வெள்ளி, 18 நவம்பர், 2011

தேவ-அசுர யுத்தத்தின் வேர் எங்கே?

“மனிதன் எந்த உணவை உண்கிறானோ அதே உணவையே அவனது தேவனும் உண்கிறான். மனிதன் எந்த உருவில் இருக்கிறானோ அதே உருவத்தில் அவனுடைய தேவனும் இருக்கிறான்” என்கிறது ரிக் வேதம்.

தந்தை பெரியார், இராமாயணம் மற்றும் வைதீக மதத்தின் புராணங்களில் வருகின்ற தேவர்- அசுரர் யுத்தங்களை ஆரிய-திராவிட யுத்தம் என்று சொன்னார்.தீபாவளி பண்டிகைக்காக கொல்லப்படும் நரகாசுரன் ஆகட்டும், முருகனால் சூரசம்ஹாரத்தில் கொல்லப்படுகிற அரக்கன் ஆனாலும் சரி அது ஆரிய-திராவிட போர்களின் கதைதான். ஆனால் வெட்கம் கெட்ட தமிழர்கள் தம் இனத்தவரான அரக்கனை கொல்கிற ஆரிய விழாவை தீபாவளி என கொண்டாடுகிறோம் என வருந்தினார். நம்முடைய இதிகாசங்கள் என்னவோ மஹாபாரத்தை பல இலட்சங்கள் வருடங்களுக்கு முன்பு நடந்ததாகவும், இராமாயாணத்தையும் அதே பாணியில் திரேதா யுகத்தில் நடந்த கதை எனவும் சொல்கிறார்கள். `சோ` எழுதிய மஹாபாரதம் பேசுகிறது நூலில் நகுல-சகாதேவர்கள் 13 ஆண்டு வனவாசத்தில் தமிழகத்தில் சேர-சோழர் அல்லது பாண்டியனை பார்த்ததாக எழுதியிருக்கிறார், இது எப்படியிருக்கு? ஆனால் மஹாபாரத்தின் கதையின் காலம் சூது வாது, ஏமாற்று, வஞ்சகம் நிறைந்த அரசாட்சி கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. இரண்டாம் நூற்றாண்டுவரை இருக்கலாம் என ஆய்வாள்ர்கள் சொல்கிறார்கள். ராமாயாணமும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் அரச குமாரரின் கதை என்கிறார்கள். மனிதகுல வரலாற்றில் ஆராய்ந்தால் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் ‘மனிதனாகவே’ இல்லை. ஆனால் நம்முடைய புராணங்களில் வரும் கடவுளர்களுக்கு மீசையோ, தாடியோ கிடையாது. சித்திரங்கள் ஏன் அப்படி வரையப்பட்டன என்றால் ரிக் வேதத்தில் சொல்லப்பட்ட வரிகள் தான் சாட்சி. இந்த இதிகாசங்களை உருவாக்கியவர்கள் எப்படி இருந்தார்களோ அப்படி கடவுளையும் கற்பனை செய்தார்கள். ஆனால் இராமாயாணக்கதையிலும், மஹாபாரதத்திலும் அரக்கர்கள் என்பவர்கள் குண்டாகவும், சுருட்டை தலைமுடியுடன், முருக்கிய மீசை கொண்ட தோற்றத்தை ஏற்படுத்தினார்கள். இப்போதும் சமூகத்தில் மீசை வைக்கதவர்கள் அவர்கள் வணங்கும் கடவுளின் உருவத்தை பின்பற்ற ஆரம்பித்துவிட்டார்கள் போலும். சூத்திரர்கள் வணங்குகிற கடவுள்கள் எல்லாம் சாராயம் குடிப்பவையாகவும், பச்சை ரத்தம் குடிப்பவையாகவும் இருக்கும்போது பிராமணர்கள் வழிபடும் கடவுளர்கள் வேதகாலத்தில் குடித்த சோமபானத்தையும் பசு மாமிசத்தையும் மறந்து சாந்த சொரூபிகளாக சர்க்கரை பொங்கல் சாப்பிடுவர்களாக மாற்றிவிட்டனர்.

கதைக்கு வருவோம்....

ஆரியர்கள் தங்களை தேவர்களின் வழிவந்தவர்கள் அதனால் தேவர்கள் என்று சொல்லிக்கொண்டார்கள், எதிர்கொண்ட சிந்துவெளிமக்களை அசுரர் என்று குறிப்பிட்டார்கள். இந்தச் சண்டைகளின் நினைவுகள் தாம் ரிக்-வேதத்தில் தேவ-அசுர யுத்தம் என்று விவரிக்கப்படுகிறது. சிந்துவெளி நாகரீகமக்கள் எதிர்கொண்டது போலவே கி.மு.2500களில் பாரசீகத்தின் பாலைவனத்தின் நடுவே கிடைத்த செழிப்பான மண்ணில் ஒரு விவசாய சமூகம் உருவாகியிருந்தது. அந்த விளைச்சலையும், சேமிப்பையும் இரவு நேரங்களில் கொள்ளையடிக்க வந்த நாடோடிக் கூட்டங்களை எதிர்த்து விரட்டிக்கொண்டிருந்தது. அந்த நாடோடிக்கூட்டத்திற்கு பாரசீக விவசாய சமூகம் இட்டபெயர் தேவா (Daevas) என்பதாகும். பாரசீக மொழியில் தன் பொருள் ராட்சஷர் அல்லது திருடர். அங்கு தோன்றிய மதம் செளராஷ்ட்ரம், அதனை பார்ஸீ என்றும் குறிப்பிடுவார்கள். இந்த மதத்தின் வேதநூல் ஜெண்ட் அவெஸ்தா (Zend Avesta).ரிக் வேதத்தில் உள்ள தேவ-அசுர யுத்தம் சிந்தனைகளுக்கு மூல காரணமான்வை அவெஸ்தாவில் உள்ளன.

அவெஸ்தா ஒளிதரும் கடவுளான அஹூரா மஜ்தா-வை மையமாக கொண்டுள்ளது. ஒளி என்பது விவசாயிகளுக்கு பாதுகாப்பாகவும், இருட்டு என்பது அவர்களின் எதிரிகளான திருடர்களுக்கு சாதகமாகவும் இருந்துள்ளது. ஒளிதான் தங்களை காப்பதாக அவெஸ்தா நம்பியது. இருட்டை அறவே வெறுத்த பாரசீக குடிகள் இரவைப் படைத்தவனை அருவருப்புடன் அங்கிரா மைன்யூ (angra mainyu) என்றழைத்தனர். தேவர்களின் தலைவனை அந்திரா என்றழைத்தனர். ஒளியினால் பாதுகாக்கப்படும் அஹூராக்களின் உடமைகளை திருட வரும் எதிரிகளை நிந்தனை செய்ய தேவ என்ற சொல்லைப் பயன்படுத்திய அவர்கள் திருடவரும் அனைவரையும் தேவர்கள் என்றே குறிப்பிட ஆரம்பித்தனர். இந்த திருடர்களின் வாழ்விடம் தமது பூமிக்கு வடக்கெ இருக்கிறது என்று அவெஸ்தா கூறுகிறது. இந்த விவசாயிகளுக்கு வழிகாட்டியாய் ஒருவன் வருகிறான், அவன் திருடுபவர்களைப் பிடித்து மரணதண்டனை கொடுக்கிறான் அவன் பெயர் யிம(yima). மத்திய ஆசியப் பகுதியில் வாழ்ந்த இந்த தேவர்களுக்கு, தென் திசையிலிருந்த இந்த பாரசீகத்து யிம அச்சத்தைக் கொடுத்தான். காலப்போக்கில் தென் திசையே யிம திசையாகிப்போய்விட்டது.

பாரசீகத்து விவசாயிகளால் அடித்துவிரட்டப்பட்ட இந்த தேவர்கள் காடுமலைகளை கடந்து சிந்துவெளியில் பிரவேசித்தார்கள். அவர்களின் சந்ததிகள் தான் சிந்துவெளியில் பிரவேசித்திருப்பார்கள். இங்கே சிந்துவெளியில் புதுவிதமான அஹூரா (விவசாயி)க்களை காண நேர்ந்தது. பாரசீகத்து அஹூரா, சிந்துவெளியில் அஸூரா ஆயிற்று. பாரசீகர்களுக்கு ஸ வை உச்சரிக்க வராது, அதனாலேயெ சிந்து என்பது `ஹிந்த்` ஆயிற்று. தேவர்களின் தலைவனான அந்திரா இந்திரனாகவும் யிம எமனாகவும் மாறிப்போனார்கள். பாரசீகத்தின் அஹூராக்கள் பலம் வாய்ந்த நிலையில் இருந்த்தால் தேவர்களை அடித்துவிரட்டும் சக்தி பெற்றிருந்தார்கள். துச்சமாய் கொன்று போட்டார்கள், பைசாசங்கள் என்று இழித்துரைத்தார்கள். ஆனால் சிந்துவிலோ , வந்து சேர்ந்த தேவர்களின் பலம் கூடியிருந்தது. அதனால் வென்றவர்கள் தேவர்கள்-உயர்ந்தவர்கள் ஆனார்கள். அதேபோல் அசுரர் என்பவர் ஒளியின் பிள்ளைகள், நாகரீகம் மிக்கவர்கள் என்ற பொருளுக்குப் பதிலாக ராட்சஷர் என்ற தலைகீழான அர்த்தம் ஏற்பட்டு அதுவே இன்றும் நிலைத்து நீடித்துவருகிறது.

- அலைகள் வெளியீட்டகம் வெளியிட்டுள்ள வாழ்வை வழி மறிப்பது எது? என்ற நூலிலிருந்து..

புதன், 16 நவம்பர், 2011

வால்கா முதல் கங்கை வரை

மனிதகுல வரலாற்றின் கி.மு.6000 முதல் இரண்டாம் உலகப்போர் நடக்கின்ற காலம் வரையிலான மனிதகுல வரலாற்றை மார்க்சீயம் அல்லது பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில் விளக்குகிற நூல் தான் வால்கா முதல் கங்கை வரை. இந்த நூல் தமிழில் அது பதிப்பாகிய 1954 லிருந்து 2009 வரை 28 பதிப்புகள் போடப்பட்டிருக்கின்றன. அறிஞர் அண்ணா இந்த நூலை தமிழர்கள் எல்லோரும் வாசிக்கவேண்டும் என்றார். அதற்காக இந்த நூல் ஒன்றும் திராவிடத்தை உயர்த்திப்பிடித்தது என்றும் சொல்லமுடியாது. இந்த நூலை எழுதிய ராகுல்ஜி பிறந்தது 19ம் நூற்றாண்டின் இறுதியில் உ.பி.யில் ஒரு வைதீக பிராமணக் குடும்பத்தில், இளமைக்காலத்தில் புத்தமதத்தின் பால் ஈர்க்கப்பட்டு ஒரு புத்தபிட்சுவாகவே மாறினார். பின்னர் மார்க்சிய நூல்களை கற்றார். இவர் எழுதிய நூல்களை வாசிக்கும்போது இவர் படிக்காத விசயமென்று எதுவுமே இல்லை எனலாம். இந்த நூலை சுதந்திரப் போராட்ட காலத்தில் அவர் சிறையிலிருக்கும்போது எழுதினார், அதை மொழிபெயர்த்த கண.முத்தையா அவர்களும் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியதற்காக பர்மா சிறையில் இருந்தபோது இந்நூலை தமிழில் மொழிபெயர்த்தார். ராகுல்ஜி சுமார் 35 மொழிகளில் புலமைவாய்ந்தவர். ஹிந்தி, சம்ஸ்கிருதம், பாலி, கிரேக்கம், ருஷ்யமொழி, சிங்களம், ராமானுஜரின் தத்துவத்தை கற்பதற்காக தமிழையும் கற்றறிந்தார். இவர் 150க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார். பெளத்தம், ரிக்வேதம், மார்க்சியம், பொருளாதாரம், அயல்தேசத்தின் தத்துவங்கள் மதங்கள் இவர் எழுதிய நூல்கள்.

வால்கா முதல் கங்கை வரை நூல் மனிதகுல வரலாற்றை 20 கதைகளில் விளக்குகிறார். குகைகளில் வாழ்ந்த மனித இனம், அப்போது பேச்சு என்பதே இல்லை அதன் இன்னொரு வடிவமான எழுத்து தோன்றியே 5000 வருடங்கள் தான் இருக்கும்.வேட்டை சமூகத்தில் உணவு தேடுவது மட்டும் தான் முக்கியவேலை, மக்கள் கூட்டங்கள் இனக்குழு என பிரிந்திருந்தது. ஒரு குழு இன்னொரு குழுவுடன் வேட்டைக்கான வனத்தில் மோதல் ஏற்பட்டால் வெற்றி பெற்ற இனக்குழு தோற்ற இனக்குழுவின் பச்சைக்குழந்தைகளைக்கூட கொண்று போட்டது. அவர்கள் பயன்படுதிய ஆயுதங்கள் கல்லால் ஆனது. பின்னாளில் போரில் தோற்ற இனக்குழுவினரைக் கொல்லாமல் அவர்களை அடிமைகளாக வைத்திருந்தன்ர் இதுவே அடிமைச்சமூகமாயிற்று. இப்படி அடிமைச்சமுதாயம், நிலப்பிரபுத்தவம், மன்னாராட்சி, முதலாளித்துவசமூகம் வரை சமூகமாற்றத்தின் தேவையை எளிதாக விளக்குகிறார். மனிதன் பயன்படுத்திய ஆயுதங்களை வைத்துதான் அது கற்காலம், உலோக காலம் என அழைக்கப்படுகிறது.

இன்றும் வரலாற்றில் ஆரியர்கள் என்பது சர்ச்சைக்குரியதாக இருக்கிறது்.ராகுல்ஜி, ஆரியர்கள் இந்தோ-அரோப்பா இனத்தை சார்ந்தவர்கள், மத்தியதரைக்கடல் நாடுகளிலிருந்து வந்தவர்கள் என்கிறார். ஆரியர்கள் சப்தசிந்துவில் குடியேறியது கி.மு.1500 களில். இந்தியா என்ற பெயர் சிந்துவிலிருந்து வந்ததுதான். ஆரியர்களின் அக்கால சகோதர இனமான ஈரானியர்கள் `ச`வை ஹ` என உச்சரித்தார்கள் ஏழுநதிகள் பாய்ந்த பிரதேசத்தில் அவர்கள் குடியேறிதால் சப்தஹிந்து என்றழைத்தார்கள். அக்காலத்தில் மேற்கத்திய நாடுகளில் நாகரீகமாக விளங்கிய கிரீசில் `ஹ` வை `அ` என உச்சரித்தனர்.அதனால் ஹிந்த் என்பது `இந்த்` ஆகிவிட்டது. சப்தசிந்துவைப் பற்றி ரிக்வேதத்திலும் குறிப்புகள் இருக்கின்றன. மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தபோது சிந்துவெளி நாகரீகத்தை `ஆரிய` நாகரீகமாக மாற்ற முயற்சிகள் நடந்தன. அதாவது சிந்துவில் வாழ்ந்த நாகரீக மக்கள் எருது சின்னத்தை `குதிரையாக மாற்றமுயன்றார்கள். இப்போது ஏதோ வேதகாலம் என்றால் சுத்த சைவமும், கொல்லாமையும் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். ஆரியர்கள் நாடோடிகள் வேட்டைச்சமூகத்தை சார்ந்தவர்கள் அதனால் போர்க்குணம் மிக்கவர்களால் ஹரப்பா-மொகஞ்சதாரோ பகுதியில் வழ்ந்த நாகரீக மக்களை எளிதில் வீழ்த்தமுடிந்திருக்கிறது. ஹரப்பா-மொகஞ்சதாரோவை சிந்துவெளி நாகரீகம் எனலாம். சிந்துச்சமவெளி நாகரீகத்தின் சிறப்புக்காலம் கி.மு.2500. அப்போது அவர்கள் நகரவாழ்க்கையை வாழ்ந்தார்கள். நேரான வீதிகள், கழிவுநீர் செல்வதற்கு கால்வாய்கள், சுட்ட செங்கலால் கட்டப்பட்ட வீடுகள், குளியறை போன்ற வசதிகளுடன் கட்டப்பட்ட தடங்கள் தொல்லியல் ஆய்வில் கிடைத்துள்ளன.அவர்களை வென்ற ஆரியர்களுக்கு அந்த வீடுகள் ப்யனற்றையாகவே இருந்ததில் வியப்பில்லை. நாடோடிவாழ்க்கையாக ஆழ்ந்த ஆரிய இனக்குழுவினர் அவர்களிடமிருந்த கால்நடைகளை பறித்துக்கொண்டு அவர்கள் தஸ்யுக்கள் அல்லது தாசர்களாக மாற்றினார்கள்,தொடர்ந்து அவர்கள் கங்கைச்சமெவெளியில் குடியேறினார்கள். இமயமலைப் பகுதியில் வாழ்ந்த கிர் பழங்குடிகளை போரில் வென்றார்கள். சிந்துவெளி நாகரீக மக்கள் உயர்ந்த நாகரீகத்தில் வாழ்ந்தார்கள் என்பதை தொல்லியல் ஆயுவுகள் அவர்கள் பயன்படுத்திய பொருட்களிலிருந்து ஆய்வு செய்திருக்கிறார்கள். சூரியக்கடிகாரம் பயன்படுத்தியிருக்கிறார்கள். வானியலைப் பற்றி ஆராய்ந்திருக்கிறார்கள். விவசாயம் செய்து வாழ்ந்ததால் அவர்களுக்கு காலத்தை கணிக்க காலண்டர் அவசியமாக இருந்திருக்கிறது.` தேவை` தான் கண்டுபிடிப்புகளின் தாய் என்கிறார்கள். ஒருவேளை ஆரியர்கள் அந்த நாகரீகத்தை அழிக்காமல் இருந்திருந்தால் இந்தியா உலகின் முன்னொடியாக இருந்திருக்கலாம்.

அமெரிக்கா எப்படி குடியேறிவர்களின் நாடோ அதேபோன்று தான் இந்தியாவும். அமெரிக்காவில் குடியேறிய மக்கள் சில நூற்றாண்டுகளில், ஆனால் தற்போது இந்தியா என அழைக்கப்படுகிற பகுதிக்கு குடியேறிய மக்கள் பல நூற்றாண்டுகள் அல்லது 3000 ஆண்டுகளுக்கு முன்பு எனலாம். இன்று ஆரியர்கள் எனவர்கள் யாருமே கிடையாது, அந்த அள்விற்கு இங்கே ரத்தக்கலப்பு நடைபெற்றுவிட்டது. இந்தியாவிற்கு மற்ற பிரதேசங்களிருந்து ஏன் வந்தார்கள் என்றால் இங்கே வாழ்வதற்கு ஏற்ற சூழல் இருந்திருக்கிறது. இந்த மண்ணில் `சைவ உணவு` சாப்பிடுபவர்கள் அதிகம் ஏன் என்றால்? அமெரிக்கா மொத்தமும் விளையக்கூடிய தானியங்கள் இங்கு ஒருசில மாவட்டங்களில் அத்தனைவகை தானியங்கள் விளைகின்றன. ரிக்வேதம் வரலாற்றாசிரியர்களுக்கு சிறந்த வரலாற்று நூலாக உள்ளது, அது இயற்றப்பட்ட காலம் ஆரியர்கள் சப்தசிந்துவில் குடியேறுவதற்கு முன்பே அதாவது இன்றுள்ள ஆப்கானிஸ்தான் பகுதியில் அவர்கள் இருக்கும்போதே பாடியிருக்கிறார்கள். ரிக்வேதம் என்பது அந்த வாழ்க்கைமுறையில் ஏற்பட்ட கஷ்டங்களை கடவுளிட்ம் முறையிடும் செய்யுள்கள். ரிக்வேதம் அது இயற்றிய காலத்திலிருந்து வாய்மொழியாகவே கடத்தப்பட்டு வந்திருக்கிறது.அவர்களின் கடவுள் எல்லாம் ஆண்கடவுள்கள் இந்திரன்,வருணன்,அக்னி ஆகியோர்.அக்கால ஆரியர்கள் மாமிச உணவை விரும்பி சாப்பிட்டு இருக்கிறார்கள். ரிக்வேதத்திலேயே `பொலி எருது மாமிசத்தை நெய்யோடு கலந்து சாப்பிட்ட பெண்ணுக்கு ஆரோக்யமான புத்திரன் கிடைப்பான என்ற வரிகள் உள்ளன. ஆதிசங்கரரும் தன் விரிவுரையில் `மாமிசமும் வயதுவந்த எருது அல்லது அதைவிட அதிக வயதுள்ள எருதுவின் மாமிசமாக இருக்கவேண்டுமென்கிறார். பசுவின் புலால் விசயத்தில் இன்று எத்தனை அருவருப்பு இருப்பினும் பழங்காலத்தில் இப்படிப்பட்ட அருவருப்பு இருந்ததில்லை. புத்தர் கால்த்திலும் பசு மாமிசம் அதிகமாகவே சாப்பிட்டு வந்தார்கள் என்று பவுத்த நூலான ` மஜ்ஜம் நிகாய்` கூறுகிறது.

சோமபானம் என்ற போதைவஸ்துவை பருகி ஆடல் பாடலுடன் வாழ்ந்தார்கள். ராகுல்ஜி எழுதிய `ரிக்வேத கால ஆரியர்கள்` என்ற நூலில் ஆரிய இனக்குழுவ்வைப் பற்றி நிறைய செய்திகள் உள்ளன. புரு, யது,துர்வஸூ, த்ருஹ்யு மற்றும் அனு ஆகியவை ஆதி ஆர்ய இனக்குழுக்கள். இதர இனக்குழுக்கள் `பக்தூண்`கள் இவர்கள் ஆப்கனிலும் பாகிஸ்தனிலும் வசிக்கின்றனர். பலான், விஷானி, அலின் மற்றும் சிவ இனக்குழுக்களும் ஆரிய இனக்குழுக்கள் தான்.மத்ர இனக்குழுவைப் பற்றி வால்கா முதல் கங்கை வரை கதைகளில் வருகிறது, அவர்கள் தான் மிடியா என்ற இனக்குழுவினர். `மத்ர` குலப்பெண்கள் கவர்ச்சிமிக்கவர்கள், ஆண்களை வசீகரிப்பவர்கள். அதனால் தான் மஹாபாரத்தில் பாண்டு இன்னொரு மனைவியாக மாத்ரி என்ற மத்ர குலப்பெண்ணை மணக்கிறார். புராதன பண்டைய நகரங்கள், காந்தாரம், மகதம், கோசலம், தட்சசீலம், போன்ற வற்றைப் பற்றி நிறைய தகவல்கள் உள்ளன. இந்த நூல மனிதகுலவரலாற்றைப் பற்றிய அறிவுப்பொக்கிஷம் என்றால் மிகையாகாது.

ஞாயிறு, 13 நவம்பர், 2011

சொர்க்கம், நரகம் மற்றும் மறுபிறவி....

எல்லா மதத்திலும் கடவுள் தான் உலகையும் மனிதனை, ஜீவராசிகளையும் படைக்கிறார். அப்புறம் ஏற்றத்தாழ்வுகளையும் அவரே சேர்த்து படைத்துவிட்டார் என்பது முடிவாகிவிடுகிறது. மனிதன் முதலில் வாழ்ந்த காலத்தில் உணவு தேடுவதிலும், துஷ்ட மிருகங்களைக் கண்டு ஓடி உயிரை காப்பாற்றி கொள்வதிலேயும் காலம் போய்விட்டது. அக்காலத்தில் ஒருநாள் உழைத்து நான்கு நாட்கள் அல்லது ஒருவர் உழைத்து இருவர் உட்கார்ந்து சாப்பிடுகிற அளவிற்கு உற்பத்திமுறை பெருகியிருக்கவில்லை. அதனால் `சிந்தனையாளர்களும்` தோன்றவில்லை. பிற்காலத்தில் உற்பத்தி பெருகி வளர்ச்சியடைந்த சமயத்தில் பெரும்பான்மை மக்களின் `உபரி உழைப்பில்` ருந்து உடல் வளர்க்கக்கூடிய ஒரு வர்க்கம் உருவாகியது. அந்த வர்க்கம் தான் உயிர்வாழ உடலுழைப்பு செய்ய வெண்டிய அவசியமே இல்லாமலிருந்தது. இவ்வர்க்கம் மற்றவர் உழைப்பை மேற்பார்வையிடுதல், அரசாங்க நிர்வாகம், நீதி, தத்துவம்,விஞ்ஞானம், கலைகள், மதம் போன்ற பொறுப்புக்களை கவனித்துக்கொண்டார்கள்.

உழைப்பவர்களை ஆயுதபலத்தை மட்டும் கொண்டு அடக்குவது சிரமமாக இருந்ததால் `தத்துவம்` வளர்ந்தது. அந்த தத்துவங்கள் நிலப்பிரபுக்கள் அல்லது ஆட்சியாளர்களுக்கே சாதகமாக இருந்தது என்பதில் வியப்பில்லை. இவ்வுலத்தில் நாம் ஒரு சில நாட்கள் தானே வாழப்போகிறோம்! அதற்காக நாம் ஏன் போராடவேண்டும்? அதற்குப் பதிலாக அழிவில்லாத மறு உலகத்தைப் பற்றி சிந்திக்கவேண்டும். இப்படி அப்போதிருந்த தத்துவமேதைகள் பாட்டாளிகளின் உழைப்பைத்தின்று கொழுத்து, அவர்களுக்கு எதிரான கருத்துக்களையே `தத்துவம்` `சாஸ்திரம்` என்ற பெயரிலும் உலகத்திற்கு அளித்துள்ளார்கள்.

மனிதன் உலகத்திற்கு வருகிறான்,, நல்லதும் கெட்டதும் செய்கிறான். இறந்தபிறகு தான் செய்த செயல்களின்படி சொர்க்கத்துக்கோ நரகத்துக்கொ போகிறான். யூதம்,கிறிஸ்தவம், இஸ்லாமிய மதங்களிலும் விஷயம் இப்படித்தான் முடித்துவிடுகிறார்கள். ஆனால் இவ்வுலகத்தில் மனிதன் உயர்ந்தவன் - தாழ்ந்தவனாக, ஏழை - பணக்காரனாக ஏன் இருக்கிறான் என்கிற கேள்விக்கு பதில் இல்லை. அப்படியென்றால் கடவுள் பாரபட்சமானவரா என்கிற கேள்வி வருகிறது. இந்த குற்றசாட்டுகளை மறுப்பதற்கும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் சரியானவையே என்று சாதிக்கவும் உபநிஷத்துகளை இயற்றிய `ரிஷிகள்`. மறுபிறப்பு என்கிற தத்துவத்தை எடுத்துக்கூறினர். ஒருவன் பணக்காரனாக ஏன் இருக்கிறான்? அவன் முற்பிறவியில் செய்த நல்லகாரியங்களால், ஒருவன் ஏன் ஏழையாக இருக்கிறான் என்றால் அவன் முற்பிறப்பில் கெட்டகாரியங்கள் செய்தான். எவ்வளவு எளிதான பதில். சமுதாயத்தின் தற்போதைய நிலைமையை அப்படியே நீடிக்கச்செய்ய இந்துக்கள் கண்டுபிடித்த `மறுபிறவி` என்கிற வலிமையான ஆயுதத்தை வேறுயாரும் கண்டுபிடிக்கமுடியவில்லை. இன்றைக்கும் துன்பப்படுகிறவர்கள் எல்லாம தலைவிதி என்று சொல்வதை பார்க்கிறோம்.

இன்றைக்கு உலகத்திலிருக்கிற இந்துமதம், கிறிஸ்தவம், யூதம், இஸ்லாம்,சமணம், பெளத்தம் நிலப்பிரபுத்துவ அமைப்பில் தோன்றியதாகும். எல்லா மதங்களிலும் சொல்லப்பட்ட `சொர்க்கம்` என்பது செல்வச்செழிப்புள்ள ஒரு நிலப்பிரபுக் குடும்பத்தின் கற்பனையேயாகும். இந்துக்களின் வைகுண்டம் என்பது அந்தப்புரம் போன்று அங்கே தெய்வீக எழிலரசிகளின் கூட்டம் இருக்கிறது. எப்பொழுதுமே அழுக்காகாத அவர்களுடைய அழகான ஆடைகள், பொன்னும், மணியும்,வைரமும் ஜொலிக்கும் ஆப்ரணங்கள், மலர்களாலும், நறுமணத்தாலும் கமகமக்கும் அவர்களது பூவுடல்கள், ஆடல், பாடலும், மதுக்கோப்பைகளும் எல்லாம் ஒரு சந்திரகுப்த விக்கிரமாதித்தன் அந்தப்புரத்தின் இனிய வர்ணனை.

இஸ்லாமிய ஜன்னத்தின் (சொர்க்கத்தின்) திராட்சைத்தோட்டங்கள், குளிர்நிழல், பாயும் ஓடைகள், முத்துவிழிகள் கொண்ட எழில் கன்னிகள்- இவையெல்லாம் அக்காலத்திய பாரசீக மாமன்னர் குஸ்ரோபர்வேஜ் அல்லது ரோமானிய சக்ரவர்த்தி மோரிஷ் ஆகியோரின் அரண்மனைகளிலிருந்து வந்தன.கிருஸ்துவர்களின் சொர்க்கமும், யூதர்களின் சொர்க்கமும் இவர்களைப் போன்றே நிலப்பிரபுக்களின் ஆடம்பர வாழ்வைப் பிரதிபலிப்பதாகவே இருக்கிறது.

இன்னமும் வைகுண்டம், சிவலோகம், சொர்க்கம் உயிர்ப்புடன் தான் இருக்கிறது. அடுத்த பிறவியில் கிடைக்கும் நல்ல வாழ்க்கைக்காக இந்தப் பிறவியில் போராடாமல் வறுமையிலும் மூடநம்பிக்கையிலும் சமூகம் உலன்று கொண்டிருக்கிறது என்பது அந்த தத்துவத்தின் தாக்கம் அறிவியல் முன்னேற்றம் நிகழ்ந்துள்ள காலத்திலும் நீடித்து நிலவுகிறது.

---ராகுல்ஜி எழுதிய மனிதசமுதாயம் புத்தகத்திலிருந்து..

ஞாயிறு, 6 நவம்பர், 2011

துருவ நட்சித்திரம் ஒன்று தெரிகிறது...

சமீபத்தில் இரண்டு முக்கியமானவர்கள் ஊடகங்களைப் பற்றி பேசியிருக்கிறார்கள் என்பதை விட சாடியிருக்கிறார்கள். ஒருவர் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் தலைவரும் முன்னாள் நீதிபதியுமான நீதியரசர். மார்க்கண்டேய கட்ஜூ, மற்றொருவர் ஆசியன் ஸ்கூல் ஆப் ஜ்ர்னலிசம் நடத்திவரும் திரு. சசிகுமார்.



Ibn live தொலைக்காட்சியில் கரன்தாப்பர் நடத்திவரும் ‘devil court' ல் மார்க்கண்டேய கட்ஜ...ூ அவர்கள் பங்குகொண்டு பேசியிருக்கிறார். நான் அறிந்த உச்சநீதிமன்ற நீதிபதிகளில் கிருஷ்ணய்யர் க்கு அடுத்தபடியாக மதிப்பது மார்க்கண்டேய கட்ஜூ அவர்களைத்தான், அவர்கள் அளித்த தீர்ப்பு தான் அவர்கள் மீது மதிப்பு வைப்பதன் காரணம். தான் பிரஸ் கவுன்சிலின் தலைவராக இருந்துகொண்டு அங்கு மாற்றங்களை ஏற்படுத்தவேண்டும் என்று கலகக்குரல் உயர்த்தியிருக்கிறார். இந்திய ஊடகங்கள் பொறுப்பற்று நடந்துகொள்கின்றன, இந்த நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் சாமான்ய மக்களுக்காக செயல்படவில்லை, அறிவியல் பூர்வமாக மக்களை சிந்திக்கவிடாமல் ஜோதிடத்தையும் சினிமாவையும் பரப்புவது தான் முதல்வேலையாக இருக்கிறது என்றார். பெரும்பாலன பத்திரிக்கைகள் அப்படித்தான் இருக்கின்றன. கம்யூனிஸ்ட்கள் மீடியாவை வர்க்கநலனில் செயல்படுகின்றன என்று சொல்வார்கள். நீதிபதி அப்படியொரு வார்த்தையை பிரயோகிக்கமுடியாமல் மக்களுக்கு விரோதமாக செயல்படுகிறது என்கிறார். ஊடகங்கள் மக்களாட்சியில் நான்காவது தூணாக இருக்கிறது, ஆனால் யாருக்கும் பதில் சொல்லவேண்டிய அவசியத்தில் இல்லை. தேர்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் 5 வருடங்களுக்கொரு முறை மக்களை சந்திக்கவேண்டியிருக்கிறது. ஆனால் பத்திரிக்கைகள் வாசகர்களைவிட அவர்களுக்கு விளம்பரம்தரும் வியாபார பெருநிறுவனக்களுக்கு சேவை செய்வதில்தான் குறியாக இருக்கிறது. மேலும் பத்திரிக்கைகளே கார்ப்பரேட்களாகத்தான் இருக்கிறார்கள். Paid News என்கிற ஊழலை பத்திரிக்கைகள் செய்ததை நாம் மறந்துவிடமுடியாது. கரகாட்டக்காரனில் வரும் ‘ஒருவிளம்பரம்தான்’ என்கிற மாதிரி தேர்தலில் ஜெயிக்கவைக்க பணம்கொடுத்த வேட்பாளர்களின் செய்திகளை முதல்பக்கத்தில் போட்டார்கள் அதில் Time of India,Hindustan Times பத்திரிக்கைகளுக்கு பங்கு உண்டு. அதை வெளிச்சம் போட்டு காட்டிய சாய்நாத் அவர்களை மார்க்கண்டேய கட்ஜூ புகழாரம் சூட்டினார். நாட்டில் பெரும்பான்மையான மக்கள் விலைவாசி உயர்வினாலும் வறுமையில் வாடுவதை கவனிக்காமல் நடிகைகளின் பேஷன் ஷோ க்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவதை சாடினார். காலை எழுந்தவுடன் பகுத்தறிவு அரசியல்வாதிகளின் சேனல்களும் கூட ராசிபலன் எனும் மூடநம்பிக்கையை பரப்புகின்றன. இந்த நாடு அறிவியலிலும் பொருளாதரத்திலும் முன்னேறியிருந்தாலும் மக்களின் சிந்தனை இன்னும் அடிமைச்சமூகத்தில் தான் இருக்கிறது.

அச்சு ஊடகங்களை கட்டுப்படுத்த பிரஸ் கவுன்சில் இருக்கிற்து, ஆனால் காட்சி ஊடகங்களை கட்டுப்படுத்த ஒரு அமைப்பு தேவை அந்த அமைப்புக்கு அதிகாரங்கள் வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். நிச்சயம் இந்திய பத்திரிக்கைகளிலும் காட்சி ஊடகத்திலும் மாற்றம் ஏறபடும், அந்த மாற்றம் பெரும்பான்மையான மக்களுக்காக இருக்கும் என்று நம்புவோம்.

மற்றொருவர் சசிகுமார் அவர்கள், இவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநாட்டில் ‘ஊடகச்சுதந்திரமும், ஊடக்த்திலுருந்து சுதந்திரமும்’ என்ற உரையாற்ரியிருக்கிறார். அவர் ஆற்றிய உரையின் தமிழாக்கத்தை ஏற்கனவே குமரேசன் என்பவர் அவரின் வலைப்பூவில் எழுதியுள்ளார். அதன் இணைப்பு கீழே http://asakmanju.blogspot.com/2011/11/blog-post_05.html . நீதிபதி பங்குகொண்ட நிகழ்ச்சியின் காணொளி இங்கே .http://ibnlive.in.com/news/media-deliberately-dividing-people-pci-chief/197593-3.html .

சனி, 5 நவம்பர், 2011

கு.சி.பா.வின் சங்கம்.......

ஒரு புத்தகத்தை வாசித்தால் அதுபற்றி நிறைகுறைகள் தெரியப்படுத்த வேண்டியது வாசகர்களின் கடமை, அது மற்ற வாசகர்களின் கவனத்திற்கும் ஆசிரியர், பதிப்பகத்தார் கவனத்திற்கு செல்கிறது. நான் நீண்டநாட்களுக்கு முன்பு வாசித்த தோழர்.கு.சின்னப்பபாரதி எழுதிய‘சங்கம்’ நாவல் வாச்சாத்தி வழக்கின் தீர்ப்பு வந்தவுடன் மறுவாசிப்பு செய்தேன். அரசின் காவல்துறையும் வனத்துறையும் வாச்சாத்தியில் மலைவாழ் மக்களுக்கு செய்த கொடுமைகளை தமிழகத்தின் பெரிய அரசியல் கட்சிகள் பெரியார் வழியில் வந்தவர்கள் எல்லாம் வேடிக்கை பார்த்தவேளையில், அந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவும் அவர்களை நிமிர்ந்து நிற்கச்செய்த ஒரே இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே. அந்த வகையில் ‘சங்கம்’ நாவல் கொல்லிமலைப் பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் சமவெளி மனிதர்களாலும் அரசு நிர்வாகத்தின் வனத்துறை, காவல்துறை போன்றோர்களாலும் வஞ்சிக்கப்பட்டதை எதிர்த்து அந்த அம்மக்கள் தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக போராட்ட களத்தில் நிற்பது தான் இந்த நாவலின் கரு. இங்கேயும் அந்த மக்களுக்கு பிரதிபலன் எதிர்பராது நிற்பது கம்யூனிஸ்ட்கள் தான். அதர்மம் தலை தூக்குகிற போது தர்மத்தை காக்க கடவுள் அவதாரம் எடுப்பார் என்கிறார்கள். இதுவரை எந்த கடவுளும் அதர்மத்தை எதிர்த்து தோன்றவில்லை, அல்லது இதெல்லாம் அதர்மம் இல்லையோ?

இந்தியாவின் எந்தப்பகுதியிலும் காடுகள்,வனங்கள் அங்கு வசிக்கும் மலைவாழ் மக்களாலும் பழங்குடிகளாலும் அழிக்கப்படவேயில்லை. இந்த நாட்டின் உண்மையான பூர்வகுடிகள் என்றால் அவர்கள் பழங்குடியினர்தான். நாடு சுதந்திரம் அடைந்தது என்பதன் வாசனையை அவர்கள் இன்னும் அறியவேயில்லை. சுதந்திரம் என்பதே வெள்ளைக்காரர்களிடமிருந்து இந்திய பெருமுதலாளிகள் கைகளில் மாறியிருக்கிறது. அப்படி ஏற்பட்ட அந்த மாற்றத்தை சமவெளி மனிதர்கள் அனுபவிக்கிறார்கள். பணம் வசதி படைத்தவனுக்கு அதிக சுதந்திரம் இருக்கிறது. அரசு நிர்வாகமும் வசதி படைத்தவர்களுக்குத்தான் சேவை செய்கிறது, பெரும்பாலான அரசியல் இயக்கங்களும் அதே வழியில்தான் செல்கின்றனர்.

மலைவாழ் மக்கள் இயற்கையோடு வாழ்கிறார்கள், அந்த கானகத்தில் சிறிய பரப்பளவில் சாகுபடி செய்கிறார்கள், விளைந்த பொருட்களை சமவெளியில் சென்று சந்தையில் விற்கிறார்கள். ஒரு பக்கம் அரசு நிர்வாகத்தின் வனத்துறை அதிகாரத்தின் மூலம் அம்மக்களை சாகுபடி செய்கிற நிலத்தை விட்டு விரட்டுகிறது, அதை கெஞ்சல் மூலமாகவும் அதிகாரிகளுக்கு தெண்டணிட்டும் வாழ்க்கை நடத்துகிறார்கள். மறுபுறம் சாகுபடியால் விழைந்த பொருட்களை சந்தையில் வியாபாரிகள் அவர்களிடம் கொள்ளையடிக்கிறார்கள். கடைசியில் கந்துவட்டியில் சிக்குகிறார்கள். வட்டியோ அநியாய வட்டி, அரசு மலைவாழ் மக்களுக்கு கொடுக்கிற சிறிய மானியங்களையும் அதிகாரிகள் ஏப்பம் விடுகிறார்கள். அந்த மக்கள் இதுதான் வாழ்க்கை, மாற்றமேயில்லை நம் முன்னொர் காலத்திலும் இப்படித்தான் வாழ்ந்தார்கள் விதி அவ்வளவுதான் என்று சகித்துக்கொள்கிறார்கள். ஆதிமனிதன் தன்னுடைய நேரத்தை உணவு சேகரிப்பதிலேயெ செலவிட்டான், இவர்களுக்கும் அப்படித்தான். நாவல் முழுக்க சொலவடைகள் அந்த கஷ்டங்களிலிருந்து வருகிறது. நாவலின் ஆசிரியர் அந்த மக்கள் மொழியையும் அவர்கள் வாழ்க்கைமுறைகளை கற்பதற்காக அங்கு அதிககாலம் தங்கியிருந்து இந்த நாவலை எழுதிமுடிக்க ஐந்துஆண்டுகாலம் எடுத்துள்ளார்.

கானகத்தில் அந்த மக்கள் அவர்களுக்குள்ளேயெ கட்டுப்பாடுகள் விதித்துக்கொண்டு வாழ்கிறார்கள், ஆனால் ஒரு கந்துக்காரன் கொடுத்தபணம் திருப்பிச்செலுத்தாதால் பணம் வாங்கிய வெள்ளையன் மனைவியை கந்துக்காரனின் கையால் கொண்டுசெல்கிறான். அதை எதிர்ப்பதற்கு அவர்களிடம் தைரியம் இல்லை. இலங்கை தேயிலை தோட்டத்திலிருந்து வந்த சீரங்கன் தொழிற்சங்கப் போராட்டத்தை அறிந்தவனாக இருக்கிறான். இந்தக் கொடுமையை ஏன் தட்டிக்கேட்கக்கூடாது என்று காவல் நிலையம் செல்கிறான்.அவனுக்கு சாமானியனுக்கு நமது காவல்துறையில் கிடைக்கவேண்டிய மரியாதையாக அடிஉதை கிடைக்கிறது. செங்கொடி ‘சங்கத்தை’ நாடுகிறான். தோழர்கள் கந்துக்காரனிடமிருந்து வெள்ளையன் மனைவியை மீட்கிறார்கள். செங்கொடி மீது மலைமக்களுக்கு நம்பிக்கை பிறக்கிறது. இளம்தலைமுறையினர் செங்கொடி உதவியுடன் மலைமக்களுக்கான சங்கத்தை கட்டுகிறார்கள்.போராடுகிறார்கள், போராட்டத்திலிருந்து அனுபவம் பெறுகிறார்கள். அதுவரை காவல்துறையைக் கண்டும் வனத்துறையைக் கண்டும் பயந்தவர்கள் இப்போது எதிர்த்து கேள்விகேட்கிறார்கள். அவர்களின் அடிப்படைத் தேவையான சந்தையை மலையிலேயெ கூட்டுகிறார்கள். வாழ்விடத்திற்காகவும், சாகுபடி நிலத்திற்காகவும் போராடுகிறார்கள். அவர்களை வழிநடத்துகிற ஒரு இயக்கம் இருப்பதால் தான் வாச்சாத்தி வழக்கு வெற்றியடைந்தது. மீண்டும் மனிதர்களாக அதிகாரத்தைக் கண்டு அஞ்சாமல் எதிர்த்து சமர் புரிகிறார்கள்.

நா கேக்குறதுக்காவ கோவுச்சுக்காதீங்க தோழருனாரே அது என்ன உத்தியோகமுங்க! என்று ஒரு மலைவாசி கேட்கிறார். “நீங்க தோழர்னு சொல்லப்படற வார்த்தையை மொதல்ல புரிஞ்சுக்க வேண்டியதுதா. அதப்பத்தி நீங்க கேட்டது நல்லதாப்போச்சு, நாம சொந்தக்காரர்ன்னு சொல்றோம். ஒருத்தர்க்கு சொந்தக்காரர்னா ஊர் ஒலகத்துல பத்தோ இருபதோ பேர்தா இருப்பாங்க. ஒருத்தர்க்கு சினேகிதகாரரோ நண்பரோன்னு சொன்னா மனசுக்கு மனசு அந்தரங்கமா பேசக்கூடியவங்க ஒண்ணு ரெண்டு பேருதா இருப்பாங்க. ஆனா தோழர்னு சொன்னா ஜாதி, மதம் நாடு கடந்து பாடுபட்டு உழச்சுச் சாப்பிடறவங்க எல்லரையும் ஒரு குடும்பமா ஒரே நலன் அடிப்படையிலெ பிணைச்சுப் பார்க்கிறதாகும். அது சொந்தத்துக்கும் நட்புக்கும் மேலான ஒரு உறவு குறிக்கும் உயர்ந்த சொல்லாகும்’

பிரதிபலன் எதிர்பாரமல் செங்கொடி இயக்கம் ஏன் அடித்தட்டு மக்களுக்காகவும் தொழிலாளர்களின் நலனுக்காவும் விவசாயிகளுக்காகவும் போராடுகிறது என்கிற கேள்வி செங்கொடி இயக்கத்தில் சேரும்போது ஒவ்வொருவருக்கும் எழுகிறது. இன்னமும் நடுத்தர மக்களிடம் அந்த ஐயம் இருக்கிறது. எல்லா அரசியல் கட்சிகளும் பதவிகிடைத்தால் காசு பார்க்கிறார்கள், ஆனால் கம்யூனிஸ்ட்கள் பிழைக்கத்தெரியாதவர்களாக இருக்கிறார்களே என்று ஆதங்கப்படுகிறார்கள். கிறிஸ்தவமதம் எளியமக்களுக்கு உணவு, உடை கல்வி என சேவை செய்கிறது, ஆனால் கம்யூனிசம் ஏன் ஏழையாய் இருக்கிறாய்? என்று அவனுக்கு போராடக்கற்றுக் கொடுக்கிறது. அம்மா, அப்பா, நீர் என்ற சொற்கள் மாதிரி உலகெங்கும் வெவ்வேறு மொழியில் உயிர்ப்புடன் பேசப்படுகிற வார்த்தை ‘தோழர்’ என்பது தான்.