வியாழன், 28 ஜனவரி, 2016

ஆண்டர்சன் கதைகள்

ஆண்டர்சன் கதைகள்
நேற்று இந்த நூலிலிருந்து ஒரே ஒரு கதை வாசித்தேன், மகாராஜாவின் புத்தாடை. வெகுநாட்களுக்கு முன்னால் ஒரு ஊரில் ராஜா இருந்தார், அவருக்கு புதுபுது ஆடைகள் அணிவதில் மிகவும் பிரியம். தினமும் மூன்று நான்கு ஆடைகளை மாற்றிக்கொள்வார். அமைச்சரவை நடந்துகொண்டிருக்கும் போதும் கண்ணாடி முன்பு நின்று தன்னை அழகு பார்த்துக்கொண்டிருப்பார். (கதை வாசிப்பவர்களுக்கு மோடியின் நினைவு வந்தால் நான் பொறுப்பல்ல.. அதை ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்பே மறைந்த ஆண்டர்சன் தான் பொறுப்பு ) அதற்காக எண்ணற்ற ஆடை வடிவமைப்பாளர்களை கைவசம் வைத்திருந்தார். அந்த காலத்தில் செல்பி வேறு இல்லை, அதனால் வலைத்தளத்தில் பகிரமுடியாமல் போனது சோகம்தான்.
அமைச்சர்களும் மகாராஜாவின் ஆடைகளைப் பார்த்து மனதுக்குள் வைதாலும் நேரில் புகழ்ந்தார்கள், அந்த ஊருக்கு புதிதாக இரண்டு ஏமாற்று பேர்வழிகள் ஆடை வடிவமைப்பாளர்கள் என்று சொல்லிக்கொண்டு வந்தார்கள். தாங்கள் மிகச்சிறந்த ஆடை வடிவமைப்பாளர்கள் என்று ராஜாவின் அவையிலே தெரிவித்தார்கள் இதற்கு முன்பே பல தேசங்களில் வடிவமைத்த  பயோடேட்டாவை காட்டினார்கள். ராஜாவும் உங்களிடம் அப்படியென்ன விசேசம் என்று கேட்டார்? அதற்கு அவர்கள் நாங்கள் தயாரிக்கும் ஆடைகள் தாங்கள் வகிக்கும் பதவிகளுக்கு தகுதியான மனிதர்களாக இருப்பார்களானால் மட்டுமே அவர்கள் கண்ணுக்கு தெரியும் மற்றவர்களுக்கு தெரியாது என்றார். அதாவது புத்திசாலிகளுக்கு அந்த ஆடை தெரியும், கடைந்தெடுத்த முட்டாள்களுக்கு ஆடை தெரியாது. அந்த ராஜாவும் ஒரு வேண்டுகோள் விடுத்தார், சரி செய்யும் ஆடையில் என்பெயரை குறுக்கும் நெடுக்குமாக அச்சிடமுடியுமா, ஏனென்றால் இன்னொரு தேசத்தின் சக்கரவர்த்தி என்னைப் பார்க்க வருகிறார் அவர் வரும்போது என்னுடைய ஆடை அவர் ஆடையைவிட சிறப்பாக இருக்கவேண்டும் என்றார்.


ஆடை இந்த தேதிக்குள் தயாராகவேண்டும் என்றார், அதற்குத் தேவையான பொருட்களை அவர்கள் எந்தக் கேள்வியுமின்றி அரசனின் கஜானாவிலிருந்து பெற்றுக்கொள்ளலாம் என ஆணை பிறப்பித்தார். அந்த இரு ஆடை வடிவமைப்பாளர்களும் தங்கமும், வெள்ளியும், பவளமும், முத்துக்களும் ஆடைகளில் இழைக்கவேண்டும் என்று வாங்கிக்குவித்தார்கள். அவர்களுக்கென அரண்மனையில் ஒதுக்கப்பட்ட அறைகளில் தூங்கிக் கொண்டடிருந்தார்கள். ராஜாவுக்கு அந்த ஆடை எப்படி இருக்குமென்று பார்க்க ஆவல் துளிர்த்தது. ஆனால் நான் வகிக்கும் பதவிக்கு தகுதியில்லாதவனாக அந்த ஆடையை காணமுடியாவிட்டால் என்ன ஆவது என்று ஒரு மூத்த மந்திரியை அனுப்பி ஆடை தயாரிக்கும் நிலவரத்தை பார்த்து வர அனுப்பினான். போன மந்திரிக்கு ஒன்றும் தெரியவில்லை, அந்த நெசவாளர்களின் ஒருவன் நெசவு இயந்திரத்தை காட்டி ஆடைகள் பாருங்கள் எவ்வள்வு மெல்லியதுணியில் நெய்யப்பட்டிருக்கின்றன என்று வர்ண்னை செய்து கொண்டிருந்தான்.


தனக்குத்தெரியவில்லையே நான் ஒரு முட்டாளா! அய்யோ.. வேறு யாருக்கும் தெரிந்துவிடக்கூடாதே என்று ஆகா பிரமாதம்.. நம் மகாராஜாவுக்கு இந்த ஆடைகள் கச்சிதமாக இருக்கும் என்றான்.


மூத்த அமைச்சர் ஆடை தயாரிக்கும் விதத்தை மகாராஜாவிடம் புகழ்ந்து தள்ளினான், மன்னருக்கும் பார்க்க ஆவல்தான். ஆகையால் கூட முதல் மந்திரி இன்னும் சில அதிகாரிகளை அழைத்துக்கொண்டு நெசவுசெய்யுமிடத்தை பார்வையிட்டான். யாருக்கும் நெசவு இயந்திரத்தைத் தவிர எந்தத்துணியும் தெரியவில்லை, அந்த ஏமாற்று பேர்வழிகள் நுட்பமாக நெய்வதுபோல பாவனை செய்துகொண்டார்கள். மன்னர் வந்ததும் அரசரே, இன்னும் சில தினங்களில் தங்களுடைய சிறப்பான ஆடை தயாராகிவிடும் பாருங்கள் என்றான். எல்லாரும் திருதிருவென முழித்தாலும் தங்களை முட்டாள்கள் என காட்டிக்கொள்ள விரும்பாமல் ஆகா பிரமாதம் என்றார்கள்.


ஆடை தயாராகிவிட்டது, வடிவமைப்பாளார்களே மன்னருக்கு அணிவிப்பது போல பாவனை காட்டினார்கள். அந்தப்புர சேவகர்கள் அங்கியை தாங்கிப்பிடிக்கும் வேலையை எடுத்துக்கொண்டார்கள், ஊர்வலம் தொடங்கியது, பொதுமக்கள் எல்லோருக்கும் அந்த ஆடை தயாரிப்பு பற்றியும் அதன் சிறப்பும் தெரிந்திருந்தது, முட்டாள்களின் கண்களுக்கு தெரியாது என்பதால் அவர்களும் மன்னரை புகழ்ந்தார்கள்.


அங்கே ஓரத்தில் நின்றிருந்த சிறுவன் கைகொட்டி மகாராஜா அம்மணமாக இருக்கிறார்.. என்று சிரித்தான். சிறுவனின் தந்தையும் அருகிலிருந்தவரிடம் சொன்னார் ஆமா.. மன்னர் ஆடையெதுவும் அணியவில்லை,, எல்லோருக்கும் தெரிந்தது ஆனாலும் ஊர்வல்ம் நிறைவடையவேண்டுமே.. அந்தப்புர பணியாளர்கள் அங்கியை ஏந்தியபடி அரண்மனை நோக்கி விரைந்தார்கள்.


இந்தக்கதையை வாசித்துவிட்டு பாலாவிடம் சொல்ல ஆரம்பிக்கும்போதே, அப்பா இந்தக்கதை Emperor's New Cloth எனக்குத் தெரியும் பள்ளி நூலகத்தில் வாசிததிருக்கிறேன் என்றான். மால்குடி டேய்ஸில் ஸ்வாமி என்ற சிறுவன் அவனது நண்பனான ராஜம்க்கு  “Anderson stories" பரிசாக அளிப்பான். சிறுவர்களுக்கு இந்த கதைகள் நிச்சயம் பிடிக்கும்.


தமிழில் : யூமா வாசுகி
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
விலை : 195ரூ.

கருத்துகள் இல்லை: