திங்கள், 31 மே, 2010

பொது விநியோகமுறையை சீரழிக்க FICCI ன் ஆலோசனை


இந்திய அரசு நெடுங்காலமாகவே பட்ஜெட்டுக்கு முன்னர் பல்வேறு தரப்பினரை அழைத்து ஆலோசனை கேட்பது வழக்கம். பல்வேறு தரப்பு என்றதும் சமூகத்தில் விவசாயிகளின் பிரதிநிதிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள்,பத்திரிக்கையாளர்கள் அல்லது சிறு தொழில் செய்வோரை அல்ல, இந்திய கார்ப்பரேட்டுகளின் பல்வேறு அமைப்புகளான FICCI, CII, மற்றும் ASSOCHAM ஆகியவற்றுடன் மட்டும் தான்.

இவர்களுடைய ஆலோசனையெல்லாம் எப்படி இருக்கும். கார்ப்பரேட்டுகளின் வளர்ச்சிக்கு அரசு என்னசெய்யவேண்டும், புதிய தொழில்களை அவர்கள் தொடங்குவதற்குப் பதிலாக லாபமீட்டும் பொதுத்துறையை தனியார்மயமாக்குவது, இந்தியாவில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது என்ற போர்வையில் எல்லாவற்றிற்கும் சுங்கம் ( நெடுஞ்சாலைகள், விமான நிலையம், பாலங்கள்) செலுத்திவிட்டு மக்களை பயன்படுத்துமாறு அரசுக்கு ஆலோசனை கூறுவது, வரிகளை அவர்களுக்கு சாதகமாக மாற்றி அமைப்பது என்று மக்களின் நலன் சாராத ஆலோசனைகள் என்பதில். அதையே அவர்கள் நலனுக்காகவே தொழில் நடத்தும் ஊடகங்கள் இந்தியா அப்படி செய்தால் வல்லரசாகும் மானியம் கொடுத்தால் நாம் அழிந்து போவோம் என பொதுப்புத்தியை விதைக்கிறார்கள்.

சமீபத்தில் FICCI ன் அக்கறை சாமானியர்களின் மேல் வந்துவிட்டது போலும். ஏற்கனவே இருக்கின்ற பொதுவிநியோக முறையை அரசு கைவிட்டுவிட்டு OUTSOURSE மூலம் மக்களுக்கு ரேசன் வழங்க வேண்டுமாம், அமெரிக்காவில் நடைமுறையில் உள்ள “FOOD STAMP” களை இந்தியாவில் வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள மக்களுக்கு அரசு வழங்க வேண்டுமாம். அவர்கள் எந்த கடைகளிலும் உணவுப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாமாம். இதில் என்ன உள்நோக்கம் அல்லது அவர்களுக்கு லாபம் இருக்கிறது என்பதை ஆராய்ந்தால் தான் விளங்கும்.



இந்திய பொதுவிநியோக முறையை மேம்படுத்தும் ஆலோசனைகளுக்குப் பதிலாக அதை தனியார் நிறுவனங்கள் அதில் லாபமீட்டும் வழிகளை ஆராயத்தொடங்கிவிட்டார்கள். பொது விநியோகம் அரசு செயல்படுத்துவதால் அதற்கு்த் தேவையான் உணவு தானியங்களை அரசு நேரடியாக விவசாயிகளிடம் அரசே கொள்முதல் செய்வதால் அவர்களுக்குக் குறைந்தபட்ச அல்லது கட்டுபடியாகிற விலைக் கிடைக்கிறது. மேலும் அரசின் கைவசம் தானிய இருப்பு உள்ளதால் சந்தையில், பதுக்கவோ, ஊகவணிகமோ செய்ய முடியாது. உலக வங்கி, பன்னாட்டுநிதி நிறுவனங்கள் அறிவுரை வழங்குவது போல அரசின் வசம் போலீஸ், நீதிமன்றம், பாராளுமன்றம், ஜெயில் ஆகியவை மட்டும் இருக்கவேண்டும், மக்கள் நல அரசாங்கம் தேவையில்லை.

அரசு உண்மையாக ஜனநாயகத்தை மதிப்பதாக இருந்தால் யாருடைய ஆலோசனையை கேட்கவேண்டும் அமல்படுத்தவேண்டும். இந்தியமக்கள் தொகையில் 0.1 சதமானத்திற்கும் குறைவான எண்ணிக்கையிலுள்ள கார்ப்பரேடுகளின் ஆலோசனையையா அல்லது பெரும் பகுதி மக்களை உள்ளடக்கிய தொழிற்சங்கங்கள்,விவசாயிகளின் சங்கங்கள் ஆகியனவற்றின் ஆலோசனையையா? தேர்தலில் வாக்களித்த இந்திய தொழிலாளர்களும் பொதுமக்களும் விவசாயிகளும் குறைந்தபட்ச தேவைகளுக்காக அரசின் மன்றாடியும் போராடியும் கேட்டாலும் கிடைப்பதில்லை. சமூகத்தின் ஒருபகுதி மக்கள் மட்டும் வளர்ச்சியடைவது அதை வளர்ச்சி என்று சொல்வதற்கு பதிலாக “வீக்கம்” என்று தான் சொல்லவேண்டும். நீண்ட நாட்களாகவே இணையத்தில் ஒருவரின் பயோடேட்டா உலாவந்தது, அவர் படித்த கல்வி மட்டும் ஒரீரு பக்கங்கள் நீண்டது, அவர் வகித்த பொறுப்புகளும் அப்படியே பின்னர் அவர் யார் என்றால் சாட்சாத் பிரதமர் மன்மோகன் சிங் தான்.அவர் படித்த படிப்பிற்கும் சிந்தனைக்கும் சம்பந்தமில்லை போலிருக்கிறது. சமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் வந்த கார்ட்டூன் அமெரிக்காவிற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கும் பொருந்தும்.


courtesy:The peninsula

சனி, 22 மே, 2010

அரசியல் எனக்குப் பிடிக்கும்-3

அரசியல் எனக்குப் பிடிக்கும்- இடதும் வலதும்

ஜெர்மன் நாடு உலகுக்கு அளித்த மேதை கார்ல் மார்க்ஸ் 1848 ஆம் ஆண்டு ”கம்யூனிஸ்டு அறிக்கை” என்றொரு புத்தகத்தை அவருடைய நண்பர் ஏங்கல்ஸ்சுடன் சேர்ந்து வெளியிட்டார். அப்புத்தகம் அரசியல் பற்றி அதுவரை இருந்த கருத்துக்கள் , எண்ணங்கள், அர்த்தங்கள் அத்தனையையும் தலைகீழாகப் புரட்டிப்போட்டு விட்டது. அதுவரை ஆட்சி – அரசு – அரசாங்கம் என்று பேசி வந்தது எல்லாம் தப்பு என்பது உலகத்துக்குப் புரிந்து விட்டது. மக்கள் என்று பொதுப்படையாகப் பேசுவது தப்பு. தொழிலாளிகளும் விவசாயிகளும் ஆகிய பாட்டாளிவர்க்கம் என்பது வேறு ; இந்த பாட்டாளிகளின் உழைப்பினால் சுகமாக வாழும் முதலாளி வர்க்கம் என்பது வேறு என்பதை கார்ல் மார்க்ஸ் உலகத்துக்குப் புரியவைத்து விட்டார்.

அன்று முதல் உலகத்தில் ரெண்டே ரெண்டு அரசியல்தான் உண்டு என்பது தெளிவாகிவிட்டது.

ஒன்று : இடது சாரி அரசியல்
இரண்டு : வலது சாரி அரசியல்


நாட்டின் சொத்துக்கள் எல்லாம் பொதுவுடைமையாக இருக்க வேண்டும். சமூகத்தின் கையில் இருக்க வேண்டும் என்று சொல்வது இடதுசாரி அரசியல். பாட்டாளிகளின் ஆட்சி இது. சோசலிச அரசு இது. சோசலிசம் என்றால் சமூக உடைமை என்று பொருள். சொத்துக்கள் முதலாளிகளிடமே இருக்க வேண்டும் என்று சொல்வது வலதுசாரி அரசியல். இது தனியுடைமை ஆட்சி. சொத்துக்கள் யாரிடம் வேண்டுமானாலும் இருக்கலாம் என்று சொல்வதும் இதே அர்த்தம்தான். வலதுதான்.

அரசியல் என்றாலே ஒரு சமூகத்தின் சொத்துக்கள் அதாவது பொருளாதாரம் யார் கையில் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் தான். இப்படி இரண்டே இரண்டு அரசியல்தான் என்று முடிவாகிவிட்டால் பிறகு கட்சிகளும் ரெண்டுதானே இருக்க வேண்டும். ஒன்று பொதுவுடைமைக் கட்சி. இன்னொன்று தனிவுடைமைக் கட்சி. அவ்வளவுதானே. பின் ஏன் இத்தனை கட்சிகள்?

இப்படி அப்பாவியாக தொழிலாளிகளாகிய நாம் கேள்வி கேட்பது சரி. ஆனால் முதலாளிகள் நம்மைப்போல் அப்பாவிகள் இல்லையே. வெளிப்படையாக முதலாளி கட்சி அல்லது தனியுடைமைக் கட்சி என்று பெயர் வைத்தால் மக்கள் ஆதரவுக் கிடைக்குமா? ஆகவே பலப்பலவிதமான பெயர்களில் கட்சிகள் வைத்து அரசியல் செய்கிறார்கள். இதையெல்லாம் பார்த்தார் கார்ல் மார்க்ஸ். இத்தனை பெயர்களில் இத்தனை நூறு கட்சிகள் இருந்து என்ன செய்ய? உண்மையிலேயே தொழிலாளிகளுக்காகப் பாடுபட ஒரு கட்சி கூட இல்லையே என்று மனம் வருந்தினார். தான் எழுதியது வெறும் புத்தகமாக நின்று போய்விடக்கூடாது என்று தீர்மானித்தார் .

அவரே முன்நின்று கம்யூனிஸ்டு கட்சியைத் தொடங்கினார். கம்யூனிஸ்டு என்றால் பொதுவுடைமை என்று அர்த்தம். இப்படி வெளிப்படையாக பொதுவுடைமைக் கட்சி என்று பெயர் வைத்து அவர் ஆரம்பித்ததும் ஜரோப்பாக்கண்டம் முழுவதும் தீப்பிடித்துக் கொண்டது. தொழிலாளிகள் விழித்துக்கொண்டார்கள். ஆகா….. நாம இத்தனை நாளா முட்டாளா இருந்துட்டமே என்று புரிந்து விட்டது.

அதைத் தொடர்ந்து முதலாளிகள் எப்படி முதலாளிகள் ஆனார்கள் என்கிற கதையை கார்ல் மார்க்ஸ் புள்ளிவிவரத்தோடு ”மூலதனம்” (DAS CAPITAL) என்ற புத்தகத்தில் விலாவாரியாக எழுதிவிட்டார்.

அதைப்படித்த தொழிலாளிகள் மூலதனம் என்பது எப்படி வந்தது? லாபம் என்றால் என்ன? என்பதையெல்லாம் புரிந்து கொண்டார்கள். லாபத்தின் சூட்சுமம் வேலை நேரத்தில் தான் அடங்கியிருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டார்கள். எட்டுமணி நேரம்தான் வேலை செய்வோம் என்று முதலாளிகளுடன் போராடத் தொடங்கினர்.

அப்போதெல்லாம் தொழிலாளிகள் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் கூட வேலைசெய்து வந்தனர். முதலாளி கொடுக்கிற சம்பளத்துக்கு 4 மணி நேரம் வேலை செய்தால் போதுமானது. ஆனால், தொழிலாளி குறைந்தது எட்டு மணி நேரமாவது வேலை செய்கிறான். நாலு மணி நேரம் போக மிச்சம் தொழிலாளி வேலை செய்யும் நேரத்தில் உருவாகும் பொருள்தான் லாபம் என்ற பெயரில் முதலாளிக்குக் கிடைக்கிறது. இதைத்தான் மார்க்ஸ் உபரி உழைப்பு என்றார். பக்கம் பக்கமாக கணக்கு வழக்கெல்லாம் போட்டு மூலதனம், லாபம் என்பதெல்லாம் தொழிலாளி வர்க்கத்தை ஏமாற்ற முதலாளி வர்க்கம் காலம் காலமாகச் செய்து வரும் ஏமாற்று வேலை என்பதை கார்ல் மார்க்ஸ் தெள்ளத் தெளிவாக எழுதிவிட்டார்.

அதன் பிறகு அரசியல் என்பது முதலாளிக்கும் தொழிலாளிக்குமான பிரச்சனையாக மாறிவிட்டது. கட்சி அரசியல் எல்லாம் பின்னுக்குப் போய்விட்டது. கார்ல் மார்க்ஸ் சொன்னதை எல்லாம் தொழிலாளிகள் பூரணமாக புரிந்து கொண்டார்களா இல்லையா. எட்டு மணி நேரம்தான் உழைக்கமுடியும் என்ற குரல் ஒவ்வொரு நாட்டிலும் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டது. அதன் உச்ச கட்டம்தான் அமெரிக்க நாட்டில் 1886ஆம் ஆண்டு நடைபெற்ற தொழிலாளர் போராட்டமும் மேதினம் உருவானக் கதையும்.

அதெல்லாம் சரி, இன்னொரு கேள்வி பாக்கி இருக்கிறதே? இந்த அரசியலுக்கு இடது- வலது என்று எப்படி பேர் வந்தது? அது பெரிய கதை. உண்மையில் எப்படி நடந்ததோ தெரியாது. ஆனால் கேள்விப்பட்டவரை இதுதான் கதை;

இங்கிலாந்து நாட்டில் ஒரு ராஜா ஆட்சி செய்து வந்தாராம். மன்னராட்சி என்றால் அரசசபை என்ற ஒன்று இருக்குமல்லவா? அரசருக்கு ரெண்டு கைப்பக்கமும் மந்திரிகள் , சேனாதிபதி , பிரபுக்கள் , ராஜரிஷி , முதலாளிமார்கள் எல்லோரும் உட்கார்ந்திருப்பார்கள். அந்த அரசபைதான் நாட்டு மக்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் , யார் யார் எவ்வளவு வரி செலுத்தவேண்டும் என்பது உட்பட சகலத்தையும் தீர்மானிக்கும். நீதி, நிர்வாகம், ராணுவம், சிறைச்சாலை அத்தனைக்கும் பொறுப்பு இந்த அரசசபைதான். ஆனால் இந்த சபையில் தொழிலாளிகள், விவசாயிகள், உழைப்பாளிகளுக்கு இடம் கிடையாது.

இப்படிக் கதை போய்க்கொண்டிருக்கையில் அந்த அந்த நாட்டுத் தொழிலாளர்கள் பெரிய போராட்டம் நடத்தினார்கள். அரசியல் உரிமை வேண்டும்,நல்ல வாழ்க்கை வேண்டும் என்று பெரிய கலகம் வெடித்தது. ராஜா அரண்மனையை விட்டு வெளியே வரமுடியவில்லை. வேறு வழியேயில்லை. சரி. தொழிலாளர்களும் இனிமேல் அரச சபையில் பங்கேற்கலாம் என்று உத்தரவு போட்டுவிட்டார்.உடனே பிரபுக்கள்,மந்திரி சேனாதிபதிகளெல்லாம் எழுந்து நின்று “ராஜா……ராஜா……..ஒரு சின்ன விண்ணப்பம். நாங்களெல்லாம் சேற்றிலே உழன்று வீச்சமெடுத்த இந்தப் பஞ்சைப் பராரிகளுடன் எப்படி ஒண்ணா உட்காரமுடியும்? எங்கள் நிலைமையைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் மகாராஜா…” என்று பவ்யமாக வேண்டி நின்றனர். ராஜாவும் யோசித்தார். ஓ…. இப்படியும் ஒரு பிரச்னை இருக்கே…. சரி.. நீங்களெல்லாம் எனக்கு வலதுகைப் பக்கம் இருங்கள். தொழிலாளிகள் அப்படி எனது பீச்சாங்கைப் பக்கமாக இருந்துவிட்டுப் போகட்டும். சரிதானே என்று உத்தரவு போட்டுவிட்டாராம்.

அன்றுமுதல் வலது என்றால் முதலாளிகள், பண்ணையார்கள், பிரபுக்கள் -இடது என்றால் பாட்டாளிகள் என்று பழக்கத்துக்கு வந்துவிட்டது. காலப்போக்கில் யாரெல்லாம் தொழிலாளி, விவசாயிகளுக்காகக் குரல் கொடுக்கிறார்களோ அவர்களெல்லாம் இடதுசாரிகள் என்றும் முதலாளிகளுக்காகப் பேசுகிறவர்கள் வலதுசாரிகள் என்றும் அரசியல் உலகில் பேர் ஆகிவிட்டது.
இந்த அடிப்படையில் நாட்டில் உள்ள கட்சிகள் அத்தனையையும் வலதுசாரிக் கட்சிகள், இடதுசாரிக் கட்சிகள் என்று ரெண்டாகப் பிரித்து விடலாம். சில கட்சிகள் நாங்க ரெண்டும் கிடையாது நடு என்று சொன்னால் அது ரீல். தனியுடைமையா? பொதுவுடைமையா? ரெண்டும் சரி தான் என்று யாராவது சொன்னால் நடைமுறையில் அவர் வலது சாரியாகத்தான் இருப்பார். (இது பற்றி இன்னும் விளக்கமாக பின்னால் பார்ப்போம்)
1947ல் இந்தியா சுதந்திரம் பெற்றபோது நாலே நாலு கட்சிகள் தான் இருந்தன. ரெண்டு இடதுசாரிக் கட்சிகள். ரெண்டு வலதுசாரிக் கட்சிகள்.

ஆனால் இன்று இந்தியாவில் நிலைமை என்ன? 600-க்கும் மேற்பட்ட கட்சிகள் நம் நாட்டில் இருக்கின்றன. அவற்றில் இடதுசாரிக் கட்சிகள் நாலோ ஐந்தோ தான். இப்படி நூற்றுக்கணக்கான கட்சிகள் இருப்பதால் தொழிலாளிகளுக்கும் பிற உழைப்பாளி மக்களுக்கும் எது உண்மையிலேயே நம்ம கட்சி என்று கண்டுபிடிக்கத்தெரியாமல் எல்லாக் கட்சியிலேயும் சேர்ந்து ஏமாந்துகொண்டிருக்கிறார்கள். அல்லது ஒரு கட்சியும் வேண்டாம் எல்லாமே சாக்கடை என்று ஒதுங்கி நிற்கிறார்கள்..

அரசியல் என்பதன் அடிப்படையை-அரசு என்பது பிறந்து வளர்ந்த கதையை –எல்லோரும் தெரிந்துகொண்டால்தான் ஏமாற்றங்களிலிருந்து விடுபடமுடியும். விரக்தியில்லாமல் நமக்கான அரசியலைப் புரிந்துகொள்ளமுடியும்.

-- ச.தமிழ்ச்செல்வன்

ஞாயிறு, 16 மே, 2010

அரசியல் எனக்குப் பிடிக்கும்- 2

வித விதமாய் அரசுகள்-ஆட்சிகள்

அரசியல் என்ற சொல்லில் இரண்டு வார்த்தைகள் உள்ளன. அரசு+இயல்=அரசியல். அதாவது அரசு சம்பந்தப்பட்டது தான் அரசியல். அப்படியானால் அரசு என்றால் என்ன?

தமிழக அரசு என்கிறோம்.மத்திய அரசு என்கிறோம்.தி.மு.க அரசு அரசு-அதிமுக அரசு என்கிறோம்.அப்புறம் அரசாங்கம் என்று ஒரு வார்த்தை இருக்கிறது. தனியார் துறையா, அரசுத்துறையா என்கிற இடத்திலும் அரசு வருகிறது. ஆங்கில அகராதியில் அரசு என்பதற்கு ஸ்டேட் என்றுபோட்டிருக்கிறான். ஸ்டேட் என்றால் மாநிலம் என்று ஒரு அர்த்தம் வேறு போட்டிருக்கிறான்.அந்த ஸ்டேட் வேறு இந்த ஸ்டேட் வேறா?

அட, எதைத்தானய்யா அரசு என்கிறோம்?

இதே கேள்வியை கொஞ்சம் மாற்றி போட்டு எதையெல்லாம் அரசு என்கிறோம்? என்று கேட்டால் மள மளவென்று பதி வரும்.

கலெக்டர் ஆபீஸ், தாலுகா ஆபீஸ், பஞ்சாயத்து யூனியன், போலீஸ், ஜெயில், கோர்ட், போஸ்ட் ஆபீஸ், ராணுவம், சட்டமன்றம், பாராளுமன்றம், அமைச்சர்கள், ஆளும்கட்சி-எதிர்கட்சி, ஏராளமான அரசுத்துறைகள், அரசு நிறுவனங்கள் (அரசு சாராயக்கடை உட்பட.

இப்படி அரசு என்ற வார்த்தையைக் கேட்டதும் நமக்கு இத்தனையும் நினைவுக்கு வருகிறது. களா புளா என்று மேலே உள்ள எல்லாத்தையும் ஒரு ஒழுங்குபடுத்தி வரிசைப்படுத்தினால் கீழே உள்ள நான்கு பிரிவுகளில் அடங்கி விடும்.

இப்படி இந்த நான்கும் சேர்ந்ததுதான் அரசு. இந்த அரசைப் பற்றியதுதான் அரசியல். ஆனால் நாம் இந்த நான்கில் ஒரே ஒரு பிரிவான சட்டமன்றம் / பாராளுமன்றம் மற்றும் அதில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை யார் போய் உட்கார்வது என்பதுதான் அரசியல் என்று நம்பிக்கொண்டு குழம்பிக் கிடக்கிறோம். முதல் மூன்று பிரிவுகளான நிர்வாகம், இராணுவம்,போலீஸ்,சிறைச்சாலை, நீதி இவைதான் நிரந்தரமாக இருக்கின்றன.இவை இல்லாமல் அரசு ஏது?

பல நாடுகளில் சட்டமன்றம் பாராளுமன்றம் இல்லாமலே கூட அரசு என்பது இருக்கிறது.ரொம்ப தூரம் போக வேண்டாம் நமது அண்டை நாடான பாகிஸ்தானைப் பாருங்கள். கொஞ்சநாள் சட்டமன்றம் தேர்தல் எல்லாம் இருக்கும் பிறகு கொஞ்ச நாளில் இதெல்லாம் இல்லாதநிலை இருக்கும்.ஆனால் எப்போதும் அரசு இருந்து கொண்டுதான் இருக்கும்.இந்த அரசை நாம் தேர்ந்தெடுப்பதில்லை அது இருந்து கொண்டே அல்லவா இருக்கிறது. நீதி,நிர்வாகம், இராணுவம்,போலீஸ் இதையெல்லாம் நாம் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுப்பதில்லை ஆகவே,நமது விருப்பம்,தேர்வுகளுக்கு அப்பால் கல்லாக நின்று நம்மீது இடையறாது ஆட்சி செலுத்திக்கொண்டே இருக்கிறது அரசு. கீழே பட்டியலிட்டது போல ஆட்சிகளில் பல ரகம் உண்டு.ஆனால் அரசு ஒன்று தான்.

1.ராணுவ ஆட்சி; ஒரு இராணுவ அதிகாரியே அதிபராக இருப்பார். அமைச்சரவை இருக்கலாம்; இல்லாமலும் போகலாம். அதை அதிபரே நியமிப்பார் அல்லது அதற்கு மட்டும் தேர்தல் நடக்கலாம் (பாகிஸ்தான்,மியான்மர் மற்றும் பல தென் அமெரிக்க நாடுகளில் இருப்பது).

2.முடியாட்சி: மன்னராட்சி முறை – ஜோர்டானிலும் பல அரபு நாடுகளிலும் இருப்பது.அரபு மன்னர்கள் எமிர் என அழைக்கப்படுவர் – அந்நாடு எமிரேட் என அழைக்கப்படும்.

3.சர்வாதிகார ஆட்சி: ஒரு தனி நபர் சர்வ அதிகாரம் படைத்தவராக இருப்பார்.அவர் இட்டதுதான் சட்டம்.சென்ற நூற்றாண்டில் பல தென் அமெரிக்க நாடுகளில் இந்த ஆட்சிமுறை இருந்தது.

உதாரணமாக, சிலி நாட்டில்-ஜெனரல் அகஸ்டோ பினோசெட் அர்ஜென்டினாவில் 1. ஜூவான் மானுவெல் டி-ரோசஸ் 2. ஜூவான் பெரோன், மெக்சிகொவில்- அந்தோனியோ-லொபெஸ்-டி-சண்டா அன்னா

4. பாசிஸ்ட் ஆட்சி: நாட்டு மக்களை ஒருபோலி தேசிய உணர்வில் அமிழ்த்தி வைத்து-பிற தேசிய இனங்களை அழித்தொழிப்பது- தனி நபரோ ஒரு குழுவோ இப்பணியைத் தலைமை தாங்கும்.

ஜெர்மனியில் – ஹிட்லர் (1933-1945)
இத்தாலியில் – முசோலினி (1922-1943)
ஸ்பெயினில் – பிரெடெரிக்கொ பிராங்கோ (1939-1975)

இந்தியாவில் இப்போது பாஜக தலைமையில் வளர்ந்து வரும் இந்துத்வா. குஜராத்தில் முஸ்லீம் மக்களைக் கொன்று குவித்து இந்தியாவுக்கே முன்மாதிரியாக ஒரு சோதனை செய்துள்ளதாகக் கூறுகிறது. நாடு முழுவதும் சக்திமிக்க ஒரு கட்சியாக பாஜக ஆட்சிக்கு வருமானால் அது பாசிஸ்ட் ஆட்சியாகவே இருக்கும் என்று வரலாற்றாளார்களும் அரசியல் அறிஞர்களும் கணிக்கின்றனர்.

5. காலனி ஆட்சி: எங்கோ இருக்கும் ஒரு நாடு வேறு எங்கோ இருக்கும் பிற நாடுகளை அடிமைப்படுத்தி ஆள்வது. இந்தியாவை பிரிட்டன் ஆண்டது போல- பல ஆப்பிரிக்க நாடுகளை ஐரோப்பிய நாடுகள் ஆண்டது போல.

6.ஜனநாயக ஆட்சி: தேர்தல் மூலம் ஓட்டுப்போட்டு ஆட்சியை மக்கள் தேர்ந்தெடுப்பது. இந்தியா, பிரிட்டன், அமெரிக்க, பிரான்ஸ் மற்றும் பல நாடுகளில் இருப்பது.

இப்படி ரகரகமாக ஆட்சி முறைகள் நாட்டுக்கு நாடு வித்தியாசமாக இருக்கின்றன. இதைத்தான் அரசாங்கம் என்பார்கள். ஆனால் அரசு என்பது வேறு. அது எப்போதும் எல்லா நாடுகளிலும் ஒரேவேலையைத்தான் செய்து வந்துள்ளது; நீதி, நிர்வாகம், ராணுவம்/ போலீஸ் தான். ஒரே நாட்டிலேயே கூட மேலே சொன்ன பலவிதமான ஆட்சி முறைகளும் அமுலில் இருந்தது உண்டு. நமது இந்திய நாட்டிலும்கூட அந்தக் காலத்தில் ராஜாக்கள் ஆண்ட முடியாட்சி இருந்தது. பிறகு வெள்ளைக்காரன் ஆண்ட காலனி ஆட்சி இருந்தது.1947க்குப் பிறகு ஜனநாயக ஆட்சி வந்தது.

ஆக, கூட்டிக் கழித்துப் பார்த்தால் என்ன தெரிகிறது?ஆட்சி முறைகள் என்னவாக இருந்தாலும் அரசு என்பது நீதி, நிர்வாகம் போலீஸ்,ஜெயில், ராணுவம் இம்மூன்றும் சேர்ந்ததுதான் அரசு. நீதி என்பது வேறு. அது எல்லோருக்கும் பொதுவானது என்று மக்கள் தவறான ஒரு அரசின் ஒரு பகுதிதான் என்பது.


அப்படியாகப்பட்ட அரசு எப்போது பிறந்தது?அதன் கதை என்ன?ஆனால், கதையைச் சொல்லவிடாமல் இன்னொரு கேள்வி வந்து வழி மறிக்கிறது. இதுவரை மேலே சொல்லப்பட்ட ஆட்சி முறைகள் அத்தனையும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். சட்டையை மாற்றி மாற்றிப் போடுவதால் மக்களுக்கு அது வேறு இது வேறு போலத்தோற்றம் காட்டலாம். ஆனால் எல்லா ஆட்சிகளுமே தனியார் சொத்துக்களைப் பாதுகாக்கிற ஒரே வேலையைத்தான் காலம் காலமாகச் செய்து கொண்டிருக்கின்றன.மேலே சொன்ன எல்லாமே தனியுடமையைப் பாதுகாக்கும் ஆட்சிகள் தான். இவை எல்லாவற்றிலும் இருந்து வேறுபட்டது சோசலிச ஆட்சி அல்லது பொதுவுடமை ஆட்சி ஒன்று மட்டும் தான். அதைப்பற்றி இதுவரை ஒன்றுமே சொல்லவில்லையே ஏன்? என்கிற கேள்வி இப்போது நம்முன் நிற்கிறது.

--ச.தமிழ்ச்செல்வன்

செவ்வாய், 11 மே, 2010

அரசியல் எனக்குப் பிடிக்கும்- 1

1. நமக்கு எதுக்கு வம்பு?

“இவ்விடம் அரசியல் பேசக்கூடாது” என்று சில டீக்கடைகளிலும் முடிதிருத்தும் நிலையங்களிலும் எழுதிப்போட்டிருப்பார்கள். பொது இடங்களில் புகை பிடித்தல் தவறு என்பது போல அரசியலையும் அதில் சேர்த்து விட்டார்கள். சின்னப்பிள்ளைகள் பீடி, சிகரெட் குடிக்கக்கூடாது. அரசியலிலும் ஈடுபடக்கூடாது. எந்தத் தாயும் தகப்பனும் தன் பிள்ளைகள் அரசியலில் ஈடுபடுவதை பொதுவாக விரும்புவதில்லை. காசு பணம் சம்பாதிக்க வழி உள்ள சில கட்சிக்காரர்கள் வேண்டுமானால் பிள்ளைகளை அரசியலுக்கு அனுப்பலாம்.



பொதுவாக யாரிடம் கேட்டாலும் நமக்கு எதுக்குங்க அரசியலெல்லாம் என்று சொல்லுவார்கள். உண்டான சோலியப் பாக்கவே நமக்கு நேரம் இல்லை. இதிலே எங்கே அரசியலைப்பத்திக் கவலைப் பட?என்பார்கள். பொதுவாக நாம் என்ன நினைக்கிறோம் என்றால்,

மாணவர்கள் என்றால் படிக்கவேண்டும்
இளைஞர்கள் வேலை தேடவேண்டும்
தொழிலாளிகள் ஒழுங்காக வேலை பார்க்கவேண்டும்
விவசாயிகள் விவசாயம் செய்யவேண்டும்
ஆசிரியர்கள் பாடம் நடத்தவேண்டும்
கண்டக்டர் விசில் கொடுக்கவேண்டும்
டிரைவர் வண்டி ஓட்டவேண்டும்
பெண்கள் சோறு பொங்கவேண்டும்


யாரும் அரசியலுக்குப் போய்விடக்கூடாது.அது நம்ம வேலை இல்லை.ஆனால் தேர்தல் வந்தால் மட்டும் ஒரு ரெண்டு மாசத்துக்கு அவன் அப்படி இவன் இப்படி அவ என்ன கிழிச்சா என்று உற்சாகமாகப் பேசுவோம். பிறகு அஞ்சு வருசத்துக்கு எவன் எக்கேடு கெட்டுப் போனால் எனக்கென்ன என்று இருந்து விடுவது. கேட்டால்,அரசியலே சாக்கடை சார்…என்பது.இது ஒரு ரகம்.

இன்னொரு பக்கம்-யாராவது கமுக்கமாகச் சில காரியங்களைச் செய்தால் “ஏ…அவன் பயங்கர பாலிக்ட்டிக்ஸ் பண்றாம்ப்பா” என்போம்.

“உங்க பாலிடிக்ஸ்லே என்னை மாட்டிவிஆதிங்க”
“நாம ஒண்ணும் இங்க பாலிடிக்ஸ் பண்ண வரலே”


என்றெல்லாம் பேசுகிறோம்.இந்த இடத்தில் அரசியல் என்றால் சதி,வஞ்சகம்,சூது என்ற அர்த்தத்தில்தான் பேசுகிறோம்.

இன்னும் ஒரு வாதம் உண்டு . “இப்பெல்லாம் என்ன சார் அரசியல் நடக்கு? கக்கன்,காமராஜ் காலம் மாதிரியா இப்ப இருக்கு? அரசியல்னாலே துட்டு அடிக்கிறதுன்னு ஆகிப்போச்சு. நல்ல தமிழ் பேசி துட்டு அடிக்கப்போறியா இல்லாட்டி கான்வெண்ட் இங்கிலீக்ஷ் பேசித் துட்டு அடிக்கப்போறியாங்கிறது தான் கேள்வி. ஆனால் கக்கன்,காமராஜர் காலத்தில் என்ன பேச்சிருந்ததென்றால் “என்ன சொல்லுங்க வெள்ளக்காரனை மாதிரி நிர்வாகம் பண்ண முடியுமா?”

இன்னொரு பக்கம் லஞ்சம், ஊழல்கூடப் பரவாயில்லை அடிதடி, வெட்டுக்குத்து,சொந்தக் கட்சிக்காரனையே போட்டுத்தள்றது-இதெல்லாம் ரொம்ப சர்வ சாதாரணமாப் போச்சு. இதுகெல்லாம் மேலே தலைவர்கள், தலைவிகள் காலில் விழுந்து கும்பிடுகிற அசிங்கம். சேச்சே…மானம் ரோஷம் உள்ளவன் அரசியலுக்குப் போவானா?

மேலே சொன்ன வாதங்களில் பொய் ஒன்றும் இல்லைதான். ஆனால், இவையே முழு உண்மையும் இல்லை. இது மட்டுமே அரசியல் என்பதும் சரி இல்லை. காலம் காலமாக-ராஜாக்கள் ஆண்ட காலம் முதல்-அரசியல் என்றால் அது அரண்மனைக்குள் நடப்பது-மந்திரிகளும் சேனாதிபதிகளும் ராஜரிஷிகளும் சகுனிச்சூதுகளும் சம்பந்தப்பட்டது என்றுதான் மக்களுக்கு அறிமுகம் ஆகியுள்ளது.அரண்மனை அரசியலை விட்டு மக்கள் வெகுதொலைவில் வைக்கப்பட்டிருந்தனர்.ஆண்டாண்டு காலமாக அப்படி தொலைவிலேயே இருந்த மக்கள் மனங்களில் “இது நமக்குச் சம்பந்தமில்லாதது-ராசாங்க விசயம்” என்று பதிவாகிவிட்டது.

“விரலுக்குத் தக்கன வீக்கம் வேணும்”
“ராஜா வீட்டு நாய் சிம்மாசனத்திலே ஏறுதுன்னு
வண்ணான் வீட்டு நாய் வெள்ளாவியில் ஏறலாமா?”
“உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருடந்தாக முடியுமா?”
“ஏழை சொல் அம்பலம் ஏறுமா?”


ராஜாக்கள் போய்,வெள்ளைக்காரனின் காலனி ஆட்சி வந்து அதுவும் போய் மக்களாட்சி வந்து 57 வருஷம் ஓடிவிட்டது. பல தலைமுறைகள் வாழ்ந்தும் முடிந்துவிட்டது.ஆனாலும் ஏழை எளிய உழைப்பாளி மக்களின் மனசில் படிந்துவிட்ட தாழ்வு மனப்பான்மை-அரசியல் நம்மோடு தொடர்புடையது அல்ல என்ற நினைப்பு இன்றளவும் நீடிக்கிறது.

ஆனால்,ஒரு முக்கியமான உண்மையை நாம் எல்லோரும் மறந்துவிடுகிறோம். சாக்கடை என்றும் மானங்கெட்டது என்றும் நாம் பேசுவது இந்த அஞ்சு வருசத்துக்கு ஒருமுறை வருகிற தேர்தல் அரசியலைத்தான்.இப்படி இந்த அரசியலை சாக்கடையாக வைத்திருப்பதன் மூலம் நல்லவர்கள்,உழைப்பாளிகள் இதைவிட்டு விலகி இருக்கும்படி செய்யப்படுகிறது. இது திட்டமிடப்பட்ட சதியாகும்.தொழிலாளிகளை, விவசாயிகளை, நடுத்தர வர்க்கத்தை- என பாடுபடும் எல்லோரையும் மேலும் மேலும் அரசியலற்றவர்களாக ஆக்குவதுதான் இதன் பின்னணியில் உள்ள உண்மையான அரசியலாகும்.

நம் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் பல முடிவுகளை எடுப்பது அரசியல் அல்லவா? அதுபற்றி நாம் அக்கறையில்லாமல் இருப்பது எப்படி சரியாகும்? உன்னை என்ன செய்யிருதுன்னு அங்க நாலு பேர் உட்கார்ந்து முடிவு செஞ்சிக்கிடு இருக்கான். நீ அதைப்பத்திக் கவலைப்படாம இருப்பியா? என்பது தான் கேள்வி.

ஆகவே அரசியல் என்பது………



--ச.தமிழ்ச்செல்வன்

வெள்ளி, 7 மே, 2010

அரசியல் எனக்குப் பிடிக்கும்- அணிந்துரை





அணிந்துரை

அரசியல் என்றால் முகம் சுளிப்பவர்கள் உண்டு. தேர்தல் வந்தால் ஓட்டு போடுவோம்; ஆனால் அரசியலில் இருந்து விலகியே நிற்போம் என்று சொல்பவர்கள் உண்டு. மாநிலத்தில், மத்திய அரசில் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு, வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது போன்ற செய்திகளை கேட்போர் பொதுவாகவே அரசியலை வெறுப்பதுண்டு. நேற்று ஒரு கட்சியில் இருந்தார்; இன்று வேறு கட்சிக்கு தாவி விட்டார்; அவர் போகாத கட்சி இல்லை என்று செய்தி வருகிற போது பொதுவாக அரசியல்வாதிகள் இப்படித்தான் என்று கருதுபவர்கள் உண்டு.

அரசியலில் இத்தகைய நிகழ்ச்சி போக்குகளை ஆதாரமாக காட்டி அரசியல் என்பது ஒரு சிறந்த தொழிலாகிவிட்டது; அதிலும் மூலதனமில்லத தொழிலாகி விட்டது ‘ என தலையங்கம் எழுதி அரசியல்வாதிகளை ஒரு சில நாளேடுகள் கடுமையாக விமர்சித்தன.

அரசியல் என்பது மக்களுக்கு சேவை செய்ய கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பு என்று கருதுவாரும் உண்டு. அரசியல் என்பது பிழைப்பு அல்ல; மாறாக அர்ப்பணிப்போடு செய்யும் உழைப்பு என்ற மன நிறைவோடு செயல்பட்டு வருபவர்களும் உண்டு. வசதியற்றவர், வசதிபடைத்தவர் என்ற பாகுபாடின்றி அனைவரது அன்றாட தேவைகளை சாதகமாகவோ பாதகமாகவோ தீர்மானிப்பது அரசு தான். குறிப்பாக ஏழை எளிய, உழைப்பாளி மக்களின் வாழ்க்கையில் குவிந்து கிடக்கும் அத்துணை பிரச்சனைகளுக்கும் அடிப்படையானது அரசு கடைபிடிக்கும் ஆட்சிக்கொள்கை தான்.

ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன, நான் உண்டு என் வேலை உண்டு; எனக்கு அரசியல் பிடிக்காது என்று ஒதுங்கி நிற்போர் ஒருவகையில் அரசின் நடவடிக்கையை ஆதரிப்பவராகிவிடுகிறார். நமது வாழ்க்கையின் சகல அம்சங்களிலும் அரசியல் இரண்டற கலந்து கிடக்கிறது. ஒருவரின் வாழ்க்கையின் ஏற்ற இறக்கத்திற்கு அரசும் காரணம் என்கிற போது அந்த அரசு பற்றி கவலைப் படாமல் இருக்க முடியுமா/ அப்படி கவலைப்படுவது தான் அரசியல்.

அரசு, அரசியல் அரசாங்கம் போன்றவற்றை எளிய நடையில் கலந்துரையாடல் பாணியில் பத்து சிறு சிறு அத்தியாயங்களில் தமிழ்செல்வன் விளக்கி இருக்கிறார். அரசைப் பற்றி விளக்குகிற போது அது எல்லோருக்கும் பொதுவானது, பாரபட்சமற்றது என்ற தோற்றம் இருப்பினும் உண்மையில் அரசு சமூகத்தில் உள்ள ஒரு சாராருக்குத்தான் சாதகமாக இருக்கிறது என்ற உண்மையை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டிய இரு மேதைகள் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் உருவாக்கிய மார்க்சிய தத்துவத்தின் அடிப்படையில் நூலாசிரியர் விளக்குகிறார்.

அரசு மட்டுமா? இயங்கிவரும் அரசியல் கட்சிகளும் ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களின் நலன்களை பாதுகாக்க பாடுபடும் அமைப்புகள்தான், அது எல்லோருக்கும் பொதுவானது அல்ல என்பதை படிப்போர் ஏற்றுக்கொள்ளும் படி விளக்கியிருக்கிறார். நிலமற்ற விவசாய கூலித் தொழிலாளி முதல் தொழிலதிபர் வரையிலும் இதற்கு இடைப்பட்ட நடுத்தரப்பகுதியினர் என நாம் வாழும் இச்சமூகம் ஒரு சமதளப் பிரதேசம் போன்றதல்ல. உழைத்து வாழ்பவர், பிறர் உழைப்பில் வாழ்பவர் என இரண்டு பகுதிகளாக, இரண்டு வர்க்கங்களாக சமூகம் பிரிந்து கிடக்கிறபோது எந்த ஒரு அரசியல் கட்சியும் எந்த அரசும் எல்லோருக்கும் பொதுவானதாக இருக்க முடியாது என்ற நுட்பமான அம்சட்தை நூலாசிரியர் தெளிவாக விள்க்கியிருக்கிறார். இதற்காக மனிதகுல வரலாற்றை சுருக்கச் சொல்லி விளங்க வைக்கிறார்.

உழைப்பாளி மக்கள் மத்தியில் அரசியல் பற்றியும் அரசு பற்றியும் எழும் பல கேள்விகளுக்கு விடையளிப்பதற்கு இச்சிறு நூல் அமைந்துள்ளது.

புதிய பாணியில் இந்நூலை எழுதியுள்ள தமிழ்செல்வன் தொழிற்சங்கப் பணியாற்றிக்கொண்டே அறிவொளி இயக்கத்தில் அர்ப்பணிப்போடு செயலாற்றினார். பரந்துபட்ட மக்களோடு நெருக்கமாக இருந்து படிப்பறியா மக்கள் மத்தியில் மத்தியில் ஆற்றிய பணியின் அனுபவத்தில் இருந்து எளிய முறையில் இந்நூலை எழுதியிருக்கிறார்.

ஜி.ராமகிருஷ்ணன்,
பாரதி புத்தகாலயம்

திங்கள், 3 மே, 2010

மக்களை அரசியலற்றவர்களாக ஆக்கும் அரசியல்

மாணவர்களிடம் நீ கல்வி முடித்தவுடன் என்ன உத்தியோகம் பார்க்கப்போகிறாய், என்றால் பொறியாளர்,மருத்துவர்,மென்பொருள் நிபுணன் அல்லது பத்திரிக்கையாளன் ஆவேன் என்பார்கள் ஒருபோதும் அரசியல்வாதியாக ஆவேன் என்று சொல்லமாட்டார்கள். அந்த அளவிற்கு நம் சமூகம் அரசியல் என்பதை மக்களிடமிருந்து ஒதுக்கிவைத்துள்ளது. இதற்குப் பின்னால் மக்களை அரசியலற்றவர்களாக ஆக்கும் அரசியல் உள்ளது.

நம் நாட்டில் மட்டுமல்ல உலகில் எந்த ஒரு மூலையிலும் வாழும் சகல மக்களின் வாழ்க்கையை தீர்மானிப்பது அரசியல் தான். நாம் மீடியாக்களின் வாயிலாக சகல செய்திகளையும் அறிந்து கொள்கிறோம், மீடியாவில் வருபவை எல்லாமே நடு நிலையான செய்திகள் என்று கூறமுடியாது, இப்போது அரசியல் கட்சி சார்பாகவும் ஊடகங்கள் வந்துவிட்டன. எந்த ஊடகமும் நடு நிலை கிடையாது. அது தான் சார்ந்துள்ள வர்க்கத்தைத் தான் பிரதிபலிக்கும். எந்த செய்தியை மக்களுக்கு தெரிவிப்பது அல்லது மறைப்பது அல்லது அந்த செய்தியின் முக்கியத்துவத்தை தடுப்பது எல்லாமே அது தீர்மானிக்கமுடியும். நாட்டு மக்களைப் பாதிக்கின்ற ஒரு மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யும் போது இங்கு நித்தியானந்தாக்கள் வந்து முதல் பக்கத்தில் ஆக்ரமித்துக்கொள்கிறார்கள். கார்கில் போரின் போது எல்லோரையும் தேசபக்தியில் ஆழ்த்திவிட்டு அரசு தவறவிட்ட உளவு விசயத்தை மறைத்துவிட்டது. இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தியின் வளர்ச்சி GDP 8% அல்லது 9% ஆனால் குறிப்பிட்ட பெரும்பணக்காரர்களின் சொத்துமட்டும் பலமடங்குகள் அதிகரித்து வருகிறது. குப்பன்,சுப்பன் முதல் டாடா,பிர்லா,அம்பானி வரை அனைவரின் வாழ்க்கையையும், வளர்ச்சியையும் தீர்மானிப்பது அரசியல் அல்லது அரசு. அரசியல் கல்வியை அல்லது விழிப்புணர்வை மக்கள் அறியவிடாமல் தடுப்பதற்காகவே நாம் காணும் மாஸ் மீடியா பெரிதும் உதவுகிறது. மானாட மயிலாட, நெடுந்தொடர்கள் மற்றும் சினிமா சார்ந்த கவர்ச்சிமய செய்திகள் நம்மை ஆக்ரமித்துவிடுகின்றன.

நம் நாட்டில் மட்டுமல்ல எல்லா நாட்டிலும் அரசியலுக்கும்,ஊடகங்களுக்கும் மற்றும் பெருமுதலாளிகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அந்த தொடர்பை விட ஊடகங்களின் உரிமையாளர்கள் பெருமுதலாளிகள் அவர்களின் கட்டுப்பாட்டில் தான் இயங்குகிறது. அரசியலும் அவர்களின் நலனுக்காகவே இயங்குகிறது. அப்படியும் திருப்தியடையாமல் அனில் அம்பானி, நவீன் ஜிண்டால், M.A.M.ராமசாமி மற்றும் விஜய் மல்லயா போன்றோர் அரசியல் கட்சிகளின் உதவியால் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் இடம் பெற்றிருக்கின்றனர். மேலும் சில அரசியல்வாதிகளே பெரும் தொழிலதிபர்களாகவும் ஆசியப் பணக்காரர்களின் வரிசையிலும் இடம் பெற்றுவிட்டனர்.இப்படி கடின உழைப்பால் மட்டுமே இவர்கள் இந்த இடத்தைப் பிடித்துவிடவில்லை, மாறாக அரசின் கொள்கைகள் மேற்கூறியவர்களின் நலன்களுக்காக அமைக்கப்படுகிறது. அப்படி இல்லையென்றால் உலகின் முதல் பத்து பணக்காரர்களின் வரிசையில் உள்ள இந்தியர்களையும், 30 சதவீதத்திற்கும் மேலான மக்கள் வறுமைக்கோட்டிலும் வாழும் இந்தியர்களையும் ஒரே நாட்டில் காண்கிறோம்.இந்தியாவில் ஒரு பக்கம் பில்லினியர்கள் வேகமாக அதிகரிப்பதும், மற்றொரு புறம் வறுமைக்கோட்டுக் கீழ் வாழும் எண்ணிக்கை அதிகரிப்பதும் நமது பொருளாதாரக் “கொள்கை” யால் ஏற்பட்டது தான், இந்த கொள்கை முடிவே இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது.

Article: 39(c) that the operation of the economic system does not result in the concentration of wealth and means of production to the common detriment

புதிய பொருளாதாரக் கொள்கைகளின் வாயிலாக இந்தியா வளர்ந்துவருகிறது என்று மன்மோகன் சிங்கும் ப.சிதம்பரமும் கூறிவருகிறார்கள் இவர்கள் கூறும் இந்தியர்கள் 5 சதவீத பணக்காரர்கள் மட்டுமே, கடந்த 20 ஆண்டுகளில் தான் இந்திய கோடீஸ்வரர்கள் பில்லினியர்களாக மாறினர். அவர்களின் எண்ணிக்கையும் வேகமாக வளர்ந்து வருகிறது. பெருவாரியான மக்களும் பஞ்சப்பராரிகளாக வைக்கப்பட்டுள்ளனர். ஆகவே எல்லாவற்றிற்கு பின்பும் அரசியல் உள்ளது என்பது தான் உண்மை.



தினமும் மக்கள் பார்க்கும் செய்திகளில் அவர்கள் விவாதிக்கும் போது அரசியல் என்றாலே சாக்கடை தான், அது காசு பணம் சம்பாதிக்கின்ற தொழில் அல்லது தேர்தல் மட்டுமே அரசியல் என்று தான் பார்க்கிறோம். மேலும் அரசியல்வாதியை குறைசொல்லாத நபரே இல்லை, ஒவ்வொருவரும் எல்லாவற்றிற்கும் அரசியல்வாதியை குறைகூறுகிறோம்,ஆனால் நாம் தவறவிட்ட அதிகாரத்தை கேள்வி கேட்கும் தன்மை இங்கு இல்லை. எல்லா அரசியல் வாதியும் ஒண்ணு தான் என்ற ரீதியில் பேசுவோம். ஆனால் மக்களுக்காக அரசியல் நடத்தும் சில இயக்கங்களை காணத்தவருகிறோம். அரசியலில் தலைமையை நோக்கி கேள்வி கேட்கும் ஜனநாயகத் தன்மை இல்லை தான். தமிழ்சினிமாவில் வரும் கதாநாயகனைப் போல் இந்த சமூகத்தை யாராவது வந்து மாற்றிவிடமாட்டார்களா என்று தான் உள்ளோமே தவிர நம்முடைய கடமை / பங்கு என்ன என்பதை நாம் செய்வதில்லை.

மனித சமுதாயத்தில் துன்ப, துயரங்களை பற்றி கவலை கொள்ளாதவர்களை மிருகங் கள் என்றார் மாமேதை மார்க்ஸ். அதையே புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் சொல்லும் பொழுது

“தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு

சம்பாத்யம் இவையுண்டு தானுண் டென்போன்

சின்னதொரு கடுகுபோல் உள்ளங் கொண்டோன்!”


என்று சீறுகிறார்.

அரசியல் என்றால் என்ன? அதில் நம்முடைய பங்கு என்ன? என்பது பற்றி எழுத்தாளரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் மாநில செயலருமான தமிழ்செல்வன் “அரசியல் எனக்குப்பிடிக்கும்” என்ற சிறு புத்தகத்தில் தெளிவாக எழுதியுள்ளார். அவர் எழுதிய புத்தகத்தை அடுத்தடுத்த இடுகையாக வெளியிட முயற்சி செய்கிறேன்.