வெள்ளி, 31 டிசம்பர், 2010

திமுக : மிசா முதல் ஸ்பெக்ட்ரம் வரை



இந்திய வரலாற்றில் 2010ம் ஆண்டு ஒரு ஊழல் நிறைந்த ஆண்டாகவே எதிர்கால சந்ததிக்கு அறிமுகப்படுத்தப்படும். காமன் வெல்த் ஊழல், ஆதர்ஷ் ஊழல், ஐ.பி.எல் கிரிக்கெட் ஊழல், பூனா, கொல்கத்தா உள் ளிட்ட பல்வேறு இடங்களில் ராணுவத்திற்கு சொந்தமான நில ஆக்கிரமிப்பு ஊழல், இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போல் வெளிவந்துள்ள ஸ்பெக்ட்ரம் ஊழல் என ஊழல் கொடிகட்டி பறக்கிறது. இந்திய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் இந்த ஊழல்கள் குறித்த செய்திகள் ஊடகங் களில் உலா வந்துகொண்டிருக்கின்றன.

காங்கிரஸ் - திமுக, திரிணாமுல் கட்சி கள் அடங்கிய ஐக்கிய முற்போக்கு கூட்ட ணியின் ஆட்சி இந்திய நாட்டின் ஏழை-எளிய மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. மாறாக பன்னாட்டு முதலாளிகளுக்கும் அம்பானி, டாடா போன்ற பெரு முத லாளிகளுக்குமே சேவை செய்கிறது.

இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து சில்லரை ஊழல்கள் குறித்த செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தாலும், தாராளமய சந்தைப்பொருளாதாரம் தீவிரமாக அமல் படுத்தப்பட்ட பிறகு, ஊழல் என்பது அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாகவே மாற்றப்பட் டிருக்கிறது.

மன்மோகன் சிங் ஒரு பொருளாதார நிபுணர் என்று அழைக்கப்படுகிறார். ஆனால் அவர் ஏழை, எளிய இந்திய மக்களின் பிரதமராக இல்லை. மாறாக முதலாளிகளின் சேவகராகவே செயல்படுகிறார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைச் சரவையில் தொலைத்தொடர்புத்துறை உள்ளிட்ட கேந்திரமான இலாகாக்களை யார் நிர்வகிக்க வேண்டும் என்பதை டாடா, அம்பானி போன்ற பெருமுதலாளிகளே தீர்மானிக்கிறார்கள். திமுக தலைவர் கலைஞர் “நான்தான் ராசாவுக்கு தொலைத் தொடர்புத்துறையை மீண்டும் பெற்றுக் கொடுத்தேன்” என்று கூறிக் கொண்டாலும் உண்மையில் பெருமுதலாளிகளே தங்களது தேவைக்காக அவருக்கு அந்தத்துறையை மீண்டும் பெற்றுக்கொடுத்துள்ளனர் என்பது தெளிவாகிறது.

தயாநிதிமாறன் தங்களுக்கு ஒத்துவரமாட் டார் என்பதால் ஆ. ராசாவை தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் பொறுப்புக்கு பெருமுதலாளிகள் கொண்டுவந்தார்கள் என்பதை நீரா ராடியா உரையாடல் டேப் தெளிவாக்கியுள்ளது. இதை திமுக எந்த வகையிலும் மறுக்கமுடியாது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக எதிர்க் கட்சிகள் கேள்வி எழுப்பியபோது, ஆ.ராசா நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங் களவையிலும், “அனைத்தும் பிரதமருக்கு தெரிந்துதான் நடந்தது” என்று ஓங்கி கூறி னார். அப்போது அவையிலிருந்த பிரதமர், வாய் மூடி மவுனியாக இருந்தார். ஆனால் தில்லி யில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங் “மறைப்பதற்கு என் னிடம் எதுவும் இல்லை” என்று சாதிக்கிறார். ஆ.ராசா மீது வழக்கு தொடர 16 மாத காலம் எடுத்துக் கொண்டது ஏன் என்று உச்சநீதி மன்றம் கேள்வி எழுப்பியபோதும், பிரதமரின் அறிவுரைகளையே ஆ.ராசா மீறியுள்ளார் என்று உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டிய போதும் பிரதமர் மன்மோகன் சிங் மவுனத்தையே பதிலாகத் தந்தார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது பங்கிற்கு ஊழல் ஒழிப்புக்கு ஐந்து அம்சத்திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இத்தகைய திட்டங்களை அறிவிப்பது காங் கிரஸ் கட்சிக்கு ஒன்றும் புதிதல்ல; 20 அம்ச திட்டம், 10 அம்ச திட்டம், 5 அம்ச திட்டம் என்று காங்கிரஸ் அறிவித்த திட்டங்களைக் கேட்டு கேட்டு மக்களுக்கு புளித்துப் போய் விட்டது. எதையுமே அவர்கள் நிறைவேற்றிய தில்லை.

ஆ.ராசா எந்தத் தவறுமே செய்யவில்லை என்று திமுக தலைவர் கலைஞர் சாதித்து வந்தார். இனி வேறு வழியேயில்லை என்ற நிலையில்தான் அவர் ராஜினாமா செய்ய வைக்கப்பட்டார். “நான் ஒரு வழக்கறிஞர், சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன்” என்று ராசா ஜம்பமாக கூறி னார். முதல் நாள் அவரிடம் எட்டு மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ள னர். இரண்டாவது நாள் ஐந்து மணி நேரத்திற் கும் மேலாக விசார ணை நடத்தப்பட்டது. இரண்டாவது நாள் ஆ.ராசா தன்னுடன் ஒரு மருத்துவரையும் கூடவே அழைத்துச் சென்றுள்ளார். மருத்துவரை பக்கத்தில் வைத்துக்கொள்ளும் அளவுக்கு விசாரணை நடந்துள்ளது எனத் தெரிகிறது. அவரிடமும், நீரா ராடியாவிடமும் மீண்டும் சிபிஐ விசார ணை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.

மத்திய தணிக்கை துறை அதிகாரியின் 77 பக்க அறிக்கையில் ஆ.ராசா மீது 25க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட் டுள்ளன. இதுதவிர, நீரா ராடியா உரையாடல் அடங்கிய டேப்பில் பல்வேறு விவரங்கள் உள்ளன. இதுகுறித்தெல்லாம் ஆ.ராசாவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது - அவருக்கு அடிப்படையில் சம்மன் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலும் ஆ.ராசா எந்தத் தவறுமே செய்யவில்லை என்று திமுக பிரச்சாரம் துவக்கியிருப்பது வியப்பாக உள்ளது.

‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சியில் ஒளி பரப்பான ஒரு நேர்காணலில் இந்தியாவின் புகழ்பெற்ற காவல்துறை அதிகாரிகளில் ஒருவரான கிரண் பேடியிடம் “ஹர்ஷத் மேத்தா, கார்பரேட் முதலாளி சத்யம் ராமலிங்க ராஜூ ஆகியோரை கைது செய்த பிறகே சிபிஐ அவர்களிடம் விசாரணை நடத்தியது. ஆனால் ஆ.ராசா, நீரா ராடியா போன்றவர் களை கைது செய்யாமல் விசாரணை நடத்தி யது ஏன்?” என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கிரண் பேடி “ நீங்கள் ஒன் றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். நம் நாட்டில் உள்ள சிபிஐ உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் எதுவும் சுயேட்சையாக இயங்கு பவை அல்ல. அவை அனைத்தும் அரசுக்கு கட்டுப்பட்டவை. அரசு என்ன கருதுகிறதோ அதன்படியே வழக்கு விசாரணை நடத்தப் படும். இந்த வழக்கும் அப்படித்தான்” என்றார்.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஆ.ராசாவுக்கு மட்டும் தொடர்பு இல்லை. இந்தியாவின் பெரு முதலாளிகள், பன்னாட்டு முதலாளிகள் இதில் லாபம் பெற்றிருக்கிறார்கள். ஹவாலா மூலம் பல நாடுகளில் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது. திமுகவை மட்டும் சுட்டிக் காட்டி காங்கிரஸ் கட்சி விலகிக்கொள்ள முடியாது. ஊழலின் முழு பரிணாமும் வெளியே வரவேண்டுமானால் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை மட்டுமே ஒரே வழி. ஆனால் இதற்கு காங்கிரஸ்-திமுக கூட் டணி அரசு மறுத்து வருகிறது. பொது கணக்குக்குழு முன்பு ஆஜ ராகத் தயார் என பிரதமர் தாமாக முன்வந்து கடிதம் எழுதியுள்ளார். ஆனால் அவர் நாடாளு மன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு மறுப்பது ஏன் என்ற மர்மம்தான் புரியவில்லை.

அவசரநிலைக் காலத்தில் ஜனநாயக உரிமைகளுக்காக போராடி, திமுகவைச் சேர்ந்த பலரும் சிறை சென்றார்கள். சிலர் அடிஉதை பட்டார்கள். சாத்தூர் பாலகிருஷ் ணன், சிட்டிபாபு போன்றவர்கள் சிறையி லேயே மரணமடைந்தனர். அவசரநிலைக் காலம் முடிந்து சிறையிலிருந்து வெளியே வந்தவர்களின் பெயருக்கு முன்னால் ‘மிசா’ என்ற அடைமொழி கொடுத்து பெருமையாக அழைத்தது திமுக. ஆனால் இன்றைக்கு திமுகவைச் சேர்ந்த ஆ.ராசாவின் பெயருக்கு முன்னால் ‘ஸ்பெக்ட்ரம்’ ராசா என்று ஊடகங் கள் அடைமொழி கொடுக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. திமுக தேசிய கட்சியாக மாறி விட்டது என்று கூறப்பட்டதன் பொருள் இதுதான்.

திமுகவைப் பொறுத்தவரை ஊழல் குற்றச்சாட்டுக்களை எப்போதும் அவர்கள் ஒத்துக் கொள்வதில்லை. வீராணம் ஏரி ஊழல், சர்க்காரியா கமிஷனால் கண்டறியப் பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் என எதையும் திமுக ஒத்துக் கொண்டதில்லை. இப்போது ஸ்பெக்ட்ரம் ஊழல் விசயத்திலும் அதே நிலைபாட்டையே மேற்கொள்கிறார்கள்.

நாட்டின் கஜானாவுக்கு வந்து சேர்ந் திருக்க வேண்டிய ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி சூறையாடப்பட்டுள்ளது. ஆனால் இது இழப்புதானே தவிர ஊழல் அல்ல என்கிறார்கள். திமுக இந்த குற்றச்சாட்டை எதிர்கொள்ள முடியாமல், நியாயப்படுத்த முடியாமல் தடுமாறுகிறது. ஆ.ராசா ஒரு தலித் என்பதாலேயே இந்த குற்றச்சாட்டு எழுந்துள் ளதாக சொல்லி சமாளிக்கப் பார்த்தார்கள். அது முடியாமல் போய்விட்டது. இத்தகைய ஒரு பெரிய ஊழலை ஒருவர் செய்திருக்க முடி யாது என்று அடுத்து கூறினார்கள். யார் யார் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை இவர் களாவது வெளிப்படுத்தலாம் அல்லவா?

நாட்டின் பணம்,கொள்ளையடிக்கப்பட் டிருக்கிறது. ஆனால் திமுகவும், காங்கிரசும் இது ஏதோ அவர்களது கூட்டணி சம்பந்தப் பட்ட பிரச்சனை என்பதுபோல, உறவில் விரிசல் இல்லை, கூட்டணி பலமாக உள்ளது என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

முந்தைய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர்கள் மேற்கொண்ட அணுகுமுறை யைத்தான் ஆ.ராசாவும் பின்பற்றினார் என்று சாமர்த்தியமாக வாதிடுகிறார்கள். அமைச்சர் துரைமுருகன் கரூரில் இந்த கருத்தைத்தான் வெளியிட்டுள்ளார். தயாநிதி மாறனும் இதே கொள்கையைத்தான் பின்பற்றினார் என்றும் அவர் கூறினார். இதுகுறித்தெல்லாம் தயாநிதி மாறன் வாய்திறக்க மறுப்பது ஏன் என்று தெரியவில்லை?

மார்க்சிஸ்ட் கட்சியை பொறுத்தவரை ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடைய அனை வரையும் கண்டறிந்து சட்டப்பூர்வ நட வடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு அரசு கஜானாவுக்கு வந்திருக்க வேண்டிய பல ஆயிரம் கோடி ரூபாயை மீட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

திமுகவை அண்ணா அவர்கள் துவக்கும் போது, இந்த கட்சி சாமானியர்களுக்காகவும், குப்பன்களுக்காகவும், சுப்பன்களுக்காகவும் துவக்கப்பட்டுள்ளது என்றும், பஞ்சை பராரி களுக்காக உருவாக்கப்பட்டுள்ள இயக்கம் இது என்றும் கூறினார். ஆனால் இன்றைக்கு திமுக என்பது டாடா, அம்பானி போன்ற பெரு முதலாளிகளுக்கு சேவை செய்யும் கட்சியாக மாறிவிட்டது. மாநில சுயாட்சி கேட்ட அந்த கட்சி, மத்திய அதிகாரத்திற்கு சென்றவுடன் மாநில சுயாட்சிகளுக்காக போராடவில்லை. மாறாக அனைத்து துறைகளிலும் மாநில உரிமைகள் பறிக்கப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

ஆனால் வலுவான இலாகாக்களை பெற்று, அதன் மூலம் பெருமுதலாளி களுக் கும் பன்னாட்டு முதலாளிகளுக்கும் சேவகம் செய்து வருகிறது. என்னதான் வாய் சாதுர் யத்தால் தப்பிக்க முயன்றாலும் ஸ்பெக்ட்ரம் ஊழல் கறையிலிருந்து திமுக தப்பமுடியாது.

-டி.கே.ரங்கராஜன் எம்.பி.

நன்றி: தீக்கதிர்

வியாழன், 30 டிசம்பர், 2010

நீதித்துறை : சீனாவும் இந்தியாவும்

அண்மையில் சீனாவின் நீதித்துறையைப் பற்றி செய்தி வந்தது, அங்கு வழக்கு பதிவு செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்குள் தண்டனை உறுதிசெய்யப்படுகிறதாம், இந்தியாவின் சுப்ரீம் கோர்ட் நீதிபதி சிர்புர்கர் தலைமையில் சீனாவின் நீதித்துறை பார்வையிடச் சென்ற ICJ என்ற சர்வதேச நீதிபதிகளின் கூட்டமைப்பு சார்பில் பார்வையிட்டுள்ளார்கள். சீனாவில் 23 வயது நிரம்பியவர் உயர்நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்கமுடியும், ஒருவர் நீதிபதியாவதற்கு முன்பு வழக்கறிஞராக பணியாற்றவேண்டிய அவசியம் இல்லை. NJE எனப்படும் National Judiciary Examination தேர்வில் வெற்றியடைந்தால் சில மாதங்களுக்கு சிறப்புப் பயிற்சி பெற்றபின்பு நீதிபதியாக நியமிக்கப்படுகிறார்கள். NJE என்பது இந்தியாவின் ICS தேர்வுக்குச் சமமானது. பிரைமரி கோர்ட் லிருந்து சுப்ரீம் கோர்ட் வரை முழுவதும் கணணிமயமாக்கம் செய்யப்பட்டுள்ளது, நீதிமன்றத்திற்கான வசதிவாய்ப்புகள் பிரைமரி கோர்ட், இண்டர்மீடியட் கோர்ட், உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றம் என பாகுபாடு இல்லாமல் எல்லா நீதிமன்றங்களுக்கும் சமவசதி வாய்ப்பு அளித்திருக்கிறார்கள்.சீனா முழுவதும் 1,90,000நீதிபதி பணியிடங்கள் உள்ளன, அதில் 700 பேர் மட்டுமே உச்சநீதிமன்ற நீதிபதிகள். நீதித்துறைக்கான மொத்த பணியாளர்கள் 3,20,000 பேர். பதவியில் இருக்கும் ஒரு நீதிபதி மீது ஊழல் புகார் எழுப்பபட்டால் நீதிபதிகளின் கமிட்டி பரிந்துரைக்குப் பின்னர் அரசு நீதிபதியை உடனே பதவி நீக்கம் செய்துவிடுகிறது. சீனாவைப் போல அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியாவும் சீன நீதித்துறையிடம் கற்றுக் கொள்ளவேண்டியதுள்ளது.

இந்தியாவில் எல்லாத்துறைகளைவிட நீதித்துறையில் அதிகமாக லஞ்சம் ஊழல் நிலவுவதாக அடிக்கடி செய்திகள் வருகின்றன, உச்சநீதிமன்றத்தின் பிரபல வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான பிரசாந்த் பூஷன், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சிலர் ஊழல்பேர்வழிகள் என்று பேட்டிகொடுத்ததால் நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளானார். ஊழல் செய்த உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதி களைப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்றால் இந்திய அரசியல் சட்டப் பிரிவு 124 (4) படியும், நீதிபதிகள் விசாரணைச் சட்டம் 1968-ன் படியும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியரசுத் தலைவர் மூலம் அதுவும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பி னர்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். நீதிபதியின் ஊழல் குறித்த ஆதாரங்களைப் பாரா ளுமன்றத்தின் மக்களவை உறுப்பி னர்கள் 100 பேர் அல்லது மாநிலங்களவை உறுப்பினர்கள் 50 பேர் கையெழுத்திட்டு அளிக்க வேண்டும். அதன் அடிப்படையில் குற்றச்சாட்டுகள் பற்றி விசாரிக்க மூவர் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்படும். அக்குழுவில் ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி, ஒரு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் ஒரு சட்ட வல்லுநர் ஆகியோர் உறுப்பினராக இருப்பார்கள். இக்குழு விசாரணை மேற் கொண்டு அளிக்கும் அறிக்கை யின் அடிப்படையில் பாராளுமன் றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஆதரவோடு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆனால், இந்தியா சுதந்திரம் அடைந்து 63 ஆண்டுகள் ஆகியும் இதுவரையில் ஊழல் செய்த ஒரு நீதிபதி மீதும் சின்ன நடவடிக்கைகூட எடுக்க முடிய வில்லை.

1993-ல் நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது தமிழ்நாட்டைச் சேர்ந்த, உச்சநீதிமன்ற நீதிபதி வி.ராமசாமி மீது பாராளுமன் றத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அவர் சண்டிகரில் தலைமை நீதிபதியாக இருந்த போது அவரது அதிகாரபூர்வ இல்லத்திற்கு அளவுக்கு அதிகமாக செலவு செய்தது பற்றி குற்றச் சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரிக்க பாராளுமன்றத்தால் அமைக்கப்பட்ட மூவர் குழு முன் அவர் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப் பட்டன. காங்கிரஸ் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளிக்காததால் அவர் நடவடிக்கையிலிருந்து தப்பித் துக் கொண்டார். அவர் தென்னிந் தியாவைச் சேர்ந்தவர் என்ற காரணத்தைக் காட்டி தி.மு.க. அன்று அந்த ஊழல் நீதிபதியைக் காப்பாற்றியது. வெறும் 196 பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே அவர் மீது நடவடிக்கை எடுக்க ஆதரவுத் தெரிவித்தனர்.




ஆனால் கடைசியாக உச்சிநீதிமன்ற நீதிபதியாக பதவிவகித்த கே.ஜி.பாலகிருஷ்ணன் மீது இப்போது ஊழல் புகார் வந்துள்ளது. குற்றச்சாட்டை வைத்தவர் வேறுயாருமல்ல உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த மனித உரிமைப் போராளியுமான நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் தான்.
தலித் சமுதாயத்தைச் சேர்ந்த கே.ஜி.பாலகிருஷ்ணன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றபோது நான் புதிய அத்தியாயம் பிறந்ததாக மகிழ்ந்தேன். ஆனால் இப்போது நாம் ஏன் நீதிபதியாக இருந்தோம் என்று வருத்தமடைகிறேன். கே.ஜி.பாலகிருஷ்ணன் குடும்பத்தினர் பெருமளவில் சொத்துக்களைக் குவித்ததாக புகார்கள் கிளம்பியுள்ளன. இதுகுறித்து தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டும்”.
என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் கோரிக்கை விடுத்துள்ளார். கே.ஜி.பாலகிருஷ்ணனின் மருமகன் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கேரள சட்டமன்றத்திற்கு போட்டியிட்டபோது தன்னுடைய சொத்துமதிப்பு ரூ25000 மட்டுமே எனகூறியவரின் சொத்துமதிப்பு இன்று பலகோடி மதிப்பு வாய்ந்தவை. தகவல் அறியும் உரிமச்சட்டத்தின் அடிப்படையில் நீதிபதிகளின் சொத்துவிபரம் வெளியிடவேண்டும் என்ற விவாதம் வ்ரும்போது உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி அதிலிருந்து விதிவிலக்காவார் என்று தப்பித்தவர். அண்மையில் மத்தியயமைச்சர் ராசா சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பில் தலையிட்டதாக செய்தி வந்தபோது அதற்கு உடந்தையாக இருந்தவர் கே.ஜி.பாலகிருஷ்ணன்.
இதில் நிச்சயம் காங்கிரஸ் கட்சிக்கு தொடர்பு இருக்கும்,இல்லையென்றால் இவரை தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக நியமிப்பார்களா? கறைபடிந்த கே.ஜி.பாலகிருஷ்ணன் குற்றமற்றவர் என நிரூபிப்பாரா அல்லது நான் ஒரு ‘தலித்’ என்று தப்பிக்கப் பார்ப்பாரா, தமிழக முதல்வர் கருணாநிதி இன்னும் அறிக்கைவிடவில்லையே?

ஞாயிறு, 19 டிசம்பர், 2010

அமெரிக்காவிற்கே பிடிக்காத ‘மூன்றாவது அணி’



2009ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்குப்பின் இந்தியாவில் இடதுசாரிகளின் தலைமையில் மூன்றாவது முண்ணனி ஆட்சியைப் பிடித்துவிடுமோ என்று அமெரிக்கா கவலைப்பட்டதாக விக்கிலீக்ஸ் மூலம் செய்தி வெளியாகியுள்ளது, அதற்கு முந்தைய நாள் தான் கம்யுனிஸ்ட் கட்சியின் செயலர் பிரகாஷ்காரட் காங்கிரஸ் கட்சியை ‘மிரட்டியே’ காரியம் சாதித்தார் என்று அமெரிக்க தூதரகம் தன்னுடைய நாட்டுக்கு தகவல் அனுப்பியுள்ள செய்தியும் வெளியாகியுள்ளது. நிச்சயமாக அமெரிக்காவின் கவலை நியாயமானது தான், ஏனென்றால் 2008ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார தேக்கநிலையால் அவதிப்படும் அமெரிக்காவிற்கு இந்தியாவுடன் செய்துகொண்ட அணுசக்தி ஒப்பந்தம் மூலம் தன்னுடைய நாட்டில் வேலைவாய்ப்பு பெருகுவதுடன் அமெரிக்க நிறுவனங்களுக்கு கிடைக்கயுள்ள வாழ்வு பறிபோகுமே என்ற பயம் தான். இடதுசாரிகள் தலைமையில் அல்லது ஆதரவுடன் ஆட்சி அமைந்தால் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையிலும் கை வைப்பார்கள். அணிசேரா நாடுகளை ஒன்று சேர்ப்பார்கள், தற்போதுள்ள அமெரிக்க சார்பு கொள்கையை தலைகீழாக மாற்றுவார்கள் என்ற பயம் தான்.

இந்தியாவில் அமெரிக்க தூதரக அதிகாரிகள் ஏதாவது விழாக்களில் பங்கேற்கிறார்கள் என்று தினந்தோறும் நாளிதழ்களில் செய்தி வருகிறது. இதிலிருந்து அமெரிக்கா இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவது வெளிச்சமாகிறது. உலகம் முழுவதிலும் கம்யூனிச எதிர்ப்பை கடைபிடித்துவரும் அமெரிக்கா இந்தியாவிலும் கம்யூனிச எதிர்ப்பாளர்களுக்கு ஏன் உதவி புரிந்திருக்க வாய்ப்பில்லை? என்ற கேள்வி வருகிறது. அடுத்தடுத்து வெளிவருகிற விக்கிலீக்ஸ் மூலம் நமக்கு தகவல் கிடைக்கலாம். ஓரிரு மாதங்களுக்கு முன்னர் வெனிசூலாவில் நடைபெற்ற தேர்தலில் சாவேஸூக்கு எதிராக தேர்தல் களத்தில் உள்ள கட்சிக்கு அமெரிக்கத் தூதரகம் பணவுதவி செய்தது வெளிச்சத்திற்கு வந்தது.

மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுசெயலர் பிரகாஷ்காரட் காங்கிரஸ் கட்சியை ‘மிரட்டியே’ காரியம் சாதித்தார் என்ற செய்தியை அமெரிக்க தூதரகம் விரிவாகச் சொன்னால் இந்திய மக்களுக்கு நல்லது, ஏனென்றால் தன்னுடைய சொந்த நலனுக்காகவும் கட்சியின் நலனுக்காகவும் அமைச்சரவையில் பங்கு போட்டு அரசியலை லாப நோக்கத்தில் நடத்துபவர்கள் மத்தியில் 60க்கும் மேற்பட்ட மக்களவை உறுப்பினர்களைக் கொண்ட இடதுசாரிகள் எந்தவித எதிர்பார்ப்புமின்றி நாட்டுமக்கள் நலனே முக்கியம் என்றிருந்தார்கள். அது தான் அமெரிக்கவிற்கே கிலி ஏற்படுத்தியிருக்கிறது.உண்மைகள் வெளிவரும் காலம், உரக்கப்பேசட்டும் விக்கிலீக்ஸ்..

சனி, 11 டிசம்பர், 2010

அமெரிக்க ஆணவம்

அமெரிக்காவிற்கான இந்திய தூதரான மீரா சங்கர் அமெரிக்க உள்நாட்டு பயணத்தின் போது விமானநிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகளால் சோதனை என்ற பேரில் அவமானப்படுத்தப்படுள்ளார். தான் அமெரிக்காவிற்கான இந்திய தூதர் என்ற அடையாள அட்டையை காண்பித்த பின்னரும் அவர்கள் சட்டை செய்யவில்லை. இது போன்று இந்திய அதிகாரிகள், அமைச்சர்கள் அவமரியாதைக்குள்ளாவது இது முதல் முறையல்ல. அமெரிக்கப் பயணத்தின் போது முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்ணாண்டஸின் ஆடைகளை கழைந்து சோதனைக்கு உள்ளானதை நீண்ட நாட்கள் கழித்து வெளியில் சொன்னார். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் ஷூ வைக் கழட்டச் சொல்லி சோதனைக்கு உள்ளாக்கினார்கள். வழக்கமாக இந்தியத் தரப்பில் கண்டன அறிக்கை வாசித்தபின்பு ஏதோ தெரியாமல் நடந்துவிட்டதாக வருத்தம் தெரிவிப்பது வாடிக்கையாகிவிட்டது. இது போன்ற சோதனைகள் மூலம் அமெரிக்க-இந்திய உறவு பற்றி அவர்களின் எண்ணமும் நமது எண்ணமும் வெவ்வேறாக இருக்கிறது. நாம் தோழமையாக பார்க்கிறோம் ஆனால் அவர்கள் இந்தியாவை ஒரு அடிமை நாடாக ஏகாதிபத்திய நோக்கில் பார்க்கிறார்கள்.இது போன்ற செயல்களுக்கு பதில் நடவடிக்கை தேவை, இந்தியாவும் அமெரிக்க அமைச்சர்களை விமானநிலையத்தில் பாதுகாப்பு சோதனைக்குள்ளாக்கவேண்டும். இந்தியாவில் உள்நாட்டு பயணம் மேற்கொள்ளும் அமெரிக்கத் தூதர்களை இதே போன்ற சோதனைக்கு உள்ளாக்கவேண்டும்.



அவர்கள் கொடுக்கும் நிலையிலும் இந்திய அரசு பெற்றுக்கொள்ளும் நிலையிலும் ஏதும் இல்லை,பரஸ்பர உறவு தான் தேவை. மாறாக இப்போது அமெரிக்க பொருளாதாரத்தையும் வேலைவாய்ப்பை உருவாக்காவும் இந்திய ஒப்பந்தங்கள் அவர்களுக்கு தேவை. மன்மோகன் சிங் இந்தியாவை தலைநிமிர வைப்பாரா?

மகாகவிக்கு 128வது பிறந்தநாள்



வாழ்க நின்புகழ் வாழிய வாழியவே!!!

வெள்ளி, 10 டிசம்பர், 2010

விக்கிலீக்ஸூம் ஜனநாயகமும்..



அமெரிக்கா ஈராக்கிலும் ஆப்கனிலும் நடத்திய போர்க்குற்றங்களை அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ், ஓவ்வொரு நாட்டிலும் உள்ள அமெரிக்க தூதரங்கள் அமெரிக்க அரசுக்கு அனுப்பும் ரகசிய அறிக்கைகளையும் இப்போது வெளியிட்டுவிட்டது.திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்திய செய்திகளை மறுக்கமுடியவில்லை என்னசெய்வது பழிவாங்கல் தான். விக்கிலீக்ஸின் தலைவர் ஜூலியன் அசாங்கே பாலியல் வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ளார். உலகத்திற்கே ஜனநாயகம் பற்றி டியூசன் எடுக்கும் அமெரிக்கா உண்மைச்செய்திகளை வெளியிட்ட விக்கிலீக்ஸின் இணையதளத்தை தடை செய்துள்ளது. எப்படியும் உண்மைகளை மறைக்கமுடியாது. அமெரிக்கா உலகின் பிற நாடுகளில் தூதரகத்தை ஏற்படுத்திக்கொண்டு அதன் மூலம் அந்த நாடுகளின் அந்தரங்க விஷயங்களில் தலையிடுவதும் விக்கிலீக்ஸ் வெளிப்படுத்தியுள்ளது. மத்தியகிழக்கில் ஒரு நாடு தீவிரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கிறது என்று தெரிந்திருந்தும் அந்த நாட்டுடன் ராணுவதளவாடங்கள் விற்பதற்கு 60பில்லியன் டாலர் அளவிற்கு ஓப்பந்தம் போட்டுள்ளது. அந்த நாடு ஈரானை அமெரிக்கா தாக்கவேண்டும் என திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டுள்ளது. மத்தியகிழக்கில் பல நாடுகளின் முகமூடியையும் கிழித்துவிட்டது விக்கிலீக்ஸ்.உண்மைகளை வெளிக்கொணர்ந்த விக்கிலீக்ஸை ஆதரிப்போம்.



விக்கிலீக்ஸ் விவகாரம் பற்றி ஒவ்வொரு நாடும் வெவ்வேறு அணுகுமுறையை கையாண்டுள்ளன. தென் அமெரிக்க நாடான ஈக்வடார் விக்கிலீக்ஸிற்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளது, விக்கிலீக்ஸை நடத்துபவர்களுக்கு அடைக்கலம் தரவும் தயாராக உள்ளது. வெனிசூலா அதிபர் ஹூகோ சாவேஸ், அமெரிக்கா பிற நாடுகளில் செய்துள்ள உளவு வேலைகளுக்கு பொறுப்பேற்று ஹிலாரி கிளிண்டன் பதவி விலகவேண்டும் என அறிக்கை விட்டுள்ளார்.இந்தியா அமைதிகாத்து வருகிறது, மன்மோகன் சிங்கிற்கு உள்ளூர பயம் இருக்கத்தான் செய்யும். இப்பதான் ஸ்பெக்ட்ரம், நீரா ராடியா விவகாரம் பிடித்து ஆட்டிவருகிறது அதுக்குள்ள இன்னொரு பூதம் என்னைக்கு கிளம்புதோ தெரியலையே...