செவ்வாய், 5 ஏப்ரல், 2011

இந்திய மக்கள்தொகையில் பெண்கள்

இந்தியாவின் மக்கள்தொகை 2001 ம் ஆண்டிலிருந்த 102 கோடியிலிருந்து 121 கோடியாக உயர்ந்துள்ளது, ஆனாலும் கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகையின் வளர்ச்சியின் சதவீதம் அதற்கு முந்தைய பத்தாண்டுகளை விட குறைந்துள்ளது. உலகின் நிலப்பரப்பில் இந்தியா வெறும் 2.4 சதவீதம் மட்டுமே ஆனால் மக்கள்தொகையில் நாம் 17.5 சதமானம், மாறாக அமெரிக்காவின் நிலப்பரப்பு உலக நிலப்பரப்பில் 7.2 சதவீதம் அதன் மக்கள்தொகையின் பங்கு வெறும் 4.5 சதவீதம் தான். இந்த நிலையில் 2030ம் ஆண்டில் இந்திய மக்கள்தொகை சீனாவை விஞ்சி முதலிடம் வகிக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியா எதிர்நோக்குகிற எல்லாப் பிரச்சனைகளுக்கும் மக்கள்தொகைதான் காரணம் என்று எல்லோரிடத்தும் கருத்து நிலவுகிறது. ஆனால் இவ்வளவு மக்களை உற்பத்தியில் ஈடுபடுத்தினால் இந்தியாதான் முதன்மை நாடாக இருக்கும். மக்கள்தொகைபெருக்கம் இந்தியாவிற்கு பாதகமான அம்சமாக விளங்கும் போது அதுவே பல ஐரோப்பிய நாடுகள் மக்கள்தொகை வளர்ச்சிவிகிதம் குறைவதை கவலையுடன் பார்க்கின்றனர். அடுத்த பத்தாண்டுகளில் உலகிலேயெ அதிக இளைஞர்கள் இந்தியாவில் தான் இருப்பார்கள். இப்படி மக்கள் தொகையில் நிறைகுறைகள் இருப்பினும், மிகவும் பாதகமான அம்சமாக விளங்குவது ஆண் பெண் விகிதாச்சாரம் தான்.



2001ம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி 1000 ஆண்களுக்கு 933 பெண்கள் இருந்தார்கள் இப்போது அந்த விகிதம் 940 ஆக உயர்ந்துள்ளது. அதுவே 0-6 வயதுள்ள குழந்தைகளின் விகிதம் முன்னெப்போதும் இல்லாததைவிட மிகவும் குறைந்து 1000 ஆண் குழந்தைகளுக்கு 914 பெண்குழந்தைகள் மட்டுமே உள்ளனர். இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து படிப்படியாக இந்த விகிதம் குறைந்துகொண்டே வருகிறது. கேரளமாநிலம் முற்றிலும் மாறுபட்டு 1058 பெண்கள் உள்ளனர், 0-6 வயதுள்ள குழந்தைகளின் விகிதாச்சாரத்தில் பெண்குழந்தைகளின் விகிதம் அங்கும் குறைவாகவே உள்ளது ஆனால் 960 என்பது மற்ற மாநிலங்களைவிட அதிகம்.இந்தியாவின் பொருளாதர சமூக,கல்வி வளர்ச்சிவிகிதம் எல்லா மாநிலங்களிலும் சீராக இல்லை. ஹிந்திபேசும் மாநிலங்களில் கல்வி வளர்ச்சி குறைவாக உள்ளது, பாலின அசமத்துவம் அதிகரித்திருக்கிறது. பொருளாதாரத்தில் மிகவும் வளர்ச்சிபெற்ற மாநிலமாக குஜராத் இருந்தாலும் 0-6 வயதுள்ள ஆண்-பெண் விகிதாச்சாரம் 900க்கும் கீழே உள்ளது. காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா, உத்தர்கண்ட், உபி போன்ற மாநிலங்களிலும் இதே நிலைமைதான். ஹரியானா, உபி ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இறுக்கமான சாதிக்கட்டுப்பாடும் தலித்மக்கள் மீதான வன்முறையும் அதிகம் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது.

இந்தியாவில் தந்தைவழிச் சமுதாயம் நிலைபெற்றதிலிருந்தே ஆண் குடும்பத்தலைவனாகவும் பெண் ஆணின் அசையா சொத்தாக மாறிக்கொண்டிருந்தாள். ஆண்குழந்தைகளுக்கிருந்த முக்கியத்துவம் பெண்குழந்தைகளுக்கு இல்லை. இன்றும் சமூகத்தில் கல்வி,சுகாதாரம்,ஊட்டசத்து போன்ற விஷயத்திலும் வேறுபாடு நிலவுகிறது. புத்தர் வாழ்ந்த காலத்தில் (கி.மு 563-483) பிரசேனஜித் என்ற மன்னர் ‘தன் மனைவி பெண் மகவை ஈன்றாள்’ என்ற செய்தியறிந்தவுடன் மன்னர் கவலையடைந்திருக்கிறார், புத்தர் அவருக்கு ஆறுதல் சொன்னதாக செய்தியிருக்கிறது.அதற்கு பிந்தையகாலத்தில் ராஜபுத்திர இனத்தில் பெண்குழந்தை பிறந்தால் அந்த சிசுவைச் சாகடித்தனர். அந்த வழக்கம் இன்று தொடர்ந்துவருகிறது.

பெண்களின் பாலின விகிதாச்சாரம் ஏன் தொடர்ந்துகுறைந்து வருகிறது, இன்னமும் பெண்சிசுக்கொலை நடக்கிறதா என்பது நிச்சயம் ஆராயப்படவேண்டும். கருவில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக உள்ளதா என்பதைக் காண ‘ஸ்கேன்’ செய்து குழந்தையின் வள்ர்ச்சியை கண்கானிப்பது அறிவியலின் வளர்ச்சி, அதைப் பயன்படுத்தி பெண் குழந்தையென்றால் அறிந்தால் கருவிலேயெ கலத்துவிடுகின்றனர். அச்சோதனையை பாலினம் அறிவதற்காக பயன்படுத்தக்கூடாது என்ற சட்டம் இருந்தபோதிலும் இன்னும் பெண்குழந்தைகளின் எண்ணிக்கை ஏன் குறைவாக உள்ளது. வேறு என்ன காரணங்களால் பெண் விகித்தாச்சரம் குறைந்துவருகிறது என்று ஆராயலாம்.

கருத்துகள் இல்லை: