வியாழன், 9 ஜூன், 2016

நிழல்தரா மரம் - அருணன்

அஞ்ஞாடி நாவலில் வருகின்ற சமணர்கள், ஞானசம்பந்தர், கழுகுமலை, கழுவேற்றம் பற்றி நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தேன் உடனே அவரிடமிருந்து இரண்டு நூல்களைத் தந்தார். ஒன்று ‘மிளிர் கல்’ கண்ணகி கோவலன் கதையோடு சமணத்தையும் அறியமுடிந்தது. மற்றொன்று ‘நிழல்தரா மரம்’ அட்டைப்படத்தில் இருந்த கழுவேற்றம் குறித்த ஓவியங்கள் கோவில்களில் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.கழுவேற்றம் குறித்து எண்ணிக்கையில் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது ஆனால் கழுவேற்றியது என்பது வரலாறு அதுவும் பார்வதியிடம் பால்குடித்த ஞானசம்பந்தரின் எதிரே நடந்திருக்கிறது. அடடா..மதங்கள் அன்பை போதிக்கிறது என்றால் கேப்பையில் நெய் வடிகிறது என்று நம்புவார்களா?

‘மிளிர் கல்’ நாவலில் ஒரு தகவல், இங்கே சமணர்களைப் போல் மேற்கு ஐரோப்பாவில் பதினொன்றாம் நூற்றாண்டில் கதாரிஸம் என்ற கிறிஸ்தவ பிரிவு தோன்றியிருக்கிறது அதற்கும் கத்தோலிக்கத்திற்கும் ஏற்பட்ட அனல் வாதத்தில் கதாரிஸவாதிகள் தோற்றுப்போனார்கள் பின்பு கொல்லப்பட்டார்கள். எனவே நாவலாசிரியர் என்னுரையில் கூறியபடி ‘மதச்சண்டைகள்’ இந்த மண்ணுக்கு புதிதல்ல. மதமாற்றம் அப்போதும் நடந்திருக்கிறது, மதம் வெறும் மக்களை கவர்வதில் மட்டுமல்ல ஆட்சியாளர்களின் மதமாக ஆகவேண்டும் அப்போது தானாக குடிபடைகள் அந்த மதத்தை ஒழுகுவார்கள். தன் மதம் உயர்ந்தது என்பது மட்டுமல்ல பிற மதம் தாழ்ந்தது என்கிற சிந்தனையை சமயவாதிகள் கொள்கைகளாக வைத்திருந்தார்கள் பொதுமக்கள் அப்படியல்ல!பேரா. அருணனின் ‘ கடம்பவனம்’ நாவ்லை நீண்ட வருடங்களுக்கு முன்பே வாசித்திருக்கின்றேன். வரலாற்றை கதையாக சொல்வார். இந்த நாவலில் வர்ணனையை சிறப்பாக கையாண்டிருக்கிறார். ஏழாம் நூற்றாண்டு தமிழகம், சமணம், அப்போதைய உணவு, மொழி, வீடுகள் தெருக்கள் பண்டங்கள் பற்றி நிறைய தேடி படித்து இந்த நாவலை உருவாக்கியிருக்கிறார். இப்போதே அந்த ‘யானை மலைக்கு’ போகவேண்டும் சமண பள்ளிகளையும் சிற்பங்களையும் பார்க்கவேண்டும் என்ற ஆவல் மேலிடுகிறது. எண்பெரும் குன்றங்களுக்கு யானை மலையே தலைமை. அந்த குன்றங்களை கிரானைட் வியாபாரிகள் அழிக்கும்போது வரலாற்றியலாளர்களின் கண்களில் ‘தருமநாதன்’க்கு ஏற்பட்ட உணர்வே பொங்குகிறது நிலைமை கைமீறி போய்விட்டது.

ஒர் காலத்தில் செழுத்தோங்கிய சமணம் இன்றைய தமிழ்நாட்டில் தேடினாலும் கிடைக்காது, மன்னர்களை ஒற்றி மக்கள் மாறிவிட்டார்கள் ஆனால் அந்த குன்றங்கள் எல்லாம் என்னவாயிற்று! தொ.ப.வின் கட்டுரைகளை வாசித்தால் கோவில்களுக்கு கீழே சமணர்கள் அருகர்கோவில் இருக்கும். அவருடைய ‘அழகர் கோவில்’ நூலை வாசிக்கவேண்டும். வாசிக்கும்போது வைதிக மதங்களான வைணவம், சைவம் தங்களுடைய முரண்பாடுகளை ஒத்திவைத்து பொது எதிரிகளான அவைதிக மதங்களை ஒழிக்க நினைக்கும்போது சமணம் ஆபத்திலிருந்து காத்துக்கொள்ள பெளத்ததோடு  கூட்டணி வைக்கவில்லை. இந்த கூட்டணி தற்போதைய தேர்தல் கூட்டணியை நினைவுபடுத்துகிறது. 

அரிகேசரி மாறவர்மன் சோழநாட்டின் மீது போர்தொடுத்து வென்று சோழ இளவரசியான மங்கையர்கரசியை மணந்துகொண்டான். சமணத்தை ஒழுகி வந்தான். அவன் மனைவி சிவனை வழிபட்டார் அதை அனுமதித்தார். சமணர்கள் கண்டு முட்டு, கேட்டு முட்டு என்று வைதிகவாதிகளை காண்பதும் அவர் சொற்களை கேட்பதும் ஆகாது என்றிருந்தார்கள். குலச்சிறையார் என்ற மந்திரியும் மங்கையர்கர்சியும் ஞானசம்பந்தனை அழைத்துவர்கிறார்கள். பின்னர் மன்னருக்கு வெப்புநோய் வருகிறது, சமண வைத்தியர்களின் மருந்தால் பிணி தீர்க்கமுடியவில்லை. சம்பந்தர் வலியை குணமாக்கினார். மன்னர் கரைந்தார். சமணர்களுக்கு ஐயம், இந்த நோய் சோழதேசத்திலிருந்து வந்திருக்கிறது, எச்சிலால் பரவும். நோய் தீர்த்தவனே நோயை கொடுத்திருக்கிறான். கம்ப்யுட்டர்களில் Antivirus software விற்பவனே  virus ஐ பரப்புவதுபோல!

இப்போது அரசர் வைதிகத்திற்கு போய்விடுவாரோ என்கிற கவலை சமணமுனிகளுக்கு, அதனால தங்கள் மதம் உயர்ந்தது என்பதை வாதில் நிருபிக்கிறோம் என்று வாதிற்கு அழைக்கிறார்கள். வாதில் நிச்சயம் தோற்றுவிடுவோம் என்று வைதிகர்கள் , அனல்வாதத்திற்கு அழைக்கிறார்கள். தீயில் அவரவர் ஓலைகளை போடுகிறார்கள். சம்பந்தர் போட்ட ஓலை எரியவேயில்லை. சமணர்கள் தோற்றார்கள், இப்போதும் வாதிற்கு அழைக்கிறார்கள் புனல்வாதத்திற்கு வாருங்கள் வென்றால் வாதிற்கு வருகிறோம் என்கிறார்கள் சைவர்கள். புனல்வாதத்தில் தோற்றால் சமணத்தை விட்டு சைவத்தை ஏற்கவேண்டும் என்ற நிபந்தனையை மறுத்து கழுமரம் ஏறுவோமெ தவிற சைவத்தை ஏற்கமாட்டோம் என்கிறார்கள். புனல்வாதத்திலும் வைதிகர்கள் வென்றார்கள், சூழ்ச்சிகளையும் தந்திரங்களையும் சமணர்கள் அறியவில்லை. எண்பெருங்குன்றங்களிலிருந்த சமணத்துறவிகள் கழுமரம் ஏறுகிறார்கள். அந்த இடமே ‘சாமநத்தம்’ அன்றழைக்கப்படுகிறது. சமணர் ரத்தம் என்பதே மருவி வழங்குகிறது.

மன்னர் சைவத்திற்கு மாறினார், குடிபடைகள் எல்லாம் சைவத்திற்கு ஒழுகின, சமணத்தை வளர்த்த வணிகர்களும் மாறிவிட்டார்கள். சமணம் கருவருக்கப்பட்டது. அழியாமல் இன்றைக்கு மிச்சமிருப்பது அதன் சிற்பங்களும் இலக்கியங்களும். திருக்குறள், தொல்காப்பியம் சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி என தமிழுக்கு சமணம் அளித்துள்ள கொடையை தமிழர்கள் மறந்தார்கள். பிற உயிர்களுக்கு எந்த தீங்கும் இழைக்கக்கூடாத என்கிற சமண நெறி. கடுமையான துறவு, துறவிகள் ஆடைகள் அணியக்கூடாது, எதையும் சொந்தமாக வைத்துக்கொள்ளக்கூடாது, சூரியன் மறைவதற்கு முன்பே உணவறுந்தவேண்டும், விளக்குகள் கூட ஏற்றக்கூடாது பூச்சிகள் இறந்துவிடுமே, பல்தேய்த்தால் கிருமிகள் அழிந்துவிடுமே! குளித்தாலும் அப்படியே! வெளிச்சம் இல்லாவிட்டால் நடக்கமாட்டார்கள், பகலில் மயில்தோகைகளைக் கொண்டு தரைய பெருக்கிக்கொண்டே நடக்கவேண்டும், பெண்களுக்கு முக்கியத்துவம் இல்லை இதனாலும் மக்களிடமிருந்து அந்நியப்பட்டது சமணம்.

இந்த நூலை வாசித்துமுடித்தபோது, மதுரையை பார்க்கவேண்டும், நீலகேசியை வாசிக்கவேண்டும் யானைமலையை பார்க்கவேண்டும். வேதங்கள் யாராலும் இயற்றப்படவில்லை அது சுயம்புவானது என்று வைதீகர்கள் கூறும்போது நீலகேசி சொல்கிறார்.

யாரது செய்தவர் அறியில்
இங்கு  உரை எனின் ஒருவன்
ஊரது நடுவண் அங்கு ஓர் உறையுளில் 
மலம்பெய்திட்டு ஒளித்து ஒழியின்
பேரினும் உருவினும் பெறல்
இலனாதல் இன்றா குறித்து
தேரினும் இனி அது செய்தவர்
இல்லெனச் செப்புவே’’

சமணத்தையும் தமிழக வரலாற்றின் ஒரு காலகட்டத்தையும் மதங்களையும் அறிந்துகொள்ள இந்த நாவல் வாசிக்கப்படவேண்டும்.
பேரா.அருணன் தமிழுக்கு அளித்துள்ள கொடைஎனலாம்.


மிளிர் கல்- இரா.முருகவேள்

மிளிர் கல்
---------------
புத்தாயிரத்திற்குப்பின்னர் வந்த நாவல்கள் என்ற தலைப்பில் எஸ்.ரா அவர்கள் பரிந்துரைத்த நாவல், அதோடு நீண்ட நாட்களுக்கு முன்பே நண்பர் வாசித்த அனுபவத்தை சொல்லியிருந்தார் அதனால் அவரிடமே வாங்கி வாசித்து முடித்தேன், முல்லையும் நவீனும் கண்ணகி புகாரிலிருந்து கொடுங்களூர் வரை பயணித்த தடத்தை ஆவணப்படமாக்கும் போது எதிர்பாராத விதமாக ஸ்ரீகுமாரை சந்திக்கிறார்கள். அவரை சந்திக்காவிட்டால் இவர்களது பயணம் எப்படியிருக்கும்?
ஒரு தமிழ்ப்பேராசிரியருக்கும் தொல்பொருள் ஆய்வாளனுக்குமுள்ள வித்தியாசம் என்ன?
காங்கேயம் காளைகளுக்குத் தான் பெயர் போனது என்று நினைத்திருத்தேன், இவ்வளவு வளமிருக்குதா?
அசோகர் கலிங்கத்தை வெல்வதற்காக புத்த சமயத்தை தழுவினாரா? டிடிகோசாம்பியின் நூல்களை படிக்கத் தூண்டுகிறது. கலிங்கப்போரில் எண்ணற்ற உயிர்கள் கொல்லப்பட்டது உண்மையில்லையா? இந்த ஐயம் தீர்க்கப்படவேண்டும்.
ஏன் சமண, பெளத்ததிற்கு மாற்றாக சைவம் தோன்றியது அதற்கான விடைகள்.
குஜராத்தில் வைரம், கற்கள் பட்டை தீட்டும் தொழில் நடக்கிறது என்பதை அறிந்தோம், அந்த பட்டை தீட்டும் தொழிலாளர்களின் பாதுகாப்பற்ற பணிச்சூழல் இத்தனை மரணங்களும் சுவாச நோய்களும் ஏற்படுகின்றன என்பதை ஊடகம் சொல்லவில்லை! குழந்தைத் தொழிலாளர்கள், கொத்தடிமை முறை மூலம் லாபம் கொழிக்கிறது!
நாவலில் முல்லையும், நவீனும் ஆவணப்படத்திற்கு பயணிக்கும்போது சீரிகுமாருடன் உரையாடும்போது தொ பரமசிவன் கட்டுரைகளை வாசித்தது போல இருந்தது. நாவலில் பாத்திரங்களுக்கு தேடல் இருந்தது. வாசித்து முடித்தபின் அந்தத்தேடல் வாசகனைத்தொற்றிக்கொண்டது.
பூம்புகார் திரைப்படத்தை பார்த்தாகிவிட்டது, இனி சிலப்பதிகாரம், கோசாம்பியின் நூல்களையும் சமணம் பெளத்தம் சார்ந்த நூல்களையும் வாசிக்கவேண்டும். இந்த நாவல் வாசகனை மேலும் பரந்த வாசிப்பிற்கு இட்டுச்செல்கிறது.
இரா. முருகவேல் அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்!

வெள்ளி, 20 மே, 2016

மகாகவி பாரதியார்- வ.ரா

இன்றைக்கு பாரதியை தமிழர்கள் கொண்டாடுகிறார்கள், ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் அவர் கொண்டாடப்படவில்லை. அவரோடு சமகாலத்தில் வாழ்ந்த தேசிய இயக்கத்தின் தலைவர்கள் கூட அவர் இறந்து போனதற்கு பின்புதான் அவருடைய மேதமையை உலகிற்கு சொன்னார்கள். வ.ரா என்கிற வ.ராமஸ்வாமி பாரதியோடு சிலகாலம்  வாழ்ந்துள்ளார். அவர் வாழ்ந்த காலத்தில் நடந்த சில சம்பவங்களை இந்த நூலில் சொல்லும்போது வாசிப்போர்களை நாம் ஏன் அந்தக் காலத்தில் பிறக்காமல் போய்விட்டோம் என்று தோன்றுகிறது. ஒருவேளை பிறந்திருந்தாலும் மேதமையை அறிந்திருப்போமா என்பது ஐயமே!


தோழர். எஸ்.ஏ.பி அவர்கள் ஒரு கலையிலக்கிய முகாமில் பேசும்போது பாரதியை நாம் ஏன் கொண்டாடுகிறோம் என்று சொன்னார். விடுதலை இயக்கத்திற்கு  தமிழர்களை தட்டியெழுப்ப கவி புனைந்தான், பெண்விடுதலையைப் பற்றி பாடினான், சாதீய ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்து பாடினான். அவருடைய பேச்சும் செயலும் வேறு வேறல்ல. தமிழில் ‘புரட்சி’ விடுதலை என்ற சொற்களை முதலில் அறிமுகப்படுத்தியவன் பாரதி. உலக அரசியலை கூர்ந்து கவனித்து ஜார் மன்னனின் கொடுங்கோல் அரசை விமர்சித்தான். ரஷ்யப்புரட்சியை தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் முதன்முதலாக அறிவித்ததும் அதைப் பற்றி ‘ஆகாவென்றெழுந்தது பார் யுகப்புரட்சி’ மாகாளி கடைக்கண் வைத்தாள் அங்கே’ என்று பாடினான்.

இன்றைக்கும் தமிழகத்தில் சாதீய ஏற்றத்தாழ்வுகளும் தீண்டாமை என்கிற மடமையும் இருக்கும்போது நூறாண்டுகளுக்கு முன்பு சொல்லவேண்டுமோ?அவர் வாழ்ந்த காலத்தில் சுயசாதி அடையாளத்தை எதிர்த்து குடுமியை துறந்தான், பூணூலை அறுத்தெரிந்தான். வைதீகர்கள் மீசை வைக்கக்கூடாது என்பதற்காக முறுக்கிய மீசை வைத்துக்கொண்டான். சகமனிதர்கள் மீது அன்பு காட்டுவதே மனிதநேயம், அவன் ஒரு படிமேலே ‘காக்கை குருவி எங்கள் சாதி’ ஜடப்பொருட்களான ‘காடும் மலையும் எங்கள் கூட்டம்’ என்றான். ஒரு சம்பவத்தை வ.ரா குறிப்பிடுகிறார். ஒருநாள் காலையில் பாரதி வீட்டில் ஹோமம் வளர்த்து காயத்ரி மந்திரம் ஜெபிக்கும் ஓசை கேட்டது, போய்ப் பார்த்தால் தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்த கனகலிங்கத்திற்கு பூணூல் போட்டு காயத்ரி மந்திரத்தை அவனுக்கு கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தார். அவனிடம் சொன்னார், இந்த பூணூலை எப்போதும் கழட்டாதே, யார் வந்து மிரட்டினாலும் அடிபணியாதே பாரதி அணிவித்தான் என்று சொல் என்றார்.

வ.ரா பாரதியிடம் கேட்டார், நான் அணிந்த பூணூலை அறுத்தெரிய சொன்னீர், அதற்கும் சில காலம் முன்பே நீங்களும் கழட்டியெறிந்தீர். ஏன் கனகலிங்கத்திற்கு பூணூல் அணிவித்தீர்?அதற்கு பாரதி நீயும் நானும் ஊரறிந்த பார்ப்பான். ஆனால் கனகலிங்கம் நம்மைப்போல் ஆகவேண்டாமா? என்றார். இந்த சம்பவத்திற்கு வெகுகாலத்திற்கு பின்பு பாரதியை யானை துன்புறுத்தி படுக்கையில் படுத்தபோது கனகலிங்கம் வந்து பாரதியை பார்த்தார். அப்போது அவருடைய உடம்பை தடவி பார்த்தார், பூணூல் அணிந்திருப்பதை கண்டதும் மகிழ்ந்தார்.
பாரதியை போற்றியவர்களை நூலில் குறிப்பிட்டுள்ளார், அவர்கள் இல்லாவிட்டால் பாரதி வறுமையில் முன்னரே மடிந்திருப்பார். ஒருமுறை சீடன் கனகசுப்புரத்தினத்தோடு காபிகுடிக்கச்சென்றார். ஒரு முஸ்லீம் கடைக்குப்போனார்கள், கனகசுப்புரத்தினம் காபி ஆர்டர் செய்தார் உடனே பாரதி இங்கே டீ சாப்பிடவேண்டும் ஐயர் கடையில் காபி சாப்பிடவேண்டும் என்று டீயை வாங்கிக்கொண்டு தெருவில் மற்றவர்கள் பார்க்கவேண்டும் என்பதற்காக செய்தார். அப்போது வைதிகர்கள் உயர்சாதி தமிழர்கள் முஸ்லீம்களின் கடையில் சாப்பிடமாட்டார்கள் என்பது நடைமுறையில் இருந்தது.
அவர் புதுச்சேரியில் வாசம் செய்தபோது ஒரு சிறுவன் மனநலம் பாதித்து தெருவில் அலைந்துகொண்டிருப்பதைப் பாரதி பார்த்தார். அவனை வீட்டுக்கு அழைத்துவந்து அவனை குணப்படுத்தவேண்டும் என்று விருப்பம் கொண்டார். இதெல்லாம் சாத்தியமா? என்பது போல வ.ராவும் மற்ற சீடர்களும் பேசிக்கொண்டார்கள். ஆனால் பாரதியிடம் சொல்லமுடியவில்லை. அவனுடன் பேசி, சாப்பாடு ஊட்டிவிட்டு கொஞ்சி அவனை மனநோயிலிருந்து காப்பாற்றியிருக்கிறார்.
இப்படி ஒரு கவி வாழ்ந்தார் என்பதை நம்பமுடியாமல் போகும் காலமிது, அதனால்  தான் அவன் உலகமகாகவி.

சனி, 6 பிப்ரவரி, 2016

தமிழகத்தில் அடிமைமுறை-1

பேரா.ஆ.சிவப்பிரமணியன் எழுதிய ஆய்வு நூலிலிருந்து...


நூல் வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
விலை :ரூ120


முந்தைய பதிவில் மன்னர்களின் ஆட்சிகாலத்தில் அடிமைமுறை நிடித்திருந்தது என்பதை பார்த்தொம். சோழர்கள் காலத்தில் நிலவுடமைமுறை சங்ககாலத்தைவிட வளர்ச்சியடைந்திருந்தது. சோழர்கள் காலத்தில் கோவில்கள் என்பது வெறும் வழிபடும் இடம் மட்டுமல்ல, அதிகாரம் சார்ந்த இடமாகவும் பொருள் உற்பத்தியில் முக்கிய பங்கும் வகித்தது. பொ.வேல்சாமி அவர்கள் எழுதிய நூலில் மன்னர்கள் என்பவர்கள் இன்றைய ராணுவ ஜெனரல்கள் போல் விளங்கினார்கள், சிவில், குற்றம், பொருளாதாரம் போன்றவை கோவிலின் நிர்வாகத்துடன் சேர்ந்திருந்து என்று விளக்கியிருந்தார். கொவில் நிலத்தின்மீது பிராமணர்களும் படிப்படியாக வேளாளர்களும் அதிக்கம் செலுத்தி வந்தனர். எண்ணற்ற நிலமற்ற மக்கள் கோவிலடிமைகளாகி விவசாயஉற்பத்தியில் ஈடுபட்டிருந்தார்கள். விவசாய நிலத்தை வைத்திருந்த பிராமணர்கள், வேளாளர்கள் அடிமைகளை வைத்திருக்கலாம். ஆனால் உவச்சர், நெசவாளர், நாவிதர் ஆகியோர் அடிமைகளை வைத்துக்கொள்ளக்கூடாது என்ற கட்டுப்பாட்டை இரண்டாம் ராஜராஜனின் கல்வெட்டு தெரிவிக்கிறது. குயவர், நெசவாளர் என்பவர்கள் பொருள் உற்பத்தியில் ஈடுபடுப்வர்கள் இவர்கள் கிராமத்தின் தேவைக்கதிகமாக உபரி உற்பத்தி செய்யவிடாமல் ஊர்சபை பார்த்துக்கொண்டது.
கிரேக்க, ரோம் நாடுகளில் உற்பத்தியில் அடிமைகளின் பங்களிப்பு பிரதானமாக இருந்தது, இந்தியாவில் பொருள் உற்பத்தியில் அடிமைகளின் பொருள் உற்பத்தி என்பது பிரதானமாக இல்லை, வெறும்  உடலுழைப்புக்கூலி வேலை, வீட்டுவேலை என்றளவில்தான் இருந்துள்ளது.


தேவரடியார் அடிமைமுறை.
-----------------------------------
பிற்காலச் சோழர்கள் காலத்தில் கோவில் வேலைகளுக்கென்று ‘தேவரடியார் முறை’ ஏற்படுத்தப்பட்டது நிலச்சுவானதார்கள் பெண்களை விலைக்கு வாங்கி கோவிலுக்கு வழங்கினார்கள். தேவரடியார்கள் கோவிலில் அதிகாரிகளால் தண்டிக்கப்பட்ட செய்தியும் உ.வே.சா நூலில் எழுதியுள்ளார். ஆலய வாசலின் ஒரு பக்கத்தில் பெண்ணை குனியவைத்து கழுத்தில் கயிறுமாட்டி அதை கால்விரல்களுடன் சேர்த்துக்கட்டி முதுகில் கல்லை ஏற்றி தண்டனை கொடுத்திருக்கிறார்கள்.கடன்காரர்களின் தொல்லைக்காட்பட்ட தாயும் மகளும் கோவிலில் தஞ்சம் புகுந்து அடிமையானார்கள், அடிமையாக ஏற்றுக்கொண்டதன் அடையாளமாக அவர்கள் பாதத்தில் கோவில் சின்னம் பொறிக்கப்பட்டது.


