வியாழன், 28 ஏப்ரல், 2011

உண்மைகள் வெளிவரும் காலம்....

இரண்டு நாட்களுக்கு முன்னால் ‘அடர்கருப்பு’ வலைப்பக்கத்தில் ஒருவர் பின்னூட்டம் எழுதினார், இப்படி “கேரளாவிலும், மேற்குவங்கத்திலும் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தலில் தோற்றுவிட்டால் அதைக்கூட அமெரிக்க சதி” என்று கம்யூனிஸ்ட்கள் சொல்வார்கள் என்றார். இதமாதிரி இன்னும் நிறையபேரு கேக்கிறாங்க ஏன் இந்த கம்யூனிஸ்ட் கட்சிக்காரங்க அமெரிக்காவே எப்ப பார்த்தாலும் எதிர்க்கிறாங்க,அங்கயிருந்து ஜார்ஜ்புஷ் வந்தாலும் சரி நம்ம கருப்பர்கள் இனத்திலிருந்து வந்த ஒபாமா வந்தாலும் ஆர்ப்பாட்டம் பண்ணுறாங்க இப்படித்தான். அமெரிக்க அந்தமாதிரி உலகம் பூராவும் அவங்கவிருப்பத்த நிறைவேத்துகிற அரசாங்கம் இருக்கணும்னு நினைக்கிது, அப்படியில்லன்னா அவங்கள தூக்குறவேலையப் பாக்கறாங்க. இப்ப நம்மூர்ல தேர்தல்ல வைகோவை அரசியல்ல இருந்து ‘வெளிய’ தள்ளுறதுக்கு ஸ்டெர்லைட் கம்பெனி ஒரு அம்மாவுக்கு காசுபணம் கொடுத்திருக்காங்கன்னு செய்தி வந்தது. வைகோ தூத்துக்குடியில் அமைக்கவிருந்த ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராக போராட்டம் நடத்துனாரு, அந்த ஆலையை தடுக்கமுடியல அப்புறம் கோர்ட்டுக்குப் போனாலாவது நியாயம் கிடைக்கும்னு போனாரு (அது மூட நம்பிக்கைன்னு அந்த பகுத்தறிவுவாதிக்கு தெரியல) எப்படி கிடைக்கும். அதமாதிரி தான் இங்க இடதுசாரி கட்சிக்காரங்க புதிய பொருளாதாரத்தை எதிர்க்கிறாங்க, அமெரிக்க-அணு ஒப்பந்தத்தை எதிர்க்கிறாங்க, சில்லரைத்துறையில் அந்நியமூலதனத்தை எதிர்க்கிறாங்க,ராணுவக்கூட்டணியை எதிர்க்கிறங்க, பன்னாட்டு கம்பெனிகளுக்கு வரமுறையில்லாம கொள்ளையடிக்கதுக்கு எதிர்ப்பு சொல்றாங்க இவ்வளவு போதாதா? ஒரு காமெடி, 2004ல் நடந்த பொதுத்தேர்தல்ல இடதுசாரிங்க 60 சீட்டுக்கும் மேல ஜெயிச்சு அவங்க ஆதரவுயில்லாம மத்தியல ஒரு ஆட்சி அமைக்கமுடியாதுங்கிற நிலைம வந்தவுடனே சென்செக்ஸ் டமாலுன்னு கீழே போயிருச்சு, ஸ்திரத்தன்மை ஆட்சி இருக்காதாம்.

இந்த சென்செக்ஸ் பங்கு வர்த்தகத்தில ஈடுபடுகிற நம்ம நாட்டு மக்கள் 1.13 சதவீதம்தான் அத சிஐஐ என்கிற பெருமுதலாளிகள் சங்கம்தான் சொல்லுது. அது அப்படி கீழபோனவுடனே இங்க இருக்கிற பத்திரிக்கைகள் கார்ட்டூன் போடுறாங்க ‘பங்குசந்தை பில்டிங்கை ஒரு பிளைட் மோதி உடைக்குது அதுக்கு வாலுல ‘சுத்தியல் அரிவாள்’ சின்னத்தைப் போட்டிருகாங்க. அன்னிக்கி நிதிமந்திரி சிதம்பரம் தனிபிளைட்டுல மும்பைக்கு ஓடுறாரு, முதலீட்டாளர்களே பயப்படாதீங்க ‘பூதம்’ ஒன்னும் பண்ணாதுன்னு. இந்த சென்செக்ஸ் இண்டெக்ஸை பத்திரிக்கையாளர் சாய்நாத் “Misrey Index" னு சொல்வாரு, ஏன்னா எப்பெல்லாம் பெரும்பான்மையான மக்களுக்கு நன்மை கிடைக்கிறமாதிரி ஒரு மசோதாவோ திட்டமோ வந்தா டமால்னு கீழே (கரடி வநதுறும்)போயிரும், அந்த மக்கள் கஷ்டப்படும் போது ‘காளை’ வந்துறும், எப்படின்னா 2004 ஜனவரியில சுனாமி வந்தப்ப இந்தியால, குறிப்பா தமிழ்நாட்ல நாகப்பட்ட்டினத்தில 30,300 வீடுகள் சேதம் ஆச்சு, நிறையபேர் இறந்துபோனாங்க அப்ப சென்செக்ஸ் ‘பீக்’ல் இருந்தது இது ஒண்ணு போதாதா? இங்க மட்டுமில்ல சுனாமி வந்த இலங்கை, இந்தோனேசியா நாடுகளிலும் இந்த மாதிரி பங்குச்சந்தைகளின் புள்ளிகள் உச்சத்தில இருந்தது, எதுக்கு? சுனாமி முடிஞ்சவுடனே 'rebuilding' க்காக பணம் வருமே அதுக்காக. அதமாதிரி பெட்ரோல்,டீசல் விலை கூடுனா விலைவாசியும் கூடுது சென்செக்ஸும் கூடுது, ஆனா பொதுமக்கள் கஷ்டபடுறாங்க அப்ப இது MISREY INDEX தானே? ட்ராக் மாறிப்போயிருச்சு....திரும்புறேன்.

போனவாரத்தில வந்த செய்தி ‘மம்தாவை வளர்த்தெடுக்கவேண்டும்’ என்று கல்கத்தாவிலுள்ள அமெரிக்கத்தூதரக அதிகாரிகள் அவங்க நாட்டுக்கு அனுப்புன செய்தி விக்கிலீக்ஸ் மூலமா வெளிய வந்திருச்சி. ஏன் ‘மம்தா’ வளர்க்கனும் அவங்க இடதுமுண்ணனிக் கெதிராக அரசியலில் இருக்காங்க, அவங்க ஆட்சிக்குவந்தா அமெரிக்கவுக்கு ’Friendly'யா இருப்பாங்க இதுக்கு்த்தானே!! நந்திகிராம், சிங்கூர், மாவோயிஸ்ட் கூட கூட்டணி. மே2009 லிருந்து ஜன்வரி 2010 வரைக்கு 366 மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள் மாவோயிஸ்ட்களால் கொல்லப்பட்டிருக்காங்க. இன்னைக்கு பேப்பர்ல வந்த செய்தி, 1995ம் வருசம் மேற்குவங்கத்தில் இருக்கிற புருலியாமாவடத்தில் ஒரு விமானம் மேல்யிருந்தே நிறைய ஆயுதங்களை கீழேபோட்டிருக்கு, ஏகே47 மாதிரி நிறைய நவீன ஆயுதங்கள் அன்னிக்குயிருந்த நரசிம்மராவ் அரசாங்கத்துக்கு இந்த விஷ்யம் நடக்கிறதுக்கு முன்னாடியே பிரிட்டிஷ் உளவுத்துறை மூலமா தகவல் கிடைச்சிருக்கு, ஆனா நடவடிக்கை எடுக்கல ஏன்னா அது இடதுசாரி ஆட்சிக்கு எதிரா போடப்பட்ட ஆயுதங்கள். அதுமட்டுமில்ல அந்த ஆயுத்த்தை வாங்குனதே கம்யீனிஸ்ட் கட்சிதான் பிரச்சாரமே பண்ணுனாங்க , இன்னக்கு உண்மை வெளியவந்திருக்கு குற்றம்சாட்டப்பட்ட கிம்டேவி என்பவர் ‘இடதுசாரி அரசுக்கு எதிராகத் தான் இந்த சதித்திட்டத்தை நிறைவேற்றினோம்’ என்று டைம்ஸ் நெள பேட்டியில சொல்லியிருக்காரு. இன்னிக்கியில்ல 1957ல் முதன்முறையா கேரளாவில அமைஞ்ச ஈஎம்எஸ் தலையில நடந்த இடதுமுண்ணனிக்கெதிரா விமோச்சன சமரம் நடந்தது. அதுலயும் அமெரிக்க வேல இருந்ததா முன்னாள் அமெரிக்க தூதர் பேட்ரிக் மொய்நிகான் தன்னோட ‘A Dangerous place'ங்கிற புக்குல சொல்லியிருக்காரு, அதுமட்டுமில்ல கேரளாவிலயும், மேற்குவங்கத்திலயும் இடதுசாரி ஆட்சியை தூக்குறதுக்கு சிஐஏ மூலமா காங்கிரஸ் கட்சிக்கு ரெண்டுவாட்டி பணம் கொடுத்ததாகவும் சொல்லியிருக்காரு.

இன்றைக்கு எப்படி மேற்கு வங்கத்தில இடதுமுண்ணனிக்கெதிராக தீவிர இடதுசாரியான மாவோயிஸ்ட், திரினாமூல், இன்னும் சில வலதுசாரி மத அடிப்படைவாதிகளும் கூட்டணி சேர்ந்திருக்காங்க, இதேமாதிரி 1959ல கேராளவில ‘விமோச்சன சமர’த்தில காங்கிரஸ் கட்சி, சில சர்ச்சுகள்,மதபீடங்கள் என மெகா கூட்டணி சேர்ந்திருக்காங்க. விமோச்சம் சமரம் ஏன் நடந்ததுன்னு தனியா ஒரு பதிவே போடனும். இதெயெல்லாம் பார்க்கும்போது 160 ஆண்டுக்கு முன்னாடி வெளியிடப்பட்ட கம்யூனிஸ்ட் அறிக்கை சொல்ற முதல் வரிகள் தான் ஞாபகத்திக்கு வருது “ ஐரோப்பாவை ஒரு பூதம் பிடித்து ஆட்டி வருகிறது, அது தான் கம்யூனிசம் என்னும் பூதம். அந்தப் பூததத்தை ஓட்டுவதற்காக பழைய ஐரோப்பாவின் அனைத்து சக்திகளும் ஒரு புனித கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டுள்ளன. போப்பாண்டவரும், ஜார் மன்னரும், மெட்டர்னிஹூம், கிசோவும் பிரெஞ்சு தீவிரவாதிகளும், ஜெர்மன் காவல்துறை உளவாளிகளும் இந்தப் புனிதக்கூட்டணியில் இணைந்துள்ளனர்”.

மேலேயுள்ள வரிகளில் சொன்ன நாடுகள் மாறியிருக்கலாம் ஆனால் வர்க்கத்தன்மை என்பது மட்டும் எல்லாயிடத்திற்கு பொதுவானது.

திங்கள், 25 ஏப்ரல், 2011

அவதாரபுருஷர் மரிப்பதேன்?

சத்யசாயிபாபா தன்னுடைய 85 வயதில் இறந்துட்டாரு, இங்கேயுள்ள பத்திரிக்கைகள் தினமணி ‘முக்தி அடைந்தார்’ தினமலர் ‘ஸித்தியடைந்தார்’ அப்புறம் இந்த அரசியல்வாதிகள் (இடதுசாரிகள் விதிவிலக்கு)நம்ம பகுத்தறிவில் டாக்டர் பட்டம் பெற்ற தமிழக முதல்வர் கருணாநிதியிலிருந்து மோடி, மன்மோகன்சிங், அதவானி, சோனியா,ரோசைய்யா டெண்டுல்கர் ஒருத்தர் பாக்கியில்ல எல்லோரும் ஐயோ 96 வயசு வரைக்கும் இருப்பேன்னு சொன்னாரே இப்படி இடையிலேயெ போயிட்டாரென்னு கவலை படுறாங்க. இப்ப அவரு போனதைப்பத்தி கூட அதிக கவலையில்லை அடுத்த ‘அவதாரபுருஷர்’ யாருங்கிறது இப்ப கவலைப்படுறாங்க.

ஆந்திர மாநிலஅரசு 4 நாட்கள் அரசு துக்கநாட்களாக அனுசரிக்கிறது, இது செக்யூலர் அரசாங்கமா இல்லையா இப்படி அறிவிக்கலாமா? நம்ம நாட்ல ஒரு ஜனாதிபதி பாக்கிகிடையாது (எனக்கு தெரிஞ்சு கே.ஆர்.நாராயணன் விதிவிலக்கு )எல்லாரும் வந்து காலில் விழுகிறது, ஒரு அரசு விழாவாகவே மாறிவிடுகிறது. அதேமாதிரி ஒரு பிரதமர் பாக்கி கிடையாது. அப்ப பாவம் மக்கள் என்ன பண்ணுவாங்க. இங்க சிலபேரு அவரு சாமியாராக இருந்துகிட்டு மக்கள் பணியை செஞ்சிருக்கிறாருன்னு புகழுறாங்க, இந்த அரசாங்கத்துக்கு கொஞ்சமாவது வெட்கமில்லையா மக்கள்கிட்டயிருந்து எவ்வளவு வரி வரியாப் போட்டு பிடுங்கறேயே ஸ்கூலு, காலேஜூ, ஆஸ்பத்திரி, குடிக்க தண்ணிவசதி பண்ணித்தர முடியலையா? நம்ம பகுத்தறிவாதி பாபாவ சென்னைக்கு குடிநீர் ஏற்பாடு பண்ணியவர் என்று பெருமையோடு சொல்றாரு. இந்த மாதிரி டிரஸ்ட்களுக்கு, மடங்களுக்கு இத்தனெ கோடிக்கணக்காண பணம் எங்கிருந்துவருது அப்படின்னு விசாரிக்காம அவங்ககிட்ட போயி நமக்காக பிச்சை வாங்குறதுக்கு, அதுக்கு உலகவங்கிக்காரனே பரவாயில்லை. இப்படி நீங்க பணம் வாங்குறதுனால இன்னும் அந்தக் கூட்டத்துக்கு ஆள்சேர்த்துவிடுறாங்க.

கஷ்டப்படுகிற மக்களும் அவருகிட்டப் போறாங்க, மக்களுக்கு கஷ்டத்தை உருவாக்குகிற ஊழல்பேர்வழிகளும், பதுக்கல்பேர்வழிகளும் அவருகிட்ட போறாங்க. முன்னாடியெல்லாம் இந்த சாமியார்பேர்வழிகளுக்கு சொத்துபத்து ஒண்ணுமில்ல, இதெல்லாம் ஒரு பத்து பதினைஞ்சு வருஷமாத்தான். கேரளாவில ஒரு அம்மா, காலேஜ்கட்டுறாங்க, ஆஸ்பத்திரி கட்டுறாங்க, பள்ளிக்கூடம் கட்டுறாங்க. பிரதான்மந்திரி போயி அந்த அம்மாகிட்டஆசீர்வாதம் வாங்கிட்டு காலேஜ ஓப்பன்பண்றாரு. அப்புறம் எப்படி இவ்வளவு வருமானம் எப்படி வருதுண்ணு கேட்கறதுக்கு ஐடி ஆபிசருக்கு தெம்பு வருமா? சகமனிதர்களை தெருவில பட்டினியா கிடக்கிறதை பார்க்குறான், அவங்களை காரித்துப்பிட்டு பகவானுக்கு உண்டியல்ல போயி கோடிகோடியா பணத்தை கொட்டுறான். ஏழையின் சிரிப்புல இறைவன் எங்க தெரியிறாரு..நாட்ல மக்களுக்கு கல்வியறிவு எல்லாம் ஜாஸ்தியா இருக்கு, ஆனா பகுத்தறிவு ரிவர்சா போயிகிட்டு இருக்கு. கஷ்டப்படுறவன் இந்தமாதிரி சாமியாருகிட்ட போனாலாவது கஷ்டம் தீருமான்னு பார்க்கறான், காசிருக்கறவன் அங்கபோயி பாவத்தைக் கழுவிட்டு உண்டியல் போட்டுட்டு வரான். சித்திரா பெளர்ணமியண்ணிக்கு மேல்மருவத்தூர்ல ஏகப்பட்ட கூட்டம், எங்க பார்த்தாலும் ஒரே சிவப்பு சேலை,சிகப்பு வேட்டி,சட்டை கம்யூனிஸ்ட்க்கும் ஆதிபராசக்தி ஆளுகளுக்கும் வித்தியாசம் தெரியல. சபரிமலைக்கு நம்ம ஆளுக மாலைபோட்டுட்டு போகும்போது பெரியாரிஸ்ட்டுக்கும் அய்யப்ப பகதர்களுக்கும் வித்தியாசமே தெரியாது. 40 நாளக்கி சுத்தபத்தமா இருப்பாராம், நல்ல விசயம்தான் வருசம் பூரா இருந்துபாரு. அதுலஎண்ண கஞ்சத்தனம்.

வாயிலிருந்து லிங்கம் எடுத்தாராம், மேஜிக் காரன் வயித்திலிருந்து ஆட்டுக்குட்டியைவே எடுப்பான் அதுக்காக அவன் பின்னால போறதா? லிங்க எடுக்குற சாமியாரு அரக்கிலொ அரிசிய எடுக்கச் சொல்லுங்களேன் ஆக்கியாவது சாப்புடுலாம். இப்படித்தான் திருச்சியில ஒருத்தர் லிங்கம் எடுத்தாரு அப்புறம் ஜெயிலுக்குப் போனாரு..செத்தே போனாரு அவரெப்பத்தி அவ்வளவா பில்டப் இல்ல ஏன்ன? அவரு பண்ணிய்தெல்லாம் வெளிய வந்துருச்சி. காஞ்சி ஆச்சாரியார் ஜெயிலுக்குப் போனாரு சும்மாவா போனாரு கொலை பண்ணிட்டுப் போனாரு. அதுதான் இந்தியாவுக்கே பவர் செண்டர். ஒரு காலத்துல அங்கயிருந்துதான் யார தேர்தல் கமிஷனராப் போடலாம், யார நீதிபதியாப் போடலாம். இப்ப டாடா வும் அம்பானியும் இவர அந்த மந்திரியா போடு அவர இந்த மந்திரியாப் போடு சொல்ற மாதிரி சங்கரமடம் அந்தவேலையைச் செஞ்சது. ஆதிசங்கரரே ஆரம்பிச்ச மடம் மாதிரி கத எழுதுறாங்க,அதப்பத்தியெல்லாம் அருணன் “சங்கரமடத்தின் உண்மை வரலாறு’ ங்கிற புஸ்தகத்தில எழுதியிருக்கிறாரு.

சாயிபாபா குழுமத்துக்கு இப்ப அந்த 45,000 கோடியிலிருந்து ஒரு லட்சம் கோடி வரைக்கும் சொத்து தேரும்னு சொல்றாங்க.. வாரிசு இல்லாத சொத்தே அரசாங்கமே எடுத்துக்குமா இல்ல இன்னொரு அவதார புருஷனை தேடுவாங்களா? பாக்கலாம் என்ன நடக்குதுன்னு.

சனி, 23 ஏப்ரல், 2011

இன்று உலக புத்தகதினம்.......



ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23ம்தேதி உலக நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் பிறந்த தினமான நாளை உலக புத்தக தினமாக கொண்டாடப்படுகிறது, இந்த நாளில் மக்களிடத்தில் புத்தகங்கள் பற்றிய செய்தியையும் வாசிப்பின் இனிமையும் கொண்டுசெல்ல வேண்டும், இந்த நாளிற்காக பாரதி புத்தகாலயம் http://bookdaytn.blogspot.com/ உலக புத்தகதினம் என்ற வலைப்பூவைத் தொடங்கியுள்ளது. ஒவ்வொருவருடமும் உலக புத்தக தினத்தில் பதிவர் அண்ணன் மாதவராஜ் புத்தகதினம் பற்றி எழுதுவார். நானும் கொஞ்சம் பகிர்ந்திருக்கிறேன்.

புத்தகம், இலக்கியம் ஏன் படிக்கனும்னு நான் நேசிக்கிற எழுத்தாளர் பிரபஞ்சன் “மனிதனை மேலும் மனிதனாக்குவது இலக்கியம்” என்று சொல்கிறார், அப்படி ஒரு இலக்கியம் நம்மை மேம்படுத்தவில்லை யென்றால் அது இலக்கியமே இல்லை என்றும் சொல்றார். அதுக்கு நம்மூர்ல ஒரு பழமொழி சொல்றாங்க ‘படிக்கிறது ராமாயாணம்’ இடிக்கிறது பிள்ளையார் கோவில் இல்ல பாபர் மசூதின்னு வைச்சுக்கலாம். அவங்க படிச்சது இராமாயணம் இல்லை சங்பரிவார் அமைப்புகள் இலக்கியம் படிக்கனும் சொல்லி எங்கயாவது பிரச்சாரம் பண்ணியிருக்காங்கல இல்ல, ஏன் படிச்சா கேள்வி கேட்பான் என்கிறதால. ஒரு மாணவி கிறிஸ்தவ பள்ளிக்கூடத்துல படிக்குது, அப்போ மத சம்பந்தமான வகுப்புல படைப்புக் கோட்பாட்டை பத்தி தேவன் உலகத்தை 6 நாள்ல படைச்சாரு, மனிதர்களை படைப்பதர்கு முதலில் ஆதாம் ஏவாள் படைக்கப்பட்டார்கள் என்று படிச்சிருக்கு, அப்புறம் சமூக அறிவியல் பாடத்தில மனிதன் குரங்கிலிருந்து வந்தான்னு படிச்சவுடனே அந்த மாணவிக்கு சந்தேகம் வந்து கேட்டிருக்கு எது உண்மை அப்படின்னு? அந்த டீச்சர் அந்தப் பாடத்தில கேள்வி கேட்டா அந்த பதில எழுதனும் சமூக அறிவியல்ல கேள்வி கேட்டா மனுசன் குரங்கிலிருந்து வந்தா னு எழுதனும்னு சொல்லியிருக்காங்க.

ஒருத்தர், எனக்கு வரலாறு ரெம்ப பிடிக்கும்னு சொன்னாரு, சரி யார் எழுதின வரலாறு பிடிக்கும்னு கேட்டென். அதுக்கு புத்தகம் படிக்கிறதுக்கு நேரமில்லை.ஏதாவது டாக்குமெண்ட்ரி மூவியைப் பார்ப்பேன் அப்படின்னார். சினிமா பார்த்து வரலாறை தெரிஞ்சிக்கமுடியுமான்னு தெரியல. வரலாறு ரெண்டுவகையா இருக்கு ஒன்று மக்களின் வரலாறு இன்னொன்று ஆட்சியாளர்களின் வரலாறு. பொன்னியின் செல்வனை படிச்சிட்டு சோழர்களின் வரலாற்றைப் படிச்சேன்னு சொல்லமுடியுமா. தமிழ்ல வரலாற்றுப்புனைவு என்கிற பேர்ல எழுதுன சாண்டில்யன், இன்னும் எத்தனையோ பேர் எதை எழுதினாங்க, அந்த சக்கரவர்த்திக்கு என்னென்ன பட்டப்பெயர்கள், அதுக்கு என்ன காரணம் எத்தனை மனைவிகள் அந்தப்புரம் எவ்வளவு பெரிசு, போர்வெறியர்களைக்கூட இன்னைக்கு தவறான வரலாற்றை படிச்சிட்டு கடாரம் கொண்டான், கங்கையைக் கொண்டான் என்று சொல்லி கொண்டாறுமே. மக்களுக்கு கல்வி கொடுத்தானா, எந்தமாதிரி வரி போட்டான், சாதிய அடிப்படையில் சனாதன தர்மத்தை உயர்த்திப் பிடித்தான், கோவிலுக்கு பெண்களை தாசிகளாக்கினான் இதெல்லாம் அந்த புனைவுகளில் பார்க்கமுடியாது. அரசன் விஷ்ணுவின் அம்சம் பிறக்கும்போதே கையில சங்கு சக்கரரேகையிருக்கு அப்படியின்னு எழுதினாங்க. ஆனா பிரபஞ்சன் எழுதுன ‘வானம் வசப்படும்’ ‘மானுடம் வெல்லும்’ போன்ற நாவல்கள் தான் மக்கள் எப்படி வாழ்ந்தார்கள், பெண்களின் நிலைமையென்ன, அடிமைகள், தாசிகள் எப்படி உருவானர்கள் என்று மனிதர்கள் இப்படியெல்லாம் வாழ்ந்தார்கள் என்று பதிவு செய்தார். அவர் இத எழுதும்போது முன்னோடிகளாக டிடி.கோசாம்பியையும் ரொமிலா தாப்பரையும் குறிப்பிடுகிறார். சங்கபரிவார அமைப்புகளுக்கு இந்த வரலாற்று ஆசிரியர்களை பிடிக்காமல் போனது வியப்பில்லை.இங்கு தான் எது இலக்கியம் எது குப்பை என்று நாம் பிரித்துப்பார்க்க வேண்டும்.

என்னை முதல்ல புத்தகம் வாசிக்கவைச்சது பெரியார் சிந்தனைகள் தான், 1ரூ, 2ரூக்கு அப்போது பெரியாரின் சிந்தனைகள் வெளிவந்தது, ஊர்தோறும் பிரச்சாரம் செய்தார்கள். இன்றைக்கு திகவின் தலைமையே பெரியாரின் சிந்தனைகள் மக்களை எளிமையாக சென்றடைவதற்கு தடைபோட்டுக் கொண்டிருக்கிறது. இன்று இடதுசாரி இயக்கங்கள் மக்களுக்கு இலக்கியம் சென்றடையவேண்டும் என்று இயக்கம் நடத்துகிறார்கள். புத்தகம் என்பது எழுத்துரிமையின் வெளிப்பாடு ஆனா பிரிட்டிஷ் ஆட்சியில நிறைய புத்தகங்களை தடை செய்திருக்கிறார்கள். இப்பவும் அப்படி தடைசெய்யப்பட்ட புத்தகங்கள் இருக்கு. அம்பானியைப் பத்தி ஒருத்தர் எழுதின புத்தகம் கூட தடைசெய்யப்பட்டிருக்கிறதாக கேள்விப்பட்டேன். தமிழ்நாட்டில் புத்தகவாசிப்பிற்காக ஒரு இயக்கமே பாரதி புத்தகாலயம் நடத்துறாங்க. பெரிய நகரங்களில் வருடந்தோறும் புத்தகத்திருவிழாக்கள் நடைபெறுகிறது. ஒவ்வொரு வருடமும் கடந்த ஆண்டைவிட அதிகமா புத்தகம் விற்பனையாகிறதா தகவல் கிடைக்குது, ஆனால் கல்விகற்ற சமூகத்திலும் ‘புதுமைப்பித்தன்’ என்ற எழுத்தாளரை தெரியாதவர்கள் இருக்கிறார்கள். எஸ்ரா சொல்வார் ரஷ்யாவிற்கு ஆண்டன் செகாவ் மாதிரி தமிழகத்திற்கு ‘புதுமைப்பித்தன்’ இருவரும் நிறைய ஒற்றுமை இருந்திருக்கிறது சமகாலத்தில் வாழ்ந்தவர்கள், இருவரது எழுத்திலும் அதிகாரத்தை நோக்கிய ‘கிண்டல்’ இருக்கும். சமவயதில் அதாவது 44 வயதிலேயே இறந்துவிட்டார்கள். இருவருக்கும் காசநோயே எமனாக வாய்த்துள்ளான். ஆண்டன் செகாவ் உலக சிறுகதை எழுத்தளர்களின் தந்தை என அறியப்படுகிறார். அவருக்கு முன்னோடி டால்ஸ்டாய் ,மகாத்மா காந்தியே டால்ஸ்டாய் தான் முன்னோடி என்று சொல்கிறார். காந்தியை தென்னாப்பிரிகாவில் நிறவெறிக்கெதிராக போராடனும் தூண்டியது அவர் வாசித்த புத்தகம் தான்.

மேற்கத்திய நாடுகள்ல Bes Time Stories இருக்கிறதா சொல்றாங்க, தூங்குவதற்கு முன்னாடி குழந்தைகளையும் படிக்கவைக்கிறாங்க. நம்ம ஊர்ல இந்த டிவி பொட்டி வீட்ல நடக்கிற பேச்சையே குறைச்சிருச்சி. நான் எங்க பாட்டிகிட்ட கேட்டகதையெல்லாம் மறந்து போச்சு, இன்னைக்கு நிறைய வீட்ல பெரியங்களுக்கு கதைகள், சொல்வடை எதுவும் ஞாபகம் இருக்கிறதா தெரியல, அதுக்கு கி.ரா வோட கதையைப் படிச்சாப்போதும். தாத்தா இல்ல பாட்டி சொல்றமாதிரியிருக்கும். சிறுவர் இலக்கியம் என்பதற்காகவே நிறைய புத்தகங்கள் தமிழ்ல இருக்கு. இரா.நடராஜன் சிறுவர்களுக்கு நாவலை அறிவியல் மாதிரி எழுதியிருக்கிறார் ஆயிஷா என்கிற நாவல் ஒரு லட்சம் பிரதி விற்பனையாயிருக்கு.அதே மாதிரி எஸ்ரா எழுதுன ‘கிறுகிறுவானம்’ குழந்தைகளுக்கு ரெம்பப் பிடிக்கும். அதுல வர்ற ‘ஓட்டைப்பலலை’ ப்பத்தி என்னோட மகன் அதை தினம் வாசிக்கச்சொல்லுவான். உலகைக் குலுக்கிய புத்தகங்கள் என்ற தலைப்பில் நிறையப் பேர் பேசியிருக்காங்க, நான் அறிந்தது மார்க்ஸ்,ஏங்கெல்ஸ் எழுதுன ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’ தான். படிக்கவேண்டிய நூல்கள் எவ்வள்வோயிருக்கு.

எனக்குப் பிடிச்ச சில நாவல், சிறுகதைகள், நீங்களும் படிச்சிருப்பீங்க...

# கோபல்ல கிராமம், கோபல்லகிராமத்து மக்கள், அந்தமான் நாயக்கர் - கி.ரா
# ராஜா வந்திருக்கிறார்- கு.அழகிரிசாமி
# வால்கா முதல் கங்கைவரை, மனிதசமுதாயம் -ராகுல்ஜி
# தாய் - மார்க்சிம் கார்க்கி
# மானுடம் வெல்லும், வானம்வசப்படும் -பிரபஞ்சன்
# நள்ளிரவில் சுதந்திரம் - டொமினிக் லேப்பியர்
# மேலாணமை பொன்னுசாமி சிறுகதைகள்
# தமிழ்ச்செல்வன் சிறுகதைகள்
# வேரில் பழுத்தபலா -சு.சமுத்திரம்
# செம்மீன் -தகழி சிவசங்கரன் பிள்ளை
# உபபாண்டவம் -எஸ்ராமகிருஷ்ணன்
# புதுமைப்பித்தன் சிறுகதைகள்
# ஜெயகாந்தன் சிறுகதைகள்

இனிமே யாருக்காவது பிறந்த நாள் பரிசு, திருமண நாள் பரிசா ஒரு நல்ல புத்தகத்தைக் கொடுங்க, படிச்ச புஸ்தகத்தை மற்றவர்களுக்கு அறிமுகப்படுங்க. அது தான் இன்னைக்கு நாம ‘உலகப் புத்தகதினத்திற்கான்’ செய்தி. இன்னும் எவ்வளவோயிருக்கு எழுதினா உங்களுக்கு போரடிக்கும்..வாழ்த்துக்களுடன்.

வியாழன், 21 ஏப்ரல், 2011

ஏழைகள் இருக்கும் வரை...

கிராமப்புறங்களில் அரசின் நூறுநாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை வரவேற்கிறவர்களும் ஏன் எதிர்க்கிறவர்களும் கூட இருக்கிறார்கள். முரண்பாடு என்பது இப்படித்தான் விலைவாசி உயர்ந்தால் உற்பத்தியாளன் மகிழ்ச்சியடைவதும் பயனீட்டாளன் துன்பமடைவதும் போல். கிராமப்புறங்களில் நிலமில்லா விவசாயத்தொழிலாளிகள் இந்தத் திட்டத்தால் பயன்பெருகிறார்கள் என்பதோடு அவர்களுடைய குறைந்தபட்சக் கூலி என்பது நாள் ஒன்றுக்கு நூறு ரூபாய் என்று உறுதிசெய்யப்பட்டுவிட்டது. இதனால் கூலிகளை நம்பிவாழ்ந்த விவசாயிகளுக்கு வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை ஏனென்றால் 100ரூபாய் கூலியை இவர்களால் வழங்கமுடியவில்லை. ஆனால் இந்ததிட்டத்தின் மூலமாக மக்களிடம் வாங்கும் சக்தி அதிகரித்திருக்கிறது. இங்கு கொடுக்கப்படும் கூலியில் பாலினசமத்துவம் நிலவுகிறது. நாட்டில் ஒரு குறிப்பிட்ட அளவு பட்டினிப்பட்டாளத்தை இருக்கவேண்டும் என்பது இப்போதுள்ள உற்பத்திமுறையின் கொள்கை. இதன் மூலம் சுரண்டுவது எளிதாகிறது.

நான் வளைகுடாவில் பணியாற்றிய அனுபவத்திலிருந்து, ஒரு நிறுவனத்தில் சூப்பர்வைசர் அந்தஸ்தில் வேலைசெய்யும் ஒருவர் வேலைக்கு வரும்போது காரில் வருவார், இறங்கி அப்படியே அவரது அலுவலகம் சென்றுவிடுவார். அவர் அலுவலகம் சென்றபின்பு அவருடைய அலுவலகத்தில் வேலைசெய்யும் காண்டிராக்ட் லேபர் அவருடைய காருக்குச் சென்று சூப்பர்வைசரின் லஞ்ச்பேக் கை தூக்கிவருவார். இதுமட்டுமல்ல, மதிய உணவிற்கு மேசையில் உணவு சாப்பிடும் தட்டு எல்லாம் எடுத்து வைக்கப்பட்டிருக்கும். இவர் சென்று சாப்பிட்டுவிட்டு தான் உண்ட தட்டைக்கூட கழுவாமல் செல்வார்.எல்லாவற்றையும் அந்த காண்ட்ராக்ட் லேபர் தான் செய்யவேண்டும். இதை விரும்பி அந்த லேபர் செய்வரா? நிர்பந்தம் அந்த வேலையில் தொடர்ந்து நீடிக்கவேண்டுமே என்பது அந்த தொழிலாளியின் விருப்பம். சில மனிதர்கள் இதை சாதகமாக எடுத்துக்கொள்வதை நாம் வாழ்க்கையில் பார்க்கிறோம். புதிய பொருளாதரக் கொள்கையின் விளைவாக இந்தியாவில் தொழிலாளர்களை "Hire and Fire" முறை அதாவது நிறுவனம் நேரடித்தொழிலாளர்களை நியமிப்பதற்குப் பதிலாக காண்ட்ராக்ட் தொழிலாளர் முறை எல்லா இடத்திலும் வந்துவிட்டது. முதலில் வேலையை அவுட்சோர்ஸ் முறையில் செய்து, பின்னர் வேலைசெய்யுமிடத்தும் இந்த காண்ட்ராக்ட் முறை வந்துவிட்டது. சமவேலையை செய்யக்கூடிய காண்ட்ராக்ட் தொழிலாளிகள் அற்ப சம்பளத்தையும், பணிப்பாதுகாப்பு, குடிடிருப்புவசதி, குழந்தைகளுக்கு கல்வி என எந்தஒரு வசதிகளை பெறும் வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள்.

வளைகுடா நாடுகளில் காண்ட்ராக்ட் தொழிலாளியாக வேலைசெய்பவர்கள் எந்த நாட்டைச்சேர்ந்தவர்கள் என்பதிலும் கூட பாகுபாடு இருக்கிறது, ஐரோப்பியர்களுக்கு வழங்கப்படும் ஊதியமோ மரியாதையோ அதேவேலையைச் செய்யும் ஒரு இந்தியருக்கு கிடையாது, ஒரு இந்தியருக்கு கிடைக்கும் மரியாதை வங்காளதேசத்தவருக்கோ, பாகிஸ்தானியற்கோ அல்லது இலங்கையை சேர்ந்தவருக்கோ கிடையாது. மனிதர்கள் திறமையைவிட பின்புலம் பிரதானமானது. ஒரு நிறுவனம் எப்படி காண்டிராக்ட் ஊழியரை வைத்துக்கொண்டால் எளிதாக வேலையை பெறமுடியும் என்று எண்ணுகிறதோ அதேபோல் அதன் நேரடி ஊழியர்களும் விரும்புவதும் காண்கிறோம். ஏனென்றால் அவர்களது வேலையின் சுமையைச் சேர்த்து காண்ட்ராக்ட் தொழிலாளியை வைத்து செய்திடலாம். நாம் அரசு ஊழியர்களை குறைசொல்லியே பழக்கப்பட்டவர்கள் அது பொதுப்புத்தியில் ஊறியிருக்கிறது, தனியார் நிறுவனங்களில் தொழிலாளர்கள் சிறப்பாக வேலைசெய்கிறார்கள் என்றால் அங்கேயும் ஏன் காண்ட்ராக்ட் முறை அமலில் இருகிறது என்பது யோசிக்கவேண்டும். ஆனால் நேரடியாக வைத்துக்கொண்டிருகிற ஊதியத்தின் அளவைவிட காண்ட்ராக்ட் ஊழியருக்கு அதிகமான செலவை செய்கிறது. ஆனால் அந்த ஊழியர் சொற்பமான கூலியே பெறுகிறார்.

இழிவான தொழில்களை செய்வதற்கும், பாதுகாப்பற்ற சூழலில் பணிசெய்வதற்கும் ஏழைகள் இல்லாவிட்டால் யார் செய்வார்கள்? ஆட்சியாளர்கள் ஏழ்மையை ஒழித்துவிடுவார்களா என்ன?

புதன், 20 ஏப்ரல், 2011

பதிவுலகம் - நம்ம பார்வை

என்றைக்கும் இல்லாத அளவிற்கு என் வலைப்பூவின் நேற்றைய ‘ஊழல் ஒழிஞ்சிபோச்சு’ இடுகையை தமிழிஷில் 19 பேர் வாசித்திருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்வதோடு தவறான தலைப்பை இட்டதற்காக வருந்துகிறேன். எதிர்பாரமல் சும்மா வைத்த தலைப்புதான்.,ஆனால் இது மார்கழி பஜனை சீசன் மாதிரி ஊழலுக்கு எதிர்ப்பு சீசன் என்றபடியால் இந்தப்படிக்கு வரவேற்பு நல்கியிருக்கிறார்கள் என்பது என் அபிப்பிராயம்.

நானும் எப்படியாவது வாசகர்கள் படிக்கிற மாதிரி எழுதனும்னு நினைக்கிறேன், யாராவது ஒரு வார்த்தை நல்லா எழுதுறீங்க சொன்னா..அவ்வளவு தான் அதுக்காகவாவது இன்னும் எழுதனும் மனுசனோட இயல்பு தானே? இந்த வலைப்பக்கம் விசிட் அடிச்சதே நண்பர் விஜயன் அவர்களின் ‘சல்லடை’ வலைப்பூ மூலமாத்தான். அதுக்கப்புறம் தான் தெரிஞ்சது இப்படி தமிழ்ல எழுதறுது, விவாதிக்கறதுக்கு ஒரு தளம், மேடை இருக்குன்னு. எல்லாபதிவர்களும் தனக்குப் பிடிச்ச வலைப்பக்கங்களை அறிமுகம் செய்றாங்க, அதனாலே எல்லையே கிடையாது. ஒரு தளத்துக்கு போயாச்சுன்னா நீங்க உலகத்தை சுத்துனமாதிரி கடைசியில உங்க வலைப்பூவுக்கே வந்துறலாம். ஆச்சரியமா இருக்கு, முன்னாடி பொதுவெளியில எழுதுறதுன்னா அது பேப்பர்காரனுக்கு ‘அன்புள்ள ஆசிரியருக்கு’ அப்படின்னு ஆரம்பிச்சு உங்க பேப்பர் மாதிரி உண்டா கொஞ்சம் புகழ்ந்து எழுதுனா, ரெம்பவாட்டி எழுதுனா கொஞ்சம் கருணை பண்ணி ஒருவாட்டி தலையங்கத்துக்கு கீழே உங்க பேரோட கடிதத்தை போடுவாங்க. நானும் தினமணிக்கு நிறையவாட்டி கடுதாசி போட்டேன், அவங்க எப்படி எல்லா வாசகரோட கடிதத்தையும் போடமுடியுமா? ஆனா இப்ப வலைப்பூவுல நம்ம எழுத்தை யாருவேணுமின்னாலும் படிக்கலாம் (பொறுமையிருந்தா ?முடிஞ்சா). என் பிரெண்ட் ஒருத்தருக்கு இந்தமாதிரி வலைப்பூ இருக்கு, நிறையபேரு தமிழ்ல எழுதுறாங்க, நிறைய விசயத்தைப் பத்தி அரசியல்,சினிமா,சுற்றுலா, காமெடி, காமிக்ஸ்,சிறுகதைகள், சமையல் இப்படி நிறைய கேட்டகரியிருக்குன்னு சொன்னேன். அவரு சொன்னாரு அதெல்லாம் வெட்டிவேலை, சும்மா வேலையத்தவங்க வாயிலவந்த்த எழுதிகிட்டு அப்புறம் தேர்தலுக்கு முன்னாடி பார்த்தா ஒரே திமுக எதிர்ப்புஅலை அதுவேற அவருக்கு கோவம் வந்துருச்சு. யாருமே ஜெயலலிதா ஆட்சிக்கு வரணுமின்னு திமுகவை எதிர்க்கல, அவங்க குடும்பம் , அமைச்சர்கள் அப்புறம் ஸ்பெக்ட்ரம் இதெல்லாம் சேர்த்து அவங்க செஞ்ச நல்ல காரியத்தையும் கெடுத்துரிச்சு.

பலரகமா எழுதறவங்கள் இங்க பார்க்கலாம்,இந்தியப்பண்பாடு ங்கிற 12ம் வகுப்பு புஸ்தகத்தை சும்மா வாசித்தேன், அதுல ஒரு இடத்தில சூத்திரர்களைப் பத்தி இப்படிஎழுதியிருக்கு “முதல் மூன்று (பிராமணர்,சத்திரியர் மற்றும் வைசியர்) பிரிவினர்களுக்கும் வேண்டிய பணிகளை செய்தல்,நிலத்தை உழுது பயிரிடுதல் இவர்களது பணிகளாகும்.தமக்கு இடப்பட்ட பணிகளை நிறைவேற்றி உண்டுவாழும் சுகவாழ்க்கையை அனுபவித்தார்கள்” ந்னு எழுதியிருக்கு. ( அந்த அழுத்தம் மேல்சாதிக்காரங்க கொடுத்தது)அடப்பாவிகளா யாரோட பார்வையிது., கோளாரால்லாயிருக்கு நமக்கு தெரியுது. ஆனா இந்தப் பாடத்தை எழுதுனவருக்கு யார்கிட்டயும் பொல்லாப்பே இல்லை.,அத மாதிரி சிலபேரு யாருக்கும் பொல்லாப்பு இல்லாதமாதிரி எழுதுவாங்க, யப்பா, பின்னூட்டத்தை பாத்துட்டு ஒருத்தரும் திட்டல அப்படி சிலரு. ‘சந்திப்பு’ எழுதுன மறைந்த செல்வபெருமாள் மகஇக வோட அரசியல்பத்தி பின்னூட்டங்களைப் பத்தி கவலப்படாம நாகரீகமா எழுதுனாறு. தீராதபக்கங்கள், அடர்கறுப்பு, தோழர் காஸ்யபன் பக்கம், எஸ்ரா,தருமி,கசியும் மெளனம், மருதன், தமிழ்வீதி இவங்க பக்கங்களை தொடர்ந்து வாசிப்பேன். ஒவ்வொருத்தருக்கும் அவரை மாதிரி எழுதனும்னு ஒரு ஆசயிருக்கும். எனக்கும் அந்த கொஞ்சபேரு ‘முன்னத்திஏரா’ இருக்காங்க. பொதுநல நோக்கத்திற்க்காக கட்சியில வேலைபார்க்கிறது சாதாரணவேலை கிடையாது, கட்சி கொடுக்கிற ஊதியத்தை வச்சுகிட்டு குடும்பத்தை சமாளிக்கவேண்டும், அதுவும் வீட்டில் ஒத்த கொள்கையில்லாவிட்டால் ரெம்ப கஷ்டம்தான். அதேமாதிரி கிடச்ச நேரத்துல எழுதுறதும் கஷ்டமான விஷயம்தான் ,ஆனா எப்படி நேரத்தை ஒதுக்கி எழுதமுடிதுன்னு தெரியல. பெரியார் அந்தக்காலத்திலேயெ பெண் விடுதலையைப் பத்தி பேசியிருக்காரு, வாழ்ந்திருக்காரு. அதுல, ஆண்களைப் பார்த்து.. காலையில எந்திருச்சவுடனே மனைவிபோட்ட காப்பியக் குடிச்சிகிட்டே பேப்பரு படிக்கிறயே அந்த அம்மா அதக்கப்புறம் பலகாரம் பண்ணி , அவங்களும் வேலைக்கு கெளம்பி ..அந்தம்மா எப்ப பேப்பர் படிக்கிறதுண்ணு யோசிச்சயான்னு கேட்கிறாறு? இன்னைக்கும் நம்மளப் பார்த்து கேட்குறமாதிரிதான் இருக்கு. ஆனா அதுக்கு அவரே விடையும் சொல்றாறு, காலையில் ஹோட்டல்ல காபி வாங்கிட்டுவா, அப்புறம் ரெண்டுபேரும் வேலைக்கு பைக்குல போங்க போகும்போது நல்ல ஹோட்டல்ல டிபன் சாப்பிடுங்க., அப்படி சமுதாயத்தில் பொதுசமையல் அறை இருக்கனுமுன்னு யோசிச்சுயிருக்காரு. எனக்கு அது ஒரு கனவாத்தான் தெரியுது,ஆனா நடக்கும்னு நம்பிக்கையிருக்கு.முன்னாடி ஒருவாட்டி ஒரு பிளாகரை ஏதோ ஒரு கம்பெனி நோக்கியான்னு நெனக்கேன், அவரை வெளிநாட்டுக்கு அவங்க செலவுல சுற்றுலா கூட்டிகிட்டு போனாங்க. அவரு அந்த கம்பெனி செல்போன்களைப்பத்தி ஒவ்வொரு மாடல் அப்படி இப்படி சிறப்புங்கிறதை எழுதுனாராம். கம்பேனிக்கு காசில்லாம விளம்பரம்தான? நம்ம பிளாக்கை நிறையபேரு பார்த்தா ஏதாவது கம்பெனிக்காரன் உங்க பிளாக்குல ‘விளம்பரம்’ போட்டுக்குலாமா? அப்படியிருக்கான்னு தெரியல. எழுத்தாளர்கள் சிலரு பத்திரிக்கைகளுக்கு கட்டுரைகள் எழுதிக்கொடுப்பாங்க, ஆனா பத்திரிக்கை இவங்க எழுதுனத அப்படியே போடமாட்டாங்க, அவங்க ’பார்வை’ போயிருமே. அந்த எழுத்தாளர்கள் அவங்க ஒரிஜினலா எழுதுனத அவங்க வலைப்பூவில சுதந்திரமா எழுதமுடியுது.

வாழ்க பதிவுலகம் !!!!

செவ்வாய், 19 ஏப்ரல், 2011

ஊழல் ஒழிஞ்சுபோச்சு

ச்சே எங்க பார்த்தாலும் ஒரே அன்னா ஹசாரேவைப் பத்திதான் பேச்சு, தீடீர்னு ஊழலை எதிர்த்துப் போராடவந்த அவதாரம் மாதிரி.வலைப்பதிவர்கள் எல்லாரும் அன்னா வை ஆதரித்து ஒரு பதிவு போடாதவர்கள் யாருமே இல்லை. ஒரு சமூக சேவகர் நல்ல விசயத்துக்காக அதுவும் இந்தியாவை அழித்துவருகிற ஊழல் என்கிற வைரஸ் கிருமிக்கு எதிராக போராடும்போது சாமான்ய மக்கள் ஆதரவு தராவிட்டால் நல்லாவாயிருக்கு. கொஞ்சபேரு மட்டும் தான் அவரோட போராட்டத்தை விமர்சித்து அப்படியில்லை, இந்த தனிமனிதர் ஊழலுக்கெதிராக போராட முடியாதுன்னு சொல்றவங்க இந்த இடதுசாரிங்க தான். இவங்க இப்படித்தான் இந்தியாவுக்கு அணுசக்தி மூலமாத்தான் மின்சாரத்தேவையை பூர்த்திசெய்யமுடியும்னு இந்தநாடே (அப்படின்னா பேப்பர்காரன், எல்லா டிவிகாரங்களும் )நம்ம மன்மோவன்சிங்க்கு பின்னாடி நின்னம். இவங்க மட்டும் தான் எதிர்த்தாங்க. அதே மாதிரி இப்ப பாருங்க நம்ம மன்மோகன் சிங்கும் காங்கிரஸ் கட்சியும் வ்றுமையை ஒழிச்சமாதிரி வேலையில்லா திண்டாடத்தை ஒழிச்சமாதிரி இந்த ஊழலையும் ஒரே மசோதா போட்டு ஒழிச்சரலாம்னு நினைக்கதுக்கு அன்னா ஹசாரே பாடுபடுறாறு. அவரோட வழியை விமர்சனம் பண்ணுறாங்க.

எல்லா இடத்துலயும் இந்த விவாதம்தான், ஏன் அவரோட வழிமுறையை தப்புன்னு சொல்றீங்க? நம்ம ஆளுகள நினைச்சா பரிதாபமா இருக்கு.. ஏதாவது புதுசா சினிமாக்காரன் அரசியலுக்கு வந்தா அவனுக்கு ஒரு தடவ சான்ஸ் கொடுப்போமே, எத்தன நாளக்கித்தான் கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஆட்சி செய்யறது. இதே மாதிரி பேப்பர்காரனும் டிவி காரனும் ஒரு ஆள ஒரே நாள்ல உச்சியி ஏத்தமுடியும் இறக்கவும் முடியும். நான் கூட நினைச்சேன், மக்களோட முழுகவனத்தை இந்த மீடியாகாரங்க ஊழல் பக்கம் திருப்பிவிட்டாங்க, ஏதோ பார்லிமெண்ட்ல முதலாளிமார்களுக்கு வரியை தள்ளுபடி பண்றாங்களோ இல்ல பெட்ரோல், டீசல் விலையை கூட்டப் போறாங்களோன்னு நெனைச்சேன். இன்னக்கி பாஜக காரங்க எந்த ஊர்ல பார்த்தாலும் ஊழலை ஒழிப்போம் போராடுவோம்ன் க்கிற ரேஞ்சுக்குத்தான் பேசுறாங்க, இவங்க தேர்தல் அறிக்கையை (அதான் 2009 பொதுத்தேர்தலுக்கு) பார்த்தேன், ஊழலை ஒழிக்க சட்டம் வேணுமுன்னோ இல்ல ஊழல் ஒரு பிரச்சனை மாதிரியே சொல்லல. மேல நாங்க ஆட்சிக்கு வந்தா 100 நாள்ல என்னசெய்வோம்னா தீவிரவாதத்தை ஒழிப்போம்,தீவிரவாதத்தை ஒழிப்போம்.... இது மட்டும் தான். இப்பதான் அவங்க பூனை காவிக்கூட்டம் வைச்ச வெடிகுண்டு, தீவிரவாதம் வெளியவருது. காங்கிரஸ் அறிக்கையையும் பார்த்தேன், அவங்களும் சொல்லல. ஏன் சொந்த செலவுல யாராவது சூனியம் வைச்சுக்குவாங்களா? மேல சொன்ன ரெண்டு பேரும்தான். ஆனா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேர்தல் அறிக்கையில ‘லோக்பால்’ மசோதாவை கொண்டுவருவோம்னு சொல்லியிருங்காங்க. இதயெல்லாம் மீடியாக்காரன் எங்களுக்கு சொல்லலையேன்னு சிலபேரு ஆதங்கப்படுறாங்க. அவங்களுக்கு மீடியா யாரோடது, யாருக்கு சேவைசெய்யுதுன்னு தெரியல. இப்ப அன்னா ஹசாரேவோட கொள்கையப் பார்ப்போம்.

அவரோட கிராமத்தை ஒரு மாதிரி கிராமமா உருவாக்கியிருக்காரு, தீண்டாமையை அவங்க ஊர்ல ஒழிச்சிருக்காரு. மும்பை மராத்திகாரங்களுக்கு மட்டும் ஏதோ தாக்கரே கும்பல் கத்தும்போது ஏன் சும்மா இருந்தாரு, மோடி சிறந்த நிர்வாகின்னு சொல்றாரு அவரு தலைமையில சிறுபான்மை மக்கள்மேல நடந்த வன்முறையை கண்டிச்சு ஒரு அறிக்கை விட்டாரா. இப்பவும் ஊழலுக்கு முக்கிய காரணம் புதியபொருளாதாரக் கொள்கைதான் அதனாலே தான் லட்சம் கோடிகள் ஊழல் நடக்குது அதப்பத்தியும் அவருக்கு கவலை கிடையாது. இனிமே நாட்ல 50ரூ ,100ரூ,500ரூ லஞ்சம் வாங்கிறவங்க தான் ஊழல்பேர்வழிகள் சொல்வாறு. பொதுஜனமே கொஞ்சம் கண்ணாடியில பாருங்க என்னைக்காவது நம்மகிட்ட லஞ்சம்கேட்டா தரமுடியாதுன்னு சொல்லியிருக்கமா? இல்ல ஏன்ன நம்ம வேல சீக்கிரமாவும் சிலநேரம் குறுக்குவழியிலயும் நடக்கனும்.இப்ப நடக்கிற ஊழலை சட்டபூர்வமா மாத்தமுடியாதா?

ஸ்பெக்ட்ரத்தியே எடுத்துக்கவும் முதல்ல வந்தா இப்படித்தான்னு சட்டமே போட்டுட்டா இது ஊழலே கிடையாதே? இப்ப 2005ம் வருசத்திலிருந்து இந்தவருசம் வரக்கி 3,75,000 கோடிரூபாய் கார்ப்பரேட்டுகளுக்கு வரிதள்ளுபடி பண்ணியிருக்காங்களே இத ஊழல்னு ஏன் மீடியாக்காரங்க (ஹிந்து பேப்பர் தவிர) சொல்லல. இதுவும் அரசுக்கு வரவேண்டிய வருவாய் இழ்ப்புதானே? தேர்தல் செலவுக்கும் கட்சி நடத்துரத்துக்கும் பணம் கொடுக்கிறதானேலே பெருமுதலாளிகள் மேன்மேலும் லாபம் கொழுக்கற மாதிரி பட்ஜெட் போடுறது ஊழல் இல்லையா? யோசிச்சுப் பாருங்க.. ஊழல ஒழிக்க்றது ஒரு மசோதா போட்டுட்டு முடியுமா? அரசியல் கட்சி எப்படி நடக்குதுன்னு பாருங்க, தேர்தலுக்கு டாட்டா அம்பானி, பிர்லா ஏன் பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் தராங்கன்னு யோசிங்க.

ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

மன்னர்களின் புலிவேட்டை



மேல இருக்கிற படத்தை இணையத்தில் மெயில் பார்க்கிறவங்க எல்லாரும் பார்த்திருப்பாங்க, இதமாதிரி இன்னும் நிறைய படங்களை அனுப்பி இந்தியா வீரத்திலும் கலாச்சாரத்திலும் போன நூற்றாண்டிலேயெ முன்னேறியிருந்ததுன்னு சொல்லி கதை விடுறாங்க. அந்தமாதிரி பிரச்சாரத்தை ஒரு கூட்டம் பசுத்தோல் போர்த்திக்கிட்டு பண்ணிகிட்டு இருக்கு. இப்ப இந்த விவரத்தைப் பார்ப்போம் ,இந்தியாவில இப்ப லேட்டஸ்டா எடுத்த புலிகளின் எண்ணிக்கை சுமார் 1700, இதுவே 1947ல 20,000 புலிகள் இந்தியாவில இருந்திருக்கு. போன நூற்றாண்டுல 100,000க்கும் மேல. எப்படி குறைஞ்சது எல்லாம் நம்ம நாட்ட வெள்ளைக்காரனுக்கு முன்னாடி ஆண்ட 565 மஹாராஜாக்களும்,நவாபுகளும் அப்புறம் வெள்ளைக்காரங்களும் செஞ்ச வீரதீரவிளையாட்டு தான் காரணம்.

இப்ப இருக்கிற பஞ்சாப் மாநிலத்தில் பாட்டியாலா அப்போது தனி சமஸ்தானமாக இருந்தது, அதோட எட்டாவது மஹாராஜா யாதவீந்திர சிங். அவரோட மாளிகையில் புலி, சிறுத்தை ,மான் போன்றவற்றின் தோல்களை தரைவிரிப்பாக பயன்படுத்தியிருக்கிறான், அவ்வளவு வனவிலங்கை வீர விளையாட்டுங்கிற பேர்ல வேட்டையாடியிருக்கிறார். அப்புறம் நம்ம பக்கத்துல இருக்கிற மைசூர் மஹாராஜா வேட்டையாடிய சிறுத்தை, புலிகள், யானைகள்,காட்டெருமைகள் இவைகளை சேமித்துவைக்க அரண்மனையில் இருபது அறைகள் ஒதுக்கியிருக்கிறார். இன்னொருத்தர் பரத்பூர் மன்னர், அவரோட எட்டாவ்து வயதிலேயெ புலிவேட்டையை ஆரம்பிச்சிட்டாரு, அவரோட 35 வயசு வரைக்கும் வேட்டையாடிய புலிகளின் தோல்களை ஒன்றாக சேர்த்து அரண்மனையின் வரவேற்பறையில் ஒரு முனையிலிருந்து மற்றொருமுனை வரைக்கும் தரைவிரிப்புகளாக பயன்படுத்தும் அள்விற்கு புலிகளை வேட்டையாடியிருக்கிறாரு. கடைசியா குவாலியர் மஹாராஜா மொத்தம் 1400 புலிகளை கொன்றிருக்கிறார், அவரோட அனுபவத்தை வைத்து ‘புலி வேட்டைக்கு ஒரு வழிகாட்டி’ என்கிற புத்தகத்தையும் எழுதியிருக்கிறார். அதப்படிச்ச வெள்ளைக்காரங்களும் அவங்க பங்குக்கு மிச்சமிருந்த புலிகளை வேட்டைக்குப் போயி சாகசம் செய்தாங்க.

நாட்டுமக்கள் பசியிலயும், பஞ்சத்துலயும் இருந்ததெல்லாம் அவங்களுக்கு தெரியல, எப்ப பார்த்தாலும் கேளிக்கை தான். வேட்டைக்குப்போறது, வெளிநாட்டுக்குப் போயாவது கோல்ப் வெளையாடுறது அப்புறம் அந்தக்காலத்திலிருந்து கடைசிராஜா வரை ஒரே விசயத்துல ஒற்றுமையாக இருந்திருக்காங்க, அது தான் ‘அந்தப்புறத்தை’ மேம்படுத்துவது. இப்படி இந்தியாவில மஹாராஜாக்களும் வெள்ளைக்காரங்களும் அப்புறம் கொள்ளைக்காரங்களும் புலியை வேட்டையாடிதற்கு பிராயசித்தமாகத்தன் புலிகளை இந்தியாவின் ‘தேசிய விலங்காக’ அறிவித்திருக்கிறார்களோ??

சனி, 16 ஏப்ரல், 2011

வெட்டி வேலை...

இன்றைக்கு சும்மா இருப்பதற்கு வெட்டியாக இருக்கிறேன் என்றும் பயனற்ற வேலையை வெட்டிவேலை என்றும் சொல்கிறோம். இதேமாதிரி தேவையற்ற பேச்சுக்களை வீண்பேச்சு என்றும் ‘வெட்டிப்பேச்சு’ என்றும் சொல்கிறோம். இன்றும் கிராமப்புறங்களில் ‘வெட்டியான்’ என்கிற வேலை இருக்கிறது. கவிஞர் இன்குலாப் ஒருமுறை வெட்டிவேலையைப் பற்றிச்சொன்னார், கம்யூனிஸ்ட்களுக்கு இந்த வார்த்தை தெரியும் என்றார். பின்னர் அதைப்பற்றி படிக்கும்போதுதான் ‘வெட்டி’ என்பதற்கு வரலாறே இருக்கிறது. விஷ்டி என்ற வடமொழிச்சொல்லின் தமிழாக்கம் தான் வெட்டி. ‘விஷ்டி குடிகள்’ என்ற மக்கள் அரசனுக்கும், நிலப்பிரபுக்களுக்கும் செலுத்தும் உழைப்புமுறை என வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். வரிவிதிப்பு முறை மாதிரி கட்டாய உழைப்பு என்பதற்கு 12, 13ம் நூற்றாண்டுகால தென்னிந்திய கல்வெட்டுகளில் இந்த சொற்கள் இடம்பெற்ற்ருக்கின்றன.

இந்த கூலி கொடுக்கப்படாத கட்டாய உழைப்பு முறை சரித்திர காலத்தில் தான் இருந்ததா? என்றால் 20 நூற்றாண்டில் நம் நாடு சுதந்திரம் பெற்ற பின்பும் இருந்திருக்கிறது. ஹைதராபாத் நிஜாமின் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற ‘தெலுங்கானா போராட்டம்’ குறித்த நூல்களில் வெட்டிவேலை முறைக்கு எதிரான போராட்டத்தை ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சிகள் நடத்தி அந்த முறையை ஒழித்தார்கள். நிஜானின் ஆட்சியில் சிறுவிவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் நிலப்பிரபுக்களுக்கு ‘வெட்டிவேலை’ என்ற இலவசப்பணியை செய்யுமாறு கட்டாயப்படுத்தப் பட்டனர். இதுமட்டுமல்லாமல் நிலப்பிரபுகளின் வீட்டில் விவசாயத்தொழிலாளர்கள் வீட்டுப் பெண்கள் ‘ அடிமைப் பெண்களாகவும்’ வேலை செய்ய கட்டாயப்படுத்தப் பட்டனர். அவர்கள் நிலப்பிரபுக்களுக்கு ‘வைப்பாட்டிகளாவும்’ ஆக்கப்பட்டனர். நிலப்பிரபுவின் பெண்ணிரற்கு திருமணம் நடந்தால் அடிமைப்பெண்களை மாப்பிள்ளை வீடிற்கு சீதனமாக அளித்துள்ளனர்.

இந்த நிலப்பிரபுத்துவ கொடுமைக்கெதிராக ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சிகள் வெட்டிவேலை முறை ஒழிக்கவேண்டும், நிலவரியைக் குறைக்கவேண்டும், குத்தகைதாரகளை வெளியேற்றக்கூடாது என்று போராட்டம் நடத்தி தான் இந்த ‘வெட்டிவேலை’ முறை ஒழிக்கப்பட்டது. கீழ்த்தஞ்சையிலும் நிலப்பிரபுக்கள் விவசாயித்தொழிலாளர்களை ஈவு இரக்கமின்றி சாணிப்பால் கொடுத்தும் சவுக்கால் அடித்தால் செய்த கொடுமையை ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் இயக்கம் தான் போராடியது. எழுத்தாளர் பிரபஞ்சனின் வார்த்தைகளில் சொல்வதானால் இன்றைக்கு இருக்கிற கட்சிகள் பிறப்பதற்கு முன்னால், விஜயகாந்த் பிறப்பதர்கு முன்னால், சரத்குமார் பிறப்பதற்கு முன்னால், எம்ஜிஆர் அப்போதுதான் பவுடர் பூசுவதற்கு முன்னாலேயெ கம்யூனிஸ்ட் கட்சி மனிதனை மனிதனாக நடத்துவதற்குப் போராடியது.

வியாழன், 14 ஏப்ரல், 2011

தமிழகத்தில் வாக்குப்பதிவு..

தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வாக்குகள் பதிவாகியிருக்கிறது. மிகவும் நல்ல செய்தி. திமுக இந்த வாக்குப்பதிவை ‘கழக அரசு’ மீண்டும் வரவேண்டும் என்பதற்காக என்கிறார், ஜெ வோ மக்கள் ஆட்சி மாற்றத்திற்க்கான மக்களின் ஏகோபித்த ஆதரவு என்கிறார். நடுநிலையாளர்கள் (அப்படி யாருமே கிடையாது) இது தேர்தல் கமிஷனுக்கு கிடைத்த வெற்றி என்று பொதுஜனம் கருதுகிறது. எப்போதும் கலைஞர், ஜெயா, சன் டிவி பார்க்கிறவகளுக்கு தேர்தல் கமிஷனின் முயற்சிகள் தெரிய வாய்ப்பில்லை. அது பொதிகையில் தான் அடிக்கடி இந்த விளம்பரங்கள் வருகின்றன. மேற்கூறிய சேனல்களில் இந்த விளம்பரங்களை அடிக்கடி போட்டால் அவர்களுக்கு எதிராக மாறிவிடும் என்கிற பயமிருக்கும். தேர்தல் கமிஷனின் நடவடிக்கைகளை ‘அறிவிக்கப்படாத எமர்ஜென்ஸி’ என்றெல்லாம் வர்ணித்த திமுக தலைவர் இப்போது தேர்தல் கமிஷன் ‘மிகக் கடுமையாக நடந்துகொண்டார்கள்’ என்கிறார். தேர்தல் கமிஷ்ன் அதிகாரி ‘பார்ப்பனர்’ இல்லாமல் போய்விட்டார், இல்லாவிட்டால் அந்த ‘இன’ அம்மாவுக்காக செயல்படுகிறார்கள் என்று சொல்லியிருப்பார். கேரளாவிலோ, மேற்கு வங்கத்திலோ தேர்தல் கமிஷனை இப்படி விமர்சனம் செய்யவில்லை. அங்கெ காங்கிரசோ, இடதுசாரிகளோ பணம் கொடுத்து வாக்காளர்களை ஏமாற்றவில்லை. இன்னும் சொல்லப்போனால் மேற்குவங்கத்தில் மாவோயிஸ்ட் நடமாட்டமுள்ள பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்து மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டது இடதுமுண்ணனி.

“எதையும் , எதன் பொருட்டும் , யாரிடமும் யாசிக்காதீர்கள் .
யாசிப்பு மேலும் தரித்திரத்தைக் கொண்டு வரும்.”

பாரதிகிருஷ்ண குமார் ‘யாசகம்’ என்ற தலைப்பில் எழுதிய வரிகள், தமிழக வாக்காளர்களுக்கான அறிவுரையாக இருக்கிறது. வாக்காளர்கள் சிலர் ‘கொடுத்த பணத்தைப் பெற்றுக்கொண்டோம்’ ஆனால் ஓட்டு எங்க விருப்பத்திற்குத்தான் போடுவோம் என்கிறார்கள். இது திருப்பதி கோவிலில் சிலர் அநியயாமாக சம்பாதித்த பணத்தை ‘சாமிக்கு பங்கு’ கொடுத்தமாதிரி ஊழல் பணத்தின் சில சதவீதங்களை மக்களுக்கு கொடுத்து அவர்களையும் பங்காளிகளாக்கும் வேலையிது. பிரதமர் ஓட்டுப் போடாமலிருந்தது பெரிய சர்ச்சையாகி விட்டது. முதன்முதலாக வரிசையில் நின்று வாக்களித்த பெருமை அது கே.ஆர். நாராயணன் குடியரசுத்தலைவராக இருந்தபோது.

எழுத்தாளரும் பதிவருமான மாதவராஜ் தன்னுடைய பதிவில் ‘தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என்பது எவ்வளவு நியாயமானதோ, அதே அளவுக்கு அ.தி.மு.கவும் வரக்கூடாது என்பதும் எனக்கு நியாயமாகப் படுகிறது’ என்று சொல்லியிருக்கிறார். அவர் சாலைப்பணியாளர்களுக்காக ‘இரவுகள் உடையும்’ என்ற குறும்படத்தை நினைவுபடுத்துகிறார். திமுக அதிமுக என்ற இருவரை எடைபோட்டால் குடும்ப ஆட்சி, ஊழல் என்பதில் சமமாகவும் தொழிலாளர் விசயத்தில் கொஞ்சம் கருணாநிதி ‘மென்மையாக’ நடந்துகொள்வார். தாமிரபரணி கொலைகள், ஹூண்டாய் தொழிலாளர்களை வஞ்சித்தது மற்றதைவிட சின்னது (ஒப்பீட்டுக்குத்தான்). இப்போதுள்ள கவலை அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாதே என்பது தான். திமுக காரர்கள் இடதுசாரிகள் போயஸ்கார்டனில் காத்திருந்ததற்காக ரெம்ப வருத்தப்பட்டார்கள். ஆனால் காங்கிரஸிடம் போய் விழுந்து ‘மீசையில் மண் ஒட்டவில்லை’ என்கிறார்கள். இடதுசாரிகள் அறிவாலயத்திலும் காத்திருந்தார்கள். கலைஞர் இதயத்தில் இடமளித்தார் அப்போதும் இடதுசாரிகள் தாங்கள் நின்ற 2 தொகுதிகளைத்தவிர மற்ற தொகுதிகளில் திமுக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார்கள் இது தான் வரலாறு. 63 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு மத்தியில் முதல் UPA அமைந்தபோது மந்திரிபதவியே வேண்டாம் ‘common minimum programme' படி ஆட்சிசெய்தால் போதும் என்றார்கள். திமுக தன்னுடைய குடும்ப முன்னேற்றதிற்காக மந்திரி பதவி கேட்டது. பாஜகவின் மதவாதத்தை மறந்துவிட்டு அவர்களின் தயவிலும் மந்திரியானார்கள். இடதுசாரிகள் யாராவது தன்னுடைய மகனுக்கு இதுவேண்டும் அதுவேண்டும் என்று என்றாவது கோரிக்கை வைத்திருக்கிறார்களா. சாமான்ய மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது தானே இவர்களின் கோரிக்கை. தமிழகத்தில் அமையவுள்ள ஆட்சியின் சுக்கான் இடதுசாரிகளிடம் இருந்தால் இங்கேயும் ‘குறைந்தபட்ச பொதுசெயல்திட்டம்’ அறிமுகமாகும்.

செவ்வாய், 12 ஏப்ரல், 2011

அடியாள் (பொருளாதாரம்).

அடியாள் என்றால் கையில் என்னேரமும் கத்தி, அரிவாள்,சோடாபாட்டில் அல்லது நவீன ஆயுதங்களான துப்பாக்கியை தூக்கிக்கொண்டு அலைபவர்கள் என்று நினைக்காதீர்கள். இந்த அடியாளை ‘பொருளாதார அடியாள்’ என்று சொல்லலாம். பொதுவாக வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டிகளுடன் அலைவார்கள், வேட்டியில் கண்டிப்பாக கரையிருக்கும் (கறை நல்லதுதானே), வட இந்தியாவில அந்த ஊருக்குத் தகுந்தமாதிரி ஆடை. இந்த அடியாளைச் சுத்தியும் நிஜ அடியாள்கள் இருப்பார்கள்.

எல்லாரும் அறிந்த அடியாள் பெரிய தலைவர்கள், முக்கியப்புள்ளிகளின் மெய்காப்புக்காக உள்ளவர்கள். மிகவும் விசுவாசமானவர்கள் எஜமானர் சொன்னதை யோசிக்காமல் செய்துமுடிப்பார்கள், சில சமயங்களில் எஜமானருக்கு கிடைக்கிற கொள்ளையிலும் பங்குண்டு. இந்த ’பொருளாதார அடியாள்’ க்கு நாட்டோட பொருளாதாரத்தைப் பத்தி எந்தக் கவலையும் கிடையாது, இவங்களோட உண்மையான வேலை வேற! அதாவது மக்களுக்கு தொண்டாற்றுவது, அதுக்குத்தான் தேர்தல்களில் நின்று மக்களுக்கு பணம் கொடுத்தாவது ஜனநாயக கடமையை ஆற்றச்சொல்கிறார்கள்? ஆனால் சட்டசபைக்கோ நாடாளுமன்றத்திற்கோ போனவுடனே தான் ‘பொருளாதார அடியாளா’ மாறிவிடுகிறார்கள். சாதா அடியாள் கொலையோ குற்றமே செஞ்சா அத ஏவினருக்கும் அதாவது அவரோட எஜமானருக்கும் தண்டனை உண்டு, சமயத்துல அவர் தான் முதல் எதிரியாக குற்றப்பத்திரிக்கையில் இருப்பார். இங்க பாவம் இந்த அடியாளு தான் மாட்டிக்குவாரு அவரோட எஜமான் ‘புனிதப்பசுவா’ தான் எப்பவும் இருப்பார். அவரு சீன்லயே வரமாட்டாரு, புனிதப்பசுக்களை காப்பத்தற வேலை மீடியாவோடது. இந்த அரசியல் அடியாள் செய்யற வேலைக்கு ஊழல் னு வெளியில சொல்றாங்க, 1.70 இலட்சம் கோடியை பலனாக பெற்ற ‘புனிதப்பசு’களுக்கு எந்த தண்டனையும் இல்ல, ஆனா பாவம் அடியாளுக்கு கமிஷன் எவ்வளவு வந்ததுன்னு தெரியல, பாவம் திஹார்ல கொண்டு போய் வைச்சுண்டாங்க! இவரு மட்டுமா தப்பு செஞ்சாரு ஸ்பெக்டரத்தை விட அரசுக்கு பெரிய இழப்பை செய்திருக்காங்க அதாவது 2005ம் ஆண்டிலிருந்து இந்த ஆண்டுவரைக்கும் செலுத்தவேண்டிய கார்ப்பரேட் இன்கம்டாக்ஸ் 3,74,937 கோடிரூபாயை தள்ளுபடி செய்திருக்காங்க.(7th March The Hindu சாய்நாத் கட்டுரை) அதப்பத்தி யாரும் கேள்வி கேட்க முடியாது ஏன்னா அதை legal லா ஊழல்ன்னு சொல்லமுடியாதே. எதை ஊழல்ன்னு சொல்றதுன்னே தெரியல.

மன்னராட்சி காலத்தில் அடுத்த நாட்டின்மீது படையெடுக்கும்போது (கொள்ளையடிப்பது) கொள்ளையில் போர்வீரர்களுக்கும் பங்கு கொடுக்கப்படும் என்று அறிவிப்பார்கள். அதனால ரெம்ப உற்சாகமா சண்டை போடுவாங்க, அத மாதிரி இங்க தாராளமயத்தை தாரளாமா செய்யுங்க உங்கள தாரளமா கவனிக்கிறோம்னு அறிவிக்கிறாங்க. நம்மூர்ல யாரெல்லாம் அடியாள் (பொருளாதார அடியாள்) வேலை செய்றாங்க.... எதுக்கு தனித்தனியா, அதுக்குப் பேரு தான் முதலாளித்துவ அரசியல்.

திங்கள், 11 ஏப்ரல், 2011

GROWTH ! WHERE IS JOB?



மாண்டெக்சிங் அலுவாலியாவிற்கும் திமுகவிற்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது, எப்படின்னா டெல்லியில் எந்த ஆட்சி அமைந்தாலும் இவங்க பதவியில் இருப்பாங்க. முதல்ல சொன்னவரை வேலைக்கு வெச்சிருக்கணும் வெள்ளை மாளிகை சொன்னதா விக்கிலீக்ஸ் சொல்லுது, அப்படிப்பட்டவர் தலைமையில் திட்டக்கமிஷன் இருந்தா நாட்டோட பொருளாதாரம் இப்படி Jobless growth ல தான் இருக்கும்.

நாட்டோட பொருளாதாரம் 8 சதம் உயர்வு, 10 சதவீதத்தை தொட்டுவிடுவோம் சொல்றாங்க ஆன பத்துவருஷமா வேலைவாய்ப்பை அரசும் உருவாக்கவில்லை தனியார் நிறுவனக்களும் உருவாக்கவில்லை. Organised sector என்று சொல்லக்கூடிய நிறுவனத்தின் ஊழியர்கள் 1999ம் ஆண்டிலிருந்து 2008வரை சுமார் 6 இலட்சம் வேலைவாய்ப்புகள் குறைந்திருக்கிறதா ஆய்வறிக்கை சொல்லுது. 2001 மக்கள் தொகையைவிட இப்போதுள்ள மக்கள் தொகை 18.14 கோடி உயர்ந்திருக்குது, ஆன வேலைவாய்ப்பை அரசு உருவாக்குவதற்குப் பதிலாக காலியான பணியிடத்தை கூட நிரப்பலை. 1999ம் ஆண்டில் 1.94கோடி பேர் பொதுத்துறையில் அல்லது அரசு வேலையில் இருந்தார்கள், ஒவ்வொரு வருடமாக தேய்ந்து தேய்ந்து 2008ம் ஆண்டு நிலவரப்படி 1.76 கோடியாக குறைக்கப்பட்டிருக்கிறது. எங்க வேலை வாய்ப்பை உருவாக்குனாங்க தெரியல. பத்துவருட காலமாக தனியார் நிறுவனங்கள் எவ்வளவோ புதிதாக தொடங்கப்பட்டிருக்கு, ஆனா இதுவரைக்கு 1 கோடிபேருக்கு கூட வேலை கொடுக்கல.

அரசோட அறிக்கைதான் சொல்லுது...........

வெள்ளி, 8 ஏப்ரல், 2011

மூன்று முதல்வர்கள்

தமிழக முதல்வர் மு.கருணாநிதி.



அசையும் சொத்து ------- 41 கோடிகள்
அசையா சொத்து -------- 3 கோடிகள்
மொத்த சொத்து---------- 44 கோடிகள்

கேரளமுதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன்.




அசையும் சொத்து ------- 8.5 இலட்சம்
அசையா சொத்து -------- 7.5 இலட்சம்
மொத்த சொத்து -------- 16 இலட்சம்

மேற்குவங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா



அசையும் சொத்து ------- 31 இலட்சம்
அசையா சொத்து -------- 15 இலட்சம்
மொத்த சொத்து --------- 46 இலட்சம்

கேரளமுதல்வர் அச்சுதானந்தன் தலைமையில் அமைந்த கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியில் சிறிய ஊழல் புகார் கூட வந்ததில்லை. முதலமைச்சர் நேர்மையாக இருந்தால் தான் மற்ற அமைச்சர்களும் அரசு அதிகாரிகளும் நேர்மையாக இருப்பார்கள்.

மேற்குவங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கு சொந்தமாக ஒரு கார் கூட கிடையாது, 715 சதுராடி வீட்டில் இன்னமும் குடியிருந்து வருகிறார். அதுவும் தனது மனைவியின் வருமானத்தில் வாங்கியது.

தமிழக முதல்வரின் அறிவிக்கப்பட்ட சொத்துமதிப்பு 44 கோடி, அவருடைய குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு பல ஆயிரம் கோடிரூபாய். அரசியல் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி மத்தியில் எந்த ஆட்சி அமைந்தாலும் அதில் மந்திரிகளாய் தனது கட்சிக்காரர்களை அமர்த்தி தனது குடும்ப முன்னேற்றத்திற்க்காக பாடுபட்டவர் தமிழக முதல்வர். கட்சியின் தலைவரே முதல்வர், அவரே பொதுக்குழு, செயற்குழு எல்லாமே. தலைமையே சொத்து சேர்ப்பதற்காக அரசியலில் ஈடுபட்டால் அமைச்சர்கள், மற்ற தலைவர்கள் எப்படி யிருப்பார்கள். கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியில் தமிழக அமைச்சர்கள் ஈட்டிய வருமானத்தைப் பாருங்கள் (அறிவிக்கப்பட்டது மட்டும்). http://truetamilans.blogspot.com/2011/04/5.html.

சிந்திப்பீர் ! செயல்படுவீர்!!

ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே...

இன்றைக்கு வலைப்பக்கங்களில் அன்னா ஹசாரேவைப் பற்றி இல்லாத பதிவே இல்லையெனலாம அந்த அளவிற்கு வலைப்பதிவர்கள் ஊழலுக்கு எதிரான இயக்கத்திற்கு ஆதரவளிக்கின்றனர் மகிழ்ச்சியான செய்திதான்.அன்னா ஹசாரேவிற்கு ஆதரவாக பல நகரங்களில் மக்கள் கூட்டங்கள் நடத்தி ஆதரவு தெரிவிக்கிறார்கள். அவருடைய உண்ணாவிரதத்தின் முக்கிய கோரிக்கை ஜன் லோக்பால் மசோதாவில் அரசியல்வாதிகள், அதிகாரிகளுடன் சமூக ஆர்வலர்களும் அந்த குழுவில் இடம்பெறவேண்டும், இம்மசோதா உடனே அமல்படுத்தப் படவேண்டும் என்பதுதான்.

நாம் அன்றாடவாழ்வில் லஞ்சம் கொடுக்காமல் எந்த அரசுத்துறையிலும் வேலை நடப்பதில்லை என்றாகிவிட்டது, நியாயமாக உரிமையாக பெறவேண்டிய அரசு உதவிகளைக்கூட லஞ்சம் அளித்துப் பெறவேண்டியிருக்கிறது, சில சமயங்களில் நம்முடைய சுயநலத்திற்காக லஞ்சம் கொடுத்து அரசிற்கு இழப்பு ஏற்படுத்துகிறோம். நாம் செய்கிறவற்றிற்கு நாம் நியாயம் கற்பிக்கிறோம், ஆனால் லஞ்சம் பெறுவபவர்களை இகழ்கிறோம். அவர்கள் கேட்கவில்லையானால் நாம் ஏன் கொடுக்கிறோம் என்ற நியாயம் வேற, கேட்டும் கொடுக்காமல் புகார் செய்கிறவர்கள் நம்மில் வெகுசிலரே. அப்படி சிலரால் தான் ஊழலுக்கு எதிரான போராட்டம் முன்கை எடுத்து நடத்தப்படுகிறது.

அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக பல அரசியல் கட்சிகளும் குரல் கொடுத்துள்ளன, கர்நாடகாவில் முதல்வராக குதிரை வியாபாரத்தில் ஈடுபட்டு பதவிக்குவந்த குமாரசாமியின் தந்தை தேவகெளடாவின் ஆதரவும் உண்டு. ஆயுதபேரம், சவப்பெட்டி, கர்நாடகத்தில் சுரங்க ஊழல் செய்த பாஜக வின் ஆதரவும் உண்டு. பத்து வருடங்களாக குற்றப்பத்திரிக்கையை மொழிமாற்றத்திற்காக வாய்தா வாங்கும் ஜெயலலிதாவும் இன்று மாலை ஆதரவு தெரிவித்துள்ளார். பீகாரின் அழகிரி என்று சொல்லப்படுகிற பப்பு யாதவ் சிறையிலிருந்து கொண்டு ஹசாரே விற்காதரவாக உண்ணாவிரதம் இருக்கிறார்கள். ஆதரவு தெரிவிப்பவர்கள் குட்டையை குழப்புகிறார்களோ மீன் பிடிப்பதற்கு..

அன்னா ஹசாரேவிற்கும் ஊழலின் ஊற்று என்பது என்னவென்று தெரியவில்லையோ என்னவோ, இருந்தாலும் அவர் சிறைநிரப்பும் போராட்டம் தொடங்கப்போவதாக இருக்கிறார். இந்திய மெடில்கிளாஸ் மக்கள் லிபியாவைப்போலும், எகிப்தைப்போலும் தேசியக்கொடிகளை தூக்கிக்கொண்டு இன்று ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.எத்தனை பேர் சிறை நிரப்பச்செல்வார்கள் என்று தெரியவில்லை. இருந்தாலும் இந்தமுயற்சி வெற்றியடைய வேண்டும். ஜன லோக்பால் செயல்பட ஆரம்பித்தால் அரசியல் நடத்துவதற்கு எந்த முதலாளித்துவக் கட்சியிலும் ஆளிருக்காது. புதிய கட்சிகள் நிறைய வரும் அந்த இடத்தை நிரப்புவதற்கு வேற வழி.....

செவ்வாய், 5 ஏப்ரல், 2011

இந்திய மக்கள்தொகையில் பெண்கள்

இந்தியாவின் மக்கள்தொகை 2001 ம் ஆண்டிலிருந்த 102 கோடியிலிருந்து 121 கோடியாக உயர்ந்துள்ளது, ஆனாலும் கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகையின் வளர்ச்சியின் சதவீதம் அதற்கு முந்தைய பத்தாண்டுகளை விட குறைந்துள்ளது. உலகின் நிலப்பரப்பில் இந்தியா வெறும் 2.4 சதவீதம் மட்டுமே ஆனால் மக்கள்தொகையில் நாம் 17.5 சதமானம், மாறாக அமெரிக்காவின் நிலப்பரப்பு உலக நிலப்பரப்பில் 7.2 சதவீதம் அதன் மக்கள்தொகையின் பங்கு வெறும் 4.5 சதவீதம் தான். இந்த நிலையில் 2030ம் ஆண்டில் இந்திய மக்கள்தொகை சீனாவை விஞ்சி முதலிடம் வகிக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியா எதிர்நோக்குகிற எல்லாப் பிரச்சனைகளுக்கும் மக்கள்தொகைதான் காரணம் என்று எல்லோரிடத்தும் கருத்து நிலவுகிறது. ஆனால் இவ்வளவு மக்களை உற்பத்தியில் ஈடுபடுத்தினால் இந்தியாதான் முதன்மை நாடாக இருக்கும். மக்கள்தொகைபெருக்கம் இந்தியாவிற்கு பாதகமான அம்சமாக விளங்கும் போது அதுவே பல ஐரோப்பிய நாடுகள் மக்கள்தொகை வளர்ச்சிவிகிதம் குறைவதை கவலையுடன் பார்க்கின்றனர். அடுத்த பத்தாண்டுகளில் உலகிலேயெ அதிக இளைஞர்கள் இந்தியாவில் தான் இருப்பார்கள். இப்படி மக்கள் தொகையில் நிறைகுறைகள் இருப்பினும், மிகவும் பாதகமான அம்சமாக விளங்குவது ஆண் பெண் விகிதாச்சாரம் தான்.



2001ம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி 1000 ஆண்களுக்கு 933 பெண்கள் இருந்தார்கள் இப்போது அந்த விகிதம் 940 ஆக உயர்ந்துள்ளது. அதுவே 0-6 வயதுள்ள குழந்தைகளின் விகிதம் முன்னெப்போதும் இல்லாததைவிட மிகவும் குறைந்து 1000 ஆண் குழந்தைகளுக்கு 914 பெண்குழந்தைகள் மட்டுமே உள்ளனர். இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து படிப்படியாக இந்த விகிதம் குறைந்துகொண்டே வருகிறது. கேரளமாநிலம் முற்றிலும் மாறுபட்டு 1058 பெண்கள் உள்ளனர், 0-6 வயதுள்ள குழந்தைகளின் விகிதாச்சாரத்தில் பெண்குழந்தைகளின் விகிதம் அங்கும் குறைவாகவே உள்ளது ஆனால் 960 என்பது மற்ற மாநிலங்களைவிட அதிகம்.இந்தியாவின் பொருளாதர சமூக,கல்வி வளர்ச்சிவிகிதம் எல்லா மாநிலங்களிலும் சீராக இல்லை. ஹிந்திபேசும் மாநிலங்களில் கல்வி வளர்ச்சி குறைவாக உள்ளது, பாலின அசமத்துவம் அதிகரித்திருக்கிறது. பொருளாதாரத்தில் மிகவும் வளர்ச்சிபெற்ற மாநிலமாக குஜராத் இருந்தாலும் 0-6 வயதுள்ள ஆண்-பெண் விகிதாச்சாரம் 900க்கும் கீழே உள்ளது. காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா, உத்தர்கண்ட், உபி போன்ற மாநிலங்களிலும் இதே நிலைமைதான். ஹரியானா, உபி ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இறுக்கமான சாதிக்கட்டுப்பாடும் தலித்மக்கள் மீதான வன்முறையும் அதிகம் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது.

இந்தியாவில் தந்தைவழிச் சமுதாயம் நிலைபெற்றதிலிருந்தே ஆண் குடும்பத்தலைவனாகவும் பெண் ஆணின் அசையா சொத்தாக மாறிக்கொண்டிருந்தாள். ஆண்குழந்தைகளுக்கிருந்த முக்கியத்துவம் பெண்குழந்தைகளுக்கு இல்லை. இன்றும் சமூகத்தில் கல்வி,சுகாதாரம்,ஊட்டசத்து போன்ற விஷயத்திலும் வேறுபாடு நிலவுகிறது. புத்தர் வாழ்ந்த காலத்தில் (கி.மு 563-483) பிரசேனஜித் என்ற மன்னர் ‘தன் மனைவி பெண் மகவை ஈன்றாள்’ என்ற செய்தியறிந்தவுடன் மன்னர் கவலையடைந்திருக்கிறார், புத்தர் அவருக்கு ஆறுதல் சொன்னதாக செய்தியிருக்கிறது.அதற்கு பிந்தையகாலத்தில் ராஜபுத்திர இனத்தில் பெண்குழந்தை பிறந்தால் அந்த சிசுவைச் சாகடித்தனர். அந்த வழக்கம் இன்று தொடர்ந்துவருகிறது.

பெண்களின் பாலின விகிதாச்சாரம் ஏன் தொடர்ந்துகுறைந்து வருகிறது, இன்னமும் பெண்சிசுக்கொலை நடக்கிறதா என்பது நிச்சயம் ஆராயப்படவேண்டும். கருவில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக உள்ளதா என்பதைக் காண ‘ஸ்கேன்’ செய்து குழந்தையின் வள்ர்ச்சியை கண்கானிப்பது அறிவியலின் வளர்ச்சி, அதைப் பயன்படுத்தி பெண் குழந்தையென்றால் அறிந்தால் கருவிலேயெ கலத்துவிடுகின்றனர். அச்சோதனையை பாலினம் அறிவதற்காக பயன்படுத்தக்கூடாது என்ற சட்டம் இருந்தபோதிலும் இன்னும் பெண்குழந்தைகளின் எண்ணிக்கை ஏன் குறைவாக உள்ளது. வேறு என்ன காரணங்களால் பெண் விகித்தாச்சரம் குறைந்துவருகிறது என்று ஆராயலாம்.