வெள்ளி, 17 மே, 2013

ஊர்ப்பொங்கல்

எங்க கிராமத்தில் சித்திரைப் பொங்கல் கொண்டாடுவார்கள், அதை யாரும்கோவில் திருவிழா என்று சொல்லமாட்டார்கள், கோவில்கொடை அல்லது பொங்கல் என்றுதான் சொல்வார்கள். தமிழ்நாட்டுக்கே பொங்கல் என்றால் அது ‘தை’ பொங்கலை மட்டும் தான் குறிக்கும்.  விவசாய சமூகம் என்பதால் ‘தை’ பொங்கலையும் நன்றாக கொண்டாடுவார்கள். அந்த நாளில் விளையாட்டு போட்டிகள் சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் என்று எல்லோரையும் மகிழ்விக்கும் விதமாக நடைபெற்றன, சுமார் இருபது ஆ|ண்டுகளுக்கு முன்பு இளைஞர்கள் விளையாடிய கபடிப்போட்டியில்  ‘கபடி பாடி’ வந்தவரை எதிர் அணியினர் பிடிக்கும்போது கால்முறிவு ஏற்பட்டதால் அதோடு விளையாட்டு நின்றுபோனது, அதற்கு அப்புறம் விவசாயிகள் யாவரும் டிவி பெட்டி முன்னாடி அமர்ந்து சினிமா நடிக நடிகைகளின் பொங்கல் கொண்டாட்டத்தை காண ஆரம்பித்துவிட்டார்கள்.

இப்ப நான் சொல்றது சித்திரைப் பொங்கல்,அது எங்கள் ஊரில் இருக்கிற எல்லா சாமிக்கும் விழா எடுக்குறது. எல்லா சாமீன்னு சொன்னா அது எல்லா சாமியில்ல.  ஊர்ப்பொங்கல் என்று சொன்னால் அது சேரியை சேர்க்காத பொங்கல், சாமிகளும் அப்படித்தான். விநாயகர், மாரியாத்தா, முனீஸ்வரன், அய்யனார் என்று ஒவ்வொரு சாமியையும் பூசை போட்டு விவசாய விளைச்சல், ஊர் அமைதி என்று நன்றி செலுத்துவார்கள். அப்படி ஒரு இருபது வருசத்துக்கு முன்னாடி நடந்த பொங்கலைப்பற்றிதான் சொல்றேன்.

என்ன ரெண்டு மூனு வருசமா மழை தண்ணி இல்லாம விளைச்சல் மோசமா இருந்திச்சு, இந்த வருசம் அந்த முனீஸ்வரன் கருணையில நல்ல விளைச்சல் அதனால பொங்கல் போட்ரவேண்டியதுதான் என்று தெருவில் பேச்சு ஆரம்பிக்கும்.

சரி இன்னும் சித்திரைக்கு 3 செவ்வாய் தான் பாக்கி அதுக்குள்ளே ஊரு கூட்டம் போட்டு முடிவெடுப்போம்.

ஊர் சக்கிலியத்தொழிலாளி ஊர் சாட்டுவார், நாளைக்கு ஊர்க்கூட்டம் சாமியோ, அப்புறம் கூட்டத்துல பொங்கல் சித்திரையிலயா, வைகாசியிலயா எவ்வளவு வரி, எந்த மேளத்தை கூப்பிடுறது, யாரு சாமியாடுறது, என்னன்ன சினிமா, கச்சேரி என்று ஒரு குழு அமைப்பார்கள். அவங்கதான் மேளக்காரங்க, ரேடியோசெட்டு, சினிமா, வரகணி ஆட்டம், வில்லுப்பாட்டு என்று அட்வான்ஸ் கொடுத்துவிட்டு வருவார்கள்.

அப்புறம் ஒரு குழு வரிவசூலில் இறங்குவார்கள், தலக்கட்டு வரி என்பார்கள், அரைத் தலைகட்டு வரியும் உண்டு, கணவனை இழந்தவர்கள், பிள்ளைகள் இல்லாத வயதானவர்களுக்கு பாதிவரி. வீடுவீடா வசூலிப்பார்கள், சிலர் நாளைக்கு வாய்யா, சிலர் எனக்கு அந்த புஞ்சயில பொலி (எல்லை)த்தகராறு இருக்கு, ஊர்க்காரங்க யாருமே பேசல அதனால் நான் வரி கொடுக்கமாட்டேன் என்பார்கள். நகரங்களில் அப்படி யாரும் வரிவசூல் செய்துவிடமுடியாது அது அரசாங்கத்துக்கு மட்டுமே உரிமையுள்ளது, அதனால் கோவில் விசேசங்களில் நனகொடை என்ற பெயரில் எவ்வளவு கொடுக்கிறார்களோ அதை வாங்கிக்கொள்வார்கள். கிராமத்தில் வரிஎன்பது கொடுத்தாகவேண்டும் அதுக்கு ஊர்க்கட்டுப்பாடு என்று பெயர், நாளைக்கு நல்லது கெட்டது என்றால் யாரும் பங்கேற்கமாட்டார்கள் என்று எல்லோரும் கொடுத்துவிடுவார்கள். சிலர் பிடிவாதம் செய்வார்கள்.

பொங்கல் நெருங்கிவர சொந்தங்களை அழைப்பார்கள், எங்களுக்கெல்லாம் அப்பதான் புத்தாடை கிடைக்கும், தீபாவளி, தைப்பொங்கல், பிறந்தநாள் இதுக்கெல்லாம் புத்தாடையெல்லாம் கிடையாது. ஊர்ப்பொங்கலுக்கு மட்டும்தான், மற்றபடி பள்ளிச்சீருடை உண்டு. துணியெடுக்க பெரியவர்கள் தான் போவார்கள், இப்போது உனக்கு என்னமாதிரி டிரஸ் வேண்டும் என்பதெல்லாம் கிடையாது, ரெடிமேட் சட்டை, டிரவுசர் கிடையாது. சட்டைத்துணி, டிரவுசர் துணி கிழிப்பார்கள் நாளுபேர் இருந்தா ஒரே டிசைன் சட்டைதான். அப்புறம் அப்பாவுக்கு வேட்டி சட்டை, துண்டு அம்மாவுக்கு சீல. சட்டை தைக்க அங்க ஒரு பேமசான டெய்லர் கடம்பூர்ல இருப்பாரு, அவருகிட்ட தவமா கிடந்தத்தான் துணி சட்டையா கிடைக்கும்.

ஊரை இணைக்கும் ஒரே சாலை அதுவும் செம்மண் ரோடாக குண்டும் குழியுமா இருக்கும், பேருந்து வசதி அப்பொதான் புதுசா வந்தது ஒரு நாளக்கி இரண்டுவாட்டி கயத்தாரிலிருந்து வரும்.  பெரும்பாலும் அதை நம்பமுடியாது பஞ்சர், பிரேக்டவுன் அல்லது சாதிக்கலவரம் வந்து பஸ் நின்னு போகலாம். ரோடு சரியில்ல வரமுடியாதுன்னு சொல்வாங்க அத ஊர்க்காரங்க சரிபண்ணனும், வைக்கோல்பிரியில் வேப்பிலை சொருகி தோரணம் தெருவெல்லாம் கட்டுவார்கள். மாட்டு வண்டிகளில் ஓடை மணலைசுமந்து விரிப்பார்கள்.  பொங்கல் திங்களன்று தொடங்கும் ஆனால் முந்திய நாளான ஞாயிரன்றே ரேடீயோ எனப்படுகிற குழாய்களை தெருவெங்கும் லைட் போஸ்டில் கட்டுவார்கள். சாமியாடிகள் அப்போ ரெண்டுபேர் ஒருத்தர் வைரசாமி, இன்னொருவர் முனீஸ்வரனுக்கு ஆடுவார். திங்களன்று நடக்கின்ற பிள்ளையார் கோவில் பூசைக்கு வில்லுப்பாட்டு கச்சேரி நடக்கும்.

செவ்வாய் இரவன்று மாரியம்மன்கோவிலில் சாமியாட்டம் தொடங்கும், சாமி அருள் வரவில்லையென்றால் மேளக்காரனுக்கு அடிவேற. அந்த மேள அடிக்க ஆரம்பிக்கும் போது நிறைய பெண்கள் ஆடுவார்கள், ஆனால் ரியல் சாமி ஆட ஆரம்பித்தவுடன் இவர்களை சாட்டையாக் அடிப்பார். சில சமயம் மேளம் எவ்வளவு அடித்தாலும் சாமி அருள்வந்து ஆடமாட்டார், மேளக்காரங்களுக்கு கைவலித்துவிடும். ஊருக்கு கிழக்கே தொலைக்காட்டில் ஒரு ஊருணி இருக்கிறது அங்கெ பெரிய வேப்பமரம் அந்த மரத்தில் சாமியிருக்கு என்?று சொன்னதால் ஆடுமேய்ப்பவர்கள் வேப்பமரத்தை சேதப்படுத்தாமல் வைத்திருக்கிறார்கள், அந்த மரத்திலிருந்து தான் சாமி புறப்பட்டு இங்கே வருமென்பார்கள். ஒருவழியா ஆட ஆரம்பித்தவுடன் கையில் சாட்டை கொடுத்துவிடுவார்கள், இன்னும் கொஞ்சநேரத்தில் ‘நிப்பாட்ர மேளத்த என்பார் ஏதோ அருளோ, அல்லது ஊர்க்காரர்களை எச்சரிக்கை செய்வார் அம்மாவ சரியா கவனிக்கல உங்களுக்கு தண்டனை கொடுத்துறுவா என்பாரு. ஆகட்டும் சாமி செய்யறோம் என்பார்கள், அடுத்து அக்கினி சட்டி எடுத்து  ஊரை வலம் வருவார்.

அன்றிரவும்  திரைகட்டி ஏதோ சினிமாப்படம் ஓடிக்கொண்டிருக்கும், விடியவிடிய படம் பார்ப்பார்கள். மறுநாள் புதன்கிழமை அம்மன் கோவிலுக்கு சிலர் கிடா வெட்டுவார்கள், கோழி அறுப்பார்கள் எல்லா வீட்டிலும் மதியம் கறிசோறு ரெடியாகிவிடும், மத்தியானம் மஞ்சள் நீராட்டம் நடக்கும், சாமியாடுபவருக்கு எல்லாரும் மஞ்சளைக் கலந்த நீரை ஊற்றுவார்கள். இளைஞர்கள் சிலர் தண்ணீ போட்டு ஆடுவார்கள்,  இவர்களோடு சிறுவர்கள் நாங்களும் ஆடுவோம், கீழெ தள்ளுவார்கள் அந்த வெயிலில் ஊத்துற மஞ்சத்தண்ணிக்கு ஓடி தலையை கொடுப்பார்கள். நம்ம மேல மஞ்சத்தண்ணீ விழல பெரிய அவமானப் போயிடும் அதனால வீட்டுப்பக்கம்வந்து அம்மா கொஞ்சம் ஊத்துமா என்று தலைமேல் ஊத்திக்குவோம். அப்படி மாலை 5 மணிவரை ஆடுவார்கள், களைத்து பலர் உறங்கிப்போவார்கள்,  அன்றிரவும் சினிமாவோ அல்லது வரகனி ஆட்டம் என்ற கூத்து நடக்கும். வியாழன் ஓய்வுநாள், வெள்ளியன்று இரவு முனீஸ்வரனுக்கு கொடை நடுச்சாமம் 12 மணிக்குத் தான் சாமியாடும், ஆடிக்கொண்டு தெருவழியா போவார், அன்றைக்கு நிறைய பேர் வருவார்கள், அது துடியான (அருள்மிக்க) சாமீ என்பார்கள். அந்த கோவிலுக்கு நிறைய பேர் கேட் (கிரில்) செய்து வழங்கியிருக்கிறார்கள், நகரங்களில் திருடர்களுக்கு பயந்து வீடுகளுக்குக் கூட மரக்கதவுக்கு முன்னால் ஒரு கிரில்கேட் போட்டிருப்பார்கள். ஆனால் சாமிக்கு கிரிலுக்கு பின்னாடி இன்னொரு கிரில் கேட் உண்டு.

சாமியாடுபவர் யாரையும் பார்த்து சிரிக்கமாட்டார், சிரித்தால் அவர் மனுசனாயிடுவார். ஒருத்தர் அப்படி வைரசாமியாய் ஆடுனாரு, அவர் ஆடும்போது கூட்டத்தில் வெளியூர்க் காரர்களைப் பார்த்த முறை வைத்து மாமா வாங்க, அண்ணே வாங்க என்று சொல்லி ஆடுவார். சாமியாடுபவர் காவு கொடுப்பதற்காக முட்டை வாங்கிக்கொண்டு ஓடுவார், வானத்தைப் பார்த்து வீசிவிட்டு வாங்கிட்டான், வாங்கிட்டான் என்று சொல்லுவார், யார் வாங்குனா என்றால் அது துஷ்ட தெய்வங்கள் வந்து வாங்கிக்கொண்டதாம். நாங்கள் மறுநாள் காலை அவர் வீசுன இடத்துல போய் பார்ப்போம் ஒண்ணும் இருக்காது. சாமியாடும்போது தலைநீட்றவங்களுக்கு திருநீர் பூசுவார். காவுகொடுக்கும் போது யாரும் குறுக்கே போயிரக்கூடாது என்பது விதி.

மறுநாள் காலை முனீஸ்வரனுக்கு கிடாவெட்டு நடக்கும்,அன்றோடு பொங்கல் முடிந்துவிடும் ஆனால் அதற்கடுத்து ரெண்டு நாள் பூரா தூக்கம்தான், தூங்கும்போது அந்த மேளச்சத்தம் கேட்கும், எழுந்து உடனே தெருவைப் பார்த்து போனா மேளக்காரங்க யாரும் இருக்கமாட்டார்கள், அதை அரிச்சல் என்பார்கள். அதற்கடுத்து அந்த கோவிலை பூசாரியைத் தவிற ஒரு வருடத்துக்கு யாரும் சீண்டமாட்டார்கள். மாணவர்கள் யாராவது பரீட்சையில் பாஸானால் பிள்ளையாருக்கு வெடலை (எறி தேங்கய்) போடுவார்கள். பரீட்சைக்கு முன்பு காலையில் குளித்துவிட்டு சில வாரங்களுக்கு அருள் வேண்டி கோவிலை சுற்றுவோம் நல்ல மார்க் வாங்கவேண்டுமென்பதற்காக.

வியாழன், 9 மே, 2013

கடவுள் இருப்பு.....

குழந்தைகளுக்கு ஒரு பழக்கம் உண்டு அது ‘போலச்செய்தல்’ அப்படி சின்னக்குழந்தையில ஆரம்பிக்கிற பழக்கம் சாவுறவரைக்கும் தொடருவதுல ஒண்ணு சாமி கும்புடுறது, அது அல்லாவா யிருக்கலாம், இயேசுவாகவோ கிருஷ்ணனாகவோ அல்லது 30 கோடி சாமிகளில் ஒரு சாமியாகவும் இருக்கலாம்.  ஏன் சாமி கும்புடுற? எங்க வீட்ல அப்பா, தாத்தா கும்பிட்டாரு அவங்க சொன்னாங்க நம்மை மீறிய சக்தி ஒண்ணு இருக்கு அதுக்கு நாம கட்டுப்படனும் அதான். குழந்தைங்க சாமி கும்புடுறதை பெரியங்க ஆகா நம்ம குழந்தை என்னமா! விழுந்து கும்புடுறான், பக்தியா இருக்கான் ந்னு பெருமைபடுறதை பாத்துட்டு அவங்கள இன்னும் கொஞ்சம் சந்தோஷப்படுத்தனும் நல்லபேரு வாங்கனும்னு ஆரம்பிக்கும். என்னோட சிறுவயதுல நான் ரெம்ப கடவுள் பக்தியா இருப்பேன், மார்கழி மாசம் பூராவும் காலையில பஜனைக்கு பச்சதண்ணீல குளிச்சிட்டு தெருவழியா கோஷ்டியோட பாடுவேன் நிறைய பாட்டெல்லாம் மனப்பாடம், திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி அர்த்தம் தெரியாம மனப்பாடமா சொல்லுவேன்.  கிராமத்துல வைணவம் என்கிறது ஒரு தனி மதம்! அதை மரியாதையாகவோ அல்லது வியப்பாகவோ அல்லது உயர்வாகவோ பார்ப்பார்கள். என்னொட அண்ணனுக்கு இந்த பழக்கம் சுத்தமா கிடையாது பஜனை, கோவிலு இதை கிண்டல் பண்ணுவான் அதனால வீட்டு பெரியவங்களுக்கு அவனைவிட என்னைய பிடிக்கும். ஆனா இப்ப நிலமை தலைகீழாப்போச்சு. அவன் மெட்ராஸ் போனதுலருந்தே மாறிட்டான், கோயிலுக்கு வரமாட்டான் பெரியார் கட்சியில சேர்ந்திட்டான் இப்படிதான் வீட்டுல முடிவு பண்ணீட்டாங்க! என்னோட பெரியம்மா போனவருச லீவுல சொன்னாங்க, அவனுக்கு நேரம் சரியில்லை அவனை அப்படி (நாஸ்திகமா) பேசவைக்குது, கொஞ்ச நாளானா மாறிடுவான்னு சொன்னாங்க.. நல்லவேளை பேய்பிடிச்சிருக்குன்னு வேப்பிலை அடிக்கல.

இந்திய விடுதலைப்போரில் பிரிட்டிஷ் பாராளுமன்றத்துல மூனுபேரு சேர்ந்து குண்டு வீசுனாங்க   அந்த குண்டு யாரையும் கொல்லறதுக்கு இல்ல, ஏகதிபத்தியத்துக்கு ஒரு எச்சரிக்கை செய்றதுக்கு அதுல முக்கியமானவர் பகத்சிங் அவருக்கு சோஷலிசத்தில் நம்பிக்கை , அதே சமயம் கடவுள்நம்பிக்கை கிடையாது, நான் ஏன் நாத்திகனானேன்? என்ற புத்தகம் எழுதியிருக்கிறாரு. அந்த புத்தகம் அவர் சிறையில் தூக்குத்தண்டனை கைதியா இருக்கும்போது எழுதுனது.. அதுல அவர் கடவுள் ஏன் மனுசங்களை நல்லபுத்தியோட படைக்கக்கூடாதுன்னு கேள்வி வைக்கிறாறு.. அந்த செய்தியை பேஸ்புக்ல வந்தது, நானும் அதை பிரச்சாரம் பண்ணுனேன்!  அதுக்காகநேத்து என்னொட நண்பர் ஒருத்தர், ஏன் ஹரி ஒனக்கு என்ன பிரச்சனை??? கேட்டாரு. கடவுள் இருப்பை நாம் கேள்வி கேட்டால் நமக்கு பிரச்சனைதான். ஒரு தெய்வீக சக்தியை ஏன் நாடுறோம்? நம்மால முடியாது, அந்த வேலைக்கு நமக்கு இன்னொருத்தர் உதவி செய்யமாட்டார், அதனால கண்ணுக்கு தெரியாத ஒரு சக்திகிட்ட வேண்டுகோள் வைக்கிறோம். கடவுள் எதுக்குன்னா நம்ம தேவையை நிறைவேத்துறதுக்கு, பசங்களுக்கு பரீட்சியில பாஸாகனும் நல்ல மார்க் வாங்கனும், அப்புறம் வேலை கிடைக்கனும், அப்புறம் கல்யாணம், குழந்தை பெறக்கனும், செல்வம் சேரனும் சேர்த்த செல்வம் பாதுகாப்பா இருக்கனும் அப்புறம் என்பையன் நல்லா இருக்கனும் திரும்பவும் கோரிக்கைகள். பிரச்சனைகள் அதிகம் சந்திக்க சந்திக்க அதை தீர்க்க அரசாங்கமோ, நண்பர்களோ சமூகமோ தீர்வுகாணத போது மார்க்ஸ் சொல்றமாதிரி ‘’இதயமில்லா உலகத்தின் இதயம்தான் கடவுள்’’ .

பகுத்தறிவு என்பது மேலைநாட்டு சமாச்சாரம் மாதிரி சிலர் பேசுறாங்க, மேலை நாட்டுல பகுத்தறிவு கிரேக்கத்துல கேள்வி கேட்குற சிந்தனை ஆரம்பிச்சது. அதுக்கு முன்னாடியே இங்கே சார்வாகம், உலகாயுதம், மீமாம்சம்,சமணம் போன்றவவை கடவுள் இருப்பை கேள்வி கேட்டவை. பகுத்தறிவு சிந்தனையை புத்தர் மகாவீரர் போன்றவர்கள் ஆரம்பித்துவைத்தார்கள் அவர்களையே கடவுளாக மாற்றியது அந்தந்த மதங்கள் அது வேற விசயம். இந்த உலகம் எப்படி உருவானது? யாராவது கட்டுப்படுத்துகிறார்களா? ஜீவராசிகளில் மனிதர்கள் கட்டுப்படுத்தக்கூடியவர்களாக எப்படி மாறினார்கள்? இயற்கை சமன்பாடு? உயிர்களின் தோற்றம்? தேடுவதில் கிடைக்காத விடைகளுக்கு அது பரம்பொருள் என்றார்கள் சிலர், ஆனால் சிலர் இந்த உலகம் பொருட்களால், அணுக்களால் ஆனாது என்று பொருள்முதல்வாத சிந்தனையை வளர்த்தார்கள்.  ஆனால் சில விஞ்ஞானிகளே கடவுள் நம்பிக்கையாளராக இருக்கிறார்களே! டாக்டர்கள் நோயிலிருந்து மனித உயிரை காப்பாற்றுகிறார்கள் ஆனால் சிலநேரம் ஆண்டவன் மேல பாரத்தை போடுங்கன்னு சொல்றாரு. ஒருத்தர் ஏதாவது விபத்துல சிக்கி ஆஸ்பத்திரில சேர்த்தா.. பார்க்கவர்றவங்க ஆமா நேரம் சரியில்லை என்ன பண்றது சொல்லுவாங்க அதே நேரம் விபத்துக்கான காரணகாரியத்தை ஆராய்கிறோம். ஒரு ரயில் விபத்துக்குள்ளானால் அந்த டிரைவர் நான் என்ன பண்றது, இப்படி நடக்கனுமுன்னு எழுதியிருக்குன்னா யாரால மாத்தமுடியுமுன்னு சொன்னா நிர்வாகம் ஏத்துக்குமா? நிலப்பிரபுத்துவ சிந்தனை என்பது எல்லாம் அவன் செயல், அதிலிருந்து அறிவியல் முன்னேற்றம் கண்ட முதலாளித்துவ சிந்தனை காரண காரியங்களை ஆராய்வது. ஆனால் மனிதர்கள் அறிவியலில் ஒரு காலையும் மூடநம்பிக்கையில் ஒரு காலையும் வைத்திருக்கிறார்கள்.

கடவுள் நம்பிக்கையாளர்களுக்கும் நாஸ்திகர்களுக்கும் நடக்கும் விவாதம் முற்றுப்பெறாது, ஆனால் இந்த விவாதத்தின் வயது 2000 வருடமிருக்கலாம். அதற்கு முன்பே மனிதன் இருந்தான். தாய் தந்தையர் செய்ததை அப்படியே கேள்வி கேட்காமல் நாமும் பின்னர் நம் சந்ததியினருக்கும் அறிவுறுத்த வேண்டுமென்பது ஒருவகை மடமைதான்.

சனி, 4 மே, 2013

சாதிசமத்துவ போராட்டக்கருத்துக்கள்


தமிழ்நாட்டில் தமிழினத்திற்கான போராட்டம் முடிவடைந்து சாதிவெறி அலைந்து கொண்டிருக்கிறது, இதில் படித்தவர்கள் படிக்காதவர்கள் என்ற வித்தியாசமெல்லாம் கிடையாது. பேஸ்புக்கில்  ஒவ்வொரு சாதிக்கும் இளைஞர் சங்கம், என்ற பெயரில் முகவரிகள் உலாவுகின்றன, ஏன் டாக்டரே சாதிவெறியை சொந்த நலனுக்காக தூண்டிவிடுகிறாரே! இது சொந்த நலனா? அல்லது உழைப்பாளி மக்களை சாதீரீதீயில் கூறுபோட யாராவது ஸ்பான்சர் செய்கிறார்களா? என்பதையும் ஆராயவேண்டியுள்ளது. சாதிகள் தோன்றிய விதம் அவரவர் சாதியை மேன்மைபடுத்தி எழுதி ‘வரலாறு’ படைக்கிறார்கள். விவரம் தெரியாத வயசிலேயே இந்த சாதியெல்லாம் நமக்கு மேலே இந்த சாதியெல்லாம் நமக்குக்கீழே என்று பெற்றோர் இல்லையென்றால் அந்த சமூகம் சொல்லிவிடுகிறது. நகரத்தில் வாழ்ந்தவர்களுக்கு இது புதுசா இருக்கலாம், ஆனா நிலத்தை அடிப்படை வாழ்வாதாரமாகக் கொண்ட கிராமப்புறங்களில் பழய்ய மிச்சசொச்சங்கள் இன்னும் இருக்கிறது. ஊருக்கு வருகிற புதுமனுசன்கிட்ட எந்த வர்ணம்/சாதி கேட்காமல் மரியாதையை தேவையில்லாமல் செலவிடமாட்டார்கள் மனுஷர்கள். ஒருமையில் விளிப்பதா, அண்ணே என்பதா, சாமீ என்பதா அல்லது அப்பச்சி என்பதா ஹோட்டல் இல்லாத ஊரில் தண்ணீயை புழங்குற சொம்புல கொடுப்பதா இல்ல ஈய கிளாசில் இன்னொன்னு கூரையில் சொருகிவச்சிருக்கிற சிரட்டையில கொடுப்பதா? என்பெதெல்லாம் வர்ண்ம் தெரிஞ்சவுடன் தான்.

வெறெந்த நாட்டிலும் இல்லாத சாதிமுறை இந்தியத் துணைக்கண்டத்தில் எப்படி உருவானது?  தமிழகத்தின் சமூகவளர்ச்சியில் தொழில் பிரிவினையால் சாதிகள் தோன்றின என்பதை உவேசா புறநானூற்றின் முகவுரையில் பட்டியல் தருகிறார்.  ஆனால் தொழில் புரியும் வர்க்கங்களுக்கிடையே சமத்துவம் இல்லை. தொழில் செய்யாத சுரண்டல் வர்க்கத்தினர் தொழில் புரிபவர்களுக்கிடையே சாதி உயர்வு தாழ்வுகளைக் கற்பித்து தங்களை உயர்தோரென்றும் உழைப்பாளிகளைத் தாழ்ந்தவர்களென்றும் கருதினர், தொழில் செய்வோர் ஒன்றுபடாமல் தடுத்துவைத்திருந்தனர், உயர்ந்த சாதியர்களின் நீதிநூல்கள் இதை நிலைநாட்டின.

சாதிப்படிநிலையில் கீழுள்ள சாதிகள் தங்களுக்கு மேலே உள்ள சாதிகள் தங்களுக்கு நிகரானவர்கள் என்பதை உருவாக்க சாதிசமத்துவத்தை விளக்கும் நூல்களை எழுதினார்கள். பிராமணர்கள் சாதி அமைப்பின் உச்சியிலிருந்தாலும் அவர்கள் எல்லோரினும் மேம்பட்டவர்கள் என்பதை புராணங்களில் மிகுந்திருந்தாலும் ‘கீழ்ச்சாதியார்’ பிராமணர்களின் சிறப்பைத் தாக்குவதன் மூலம் அவர்களைவிட தாங்கள் உயர்வானவர்கள் என்பதை நிலைநாட்டினார்கள்.

வேளாளர் உயர்வைக் கூறும் நூல் ‘வருண சிந்தாமணி’ 1901ல் கனகசபைப் பிள்ளை என்பவரால் வெளியிடப்பட்டது. அதில் வேதம், உபநிசதம், புராணம் என்பது ‘ஆரியவேதம்’ திருக்குறள், சைவத்திருமுறைகள் ‘திராவிடவேதம்’. சைவசமயத்தை பின்பற்றும் சைவர், ஆரிய வேதத்தைப் பின்பற்றும் பிராமணருக்கு மேலானவர் என்று சொல்கிறது, ஆனால் நால்வருணப் பிரிவை ஏற்றுக்கொண்டு தங்களை வைசியரென்றும் மற்ற ஏவல் தொழில்முறை சாதிகளை சூத்திரர்கள் என்று சொல்லத்தயங்கவில்லை. பிற்கால சோழர்கள் காலத்தில் வலங்கை இடங்கை சாதிப்ப்ரிவினை இருந்ததாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. வலங்கை சாதியினர் நிலத்தொடர்புடையவர்களாகவும் இடங்கை சாதியினர் வணிகம் , கைத்தொழில்களோடு தொடர்புடையவர்களாகவும் இருந்தார்கள். புதுச்சேரியில் பிரெஞ்சு ஆட்சியின்போது வலங்கை, இடங்கை சாதிச்சண்டைகள் நடந்ததை அனந்தரங்கம்பிள்ளை டைரிக்குறிப்பு தெரிவிக்கிறது. வணிகம் செய்தவர் முதலிமார்கள் தெருவில் பல்லக்கில் வந்ததற்கு கவர்னருக்கு புகார்  அளித்திருக்கிறார்கள்.

வலங்கைச் சாதிகளில் நிலப்பிரபுக்கள் தலைமை பெற்றிருந்தனர், அவர்கள் நிலத்தில் உழைப்போரின் உழைப்பில் வாழ்வோர். இடங்கைச் சாதிகளில் பெருவணிகர்கள் தலைமை தாங்கினார்கள், இவர்கள் கைவினைஞர்களின் உழைப்பை சுரண்டி வாழ்பவர்கள். சமூக-அரசியல் ஆதிக்கப்போட்டியில் நிலப்பிரபுக்கள் வலங்கை சாதியினரை தங்களோடு சேர்த்துக்கொண்டு வணிகர்களைத் தாக்கியபோது, வணிகர்கள் இடங்கை சாதியினரைத் தம்பக்கம் சேர்த்துக்கொண்டார்கள். வலங்கை சாதியில் உழைப்பாளிகள் கீழ்ச்சாதியினர், இவர்கள் இடங்கைசாதியினரோடு ஒன்றுபடாமலிருக்க  உயர்சாதியினர்  சச்சரவுகளை உருவாக்கிவந்தனர்.  அந்தத்தீ இன்னும் அணையாமலிருக்க டாக்டர்கள் வேலைசெய்கிறார்கள்.

-தமிழ்நாட்டில் சாதிசமத்துவ போராட்டக்கருத்துக்கள் என்ற நூலிலிருந்து.
ஆசிரியர்- நா.வானமாமலை.