பொட்டுக்கட்டுதல் என்பது சமயம் சார்ந்த கோவில் சடங்கு, இச்சடங்கின் வாயிலாக ஒரு சிறுமி அல்லது இளம்பெண் அக்கோயிலின் தேவரடியாராக மாறுகிறார். ‘பதியிலார்’, ‘நித்தியசுமங்கலி’ என திருநாமங்கள் சூட்டப்பட்டன. மேட்டிமையோர் தம் மேலாணமையை நிலைநாட்டவும் ஒடுக்கப்பட்ட மக்கள் எதிர்ப்பின்றித் தம் மேலாண்மையை ஏற்றுக்கொள்ளவும் செய்யும் வழிமுறைகளில் ஒன்றுதான் சமயசடங்கு. பாலியல், சாதி, பொருளியல் என்ற தன்மைகளால் அடித்தளத்திலிருக்கும் பெண்ணைப் பொதுமகளிராக மாற்றும் புனிதச்சடங்கே பொட்டுக்கட்டுதல். சமயமுத்திரையின் வாயிலாக வரைமுறையற்ற பாலுறவு புனிதமாக்கப்படுகிறது. தேவடிமையின் வாழ்வியல் தேவைகளான உணவு, இருப்பிடம் ஆகியன கோவிலால் உறுதிசெய்யப்பட்டுவிட, மேட்டிமையோரின் குறிப்பாக புரோகித, நிலவுடமையாளர்களின் பாலியல் தேவைகளை நிறைவடையச் செய்வது அவளது பணியாகிவிடுகிறது.
கோவில் வழிபாடு, திருவிழா போன்றவற்றில் நடன்மாடுவது, பூக்கட்டுவது, கோலமிடுவது அவர்களது  அவல்வாழ்வை மறைக்கும் புனிதத்திரைகளாக மட்டுமே அமைந்தன.


தஞ்சை மராத்திய மன்னர்கள் ஏராளமான மனைவிகளுடன், வைப்பாட்டிகளுடன் வாழ்ந்த்தனர். வைப்பாட்டிகளுக்கென்று ‘கல்யாண மஹால்’ என்ற பெயரில் அரண்மனை இருந்துள்ளது.பருவம் அடைவதற்கு முன்பே சிறுமிகளை இங்கு வளர்த்துத் தம் பாலியல் வேட்கைக்குப் பயன்படுத்தி கொள்ளும் நோக்கில் சிறுமிகளை விலைக்கு வாங்கியுள்ளார்கள். மக்களைக் காப்பாற்ற வேண்டிய அரசாங்கமே பெண்கள் மற்றும் சிறுமிகளின் விற்பனையில் ஈடுபட்டிருந்தது.


நாஞ்சில்நாட்டு நிலைமை குறித்து 1881ம் ஆண்டு வெளியான ஓர் அறிக்கையில் தோவாளை அருகே தாழக்குடி கிராமத்தில் மாடத்தி என்ற நிறைமாத கர்ப்பிணி, பட்டினியாலும், உடல்நலமில்லாமலும் வேலைக்குச் செல்லவில்லை. அவளின் உரிமையாளரான நிலவுடமையாளன் அவளை இழுத்துவரச்செய்து எருமை  மாட்டுக்கிணையாகக் கலப்பையில் பூட்டி, சேற்று வயலில் உழும்படி செய்திருக்கிறான், மாட்டின் வேகத்திற்கு ஈடுகொடுக்கமுடியாமல் போனபோது தார்க்குச்சியால் குத்தப்பட்டு கலப்பையில் பூட்டியநிலையில் இறந்துபோனாள். எவ்வளவு கொடுமை!
இன்னொரு அறிக்கையில் , ஒரு குளத்தில் அல்லது ஆற்றில் கரை உடைந்துவிட்டால் அதற்குத் தெய்வத்தின் அல்லது பிசாசின் கோபமே காரணம், அதற்கு ஓர் அடிமையை உடைப்பில் உயிரோடு உள்ளே தள்ளி  மண்ணைப்போட்டு மூடியிருக்கிறார்கள்.