சனி, 16 ஏப்ரல், 2011

வெட்டி வேலை...

இன்றைக்கு சும்மா இருப்பதற்கு வெட்டியாக இருக்கிறேன் என்றும் பயனற்ற வேலையை வெட்டிவேலை என்றும் சொல்கிறோம். இதேமாதிரி தேவையற்ற பேச்சுக்களை வீண்பேச்சு என்றும் ‘வெட்டிப்பேச்சு’ என்றும் சொல்கிறோம். இன்றும் கிராமப்புறங்களில் ‘வெட்டியான்’ என்கிற வேலை இருக்கிறது. கவிஞர் இன்குலாப் ஒருமுறை வெட்டிவேலையைப் பற்றிச்சொன்னார், கம்யூனிஸ்ட்களுக்கு இந்த வார்த்தை தெரியும் என்றார். பின்னர் அதைப்பற்றி படிக்கும்போதுதான் ‘வெட்டி’ என்பதற்கு வரலாறே இருக்கிறது. விஷ்டி என்ற வடமொழிச்சொல்லின் தமிழாக்கம் தான் வெட்டி. ‘விஷ்டி குடிகள்’ என்ற மக்கள் அரசனுக்கும், நிலப்பிரபுக்களுக்கும் செலுத்தும் உழைப்புமுறை என வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். வரிவிதிப்பு முறை மாதிரி கட்டாய உழைப்பு என்பதற்கு 12, 13ம் நூற்றாண்டுகால தென்னிந்திய கல்வெட்டுகளில் இந்த சொற்கள் இடம்பெற்ற்ருக்கின்றன.

இந்த கூலி கொடுக்கப்படாத கட்டாய உழைப்பு முறை சரித்திர காலத்தில் தான் இருந்ததா? என்றால் 20 நூற்றாண்டில் நம் நாடு சுதந்திரம் பெற்ற பின்பும் இருந்திருக்கிறது. ஹைதராபாத் நிஜாமின் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற ‘தெலுங்கானா போராட்டம்’ குறித்த நூல்களில் வெட்டிவேலை முறைக்கு எதிரான போராட்டத்தை ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சிகள் நடத்தி அந்த முறையை ஒழித்தார்கள். நிஜானின் ஆட்சியில் சிறுவிவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் நிலப்பிரபுக்களுக்கு ‘வெட்டிவேலை’ என்ற இலவசப்பணியை செய்யுமாறு கட்டாயப்படுத்தப் பட்டனர். இதுமட்டுமல்லாமல் நிலப்பிரபுகளின் வீட்டில் விவசாயத்தொழிலாளர்கள் வீட்டுப் பெண்கள் ‘ அடிமைப் பெண்களாகவும்’ வேலை செய்ய கட்டாயப்படுத்தப் பட்டனர். அவர்கள் நிலப்பிரபுக்களுக்கு ‘வைப்பாட்டிகளாவும்’ ஆக்கப்பட்டனர். நிலப்பிரபுவின் பெண்ணிரற்கு திருமணம் நடந்தால் அடிமைப்பெண்களை மாப்பிள்ளை வீடிற்கு சீதனமாக அளித்துள்ளனர்.

இந்த நிலப்பிரபுத்துவ கொடுமைக்கெதிராக ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சிகள் வெட்டிவேலை முறை ஒழிக்கவேண்டும், நிலவரியைக் குறைக்கவேண்டும், குத்தகைதாரகளை வெளியேற்றக்கூடாது என்று போராட்டம் நடத்தி தான் இந்த ‘வெட்டிவேலை’ முறை ஒழிக்கப்பட்டது. கீழ்த்தஞ்சையிலும் நிலப்பிரபுக்கள் விவசாயித்தொழிலாளர்களை ஈவு இரக்கமின்றி சாணிப்பால் கொடுத்தும் சவுக்கால் அடித்தால் செய்த கொடுமையை ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் இயக்கம் தான் போராடியது. எழுத்தாளர் பிரபஞ்சனின் வார்த்தைகளில் சொல்வதானால் இன்றைக்கு இருக்கிற கட்சிகள் பிறப்பதற்கு முன்னால், விஜயகாந்த் பிறப்பதர்கு முன்னால், சரத்குமார் பிறப்பதற்கு முன்னால், எம்ஜிஆர் அப்போதுதான் பவுடர் பூசுவதற்கு முன்னாலேயெ கம்யூனிஸ்ட் கட்சி மனிதனை மனிதனாக நடத்துவதற்குப் போராடியது.

கருத்துகள் இல்லை: