசில்லன்னா மெடிக்கல் காலேஜ்க்கு போ., ரத்தம் வித்தா காசு கொடுப்பான் என்றார்.

நேராக ரத்தவங்கிக்கு சென்று ரத்தம்விற்க பெஞ்சில் வரிசையிலிருந்தான், ஒரு பாட்டில் ரத்தத்திற்கு பதினாறு ரூபாய் விலையாம்.. 12 ரூபாயில் டிரெனில் ஆலூவா போய்விடலாம் என்ற எண்ணத்தில் இருந்தான்.

‘ரத்தம் எங்க வாங்குறாங்கன்னு தெரியுமா’ என்று கட்டம்போட்ட கைலியுடன் ஒருத்தன் வந்தான், எழுத்துக்காரனும் இவனும் அருகருகே இருந்த படுக்கையில் படுத்திருந்து இரத்தம் கொடுத்தார்கள் இல்லை விற்றார்கள். தலா பதினாறு ரூபாய் பெற்றுக்கொண்டு இறங்கினார்கள். கட்டம்போட்ட கைலி அணிந்தவன் எழுத்துக்காரனிடம் தன் கதையைச்சொன்னான். என் தங்கை ஜென்ரல் வார்டில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறாள். வெளியிலிருந்து மருந்து வாங்க சீட்டு எழுதிக்கொடுத்திருக்கிறார்கள். கையில் காசில்லை அதனால் இரத்தம் விற்றேன் என்று சொல்லிவிட்டு எனக்கு இங்கிலீஷ் தெரியாது, சரியான மருந்து கொடுக்கிறார்களா என்று பார்ப்பதற்கு என்னுடன்  மருந்துவாங்க உதவிசெய்யமுடியுமா என்றான்,. பல மெடிக்கல்ஷாப் அலைந்தார்கள் கடைசியில் ஒரு ஷாப்பில் மருந்து கிடைத்தது.. விலை 27 ரூபாய், அவனுக்கு தொண்டை அடைத்துவிட்டது. இன்னொரு பாட்டில் ரத்தம் கொடுத்துட்டு வரட்டுமா எனக்கேட்டான்.

எழுத்துக்காரன் சொன்னான், ஒருநாளைக்கு ஒருவாட்டிதான் எடுப்பார்கள் என்று தன்னுடைய 16 ரூபாயை கொடுத்தான்.

 ‘அப்புறம் நீ எப்படி ஊருக்கு போவ’

‘ஊருக்கு நாளைக்கு போய்க்கிறேன் இந்தா பணம்’

மருந்துவாங்கிக்கொண்டு அவன் தங்கை படுத்திருந்த ஜென்ரல் வார்டுக்கு சென்றார்கள். அங்கே  அவனுடைய அம்மா, மருந்துவாங்க காசு ஏது?

இதோ, என்னுடைய நண்பர்தான் கொடுத்தார். அம்மாவிற்கு ரத்தம்விற்றது தெரிந்தால் ஆதிரத்தம் சுண்டிவிடுமே!!

இப்படி முன்பின் தெரியாத ஒரு மனிதனுக்கு ரத்தம்விற்ற காசில் உதவியவர் மலையாள எழுத்தாளர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு.