ஞாயிறு, 16 அக்டோபர், 2011

மேதகு.அப்துல்கலாம் அவர்களுக்கு வேண்டுகோள்...

தற்போது கூடங்குளத்தில் அணுமின் நிலையத்திற்கெதிராக பொதுமக்கள் நடத்திவருகிற போராட்டத்தை நீங்கள் அறிவீர்கள் என நம்புகிறேன்.அணு உலை சம்பந்தமாக படித்தவர்கள், படிக்காதவர்கள் என வித்தியாசமில்லாமல் அணு உலை ஆபத்தனதா? இல்லையா? என்ற விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்திய அரசு `தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில்` அணு உலை சம்பந்தமாக விவரனைகள் மக்களுக்கு தெரிவிக்கமறுக்கிறது. பொதுமக்கள் அரசின்பிரதிநிதிகளான அமைச்சர்களின் வாக்குறுதிகளையோ, அதிகாரிகளின் விளக்கங்களையோ,ஏன் பிரதமரின் வாக்குறுதியைக்கூட நம்பத்தயாராகயில்லை. ஏனென்றால் அவர் பெரும்பாலான மக்களுக்கான பிரதிநிதியாக செயல்படவில்லை என்பதை அனுபவம் கற்றுத்தந்திருக்கிறது. அது நாட்டையே உலுக்கி எடுத்த 2ஜி அலைக்கற்றை ஊழலாக இருந்தாலும் சரி, வறுமைக்கோட்டு எல்லையை வரையறை செய்வதாக இருந்தாலும் சரி அவரை நம்பிய சாமான்ய மக்களுக்கு துரோகம் இழைத்தார். பின்னர் எந்த நம்பிக்கையில் கூடங்குளம் மக்களானுலும் சரி ஜெய்தாப்பூர் மக்களானாலும் சரி எப்படி நம்புவார்கள்.

இந்தியாவின் அணுசக்தியை உலகுக்கு உணர்த்திய விஞ்ஞானிகளில் தலைமையானவர் என்ற முறையில் இந்த நாட்டு மக்கள் உங்கள் மிது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். மேலும் நீங்கள் குடியரசுத்தலைவர் பதவி வகித்த காலத்தில் நாடெங்கும் சென்று மாணவர்களை சந்தித்து உரையாற்றினீர்கள். இந்த நாட்டில் யார் சொல்வது உண்மை, யார் சொல்வது பொய் என்பது தெரியாமல் மக்கள் குழம்பியிருக்கிறார்கள். இந்த நாடு அணுவெடிப்பு சோதனை நடத்தியபோது அதைக்கொண்டாடியவர்கள் கூட இன்று அணுவை ஆக்கபூர்வ சக்திக்கு பயனபடுத்தும்போது எதிர்க்கிறார்கள். இந்தியா சர்வதேச அளவில் இன்றும் சொல்லிக்கொண்டு இருக்கிறது`அணுவை` ஆக்கப்பூர்வ சக்திக்கு மட்டும் பயன்படுத்துவோம் என்று.

தமிழகத்திலுள்ள முக்கிய அரசியல் கட்சிகளுக்கு அணுசக்தி குறித்த தனியான நிலைபாடுகளோ, கொள்கைகளோ கிடையாது. பெரும்பான்மை மக்கள் எதிர்ப்பு காட்டினால அவர்களும் லாலி பாடுவார்கள். அதிகாரத்திற்கு சென்றுவிட்டால் `வர்க்க` நலனில் மட்டும் அக்கறை காட்டுவார்கள். அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் இந்தியாவிற்கு `ஒளி` தரும் என்று உரத்துக்கூறிய மத்தியதரவர்க்க மக்கள் குறிப்பாக தமிழக மக்கள் கூடங்குளம் மின்திட்டத்தை எதிர்க்கிறார்கள். இப்போது நிலவுகிற அச்சம் ஜப்பானில் புக்குசிமாவில் நடந்த விபத்துக்குப் பிறகு தான். சுனாமியின் சாத்தியக்கூறுகள் கூடங்குளம் மட்டுமல்ல, இந்தியாவின் அணு உலைகளை பாதிக்குமா? அப்படி பாதித்தால் என்ன பாதுகாப்பு வழிமுறைகள் அங்கு ஏறபாடு செய்யப்பட்டுள்ளன என்பதை மக்களுக்கு தெரிவிக்கவேண்டும்.

பல நிகழ்ச்சிகளில் இந்தியாவிற்கு அணுமின்சாரம் தேவை என்று பேசியிருக்கிறீர்கள், ஒருமுறை இடிந்தகரை மக்களிடம் பேசினால் அவர்களின் நியாயமான அச்சம் நீங்கும்.