திங்கள், 25 ஜனவரி, 2016

உப்பிட்டவரை - தமிழ்பண்பாட்டில் உப்பு




உப்பிட்டவரை - தமிழ்பண்பாட்டில் உப்பு


பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் எழுதிய நூல் என்றாலே கள ஆய்வு செய்து வரலாற்றுத் தரவுகளோடு இருக்கும், இதற்கு முன்பு அவர் எழுதிய ‘கிறித்தவமும் சாதியும்’ என்ற நூலை வாசித்திருக்கிறேன். சமீபத்தில் அவர் எழுதிய இரு நூல்களை வாங்கினேன், உப்பிட்டவரை மற்றும் தமிழகத்தில் அடிமைமுறை.


இந்த நூலை வாசிக்கும்வரையிலும் காந்தியின் உப்புக்காய்ச்சும் போராட்டம் ஏன், என்றே விளங்கவில்லை. உப்பை வைத்து ஆட்சியாளர்கள் வரிவிதிப்பில் கொடுரமாக நடந்துகொண்டார்கள் ஏனென்றால் உப்பு இல்லாமல் சாப்பிடமுடியுமா? உப்பு மனித உடலிலுள்ள சீரம் என்ற திரவத்தை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது, இல்லையென்றால் நீரிழப்பு ஏற்படும். மனிதன் கண்டுபிடித்த முதல் வேதியல் பொருள் ‘உப்பு’ தான். உணவுப் பொருட்களை சிதைவிலிருந்து பாதுகாக்கிறது.
உப்பு எப்படி கிடைக்கிறது? ஒன்று கடல்நீரை அல்லது உப்புத்தன்மை அதிகமுள்ள நிலத்தடிநீரை நிலத்தில் பாய்ச்சி நீர் சூரியவெப்பத்தில் ஆவியானவுடன் படிந்திருக்கும் உப்பை சேகரிக்கும் முறை ஒன்று. மற்றஒன்று உப்பை சுரங்கத்திலிருந்து வெடியெடுத்து அப்படியே பயன்படுத்துவது.பஞ்சாப் சுரங்கத்திலிருந்து வெள்ளை, வெளிர்சிவப்பு, கருப்பு நிறங்களில் கூட உப்பு கிடைக்கிறதாம்.
உப்பு ஒரு வேதியல் பொருள், உணவிற்கு, கைமருத்துவத்திற்கு , பண்டமாற்றமுறைக்கு, மதங்களில் பிரசாதப் பொருளாகவும், தூய்மைப்படுத்தும் பொருளாகவும், நட்புறவின் சின்னமாகவும் மங்கலப்பொருளாகவும் விளங்குகிறது.


புதுவீட்டுக்கு செல்லும்போது உறவினர்கள் உப்பை கொண்டுசெல்லும் வழக்கம் தமிழகத்தில் மட்டுமில்லை, ஆங்கிலேயர்களிடமும் இந்த வழக்கம் உள்ளதாம். எகிப்தியர்கள் மம்மிக்களை உருவாக்க உப்பை பயன்படுத்தியுள்ளார்கள்.


பண்டைய தமிழ்நிலத்தில் நெய்தல் நிலத்தில் மீன்பிடிதொழில் செய்த பரதவர்களே உப்பை உற்பத்தி செய்துள்ளார்கள். அந்த உப்பை மற்ற பகுதிகளுக்கு கொண்டுசெல்பவர்கள் உமணர்கள் என்றழைக்கப்பட்டார்கள். உப்புக்கு பண்டமாற்றாக நெல்லை செய்துள்ளார்கள்.


வரலாற்றில் உப்பு மெளிரியர் ஆட்சிகாலத்திலேயே அரசின் கட்டுப்பாட்டுக்கு வந்துவிட்டது, பண்டைய தமிழ் நிலத்தில் பல்லவப் பேரரசு (கி.பி. 4 - கி.பி.9ம் நூற்றாண்டு) உருவான காலத்தில் திணைச்சமூகம் சிதைவுற்றது, பேரரசுக்கு வருவாய் தரும் இனங்களில் ஒன்றாக உப்பு உற்பத்தி பார்க்கப்பட்டது. அச்சமயத்தில்தான் பரதவர்களிடமிருந்து உப்புத்தொழில் உமணர்களுக்கு கை மாறுகிறது இது ஒரு அரசியல் மாறுதலினால் ஏற்பட்ட விளைவே.


உப்பெடுக்கும் தொழில் மன்னருடைய கட்டுப்பாட்டிலும் உரிமையாக இருந்திருக்கிறது, உப்பு விளையும் அள்ங்கள் கோ-அளம் எனப்பட்டன.திணைசமூகமாக இருந்த காலத்தில் பண்டமாற்றுப் பொருளாக இருந்த உப்பு மன்னராட்சி காலத்தில் வருவாய்தரும் பொருளாக மாறிப்போனது. ‘வெட்டி’ வேலை என்பட்ட ஊதியமில்லா வேலையையும் மக்கள் செய்திருக்கிறார்கள் அதில் உப்பை சேகரிப்பதும் அதை கோவிலின் மடப்பள்ளிக்கு சுமப்பதுமான வேலை. வெட்டிவேலை என்பதன் பொருளே இப்போது சும்மா இருப்பது என்ற பொருளைத் தருகிறது.


ஆங்கில ஆட்சியிலும் உப்பு என்பது கிழக்கிந்தியக் கம்பெனியின் ஏகபோக உரிமையாக இருந்தது. 1806ம் ஆண்டிலிருந்து உப்பின் விலை 70 ரூபாயிலிருந்து 1844ம் ஆண்டு ரூ 180வரை உயர்ந்திருக்கிறது. இதனால் மக்கள் தங்கள் தேவைகளுக்கு தாங்களே தயாரிக்கும்போது அரசாங்கத்தால் பிரம்படியும் தண்டமும் வழங்கப்பட்டது. 1930 களில் ஒரு மூட்டை உப்பின் விலை மூன்று ரூபாய் நான்கு அணா, இதில் 3ரூக்கும் மேல் கலால்வரி. உற்பத்தியாளருக்கு கிட்டியது 1 அணா 90 பைசா. (இப்போது  விற்கும் பெட்ரோல், டீசல் மேல் விதிக்கப்படும் வரி நினைவுக்கு வருகிறதா?)  ஆங்கிலேயர்கள் இந்தியாவிலிருந்து பொருட்களை ஏற்றுமதி செய்யும் கப்பல்கள் அங்கிருந்து வரும்போது சும்மா வந்தால் கப்பலுக்கு பேலன்ஸ் கிடைக்காது என்பதற்க்காக லிவர்பூல், ஏடன் துறைமுகத்திலிருட்ந்து உப்பை கொண்டுவந்து விற்றிருக்கிறார்கள் அதனால இங்கு வரிவிதிப்பும் அதிகம் உள்ளூர் உற்பத்தியாளர்கள் நசிந்திருக்கிறார்கள்.


ஆங்கிலேயர்கள் விதித்த வரியின் விளைவாக உப்பின் விலை உயர்ந்ததால் பயன்பாடு குறைந்தது. இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் சில பத்திரிக்கைகள் ‘வருமான வரியை ரத்து செய்துவிட்டு, உப்பின் வரியை தொடரலாம் என்ற கருத்தை முன்வைத்திருக்கிறார்கள். இதைப்பற்றி வரலாற்றாசிரியர் பிபின் சந்திரா எழுதிய நூலில் “ இந்தியாவின் சிறு பிரிவினர் ஜமீந்தார்கள் வரிவிதிப்பிலிருந்து தம்மை காத்துக்க்கொள்ள கீழ்த்தட்டு மக்களின் நலன்களை பலிகொடுத்தனர்  என்கிறார்.


இந்தியாவின் முதல் கம்யூனிஸ்டான சிங்காரவேலர் 1923ல் தமது “லேபர் கிஸான் கெஜட்” இதழில் தங்களுடைய வேலைத்திட்டத்தில் உப்புவரி ஒழிப்புக்கான இயக்கத்திற்க்கு அறைகூவல் விடுத்துள்ளார்.
1920ல் ஒத்துழையாமை இயக்கம் நடத்திய காந்தி, இரண்டாவது சட்டமறுப்பு இயக்கமாக உப்பு வரிக்கு எதிராக “உப்பு சத்தியாகிரகம்” போராட்டத்தை நடத்தினார். அதே சம்யத்தில் தமிழகத்தின் வேதாரண்யத்தில் ராஜாஜி தலைமையில் உப்பு அறப்போர் நடைபெற்றது. திருமறைக்காடு என்ற ஊரின் பெயர் வடமொழிப்பெயர் மாற்றியமைத்த போக்கு காரணமாக வேதாரண்யம் என அழைக்கப்பட்ட தகவலும் உண்டு.


உப்பு உற்பத்தி செய்யும் தொழிலை மையமாக வைத்து மூன்று நாவல்கள் வெளிவந்திருக்கின்றன,
கரிப்புமணிகள் - ராஜம்கிருஷ்ணன்
உப்புவயல்- ஸ்ரீதரகணேசன்
அளம்- ச.தமிழ்ச்செல்வி
முதல் இரண்டு நாவல்களும் தூத்துக்குடி உப்பளத்தொழிலாளர்களின் அவலங்கள் நிறைந்த வாழ்க்கை குறித்தது, தமிழ்ச்செல்வி அவர்கள் எழுதிய நூல் வேதாரண்யம் பகுதியை மையமாக வைத்து எழுதியிருக்கிறார்.
வாசிக்கப்படவேண்டிய ஆய்வுநூல், ஆங்கிலத்த்தில் salary என்ற சொல்  salarium என்ற லத்தீன் சொல்லிலிருந்து பிறந்தது. தமிழில் சம்பளம் என்ற சொல் சம்பா + அளம் என்ற சொல்லிலிருந்து உருவாகியிருக்கிறது. சம்பா என்பது ஒருவகை நெல், அளம் என்ற சொல்லுக்கு உப்பு என்றே பொருள்.
இன்னும் சமூகத்தில் உப்புக்கு ஒரு பண்பாட்டு குணாம்சம் உண்டு, இரவில் வீடுகளில் உப்பை தரமாட்டார்கள், கடைகளில் விற்காமலும் இருந்திருக்கிறார்கள். உப்பிட்டோரை உள்ளளவும் நினை என்பதன் விளக்கம் உணவில் உப்பிட்டவர் அல்ல, வேலை கொடுத்து ஊதியம் வாங்குவொரைக் குறிக்கிறது.


ஆசிரியர் : ஆ.சிவசுப்பிரமணியன்
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
விலை ரூ140

கருத்துகள் இல்லை: