திங்கள், 7 ஜனவரி, 2013

இந்தியாவும் பாரதமும்...


பாலியல் பலாத்காரம் இந்தியாவில்தான் நடக்கிறது ,அது பாரதத்தில் இல்லை என்று அருளியிருக்கிறார் சங்பரிவாரத்தின் தலைவர் மோகன் ஜி! அதென்ன இந்தியாவும் பாரதமும் வேறு வேறா? கிராமப்புற இந்தியாவை பாரதம் என்கிறார், நகரங்கள்  அவர்களுக்கு இந்தியா! இன்னும் அவர் கண்களில் பழய்ய பாரதத்தில் நிலப்பிரபுக்கள், குறுநில மன்னர்கள் யோக்கிய சிகாமணிகளாகத் தெரிகிறார்கள். பெண்களை போகப்பொருட்களாக அந்தப்புரத்தில் அடக்கிய மன்னர்கள் காலத்தில் பாலியல் வன்முறை வெளியே எப்படி நடக்கும். தான் ஆசைப்படுகிற பெண்களையெல்லாம் பலாத்காரமாக தூக்கிவருவது வீரச்செயல் மட்டுமல்ல கலாச்சாரம்!

நகர்புறங்களில் அதுவும் தில்லியில் நடந்த பாலியல் வன்முறை மட்டும்தான் இவர் கண்களுக்கு தெரிந்திருக்கிறது. அவர்களின் தலைமையகத்திலிருந்து 80மைல் தொலைவிலுள்ள கயர்லாஞ்சியின் கொடுமை தெரியவில்லை அது புண்ணிய பாரதபூமியில் தான் உள்ளது. ஒரு தாயையும் மகளையும் நிர்வாணமாக தெருவில் விரட்டி அவர்களை வன்புணர்ச்சி செய்ததை அந்த கிராமமே வேடிக்கை பார்த்தது. தருமபுரிக்கு அருகே தலித்களின் வீடுகளை தீக்கிரையாக்கியது பாரதத்தில்! ஹரியானா மாநிலத்தில் சென்ற ஆண்டு அக்டோபர் , நவம்பர் மாதத்தில் மட்டும் 19 பாலியல் வன்முறைகள் நடந்துள்ளது அதில் 15 பாலியல் வன்முறைகள் தலித் பெண்கள் மீது இதுவும் நிச்சயமாக பாரதத்தில் தான் உள்ளது. கிராமப்புறங்களில் நடக்கின்ற வன்செயல்கள் ஊடகத்தில் வருவதில்லை.

மோகன் ஜி சொல்கிறமாதிரி இந்தியா என்பது Modenrn Industrial Socity பாரதம் என்பது  Feudal Socity. இன்னும் நிலப்பிரபுத்துவ ஆதிக்கததிலிருந்து அவர் சிந்தனை மாறவில்லை. பெண்கள் அரைகுறை ஆடையணிவதால் மட்டும் தான் பாலியல் வன்முறை நடக்கிறதாச் சொல்கிறவர் கிராமப்புறங்களில் அப்படி ஆடைகளை அணியாமல் பெண்கள் ஏன் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாகிறார்கள். பெண்கள் வேலைக்குச் சென்றால் கலாச்சாரத்திற்கு ஆபத்து என்கிற சங்கராச்சாரியார்களின் சிந்தனையும் இவர் சிந்தனையும் எவ்வளவு ஒத்துப்போகிறது. மேலும் நேற்று இந்தூரில் கீழ்க்கண்டவாறு திருவாய் மலர்ந்திருக்கிறார்.

“A husband and wife are involved in a contract under which the husband has said that you should take care of my house and I will take care of all your needs. I will keep you safe.
 
“So, the husband follows the contract terms. Till the time, the wife follows the contract, the husband stays with her, if the wife violates the contract, he can disown her,” he told a rally here on Saturday.
 
“...Similarly, if a husband is unable to fulfil the terms of contract, then the wife can break it. Everything is based on contract. ( இன்றைய தி ஹிந்து நாளிதழ்)
 
இவர்கள் அதிகம் பேசவேண்டும், உள்ளக்கிடக்கைகள் வெளிவரும் அது, ஒன்றும் கொமேனிகளின் பேச்சுக்கு குறைவாக இருக்காது என்பது நிச்சயம்.

ஞாயிறு, 6 ஜனவரி, 2013

மொழிகள் பற்றி...



எப்போதுமே அவரவர் தாய்மொழி உயர்ந்ததுதான் ஆனால் அதை மட்டும் வைத்துக்கொண்டு மற்றமொழிகளை குறைத்து மதிப்பிடக்கூடாது. இன்றைக்கு மின்னஞ்சலில் வந்த செய்தியில் தமிழ் மொழியின் ஆரம்பம் கி.மு. 50000 ஆண்டுகளாம். தலைசுற்றுகிறது, மொழிப்பற்று இருக்கலாம் ஆனால் புருடா விடுவதர்கு ஒரு அளவு வேண்டாமா? அதேபோல உலகில் முதலில் மனிதர்கள் தோன்றிய இடம் லெமூரியா கண்டம் எப்போதென்றால் 2.5 பில்லியன் ஆண்டுகள் அப்படியென்றால் 250 கோடி ஆண்டுகள். இன்னும் இதைபொன்ற அறிவியலுக்கு முரணான நிறைய தகவல்கள் கொண்ட மின்னஞ்சல்கள் , வலைப்பக்கம் மூலமாகவும் நிறைய பேரை சென்றடைகின்றன. ஆகா நாம் தமிழர்கள் எவ்வளவு பெருமைக்குரியவர்கள் என்ற புளங்காகிதம் அடைகிறோம். இன்னும் தமிழிலிருந்து சீனமொழிக்குடும்பம் பிரிந்ததாம் எப்போதென்றால் 35000 - 50000 ஆண்டுக்கிடையில். இந்த தவலை யார் உருவாக்குகிறார்கள் என்று தெரியாது ஆனால் நமக்கு எளிதான விஷயம் அதை அப்படியே கொஞ்சம் அது உண்மையா, இல்லையா என்று ஆராயாமல் பார்வேர்டு செய்துவிடுவதில் ஒரு மகிழ்ச்சி. ஒரு சில நண்பர்கள் மூடநம்பிக்கைகளை கடைபிடித்துக்கொண்டே அதற்கெதிரான செய்திகளையும் மற்றவர்களுக்கு சொல்கிறார்கள். முதுகலையில் அறிவியல் வேதியியல் படித்த நண்பர்கள் சிலர் ‘ஏழுமலையானின் புகைப்படத்தை’ மெயிலில் அனுப்பி ஒரு பத்து பேருக்கு இதை பார்வேர்டு செய்தால் இத்தனை நாளுக்குள் நல்லது நடக்கும்  அதை உணர்வீர்கள் என்று அனுப்புவது கொஞ்சமும் அவர்கள் கற்ற கல்வியை வாழ்க்கைக்கு பயன்படுத்தவில்லை என்பதைக் காட்டுகிறது.

தமிழ்நாட்டிலிருந்தே வெளியே எந்த மாநிலத்திற்கும் சென்றாலும் நம்மை எளிதாக அடையாளம் காணுகிறார்கள் எப்படி இந்தி சுத்தமா தெரியாது? எந்த மொழியை கற்கவேண்டும் என்பது அவரவர் உரிமை, மத்திய அரசாங்கம் ஹிந்தியை திணித்தது என்பதற்காக திமுகவில் மொழிப்போர் தியாகிகள் அதாவது தீக்குளித்தார்கள் அந்த நெருப்பை வைத்து ஆட்சியை பிடித்தார்கள். ஆங்கிலம் கற்பதில் எந்த இழிவும் இல்லை, அது ஏகாதிபத்திய மொழி என்று இகழ்வதில்லை அது இல்லையென்றால் இந்தியாவை விட்டு வெறெங்கும் செல்லமுடியாது என்பதைவிட கணிதம், மருத்துவம், அறிவியல் , தொழில்நுட்பம் எல்லாம் ஆங்கிலம்தான்.  சரி, இந்தியை ஒரு தொடர்பு மொழிக்காக நாம் கற்பதில் என்ன தவறு, ஒரு மலையாளி எங்கே சென்றாலும் இன்னொரு மலையாளியிடம் தாய்மொழியில் பேசுகிறான். ஆனாலும் அவன் ஹிந்தியை கற்றுக்கொண்டான். தமிழ் எங்கள் மூச்சு என்று பேசியவர்கள் காலத்தில்  தான்  தமிழ்நாட்டில் தமிழை ஒருபாடமாகவது கற்கவேண்டும் என்று சட்டம் போட வேண்டியிருக்கிறது. இது அவர்களின் தமிழ் பற்றுக்கு கிடைத்த வெற்றி! இன்னும் இந்த  தமிழர்கள் இரண்டாம்  /மூன்றாம் விருப்பப்பாடமாக பிரெஞ்ச் கற்கிறார்கள், ஆனால் தமிழை பாடமாக கற்காதவர்கள் தமிழகத்தில் உண்டு. எப்போதும் மொழிகளில் உயர்வு தாழ்வு இருந்திருக்கிறது. 19ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் படித்தவர்கள், பண்க்காரர்கள் பிரெஞ்சில் தான் பேசுவார்கள் ரஷ்யாவிலும் ஜார் மன்னர் காலத்தில் மேட்டுக்குடியினரின் மொழி பிரெஞ்ச் தான். இந்தியாவில் மேட்டுக்குடியினரின் மொழி ஆங்கிலம்,சாமானியர்கள் பேசுவதை எலைட் குடிகள் பேசக்கூடாது என்பது உலக நியதி. இப்போது தமிழகத்தை விட்டு வெளியே வந்து ஹிந்தி தெரியாமல் அவஸ்தை படுபவர்கள் எல்லோரும் அரசியல்வாதிகளை ஏசுகிறோம். என்ன செய்வது. காசுகொடுத்து ஹிந்தி  கோச்சிங் சென்றாலும் பரவாயில்லை அரசாங்கப் பள்ளியில் அதை குறிப்பிட்ட வகுப்புக்கு மேலே ஒரு பாடமாக வைப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்கள், விருப்பப்பாடமாக வையுங்கள்,  விருப்பமுள்ளவர்கள் கற்றுக்கொள்ளட்டும்

சம்ஸ்கிருதத்தைப் பற்றி நீண்டகாலமாக ஒரு அபிப்பிராயம் வைத்திருந்தேன், அது தேவபாஷை, வேதங்களின் மொழி, செத்த மொழி, மேலும் மதவாத சக்திகள் சம்ஸ்கிருத்ததை தலையில் வைத்துக் கொண்டாடுவதால் இன்னும் அதர்கு மேலே வெறுப்பு, இந்தியாவில் அதற்கு செம்மொழி அந்தஸ்து கொடுத்து அதை வளர்ப்பதற்கு இலாகா போட்டு ஒவ்வொரு பட்ஜெட்டிலும் ஒதுக்குகிற நிதியைப் பார்த்து வெறுப்பு, ஆனால் சம்ஸ்கிருதத்தைப் பற்றி சமீபத்தில் நீதிபதி கட்ஜூ எழுதிய ‘sanskrit a language of science' என்ற கட்டுரையை வாசித்ததிலிருந்து அதன் மேலிருந்த பார்வை மாறிவிட்டது. கோவில்களில் மந்திரங்களை உச்சரித்துக்கொண்டு அதைவைத்து பணம் பண்ணுகிற ஒரு கூட்டத்தின் மொழி எப்படி விஞ்ஞான மொழி?

சம்ஸ்கிருதத்தில் 5 சதம்தான் மதம் சம்பந்தமானது, மீதி 95 சதம் தத்துவம், அறிவியல் கணிதம், சட்டம், இலக்கியம், கவிதை, மருத்துவம் பற்றியது. முதலில்  இந்தியத்தத்துவங்கள் பற்றிபார்த்தால் கடவுளை மறுத்த தத்துவதங்கள் தான் அதிகம், நியாயம், வைசேடிகம்,சாங்கியம், யோகம், மீமாம்சம், வேதாந்தம். இதில் முதல் 5 தத்துவங்கள் கடவுள் மறுப்பைக் கொண்ட தத்துவங்கள். இன்னும் சார்வாகம், பவுத்தம், சமணம் போன்ற தத்துவங்கள் வேதமரபுகளுக்கு எதிரானவை, பின்னாளில் சமணமும், பெளத்தமும் மதமாகிப்போனது. இந்தியாவில் பொருள்முதல்வாதக் கருத்துக்கள் தோன்றிய தத்துவங்கள் பின்னர் வேதமதத்தால் அழிக்கப்பட்டன. கணிதத்திலும் நமது முன்னோர்கள் பூஜ்யம் கண்டுபிடிப்பு பெரிய சாதனை, எண் களை அரேபிய எண்கள் என்று ஐரோப்பியர்கள் அழைத்தார்கள், அரேபியர்கள் இந்தி எண்கள் என்றார்கள் உண்மையில் யார் கண்டுபிடித்தது? அரபி, பாரசீகம் உருது மொழிகள் வலமிருந்து இடமாக எழுதப்படுபவை ஆனால் எண்களை மட்டும் அவர்கள் இடமிருந்து வலமாகத்தான் எழுதுகிறார்கள் அப்படியென்றால் இடமிருந்து வலமாக எழுதும் இந்தியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது என்பது உறுதியாகிறது. ஐரோப்பாவில் தோன்றிய எண்முறை என்பது ரோமன் எண்கள். ஒன்று, ஐந்து, பத்து, ஐம்பது, நூறு, ஐநூறு ,ஆயிரம் என்ற எண்களுக்கு மட்டும் குறீயீடு உள்ளது அதை வைத்துதான் எழதமுடியும், உதாரண்மக்க 3000 என்று எழுதவேண்டுமானால் M என்பது ஆயிரத்தைக்குறிக்கும், மூன்றுமுறை MMM எழுதினால் அது 3000. இந்தியாவில் வானசாஸ்திரத்திலும் ஆர்யப்பட்டா, பிரம்மகுபதர், பாஸ்கரா வராகமிஹிரர் போன்றோர் பங்களிப்பு மகத்தானது.

இந்தியத்தத்துவங்கள் பற்றி தனியாகவே ஒரு பதிவு எழுதவேண்டும்.

வெள்ளி, 4 ஜனவரி, 2013

Feudal to Modern indusrial Socity -1

சென்ற ஆண்டின் கடைசியில் இரண்டு சமூகக் கொடுமைகள் ஒன்று தில்லியில் நடந்த பாலியல் பலாத்காரம் மற்றொன்று தருமபுரியில் ஆதிக்கசாதி வெறியர்கள் நடத்திய வன்முறை அதை சாதிக்கட்சியின் தலைவர் ராமதாஸ் நியாயப்படுத்துவது மேலும் வன்செயல்களை தூண்டிவிடுவது போல் கிராமங்கள் தோறும் பேசுவது. தில்லியில் மாணவியை பாலியல் பலாத்காரம் நிகழ்ந்தபின் நியாயத்திற்காகவும் பென்களின் பாதுகாப்புக்காகவும் மக்கள் தன்னிச்சையாக தெருவில் இறங்கி அதுவும் அதிகார மையமான காங்கிரஸ் தலைவர் வீட்டுமுன்பு போராடினார்கள், இந்தப் போராட்டத்தில் பங்கு பெற்றவர்கள் எல்லாம் மத்தியதர வர்க்க மக்கள், இளைஞர்கள், மாணவ மாணவிகள். தனக்கு நேர்ந்தால் சோகம் அது மற்றவர்களுக்கு நேர்ந்தால் செய்தி என்பதை இழிசொல்லாக மாற்றிக்காட்டியது தில்லியின் போராட்டம் அதைத்தொடர்ந்து நாடெங்கும் மாதர்சங்கம், இளைஞர் அமைப்புகள ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதுவரை ஊர்வலம் , சாலைமறியல் செய்வதெல்லாம் பொதுபுத்திக்கு அசிங்கமாக இருந்த செயல்கள் இப்போது அவர்களே ஊழல்களுக்கெதிராகவும், தனியார் பள்ளிகளின் கட்டணக்கொள்ளை களுக்கெதிராகவும் சமூக அநீதிகளுக்கெதிராகவும் வீதியில் இறங்கிப் போராடினர்கள்.

வடமாவட்டங்களில் ராமதாஸின் ஓட்டுவங்கி சரிய ஆரம்பித்துவிட்டதன் எதிரொலியாக அந்த சாதி மக்களை ஓரணியில் திரட்ட தாழ்த்தப்பட்ட மக்களை அச்சுறுத்துபவர்களாக சித்திரித்து பிரச்சாரம் செய்தார்கள், இனத்தை வைத்து, மொழியை வைத்து, மதத்தை வைத்து பிழைப்பு அரசியல் செய்வோர் எல்லோரும் கையாளும் ஒன்று  “அச்சுறுத்தும் ஓர் எதிரியை கட்டமைப்பது” அதை செய்தார்கள். ராமதாஸைத் தொடர்ந்து தமிழகத்தில் பிறசாதித்தலைவர்களும் சாதி ரீதியாக மக்களை அணிதிரட்டும் பணிகளை துவக்கியுள்ளார்கள். இடஒதுக்கீட்டின் மூலம் அரசு சலுகையை அனுபவிக்க நாங்கள் ‘மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள்’ என்று சாதியை அடையாளம் போட்டுக் கொள்பவர்கள் தலித்கள் விசயத்தில் பார்ப்பனீயத்தை கடைபிடிக்கிறார்கள். ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்றான் பாரதி , வலைப்பக்கம் ஒன்றில் ‘சாதிகள் இல்லையடி டாக்டர்’ என்று கத்தவேண்டும் போலிருந்தது என்று எழுதினார் ஒரு நண்பர். இல்லை, நேற்றுவரை சாதிக்கடசிகளை விமர்சித்தபடித்த, மிகவும் படித்தவர்கள் அதிகமாக சாதி அபிமானத்தில் சிக்கியிருக்கிறார்கள் . படித்த கல்வி எந்த விதத்திலும் சமூகப் பார்வையை உயர்ந்தவில்லை. எல்லா சாதியினரும் ஏதாவது ஒரு பழய்ய சாம்ராஜ்யத்தின் ராஜாவின் சாதியை ஆராய்ச்சி செய்து நாங்கள் நாடாண்ட ‘சாதி’ என்று பெருமை பட்டுகொள்கிறார்கள். போர் வெறியர்களை எங்கள் சாதிக்காரன் என்று சொல்வதில் என்ன ‘ஆதிக்கப் பெருமையோ’ தெரியவில்லை. உன் சாதியின் வரலாறு என்ன? மனிதன் தொன்றிய காலத்திலேயெ உன்சாதி இருந்ததா? இடையில் என்ன காரணத்திற்காக தோன்றியதோ அது ஒரு நாள் அருகித்தான் போகும். மனிதன் என்ற அடையாளத்தைவிட உன்னதமான அடையாளம் என்ன வேண்டிக்கிடக்கிறது? மத்மென்றால் அதுக்கும் அதிகபட்சமாக 1500,2000, 3000 ஆண்டுகள்தான் வரலாறு. அதற்கும் முன்னாரும் மனிதர்கள் இப்புவியில் வாழ்ந்தார்கள். மொழி அடையாளம் என்றால் அதற்கு தோன்றிய வரலாறு இருக்கிறது, தேசமென்றாலும் அதற்கொருஆரம்ப ஆண்டு இருக்கிறது இப்போது இருக்கிற ராஜ்ஜியங்கள் 200 ஆண்டுகளுக்கு முன்னால் இதே மாதிரி இருக்கவில்லை, ஏன் இந்தியா என்ற தேசம் 70 ஆண்டுகளுக்கு முன் இப்படியிருக்கவில்லை. ஆனால் மனிதனே உன்னுடைய மூதாதையர்களின் வரலாறு இருக்கிறதே, அது நிமிர்ந்து நடைபோடு கைகளை உழைப்பில் பயன்படுதிய காலத்திற்கும் முன்பு செல்கிறது. என்னுடைய வரலாறு , தேசத்தின், மொழியின் மதத்தின் வரலாற்றை பாரபட்சமின்றி தெரிந்துகொண்டால் இந்த சாதித்தலைவர்கள் உன்னை ஒன்றும் செய்யமுடியாது, வெட்கித்துப்போவார்கள்.

இந்தியாவின் வரலாறு என்ன? இங்கே ஏன் உலகத்தில் எங்கும் இல்லாத அள்விற்கு மனித இனக்கள், கருப்பாக சிலர், மங்கோலியர்களைப் போல் சிலர், ஐரோப்பியர்களைப் போல் சிலர் என்ற நிறவேறுபாட்டிலும், எத்தனை மொழிகள், எழுத்தே இல்லாத மொழிகள் ஆயிரமாவது இருக்கும். கலாச்சாரம் எத்தனை, கடவுளகள் எத்தனை! எப்படி இங்கே இத்தனை வேற்றுமையான இனம், மதம்,மொழி பண்பாடு கொண்டவர்கள் இருக்கிறார்கள்? 130 கோடி மக்கள்தொகை கொண்ட அத்தனை பெரிய நிலப்பரப்பு கொண்ட சீனநாட்டில் ஒரே மொழி, 90 சதமக்கள் ஹன் இனத்தை சேர்ந்தவர்கள் எல்லோரும் மங்கோலியர்களை போல் இருப்பார்கள் பேசுகின்ற மொழி பல இருந்தாலும் எழுத்துமொழி மாண்டரின் என்ற ஒரு மொழிதான். ஏன் இந்த வித்தியாசம் என்பதை அறிவியல் பூர்வமாகப் பார்க்கவேண்டும், ஏனென்றால் இந்தியா ஒரு குடியேற்றநாடு, அமெரிக்காவைப்போல் 200 அல்லது 300 ஆண்டுகளில் குடியேற்றம் நிகழ்ந்துவிடவில்லை இந்தியாவின் குடியேற்ற காலம் அதிகபட்சமாக 10000 ஆண்டுகள். ஏன் அப்படி மக்கள்கூட்டம் இந்தியா நோக்கி வந்தார்கள்? வெள்ளைக்காரன் 300 வருடங்களுக்கு முன்பு வந்தானென்றால் இங்கே செல்வங்கள் குவிந்துகிடந்தன் அதைப்பார்த்து வந்தான், பத்தாயிரம் வருசத்துமுன்பு வாழ்ந்த மனிதன் ஏன் இந்திய நிலப்பரப்பை நோக்கி ஏன் ஓடிவரவேண்டும். இன்றைக்கு இந்தியர்கள் அமெரிக்காவிற்கும் பிற நாடுகளுக்கும் ஏன் ஓடுகிறார்களோ அதே செளகரியாமான அல்லது சோறு கிடைக்கிற தேசமென்று வந்தார்கள்.

