வெள்ளி, 30 ஏப்ரல், 2010

அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவு-2009



இந்திய தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவுகளை தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது, 2009ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பங்கேற்று தேர்தல் செலவீனங்களை இன்னமும் ஆணையத்திடம் தாக்கல் செய்யாத பாஜக உள்ளிட்ட 16 கட்சிகளுக்கு நோட்டீஸ் அளித்துள்ளது. தேர்தல் செலவுகளை மட்டுமல்லாது அரசியல் கட்சிகள் ஒவ்வொரு ஆண்டும் நன்கொடையாக பெற்ற பணத்தின் விவரங்களையும் வெளியிட்டுள்ளது. தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலமாக பெறவேண்டிய விவரங்களை தாமாகவே முன்வந்து வெளியிட்டுள்ளதை வரவேற்கவேண்டும். இதே அணுகுமுறையை மத்திய அரசின் ஒவ்வொரு அமைச்சரகமும் தங்கள் துறை சார்ந்த விவரங்களை வெளியிட முன்வரவேண்டும். ஒவ்வொரு அரசியல் கட்சியிடத்தும் நாம் கணக்கு வழக்குகளை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக பெறமுடியுமா என தெரியவில்லை ஆனால் அதற்கான யோக்கியதை பொதுமக்களாகிய நமக்கு இருக்கிறதா என தெரியவில்லை, ஏனைன்றால் பெரும்பாலான அரசியல் கட்சிகள் நிறுவனங்களைப் போல செயல்படுகின்றன. அவற்றிற்கும் பொதுமக்களுக்கும் சம்பந்தம் இல்லை இடதுசாரிக் கட்சிகளைத் தவிர மற்ற அரசியல் கட்சிகள் பொதுமக்கள்/கட்சி உறுப்பினர்களிடம் நிதி பெறுவதற்கு பதிலாக தனியார் நிறுவனங்களிடம் பெற்று வருகின்றன. அந்த கட்சிகள் ஆட்சியில் அமரும் போது நிதி வழங்கிய நிறுவனத்திற்கு ஏதாவது ஒரு வகையில் திருப்பி செலுத்தியாகவேண்டும் மட்டுமல்லாது கட்சியின் வளர்ச்சிக்கும் ஆட்சியிலிருந்து அறிவியல் பூர்வமாக! மக்கள் பணத்தை முறைகேடு செய்யவேண்டிய அவசியம் ஏற்படுகிறது.


சில அரசியல் கட்சிகளின் 2009க் கான மக்களவை தேர்தல் செலவைக் காண்போம்.

காங்கிரஸ் கட்சி
* கட்சியின் தேர்தல் செலவு மொத்தம் : 380 கோடி

இதில் விளம்பர செலவு : 207 கோடியே 88 இலட்சம்
பயணச்செலவு (தங்குமிடம் உட்பட) : 112 கோடியே 33 இலட்சம்
பாக்கியுள்ளவை இதர செலவீனங்கள்

பாரதீய ஜனதாக் கட்சி
* விபரங்கள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் இல்லை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
* கட்சியின் தேர்தல் செலவு மொத்தம் : 10 கோடியே 26 இலட்சம்

தேசியவாத காங்கிரஸ் கட்சி
* கட்சியின் மொத்த தேர்தல் செலவு : 26 கோடியே 16 இலட்சம்

பகுஜன் சமாஜ் கட்சி
* கட்சி செய்த மொத்த தேர்தல் செலவு : 21 கோடியே 23 இலட்சம்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம்
* கட்சியின் மொத்த தேர்தல் செலவு : 4 கோடியே 10 இலட்சம்

திராவிட முன்னேற்றக் கழகம்
* கட்சியின் மொத்த தேர்தல் செலவு : 7 கோடியே 76 இலட்சம்

பாட்டாளி மக்கள் கட்சி
* விபரங்கள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் இல்லை

தெலுங்கு தேசம்
* கட்சி செய்த மொத்த தேர்தல் செலவு : 8 கோடியே 74 இலட்சம்

சிவசேனா
* கட்சி செய்த மொத்த தேர்தல் செலவு : 8 கோடியே 15 இலட்சம்

வியாழன், 29 ஏப்ரல், 2010

CBI மத்திய அரசின் கைப்பாவையா?

இந்தியாவிலேயே நியாயமாக விசாரணை மேற்கொள்ளும் அமைப்பாக மத்திய புலணாய்வு நிறுவனம் (CBI)என்று பொதுவான கருத்து நிலவியது, அதன் அடிப்படையில் தான் சில பெரிய கிரிமினல் குற்றங்களையும் லஞ்சம் ஊழல் வழக்குகளையும் CBI விசாரணை தேவை என எப்போதும் எதிர்கட்சிகள் கோரிக்கைகள் வைப்பது வழக்கம் ஆனால் இன்றைய நிலை?

இன்று சிபிஐ ஏன் மத்திய அரசின் கைப்பாவையாக மாற்றப்பட்டது தற்செயலான செயல் அல்ல இதற்குப் பின்னால் உள்ள அரசியல் என்பது ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வதுதான், பெட்ரோல்.டீசல் விலைவாசி உயர்வுக்கு எதிராக இடதுசாரிகளின் தலைமையில் காங்கிரஸ்,பாஜக அல்லாத 13 கட்சிகளின் கூட்டத்தில் அரசுக்கெதிரான வெட்டுத்தீர்மானத்தை கொண்டுவருவது,பொது வேலை நிறுத்தம் மேற்கொள்வது என முடிவுசெய்யப்பட்டது, ஆனால் நடைபெற்ற வேலைநிறுத்தத்தில் உறுதியாக பங்குபெற்று லாலுவும் முலாயம்சிங்கும் பாராளுமன்றத்தில் வெட்டுத்தீர்மானத்திற்கு மத்திய அரசுக்கு ஆதரவான நிலையை எடுத்தார்கள். காங்கிரஸ் கட்சியை தன்னுடைய மாநிலத்தில் அரசியல் ரீதீயாக எதிர்த்து வந்த மாயாவதி மத்திய அரசுக்கு ஆதரவான நிலையை எடுத்திருந்தார். ஜார்க்கண்டில் பாஜகவின் ஆதரவுடன் ஆட்சி நடத்தும் சிபுசோரன் கட்சி வெட்டுத்தீர்மானத்தை மத்தியஅரசுக்கு ஆதரவான நிலையை மேற்கொண்டது, தன்னுடைய ஆட்சி கவிழும் என்ற போதிலும் சிபுசோரனின் முடிவு அவர் மீதுள்ள குற்றங்கள் மீதான நடவடிக்கை தான்;இதன் பின்னணி என்ன என்பதை சிறு குழந்தை கூட அறியும் தங்களுடைய ஊழல்களை மூடிவைக்கவேண்டும் என்பது தான் அந்த கட்சிகளின் தலைவர்களுக்குள்ள நிர்பந்தம்.


நன்றி: The Hindu

2008ம் ஆண்டில் மத்திய அரசு கொண்டுவந்த அணுசக்தி ஒப்பந்தம் காரணமாக இடதுசாரிக்கட்சிகள் மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப்பெற்றனர், எப்போதும் போல கடைசிவரை இடதுசாரிகளுடன் குழாவிவந்த முலாயம்சிங் கடைசியில் இடதுசாரிகளின் முதுகில் குத்தினார் அதற்கும் CBI தான் காரணம். ஆனால் இடதுசாரி கட்சிகளை இப்படி பழிவாங்கமுடியாமல் அவர்கள் கறைபடியாதவர்களாக இருந்ததால், கேரளாவில் அந்தக்கட்சியின் செலவாக்கை குலைப்பதற்கு CPM ன் மாநில செயாலாளர் மீது ஊழல் புகாரை சுமத்தி CBI மூலமாக வழக்கு தொடர்ந்தனர், சமீபத்தில் வெளிவந்த நீதிமன்ற தீர்ப்பின் மூலம் திரு.விஜயன் மீதான குற்றத்திற்கு ஆதாரம் இல்லை என CBI கூறிவிட்டது.

மத்திய ஆட்சியை நடத்துகிற காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் பிரச்சனைகளை எப்படி தீர்ப்பது, வாழ்க்கைத் தரத்தை எப்படி உயர்த்துவது வேலைவாய்ப்பை உருவாக்குவது என்பதையெல்லாம் விட ஆட்சியை எப்படி தக்க வைப்பது என்று நன்றாக தெரிந்து அதை அமல்படுத்துகிறார்கள், இதற்காகவே உட்கார்ந்து யோசிக்க சில ஓய்வுபெற்ற புள்ளிகளை வேலைக்கு அமர்த்தியுள்ளது காங்கிரஸ் கட்சி. முன்பெல்லாம் மத்தியரசுக்கு அடிக்கடி கடிதம் எழுதும் நமது முதல்வர் இப்போது ஸ்பெக்ட்ரம் ஊழல், அழகிரியின் பாராளுமன்ற நடவடிக்கையை காரணமாக மத்திய அரசு எதை சொன்னாலும் தலையாட்டும் நிலையில் இருக்கிறார். மடியில் கனமிருந்தால் வழியில் பயம் வரத்தானே செய்யும்.

தமிழகத்தின் திமுகவும் அதிமுகவும் மத்திய அரசுக்கு ஆதரவு அளிக்கும் போது இந்த CBI எந்த அமைச்சரவையின் கீழ் வருகிறதோ அதையும் சட்டத்துறையிலும் அமைச்சரவை பொறுப்புகளை மன்றாடிப் பெற்று தக்கவைத்திருந்தார்கள், ஒருவருக்கு அதைவைத்து ஊழல் செய்த கட்சியின் தலைவரை ஒழிப்பதற்காகவும் மற்றவருக்கு தற்காத்துக்கொள்ளவும் தேவைப்பட்டது. இதன் அடிப்படையில் மத்தியில் ஆளும் காங்கிரஸோ அல்லது பாஜகவோ CBI அமைப்பை தேர்தல் ஆணையம் போன்று ஒரு சுயமான அமைப்பாக மாற்றம் செய்யவில்லை.மத்திய புலணாய்வு அமைப்புகளை தங்கள் அரசியல் எதிரிகளை பழிவாங்கும் நடவடிக்கைகளுக்காக காங்கிரஸ் பயன்படுத்துவது ஒரு முடிவுக்கு வர வேண்டுமானால் மத்திய புலணாய்வு அமைப்பு சுயமான அமைப்பாக மாற்றப்படவேண்டும்.

இன்னும் நாம் நீதித்துறையும் அரசுத்துறையும் நடுநிலையாக செயல்படுகிறது என நம்பினால் அது அறியாமையால் தானோ?

செவ்வாய், 27 ஏப்ரல், 2010

ஊழல்களின் தேசம்

தினமும் செய்தித்தாளை திறந்தால் லஞ்சம் ஊழல் பற்றிய செய்திகள் நிறைந்து கிடக்கின்றன, ஒவ்வொரு செய்தித்தாளும் லஞ்சம்/ஊழல் பற்றிய செய்திகளுக்காகவே ஒரு சில பக்கங்கள் ஒதுக்கலாம். அந்த அளவிற்கு ஊழல் செய்திகள்.எங்கு இல்லை ஊழல்/லஞ்சம். இன்று கிரிக்கெட் IPL ஊழலும், இந்த வார கேதன் தேசாயும் இந்த வார நட்சத்திர புள்ளிகள். கோடிகளில் ஊழல் புரிந்தவர்கள் எல்லாம் நம் நாட்டில் தண்டிக்கப்பட்டதாய் வரலாறு இல்லை.

ஊழல் செய்வதில் பலவகை, அது நேரடியாக நம்மை பாதிக்காவிட்டாலும் அரசுக்கு வருவாய் இழப்பு அதன் சுமை ‘அம் ஆத்மி” மீது தான்,கிரிக்கெட்டில் நடப்பது ஊழல் அல்ல,ரசிகர்களை மோசடி செய்தது. இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் மோகத்தை வியாபார உத்திக்கு பயன்படுத்தியது தான், தேசபக்திக்காக ஆடியவர்கள் அடிமைகள் போல ஏலம் போகிறார்கள். அப்பாவி ரசிகர்கள் விளையாட்டை நேரில் பார்த்தாலும் தொலைகாட்சியில் பார்த்தாலும் IPL க்கு வருமானம் தான். இந்தியாவின் பெரிய தொழிலதிபர்கள் தங்கள் நிறுவன லாபம் போதாது என்று விளையாட்டை வியாபாரமாக மாற்றிவிட்ட பங்கு அவர்களுடையது, இந்த தேச பக்த வீரர்களுக்கு அரசு செலவில் பாதுகாப்பு, கேளிக்கை வரி விலக்கு தேசமே மின்வெட்டில் மூழ்கினாலும் விளையாட்டு எந்தவகையில் பாதிக்கப்படமல் தங்கு தடையற்ற மின்சாரம், இவற்றையெல்லாம் அனுமதிக்கும் அரசு துறை சார்ந்த அரசியல்வாதி (அமைச்சர்)க்கு லாபத்தில் பங்கு. சரி இந்த IPL பரபரப்பு 3வது சுற்று விளையாட்டோடு முடிந்துவிடும் நாமும் மறந்துவிடுவோம் ஏனெனில் தொடர்ந்து பரப்ரப்பு செய்திகளுக்கு இங்கு பஞ்சமே இல்லை.

கேதன் தேசாய் (தேசபக்தரோ?) வாங்கிய லஞ்சம் கொஞ்சமா? அதை தங்கமாக டன் கண்க்கிலும் கரண்சி நோட்டாக மூட்டைகளிலும் பல கிடங்குகளில் வைத்துள்ளான். இவன் அனுமதித்துள்ள கல்லூரியோ மருத்துவமனையோ எந்த லட்சனத்தில் இருக்கும், மக்களின் உயிருடன் விளையாடியவனுக்கு என்ன தண்டனை கிடைக்கும் பொருத்திருந்து பார்க்கலாம்.அதற்குத்தான் தனியார் துறைகளுக்கு ஊக்கமளிக்கிறார்கள்.கல்லூரிக்கு அனுமதியளித்தால் பல மாணவர் சீட்டுகளையே பரிசு தருகிறார்கள், விலைக்கு வாங்கிய மாணவ்ரின் தரம் எப்படி இருக்கும்.

இந்த தேசத்தில் எல்லாம் விற்கப்படுகிறது பொதுத்துறை ஆலைகள், பழங்குடியினர் வசிக்கும் காடுகள் நாம் பயன்படுத்தும் ஏரிகள் சில சமயம் அமைச்சகமே கூட்டணி (தர்மம்)பேரத்திற்காக விற்கப்படுகிறது. முன்பெல்லாம் அரசியல்வாதிக்கும் ரவுடிகளுக்கும் தான் ஓர் உருவில் இருப்பார்கள், பின்னர் சாராய வியாபாரிகளானர்கள் அரசே சரக்கை விற்று வருவதால் கல்வித்தந்தை யானார்கள், (அரசு தன்னிடமிருந்த கல்வியைவிற்றுவிட்டு டாஸ்மாக்கை கைப்பற்றியது அவர்களுக்கும் இல்வச டிவி வழங்க பணம் வேணுமே). இப்போது பாரளுமன்றம் செல்கிறவர் அரசியல்வாதியா, மக்கள்பிரதிநிதியா அல்லது தொழிலதிபரா என விளங்கவில்லை, எனென்றால் இந்திய கோடீஸ்வரர்களில் அங்கு பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு, 25 ஏப்ரல், 2010

BSNL விற்பனைக்கு!

நமது அரசு புதிய திட்டங்களுக்கும் மக்கள் நல பணிகளுக்கும் நிதியின்றி தவிக்கிறது, தேசத்தை ஆள்பவர்கள் கடன் வாங்கலாம் என யோசிக்கிறார்கள் உடனே நம்மீது அக்கறை கொண்டு உலக வங்கியும் பன்னாட்டு நிதி நிறுவனமும் கடன் தரமுன்வருகிறது ஆனால் நிபந்தனைகளைப் பற்றி கடனாளிகள் யோசிப்பதில்லை நம்மீது ஏன் கருணை காட்டுகிறார்கள் என்றும் எண்ணவில்லை வாங்கு கடனை எல்லாவற்றிலும் கைச்சாத்திடு.

இப்படித்தான் இந்திய அரசு கடன் வாங்கி அதன் நிபந்தனைகளை ஒவ்வொன்றாக செய்து வருகிறது, என்ன நிபந்தனைகள் பொதுத்துறையை தனியார்மயமாக்கு, மக்களுக்கு வழங்கும் மானியங்களை குறை, நிதிமூலதனத்தை தாராளமயமாக்கு,அன்னியமூலதனத்திற்கு அனுமதி என பட்டியல் நீள்கிறது. கடன் கொடுப்பதே வலையில் சிக்கவைப்பதற்குத்தான் என்பது வாங்கியவர்களுக்கும் தெரியும். இப்படி வாங்குவதாலும் சர்வதேச நிதி நிறுவனம் கூறுவதை செயல்படுத்தினாலும் இவர்களுக்கு என்ன லாபம் என்பதை இந்திய கறுப்புப்பணம் சுவிஸ் வங்கிகளில் நிரம்பிவழிவது தான் சாட்சி. இப்போது அரசுத்துறை நிறுவனமான " BSNL" ல் மீது பார்வை.

இந்திய அரசின் முழுக்கட்டுபாட்டில் செயல்பட்டுவரும் BSNL நிறுவனம் 2000ம் ஆண்டு தான் நிறுவனமாக உருப்பெற்றது, அதுவரையில் மத்திய அரசின் வருமான வரித்துறை போன்று அதுவும் ஒரு துறையாகத்தான் இருந்தது. தொலைத்தொடர்பு துறையை தனியார் மயமாக்கவேண்டும் என பிள்ளையார் சுழி போட்டதே அதை நிறுவனப்படுதியதில் ஆரம்பிக்கிறது. அப்போதே தொழிற்சங்கங்கள் அதை எதிர்த்து போராடினர் ஆனால் அரசு கூரிய காரணம் “மதிப்பிட” வேண்டியதற்காகத்தான் என சப்பைகட்டியது. உலகில் நான்காவது பெரிய தொலைதொடர்புத்துறை நிறுவனமான் BSNL ன் சொத்து மதிப்பு சுமார் ரூ.60,000 கோடி. நிறுவனத்தின் ஆண்டிற்கான விற்றுமுதல் ரூ. 35,000 கோடி மறும் நிகர லாபம் சுமார் ரூ.9000 கோடி. பலவேறு வங்கிகளில் ரூ.35,000 கோடிவரை சேமிப்பாக முதலீடு செய்துள்ளது. கிராமம், நகரம் என பார்க்காமல் மக்களுக்கான சேவை என்பதை 5.9லட்சம் இந்திய கிராமங்களில் 5.6 கிராமங்கள் வரை இதன் சேவை பரவியுள்ளது. மேலும் தற்போதைய ஊழியர் எண்ணிக்கை சுமார் 3 லட்சம் பேர் நாட்டின் சமூக நீதியின் அடிப்படையில் பின்தங்கிய பிரிவினருக்கும் வேலைவாய்ப்பை வழங்கிவருகிறது. இதை விட நமது ஆட்சியாளர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்கள் தரும் அறிவுரை தான் பெரிது.

தற்போது பிரதமரின் நேரடிப்பார்வையில் நியமிக்கப்பட்டுள்ள சாம் பிரிட்ராடோ குழு அளித்துள்ள அறிக்கையில் முக்கியமானது 30 சதவீத பங்குகளை விற்கவேண்டும், நிறுவனத்தின் 1/3 அளவு ஊழியர்களை விருப்ப ஓய்வுத்திட்டத்தின் மூலம் வெளியேற்றவேண்டும் மேலும் சில வேலைகளை அவுட்சோர்சிங் மூலம் செய்யவேண்டும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் 60,000 ஊழியர்கள் பணிமூப்பு காரணமாக ஓய்வு பெற உள்ள நிலையில் அறிக்கையின் அவசரம் என்ன? சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திய பொதுத்துறை நிறுவங்களில் ஒன்றான “ நவரத்னா” அங்கீகாரம் பெற்ற VSNL நிறுவனத்தின் பங்குகளை டாடா நிறுவனத்திற்கு விற்கும் அதை பங்குதாரராக இணைத்தது முடிவில் அது டாடாவிற்கே சொந்தமாக மாறிவிட்டது, BSNL m அதைப் போல் ஆக்கப்படும் என்பதில் ஐயமில்லை.


கடந்த 15 ஆண்டுகளாக பொதுத்துறை நிறுவனங்கள் நலிவடையச் செய்யப்பட்டன, அதன் பங்குகள் அடிமாட்டு விலைக்கு தனியாருக்கு மாற்றப்பட்டன. இந்த நாட்டின் ஒவ்வொரு பொதுச்சொத்தும் விரைவாக தனியார் , பன்னாட்டு நிறுவனக்களுக்கு மாற்றப்பட்டு வருகிறது இதற்கு ஆட்சியில் பங்கு வகித்த அனைத்து அரசியல் கட்சிகளும் பொறுப்பு. நேரு பொதுத்துறை நிறுவங்களை இந்த நாட்டின் கோவில்கள் என்றார் ஆனால் இன்று ஆட்சியாளர்கள் கோவில் சொத்துக்களை விற்று விட்டு சாப்பிடுகிறார்கள். எங்கே முடியும். இழப்பு விற்கப்படும் ஒவ்வொரு நிறுவனத்தின் ஊழியர்களுக்கு மட்டுமல்ல 120 கோடி இந்தியர்களுக்கும் தான்.