இந்திய நிலப்பரப்பு அந்தமாதிரி, நமக்கு மேலே ஆப்கனில் பாறைகள் பாதி பரப்பள்வை நிறைந்திருக்கும் அங்கே விவசாயம் செய்யமுடியாது, அதற்கும் மேலே இருப்பவர்களுக்கு நிலம் பனி உறைந்து அது ஒரு 6மாதகாலம் நீடிக்கும் எப்படி அங்கே சோறுகிடைக்கும், வேட்டையாட விலங்குகள் கூட கிடைக்காது, இப்படித்தான் உலகின் பல பகுதிகளிலிருந்து இங்கே குடியேறினார்கள்.இங்கே நதிகள், விவசாயம் செய்வதற்கேற்ற வெப்பநிலை. சம்வெளிப்பிரதேசம் என்பது குடியேற்றவாசிகளுக்கு நல்ல வாழ்வை கொடுத்தது. வரலாற்றில் இந்தியாவிலிருந்து ஒரு கூட்டமாக யாரும் பிழைப்புதேடி செல்லவில்லை, பிரிட்டிஷ், பிரெஞ்சு காலனி ஆதிக்கவாதிகள் தங்களுடைய வேரு காலனிநாடுகள்க்கு இங்கெயிருந்து மக்களை கொண்டுசென்றதை தவிர்த்து. சிலர் பிழைப்பு அரசியலுக்கு ஆரியர்களை வந்தேரிகள் என்கிறார்கள், அப்படி அழைப்பவர்களும் வந்தேறிகள்தான். திராவிடர்கள் பூர்வ குடிகள் அல்ல, இன்றைக்கு காடுகளில் வசிக்கும் பழங்குடியினர்தான் இந்த மண்ணின் மைந்தர்கள் அவர்கள் தோடர்கள், சந்தால் பில் என்ற பழங்குடிகள் தான். அவர்களை (அ)நாகரீக மனிதர்களாக நாம் காட்டிற்குள் துரத்திவிட்டோம், இபோது கார்ப்பரேட்டுகள் அவர்களை காடுகளிலிருந்து துரத்த ஆரம்பித்துவிட்டார்கள் என்பது வேறுகதை. ஒவ்வொரு நாகரீகவாசியும் பிழைக்கவந்த கூட்ட்டத்தின் அங்கத்தினர்கள், இவர்கள் தனித்தனி குழுவாக தனித்தனி பிரதேசங்களிலிருந்து வெவ்வேறான மொழி, பண்பாடு, கடவுளை இங்கே கொண்டுவந்தார்கள் அதை தொடர்கிறார்கள். இப்போது பேச்சு மொழி ஒவ்வொரு 50 அல்லது 100 கி.மீ தூரத்தில் வித்தியாசம் இருக்கிறது. சாதியின் வர்லாறும் அப்படித்தான் மற்ற தேசங்களில்  தொழில்முறை சாதிகளாக இருந்த மக்கள் பிரிவினர் இங்கே ஆதிக்கம், அடிமை சாதிகளாக ஆட்சிசெய்த மதம் தத்துவனக்கள் உருவாக்கின. இங்கிலாந்தில் இன்னும் பெயர்களில் Taylor, Smith, Goldsmith, Baker, Butcher, Potter, Barber, Mason, Carpenter, Turner, Waterman, Shepherd, Gardener் என்று முடிகின்றன இவைகெளெல்லாம் அவர்கள் தொழில்முறை சாதியினர். தொழிற்புரட்சி இந்த முறையை தகர்த்துவிட்டது, இந்தியாவிலும் இந்த முறை மாறும். இப்போது பாதிகிணறு தாண்டியாகிவிட்டது, இன்னும் முடிவேட்டுபவரின் மகன் முடிவெட்டத்தான் வேணும் என்று யாரும் கட்டளை இடமுடியாது.

மாற்றங்களை யாரும் தடுக்கமுடியாது, மெதுவாக அல்லது விரைவாக மாறுவது என்பது நிலவும் அரசியல் மக்கள் போராட்டங்களில் தான்.

 

புதன், 2 ஜனவரி, 2013

Feudel to Modern Industrial socity.....


சமீபத்தில் அவரது 125வது  பிறந்தநாளை தேசமெங்கும் கொண்டாடினார்கள் அவர் கணிதமேதை ராமானுஜன். அவர் இறந்தபோது ஈமச்சடங்கு செய்வதற்கு அவரது சொந்தபந்தங்கள் வரமறுத்துவிட்டார்கள் ‘ஹிந்து’ பத்திரிக்கையின் அப்போதைய ஆசிரியர் கஸ்தூரிரங்கனின் முயற்சியால் அவரது ஈமச்சடங்கு நடைபெற்றது, அவரை சாதிவிலக்கம் செய்ய அவர் ஒன்றும் பாரதியைப் போல் புரட்சி கவிகளை பாடிவிடவில்லை பிராமணர்கள் ‘கடல்கடந்து’ செல்லக்கூடாது என்பதை சாஸ்திரம் கூறுகிறதாம். இதை அவர் மீறியதால் அந்த நிலைமை அவரது இறுதி ஊர்வலத்தில்.

1857 முதல் இந்திய சுதந்திரப்போர் என்றழைக்கப்படுகிற சிப்பாய்ப்புரட்சியை துவக்கியவர்கள் வெள்ளை ராணுவத்தில் விசுவாசிகளாக இருந்துகொண்டு அவர்களுக்கு சேவைசெய்துவந்த சிப்பாய்கள்தான். பன்றி மற்றும் பசுவின் கொழுப்பு தடவப்பட்ட தோட்டாக்களை பயன்படுத்த மாட்டோம் என்று இந்து மற்றும் முஸ்லீம் சிப்பாய்கள் வெகுண்டெழுந்தார்கள். அந்த புரட்சியின் நாயகன் மங்கல் பாண்டே வங்காள ராணுவத்தில் பாரக்பூரில் பணிபுரிந்தான், வெள்ளை ராணுவத்தில் ஏராளமான படித்த பிராமணர்கள் சிப்பாய்களாக இருந்தார்கள், இஸ்லாமியர்களும் இருந்தார்கள். அப்போது வெள்ளை  ராணுவத்தில் இருந்தால் அப்படியொரு செல்வாக்கு. பிராமணர்கள் ‘கடல்கடந்து’ செல்லக்கூடாது என்பதை மனுஸ்ருமிதி சொல்கிறது என்பதற்காக அவர்கள் வங்காளராணுவம் சார்பாக பர்மியப்போரில் பங்கு பெற மறுத்ததற்காக 1830 வாக்கில் பீரங்கியின் வாயிலில் கட்டிவைத்து சுடப்பட்டார்கள், தப்பியவர்கள் கடலில் விழுந்து மாண்டார்கள். வெள்ளை ராணுவம் தங்கள் மதத்தை அவமதித்த செயல் அவர்கள் மனதில் குடிகொண்டது . அந்த சிப்பாய் புரட்சியில் அதே கொழுப்பு தடவிய குண்டுகளை இந்து- முஸ்லீம் சிப்பாய்கள் கடித்து வெள்ளை ராணுவத்திற்கு எதிராக போரிட்டார்கள். சமூகத்தேவை என்று வந்துவிட்டால் மத ஆச்சாரம் தூக்கியெறியப்பட்டது.

சுதந்திரப்போராட்ட வீரர் பாலகங்காதர திலகரை வெள்ளை அரசாங்கம் 1906ம் ஆண்டில் 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையை விதித்து பர்மா மாண்ட்லே சிறையில் அடைத்தது. கிரோல் என்ற ஆங்கிலப் பத்திரிக்கையாளர் ‘திலகர் இந்திய வன்முறைப் புரட்சியின் தலைவர்’ என்று எழுதியதால் அவர்மீது மானநஷ்ட வழக்கு போடுவதற்கு 1918ம் ஆண்டு திலகர் லண்டன் சென்றார். 13 மாதங்கள் கழித்து இந்தியா திரும்பியவர் பம்பாய்க்கு வந்ததும் அவர் செய்த முதல் காரியம் 1000 பிராமணர்களுக்கு உணவளித்து ‘சகஸ்கர பிராமண பூஜை’ என்பதை நடத்தினாராம். எதற்காக? பிராமணர்கள் கடல்கடந்து சென்றால் பாவம் என்ற நிலப்பிரபுத்துவ கலாச்சாரம் இருந்துள்ளது.

அப்போது  சாதிவிலக்கம்  செய்யப்பட்டவர்கள் இப்போது  கொண்டாடப்படுகிறார்கள்,  ஏனென்றால் சமூகத்தின் தேவைக்காக எல்லாம் மாறும் .